Jump to content

ரணிலுடன் பேசுதல் ? - யதீந்திரா 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுடன் பேசுதல் ? - யதீந்திரா 
 

தமிழ் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசிவருகின்றன. ரணிலுடன் பேசுவது தமிழ் கட்சிகளை பொறுத்தவரையில் புதிய விடயமல்ல. மைத்திரிபால அரசாங்கத்திலும் ரணிலுடன் பல சுற்றுப் பேச்சுக்களில் தமிழ் கட்சிகள் ஈடுபட்டிருந்தன. புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டுவர முடியுமென்றும் தமிழ் கட்சிகள் – குறிப்பாக இராஜவரோதயம் சம்பந்தன் அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருந்தார். அந்த அடிப்படையில் சம்பந்தன் தலைமையில் பேச்சுக்கள் இடம்பெற்றன. இறுதியில் வழமைபோல் வெறுங்கையுடன் திரும்பினர்.

ரணில் தந்திரமான அரசியல்வாதியென்று பெயரெடுத்த ஒருவர். ரணில், அவரது மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிடமிருந்து அரசியலை கற்றுக்கொண்டவர். தமிழ் சூழலை பொறுத்தவரையில், ரணிலை நரியென்று கூறுவதுண்டு. அதுவும் கூட ஜே.ஆரின் அரசியல் வழியாக வந்த ஒன்றுதான். ஜே.ஆர் ஜெயவர்த்தனவை பழைய நரியென்பார்கள். சிங்கள ராஜதந்திரத்திடம் தமிழர்கள் தோற்றுப் போகும் சந்தர்பங்களிலேயே, இவ்வாறான நரிக் கதைகள் தலைநீட்டுவதுண்டு. ரணில் நரியாக இருப்பது அவரது கெட்டித்தனம் ஆனால், தமிழர் பக்கத்தில் நரியாக சிந்திக்கக் கூடாதென்று எந்த நிபந்தனைகளும் நமக்கில்லைதானே!

இப்போது ஜனாதிபதியாக இருக்கும் ரணில், எவ்வாறானதொரு சூழலில் ஜனாதிபதியானார் என்பது தொடர்பில் மீண்டும் பேசவேண்டியதில்லை. நாட்டில் மோசமானதொரு பொருளாதார நெருக்கடியேற்பட்டதன் காரணமாகவே, ரணில் ஜனாதிபதி கதிரையில் அமர முடிந்தது. இல்லாவிட்டால் ரணில் ஜனாதிபதியாக ஒரு போதுமே வந்திருக்க முடியாது. இந்த பின்புலத்தில் நோக்கினால் 2015 ஆட்சி மாற்றத்தின் மூலம் அதிகாரம்மிக்க பிரதமராக இருந்த ரணில் அல்ல இப்போதிருக்கும் ரணில் விக்கிரமசிங்க. இந்தப் பின்புலத்தில் நோக்கினால், அரசியலில் காணாமல் போன ஒருவர், மீளவும் நிரந்தரமாக நிமிர்வதற்கான காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றார். தனது காய்நகர்த்தல்களுக்கு மற்றவர்களை கையாள முயற்சிக்கின்றார்.

இந்த பின்புலத்தில் சிந்தித்தால், முன்னர் ரணிலுடன் பேசியதற்கும், இப்போது ரணிலுடன் பேசுவதற்குமிடையில் பெரிய வேறுபாடுண்டு. இதனை புரிந்துகொண்டுதான் ரணிலுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க வேண்டும். இப்போதுள்ள ரணில் எதேச்சையாக கிடைத்த கதிரையில், மீண்டுமொரு முறை, மக்கள் ஆதரவுடன் அமருவதற்கான தந்திரம் தொடர்பில் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பவர்.

அதற்கு என்ன செய்யலாம் என்பதுதான், ரணிலை பொறுத்தவரையில் முதன்மையான விடயமாகும். அதற்கு எதையலெ;லாம் செய்யக் கூடாதென்பதுதான் அடிப்படையான விடயமாகும். ரணில் மீண்டும் ஜனாதிபதியாவதற்கு நிச்சயம் தமிழ் மக்களின் ஆதரவும் தேவை. இவ்வாறானதொரு சூழலில்தான், தமிழ் கட்சிகளுடன் ரணில் பேசிவருகின்றார். முதலில் வடக்கு மாகாண மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசப் போவதாக அறிவித்தார். இவ்வாறு கூறினால், தமிழ் கட்சிகள் தங்களின் எதிர்ப்பை வெளியிடுமென்று தெரிந்து கொண்டே, அவ்வாறு கூறினார். பின்னர் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை காணப் போவதாக கூறினார். இதனைத் தொடர்ந்து, 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தப் போவதாக கூறினார்.

spacer.png

ஒவ்வொரு விடயங்களையும் கூறிவிட்டு, அது தொடர்பான எதிர்வினைகளை குறித்துக் கொண்டார். இவை அனைத்துமே நன்கு திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட விடயங்களாகும். ஏனெனில் ரணில் விக்கிரமசிங்க தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பிலும் தமிழ் அரசியல் சூழல் தொடர்பிலும் போதிய அனுபவமும் அறிவும் கொண்ட ஒருவர். எனவே ரணில் விடயங்களை புரிந்துகொள்ளாமல் பேசுகின்றார் என்று எவரேனும் எண்ணினால், அவ்வாறானவர்கள் நிச்சயம் அரசியலில் கற்றுக்குட்டிகளாகவே இருப்பர்.

ரணிலுடன் தமிழ் கட்சிகள் பேசிவருவதாக கூறிவரும் சூழலில், தமிழ் அரசியல் தரப்புக்கள் எவ்வாறான நிலையிலிருக்கின்றன? உள்ளுராட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, விடயங்களை ஆராயாமல் அவசரப்பட்டு, தமிழரசு கட்சி தனியான போட்டி அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் உள்ளுராட்சி தேர்தல் நடைபெறவில்லை. இந்த விடயங்களை சுமந்திரனாலோ அல்லது சம்பந்தனாலோ முன் கூட்டியே கணிக்க முடியவில்லை. நடைபெறாத ஒரு தேர்தலை முன்வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவடைந்தது. இந்த பின்புலத்தில் அதுவரையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாக (பல்வேறு முரண்பாடுகள் இருந்த போதிலும் கூட) விடயங்களை அணுகியவர்கள் பின்னர், தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பிளவுற்றனர். இவ்வாறு பிளவுற்ற நிலையில்தான், ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசவும் சென்றனர்.

ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதான ஒரு தோற்றத்தை காண்பித்தார். ஆனால் ஒரு சிறிய விடயத்தில் கூட ரணில், கூட்டமைப்பின் தலைவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. வடக்கு மாகாண ஆளுனர் விடயத்தில் கூட, ரணில் விக்கிரமசிங்க, கூட்டமைப்பின் தலைவர்களின் கருத்துக்களை பொருட்படுத்தவில்லை. இது ஒரு சிறிய விடயம் ஆனால் இவ்வாறானதொரு விடயத்தில் கூட, தமிழ் கட்சிகளின் தலைவர்களை பொருட்படுத்தாதவர், எவ்வாறு தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில், இந்தக் கட்சிகளின் கருத்துக்களை செவிமடுப்பாரென்று எதிர்பார்க்கலாம்? விடயங்களை ஆழமாக நோக்கினால், தமிழ் தலைவர்கள் என்போரை, ரணில் விக்கிரமசிங்க உண்மையிலேயே மதிக்கின்றாரா என்னும் கேள்வி எழுகின்றது. ரணில் மட்டுமல்ல, கொழும்பில் அதிகாரத்திலுள்ள சிங்கள அரசியல்வாதிகள் எவருமே தமிழ் தலைவர்கள் என்போரை மதிக்கிவில்லை போன்றே தெரிகின்றது. இதற்கு யார் காரணம் – சிங்கள அரசியல்வாதிகளா அல்லது தமிழ் அரசியல்வாதிகளா?

உண்மையில், ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசச் செல்வதற்கு முன்னர், தமிழ் கட்சிகளின் தலைவர்கள் என்போர் அனைவரும் (நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் – இல்லாதவர்கள் அனைவரும்) விடயங்கள் தொடர்பில் முதலில் தங்களுக்குள் பேசி, எதனை எவ்வாறு, முன்வைப்பதென்பதில் உறுதியானதொரு உடன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அதனைச் செய்யவில்லை. இதன் காரணமாக இன்று என்ன நடந்திருக்கின்றது? தமிழ் தேசியம் பேசும் ஒரு கட்சியின் தலைவரான சி.வி.விக்கினேஸ்வரனின் ஏற்பாட்டில், மாகாண சபை தேர்தல் இடம்பெறும்வரையில் ஒரு ஆலோசனை சபையை நியமிக்கும் யோசனையை ரணிலிடம் ஒப்படைத்திருக்கின்றனர். (விக்கினேஸ்வரனின் அரசியல் அணுகுமுறை தொடர்பில் அவருடனிருப்பவர்களின் – குறிப்பாக அவரின் மூலம் அரசியல் எதிர்காலத்தை தேடிக்கொண்டிருக்கும், மணிவண்ணன் போன்றவர்களின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை)

spacer.png

இப்போது ரணில் அதனையே தான் செய்யவுள்ளதாக கூறுகின்றார். இதனையே ஊடகங்கள் இடைக்கால தீர்வு என்பதாக தவறாக விளக்கமளிக்கின்றன. இது இடைக்கால தீர்வல்ல. மாகாண சபை தேர்தல் இடம்பெறும் வரையில், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆலோசனை சபையொன்றின் மூலம், மாகாண சபை நிர்வாகத்தை முன்னெடுப்பதாகும். ஆனால் நாடு உள்நாட்டு யுத்தத்திற்குள் சிக்கியிருந்த காலத்தில் கூட, அவ்வாறானதொரு ஆலோசனை சபையின் மூலம் மாகாண சபை நிர்வாகம் முன்னெடுக்கப்படவில்லை.

தமிழ் அரசியல்வாதிகளால் அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுக்க முடியுமென்று சிங்கள அரசியல்வாதிகள் கருதவில்லை. அதற்கான ஆற்றலை தமிழ் அரசியல் தலைமைகள் இழந்துவிட்டன என்றே அவர்கள் கருதுகின்றனர். இவ்வாறானதொரு நிலையில்தான், தமிழ் கட்சிகளுடன் ரணில் விக்கிரமசிங்க பேசிவருகின்றார். இவ்வாறான பேச்சுக்களின் போது, அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் முறையாக அறிவிக்கப்படுவதுமில்லை. பேச்சுவார்த்தை தொடர்பில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக அல்லது முதல் நாளே அறிவிக்கப்படுகின்றது. ஒரு வேளை ஒரு கட்சியின் தலைவர் குறித்த அறிவிப்பின் போது, கொழும்பில் இல்லாவிட்டால் அவரால் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியாது.

ஒரு தேசிய இனத்தின் பிரச்சினையை இவ்வாறுதான் பேசுவதா? இதற்கு யார் காரணம்? தமிழ் கட்சிகளின் தலைவர்களை இவ்வாறு அணுக முடியும் – நாம் எவ்வாறு அணுகினாலும் கூட, சூடு சுறனையில்லாமல், அவர்கள் நாய்குட்டிகள் போன்று வருவார்களென்றா? கொழும்பின் அதிகாரபீடம் கருதுகின்றது? கொழும்பிலுள்ள தூதரகங்கள் குறிப்பாக அமெரிக்க தூதரகம் அதன் நிகழ்வுகளுக்காக அழைப்புவிடுக்கும் போது, அழைப்பிதழை இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே அனுப்பி, உறுதிப்படுத்துமாறு கோருகின்றது. உண்மையில் ஒரு நிகழ்விற்காக மற்றவர்களை அவ்வாறுதான் அழைக்க வேண்டும். ஆனால் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் பேசுவதற்காக, தமிழ் மக்களின் தலைவர்களுக்கு முதல் நாள் அழைப்பு விடுக்கப்படுகின்றது. அந்த அழைப்பை ஒரு பெரும் பாக்கியம் போன்றே, கட்சிகளும் பாவனை செய்கின்றன? இதிலிருந்தே தமிழ் தலைவர்களை எவ்வாறு சிங்கள அரசியல்வாதிகள் மதிக்கின்றனர் என்பது தெளிவாகின்றதல்லவா!

முதலில் தமிழ் தலைவர்கள் என்போர், தங்களை மற்றவர்கள் தலைவர்களென்று கருதுமளவிற்கு நடந்துகொள்ள வேண்டும். தங்களை அவமதிக்கும் செயல்களுக்கு கடுமையான எதிர்வினைகளை ஆற்ற வேண்டும். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து, தங்களின் எதிர்ப்புக்களை பதிவு செய்ய வேண்டும். ரணிலுடன் தொடர்ந்தும் நாங்கள் பேச விரும்பவில்லையென்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். தற்போதைய சூழலில் ரணில் விக்கிரமசிங்க ஒரு பலமான நபரல்ல. பல்வேறு நெருக்கடிளை எதிர்கொண்டிருப்பவர். இவ்வாறான நிலையில் கூட, தமிழ் கட்சிகள் இரண்டாம்பட்சமாக நடத்தப்படுகின்றார்கள் என்றால், ஒரு வேளை அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், தமிழ் கட்சிகளை எவ்வாறு நடத்துவார்?
 

 

http://www.samakalam.com/ரணிலுடன்-பேசுதல்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் இருக்கும் வரைக்கும் தான் தமிழ் தலைவர்களுக்கு கொழும்பில் கொஞ்சம் மரியாதை இருந்தது. நாடு சுதந்திரம் ஆனதுக்கு பிறகு பிரபாகரனுக்கு முதலும் பிறகும் அந்த மரியாதை தமிழ் தலைவர்களுக்கு இல்லை.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.