Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திராவிட வரலாற்று மறுமலர்ச்சி நாயகர் மு.க.ஸ்டாலின்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட வரலாற்று மறுமலர்ச்சி நாயகர் மு.க.ஸ்டாலின்

Lxi6YZbi-stalin.jpg

ராஜன் குறை

தனது எழுபதாவது அகவையை மார்ச் மாதம் முதல் நாள் நிறைவு செய்யும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திராவிட வரலாற்றின் மறுமலர்ச்சி நாயகராகக் காட்சி தருகிறார் என்றால் மிகையாகாது.

இந்திய வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தில் இந்தியாவை திராவிட இந்தியாவாக வடிவமைப்பதில் முன்னணி பங்கு வகிக்கும் தலைவராக வடிவெடுத்திருக்கும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதிலும், ஆதரவைக் கூறுவதிலும் தமிழ் மக்களுடன் இணைகிறேன்.

அவருடைய வரலாற்றுப் பங்களிப்பு தமிழ்நாட்டு எல்லைகளைக் கடந்து, இந்திய அளவிலானது என்பதைத் தெளிவாக்கும் விதமாகவே அவருடைய பிறந்த நாள் அமைகிறது.

இந்தியாவின் அரசியல் வரலாற்றுத் தருணம்

இந்தியாவின் நீண்ட கால வரலாற்றை ஆராய்பவர்கள் ஒரு முக்கிய அம்சத்தைக் காணலாம். அது என்னவென்றால் ஆரியம் என்று அழைக்கப்படும் சமஸ்கிருத, பார்ப்பனீய கருத்தியலுக்கும், அதற்கு மாற்றான வெகுஜன வாழ்வியல் நெறிகளின், சிரமண மதங்களின், அதாவது பெளத்த, ஜைன, அஜீவக மதங்களின் கருத்தியல்களுக்கும் உள்ள முரண் என்பதே அந்த முக்கிய அம்சம்.

ஆரிய பார்ப்பனீய கருத்தியல் என்பது ஒரு பிரமிட் வடிவத்தில் சமூக படி நிலையைக் கட்டமைப்பது. அதன் உச்சியில் பிராமணர்கள், அடுத்து சத்திரியர்கள், அடுத்து வைசியர்கள், அதற்கெல்லாம் அடித்தளமாக பெருமளவிலான விவசாயிகளான, உழைப்பாளர்களான சூத்திரர்கள், அவர்களுக்கும் கீழே அவர்ணர்கள் அல்லது பஞ்சமர்கள், விலக்கப்பட்ட ஆதிவாசிகள் என்பதே இந்த பிரமிட் வடிவிலான சமூக, அரசியல் அதிகாரக் கட்டமைப்பு.

இதற்கு மாற்றான வாழ்க்கை முறைகள், சிந்தனை முறைகளில் பண்டைய திராவிடமும் ஒன்றாக இருந்துள்ளது. தமிழ் மொழியின் தொல் இலக்கியங்களில் வெளிப்படும் கூற்றுக்கள் சமத்துவ சிந்தனைகளை வலியுறுத்துவையாக உள்ளன. தமிழகத்தில் புத்த, ஜைன மதங்களும் செல்வாக்குடன் விளங்கியுள்ளன.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவம், பிறப்பிலேயே வர்ணத்தைத் தீர்மானிக்கும் ஆரிய வாழ்முறைக்கு எதிரான குரலாகவே அமைகிறது. அதனால் இந்தியா முழுவதிலும் ஆரிய சமூக அமைப்பை, அதற்கான கருத்தியலை ஏற்காதவர்களை திராவிட இந்தியர்கள் என்றழைப்பதில் தவறில்லை.

அதாவது ஆரியத்துக்கு மாற்றான கருத்தியல் அடிப்படையில் அமையக் கூடியது திராவிட இந்தியா. புவியியல் அடிப்படையில் திராவிட மொழிகளைப் பேசும் தென்னிந்தியாவை திராவிட இந்தியா என்று அழைத்தாலும், கருத்தியல் அடிப்படையில் மொத்த இந்தியாவும் திராவிட இந்தியாவாக, வர்ண தர்மத்தை, பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வை மறுத்த இந்தியாவாக உருவாவது மக்களாட்சியை மேன்மையுறச் செய்ய அவசியமானது.

வர்ண தர்ம சிந்தனைக்கும், சமத்துவ சிந்தனைக்குமான முரணே இன்று மக்களாட்சி அரசியலில் கூர்மையடைந்துள்ளது. ராஷ்டிரிய சுயம்சேவக் சங் என்னும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினால் வழி நடத்தப்படும் பாரதீய ஜனதா கட்சி வெளிப்படையாகவே சனாதன தர்மம் எனப்படும் வர்ண தர்மத்தை ஆதரித்து பேசி, பரப்பி வருகிறது.

பொருளாதார வளர்ச்சி, தேச பக்தி என்பதையெல்லாம் தங்களது முக்கிய அரசியலாக அவர்கள் பேசினாலும் அவர்களது இந்துத்துவ அடையாளவாத கருத்தியல் வர்ண தர்மம் இல்லாமல் இயங்க முடியாது. இந்த உண்மையைத்தான் தனது “ஆரிய மாயை” நூலிலே தெளிவுபடுத்தினார் அறிஞர் அண்ணா.

பாஜக கட்சியின் வர்ண தர்ம ஆதரவாலேயே பார்ப்பன வகுப்பினரில் பிற்போக்காளர்கள் பலரால் அந்தக் கட்சி தமிழகத்தில் தீவிரமாக ஆதரிக்கப்படுவதைக் காண முடிகிறது. இவர்களில் பலர் வெளிப்படையாகவே ஜாதீய சிந்தனையை இன்று பொதுவெளியில் பேசுகிறார்கள். அவை காணொலியாக சமூக ஊடகங்களில் பரவுகின்றன.

அதற்கு எதிர்வினையாக இன்று இளைஞர்களிடையே, பொது மக்களிடையே திராவிட இயக்க மறுமலர்ச்சி ஒன்று உருவாகி வருகிறது. அந்த மறுமலர்ச்சியின் நாயகராகவே மு.க.ஸ்டாலின் காட்சி தருகிறார். அதற்கான காரணங்களாக மூன்று அம்சங்களை சொல்ல வேண்டும். கொள்கை பிடிப்பு, அயரா உழைப்பு, ஆட்சியின் சிறப்பு ஆகிய மூன்றுமே அவரை இன்று வரலாற்று நாயகராக மாற்றியுள்ளன.

Dravidian Model Historical Hero MKStalin

கொள்கை பிடிப்பு

கலைஞர் மறைவுக்குப்பின் 2018ஆம் ஆண்டு கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, மத்தியில் ஆளும் பாஜக ஆதரவுடன் தமிழ் நாட்டில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தார். அந்த நிலையில் ஸ்டாலின் பாஜக-வுடன் அணுக்கம் காட்டி, பழனிசாமி ஆட்சியைக் கவிழ்ப்பாரா என்றெல்லாம் சில குறுக்குப் புத்திக்காரர்கள் யூகங்களைப் பேசினார்கள். ஆனால் அவர்கள் வாய்களை அடைக்கும்படி, அவர் தலைவராகப் பொறுப்பேற்ற தருணத்திலேயே மதவாத அரசியலுடன் எந்த சமரசமும் கிடையாது என்பதை உறுதிப்படத் தெரிவித்தார்.

அன்றிலிருந்து எள்ளளவும் மாற்றமின்றி திராவிட இயக்கத்தின் அடிப்படை தத்துவங்களை தாங்கிப் பிடிப்பவராக, பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் பயணம் செய்த நூறாண்டு கண்ட வரலாற்றுப் பாதையில் தொடர்பவராக, மாநில சுயாட்சியை அடிப்படையாகக் கொண்ட திராவிட இந்தியா என்ற லட்சியத்தை நோக்கி உறுதிப்படக் கட்சியை வழி நடத்துபவராக விளங்குகிறார்.

உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி தலைவராக்கி புது ரத்தம் பாய்ச்சியதுடன், தமிழ்நாடெங்கும் பயிற்சி வகுப்புகள், பாசறைகள் எனக் கட்சியின் கருத்தியல் விழிப்புணர்வை மேம்படுத்தும் பணிகளை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்தக் கருத்தியல் தெளிவின் அடிப்படையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மறுமலர்ச்சி திமுக அடங்கிய முற்போக்குக் கூட்டணியை மிக உறுதியான கொள்கைக் கூட்டணியாக வடிவமைத்துள்ளார்.  தான் கட்சிப் பொறுப்பேற்ற மறு ஆண்டிலேயே நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு மகத்தான வெற்றியைத் தேடித் தந்தார்.

மாநிலத்தில் அ.இ.அ.தி.மு.க, ஒன்றியத்தில் பாஜக என்ற இரண்டு ஆளும் கட்சிகளின் அதிகார பலத்தை, பணபலத்தை முறியடித்து முப்பத்தொன்பது தொகுதிகளில் முப்பத்தெட்டில் வெற்றியை ஈட்டியது சாதாரணமான சாதனையல்ல. துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டில் ஏற்பட்ட விழிப்புணர்வு வட மாநிலங்களில் ஏற்படாததால், பாஜக மீண்டும் ஒன்றிய அரசில் ஆட்சிக் கட்டிலில் ஏறியது.  

இருப்பினும் தமிழில் உறுதிமொழியேற்ற தருணத்திலிருந்து முப்பத்தெட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் இந்திய ஒன்றியத்தை தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கச் செய்வதாக அமைந்துள்ளதைக் காண முடிகிறது. அந்த திசையில் உறுதிப்பட உயர்ந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின்.

அயரா உழைப்பு!

நாடாளுமன்றத் தேர்தலில் ஈட்டிய வெற்றி என்பது எளிதில் கிடைத்ததாகக் கருத முடியாது. தேர்தல் பிரச்சாரம் என்று வந்தால் பம்பரமாகச் சுற்றிச் சூழலும் தி.மு.க பாரம்பர்யத்தில் உருவானவர் ஸ்டாலின். கலைஞரைப் போலவே அயராத சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதில் வல்லவர்.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி கிட்டிவிட்டதே என அயர்ந்து விடவில்லை அவர். அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டை அ.இ.அ.தி.மு.க-வின் அவல ஆட்சி, எடப்பாடி பழனிசாமியின் எடுபிடி ஆட்சியிலிருந்து மீட்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த அவர் ஒருமுறைக்கு மூன்று முறை மாநிலமெங்கும் வலம் வந்தார்.  

செல்லுமிடமெல்லாம் கோரிக்கை பெட்டிகளை வைத்தார். மக்களின் கோரிக்கை மனுக்களை அதில் இட்டபின் பெட்டியினை சீல் வைத்துப் பூட்டினார். ஆட்சிக்கு வந்தவுடன் அதைத் திறந்து பார்த்து அத்தனை கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவேன் என்றார்.

அன்றைக்கு அதெல்லாம் சாத்தியமில்லை என்று கொக்கரித்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் அதற்கென தனி அதிகாரியை நியமித்து சொன்னபடி செய்து காட்டினார்.

Dravidian Model Historical Hero MKStalin

கிராம சபை கூட்டங்கள், தொகுதி வாரியாக சிறு மாநாடு போன்ற கூட்டங்கள், வாகனங்களில் நின்றபடி பிரச்சாரம், காலை வேளைகளில் தெருக்களில் மக்களிடையே நடந்து சென்று பிரச்சாரம் என அத்தனை வகையான வழிகளிலும்  மாநிலமெங்கும் மக்களைச் சந்தித்தார்.

கேள்விகளுக்கு பதில் சொன்னார். புன்னகை மாறாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அன்புத்தொல்லை அனைத்தையும் இன்முகத்துடன் ஏற்றார். கொரானோ தொற்று முற்றாக நீங்கியிராவிட்டாலும், முகக்கவசம் அணிந்துகொண்டு முகம் சுளிக்காமல் பயணங்களை மேற்கொண்டார்.  

சட்டமன்றத் தேர்தலுக்கு முன் ஓராண்டுக் காலமாக அவர் பயணங்களை, செயல்பாடுகளை ஊன்றிக் கவனித்து வந்தவன் என்ற முறையில் அவரது உழைப்பின் தீவிரத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அவரது சோர்வற்ற, எழுச்சிமிக்க பிரச்சாரங்களே தி.மு.க பெற்ற மகத்தான வெற்றியின்அச்சாரம் என்று கூற வேண்டும். “ஸ்டாலின்தான் வராரு, விடியல் தரப் போறாரு” என்ற பிரச்சாரப் பாடலை உண்மையாக்கிக் காட்டினார்.

ஆட்சியின் சிறப்பு!  

வெற்றிதான் பெற்றுவிட்டோமே என்று ஓய்ந்துவிடவில்லை ஸ்டாலின் அவர்கள். தனது ஓயாத இயக்கத்தை ஆட்சியின் உந்துவிசையாக மாற்றினார். ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் சுழன்றடித்த கொரோனா தொற்றினை எதிர்கொள்வதில் முனைப்பு காட்டினார். அவரே கவச ஆடை அணிந்து கொரோனா நோயாளிகள் இருந்த வார்டுக்கே சென்று மேற்பார்வையிட்டார்.

அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அவர் ஒவ்வொரு நாளும் புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டுமென உத்தரவு போட்டுவிட்டாரோ என்று எண்ணுமளவு நாள்தோறும் அறிவிப்புகள், திறப்பு விழாக்கள், மேற்பார்வையிடல்கள் என அரசு இயந்திரத்தைப் பரபரக்க வைத்துள்ளார் முதல்வர்.

இல்லம் தோறும் கல்வி என்பார்கள், இலக்கிய விழா என்பார்கள், புதிய நூலகம் என்பார்கள், தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பார்கள், நான் முதல்வன் திட்டம் என்பார்கள், பள்ளிகளில் காலை சிற்றுண்டி என்பார்கள், தகைசால் தமிழர் விருது என்பார்கள், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்பார்கள், புதிய மருத்துவமனை என்பார்கள், அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு கல்லூரி செல்ல உதவிப்பணம் என்பார்கள், எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் என்பார்கள்; ஏதாவது புதிய திட்டங்களும் அறிவிப்புகளும் இல்லாமல் ஒரு நாளும் கழியாது என்பது போல அரசை நடத்தி வருகிறார் ஸ்டாலின்.

இவ்வளவுக்கும் நிதி ஒதுக்குவதில் கெடுபிடி காட்டும் ஒன்றிய அரசு, திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடும் ஆளுநர், ஒன்றிய அரசு, மாநில அரசின் முக்கிய நிதி ஆதாரமான விற்பனை வரியும் ஜிஎஸ்டி என்ற பெயரில் ஒன்றிய அரசிடம் சென்றுவிட்ட நிலை அனைத்தையும் கடந்துதான் ஆட்சியினை நடத்தி வருகிறார்.

சட்டமன்றத்திலும் சரி, அரசு விழாக்களிலும் சரி வீண் புகழுரைகளுக்கும், அலங்காரப் பேச்சுகளுக்கும் இடமளிப்பதில்லை முதல்வர். அவர் பங்கேற்கும் விழாக்கள் கச்சிதமாகத் திட்டமிடப்பட்டு சுருக்கமான, அர்த்தமுள்ள உரைகளுடன் நிறைவாக நடந்தேறுகின்றன. தான் மட்டுமன்றி, அனைவரும் காலம் கருதி செயல்படும் வண்ணம்  நடந்துகொள்கிறார்.

முதலீடுகளை ஈர்ப்பதில், சட்டம் ஒழுங்கு பராமரிப்பில், நலத்திட்ட உதவிகள் மக்களைச் சென்றடைவதில் மாநிலம் முன்னணி வகிக்கிறது. இந்தியா டுடே ஏடு இந்தியாவின் சிறந்த முதல்வராக ஸ்டாலின் அவர்களையே கூறுகிறது.  

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி!

இவையெல்லாவற்றையும் கடந்த ஒரு முக்கியமான தருணமாக அடுத்த ஆண்டு இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. மீண்டும் நரேந்திர மோடியின் இந்துத்துவ ஆட்சி ஒன்றிய அரசை கைப்பற்றுமானால், நடிகர் ரஜினிகாந்த் 1996ஆம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதா ஆட்சியைக் குறித்து கூறியதுபோல, இந்தியாவை “ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது”.

அந்த சவாலை எதிர்கொள்ள ஸ்டாலின் தயாராக உள்ளார் என்பதையே அவர் பிறந்த நாள் நிகழ்ச்சி நமக்கு உணர்த்தப் போகிறது. இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமல்ல, தமிழகத்தை மீண்டும் திராவிட வரலாற்றுப் பாதையில் செலுத்தியதைப் போல, இந்தியாவையும் சமூக நீதி, சமத்துவப் பாதையில் செலுத்த வேண்டிய வரலாற்றுக் கடமையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார் ஸ்டாலின்.

இந்தியாவின் விடியல் தெற்கிலிருந்து உதயமாகப் போகிறது என்பதே எதிர்பார்ப்பு. வெல்லட்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

 

 

https://minnambalam.com/political-news/dravidian-model-historical-hero-mkstalin-by-rajan-kurai/

 

  • கருத்துக்கள உறவுகள்

மு.க. ஸ்டாலின் உரை: "2024இல் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்"

திமுக, ஸ்டாலின், தமிழ்நாடு, பாஜக
53 நிமிடங்களுக்கு முன்னர்

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றாக இணைந்து பா.ஜ.கவை எதிர்க்க வேண்டும் என்றும் காங்கிரஸ் இல்லாத கூட்டணி என்பதை நிராகரிக்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பிஹாரின் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். இந்தப் பொதுக்கூட்டத்திற்கு தேஜஸ்வி யாதவ் சற்றுத் தாமதமாக வந்து சேர்ந்தார். பிஹாரில் ஆளுநரின் உரை இருந்ததால் தாமதமாகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த விழாவில் ஏற்புரை வழங்கிய மு.க. ஸ்டாலின், பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக விமர்சித்தார். 2024ஆம் ஆண்டு தேர்தலை எதிர்க்கட்சிகள் எதிர்கொள்ள வேண்டிய முறை குறித்து விரிவாகப் பேசினார்.

"கொள்கையைப் பரப்ப கட்சி. கொள்கையை நிறைவேற்ற ஆட்சி. இதைத்தான் இந்த இரண்டாண்டு காலத்தில் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம். தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் 85 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம். மீதமுள்ளவை இன்னும் ஓராண்டுக்குள் நிறைவேற்றப்படும்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதைவிட யார் ஆட்சி அமைத்துவிடக்கூடாது என்பதற்கான தேர்தல் அது. ஒன்றுபட்ட இந்தியாவை வகுப்புவாத பாசிசத்தால் பிளவுபடுத்தும் பா.ஜ.கவை அரசியல் ரீதியாக வீழ்த்தியாக வேண்டும். பா.ஜ.கவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஒன்று திரள வேண்டும். அந்த ஒற்றுமை உணர்வு வந்துவிட்டாலே பா.ஜ.கவை வீழ்த்தியதாக சொல்லிவிடலாம்.

மாநிலங்களுக்கு இருக்கும் அரசியல் வேறுபாட்டை வைத்து தேசிய அரசியலைத் தீர்மானித்தால் இழப்பு நமக்குத்தான் என்பதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும். காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளுக்கும் சேர்த்தே சொல்கிறேன். தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு ஒற்றுமைதான் காரணம்.

தமிழ்நாட்டைப் போல ஒற்றுமையான கூட்டணியை அகில இந்திய அளவில் அமையுங்கள் என்று 2021ல் ராகுல்காந்தியை வைத்துக்கொண்டே சொன்னேன்.

அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து, பா.ஜ.கவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். அதே நேரம், காங்கிரஸ் அல்லாத கூட்டணி என சிலரால் சொல்லப்படும் வாதங்களை நிராகரிக்க வேண்டும். அது கரைசேராது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்துக்கொள்கிறோம் என்பதும் நடைமுறைக்கு ஒத்துவராது.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்துவிட்டு, நான்காண்டுகளுக்கு முன்னால் அடிக்கல் நாட்டிவிட்டு, இன்றுவரை ஒரு செங்கலுக்கு மேல் வைக்காமல் தமிழ்நாட்டைக் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு.

மொத்தமே 12 கோடி ரூபாய் மட்டும்தான் மதுரை எய்ம்ஸுக்கு ஒதுக்கியுள்ளார்கள். இது எட்டு கோடி தமிழக மக்களை ஏமாற்றும் காரியமல்லவா? எட்டு கோடி மக்களின் பிரதிநிதிகளால் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு நாட்களைக் கடத்த முடியுமானால், தனிப்பட்ட ஸ்டாலினை அவமானப்படுத்தவதாக நினைத்து, தமிழக மக்களை அவமானப்படுத்துகிறார்கள்.

சமஸ்கிருதத்திற்கு கோடி ,கோடியாக பணத்தை ஒதுக்குவாய், சங்கத் தமிழுக்கு வெறுங்கையை நீட்டுவாய் என்றால் அதனால் அவமானப்படுத்தப்படுவது திருவள்ளுவரும் இளங்கோவடிகளும்தான் என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

ஸ்டாலின்

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் நிறைவேற்றி அனுப்பினோம். அதற்குக்கூட இங்கே ஆளுநராக இருப்பவர் ஒப்புதல் அளிக்கவில்லை. மகாபாரதத்தில் சூதாட்டம் இருக்கிறது என்று தடை செய்ய மறுக்கிறார்களா?

பா.ஜ.க. அல்லாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. ஜிஎஸ்டிக்குப் பிறகு நிதி உரிமை மாநிலங்களுக்கு இல்லை. முறையாக இழப்பீடுகளை உரிய காலத்தில் வழங்குவதில்லை. மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு எந்தப் பெரிய திட்டங்களும் கிடையாது.

இப்படி எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களோடு நிர்வாக யுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. இவர்களின் நீண்டகாலத் திட்டங்களை புரிந்துகொண்டு, கொள்கை யுத்தம் புரிந்து கொண்டிருக்கிறோம். அதில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புதான் நாடாளுமன்ற தேர்தல் களம். அந்தக் களத்தை நோக்கிய பயணத்திற்கு, பாசறைக் கூட்டத்திற்கு எனது பிறந்த நாள் கூட்டம் அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வந்துள்ள தலைவர்கள் இந்தியா முழுமைக்கும் இதை எடுத்துச் சொல்லுங்கள்.

அடுத்த ஆண்டு மார்ச் என்பது அறுவடைக்காலமாக அமையட்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தொண்டர்களுக்கு ஒரு வரலாற்றுக் கடமை இருக்கிறது. 40 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற கூட்டணி முழுமையான வெற்றியைப் பெற்றாக வேண்டும். அதற்காக தொண்டர்கள் உழைத்திட வேண்டும். அதுதான் நீங்கள் எனக்குத் தரக்கூடிய பிறந்த நாள் பரிசாக இருக்கும்" என மு.க. ஸ்டாலின் பேசினார்.

தேசிய அரசியலுக்கு வர அழைப்பு

ஜம்மு காஷ்மீர்
 
படக்குறிப்பு,

ஃபரூக் அப்துல்லா, தேசிய மாநாடு கட்சித் தலைவர்

இந்தக் கூட்டத்தில் பேசிய தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, தமிழ்நாட்டைக் கட்டமைத்ததைப் போல இந்தியாவைக் கட்டமைக்க மு.க. ஸ்டாலின் முன்வர வேண்டுமென பேசினார்.

"தமிழ்நாட்டில் சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தனது தந்தையைப் போலவே முதல்வர் மு.க. ஸ்டாலின் எல்லாத் தளங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் இங்கிருந்து கொண்டே இந்தியா குறித்து சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அனைத்து மக்களும் மரியாதையுடனும் அமைதியுடன் வாழும் நாட்டை கட்டமைக்க நாம் ஒன்றாக இணைய வேண்டும். தமிழ்நாட்டை கட்டமைத்தது போல இந்தியாவையும் கட்டமைக்க ஸ்டாலின் முன்வரவேண்டும்" என்றார் ஃபரூக் அப்துல்லா.

இந்தக் கூட்டத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், மு.க. ஸ்டாலின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து புகழ்ந்து பேசினார். "அனைத்து தலைவர்களுடனும் இணைந்து மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட சமூக நீதி கூட்டமைப்புக்கான முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது. பல்வேறு தலைவர்களுடன் இணைந்து அடுத்த தலைமுறையினருக்கும் சமூக நீதியைக் கொண்டு சேர்க்கும் முயற்சி அது" என்றார் அவர். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அவரது பேச்சில் ஏதும் இடம்பெறவில்லை.

இந்தக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, "வரவிருக்கும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு யார் தலைமை என்பது பொருட்டல்ல. நாம் அனைவரும் இணைந்து பா.ஜ.கவை எதிர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cld7pd4wr25o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.