Jump to content

தேசியமென்னும் வெற்றுக் கூடு – அன்றும் இன்றும் ? - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேசியமென்னும் வெற்றுக் கூடு – அன்றும் இன்றும் ? - யதீந்திரா


அரசியலில் ஒரு கூற்றுண்டு. அதாவது, பேருந்தை தவறவிடுதல். வாய்ப்புக்கள் கிடைக்கின்ற போது, அதனை கெட்டியாக பற்றிக்கொள்ள வேண்டுமென்பதுதான் இந்தக் கூற்றின் பொருளாகும். தமிழில் இதனை காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளுதல் எனலாம். ஒரு மேற்குலக நாடொன்றின், தூதுவருடனான கலந்துரையாடலொன்றின் போது, இதனை நான் குறிப்பிட்டேன், அவர் திரும்பக் கூறினார், நீங்கள் பேருந்தை தவறவிட்டது மட்டுமல்ல, பேருந்திலிருந்து பாய்ந்துமிருக்கின்றீர்கள்.

திபெத் ஆண்மீகத் தலைவர் தலைலாமா கூறுவார். அதிஸ்ட தேவதை எப்போதாவதுதான் கதவை தட்டுவார். அவர் கதவை தட்டும்போது தாமதிக்காமல் கைகை பிடித்து, உள்ளுக்குள் இழுத்துக்கொள்ள வேண்டும். அதிஸ்ட தேவை கதவை தட்டும்போது, சீ போ, என்று கூறி துரத்திவிட்டால், அதன் பின்னர் அவர் ஒருபோதும் கதவை தட்டப் போவதில்லை. அரசியலில் வாய்ப்புக்கள் எல்லா சந்தர்பங்களிலும் கிடைப்பதில்லை. ஒரு அரசியல் சமூகம் என்னதான் திறமைகள் பொருந்தியதாக இருந்தாலும் கூட, அதனிடம் தியாகங்களும் அர்ப்பணிப்புமிருந்தாலும் கூட, வாய்புக்களை சரியாக பயன்படுத்திக்கொள்ளாவிட்டால், அந்தச் சமூதாயத்தின் தியாகங்களும் அர்ப்பணிப்புக்களும் இறுதியில் விழலுக்கு இறைத்த நீராகும்.

இந்த அனுபவத்திற்கு நாம் வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. நாம்தான் இதற்கு மிகவும் சிறந்த உதாரணம். பதின்மூன்று வருடங்களுக்கு பின்னர், பிரபாகரன் இருக்கின்றாரென்று ஒருவர் கூற, அதனை முன்வைத்து விவாதம் இடம்பெறுகின்றதென்றால், விதியே, இந்த ஈழத் தமிழினத்தை என்ன செய்யப் போகின்றாய் என்று மனம் நோவதை தவிர, இந்த சமூதாயத்தில் வேறு எதனைச் செய்ய முடியும்? ‘முறிந்த பiனை’ நூலின் முகப்பில் ஒரு குறிப்புண்டு. அதாவது, புத்தியுள்ள ஒவ்வொரு மணிதனும் எரிகின்ற தேசத்தை விட்டுவிட்டு, ஆகக் குறைந்த நன்றியுணர்வுகூட இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றான். இன்று தமிழ் தேசியமென்னும் பெயரில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் குத்தாட்ட அரசியலை எண்ணினால், தமிழ் சமூகத்தில் எஞ்சியுள்ள புத்திமிக்க சமூகமும் வீழ்சியடைந்து செல்கின்றதா என்னும் கேள்வியையே, நாம், நமக்குள் கேட்க வேண்டியிருக்கின்றது. மார்டின் லூதர்கிங் கூறுவது போன்று இங்கு பிரச்சினை தீயவர்கள் அல்லர், ஆனால், அந்தத் தீயவர்களின் செயல்களை கண்டும்காணமால் இருக்கின்றார்களே நல்லவர்கள், அவர்கள்தான் நமது தலைமுறையின் பிரச்சினையாகும்.

விடுதலைப் புலிகள் அமைப்பு, நமது காலத்தில் நம்மால் ஆதரிக்கப்பட்ட ஒரு போராட்ட இயக்கம் என்பதில் பலராலும் மாறுபட முடியாது. ஏனெனில் அதுதான் உண்மை. இந்தக் கட்டுரையாளர் உட்பட, தற்போது தமிழ் சூழலில் கருத்துருவாக்கங்களில் முன்னணி வகிக்கும் பலரும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள்தான். ஆனால் ஒரு வீழ்சியேற்பட்ட பின்னர், சரி பிழைகளை நிறுத்துப் பார்ப்பதுதான் அறிவுக்கு முன்னுரிமையளிக்கும் அல்லது படித்தவர்களென்று கூறப்படும் சமூகமொன்றின் தலையாய பணியாகும். ஆனால் அது நமது சமூகத்தில் நிகழவில்லை. நிகழ்ந்திருக்க வேண்டும். அவ்வாறு நிகழ்ந்திருந்தால் இன்று பதின்மூன்று வருடங்களுக்கு பின்னரும் கூட பரபரப்பில் காலத்தை விரயம் செய்ய வேண்டியேற்பட்டிருக்காது. ஈழத் தமிழ் சமூகத்தின் – படித்தவர்களென்னும் இறுமாப்பு, அதன் கண்முன்னாலேயே சீன்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றது. அறிவுள்ளவர்கள் என்போர் அனைவரும் வாய் மூடிக் கிடக்கின்றனர். அறிவை ஆயுதமாக்கிக் கொள்ள முடியாத சமூகமொன்றில், அறிவின் பெறுமதியென்ன என்பது இந்தக் கட்டுரையாளருக்கு புரியவில்லை. புரிந்தவர்கள் கூறுங்கள்.

பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கள். இப்படியொரு கூற்றுண்டு. கிடத்தட்ட இப்படியானதொரு நிலையில்தான், இன்றைய தமிழ் தேசிய அரசியல் இருக்கின்றது. முகநூல், வட்ஸ்அப், யுடியூப் இல்லாவிட்டால் தமிழ் தேசியமிலை. முன்னர் செயலால் தீர்மானிக்கப்பட்ட தமிழ் தேசிய அரசியல் இப்போது, சைபர் வெளியால் தீர்மானிக்கப்படுகின்றது. ஈஸி கேஸ் போன்று, ஈஸி தேசியம். ஒரு முகநூல் கணக்கு அல்லது யுடியூப் இருந்தால் தேசியவாதியாகிவிடலாம். ஆனால் நாம் கடந்து வந்த பாதையை எண்ணிப் பார்த்தால் எத்தனை தியாகங்கள், எத்தனை அர்பணிப்புக்கள். பல்லாயிரம் பேர் தங்களின் வாழ்வை கொடுத்திருக்கின்றனர். ஆனால் இப்போது எவ்வித அர்பணிப்புமில்லாத ஒரு குழுவினர் அரசியலை சாதாரணமாக தீர்மானித்துவிட்டுச் செல்கின்றனர்.

இந்தக் கட்டுரையாளர் பல வருடங்களுக்கு முன்னர் தேசியம் ஒரு வெற்றுக் கூடென்னும் தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியிருந்தார். தேசியம் ஒரு வெற்றுக் கூடென்பது, அல்ஜீரிய சிந்தனையாளர் பிரான்ஸ்ட் பேனானின் கருத்தாகும். தேசியவாதம் தொடர்பில் பல பார்வைகள் உண்டு. ஆனால் பேனானின் பார்வை மிகவும் கனதியானது. தேசியம் ஒரு வெற்றுக் கூடென்று கூறுவதால், தேசியவாதம் வெற்றுத்தனமான கோசமென்று எண்ணிவிடக் கூடாது. அந்த அடிப்படையில் நானும் இந்த விடயத்தை பயன்படுத்தவில்லை. ஆனால் ஒரு தேசியவாத அரசியல் போக்கிற்கு எவர் தலைமை தாங்குகின்றாரோ, அவரது அல்லது குறித்த குழுவினுடைய பண்புகளையே குறித்த தேசியவாதப் போக்கு வெளிப்படுத்துமென்பதுதான், பேனானின் வாதம். தேசியவாத அரசியல் போக்குகளை புரிந்துகொள்வதற்கு இது மிகவும் சரியானது.

உதாரணமாக ஒரு தேசியவாத அரசியல் போக்கிற்கு மதவாதத்தை முன்னிலைப்படுத்துபவர் தலைமையேற்றால், அந்த தேசியவாதம் மதவாத முகத்தையே காண்பிக்கும். உதாரணமாக பி.ஜே.பி முன்னிலைப்படுத்தும் இந்துத்வா தேசியவாதம். இந்திய அரசியலுக்கு காங்கிரஸ் தலைமையேற்கும் போது, இந்துத்வா அடையாளம் முன்னிலைவகிக்காது. ஏன்? ஏனென்றால் தலைமை தாங்குபவரின் கருத்தியல் சார்புநிலையே அவர் தலைமையேற்கும் அரசியலை தீர்மானிக்கின்றது. அதே போன்று, இடதுசாரி கருத்தியல் சார்புநிலைகொண்டர்கள் தேசியவாத அரசியலுக்கு தலைமையேற்கும் போது, அங்கு தேசியவாதம் வேறு முகத்தை காண்பிக்கும். இதன் காரணமாகவே தேசியவாதத்தை வெற்றுக் கூடென்று பேனான் கூறுகின்றார். தேசியவாதமென்னும் வெற்றுக் கூட்டை ஒவ்வொருவரும் தங்களின் விருப்பு வெறுப்புக்களால் நிரப்பிக் கொள்கின்றனர். இந்த பின்புலத்தில் நோக்கினால், 2009இற்கு முன்னர் தமிழ் தேசியவாத அரசியல் எவ்வாறிருந்தது, அது இப்போது எவ்வாறிருக்கி;ன்றது என்பதை ஒருவர் இலகுவாக புரிந்துகொள்ள முடியும். 2009இற்கு முன்னர் தமிழ் தேசியவாதம் அன்றைய செயல்களால் தீர்மானிக்கப்பட்டது. அர்பணிப்பும் தியாகங்களுமே அன்றைய தமிழ் தேசியத்தை தீர்மானித்தது. இன்றோ எவ்வித செயல்களுமில்லாதவர்களே தமிழ் தேசியத்தை தீர்மானிக்கின்றனர். இன்று தேசியமென்னும் வெற்றுக்கூடு வெறுமனே தேர்தல் வெற்றிக்கான முயற்சிகளாலும், வெறும் கோசங்களாலும், வெளியாரின் தயவுக்கான எதிர்பார்ப்புக்களாலும் மட்டுமே நிரம்பியிருக்கின்றது.

எங்கு தாங்கள் முன்வைக்கும் விடயங்களை வெற்றிகொள்வதற்கான ஆகக் குறைந்தளவு அர்பணிப்பு கூட, இல்லாமலிருக்கின்றதோ, அங்கிருந்து எந்தவொரு நன்மையையும் மக்கள் பெறமுடியாது. இன்றைய தமிழ் தேசியமென்பது வெறும் கோசங்களால் நிரப்பட்டிருக்கும் வெற்றுக் கூடு மட்டுமே. இந்த வெற்றுக் கூடு மக்களுக்கு எவ்வித நன்மையையும் வழங்காது. ஏனெனில் இன்று தமிழ் தேசியத்திற்கு தலையேற்றிருப்பதாக கூறிக்கொள்வோர் எவருமே, தாங்கள் கூறுவதை அடையும் வழிமுறை அறியாதவர்கள். ஒரு வகையில் இன்று தமிழ் மக்களின் நிலைமை, லொட்ரியில் அதிஸ்டம் கிடைக்குமென்று நம்பிக் கொண்டு, தினமும் தவறாமல் லொட்ரிச் சீட்டு வாகிக்கொண்டிருப்பது போன்ற ஒன்றுதான். இதில் இன்னொரு பிரிவு, தேசியமென்னும் பெயரால் மக்களை மேலும் ஓட்டாண்டியாக்கும் இலக்குடன் செயற்படுபவர்கள். ஒப்பீட்டடிப்படையில் இவர்களே மிகவும் ஆபத்தானவர்கள். இவ்வாறானவர்கள், மற்றவர்கள் அனைவரை விடவும், தங்களை மட்டுமே புனிதர்களாக பிராச்சாரம் செய்துவருகின்றனர் ஏனையவர்களை, கைக் கூலிகளென்றும் ஒட்டுக்குழுக்களென்றும் கூற முற்படுகின்றனர். இந்த அரசியல் போக்கு ஆபத்தானது. தங்களை புனிதர்களாகக் காண்பித்துக்கொள்ள இவர்கள், கொள்கையென்னும் துருப்புச் சீட்டை பயன்படுத்துகின்றனர். இவர்களை பொறுத்தவரையில் ஒரு விடயத்தை தொடர்ந்து அப்படியே கிளிப்பிள்ளைபோல் கூறிவருவதுதான் கொள்கை. உண்மையில் இது கொள்கைக்கு கொடுக்கப்படும் மிகவும் கொச்சையான விளக்கமாகும். இது அறிவுநிலைக்கு அப்பாற்பட்டது. இது சரியென்றால், இப்போது உலகில் சிறந்த கொள்கைவாத தலைவராக வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜுங் உன்னின் தலைமுறையைத்தான் கூறவேண்டும்.

உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்ட போதும், அவை எவற்றையும் கருத்தில்கொள்ளாது, இப்போதும், வடகொரியாவை, உலகிலிருந்து தனிமைப்படுத்தியே ஆட்சிசெய்கின்றனர். இதனை சிறந்த கொள்கையென்று கூற முடியுமா? உண்மையில் கொள்கையென்பது மாற்றங்களை கண்டு அஞ்சியோடுவதல்ல. மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதல்ல. மாறாக, மாற்றங்களை உள்வாங்கி, அந்த மாற்றங்களுக்கு ஏற்ப சமூகத்தை முன்னேற்றுவது. தங்களை நம்பும் மக்களுக்கு அபிவிருத்தியையும் ஏற்றத்தையும் கொடுப்பது.

மக்கள் தொடர்ந்தும் வறுமையில் வாடுகின்றனர், ஏனைய சமூகங்களை விடவும் பின்தங்கிய நிலையிலுக்கின்றனர் என்றால், நமது கொள்கை வாதத்தின் பெறுமதியென்ன? உலகில் வளர்ச்சியடைந்த அனைத்து சமூகங்களும் மாற்றங்களை ஏற்றுக்கொண்ட சமூகங்கள்தான். மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சமூகங்கள் தொடர்ந்தும் பின்நோக்கியே சென்றிருக்கின்றன. மற்றவர்களிடம் கையேந்திக் கொண்டிருக்கின்றன. இதற்கு இலங்கை ஒரு சிறந்த உதாரணம். அரசியல் முன்னோக்கி நகர்வதை தடுக்கும் கடும்போக்குவாதிகளுக்கு முன்னுரிமையளித்தமையால்தான், நாடு இவ்வறானாதொரு நிலையிலிருக்கின்றது. இதனை நாம் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே இப்போது தமிழ் மக்களுக்கு தேவையான தமிழ் தேசியவாதம் தாராளவாத தமிழ் தேசியவாதமாகும். இருப்பதை உச்சமாக பயன்படுத்திக் கொண்டு, கிடைக்கும் ஒவ்வொரு வாய்புக்களையும் பயன்படுத்திக்கொள்ளும் ஆற்றலுள்ள இளைய தலைமுறையொன்று தேசியமென்னும் வெற்றுக் கூட்டை நிரப்ப வேண்டும்.
 

http://www.samakalam.com/தேசியமென்னும்-வெற்றுக்-க/

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.