Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாராஷ்டிராவில் நடந்த வங்கிக் கொள்ளையின் பின்னணியில் வட கொரியா? ஹேக்கர்கள் செயல்படுவது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகாராஷ்டிராவில் நடந்த வங்கிக் கொள்ளையின் பின்னணியில் வட கொரியா? ஹேக்கர்கள் செயல்படுவது எப்படி?

இந்திய வங்கிக் கொள்ளையின் பின்னணியில் வட கொரியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஜீன் லீ, ஜெஃப் ஒயிட், விவ் ஜோன்ஸ்
  • பதவி,பிபிசி வேர்ல்ட் சர்வீஸ்
  • 21 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியாவில் கூலித்தொழிலாளியாக இருக்கும் உங்களுக்கு பாலிவுட்டில் தலை காட்டும் வாய்ப்பு கிடைப்பதாக வைத்துக் கொள்வோம். உங்களது கதாபாத்திரம் என்ன? நேராக ஏடிஎம் சென்று பணத்தை எடுப்பது மட்டுமே அது.

2018-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பலரும் இப்படித்தான் பாலிவுட்டில் தலை காட்டப் போவதாக நம்பினார்கள். ஆனால், உண்மையில் வங்கிக் கொள்ளையின் ஒரு அங்கமாக தாங்கள் பயன்படுத்தப்படுகிறோம் என்பதை அவர்கள் அறியாத வகையில் ஏமாற்றப்பட்டிருந்தார்கள்.

புனே நகரை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் காஸ்மோஸ் கூட்டுறவு வங்கியை மையமாகக் கொண்டு 2018-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஒரு வார இறுதியில் சோதனை நடத்தப்பட்டது.

 

சனிக்கிழமை பிற்பகலில் அந்த வங்கியின் தலைமையகத்தில் இருந்த ஊழியர்களுக்கு திடீரென தொடர்ச்சியான எச்சரிக்கை தகவல்கள் வந்தன.

 

அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.டி.எம். கார்டு சேவை வழங்கும் நிறுவனமான விசா நிறுவனம் அனுப்பிய எச்சரிக்கைத் தகவல்கள் அவை. காஸ்மோஸ் வங்கி ஏ.டி.எம். அட்டைகளைப் பயன்படுத்தி பல்வேறு இடங்களில் பணத்தை எடுப்பதற்காக பல ஆயிரம் கோரிக்கைகள் குவிந்து கொண்டிருப்பதாக விசா நிறுவனம் அனுப்பிய எச்சரிக்கை அது.

ஆனால், காஸ்மோஸ் ஊழியர்கள் அவர்களது கணினி கட்டமைப்பை சரிபார்த்த போது, வழக்கத்திற்கு மாறாக ஏதும் புலப்படவில்லை.

சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு, பாதுகாப்புக் காரணத்திற்காக காஸ்மோஸ் வங்கி ஏ.டி.எம். அட்டைகளில் இருந்து பணம் எடுக்கும் சேவையை நிறுத்தி வைக்குமாறு விசா நிறுவனத்தை அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால், இந்த முடிவுக்கு வருவதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட அரை மணி நேர கால தாமதம் வங்கிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்திவிட்டது.

மறுநாள், சந்தேகத்திற்கிடமான பணப் பரிமாற்றங்கள் என்று குறிப்பிட்டு ஒரு பட்டியலை காஸ்மோஸ் வங்கி தலைமையகத்திடம் விசா நிறுவனம் அளித்தது. உலகம் முழுவதும் வெவ்வேறு ஏ.டி.எம். மையங்களில் நடந்த சுமார் 12 ஆயிரம் பணப் பரிமாற்ற தகவல்கள் அதில் இடம் பெற்றிருந்தன.

அதன் மூலம் காஸ்மோஸ் வங்கி சுமார் 116 கோடி ரூபாயை இழந்துவிட்டிருந்தது.

இது துல்லியமாக ஒருங்கிணைக்கப்பட்டு பெரிய அளவில் நடந்த ஒரு துணிச்சலான வங்கிக் கொள்ளையாகும். அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ரஷ்யா உட்பட 28 வெவ்வேறு நாடுகளில் ஏடிஎம்களில் அவர்கள் கொள்ளையடித்துள்ளனர். இவை அனைத்தும் இரண்டு மணி நேரம் 13 நிமிட இடைவெளியில் நடந்தவை. இது உலகளவில் நடைபெற்ற ஒரு அசாதாரண குற்றமாகும்.

இந்திய வங்கிக் கொள்ளையின் பின்னணியில் வட கொரியா

ஆனால், இந்த குற்றத்தைப் பொருத்தவரை, ஏராளமான ஆண்கள் ஏ.டி.எம். மையங்கள் வரை நடந்து செல்வது, வங்கி அட்டைகளை செருகுவது மற்றும் பணக்கட்டுகளை பைகளில் திணிப்பது போன்ற சிசிடிவி காட்சிகளைக் கண்டு மகாராஷ்டிரா சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் வியப்படைந்தனர். அப்போது, அவர்கள் இந்த குற்றத்தின் முழு பரிணாமத்தை அறிந்திருக்கவில்லை.

"இதுபோன்ற பண மோசடி நெட்வொர்க் பற்றி எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை" என்று இந்த விசாரணைக்கு தலைமை தாங்கிய ஐ.ஜி. பிரிஜேஷ் சிங் குறிப்பிட்டார்.

ஏ.டி.எம். மையங்களுக்குச் சென்று பணம் எடுக்கும் நபர்களை ஒரு குழு லேப்டாப் மூலம் கண்காணித்துக் கொண்டிருந்ததாக அவர் கூறினார். பணத்தை எடுக்கும் நபர்கள், அதை மறைத்து வைக்க எத்தனிக்கும் போதெல்லாம், அதனைக் கண்டுபிடித்து அந்த நபரை கண்காணிப்பவர்கள் அடிப்பதை சிசிடிவி வாயிலாக பார்த்து வியந்ததாக பிரிஜேஷ் சிங் தெரிவித்தார்.

சிசிடிவி காட்சிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் தரவுகளைப் பயன்படுத்தி அடுத்து வந்த வாரங்களில் 18 சந்தேக நபர்களை, இந்திய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது சிறையில் உள்ளனர், விசாரணைக்காக காத்திருக்கிறார்கள்.

இவர்கள் யாரும் குற்றப்பின்னணி கொண்டவர்கள் அல்ல என்று சிங் கூறுகிறார். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு ஓட்டல் பணியாளர், ஓட்டுநர் மற்றும் செருப்புத் தைப்பவர் ஒருவரும் அடங்குவர். மற்றொருவர் பார்மசி பட்டதாரி.

"அவர்கள் சராசரி மனிதர்கள்," என்று அவர் கூறுகிறார்.

ஆனாலும் கூட, பாலிவுட் காட்சிகளில் தலை காட்டுவதாக பணியமர்த்தப்பட்டதாக கூறப்பட்டாலும் அவர்களுக்கு உண்மையில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது தெரிந்திருக்கும் என்று பிரிஜேஷ்சிங் எண்ணுகிறார்.

ஆனால் யாருக்காக வேலை செய்திருக்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியுமா?

உலகில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட, ரகசியமாக இயங்கும் வடகொரிய அரசே இந்தக் கொள்ளையின் பின்னணியில் இருப்பதாக புலனாய்வு அதிகாரிகள் நம்புகின்றனர்.

வட கொரியா உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்று. ஆனாலும் கூட, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலால் தடைசெய்யப்பட்ட அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்க தன் வளங்களில் குறிப்பிடத்தக்க அளவை வடகொரியா பயன்படுத்துகிறது. இதன் விளைவாக, ஐநா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்திருப்பதால் அந்நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த கிம் ஜாங் உன், இதற்கு முன்பு யாரும் செய்யாத வகையில் 4 அணு ஆயுத சோதனைகள் உட்பட பல ஆயுத சோதனைகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனைகளை மேற்பார்வையிட்டுள்ளார்.

இந்திய வங்கிக் கொள்ளையின் பின்னணியில் வட கொரியா

பட மூலாதாரம்,KRT/REUTERS

தன்னுடைய பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும், ஆயுதத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவும் தேவையான பணத்தை திருடுவதற்கு மேம்பட்ட ஹேக்கர்களின் குழுவை வட கொரிய அரசு பயன்படுத்துவதாக அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர். இந்த ஹேக்கர்களை கொண்டு பல்வேறு உலக நாடுகளில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வட கொரியா பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்கிறது.

வட கொரியாவின் சக்திவாய்ந்த இராணுவ புலனாய்வு அமைப்பால் இயக்கப்படும் லாசரஸ் குரூப் என்ற புனைப்பெயர் கொண்ட ஹேக்கர்கள் உலகெங்கிலும் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்குள் நுழைந்து கொள்ளையடிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்.

இறந்த பின் மீண்டு வந்ததாக பைபிளில் கூறப்படும் லாசரஸின் பெயரை, இந்த ஹேக்கர்களுக்கு சைபர்-பாதுகாப்பு வல்லுநர்கள் சூட்டினார். ஏனெனில் அவர்களின் வைரஸ்கள் கணினி நெட்வொர்க்குகளுக்குள் நுழைந்தவுடன், அவற்றைக் கொல்வது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒன்றாகிவிடுகிறது.

2014-ம் ஆண்டில் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கணினி நெட்வொர்க்கை வட கொரியா ஹேக் செய்ததாக அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குற்றம் சாட்டினார். அப்போதுதான் இந்த ஹேக்கர்கள் குழு முதன் முதலில் சர்வதேச முக்கியத்துவம் பெற்றது. கிம் ஜாங் உன் கொலை செய்யப்படுவது போல சித்தரிக்கப்படும் "தி இன்டர்வியூ" என்ற திரைப்படத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹேக்கர்கள் சைபர் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI குற்றம் சாட்டியது.

இந்திய வங்கிக் கொள்ளையின் பின்னணியில் வட கொரியா

பட மூலாதாரம்,ROBYN BECK

2016ஆம் ஆண்டில் வங்கதேசத்தின் மத்திய வங்கியிலிருந்து 1 பில்லியன் டாலர் பணத்தை திருட முயன்றதாகவும், பிரிட்டனில் உள்ள தேசிய சுகாதார சேவை அமைப்பு உட்பட உலகெங்கிலும் பல அமைப்புகளிடம் இருந்தும் பிணைத்தொகையைப் பெற முயன்ற WannaCry இணையத் தாக்குதலை நடத்தியதாகவும் லாசரஸ் குழு மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் வட கொரியா, லாசரஸ் குழு என்ற ஒன்று இருப்பதாகக் கூறுவதையே கடுமையாக மறுக்கிறது. ஹேக்கிங் மூலம் பணம் பறிப்பு என்பது போன்ற குற்றச்சாட்டுகளையும் வடகொரியா நிராகரித்துள்ளது.

ஆனால் முன்னணி சட்ட அமலாக்க முகமைகளோ, வட கொரியாவின் இணைய ஊடுருவல்கள் முன்னெப்போதையும் விட மேம்பட்டவை, பெரிய இலக்குகளைக் கொண்டவை என்று கூறுகின்றன.

காஸ்மோஸ் வங்கிக் கொள்ளையைப் பொருத்தவரை, ஹேக்கர்கள் அதற்கு "ஜாக்பாட்டிங்" என்ற நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர். ஏனெனில், ஏ.டி.எம். இயந்திரம் பணத்தைக் கொட்டுவது என்பதுபரிசு இயந்திரத்தில் ஜாக்பாட் அடிப்பது போன்றதுதான்.

தொடக்கத்தில், வங்கியின் கணினி கட்டமைப்புகள் வழக்கமான முறையிலேயே ஹேக் செய்யப்பட்டுள்ளன. அதாவது, யாரோ ஒரு ஊழியர் திறந்து பார்த்த மின்னஞ்சல் மூலம் கணினி நெட்வொர்க்கில் ஹேக்கர்கள் ஊடுருவியுள்ளனர். ஊடுருவியபின், ஏ.டி.எம். சுவிட்ச் எனப்படும் ஒரு சிறிய மென்பொருளை ஹேக்கர்கள் கையாண்டுள்ளனர். அதுதான் ஏ.டி.எம். மையங்களில் பணத்தை வழங்குவதற்கான ஒப்புதல் அளிக்க வங்கிக்கு செய்திகளை அனுப்புகிறது.

இது உலகின் எந்த மூலையில் இருந்தும் தங்களது கூட்டாளிகள் ஏ.டி.எம். மையங்கள் வாயிலாக பணத்தை எடுக்க அனுமதிக்கும் அதிகாரத்தை ஹேக்கர்களுக்கு வழங்கியது. ஒவ்வொரு முறையும் எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச தொகையை மாற்றுவது மட்டுமே அவர்களால் முடியாத காரியமாக இருந்தது. ஆகவே, களத்தில் அவர்களுக்கு நிறைய ஆட்களும், ஏராளமான ஏ.டி.எம். அட்டைகளும் தேவையாக இருந்தது. வங்கியின் உண்மையான தரவுகளைப் பயன்படுத்தி நகல் ஏ.டி.எம். அட்டைகளை அவர்கள் தயாரித்துள்ளனர்.

பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனமான BAE சிஸ்டம்ஸ் உடனடியாக இது லாசரஸ் குழுவின் வேலை என்று சந்தேகித்தது. பல மாதங்களாக அவர்களைக் கண்காணித்து வந்த அவர்கள் இந்திய வங்கியைத் தாக்க சதி செய்வதை அறிந்து கொண்டிருந்தனர். ஆனால், எந்த வங்கி என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

"இது மற்றொரு குற்றச் செயலாக இருந்திருக்குமானால் மிகவும் தற்செயல் நிகழ்வாக இருந்திருக்கும்" என்கிறார் BAE பாதுகாப்பு ஆய்வாளர் அட்ரியன் நிஷ்.

காஸ்மாஸ் வங்கி திருட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள தளவாடங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. வட கொரிய குடிமக்கள் சட்டப்பூர்வமாகச் செல்ல முடியாத நாடுகள் உட்பட 28 நாடுகளில் ஹேக்கர்கள் எவ்வாறு கூட்டாளிகளைக் கண்டுபிடித்தனர்? என்பதே இதில் மிகப்பெரிய கேள்வி.

இந்திய வங்கிக் கொள்ளையின் பின்னணியில் வட கொரியா

பட மூலாதாரம்,JEAN H. LEE/GETTY IMAGES

'டார்க் வெப்'பில் ஒரு முக்கிய உதவியாளரை லாசரஸ் குழுமம் சந்தித்ததாக அமெரிக்க தொழில்நுட்ப பாதுகாப்பு புலனாய்வு அதிகாரிகள் நம்புகிறார்கள். 'டார்க் வெப்' என்பது முழுமையாக ஹேக்கிங் திறன்களை பரிமாறிக் கொள்ள அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வலையமைப்பு. ஹேக்கிங் சேவைகள், உபகரணங்கள் கூட பலராலும் அங்கே விற்கப்படுகின்றன.

2018ம் ஆண்டு பிப்ரவரியில், தன்னை பிக் பாஸ் என்று குறிப்பிடும் ஒருவர் கிரெடிட் கார்டு மோசடியை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த குறிப்புகளை வெளியிட்டார். நகல் ஏ.டி.எம். கார்டுகளை தயாரிப்பதற்கான உபகரணங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அமெரிக்கா மற்றும் கனடாவில் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை அனுப்பும் குழுவை அணுகியதாகவும் அவர் கூறினார்.

காஸ்மோஸ் வங்கியில் கொள்ளையடிக்க லாசரஸ் குழுமத்திற்கு தேவையான சேவை இதுவே. பிக் பாஸுடன் அவர்கள் இணைந்து பணியாற்றத் தொடங்கினர்.

அமெரிக்காவின் தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனமான Intel 471 இன் தலைமை உளவுத்துறை அதிகாரி மைக் டிபோல்ட்டிடம் பிக்பாஸ் பற்றி மேலும் அறிய விழைந்தோம்.

பிக் பாஸ் குறைந்தது 14 ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்ததையும், ஜி, ஹபீபி மற்றும் பேக்வுட் போன்ற மாற்றுப்பெயர்களைக் கொண்டிருப்பதையும் டிபோல்ட் குழு கண்டுபிடித்தது. வெவ்வேறு தளங்களில் ஒரே மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தியதால், அவரை பாதுகாப்புத் துறையினரால் இனங்காண முடிந்துள்ளது.

"அடிப்படையில், அவர் சோம்பேறியாக இருந்தார்," என்கிறார் டிபோல்ட்.

"நாங்கள் இதை மிகவும் பொதுவான ஒன்றாகப் பார்க்கிறோம்: அவர்கள் ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறு மாற்றுப் பெயர்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஒரே மின்னஞ்சல் முகவரியை வைத்திருக்கிறார்கள்." என்று அவர் கூறுகிறார்.

2019ம் ஆண்டு அமெரிக்காவில் பிக் பாஸ் கைது செய்யப்பட்டார். அவர் 36 வயதான கனடிய குடிமகனான கலேப் அலுமாரி என்பது உலகிற்கு தெரியவந்தது. வட கொரியாவின் பின்னணியில் நடத்தப்பட்ட வங்கிக் கொள்ளைகளில் இருந்து நிதி மோசடி செய்தல் உள்ளிட்ட குற்றங்களை ஒப்புக்கொண்ட அவருக்கு, 11 ஆண்டுகள், எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

காஸ்மோஸ் வங்கிக் கொள்ளை அல்லது வேறு எந்த ஹேக்கிங் சதியிலும் தங்களுக்கு தொடர்பு இருந்ததாக வட கொரியா ஒப்புக்கொண்டதில்லை. லண்டனில் உள்ள வட கொரியாவின் தூதரகத்திற்கு காஸ்மோஸ் தாக்குதலில் தொடர்பு இருப்பதாக பிபிசி குற்றச்சாட்டுகளை முன்வைத்தது, ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

எவ்வாறாயினும், தூதர் சோ இ-லை நாங்கள் முன்பு தொடர்பு கொண்டபோது, வட கொரிய அரசு மீதான ஹேக்கிங் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் "ஒரு கேலிக்கூத்து" என்றும், "எங்கள் நாட்டின் நற்பெயரைக் கெடுக்கும் அமெரிக்காவின் முயற்சி" என்றும் பதிலளித்திருந்தார்.

2021-ம் ஆண்டு பிப்ரவரியில், லாசரஸ் குழுக்களைச் சேர்ந்த ஹேக்கர்களாக சந்தேகிக்கப்பட்ட ஜோன் சாங் ஹியோக், கிம் இல் மற்றும் பார்க் ஜின் ஹியோக் ஆகிய 3 பேர் மீது அமெரிக்க புலனாய்வுத்துறை (FBI), அமெரிக்க ரகசிய சேவை மற்றும் நீதித்துறை ஆகியவை குற்றச்சாட்டுகளை அறிவித்தன: வட கொரியாவின் இராணுவ புலனாய்வு நிறுவனத்தில் பணிபுரிவதாக கூறிய அவர்கள், இப்போது பியோங்யாங் திரும்பி விட்டதாக கருதப்படுகிறது.

இந்திய வங்கிக் கொள்ளையின் பின்னணியில் வட கொரியா

பட மூலாதாரம்,DOJ

வட கொரியாவில் 7,000 பயிற்சி பெற்ற ஹேக்கர்கள் இருப்பதாக அமெரிக்கா மற்றும் தென் கொரிய அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே இணையம் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள வடகொரியாவிற்குள் இருந்து அவர்கள் அனைவரும் செயல்படுவது சாத்தியமில்லை, அவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

ஒரு முன்னாள் வட கொரிய ராஜிய அதிகாரியும், கிம் ஜாங் உன் ஆட்சியை விட்டு வெளியேறிய மிக மூத்த நபர்களில் ஒருவருமான Ryu Hyeon Woo, ஹேக்கர்கள் வெளிநாட்டில் எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்பது பற்றிய விவரங்களை வழங்கினார்.

2017-ம் ஆண்டில், குவைத்தில் உள்ள வட கொரிய தூதரகத்தில் அவர் பணிபுரிந்தார். அந்த பிராந்தியத்தில் சுமார் 10,000 வட கொரியர்களின் வேலைவாய்ப்பை மேற்பார்வையிட உதவினார். அந்த நேரத்தில், பலர் வளைகுடா முழுவதும் கட்டுமானத் தளங்களில் வேலை செய்து கொண்டிருந்தனர். அனைத்து வட கொரிய தொழிலாளர்களையும் போலவே ஊதியத்தின் பெரும்பகுதியை சொந்த நாட்டு அரசிடம் அவர்கள் ஒப்படைக்க வேண்டியிருந்தது.

துபாயில் 19 ஹேக்கர்களை கையாளும் மேற்பார்வையாளரிடம் இருந்து தனது அலுவலகத்திற்கு தினசரி அழைப்புகள் வந்ததாக அவர் கூறினார். "உண்மையில் இணையத்துடன் இணைக்கப்பட்ட ஒரு கணினி மட்டுமே அவர்களுக்குத் தேவை" என்கிறார் அவர்.

ஆனால் வெளிநாடுகளில் எந்த ஹேக்கர்களும் இல்லை என்று மறுக்கும் வட கொரியா, செல்லத்தக்க விசாக்களுடன் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்கள் மட்டுமே இருப்பதாக கூறுகிறது. ஆனால். உலகம் முழுவதும் இருந்து செயல்படும் இணையப் பிரிவுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிய எப்.பி.ஐ. குற்றச்சாட்டுகளுடன் Ryu Hyeon Woo அளித்துள்ள விளக்கம் பொருந்திப் போகிறது.

2017 செப்டம்பரில், வட கொரியா மீது அதுவரை இல்லாத கடுமையான தடைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்தது. எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்தியது; ஏற்றுமதியை மேலும் கட்டுப்படுத்தியது; அத்துடன் நில்லாது, வட கொரிய தொழிலாளர்களை 2019ம் ஆண்டு டிசம்பருக்குள் வீட்டிற்கு அனுப்[பமாறு ஐநா உறுப்பு நாடுகளை அது கேட்டுக் கொண்டது.

இருப்பினும், ஹேக்கர்கள் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. அவர்கள் இப்போது கிரிப்டோ-கரன்சி நிறுவனங்களை குறிவைத்து, $3.2 பில்லியன் திருடியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

துப்பாக்கிகளை விடுத்து கீ போர்டுகளை பயன்படுத்தும் உலகின் முன்னணி வங்கிக் கொள்ளையர்கள் என்று அவர்களை அமெரிக்க அதிகாரிகள் வர்ணிக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/cq5zqzd281po

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளில், குறிப்பாக  ஆங்கிலத்தை பேச்சு மொழியாகக் கொண்ட நாடுகளில் நடைக்கும் இணையவழி, தொலைபேசி வழி பண மோசடிகளின் சூத்திரதாரியாக இந்தியா இருக்கிறது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.