Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தையிட்டி விகாரைதான் கடைசியா? - நிலாந்தன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி விகாரைதான் கடைசியா? - நிலாந்தன்!

adminMay 28, 2023
Thaiyiddi-Viharai.jpg?fit=840%2C560&ssl=

தையிட்டி விகாரை திறக்கப்பட்டுவிட்டது. நிலத்தைக் கைப்பற்றி வைத்திருக்கும் ஒரு தரப்பு இதுபோன்ற விடயங்களைச் செய்யமுடியும். அந்த விகாரை விவகாரத்தை நொதிக்கச் செய்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான். அதேசமயம் அந்த விவகாரமானது தமிழரசியலின் இயலாமையை நிரூபிக்கும் ஆகப் பிந்திய எடுத்துக்காட்டுகளில் ஒன்று.

அந்த விகாரை ஒரு விவகாரமாக மாறிய பின் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்திருந்தார். அதன்போது அஸ்திரிய பீடாதிபதி அவரிடம் கையளித்த எழுத்து மூல ஆவணம் ஒன்றின் மொழிபெயர்ப்பு தமிழில் ஊடகங்களில் வெளிவந்தது. அதி,அஸ்கிரிய பீடாதிபதி முக்கியமான சில விடயங்களை அழுத்திக் கேட்டிருக்கிறார். ”வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள விகாரைகள் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள வரலாற்று சிறப்புமிக்க வணக்கஸ்தலங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என்று அவர் கேட்டிருக்கிறார்.

அந்தச் சந்திப்பு நிகழ்வதற்கு கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு முன் இம்மாதம் 11 ஆம் திகதி ஜனாதிபதி தமிழ்க் கட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்தார். அதில் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளரும் அழைக்கப்பட்டிருந்தார். அச்சந்திப்பில் தொல்லியல் திணைக்களத் தலைவர், திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட மேலதிக நிதியை வெளித்தரப்புகளிடமிருந்து குறிப்பாக பௌத்த மத குருக்களிடமிருந்து பெறுவதாகக் கூறியிருக்கிறார். ஜனாதிபதி அதனை எதிர்த்துக் கேள்வி கேட்கின்றார். ஓர் அரச திணைக்களம் அவ்வாறு வெளியில் இருந்து நிதி உதவியைப் பெற முடியாது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் அஸ்கிரிய பீடாதிபதி அவ்வாறு நிதி உதவி பெறுவதை அனுமதிக்குமாறு தனது கடிதத்தில் கேட்டிருக்கிறார்.

அதாவது சக்திமிக்க பௌத்த மத பீடங்களில் ஒன்று சிங்கள பௌத்த மயமாக்கலை ஊக்குவிக்கும் விதத்தில் ஜனாதிபதிக்கு எழுத்துமூல ஆவணம் ஒன்றை வழங்கியிருக்கிறது. அதேசமயம் உயர் மட்டத்தில் இல்லாத சில பௌத்த மதகுருக்கள் தையிட்டி விவகாரம் தொடர்பாக தமிழிலும் சிங்களத்திலும் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். இதில் நயினா தீவு விகாரதிபதியின் கருத்துக்கள் சிங்கள மக்களுக்கு சிங்களத்தில் சொல்லப்பட வேண்டியவை.

இலங்கைத்தீவில் மத நல்லிணக்கத்தை பொறுத்தவரை அது பெரும்பான்மையிடமிருந்துதான் தொடங்க வேண்டும். தென்னிலங்கையில் அது சிங்கள பௌத்தர்களிடமிருந்து தொடங்க வேண்டும். தமிழ்ப்பகுதிகளில் அது இந்துக்களிடமிருந்து தொடங்க வேண்டும்.ஆனால்,அதேசமயம் மேற்படி பௌத்த மதகுருக்களில் ஒருவரான பொகவந்தலாவை ராகுல தேரர் தமிழ் பௌத்தர்களைப் பற்றிக் கதைக்கின்றார். தையிட்டி திஸ்ஸ விகாரை தமிழ் பௌத்தர்களிடம் கையளிக்கப்படும் என்று கூறுகிறார். தமிழ் பௌத்தம் என்பது தமிழ் மக்களின் வரலாற்றில் ஒரு கட்டம். ஆனால் இப்பொழுது தமிழ் பௌத்தர்கள் யாழ்ப்பாணத்தில் எத்தனை பேர் உண்டு?

சாதாரண தமிழ் மக்களைப் பொறுத்தவரை பௌத்தம் என்பது ஆக்கிரமிப்பின் குறியீடாகவே பார்க்கப்படுகின்றது. தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் ஒரு காலகட்டத்தில் பௌத்தர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது ஒரு வரலாற்று உண்மை. இந்தியாவில் தோன்றிய பௌத்தம் ஆசியா முழுவதும் பரவிய பொழுது அது தமிழ் மக்கள் மத்தியிலும் பரவியது. தமிழின் காப்பிய காலம் எனப்படுவது சமண பௌத்த காலம்தான். தமிழில் உள்ள ஐந்து காப்பியங்களும் ஒன்றில் பௌத்த காப்பியங்கள் அல்லது சமண காப்பியங்கள்தான். பின்னர் நாயன்மார்களின் எழுச்சியோடு சைவம் பௌத்தத்தை வெற்றி கொண்டது. மதங்களுக்கிடையிலான பூசல்களும், அனல்வாதம் புனல் வாதம் போன்றவற்றில் பிற மதத்தவர்களை வென்றதும் தமிழ் வரலாற்றின் ஒரு பகுதி. அதுபோலவே தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்களாக மதம் மாறியதும் இஸ்லாமியர்களாக மதம் மாறியதும் தமிழ் வரலாற்றின் ஒரு பகுதி.

தமிழ் அடையாளம் ஒரு மதத்துக்கு மட்டும் உரியதல்ல என்று அறிஞர்கள் கூறுவர். பூர்வ காலங்களில் தமிழர்கள் இயற்கையை வழிபட்டார்கள். அதன்பின் சமணமும் பௌத்தமும் தமிழ்மக்கள் மத்தியில் பரவின. அதன்பின் பக்தி இலக்கியம். அதன் பின் கிறிஸ்தவம், இஸ்லாம். அதன்பின் ஈழத்தில் ஆயுதப் போராட்டமும் அதன் விளைவாக ஏற்பட்ட புலப்பெயர்ச்சியும். இப்படியாக பூர்வ காலங்களில் தொடங்கி இன்று வரையிலும் தமிழ் அடையாளத்தை வெவ்வேறு மதங்கள் செதுக்கியிருக்கின்றன. வெவ்வேறு கோட்பாடுகள் செதுக்கியிருக்கின்றன. வெவ்வேறு நம்பிக்கைகள் செதுக்கியிருக்கின்றன. ஈழப் போராட்டம் செதுக்கியது. புலப்பெயர்ச்சி செதுக்கியது. புலப்பெயர்ச்சி தமிழர்களை தாயகத்துக்கு வெளியே சிதறடித்துவிட்டது. அதனால், தமிழ் அடையாளம் எனப்படுவது சில அறிஞர்கள் சுட்டிக்காட்டுவதுபோல எல்லை கடந்த ஒர் அடையாளம். அது ஓர் அரசியல் எல்லைக்குள் குறுக்கப்பட முடியாத அனைத்துலக அடையாளம்.

குறிப்பாக கீழடி ஆய்வுகள் இந்திய வரலாற்றை தமிழில் இருந்து தொடங்கத் தேவையான சான்றுகளை வெளிக்கொண்டு வருவதாக அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள். எனவே தமிழர்கள் தமது மொழியின் தொன்மை மற்றும் அனைத்துலக இருப்பைக் குறித்துப் பெருமைப்பட வேண்டும். இந்த அடிப்படையில் சிந்தித்தால், ஒரு காலம் தமிழில் பௌத்தம் நிலவியது என்பது வரலாற்று உண்மை.

ஆனால் பௌத்தம் ஒரு மதமாக இருக்கும்வரை பிரச்சனை இல்லை.அது ஒரு இனத்தின் ஆக்கிரமிப்புத் தத்துவமாக,ஆக்கிரமிப்பின் கருவியாக மாறும் பொழுதுதான் பிரச்சினையே வருகிறது. இலங்கைத்தீவின் இனப்பிரச்சினையே அதுதான்.மதம்;மொழி;இனம்; நிலம் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட “தம்மதுவீப “ கோட்பாடு அதுவென்று மு. திருநாவுக்கரசு கூறுகிறார்.

சிங்கள பௌத்தம் ஓர் ஆக்கிரமிப்புக் கொள்கையாக மாறிய பின் அது தமிழ் பௌத்தத்தை கையில் எடுத்தால் அதுவும் ஓர் ஆக்கிரமிப்பு உத்தி என்றுதான் தமிழ்மக்கள் பார்ப்பார்கள். சிங்கள பௌத்தமானது ஏனைய மதங்களின் இருப்பை அங்கீகரிக்குமாக இருந்தால் குறிப்பாக யாப்பில் இப்பொழுது சிங்கள பௌத்தத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் முன்னுரிமையை நீக்கி இலங்கைத்தீவின் மதப்பல்வகைமையை ஏற்றுக்கொள்ளும் ஒரு யாப்பை உருவாக்கச் சிங்கள அரசியல்வாதிகள் தயாரா? இங்கு பிரச்சனை மதப்பல்வகைமை அல்ல மத மேலாண்மைதான். சிங்கள பௌத்தம் ஒரு மத மேலாண்மைக் கோட்பாடு என்பதுதான்.

ஆதித் தமிழ் பௌத்தர்கள் பெருமளவுக்கு மகாயான பௌத்தத்தை சேர்ந்தவர்கள் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அதேசமயம் சிங்கள பௌத்தர்கள் தாங்கள் பின்பற்றுவது தேரவாத பௌத்தம் என்று கூறிக் கொள்கிறார்கள். ஆனால் தென்னிலங்கையில் பிரயோகத்தில் இருப்பது மகாயான பௌத்தந்தான் என்று பேராசிரியர் கணணாத் ஓபயசேகர கூறுகிறார். தேரவாத பௌத்தத்துக்கும் மகாயான பௌத்தத்துக்கும் இடையிலான முரண்பாடுகளின்போது இலங்கை வரலாற்றில் மன்னர்களின் காலத்தில் கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. மகாயான பௌத்தம் அதிகம் இந்து மதப் பண்புகளை உள்வாங்கியது என்றும்,இலங்கைத்தீவில் உள்ள மகாயான, தேரவாத பௌத்த பிரிவுகளுக்கு இடையிலான முரண்பாடுகளை இன ரீதியாகவும் வியாக்கியானம் செய்யலாம் என்றும் கூறும் அறிஞர்கள் உண்டு.

இவ்வாறான அரசியல்,பொருளாதார,இராணுவ,மத கலாச்சாரப் பின்னணிக்குள் சில பௌத்த மத குருக்கள் தமிழ் பௌத்தத்தைப் பற்றிக் கதைப்பதனை தமிழ் மக்கள் சந்தேகத்தோடுதான் பார்ப்பார்கள். மேற்படி பிக்கு கூறுகிறார் கட்டப்பட்ட விகாரைகளை இடிக்க முடியாது என்று. ஒரு நிலத்தை ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு அதில் விகாரைகளைக் கட்டிவிட்டு அதன் பின் விகாரைகளை இடித்தால் அது மத நல்லிணக்கத்தை குழப்பி விடும் என்று கூறுவது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் ஒரு தர்க்கம்தான். தையிட்டியில் மட்டுமல்ல தமிழ் பகுதிகளில் இப்பொழுது தமிழ் பௌத்தர்கள் ஒரு சமூகமாக இல்லை. தமிழ்ப் பகுதிகளில் சிங்கள பௌத்தர்களான படைத்தரப்புத்தான் ஆயுதங்களோடு குந்தியிருக்கின்றது. தமிழ்மக்கள் அவர்களை ஆக்கிரமிப்பு படையாகத்தான் பார்க்கின்றார். ஒரு மதத்தின்,ஒரு இனத்தின் மேலாண்மையை பாதுகாக்கும் ஒரு படையாகத்தான் பார்க்கின்றார்கள். இன,மதப் பல்வமையைப் பாதுகாக்கும் ஒரு படையாகப் பார்க்கவில்லை. எனவே இந்த நாடு இன மதப் பல்கைமையை ஏற்றுக்கொள்ளும் ஒரு யாப்பை உருவாக்கட்டும். அப்பொழுது தமிழ் பௌத்தம் ஒரு பிரச்சினையே இல்லை.

இப்பொழுது மீண்டும் தையிட்டி விகாரைக்கு வருவோம். இந்த விடயத்தில் மேற்சொன்ன சில அதிகாரமற்ற பிக்குக்கள் சொல்லும் கருத்துக்களை விடவும் அதிகாரம்மிக்க அஸ்கிரிய பீடாதிபதியின் கருத்துக்களே அரசியல் பரிமாணமுடையவை. அப்படிப் பார்த்தால் தாமரை மொட்டு கட்சியின் பிரதிநிதியாகக் காணப்படும் ரணில் விக்கிரமசிங்க, தொடர்ந்து சிங்கள பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கக்கூடிய வாய்ப்புக்களே தெரிகின்றன.

அடுத்த ஆண்டு இறுதியில் அவர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும். அப்பொழுது எதிரணியின் ஒரு பொது வேட்பாளராக சம்பிக்க ரணவக்க நிறுத்தப்படலாம் என்ற ஊகங்கள் உண்டு. சம்பிக்க சிங்கள பௌத்தர்களைக் கவரக்கூடியவர். அதேசமயம் அரகலய போராட்டத்தின் பங்காளிகளிலும் ஒருவர். எனவே அவரை எதிர்கொள்வது என்றால் ரணில் விக்கிரமசிங்க சிங்கள பௌத்தர்களைக் கவரவேண்டும். அதோடு ஐ.எம்.எப்பின் நிபந்தனைகளை ஏற்பதால் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய எதிர்ப்பலைகளைத் திசை திருப்பவும் அது உதவும்.

அதாவது அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நோக்கித்தான் அவர் உழைக்கின்றார். சிங்கள பௌத்தத்தின் காவலனாக அவர் தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. மேற்கத்தைய உடுப்புகளையணிந்து, மேற்கத்திய பாரம்பரியத்தைப் பின்பற்றும் ரணில்,பாரம்பரிய உடையணிந்து சிங்களபௌத்த கடும் போக்காளர்களைப் பிரதிபலிக்கும் சம்பிக்க ரணவக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். அதற்கு ஒரே வழி சிங்கள பௌத்தர்களைத் திருப்திப்படுத்துவதுதான். அப்படிப்பார்த்தால் தையிட்டி விகாரை இறுதியானது அல்ல என்று எடுத்துக் கொள்ளலாமா?

 

https://globaltamilnews.net/2023/190988/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.