Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூடான் உள்நாட்டுப் போர் – பின்னணியில் ரஷ்யாவின் மேலாதிக்க நோக்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சூடான் உள்நாட்டுப் போர் – பின்னணியில் ரஷ்யாவின் மேலாதிக்க நோக்கம்!

 
Sudan.jpg?resize=696%2C392&ssl=1

ப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது, சூடான். 3.95 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு. 65 சதவிகித பேர் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். பெரும்பான்மையான மக்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றனர். தங்கம், குரோமியம், இரும்பு போன்ற கனிம வளங்கள் நிறைந்து காணப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் அவற்றை போட்டி போட்டுக்கொண்டு கொள்ளையடிக்கின்றன.

கடந்த சில வாரங்களாக, சூடான் நாட்டில் ராணுவத்திற்கும் விரைவு ஆதரவுப் படைகள் (Rapid Support Forces – ஆர்.எஸ்.எப்) எனப்படும் துணை ராணுவத்திற்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக, கிட்டதட்ட 7 லட்சம் மக்கள் நகர்ப்புறங்களில் இருந்து கிராமப்புறங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 600 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

மின்சாரத் தடை, தண்ணீர், உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்படுகின்றனர். பொதுமக்களின் வீடுகளை ராணுவ வீரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். துப்பாக்கி முனையில் மக்களை மிரட்டி உணவுப்பொருட்களையும் பணத்தையும் வாகனங்களையும் கொள்ளையடிப்பதாக சூடானில் இருந்து தப்பித்து வந்த மக்கள் பயத்துடன் கூறுகின்றனர்.

சூடான் நாட்டு மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, அண்டை நாடுகளான எகிப்து, சாட், தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு தப்பித்துச் செல்கின்றனர். தப்பிச் செல்ல முயலும் பொது மக்களின் முக்கிய வழித்தடமாக அந்நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள போர்ட் சூடான் என்ற துறைமுக நகரம் மாறியுள்ளது. இந்தியா, சவுதி அரேபியா, அமெரிக்கா போன்ற நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை சூடானிலிருந்து மீட்டு வருகின்றனர்.

இப்போர் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக, இரு இராணுவத் தலைவர்களுக்கிடையே உள்ள போட்டியினால் நடத்தப்படுவதாக முதலாளித்துவ பத்திரிகைகளில் கூறப்படுகிறது. அது பாதி உண்மைதான். ரஷ்ய ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க நோக்கம் என்பதுதான் மீதி.

கடந்த 2020-ஆம் ஆண்டில் ரஷ்யாவும் சூடானும், போர்ட் சூடானில் ரஷ்ய கடற்படை தளத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த தளத்தை, ரஷ்யா செங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை செலுத்துவதற்கான கருவியாகப்  பார்க்கிறது.

சூடானில் கனிம வளங்களை கொள்ளையடிப்பது என்பதை தாண்டி, ரஷ்யா தன்னுடைய மேலாதிக்க நோக்கத்திற்காக ஆப்பிரிக்க கண்டத்தில் சூடானை தனக்கான செல்வாக்கு மண்டலமாக உருவாக்க விழைகிறது.

இரு இராணுவப் படைகளும் அதிகாரத்துக்கான போட்டியும்

சூடான் இராணுவத்தின் தலைவர் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் என்பவர். துணை இராணுவத்தின் தலைவர் முகமது ஹம்தான் டகாலோ. இருவருக்குமிடையே உள்ள முக்கிய பிரச்சினை, துணை இராணுவப் படையினரை இராணுவத்தில் இணைப்பதும், அப்படி நடந்தால் படைகளுக்கு யார் தலைமை தாங்குவது என்பதை பற்றியதும் தான்.

ஒவ்வொரு படைகளிலும் கிட்டதட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படைவீரர்கள் உள்ளனர். இரு படைகளும் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிப்பதில் சளைத்தது அல்ல. கிட்டதட்ட 30 ஆண்டுகளாக ஒமர் அல் – பஷீர் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து போராடிய மக்களை கொடூரமாக ஒடுக்கியுள்ளது.

2019 ஆம் ஆண்டு அல்-பஷீர் ஆட்சி அகற்றப்பட்டு, மக்கள் போராட்டத் தலைவர்களும் இரு இராணுவப் படைகளும் இணைந்து “சாவரின் கவுன்சில்” என்ற பெயரில் சிவில் – இராணுவக் கூட்டாட்சி நிறுவப்பட்டது. பிரதமராக அப்துல்லா ஹம்டாக் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 இல் சிவில் – இராணுவக் கூட்டாட்சியையும் இராணுவம் கலைத்து அதிகாரம் அனைத்தையும் தன்வசப்படுத்தியது. இராணுவக் கவுன்சில் ஆட்சி நிறுவப்பட்டது. அதன் தலைவராக அல்-புர்ஹான் மற்றும் துணைத்தலைவராக டகாலோ பதவியேற்றனர்.

சிவில் – இராணுவக் கூட்டாச்சி நிறுவப்படும் போதே, 2023-ல் ‘ஜனநாயக’ (பெயரளவிலான) ஆட்சி நிறுவப்படும் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. 2021-ல் இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய போதும், அதே வாக்குறுதியை இராணுவத் தலைவர்களும் அளித்தனர்.

ஜனநாயக ஆட்சியை நிறுவதற்காக துணை இராணுவப் படையை இராணுவத்துடன் இணைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப் பட்டிருந்தது. அல்-புர்ஹான் 2 ஆண்டுகளில் இந்த இணைவை செய்து முடிக்க வேண்டும் என்று கூறுகிறார்; டகாலோவோ 10 ஆண்டுகள் அவகாசம் வேண்டும் என்று கூறுகிறார்.

மேலும், டகாலோ-வின் அதிகாரத்தை தனக்கு அச்சுறுத்தலாக அல்-புர்ஹான் பார்க்கிறார். அதைக் கட்டுப்படுத்த விரும்புகிறார். டகாலோவிடமும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இவர்களுக்கிடையே உள்ள போட்டிதான் தற்போது உள்நாட்டு போராக வெடித்துள்ளது.

மேலாதிக்க வெறிபிடித்த ரஷ்யா:

ஒருபுறம், சூடான் உள்நாட்டு போரிற்கு இரு இராணுவத் தலைவர்களுக்கிடையே உள்ள அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போட்டி காரணம் என்றாலும், மறுபுறம் ரஷ்ய ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க நோக்கமும் முக்கியமான காரணம் ஆகும்.

ரஷ்யா, டகாலோவுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சூடான் நாட்டில் உள்ள பெரும்பாலான தங்க சுரங்கங்கள் துணை இராணுவப் படையின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. மேலும், துணை இராணுவப் படை சூடானின் அண்டை நாடுகளிலும் தங்கத்தை வெட்டி எடுப்பது, விற்பனை செய்வது ஆகியவற்றிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ரஷ்ய துணை இராணுவப் படை மூலம் மட்டுமல்லாது, எல் ஜெனி பிரிகோசிம் தலைமையிலான “வேக்னர்” என்ற ரஷ்ய தனியார் கூலிப்படை குழு மூலமும் தனது கனிம வளக் கொள்ளையை நிகழ்த்தி வருகிறது. இக்கூலிப்படை, ஆர்.எஸ்.எப்-கு (RSF) அரசியல், இராணுவ உதவிகளை வழங்கி வருகிறது.

உள்நாட்டுப்போரில் டகாலோ தோற்கடிக்கப்பட்டால் ரஷ்யாவின் கனிம வளக் கொள்ளை பாதிக்கப்படும் என்பதைத் தாண்டி, டகாலோவை வெற்றி பெற வைப்பதன் மூலம் கனிம வளங்களை கட்டற்ற முறையில் சுரண்ட வேண்டும் என்ற எண்ணமும், மேலாதிக்க நோக்கமும் ரஷ்யாவிடம் உள்ளது.

சூடானில் 40,000-க்கும் மேற்பட்ட தங்க சுரங்கங்கள் உள்ளன. 60 தங்க சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்குகின்றன. நாட்டின் பொருளாதாரத்திற்கு தங்கம் முக்கிய ஆதாயமாகும். 2022 ஆண்டில் சூடான் அரசு 20,511 கோடி ரூபாய் மதிப்புள்ள 41.8 டன் தங்கத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் தங்கத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் 40 சதவிகிதம் ஆகும்.

சூடானில் வேக்னர் குழு “மெரோ கோல்ட்” (Meroe gold) என்ற நிறுவனத்தின் மூலம் தன் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டுள்ளது. சூடானின் தங்க உற்பத்தியில் 90 சதவிகிதம் ரஷ்யாவிற்கு கடத்தப்படுவதாக சி.என்.என் (CNN) பத்திரிகை கூறுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 16 முறை விமானத்தின் மூலம் தங்கத்தை கடத்தியுள்ளதாக கூறுகிறது. இதன் விளைவாக, ரஷ்யா 2010 ஆம் ஆண்டு வைத்திருந்த தங்கத்தை விட நான்கு மடங்கு அதிக தங்கம் வைத்திருப்பதாக குற்றம் சாட்டுகிறது.

இரு மாதங்களுக்கு முன்பு, எல் ஜெனி பிரிகோசிம் சூடானுக்கு வந்து டகாலோவை சந்தித்துள்ளார். அதன் பிறகு டகாலோ ரஷ்யாவிற்கு சென்று ரஷ்ய அதிபர் புதினை சந்தித்துள்ளார். அதன் பிறகே உள்நாட்டுப் போர் துவங்கியுள்ளது. மேலும் ரஷ்யா, உள்நாட்டுப் போரில் ஆர்.எஸ்.எப் படைகளுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தங்கம் போன்ற கனிம வளங்களை கொள்ளையடிப்பதை தாண்டி, ரஷ்யாவிற்கு சூடான், பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். செங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள போர்ட் சூடானில் கடற்படைக் கப்பல்களை நிறுத்துவதற்கான வசதிகளை உருவாக்க உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதன் மூலம் செங்கடலில் ஆதிக்கம் செலுத்தவும் ரஷ்யா விழைகிறது.

2021-இல் சிவில் – இராணுவக் கூட்டாட்சியைக் கலைத்து இராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதும் ரஷ்ய நலனுக்காகத் தான். சிவில் – இராணுவக் கூட்டு அரசாங்கம், ரஷ்யா மெரோ கோல்ட் நிறுவனத்தின் சொத்துகளை அல்-சோலா என்ற சூடான் நிறுவனத்திற்கு மாற்றுவதை நிறுத்திய ஒரு மாதத்திற்குப் பிறகுதான், இராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியது.

ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடு:

சூடானின் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும், மேலாதிக்கம் செய்வதற்காகவும் அமெரிக்கா நீண்டகாலமாக தன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் கடன்களை வாரி வழங்குவது; ஆட்சியாளர்களை மிரட்டுவதற்காக பணப்பரிவர்த்தனைகளை நிறுத்துவது ஆகியவற்றை மேற்கொள்கிறது. 2021 இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய போது, உலகவங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் 49 ஆயிரம் கோடி ரூபாய் (ஆறு பில்லியன் டாலர்) நிதிப்பரிவர்த்தனையை முடக்கியது.

2011 ஆம் ஆண்டு சூடானில் இருந்து தெற்கு சூடான் பிரிக்கப்பட்டு தனி நாடாக ஆக்கப்பட்டதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனுக்காக தான். தார்ஃப்பூர் பிராந்தியத்தில் இனப்படுகொலையை கட்டவிழ்த்துவிட்ட அல்-பஷீரை போர்க்குற்றவாளியாக சித்தரித்து அவரை மிரட்டிப் பணிய வைத்ததும்; தெற்கு சூடானில் மக்கள் விடுதலை இராணுவத்திற்கு ஆயுத உதவிகள் செய்து தனி நாடு கோரிக்கையை கொம்பு சீவி விட்டதும் எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகும்.

சீனாவும் இந்தப் போட்டியில் களம் இறங்கியுள்ளது. சூடானின் தங்க சுரங்கங்களில் 20-க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் 820 கோடி ரூபாய் (100 மில்லியன் டாலர்) முதலீட்டில் செயல்பட்டு வருகின்றன. மேலும் சீனா, சூடான் நாட்டில் பல உள்கட்டுமானத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சூடான் துறைமுகத்தை தார்ஃப்பூர் மற்றும் சாட் வரை இணைக்கும் 4,725 கிலோமீட்டர் ரயில் பாதைகளை சீரமைக்கும் திட்டத்திற்கு சீனா நிதியளித்துள்ளது.

அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளும் சூடானின் இரு இராணுவத் தளபதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதும் மேலாதிக்க நோக்கத்தில் இருந்துதான். வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, “அமெரிக்காவின் உடனடி இலக்கு வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவருவதும், இரண்டாவது, சிவில் (பெயரளவிலான ஜனநாயக) ஆட்சியை கொண்டு வருவது குறித்து போராடும் குழுக்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது” எனக் கூறியுள்ளார்.

அமெரிக்கா, இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு பதிலாக ‘ஜனநாயக’ ஆட்சியை நிறுவ பாடுபடுவதாக ஒரு தோற்றம் ஏற்படுகிறது. முதலாளித்துவ பத்திரிகைகளும் உள்நாட்டுப் போரைக் காரணம் காட்டி சூடானில் ‘ஜனநாயக’ ஆட்சியை நிறுவதில் அமெரிக்காவின் முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டதாக எழுதுகின்றன. அதாவது அமெரிக்கா சூடானில் ‘ஜனநாயக’ ஆட்சியை நிறுவ பாடுபட்டதாம்; கேலிக்கூத்து!

அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்காகவும், மேலாதிக்க நோக்கத்திற்காகவும் ஒரு பொம்மை ஆட்சியை நிறுவப் பாடுபட்டது; பாடுபட்டு வருகிறது என்பதுதான் உண்மை. சூடானில் அமெரிக்காவும், ரஷ்யாவும் மேலாதிக்கம் செலுத்த விழையும் வடிவங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் நோக்கம் ஒன்றுதான்; மேலாதிக்கம். மற்றபடி, வளர்ச்சி, ஜனநாயகம் என்று பேசுவது வெற்று வாய்ஜாலங்கள் தான்.

சூடானில் உள்நாட்டுப் போர் நீடிக்கலாம் அல்லது தற்காலிகமாக முடிவுக்கு வரலாம். சூடானில் மேலாதிக்கம் செலுத்தி செல்வாக்கு மண்டலமாக உருவாக்க விழையும் ஏகாதிபத்தியங்களும், அவர்களின் அடிவருடிகளான ஆளும் வர்க்க இராணுவக் கும்பல்களும் வீழ்த்தப்படாத வரை சூடான் மக்களுக்கு விடிவில்லை.

பிரவீன்
 

 

https://www.vinavu.com/2023/05/14/sudan-civil-war-russia-objective-in-background/

  • கருத்துக்கள உறவுகள்


போருக்கு மூல காரணமான  UAE பற்றி ஒரு வரி கூட இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.