Jump to content

முசிறி துறைமுக நகரம் வரைபடத்தில் இருந்து திடீரென மறைந்த மர்மம் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
முசிறி துறைமுகம், கேரளா
முக்கிய சாராம்சம்
  • முசிறித் துறைமுகம் குறித்த குறிப்புகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் சங்க இலக்கியங்களில் உள்ளன
  • 14ஆம் நூற்றாண்டில், இந்த வர்த்தக துறைமுகம் மர்மமான முறையில் காணாமல் போனது
  • ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவில் உள்ள 37 பண்பாடுகளுடன் முசிறியில் கிடைத்த தொன்மங்கள் ஒத்துப் போகின்றன
  • தங்க ஆபரணங்கள், கண்ணாடி மணிகள், சேர மன்னர்கள் கால நாணயங்கள் போன்றவை முசிறி நகரத்தை கண்டு பிடிக்கும் முயற்சியின் போது தொல்லியல் ஆய்வாளர்களுக்கு கிடைத்தன
  • ரோமானிய பேரரசர் அகஸ்டஸ் சீசரிடம் இருந்ததை போன்ற மோதிரம் பட்டணம் அகழாய்வில் கிடைத்துள்ளது
  • முசிறி துறைமுகத்திற்கும், கொச்சி துறைமுகத்திற்குமான பண்பாட்டுத் தொடர்புகளை மீட்டெடுக்க கலைத் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது
9 ஏப்ரல் 2023, 06:25 GMT

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற முசிறி துறைமுகம், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் விலகாத ஒரு மர்மமாகவே உள்ளது. இந்த துறைமுகம் அதன் காலகட்டத்தில், உலக கடல் வழி போக்குவரத்தில் மிக முக்கியமான மையமாக விளங்கியது.

தொழில், வணிகத்தின் வளர்ச்சிக்கு இந்த துறைமுகம் முக்கிய அங்கமாக அறியப்பட்டது. முசிறி துறைமுகம் குறித்து, பிபிசி ரீல் வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தியில் முசிறி துறைமுகத்தின் தொன்மங்கள் குறித்து பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

'இந்தியாவின் முதல் சந்தை'

முசிறி துறைமுகம், கேரளா

ரோமானிய எழுத்தாளர் பிளினி தி எல்டர் முசிறி நகரத்தை, 'இந்தியாவின் முதல் சந்தை' என்று குறிப்பிட்டார்.

இந்த துறைமுகத்தில் இருந்துதான் வாசனை திரவியங்கள், ரத்தினங்கள், யானைத் தந்தம், பட்டு போன்றவை வர்த்தகம் செய்யப்பட்டன.

 

ஆனால், முசிறி என்ற புகழ்பெற்ற வர்த்தக துறைமுகம் 14ஆம் நூற்றாண்டில் மர்மமான முறையில் காணாமல் போனது.

இன்றும், மறைந்த இந்த நகரத்தின் இருப்பிடம் குறித்து வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. ஆனால் அறியப்பட்ட தொல்பொருள் எச்சங்கள் வழியாக நகரத்தின் இருப்பு பற்றி வெளிப்படுத்த முடியுமா?

பிபிசி ரீலில் வெளியான நிகழ்ச்சியில் இதுகுறித்து பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டன.

மசாலா வர்த்தகம்

இந்தியாவின் மேற்கு கடற்கரையான அரபிக் கடலை ஒட்டிய, கேரளாவின் மலபார் பகுதியில் இந்த துறைமுகம் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த துறைமுகம், மேற்குலக நாடுகளுடன் மசாலா வணிகம் செய்ய முக்கிய இடமாக இருந்துள்ளது. ஆனால் 14ஆம் நூற்றாண்டில், இந்த வணிகத் துறைமுகம் மர்மமான முறையில் காணாமல் போனது.

உலகின் செல்வாக்கு மிக்க வணிக வழித்தடங்களில் ஒன்றான இந்த துறைமுகம் குறித்து, இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் சங்க இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன.

தென்னிந்தியா, பெர்சியா, மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக் கடலில் இருந்த ரோமானியப் பேரரசு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மையமாக முசிறி துறைமுகம் இருந்தது.

2ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட ரோமானியப் பேரரசின் வரைபடங்களிலும் முசிறி நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

முசிறி துறைமுகம், கேரளா

எனவே, இந்த துறைமுகம் உண்மையில் இருந்ததையும், ரோமானிய கப்பல்கள் இந்த இடத்திற்கு வந்து சென்றதையும் உறுதிபடுத்துகிறார், கேரளாவின் வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் டாக்டர். பி. கே. மைக்கேல் தர்கன்.

"ரோமானியர்கள் மிளகைத் தேடி இங்கு வந்தனர். அக்காலத்தில்,மேற்குலகிற்கு தங்கத்தைப் போல மதிப்புமிக்கதாக மிளகு இருந்தது. அதனால் மிளகு, 'கருப்புத் தங்கம்' என்றும் அழைக்கப்பட்டது," என்கிறார் டாக்டர் தர்கன்.

மிளகு, மேற்குலக நாடுகளுக்கு அத்தியாவசியப் பொருளாக இருந்தது. எனவே மிளகு வாங்குவதற்காக எத்தகைய சவாலையும் ஏற்க அந்த வியாபாரிகள் தயாராக இருந்தனர்.

முசிறி துறைமுகம், கேரளா

பட மூலாதாரம்,GETTY IMAGES

காணாமல் போன நகரம்

14ஆம் நூற்றாண்டில், இந்த வணிகத் துறைமுகம் மர்மமான முறையில் காணாமல் போனதற்கான காரணத்தை தேடும் போது வரலாற்று ஆசிரியர்கள் சில கூற்றுகளை முன்வைக்கின்றனர்.

ரோமானிய நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு பிறகு இந்த துறைமுக நகரமும் அவர்களின் வரைபடத்தில் இருந்து மறைந்துவிட்டது என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இன்னும் சில வரலாற்றாசிரியர்கள், 1341இல் பெரியாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் இந்நகரம் அழிந்து விட்டது என்று கூறுகின்றனர்.

ஆனால் இன்றும் முசிறி துறைமுகம் எங்கு அமைந்திருந்தது என தேடும் போது அதை உறுதி செய்வதில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

2006-2007 இல், தென்னிந்தியாவின் சில பகுதிகளில் அகழ்வாராய்ச்சி தொடங்கியது. பட்டணம் என்ற ஊரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி பணிகள், மத்திய தரைக்கடல், ஐரோப்பிய நாடுகளுடன் கொண்டிருந்த வலுவான வணிகத் தொடர்புகளை வெளிப்படுத்தின.

இதை குறிப்பிட்டு, 'முசிறித் துறைமுகம் கண்டுபிடிக்கப்பட்டது' என்ற கூற்றை வெளிப்படுத்தினார் டாக்டர் பென்னி குரியகோஸ்.

“பட்டணம் அகழ்வாராய்ச்சியின் 12 கட்டங்களுக்கு நான் இயக்குநராக பணியாற்றியுள்ளேன். இந்த அகழ்வாராய்ச்சியில், பன்முகப் பண்பாட்டுத் தன்மைக்கான(multiculturalism) ஆதாரங்களைக் கண்டறிந்தோம்," என்று டாக்டர் பி.ஜே. செரியன் கூறினார்.

"ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவில் உள்ள கிட்டத்தட்ட 37 பண்பாடுகளுடன் இந்த சான்றுகள் ஒத்துப்போகின்றன. இங்கு நடைபெற்ற 93 சென்டிமீட்டர் அகழ்வாராய்ச்சியில், உலகம் முழுவதும் இருந்து வந்த உன்னதமான பல விஷயங்களைக் கண்டோம். கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கான மாதிரிகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம். ஆனால் ஸ்ட்ராடிகிராஃபிக்(stratigraphic), டைபோலாஜிக்கல்(typological) சான்றுகளிலிருந்து, இது முசிறி நாகரீகத்தின் உச்சத்தில் இருந்ததற்கான சான்று என்று நாங்கள் நம்புகிறோம்,”என்று டாக்டர் செரியன் கூறினார்.

முசிறி துறைமுகம், கேரளா

ரோமப் பேரரசின் மோதிரம்

பட்டணம் அகழ்வாராய்ச்சியின் போது தங்க ஆபரணங்கள், கண்ணாடி மணிகள், சேர மன்னர்கள் கால நாணயங்கள் வரை பல கலைப்பொருட்கள் கிடைத்துள்ளன.

2020இல் பட்டணம் அகழ்வாராய்ச்சியின் போது ரோமப் பேரரசு காலத்தை சேர்ந்த முத்திரை மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஓர் அரிய பொருளாக பார்க்கப்படுகிறது. ரோமானியப் பேரரசர் ஆவதற்கு முன்பு அகஸ்டஸ் சீசரிடம் இதுபோன்ற மோதிரம் ஒன்று இருந்தது.

உலகில் எங்கும் கிடைக்காத பொருட்கள், பட்டணம் போன்ற சிறிய ஊரில் கிடைத்தன. அப்படியெனில் இதன் பொருள் என்ன?

பட்டணம், முசிறி நகரின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இருந்துள்ளது.

இந்த நகரம் இன்றைய நவீன நியூயார்க், நவீன ஷாங்காய் அல்லது மும்பை போல இருந்திருக்கலாம் என்கிறார் டாக்டர் செரியன்.

ஆதரவும், எதிர்ப்பும் ஏன்?

முசிறி துறைமுகம், கேரளா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுகளை வைத்து முசிறி துறைமுகம், பட்டணத்தில் இருந்திருக்கலாம் என்று ஒரு சில வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

ஆனால், முசிறி நகரத்தின் சரியான இடம் இதுவல்ல என்று சில வரலாற்றாசிரியர்களால் மறுக்கப்படுகிறது.

இப்போதைய பட்டணம் என்ற ஊர்தான் முசிறியா என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது. வரலாற்றுப் பதிவுகளின்படி, முசிறி மிகப் பெரிய பகுதியாக இருந்துள்ளது என்று பென்னி குரியகோஸ் கூறினார்.

“பெரியாற்றின் இரு கரைகளையும் உள்ளடக்கிய முழுப் பகுதியும், பண்டைய முசிறி நகரமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். மேலும் பல வரலாறுகள் இன்னும் நிலத்துக்கு அடியில் புதைந்து கிடக்கின்றன என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றார்

முசிறி, மத்திய கிழக்கில் உள்ள பல பண்டைய நாகரிகங்களுடன் வணிக உறவுகளைக் கொண்டிருந்தது. அதன் பிறகு, போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள் ஆகியோரும் இங்கு வந்திருக்கலாம்.

எனவே, 'முசிறிக்கு நீண்ட நெடிய வணிக வரலாற்று உள்ளது' என முசிறி ஹெரிடேஜ் திட்ட நிர்வாக இயக்குநர் டாக்டர் மனோஜ் கினி கூறினார்.

கொச்சி - முசிறி இடையேயான தொடர்பு

முசிறி துறைமுகம், கேரளா

பட மூலாதாரம்,GETTY IMAGES

முசிறி, 14ஆம் நூற்றாண்டில் திடீரென காணாமல் போனது. ஆனால் அதன் பிறகு கொச்சி, துறைமுக வணிகத்தின் முக்கிய மையமாக உருவெடுத்தது. இன்றும் கொச்சிக்கும் முசிறிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

2012இல், கொச்சி - முசிறி சர்வதேச கலைத் திருவிழா கொச்சியில் நடைபெற்றது. உலகின் பண்பாட்டு மையமாக அறியப்பட்ட முசிறியில் மீண்டும் நவீன பன்முகப் பண்பாட்டை ஒன்றிணைப்பதே இந்த திருவிழாவின் நோக்கமாகும்.

“கொச்சியும் முசிறியும் எப்போதும் வெவ்வேறு பண்பாடுகளைத் தழுவி இருந்துள்ளன. பண்பாடு, வணிகம் சார்ந்த உறவுகள் மட்டுமல்லாமல், சமயக்கூறுகளும் இதில் இடம்பெற்றன. மதசார்பின்மைக்கு இதுதான் சரியான இடமாக இருந்துள்ளது. இந்த திருவிழாவிற்கு உலகம் முழுவதிலுமிருந்து கலைஞர்கள் வருகிறார்கள்,” என்று கொச்சி பைனாலேயின் தலைவரும் இயக்குநருமான போஸ் கிருஷ்ணமாச்சாரி கூறினார்.

“முசிறி எங்கள் தாய் வீடு. முசிறிக்கும், கொச்சிக்கும் இடையே இருப்பது தொப்புள் கொடி உறவு.”

முசிறி துறைமுகம் அமைந்து இருந்த சரியான இடம் குறித்து இன்னும் சர்ச்சை நீடிக்கிறது. ஆனால் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் சான்றுகளிலிருந்து, தென்னிந்திந்தியாவில் அமைந்திருந்த இந்த இடம் உலகெங்கிலும் உள்ள பல பண்பாடுகளின் கலவையாக இருந்துள்ளது தெளிவாகிறது.

பல நூற்றாண்டுகளாக இங்கு பொருட்களும், கருத்துகளும் பரிமாறப்பட்டுள்ளன. இந்தியாவின் இந்த முதல் சந்தை இன்று வரைபடத்தில் இருந்து மறைந்தாலும், அதன் மரபு இன்றும் காணப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cj57pj9gj11o

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.