Jump to content

மெய்யெழுத்து - ஷோபாசக்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மெய்யெழுத்து

2009 -வது வருடம், வைகாசி மாதத்தின் இறுதி நாளில்; ஓர் இளநிலை இராணுவ அதிகாரி “நாங்கள் திலீபனின் உடல் எச்சங்களைக் கைப்பற்றிவிட்டோம்” என்றொரு செய்தியை வவுனியா இராணுவ மையத்திற்கு அறிவித்தான். அப்போது மருத்துவர் ராகுலன் மனநிலை சரிந்தவர் போன்று, மணலை அள்ளித் தனது தலையில் போட்டுக்கொண்டு, குழறி அழுதவாறிருந்தார். 

1977 -வது வருட இன வன்செயல்களின் பின்பாக, ராகுலனின் குடும்பம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்திருந்தது. யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் பத்தாவது வகுப்பில் சேரும்போது ராகுலனுக்கு வயது பதினாறு. அங்கேதான், பார்த்திபன் என்ற பெயரோடு எட்டாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்த திலீபனை அவர் முதன்முதலாகச் சந்தித்தார்.

கல்லூரியில் நடக்கவிருக்கும் விஞ்ஞானக் கண்காட்சியில், ராகுலனின் வகுப்பு மாணவர்கள் ஏதாவது ஒரு புதுமையை வைக்க வேண்டும் என்று விஞ்ஞான ஆசிரியர் வரதராஜ சர்மா கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். இவர்களாலோ குறுகிய காலத்திற்குள் ஏதொன்றையும் உருவாக்க முடியாமலிருந்தது. வெறுத்துப் போன ஆசிரியர் கடுங்கோபத்துடன் ராகுலனைப் பார்த்து “எயிட் ஏ வகுப்பிலயிருக்கிற பார்த்திபன் எண்ட ஸ்டுடண்டைக் கூட்டிக்கொண்டு வாரும். அப்பயாவது சோத்து மாடான உங்களுக்கெல்லாம் புத்தி வருதா எண்டு பார்ப்பம்” எனச் சொல்லி, திலீபனை அழைத்துவருமாறு ராகுலனை அனுப்பிவிட்டார்.

சோற்று மாடு என ஆசிரியர் தன்னைத்தான் குத்திக்காட்டியிருக்க வேண்டும் என்று நினைத்து ராகுலன் தனக்குள்ளே துக்கித்தவாறேதான் திலீபனைத் தேடிப் போனார். ‘ஏன் இந்தப் பொடியன் சோறு தின்னமாட்டானோ?’ என்று அதுவரை பார்த்திராத திலீபனை மனதிற்குள் கரித்துக்கொட்டியவாறு தான் போனார்.

ராகுலன் கொழும்பில் பாற்கட்டிகளும், நெய்ச்சோறுமாகச் சாப்பிட்டுச் சொகுசாக வளர்ந்த பிள்ளை. அதனால் மினுமினுப்பாகக் கொழுத்த கன்றுக்குட்டி போலிருப்பார். சற்றுக் குள்ளமானவர் என்பதால் அவருடைய குண்டுத் தோற்றம் இன்னும் தூக்கலாகவே தெரியும். இந்த உடல்வாகு அவருடன் எப்போதுமிருந்தது.

ராகுலன் தேடிச் சென்ற அந்த மாணவர் மிக ஒல்லியாக, பொது நிறத்திலிருந்தார். அவருடைய முன்வாய்ப் பற்கள் சற்றுத் துருத்திக்கொண்டிருந்தன. அடர்த்தியான தலைமுடி கலைந்து விழுந்திருந்த நெற்றிக்குக் கீழே மூக்குக் கண்ணாடிக்குள் அவரது கண்கள் சற்றே கிறங்கியிருந்தன. இந்தக் கிறக்கம் கடைசிவரை திலீபனோடு இருந்ததை, ராகுலன் எப்போதுமே ஞாபகம் கொள்வார்.

திலீபனை அழைத்து வரும்போது “நீர் எங்கயிருந்து வாறனீர்?” என்று ராகுலன் கேட்க “ஊரெழு” என மிக மென்மையான குரலில் திலீபன் பதில் சொன்னார். “நீர் படிப்பில பெரிய கெட்டிக்காரனோ?” என்று ராகுலன் எகத்தாளமாகக் கேட்டபோது “ஓம்” என்று ஒற்றை வார்த்தையில் திலீபன் அதே மென்மையான குரலில் பதில் சொன்னார். ஒருவிதமான விலகியிருக்கும் சுபாவம் அந்த மாணவனிடம் ஒட்டியிருப்பதை ராகுலன் கவனித்தார்.

வகுப்பறையில் ஆசிரியர் வரதராஜ சர்மா முன்பு நின்றபோதும், அதே விலகல் தன்மையோடுதான் திலீபன் நிலைகொள்ளாமல் கால்மாறி கால்மாறி நின்றார். இப்படி ஏதாவது சேட்டைகளைச் செய்தால் “என்ன உனக்குப் பிரச்சினை… மாதவிலக்கே? நேரா நிமிந்து நிக்கேலாதே?” என வெடுக்கெனக் கேட்பவர் வரதராஜ சர்மா. ஆனால், திலீபன் மிகப் புத்திசாலியான மாணவன் என்று அவர் கருதியிருந்ததால், திலீபன் மீது அவருக்குத் தனி அன்புண்டு. திலீபனின் தந்தையாரான இராசையா வாத்தியாரோடு ஒரு காலத்தில் பணியாற்றியதால் திலீபனின் குடும்பச் சூழலையும் அவர் அறிவார். திலீபன் பத்து மாதக் குழந்தையாக இருக்கும் போதே தாயை இழந்தவர் என்பதால், திலீபன் மீது கூடுதல் பரிவும் வரதராஜ சர்மாவுக்கு இருந்தது. திலீபனின் விலகியிருக்கும் சுபாவத்திற்குத் தாயாரின் இழப்புக்கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம் எனப் பிற்காலத்தில் ராகுலன் யோசித்ததுண்டு.

“பார்த்திபன்… வாற எக்ஸிபிசனில புதுமையா நாங்கள் என்ன செய்யலாம் எண்டு நீ இந்த பத்தாம் வகுப்பு எருமைகளுக்குச் சொல்லிக்குடு!” எனச் சொல்லிவிட்டு, ஆசிரியர் வெளியே போய்விட்டார். “ஒரு மயிலின்ர எலும்புக்கூட்டை நாங்கள் விளக்கங்களுடன் கண்காட்சியில வைக்கலாம்’ என்று திலீபன் மாணவர்களுக்குச் சொன்னார்.

அதுவொரு புதுமையான யோசனையாகவே மற்றைய மாணவர்களுக்கும் தெரிந்தது. யாழ்ப்பாணத்தாருக்கு மயில் பறவை அதிசயம்தான். யாராவது வன்னியிலிருந்து கொண்டுவந்து வளர்த்தால் தான் உண்டு. ஆனாலும், யாழ்ப்பாணத்தின் அனல் பறக்கும் காலநிலையாலோ அல்லது வனச்சூழல் இல்லாததாலோ அந்த மயில்களும் சீக்கிரமே இறந்து போகும்.

“மயில் எலும்புக் கூட்டுக்கு எங்க போறது?” என்று ராகுலன் கேட்டார்.

“அது ஒரு இடத்தில இருக்கு… ஆராவது ஒராள் மட்டும் என்னோட வந்தால் போதும். எடுத்துத் தருவன்” என்றார் திலீபன்.

மாலையில் பாடசாலை விட்டதும், ராகுலனே திலீபனோடு சென்று, அந்த மயில் எலும்புக்கூடைப் பெற்றுவருவதென்று தீர்மானம் ஆயிற்று.

பாடசாலை விட்டு ராகுலன் வெளியே வந்தபோது, சொன்னது போலவே திலீபன் வெளிவாசலில் நின்றிருந்தார். “போகலாம்” என்று ராகுலன் சொன்ன போது “இப்ப போய் சாமானை எடுக்க ஏலாது, நீர் இரவு பத்து மணிக்கு ஊரெழு கணக்கன் சந்திக்கு வாரும்! நான் அங்க நிப்பன்” என்று சொல்லிவிட்டுப் பதிலுக்குக் கூடக் காத்திராமல், திலீபன் வெளியேறிக்கொண்டிருந்த மாணவர்களுடன் கலந்து மறைந்துவிட்டார்.

ராகுலன் குழம்பிப் போனார். முதலில் அவருக்கு ‘ஊரெழு கணக்கன் சந்தி’ எங்கேயிருக்கிறது என்பதே சரியாகத் தெரியாது. அதுவும் இரவு பத்துமணிக்கு அங்கே போவதென்றால் எப்படிப் போவது? போகாவிட்டாலோ வரதராஜா சர்மாவைச் சமாளிக்க முடியாது. தனது வீடு இருக்கும் உரும்பிராய் தெற்குக்கு, பக்கத்துக் கிராமமே ஊரெழு என்பதால், குறிப்பிட்ட இடத்தைக் கண்டுபிடித்து விடலாம் என்று மனதைத் தேற்றியவாறே ராகுலன் பஸ்ஸைப் பிடித்து வீட்டுக்குப் போனார்.

இரவு ஒன்பது மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி, ஊரெழுவை நோக்கி நடந்தார். அன்று நிலவு வெளிச்சம் அவருக்கு வழி காட்டிற்று. வழியில் தென்பட்ட ஒரேயொரு சைக்கிள்காரரிடம் விசாரித்ததில், அதே தெருவால் நேராக நடந்து போனாலே ஊரெழு கணக்கன் சந்தி வந்துவிடும் என்பதைத் தெரிந்துகொண்டார். பத்து மணிக்கு முன்பே குறிப்பிட்ட இடத்தை அடைந்துவிட்டவர் அங்கே திலீபனுக்காகக் காத்திருந்தார். இரவு பத்து மணிக்கு அப்படியென்ன மயிலைப் பிடிக்கிற மயிர் வேலை என்ற குழப்பம் அவருக்கு இருந்துகொண்டேயிருந்தது.

சரியாகப் பத்து மணிக்கு ராகுலனுக்குப் பின்னால் திலீபன் தோன்றினார். “வாரும்” என்று முணுமுணுத்துவிட்டு திலீபன் முன்னே விரைந்து நடக்க, ராகுலன் செம்மறி ஆடு போலப் பின்தொடர்ந்தார்.

அய்ந்து நிமிட நடைதூரத்தில், வண்ண மின்விளக்குகளின் வெளிச்சத்தில் ஊரெழு முருகன் கோயில் ஒளிர்ந்துகொண்டிருந்தது. கோயில் புறமதிலைச் சுற்றிப் பின்புறமாக திலீபன் ராகுலனை அழைத்துப் போனார். அங்கே முழத்துக்கொரு உயரிப் பனையாக அடர்ந்த பனங்கூடல் இருந்தது. ஓரிடத்தில் நின்று, வடலி மறைவிலிருந்து ஆறு மின்கலங்கள் போடக்கூடிய டோர்ச் லைட்டையும், ஒரு மண்வெட்டியையும், ஒரு பெரிய சாக்குப் பையையும் திலீபன் எடுத்தார். 

“இது ஆற்ற சாமான்கள்?” என்று ராகுலன் கொஞ்சம் திகிலுடன்தான் கேட்டார்.

“நான் பொழுதுபட முன்னமே கொண்டுவந்து வைச்சிட்டன்” என்று சொன்னவாறே திலீபன் இன்னும் சற்றுத் தூரம் பனங்கூடலுக்குள் நடந்து சென்று, ஓரிடத்தில் நின்றவாறே மெதுவாகச் சொன்னார்:

“கோயில்ல நிண்ட மயில்தான். இஞ்சதான் தாட்டிருக்கு!”

“நாமள் தோண்டினால் பிரச்சினை ஏதும் வராதே?”

“தோண்டின தடயமே இல்லாமல் செய்துபோட்டுப் போகவேணும் ஐஸே!”

ராகுலனின் கையில் டோர்ச் லைட்டைக் கொடுத்துவிட்டு, திலீபன் மண்வெட்டியால் மெதுவாகச் சாறிச் சாறி மணலைக் கவனமாக விலக்கிக்கொண்டே போனார். ராகுலனுக்கு உண்மையிலேயே நடுக்கமாக இருந்தது. அவரது கையிலிருந்த விளக்கு வெளிச்சம் அங்குமிங்குமாகத் தளம்பியது.

“நேராப் பிடியும் ஐஸே…” என்று திலீபன் எரிச்சலுடன் சொன்னார். மதியம் பாடசாலையில் விலகல் சுபாவத்துடன் குரல் எழாமல் பேசிக்கொண்டிருந்த சிறுவன், இப்போது கட்டளை அதிகாரி போல மாறிவிட்டிருந்ததை ராகுலன் வாயைப் பிளந்துகொண்டே கவனித்தார்.

மயில் எலும்புக்கூடு பெரிய சேதங்களில்லாமல் கிடைத்தது. அதைச் சாக்குப் பைக்குள் பத்திரமாக வைத்துவிட்டு, திலீபன் அந்தக் குழியை இருந்தது போலவே மூடிவிட்டு, அதன் மீது இரண்டு காவோலைகளை இழுத்துப் போட்டார். வந்த திசைக்கு எதிர்த் திசையால் திலீபன் நடக்க, ராகுலன் சாக்குப் பையுடன் பின்னாலேயே போனார். பனங்கூடலால் வெளியேறிதும் எதிர்ப்பட்ட ஊரி ஒழுங்கையின் ஓரமாக ஒரு சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. “நீர் சைக்கிள எடும்” என்று சொன்னவாறே தீலீபன் சாக்குப் பையை வாங்கிக் கரியரில் கட்டினார். தனக்குச் சைக்கிள் ஓட்டத் தெரியாது என்பதைச் சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டே “நீர் ஓடும்… நான் பெடல் போட்டுத் தருவன்” என்று ராகுலன் சமாளித்தார். “எலும்புக் கூடு எங்கயிருந்தது எண்டு ஆராவது கேட்டால், என்ர வீட்டில இருந்தது எண்டுதான் சொல்லவேணும்…சரியா” என்று கொஞ்சம் கடுமையான தொனியில் திலீபன் சொல்ல “சரி மச்சான்” என்றார் ராகுலன். இப்படித்தான் திலீபனுக்கும் ராகுலனுக்குமான நட்பு ஆரம்பித்தது.

அதன் பின்பாக, ராகுலன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படிக்கும்வரை ‘லவ்வர்ஸ்’ என்று மாணவர்கள் கேலி செய்யக்கூடியளவுக்கு இருவரும் மயிலும் வேலும் போல ஒட்டிக்கொண்டார்கள். ராகுலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கற்பதற்குத் தேர்வானதற்கு இரண்டு வருடங்கள் கழித்து, திலீபனும் அதே மருத்துவ பீடத்தில் கற்பதற்குத் தேர்வானார். அந்தச் செய்தியைச் சொல்வதற்காக ராகுலனைத் தேடி உரும்பிராய் வீட்டுக்குச் சென்றிருந்த திலீபன், சில நாட்களுக்குப் பின்பு ராகுலனுக்குச் சொல்லாமலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்துவிட்டார்.

2

1987 -வது வருடம், செப்டம்பர் மாதத்தில்; திலீபன் நீரையும் உணவையும் முற்றாக மறுத்து, நல்லூர் முருகன் கோயிலில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த இரண்டாவது நாளில், ராகுலன் கூட்டத்தோடு கூட்டமாக நின்று, மேடையிலிருந்த திலீபனைப் பார்த்துக்கொண்டிருந்தார். உண்மையிலேயே இதுவொரு தேவையில்லாத அரசியல் சாகசம் என்றுதான் ராகுலன் நினைத்தார். இரண்டு, மூன்று நாட்கள் உண்ணாவிரதமிருந்து நாடகமாடிவிட்டு, ஏதாவதொரு சாக்குப்போக்கைச் சொல்லி உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வார்கள் என்றுதான் அவர் நம்பினார். அதற்குக் காரணமுமிருந்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அவர் படித்துக்கொண்டிருந்த காலத்தில்தான், இலங்கை அரசுக்குக் கோரிக்கை வைத்து, பல்கலைக்கழக வளாகத்தில் உண்ணாவிரதமிருந்து அறப்போராட்டம் நடத்திய மதிவதனி, படிகலிங்கம், வனஜா உள்ளிட்ட ஒன்பது மாணவர்களும் பட்டினி மரணத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது, அந்த உயிர்களைப் பாதுகாப்பதற்காக புலிகள் வலுகட்டாயமாக துப்பாக்கிமுனையில் அந்த மாணவர்களைக் கடத்திச் சென்றிருந்தார்கள். அந்த நடவடிக்கையை முன்னின்று செய்தவர்களில் திலீபனும் ஒருவர். அவர் அப்போது ஒரு சிறிய ஏரியாவுக்குப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராகயிருந்தார். ராகுலனுக்கோ அரசியலில் துளி ஆர்வமும் கிடையாது. எல்லா ஆயுத இயக்கங்களின் மீதும் அவருக்கு அவநம்பிக்கையே இருந்தது. எந்தப் பிரச்சினைக்கும் ஆயுதப் போராட்டம் தீர்வாகாது என்பதுதான் ராகுலனின் எண்ணம். அப்போதெல்லாம் திலீபன் அடிக்கடி பல்கலைக்கழகத்திற்கு வருவார். ராகுலனைக் கண்டால் அவரோடு சேர்ந்து ஒரு தேநீராவது அருந்தாமல் போகமாட்டார்.

இந்த நல்லூர் உண்ணாவிரதத்தைப் புலிகள் சீக்கிரமே முடித்துக்கொள்வார்கள் என ராகுலன் நம்புவதற்கு இன்னொரு வலுவான காரணமுமிருந்தது. போர்முனைகளில் படுகாயப்பட்ட திலீபனுக்கு இதுவரை மூன்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு நடந்த அறுவைச் சிகிச்சையில், திலீபனது குடலில் பதினான்கு அங்குலங்கள் நீக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் அவர் தண்ணீரும் அருந்தாமல் உண்ணாவிரதமிருப்பது மிக மிக ஆபத்தானது. மேடையில் திலீபனைச் சுற்றி நான்கைந்து புலிகள் இயக்க இளைஞர்கள் நின்றிருந்தார்கள். ‘ஆக்களப் பாரு… ஒவ்வொருத்தனும் ஒரு கொட்டுப்பனை போல உருண்டு திரண்டு நிக்கிறான். உவங்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டியது தானே… எப்பிடியும் ஒரு மாசம் தாக்குப் பிடிப்பாங்கள்… அதை விட்டுப்போட்டு எதுக்கு ஒரு ஏலாவாளியான நோயாளியை மேடையில இழுத்துவிட்டிருக்கிறாங்கள்’ என்று மனதிற்குள் ராகுலன் மருகிக்கொண்டிருந்தார்.

மேடையில் திலீபன் உரையாற்றிக்கொண்டிருந்தார். “நான் இறந்தால் என்னுடைய உடலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடம் ஒப்படைத்துவிடுமாறு தலைவர் அவர்களிடம் கேட்டிருக்கிறேன். எம் மண்ணின் மாணவர்களது கல்விப்புல ஆய்வுக்காக எனது உடல் பயன்பட வேண்டும். நான் மலரப் போகும் தமிழீழத்தை வானத்திலிருந்து பார்ப்பேன்” என்று உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே, திலீபனின் கிறங்கிய கண்கள் மேடையின் கீழே கூட்டத்தில் நின்றிருந்த ராகுலனின் முகத்தைக் கண்டுவிட்டன. பேசி முடித்ததும், மேடையிலிருந்த கட்டிலில் தளர்வாக உட்கார்ந்துகொண்டவர், ராகுலனுக்குச் சைகை செய்து தன்னிடம் வருமாறு அழைத்தார்.

ராகுலனுக்குக் கொஞ்சம் பதற்றமாகயிருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்திருக்க இப்போது மேடையில் இருப்பவர் இவரோடு இந்துக் கல்லூரியில் படித்த விலகல் சுபாவியான பார்த்திபன் இல்லை. நேற்றைய தினம் சர்வதேசப் பத்திரிகைகளில் நாயகனாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும் புலிகளின் அரசியல்துறைத் தலைவரே அங்கிருக்கிறார். புலிகள் இயக்கத்தின் கவனம் மட்டுமல்லாமல், இலங்கை – இந்திய அரசுகளின் மொத்தக் கவனமும் அந்த மேடையில்தான் குவிந்திருக்கிறது. திலீபன் தன்னை அழைத்தது ராகுலனுக்குக் கொஞ்சம் பெருமையாகவுமிருந்தது. 

தன்னுடைய கனத்த உடலை மேடையை நோக்கி நகர்த்திச் சென்றவரால், உயரமான மேடையில் ஏற முடியாமலிருந்தது. மேடையிலிருந்த ஒருவன் ராகுலனைக் கைகொடுத்துத் தூக்கிவிட்டான். திலீபனின் சோர்ந்திருந்த முகத்தில் அற்புதமானவொரு புன்னகை வந்து அமர்ந்துகொண்டது.

“வாடா தடியா…” என்று திலீபன் வரவேற்றவாறே, ராகுலனுடைய கையைப் பற்றிக் கட்டிலில் தன்னருகே உட்கார வைத்துக்கொண்டார். திலீபனின் உடல் எவ்வளவு தளர்ந்திருக்கிறது என்பதை அந்தத் தொடுகையிலேயே ராகுலன் தெரிந்துகொண்டார். அவர் திலீபனின் கையைப் பற்றிப் பிடித்து, நாடித் துடிப்பைப் பரிசீலிக்க முயன்றபோது. திலீபன் வெடுக்கெனக் கையைப் பின்னே இழுத்துக்கொண்டார்.

“தடியா…என்ர பிரேதம் யூனிவர்ஸிட்டிக்குத் தானே வரும். அங்க நீ என்ர உடம்ப செக் செய்யலாம், இப்ப சும்மாயிரு” என்று சிரித்தார் திலீபன். அவரது குரல் மிகவும் பலவீனப்பட்டிருந்தது.

“சீக்… இதென்ன கதை பார்த்தீ? அப்பிடியெல்லாம் ஒண்டும் நடவாது. உன்ர கோலமும் குறியும் என்ன? பத்தாயிரம் சனம் உன்னத்தானே பார்த்துக்கொண்டிருக்கு… குளிச்சு உடுப்ப மாத்திப்போட்டு மேடையில இருக்கலாம்தானே…”

“விடுறா தடியா…அழியப் போறவனுக்கு கோடித் துணிதான் கேடு”

தான் இறக்கப் போகிறேன் என்று திலீபனுக்கு மிக உறுதியாகவே தெரிந்திருக்கிறது என்பது போலவே அவரது பேச்சுகள் அமைந்திருந்தன. அதை ராகுலனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவரைப் பொறுத்தவரை அவருக்கு அருகே அமர்ந்திருப்பது அவர் பதினான்கு வயதுச் சிறுவனாகக் கண்ட பார்த்திபன் தான். அந்தச் சிறுவன் தலைமுதல் பாதம்வரைக்கும் வெண்துணி சுற்றி இறந்து கிடக்கும் காட்சி அவரையறியாமலேயே அவரது மனதில் விரியலாயிற்று

“இஞ்சே பார்த்தீ… தண்ணியாவது கொஞ்சம் குடியன். மகாத்மா காந்தி கூட மிளகு போட்டுத் தண்ணி குடிச்சுக்கொண்டுதான் உண்ணாவிரதம் இருந்தவர்…”

“அப்பிடியே டொக்டர்… அவர் கூடுத்தி ஒரு நாட்டுக்காரனை எதிர்த்துத்தான் போராடினவர். நாங்கள் உலகத்தையே எதிர்த்துப் போராட வேண்டியிருக்கு. தண்ணியக் குடி சு***யைக் குடியெண்டு சொல்லி என்னை அவமானப்படுத்தாத!”

“உனக்கு நான் புத்திமதி சொல்ல ஏலாது பார்த்தீ… உனக்கு எல்லாமே தெரியும். ஆண்டு அனுபவிச்சு பிள்ள குட்டியப் பெத்துப்போட்டுத்தான் காந்தி உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் எண்டு கிழட்டு வயசில வெளிக்கிட்டவர். அழிய வேண்டிய வயசே உனக்கு? நீ இருந்து செய்ய வேண்டிய போராட்ட வேலையள் இன்னும் கனக்கக் கிடக்கெல்லே…”

“மச்சான்… போராடுறது என்ர வேலையில்ல… அது என்ர குணம்!”

இந்த உரையாடல் நிகழ்ந்ததிலிருந்து ஒன்பதாவது நாள் காலை 10 மணி 48 நிமிடத்திற்கு, மருத்துவர் சிவகுமார் உண்ணாவிரத மேடையில் அசையாமல் கிடந்த திலீபனின் நாடித்துடிப்பைப் பரிசீலித்துவிட்டு, திலீபனின் கால்களில் வீழ்ந்து வணங்கினார். அப்போதும் ராகுலன் அந்த மேடையில் இருந்தார். அவரது கண்களிலிருந்து ஒரு சொட்டு நீரும் திலீபனின் உடலத்தின் மீது விழவில்லை. அந்தக் கணத்தில் அவர் கடுமையான ஆத்திரத்தில் இருந்தார். ‘எல்லோருமாகச் சேர்ந்து ஒருவனைக் கொன்றுவிட்டார்கள்’ என்று மனதிற்குள் கறுவியவாறே மேடையிலிருந்து இறங்கிச் சென்றார்.

பூரணமாக இராணுவ உடைகள் அணிவிக்கப்பட்டு, லெப்டினன்ட் கேர்ணல் என்ற பட்டத்தோடு திலீபனின் உடல் யாழ்ப்பாணத்தின் கிராமங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்த நாட்களில், பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பார்த்திபனுக்காக ராகுலன் காத்திருந்தார்.

3

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் துறையில் விரிவுரையாளராகப் பணியை ஏற்கும் போது, ராகுலனுக்கு வயது முப்பத்துநான்கு. அப்போது, திலீபனின் உடல் அங்கே வைக்கப்பட்டு முழுதாக எட்டு வருடங்களாகியிருந்தன. பணியை ஏற்றவுடன் அவர் நேராக திலீபனின் உடல் வைக்கப்பட்டிருந்த அறைக்குத்தான் சென்றார். மேற்படிப்புக்காக இலண்டனில் இருந்த அய்ந்து வருடங்களில், பலமுறை திலீபனின் உடலைப் பற்றி அவர் சிந்தித்திருக்கிறார். அதன் காரணமாகவே உடலத்தைப் பாதுகாத்து வைப்பதற்குரிய அதிநவீன தொழில்நுட்பங்களை அவர் ஆராய்ந்தார். இலண்டனுக்குக் கிளம்பவதற்கு முன்பும் இங்கே வந்து திலீபனின் உடலைப் பார்த்து, அவருடைய நேசத்துக்குரிய பையனிடம் விடைபெற்றுத்தான் சென்றார்.

கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த திலீபனின் உடலில், உண்மையில் பாரதூரமான மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்திருக்கவில்லை. உடல் மேலும் கருமையேறி இருந்தது. உதடுகளின் ஓரங்கள் மெலிதாகக் கரைந்து பற்கள் கடல் சோழிகளைப் போன்றிருந்தன. உடலைப் பதப்படுத்தும் இரசாயனங்களால் உடல் சற்றே ஊதியிருந்தது. கைகளிலும் தொடைகளிலும் மட்டும் தசையை சில அங்குலங்களுக்குக் கீறியிருந்தார்கள். நீண்ட நேரமாகத் தனியராகவே நின்று அந்த உடலைப் பார்த்துக்கொண்டிருந்த ராகுலன் சற்றுச் சத்தமாகவே முணுமுணுத்தார்:

“நீ இப்ப என்ர பொறுப்பில பார்த்தீ…”

அன்று மாலையில் அவர் வீட்டுக்குத் திரும்பும் போது, அவரது மனைவி ஜனனி அவரைப் பார்த்தும் பார்க்காதது போலவே புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். இருவரும் அமெரிக்காவுக்கோ, கனடாவுக்கோ சென்று அங்கேயே குடியேறிவிட வேண்டும் என்ற ஆசை ஜனனிக்கு இருந்தது. ஆனால், ராகுலனுக்கோ வெளிநாட்டுக்குப் போய் வேலை செய்வதில் விருப்பமில்லாமலிருந்தது.

“என்ன உம்மிட லவ்வரப் பார்த்தாச்சோ?” என்று ஜனனியிடமிருந்து குரல் வந்தது.

“ம்” என்று சொல்லிவிட்டு ராகுலன் குளிக்கப் போய்விட்டார்.

திலீபனுடனான தன்னுடைய அனுபவங்களை ஆங்கிலத்தில் சிறு நூலாக எழுத வேண்டும் என்ற எண்ணம் ராகுலனுக்கு இருந்தது. அந்த முயற்சியை அவர் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார். குளித்துவிட்டு வந்ததும், தேநீர் கோப்பையோடு மேசையின் முன்னால் அமர்ந்து, திலீபனைப் பற்றி ஏற்கனவே எழுதி வைத்திருந்த குறிப்புகளை எடுத்துப் பரிசீலிக்க ஆரம்பித்தார். அவருக்குப் பின்னாலிருந்து ஜனனியின் குரல் கேட்டது:

“கல்வெட்டு எழுதத் தொடங்கியாச்சே?”

ஜனனி எப்படிச் சீண்டினாலும், இந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில் ராகுலனுக்குக் கோபமே வருவதில்லை. ஜனனி எரிச்சலுறுவதில் நியாயம் இருக்கிறதென்றே அவர் நம்பினார். யுத்தம் நாலாபுறத்தாலும் நகரத்தைச் சூழ்ந்துகொண்டிருந்தது. விமானக் குண்டுவீச்சுகள் நகரத்தில் நிகழாத நாட்களேயில்லை. யாழ்ப்பாணப் பொது மருத்துவமனையில் மருத்துவராகக் கடமையிலிருந்த ஜனனி ஒரு நாளைக்கு அய்ம்பது நூறெனக் கோராமாகச் சிதைந்த உடல்களைப் பார்க்க வேண்டியிருந்தது. இதனால் ஜனனி உளச்சோர்வுக்கு ஆளாகி, சில சமயங்களில் பிரமை பிடித்தது போலவே கடமையிலிருந்து வீட்டுக்குத் திரும்புவார். இப்போது கர்ப்பகால விடுப்பில் இருப்பதால், அவரது கவலையெல்லாம் பிறக்கப் போகும் குழந்தையைப் பற்றியே இருந்தது. “என்ர குஞ்சையும் நான் சிதறின உடம்பாக பார்க்க வேண்டி வருமோ?” என்று ஒவ்வொரு நாளுமே ராகுலனிடம் கேட்டு அச்சத்தில் உறைந்திருந்தார். 

யாழ்ப்பாண நகரத்தை நோக்கி இராணுவத்தினர் முன்னேறிக்கொண்டிருப்பதாகவும், அவர்கள் நகரத்தைப் பிடித்துவிடுவார்கள் என்றும் கதைகள் பரவிக்கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்திலிருந்து மக்கள் வெளியேறாதவாறு புலிகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், கணிசமான மக்கள் புலிகளையே ஏய்த்துவிட்டுத் திருட்டுப் பாதைகள் வழியாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்கள். தாங்களும் கொஞ்ச நாட்களுக்கு எங்கேயாவது போய்விடலாம் என்று ஜனனி சொல்லும் போதெல்லாம், புலிகள் ஒருபோதும் யாழ்ப்பாணத்தை விட்டுக் கொடுக்கமாட்டார்கள் என்று ராகுலன் சொல்லி, அதற்கான காரணங்களையும் ஜனனிக்கு விளக்குவார். அது ஜனனியின் அழுகையில் முடிவுறும்.

ஆனால், ராகுலன் சொல்லிய காரணங்கள் எல்லாமே சத்தற்றவை என்பது சீக்கிரமே தெரிந்தது. 1995 -வது வருட அய்ப்பசி மாதத்தின் கடைசி நாட்களில், இலங்கை இராணுவத்தினர் யாழ்ப்பாண நகரத்தைக் கைப்பற்றுவதற்காகப் பெரும் பாய்ச்சலில் முன்னேறிக்கொண்டிருந்த போது, யாழ்ப்பாணத்தைக் கைவிட்டு வெளியேறுவது என்ற முடிவைப் புலிகள் எடுத்தார்கள். ஒட்டுமொத்த யாழ்ப்பாண மக்களையும் அங்கிருந்து வெளியேறி வன்னிப் பெருநிலப் பரப்புக்குச் செல்லுமாறு புலிகள் கட்டளையிட்டார்கள். மேலே விமானங்கள் குண்டுகளை வீசிக்கொண்டிருக்க, கீழே புலிகளின் வாகனங்கள் இந்தக் கட்டளையை ஒலிபெருக்கிகளில் இடைவிடாது அறிவித்தவாறே சுற்றிக்கொண்டிருந்தன. 

இந்த அறிவித்தலைக் கேட்டபோது, ராகுலன் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் திலீபனோடு இருந்தார். சில நாட்களாகவே பல்கலைக்கழகம் மூடப்படிட்டிருக்கிறது. ராகுலன் மட்டும் திலீபனின் உடலைக் கவனிப்பதற்காக அங்கே வந்து போய்க்கொண்டிருந்தார். ஒட்டுமொத்த யாழ்ப்பாண மக்களையும் வெளியேற்றுவது புலிகளின் நோக்கமல்ல என்றே ராகுலன் நினைத்தார். அது எப்படிச் சாத்தியம்? மருத்துவர்கள், மருத்துவனைப் பணியாளர்களாவது இங்கே இருக்க வேண்டுமல்லவா. படுத்த படுக்கையாகக் கிடக்கும் நோயாளிகளையும், போரில் காயமடைபவர்களையும் பாதுகாப்பது அவசியமல்லவா.

ஆனால், அன்று மதியம் புலிகளின் இரண்டு வாகனங்கள் மருத்துவ பீடத்திற்கு வந்த போதுதான், முழு யாழ்ப்பாணத்தையும் வன்னிக்கு நகர்த்தப் புலிகள் முடிவெடுத்திருக்கிறார்கள் என்பது ராகுலனுக்குப் புரிந்தது. வந்திருந்த புலிப் போராளிகளில் அவர்களது மருத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். அவர்களில் சிலர் ராகுலனுக்கு ஏற்கனவே அறிமுகமுள்ளவர்கள் தான். ராகுலன் திலீபனின் இளமைக்கால நண்பர் என்பதும் அவர்களுக்குத் தெரியும். வந்தவர்களது திட்டம் திலீபனின் உடலைத் தங்களோடு வன்னிக்கு எடுத்துச் செல்வதே என்று ராகுலன் அறிந்தபோது, அவர் அதிர்ந்து போனார். ஆத்திரத்தால் அவரது நாக்குத் துடித்தது.

“தம்பியவை… பார்த்தீ தன்ர உடம்ப யூனிவர்ஸிட்டிக்குத்தான் தந்தவன். அது மாணவர்களின்ர சொத்து. நீங்கள் உங்கிட எண்ணத்துக்கு எடுக்கேலாது!”

“டொக்டர்… தயவு செய்து விளங்கிக்கொள்ளுங்கோ! நாளைக்கு இஞ்ச ஆமி வந்திருவான். அவன்ர கையில திலீபன் அண்ணையின்ர உடலம் சிக்கக் கூடாது எண்டு தலைவர் சொல்லிப் போட்டார்.”

“அத நான் பாத்துக்கொள்ளுறன் தம்பியவை. நான் கொழும்புக்கு கதைக்கிறன். யூனிவர்ஸிட்டிக்குள்ள ஆமி உள்ளிடாது.”

“அப்பிடி இல்ல டொக்டர்… வந்தாறுமூலை யூனிவர்ஸிட்டிக்குள்ள ஆமி பாய்ஞ்சு இருநூறு பேரைச் சுடயில்லையே…”

“இந்த உடம்பு இப்பயே எட்டு வருஷமாயிற்று. நீங்கள் வன்னிக்குக் கொண்டு போறதுக்கிடையில டீகொம்போஸ் ஆகிரும்…”

“அதுக்கான ஏற்பாடுகளோட தான் வந்திருக்கிறம் டொக்டர்… எங்கிட மருத்துவப் போராளிகள் திலீபன் அண்ணையின்ர உடலத்தைப் பத்திரமா வன்னிக்குக் கொண்டு வந்திருவினம்… நாங்கள் கெதியில யாழ்ப்பாணத்தைத் திரும்பிப் பிடிப்பம். அப்ப திலீபன் அண்ணையின்ர உடலத்த இஞ்ச கொண்டுவந்து உங்கிட கையில பத்திரமா ஒப்படைக்கிறது எங்கிட பொறுப்பு.”

‘கிழிச்சியள்’ என்று ராகுலன் மனதிற்குள் நினைத்துக்கொண்டார். அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நடுவில் கர்ப்பவதியான ஜனனி வேறு அவரது நினைவுக்கு வந்துகொண்டிருந்தார். எல்லோருமே வன்னிக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்பதும் தெரிந்துவிட்டது. அவரது ஞாபகத்தில் மயில் எலும்புக்கூடை எடுக்கத் தன்னைக் கூட்டிக்கொண்டு போன அந்தச் சிறுவன் வந்துகொண்டேயிருந்தான். அவன் முன்னே நிலவொளியில் நடக்க, பின்னே மயிலின் எலும்புக்கூடைச் சுமந்தவாறே அவர் நடந்துகொண்டிருந்தார். ராகுலன் அறைக்குள்ளே போய், மூடியிருந்த திலீபனின் இமையைத் திறந்து பார்த்தார். குழியாயிருந்த இடத்தில் சிறுவனின் கிறங்கிய கண் தெரிந்தது. அப்போதுதான் ராகுலன் அந்த முடிவை எடுத்தார். அவர் வெளியே வந்து புலிப் போராளிகளிடம் சொன்னார்:

“நானும் கூட வருவன். ஓமெண்டால் பார்த்தீயின்ர உடம்ப நீங்கள் எடுக்கலாம்.” 

இதை உறுதியான குரலில் அறிவித்துவிட்டு, ராகுலன் அறைக்குள் நுழைந்து திலீபனின் உடலுக்கு அருகிலேயே நாற்காலியைப் போட்டு உட்கார்ந்துகொண்டார். ஜனனியின் ஞாபகம் அவரைக் குழப்பிக்கொண்டிருந்தது. ஜனனியின் பெற்றோரும் வீட்டிலிருப்பதால், அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று தன்னைத்தானே அவர் சமாதானப்படுத்திக்கொண்டார்.

புலிப் போராளிகள் வெளியே தொலைத் தொடர்புக் கருவிகளில் பேசிக்கொண்டிருப்பது தெளிவற்றுக் கேட்டது. சற்று நேரத்தில் ஒருவன் உள்ளே நுழைந்து ராகுலனிடம் சொன்னான்:

“நீங்களும் வரலாம் டொக்டர். அது எங்களுக்கும் நல்லதுதான். ஆனால், இதுவொரு இரகசிய நடவடிக்கை. நீங்கள் இரகசியத்தைப் பாதுகாப்பீங்கள் எண்டு நம்புறம். உங்கிட குடும்பத்துக்குக் கூடச் சொல்லக்கூடாது. நாங்கள் உடனேயே வெளிக்கிடோணும்.” 

அங்கே ஆலோசிக்க நேரமிருக்கவில்லை. உடலத்தை அங்கிருந்து அகற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தபோதும், அதை நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பதற்கான இரசாயனங்களை எடுத்துப் போராளிகளிடம் கொடுத்தபோதும், ஜனனியைக் குறித்த சிந்தனையே ராகுலனை வதைத்துக்கொண்டிருந்தது.

நான் புலிகளோடு சேர்ந்து வன்னிக்குப் போவதை ஜனனி ஒருபோதும் விரும்பமாட்டார். நான் எதற்காகப் போகிறேன் என்பதையும் அவரிடம் சொல்ல முடியாது. எதற்கும் நான் இப்போது உடலத்தோடு வன்னிக்குப் போய்விடலாம். இவர்களை நம்பி இதை ஒப்படைக்கவே முடியாது. புலிகளின் கற்றுக்குட்டி மருத்துவக் குழுவுக்கு உடலை அழியாமல் காப்பாற்றும் வல்லமை இல்லை. களத்தில் காயமடைந்த தோழனைக் கொன்றுவிட்டுப் பின்வாங்கும் வழக்கமுள்ளவர்கள், இந்த உடலையா பத்திரமாக வைத்திருக்கப்போகிறார்கள் என்றெல்லாம் குறுக்குமறுக்காக ராகுலனின் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன.

அவர் திலீபனின் உடலோடு கடலைக் கடக்கப் புலிகளின் படகில் ஏறியபோது, கரையில் நின்றிருந்த அவருக்குத் தெரிந்த போராளியொருவனிடம் ஒரு தகவலைச் சொன்னார்:

“தம்பி உங்களுக்கு என்ர வீடு தெரியுமெல்லே… பிரவுண் ரோட்டில போய் பெரியாஸ்பத்திரி டொக்டர் ஜனனியின்ர வீடெண்டு கேட்டாலே காட்டுவினம். நான் வன்னிக்குப் போயிட்டன் எண்டும், அவவையும் வன்னிக்கு வரச் சொல்லியும் சொல்லிவிடுங்க. அவ கர்ப்பவதி தம்பி… உடனேயே தகவல் சொல்லுறியளா?”

“நீங்கள் கவலைப்படாதீங்க டொக்டர். நான் இப்பயே யாழ்ப்பாணத்தில நிக்கிற போராளியளுக்கு வோக்கியில தகவல் சொல்லுறன். நீங்கள் முன்னால போங்கோ…பின்னாலேயே ஜனனி டொக்டர அனுப்பிவிடுறம்.”

பேய்மழை பெய்த அன்றைய இரவில்தான், அந்த மாபெரும் இடப்பெயர்வு நடந்தது. இலட்சக்கணக்கான யாழ்ப்பாண மக்கள் தங்களது வீடுகளையும், உடைமைகளையும், முதியவர்களையும் கைவிட்டு, உப்புநீரைக் கடந்து வன்னிப் பெருநிலப் பரப்புக்குச் சென்றார்கள். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய இலங்கை இராணுவம் பிறகு எப்போதும் அந்நிலத்தை விட்டு நீங்கவேயில்லை.

4

திலீபனின் உடல் மிக இரகசியமாக வன்னிக்குக் கொண்டுவரப்பட்டதைப் புலிகளின் முக்கியமான உறுப்பினர்களைத் தவிர அறிந்த ஒரேயொரு நபர் மருத்துவர் ராகுலன்தான். எனவே தன்மீது புலிகள் எப்போதும் ஒரு கண்ணை வைத்திருப்பார்கள் என்பது ராகுலனுக்கும் தெரியும். அவர் எங்கு சென்றாலும் புலி நிழல் தன்னைத் தொடர்ந்துவருவதை அவர் உணர்ந்திருக்கிறார். இதனால் அவர் ஆத்திரமேதும் அடையவில்லை. அது அவர்களின் கடமை, அவர்களின் குணம் என்பதை ராகுலன் தெரிந்தே வைத்திருக்கிறார்.

வன்னிக்குக் கொண்டுவரப்பட உடலை கிளிநொச்சியிலிருந்த புலிகளின் மருத்துவ முகாமில்தான் இரகசியமாக மறைத்து வைத்தார்கள். அந்த முகாமுக்குப் பக்கத்திலேயே ராகுலன் தங்குவதற்கு ஒரு சிறிய வீட்டையும் புலிகள் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள். ராகுலன் மருத்துவ முகாமுக்குச் சென்று, திலீபனின் உடலைப் பாதுகாப்பதற்கான வேலைகளைச் செய்துகொண்டிருந்தார். வேறு எவரும் அந்த உடலத்தைத் தொடுவதற்கு ராகுலன் அனுமதிக்கவேயில்லை. 

ஜனனி வன்னிக்கு வரவேயில்லை. அவரும் பெற்றோரும் யாழ்ப்பாண நகரத்திலிருந்து வெளியேறி, தென்மராட்சியில் எங்கேயோ தங்கியிருக்கிறார்கள் என்ற தகவலும், பின்னர் அவர்கள் எப்படியோ கொழும்புக்குச் சென்றுவிட்டார்கள் என்ற தகவலுமே தென்மராட்சியிலிருந்து வன்னிக்கு வந்தவர்கள் மூலமாக ராகுலனுக்குக் கிடைத்தன. அவர்கள் அங்கேயே பாதுகாப்பாக இருக்கட்டும் என்று ராகுலன் நினைத்துக்கொண்டார். ஜனனி கொழும்பு மருத்துவக் கல்லூரியில் படித்தவர். அங்கே அவருக்கு ஏராளமான நண்பர்களும் உறவினர்களுமிருக்கிறார்கள். ஜனனியின் நண்பியான தர்ஷினியின் முகவரி ராகுலனது ஞாபகத்திலிருந்தது. ஒரு கடிதத்தை எழுதி, அந்த முகவரிக்கு ராகுலன் அனுப்பிவைத்தார். ஒரு முக்கியமான மருத்துவக் கடமையில் தான் ஈடுபட்டிருப்பதாக மட்டுமே அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்திற்குப் பதில் ஏதும் வராததால், தனக்கு ஞாபகத்திலுள்ள கொழும்பு விலாசங்களுக்கு எல்லாம் ராகுலன் கடிதம் எழுதிப் போட்டார். அவற்றுக்கும் பதில்கள் கிடைக்கவில்லை. 

அவர் அனுப்பிய எல்லாக் கடிதங்களும், அவருக்கு அனுப்பப்பட்ட எல்லாக் கடிதங்களும் புலிகளின் உளவுத்துறையால் கைப்பற்றி அழிக்கப்பட்டன என்று பல வருடங்கள் கழித்துத்தான் ராகுலன் அறிந்துகொண்டார். வன்னிக்கு வரும்போது, அவரது மனைவிக்குப் போராளி ஒருவன் மூலம் அனுப்பிவைத்த தகவல் கூட மனைவியிடம் சென்று சேர்ந்திருக்காது என்று அவர் ஊகித்தார்.

இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடுமளவுக்கு ஒரு சம்பவம் நடந்தது. நீண்ட காலங்களிற்குப் பின்பு விசுவமடுவில் ராகுலனைச் சந்தித்த நோர்வே நாட்டைச் சேர்ந்த செஞ்சிலுவைச் சங்க மருத்துவர் ஒருவர் சொன்னார்:

“டொக்டர்… காணாமற்போனவர்களது பட்டியலில் மருத்துவர் சேக்கிழார் ராகுலன் என்ற உங்களது பெயரும் இருக்கிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்டெடுக்கப்பட்ட முகம் எரியுண்ட உடல் உங்களுடையது என்றே எல்லோராலும் நம்பப்படுகிறது”. 

இதற்குச் சில நாட்கள் கழித்து ஜனனியும் குழந்தையும் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார்கள் என்ற செய்தி புலிகள் மூலமாக ராகுலனுக்குக் கிடைத்தது. அதையிட்டும் ராகுலன் மகிழ்ச்சியடையவே செய்தார். போர் முடிவதற்கான எந்த அறிகுறியும் இருக்கவில்லை. இவையெல்லாம் முடியும் நாளில், நான் அவர்களைச் சந்திப்பேன் என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.

திலீபனின் உடலைக் கிளிநொச்சியில் பாதுகாத்துவைத்த அடுத்த வருடமே, அந்த நகரமும் இராணுவத்திடம் வீழ்ந்தது. ராகுலன் திலீபனின் உடலோடு, முத்தையன்கட்டிலிருந்த புலிகளின் மருத்துவ முகாமுக்குச் சென்று, அங்கே உடலைப் பாதுகாத்து வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்தார். புலிகளுக்கு ராகுலனின் பணியில் முழுத் திருப்தியேயிருந்தது. தலைவரின் நேரடி உத்தரவு எனச் சொல்லி, மாதாமாதம் ஒரு கணிசமான தொகையை ராகுலனுக்குச் சம்பளமாகக் கொடுத்தார்கள். ராகுலன் அந்தத் தொகையில் கால்வாசியைக் கூடச் செலவு செய்ய மாட்டார். எஞ்சியிருக்கும் பணத்திற்கு மருந்துகளை வாங்கி, ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கினார்.

புலிகளின் மருத்துவக் கட்டமைப்பைத் தான் மிகக் குறைவாக மதிப்பிட்டுவிட்டதாகக் கூடப் பல தடவைகள் ராகுலன் நினைக்க வேண்டியிருந்தது. திறமையான பல மருத்துவர்கள் புலிகளின் அணியிலிருந்தார்கள். மருத்துவ முகாம் கிட்டத்தட்ட ஒரு வெளிநாட்டு மருத்துவமனைக்குரிய உபகரண வசதிகளுடனிருந்தது. திலீபனின் உடலைப் பாதுகாப்பதற்காக ராகுலன் கேட்ட இரசாயனங்களையும், மருந்துகளையும் புலிகள் எந்தக் குழப்பமுமின்றி வழங்கினார்கள்.

இரண்டு வருடங்கள் கழித்து, திலீபனின் நினைவு நாளன்று ‘ஓயாத அலைகள்-2’ என்ற தாக்குதல் நடவடிக்கையைப் புலிகள் ஆரம்பித்து, மூன்றே நாட்களில் கிளிநொச்சியைத் திரும்பவும் கைப்பற்றினார்கள். திலீபனின் உடலோடு ராகுலன் மறுபடியும் கிளிநொச்சி மருத்துவ முகாமுக்கு வந்து சேர்ந்தார். சில வருட வன்னி வாழ்க்கையில் ராகுலனே மோசமான உடல் உபாதைகளில் சிக்கிக்கொண்டார். ஆனாலும், அவர் ஒருபோதும் மனம் சோர்ந்தாரில்லை. திலீபனின் உடலை ஓர் அற்புதச் செடியைப் போன்று கவனித்தார். ஒவ்வொருநாள் காலையிலும் அதை மலர வைத்தார். மற்றைய வேளைகளில் மருத்துவமனைகளுக்குச் சென்று, நோயாளிகளைப் பராமரித்தார்.

சமாதான காலம் வந்தபோது, புலிகள் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளைக் கொஞ்சம் தளர்த்தியிருந்தார்கள். வன்னிக்கான பாதைகள் திறக்கப்பட்டன. அப்போது கூட வன்னியிலிருந்து வெளியேற ராகுலன் யோசிக்கவில்லை. அவருக்கு அங்கேதான் கடமையிருந்தது.

கிளிநொச்சியில் ஒரு பல்கலைக்கழகத்தைக் கட்டியெழுப்பி, அங்கே மருத்துவ பீடத்தில் திலீபனின் உடலைப் பாதுகாத்து வைப்பதற்குப் புலிகளின் தலைமை திட்டமிட்டிருப்பதாக மருத்துவக்குழுப் போராளிகள் மூலமாக ராகுலன் அறிந்தார். இந்தச் சமாதான காலத்தில் அதற்கான சாத்தியமும் நிறையவே இருக்கிறது. இந்தத் திட்டம் நிறைவேறினால், அங்கே திலீபனின் உடலைப் பாதுகாத்துவைக்க ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, மனைவியிடமும் குழந்தையிடமும் போய்விடலாம் என்று ராகுலனுக்கு மனதிற்குள் ஓர் எண்ணமிருக்கவும் செய்தது. சமாதான காலத்தில் மனைவியிடமும் குழந்தையிடமும் தொலைபேசியில் பேசவும் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. இங்கே பல்கலைக்கழகத்தைக் கட்டுவதற்கான வேலைகள் தொடங்கவிருப்பதாகச் சொல்லி, அதை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு வந்துவிடுவதாகச் சொன்னார். ஒரு சொல் கூட அவர் திலீபனைப் பற்றிச் சொன்னாரில்லை. ‘நீங்கள் பொறுப்பற்றவர், வெற்றுப் பகட்டுக்காரர்’ என்று ஜனனி சொல்லவும் தவறவில்லை. ராகுலன் முடிந்தவரை ஜனனியைச் சமாதானப்படுத்தி, நம்பிக்கையூட்டினார். இனித்தான் மிகத் துன்பமான, பேரழிவான, ஊழியான காலத்தை எல்லோருமே எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை ராகுலன் அப்போது உணரவில்லை.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிக்கப்பட்டு, மீண்டும் உக்கிரமாகப் போர் ஆரம்பித்த போது, புலிகளின் தளங்கள், முகாம்கள் குறித்து எல்லாத் தகவல்களும் துல்லியமாக இலங்கை விமானப்படையினரிடம் இருந்திருக்க வேண்டும். அவர்கள் குறிவைத்து இலக்குகளின் மீது வெற்றிகரமாகத் தொன் கணக்கில் குண்டுகளை இறக்கினார்கள். அப்படியான ஒரு தாக்குதலில்தான் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனும் கொல்லப்பட்டார்.

காலையில், திலீபனின் உடலை மீள் பதப்படுத்துவதற்கான வேலைகளை முடித்துவிட்டு, மருத்துவ முகாமை விட்டு ராகுலன் வெளியேறிய இரண்டாவது நிமிடத்தில், மருத்துவ முகாம் மீது இரண்டு போர் விமானங்கள் குத்தி இறங்கி ஏறின. முகாமிலிருந்து சிதறிய எச்சங்கள் பறந்து வந்து ராகுலனைச் சுற்றி வீழ்ந்தன. ராகுலனும் தன்னையறியாமலேயே நிலத்தில் வீழ்ந்துவிட்டார். எனினும் சுதாகரித்துக்கொண்டு எழுந்து, மருத்துவ முகாமை நோக்கி ஓடினார். அந்த முகாமிலிருந்த அத்தனை பேரும் சிதறிக் கிடந்தார்கள். வலுவாகக் கட்டி எழும்பப்பட்டிருந்த நான்கு நெருக்கமான இரகசியச் சுவர்களுக்கு மத்தியில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டி சிதறுண்டு, வெளிறிய நட்சத்திரங்களைப் போன்ற துகள்கள் திலீபனின் உடலை மூடியிருந்தன. 

கிளிநொச்சி மறுபடியும் இராணுவத்தினரிடம் வீழ்ந்தபோது, திலீபனின் உடலையும் எடுத்துக்கொண்டு ராகுலன் கிளம்பினார். அவர் புலிகளின் மருத்துவ அணியுடன் ஒவ்வொரு ஊராக நகர நகர அந்த ஊர்களும் இராணுவத்திடம் வீழ்ந்துகொண்டேயிருந்தன. அவை மிகக் கடுமையான காலங்களாகின. பஞ்சமும், தீயும், வெடி முழக்கமும், அழுகுரல்களும், இரத்தமும், சாவும் எல்லோரையுமே பைத்தியங்களாக்கிக்கொண்டிருந்தன. என்றாலும் அந்த மக்கள் கூட்டம் கிழக்குக் கடல் நோக்கி நகர்ந்துகொண்டேயிருந்தது. அவர்களுடன் திலீபனின் உடலும் நகர்ந்தவாறேயிருந்தது. 

இனியும் திலீபனின் உடலைப் பாதுகாக்க முடியாது என்ற நிலை தோன்றிவிட்டது. அதற்குத் தேவையான இரசாயனங்களும் மருந்துகளும் கிடைப்பதாகயில்லை. உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கே மருந்தில்லாத போது, உயிரற்ற உடலுக்காக மருந்துகளைச் செலவழிப்பது நீதியற்றது என்றே ராகுலனுக்குத் தோன்றிற்று. எல்லாமே கையை விட்டுப் போய்விட்டன. திலீபனின் உடலை மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டிய தருணம் இதுவென்றே அவர் நினைத்தார். அதை இப்போதுகூடச் செய்யாவிட்டால், ஓடும் வழியில் துர்நாற்றமடிக்கும் அழுகிய மூட்டையாக அதைக் கைவிட்டுவிடுவார்களோ என்று அவர் அஞ்சினார். இந்துக் கல்லூரியில் அவர் முதன் முதலாகப் பார்த்த கிறங்கிய கண்களும் அடக்கத்தையே கேட்டுக்கொண்டிருப்பதாக அவருக்குத் தோன்றிற்று.

புலிகளின் மருத்துவ அணிக்கும் நிலைமை தெளிவாகப் புரிந்தது. அவர்களும் திலீபனின் உடலை அடக்கம் செய்வதே நல்லது என்று நினைத்தார்கள். ஆனால், தலைமையிடமிருந்து அதற்குக் கண்டிப்பான மறுப்புக் கிடைத்தது. எப்பாடு பட்டாவது திலீபனின் உடலைப் பாதுகாக்க வேண்டுமெனத் தலைமையிடமிருந்து உத்தரவு வந்தது.

நல்லூர் முருகன் கோயிலில், திலீபன் ஆற்றிய கடைசி உரையை ராகுலன் நினைத்துக்கொண்டார். பேசுவதற்கான சக்தியை முழுமையாக இழந்திருந்த திலீபன் மெல்லிய குரலில் முனகினார்: “நேற்றுத் தலைவர் என்னை வந்து பார்க்கும் போது ஒன்றைச் சொன்னார்… திலீபன் நீ முன்னாலே போ, நான் பின்னாலே வருகிறேன் !”

கிடைக்கும் இரசாயனங்களையும், மருந்துகளையும் பயன்படுத்தி, திலீபனின் உடலைப் பாதுகாக்க ராகுலன் போராடிக்கொண்டிருந்தார். ஆனால், அது சிறுகச் சிறுக அழிந்துகொண்டிருக்கிறது என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. உயிரை வதைத்து மரணமுற்றவனின் உடலும் இப்படி வதைபட்டு, நாற்றம் பெருகித் தன் கண்முன்னே காய்ந்த இறைச்சியாகப் புழுத்துக்கொண்டிருப்பதை அவரால் தாங்கவே முடியவில்லை. ஆனாலும், திலீபனின் உடல் நகர்ந்துகொண்டேயிருந்தது. உடலை அடக்கம் செய்துவிடுவதே நல்லது எனச் சொல்லியவாறே ராகுலனும் கூடவே போய்க்கொண்டிருந்தார்.

இறுதியாக, 2009-வது வருடத்தின் சித்திரை மாதத்தில், திலீபனின் உடலை அடக்கம் செய்வதற்குத் தலைமையிடமிருந்து உத்தரவு கிடைத்தது. மிக இரகசியமான முறையில், இரகசியமான இடத்தில், இராணுவ மரியாதைகளோடு திலீபன் புதைக்கப்பட்டார். ஓர் எலும்புக்கூட்டுக்கு இராணுவச் சீருடை போர்த்தப்பட்டிருந்ததை ராகுலன் பார்த்தவாறே நின்றிருந்தார். அவரது கண்களிலிருந்து இப்போதும் ஒரு சொட்டுக் கண்ணீர் விழவில்லை. அவரது ஆன்மா உணர்ச்சியற்றுக் கடினமாகியிருந்தது. ‘யுத்தம் முடிந்தது’ என்று அவர் உதடுகளுக்குள் முணுமுணுத்துக்கொண்டார்.

இதற்கு ஒரு மாதம் கழித்து, நந்திக்கடலைக் கடந்த மக்களோடு ராகுலனும் கலந்து சென்று இராணுவத்திடம் சரணடைந்தார். சில நாட்கள் கழித்து, அவரை வவுனியா தடுப்பு முகாமில் எதேச்சையாகப் பார்த்த ஒரு நடுத்தர வயது இராணுவ அதிகாரி “உன்னைப் பார்த்தால் பிரபாகரன் மாதிரி இருக்கிறதே…அந்த ஆளைத்தான் நாங்கள் முடித்துவிட்டோமே…இங்கே எப்படி?” என்று நக்கலாகப் பேசியபடியே அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றான்.

தானொரு மருத்துவர் என்று ராகுலன் சொன்னதும், அதிகாரியின் விசாரணைக் கோணமே மாறிவிட்டது. ஓரளவு மரியாதையுடன் ஆனால், துருவித் துருவி ராகுலனிடம் அவன் விசாரணை செய்தான். ராகுலன் இத்தகைய விசாரணைகளுக்குப் பழக்கப்படாதவர். அவர் திலீபனின் உடல் குறித்த உண்மையை எக்காரணத்தாலும் வெளிப்படுத்தக்கூடாது என்ற உறுதியோடுதான் இருந்தார். ஆனாலும், அந்த அதிகாரி குறுக்கு விசாரணையில் நிபுணனாக இருந்தான். “டொக்டர்… நீங்கள் இலண்டனில் மருத்துவம் கற்றது போலவே, நானும் இலண்டனில் தான் புலனாய்வுத் துறையில் உயர்ந்த பயிற்சியைப் பெற்றிருக்கிறேன்” என்று சொல்லியவாறே, சுத்தமான கண்ணாடிக் கோப்பையில் குளிர்ந்த நீரை நிரப்பி ராகுலனிடம் கொடுத்தான். கடைசியில் ராகுலன் சிலந்திவலை போன்று பின்னப்பட்டிருந்த விசாரணை வளையத்திற்கு நடுவே திலீபனின் உடலத்தை எடுத்து வைக்க வேண்டியதாகப் போய்விட்டது. 

ராகுலன் சொன்னதைக் கேட்டதும், அந்த அதிகாரியே ஆடிப்போய்விட்டான். “திலீபனின் உடல் எங்கே புதைக்கப்பட்டிருக்கிறது டொக்டர்?” என்று இராணுவ அதிகாரி கேட்கவும், “முள்ளிவாய்க்கால்” என்று ராகுலன் சொல்லிவிட்டார். அது அவர் எதிர்பாராமலேயே அவரது வாயிலிருந்து உருண்ட வார்த்தை. 

அதைக் கேட்டதும் அந்த அதிகாரி ஒரேயடியாக உற்சாகத்தில் மிதக்க ஆரம்பித்துவிட்டான். திலீபனின் உடல் இருக்கிறதா இல்லையா என்பது கூட இதுவரை அரசாங்கத்திற்குத் தெரியாமலேயேயிருந்தது. அந்த உடல் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்டிருப்பதை அறிந்ததும், அந்த உடலைக் கைப்பற்றிவிட அதிகாரி துடித்துக்கொண்டிருந்தான். திலீபனது ஒவ்வொரு எலும்பும் அவர்களது வெற்றிக் கேடயத்தில் பொறிக்கப்படும் ஒவ்வொரு நட்சத்திரம்.

உடனடியாகவே அதிகாரி ஓர் இராணுவ அணியை ராகுலனுடன் முள்ளிவாய்க்காலுக்கு அனுப்பிவைத்தான். அது ராகுலன் எதிர்பாராதது. இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துபோன ஒரு மனிதனின் உடலை, பதினான்கு வருடங்கள் வன்னியின் வனாந்தரம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்த ஓர் உடலை இவர்கள் மீளத் தோண்டி எடுப்பார்கள் என்றெல்லாம் அவர் நினைத்திருக்கவில்லை.

செல்லும் வழியெல்லாம் ஒன்றை மட்டுமே ராகுலன் திரும்பத் திரும்ப மனதிற்குள் உறுதியாகச் சொல்லியவாறே சென்றார். நான் ஒருபோதும் இவர்களிடம் பார்த்திபனின் உடலைக் காட்டிக்கொடுக்கப் போவதில்லை. இத்தனை வருட அலைச்சலுக்குப் பிறகு பூமிக்குள் அமைதியடைந்திருக்கும் அவனை மீண்டும் ஒருபோதும் வெளியே கொண்டுவரக்கூடாது. 

ராகுலனது மூளையில் வேறொரு திட்டம் உருவாகியது. வயலில் எள்ளை விதைத்தது போலவே முள்ளிவாய்க்காலில் எல்லா இடங்களிலும் மனிதர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கே ஏதாவதொரு இடத்தைக் காட்டி, அங்கேதான் திலீபனைப் புதைத்தார்கள் எனச் சொல்லிவிட வேண்டியதுதான். நிச்சயமாக ஏதாவதொரு உடல் கிடைக்கும். ஏதாவது பிசகு நேர்ந்தால், நினைவுத் தடுமாற்றம் எனச் சாக்குபோக்குச் சொல்லிவிட்டு, இன்னொரு இடத்தைக் காட்ட வேண்டியதுதான்.

அவர்கள் முள்ளிவாய்க்காலுக்கு வந்து சேரும்போது மாலை நேரமாகிவிட்டது. அந்த நிலத்தில் இராணுவத்தினர் மட்டுமே நின்றிருந்தார்கள். அலைகள் பேரிரைச்சலோடு கரைக்கு ஏறிக்கொண்டிருந்தன. அங்கே ஓர் இடத்தைக் காட்டி “இங்கேதான்” என்றார் ராகுலன். இராணுவத்தினர் மிகுந்த உற்சாகத்தோடு அந்த இடத்தை மண்வெட்டியால் தோண்ட ஆரம்பித்தார்கள். உள்ளே என்ன இருக்கப் போகிறது என்ற பதற்றத்தோடு ராகுலன் காத்திருந்தார்.

அதிக தூரம் தோண்ட வேண்டியிருக்கவில்லை. இரண்டடி தோண்டியதுமே சில எலும்புகள் கிடைத்தன. இராணுவத்தினர் ஆளுக்கொரு எலும்பை மகிழ்ச்சியுடன் எடுத்துப் பார்த்தார்கள். ராகுலனும் கண்களை விரித்து அந்த எலும்புகளைக் கூர்ந்து கவனித்தார். அவரது கண்களிலிருந்து நீர் உருண்டு கொழுத்த கன்னங்களில் இறங்கியது. அதைக் கவனித்தவாறே, ஓர் இளநிலை அதிகாரி தொலைத்தொடர்புக் கருவியில் வவுனியா இராணுவ மையத்திற்குப் பேசினான்:

“நாங்கள் இப்போது சில எலும்புகளைக் கண்டுபிடித்திருக்கிறோம். ஆனால், மிகச் சிறிய எலும்புகளாகயிருக்கின்றன. அவன் பட்டினி கிடந்து செத்ததாலும், நீண்ட நாட்களாகிவிட்டதாலும் அவனுடைய எலும்புகள் சிறுத்துவிட்டன என்றே நினைக்கிறேன்.”

அப்போதுதான் மருத்துவர் ராகுலன் தனது கனத்த சரீரத்தை அந்தக் கடற்கரையில் உட்கார்த்திக்கொண்டு, மணலை அள்ளித் தலையில் போட்டவாறே குழறி அழத் தொடங்கினார். இராணுவத்தினரின் கைகளிலிருந்தவை மயில் பறவையொன்றின் சிதைந்த பாகங்கள் என்பதை அவர் கண்டுபிடித்திருந்தார்.

(உயிர்மை – சனவரி 2023 இதழில் வெளியானது)

 

https://www.shobasakthi.com/shobasakthi/2023/02/14/மெய்யெழுத்து/?fbclid=IwAR2RDWpWcjyrMGYeFDBo85HNZcqzTAQde-b_1b6yTyfqX6vIDad7M8C7qv8

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.