Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இப்படி ஒரு Dance-ஆ; Portuguese விட்டுச் சென்றதை காக்கும் Sri Lanka; இதை பார்த்து ரசிங்க...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Portuguese Kaffringha Dance with Baila Music - போர்த்துகீசியர்கள் இலங்கையை விட்டுச்சென்று 365 ஆண்டுகளாகிவிட்ட போதிலும், இங்கு வசித்து வரும் அவர்களின் சந்ததியினர், தங்களின் பாரம்பரிய கஃப்றிஞ்ஞா நடனத்தை இன்றுவரை பேணிப் பாதுகாத்து வருகின்றனர். இந்த சமூகத்தின் சிறுவர்கள் கூட கஃப்றிஞ்ஞா நடனத்தை தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், அதற்கான இசைக்கலைஞர்கள் வெகு சிலரே இருக்கின்றனர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டம் பாட்டமான ஒரு அழகிய நடனம்........நன் பிழையா ஆடினால் தண்டம் கட்டதயார் சரியா ஆடினால் இசைக்குழு எனக்கு பணம் தருமா........!  😂

நன்றி ஏராளன் ......!  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

ஆட்டம் பாட்டமான ஒரு அழகிய நடனம்........நன் பிழையா ஆடினால் தண்டம் கட்டதயார் சரியா ஆடினால் இசைக்குழு எனக்கு பணம் தருமா........!  😂

நன்றி ஏராளன் ......!  

சரியா ஆடினால் இரசிகர்களின் கரகோசம் கிடைக்கும் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

சரியா ஆடினால் இரசிகர்களின் கரகோசம் கிடைக்கும் அண்ணை.

நல்லது......கரகோசத்தை நீங்கள் வைத்துக் கொண்டு கரன்சியை எனக்கு அனுப்பிவிடவும்......!   😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

நல்லது......கரகோசத்தை நீங்கள் வைத்துக் கொண்டு கரன்சியை எனக்கு அனுப்பிவிடவும்......!   😂

இந்தாள் ஆரியக் கூத்தாடினாலும் கரன்சில கண்ணாயிருக்கே!
அண்ணை ஊருக்கு வந்து ஆடிக்காட்டுங்கோ கரன்சி தரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

Portuguese Kaffringha Dance with Baila Music - போர்த்துகீசியர்கள் இலங்கையை விட்டுச்சென்று 365 ஆண்டுகளாகிவிட்ட போதிலும், இங்கு வசித்து வரும் அவர்களின் சந்ததியினர், தங்களின் பாரம்பரிய கஃப்றிஞ்ஞா நடனத்தை இன்றுவரை பேணிப் பாதுகாத்து வருகின்றனர். இந்த சமூகத்தின் சிறுவர்கள் கூட கஃப்றிஞ்ஞா நடனத்தை தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், அதற்கான இசைக்கலைஞர்கள் வெகு சிலரே இருக்கின்றனர்.

 

சரித்திரம் சம்பந்தமான நல்ல ஒரு தகவலை அறியத் தந்தமைக்கு நன்றி ஏராளன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: தாய்மொழியை மறந்து தமிழ், சிங்களம் பேசும் போர்த்துகீசிய வம்சாவளிகள்

இலங்கையில் போர்த்துக்கேய வம்சாவளியினர்
 
படக்குறிப்பு,

இலங்கையில் வாழும் போர்த்துக்கேய வம்சாவளியினர்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,யூ.எல். மப்றூக்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையை 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தவர்கள் போர்த்துகீசியவர்கள். இவர்களது பரம்பரையினரான மட்டக்களப்பு 'பரங்கியர்'கள் (Burgher), தமது சொந்த மொழியான போர்த்துகீசிய மொழியை இழந்து வருகின்றனர்.

மட்டக்களப்பு பரங்கியர் சமூகத்தில் இந்த மொழியைப் பேசுவோர் தற்போது மிகவும் அரிதாகவே உள்ளார்கள். இவர்களின் இளைய தலைமுறையினர் தங்கள் மூதாதையர் மொழி தெரியாமல் - இப்போது தமிழைப் பேசுகின்றனர்.

'ஆவ்' என்றால் தண்ணீர், 'காச' என்றால் வீடு, 'கோக்கு' என்றால் தேங்காய் - என, தமது போர்த்துகீசிய மொழியிலுள்ள சில சொற்களை நமக்கு அறிமுகம் செய்தார் கிரோக்கோரி நிவ்டன் செலர்.

இவர் மட்டக்களப்பில் வாழும் பரங்கியர். இலங்கையை ஆட்சிபுரிந்த போர்த்துகீசியரின் வாரிசுகளே மட்டக்களப்பில் 'பரங்கியர்' எனும் அடையாளத்துடன் வாழ்கின்றனர். இலங்கையை 1505ஆம் ஆண்டு போர்த்துகீசியர் கைப்பற்றினர். ஆனாலும் 1628ஆம் ஆண்டுதான் மட்டக்களப்பில் கோட்டை ஒன்றை நிர்மாணித்து, அங்கு போர்த்துகீசியர் தம்மை நிலைநிறுத்திக் கொண்டார்கள்.

   

மட்டக்களப்பில் போர்த்துகீசியர் கோட்டை

மட்டக்களப்பில் போர்த்துகீசியர் நிர்மாணித்த கோட்டையை இப்போதும் காணலாம். கடந்த 1638ஆம் ஆண்டு இந்தக் கோட்டையை ஒல்லாந்தர் கைப்பற்றிக் கொண்டனர். தற்போது 'மட்டக்களப்பு மாவட்ட செயலகம்' இந்தக் கோட்டையில் இயங்கி வருகின்றது.

மட்டக்களப்பில் சுமார் 2 ஆயிரம் பரங்கியர்கள் வாழ்வதாக நிவ்டன் செலர் கூறுகின்றார். இவர் ஓர் இசைக்கலைஞர். 75 வயதாகும் நிவ்டன் செலர் - தனது மூதாதையரான போர்த்துகீசியரின் இசையை இளையோருக்குக் கற்றுக் கொடுக்கின்றார்.

தமது மூதாதையரின் மொழி, கலை, கலாசாரம் மற்றும் தொன்மைகளை பாதுகாப்பதிலும், பரப்புவதிலும் ஆர்வத்துடன் செயல்படும் நிவ்டன் செலர், தமது மூதாதையர் பாவித்த பொருட்களையும் தேடிப் பாதுகாத்து வைத்திருக்கின்றார்.

மட்டக்களப்பிலுள்ள பரங்கியர்கள் தற்போது தமிழை தமக்கான மொழியாக்கிக் கொண்டுள்ளனர். அந்த சமூகத்திலுள்ள இளையோருக்கு போர்த்துகீசிய மொழி பெரும்பாலும் தெரியாது. மூத்தோர் மட்டுமே அந்த மொழியை அறிந்து வைத்துள்ளனர்.

இலங்கையில் போர்த்துக்கேய வம்சாவளியினர்
 
படக்குறிப்பு,

மட்டக்களப்பில் போர்த்துகீசியர் நிர்மாணித்த கோட்டை

இலங்கையில் போர்த்துக்கேய வம்சாவளியினர்
 
படக்குறிப்பு,

மட்டக்களப்பு போர்த்துகீசியர் கோட்டைக்குள் உள்ள பழைமையான பீரங்கி

தாய்மொழியை விட்டு தமிழ் கற்கும் வம்சாவளியினர்

"நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது, வீட்டில் போர்த்துகீசிய மொழியைத்தான் பேசுவோம். தமிழில் பேசினால் எமது தந்தை எங்களைத் திட்டுவார், எங்களின் மொழியைப் பேசுமாறு கூறுவார்.

அதனால்தான் அந்த மொழியை நான் அறிந்து வைத்திருக்கிறேன்" என்கிறார் 75 வயதான எவ்ரின் செலர். இவர் மட்டக்களப்பு - பனிச்சையடியில் வாழ்கிறார். பரங்கியர் சமூகத்திலுள்ள இளையோர் போர்த்துகீசிய மொழியை அறியாமல் இருக்கின்றமை குறித்து அவர் கவலைப்படுகின்றார்.

மட்டக்களப்பிலுள்ள பரங்கியர்களில் பெரும்பாலானோர் ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகின்றனர்.

இலங்கையில் போர்த்துக்கேய வம்சாவளியினர்
 
படக்குறிப்பு,

எவ்ரின் செலர்

கப்றிஞ்ஞா நடனம்

பரங்கியர்களிடையே, அவர்களின் மொழி மற்றும் கலை, கலாசாரங்கள் அருகி வருகின்ற போதிலும், அவர்களுக்கே உரித்தான கஃப்றிஞ்ஞா (Kafringha) நடனம் - இன்னும் அவர்களிடையே உயிர்ப்புடன் உள்ளது.

போர்த்துகீசியர், இலங்கையை விட்டுச் சென்று 365 வருடங்களாகி விட்ட போதிலும், இலங்கையில் வசித்து வரும் அவர்களின் பரம்பரையினர் போர்த்துகீசியரின் கஃப்றிஞ்ஞா நடனத்தை இன்னும் பேணி வருகின்றனர்.

பரங்கியர்களின் கஃப்றிஞ்ஞா நடனம் தனித்துவமானது. திருமண நிகழ்வுகளின்போது மணமகன், மணமகள் மற்றும் அவர்களின் தோழர்கள் இணைந்து இந்த நடனத்தை ஆடுவார்கள்.

இலங்கையில் போர்த்துகீசிய வம்சாவளியினர்
 
படக்குறிப்பு,

கஃப்றிஞ்ஞா நடனம்

கஃப்றிஞ்ஞா நடனம் 5 விதங்களைக் கொண்டது என்கிறார் இசைக்கலைஞர் ஸ்டீவன் ஆன்ட்ராடோ.

"ஆண்களும் பெண்களுமான 4 ஜோடிகள் சேர்ந்து இந்த நடனத்தை ஆடுவர். கஃப்றிஞ்ஞா நடனத்திற்கென்று தனித்துவமான இசை மற்றும் பாடல்கள் உள்ளன. அந்தப் பாடல்கள் 'பைலா' என அழைக்கப்படுகின்றன. போர்த்துகீசிய மொழியில்தான் 'பைலா' பாடுவோம்" என, அவர் விவரித்தார்.

சிங்களத்திலும் 'பைலா' பாடல்கள் உள்ளன. 'போர்த்துகீசிய பைலா'விலிருந்தே 'சிங்கள பைலா' உருவானதாக, நோர்வேயில் வசித்து வரும் இலங்கை எழுத்தாளர் என்.சரவணன் குறிப்பிடுகின்றார். 'சிங்களப் பண்பாட்டிலிருந்து' எனும் தனது நூலில் இது தொடர்பாக அவர் விவரித்து எழுதியுள்ளார்.

கஃப்றிஞ்ஞா நடனத்தில் முதல் நடனத்திலிருந்து நான்காவது நடனம் வரை இசை மட்டுமே வழங்கப்படும் என்றும், ஐந்தாவது நடனத்தில் இசையுடன் 'பைலா' பாடப்படும் எனவும் ஸ்டீவன் ஆன்ட்ராடோ கூறுகின்றார்.

இலங்கையில் போர்த்துக்கேய வம்சாவளியினர்
 
படக்குறிப்பு,

ஸ்டீவன் ஆன்ட்ராடோ

”கஃப்றிஞ்ஞாவில் தவறிழைப்போர், அதன் பொருட்டு அபராதம் செலுத்த வேண்டும். நடனத்திற்கு இசை வழங்கும் குழுவினருக்கு, தவறிழைத்தோர் அபராதத்தை வழங்குவார்கள். இசைக் கலைஞர்கள் நிலத்தில் ஒரு சீலைத் துண்டை விரித்து, அதன் மேல் தமது இசைக்கருவிகளை வைத்து, தவறிழைத்தவர்களிடம் அபராதம் கேட்பார்கள், தவறுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மது பாட்டில்கள் அபராதமாக வழங்கப்படும்” என்கிறார் ஸ்டீவன் ஆன்ட்ராடோ.

பரங்கியர்கள் தமது மூதாதையரின் மொழி, மற்றும் ஏராளமான கலை, கலாசாரங்களை இழந்து வருகின்றபோதிலும், கஃப்றிஞ்ஞா நடனத்தை அந்த சமூகத்திலுள்ள சிறுவர்கள்கூட தெரிந்து வைத்திருக்கின்றமை ஆச்சரியமளிக்கின்றது.

ஆனாலும், கஃப்றிஞ்ஞா நடனத்திற்கான இசை மற்றும் பைலா ஆகியவற்றை வழங்கக்கூடிய கலைஞர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர்.

”சட்டை போட்ட டீச்சர்”

இலங்கையில் போர்த்துக்கேய வம்சாவளியினர்
 
படக்குறிப்பு,

ஷெரின் டெனாரன்ஸ், ஓய்வு பெற்ற ஆசிரியை

பரங்கியர்களில் பெண்கள் முழங்கால் வரையான சட்டையும் (Frock) ஆண்கள் சேர்ட் மற்றும் டவுசரும் அணிவார்கள். ஆனால் 22 வயது வரையும் ஆண்கள் அரைக்கால் டவுசரே (களிசான்) அணிவார்கள் என்கிறார் மட்டக்களப்பிலுள்ள ஓய்வு பெற்ற ஆசிரியை ஷெரின் டெனாரன்ஸ். இதுவே தமது ஆடைக் கலாசாரம் எனவும் அவர் கூறினார். ஆனால் இப்போது அரைக்கால் டவுசர்களை இளைஞர்கள் அணிவதில்லை.

தான் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் சட்டை (Frock) அணிந்து கொண்டே கடமைக்குச் சென்றதாக ஷெரின் டெனாரன்ஸ் கூறினார். 1992ஆம் ஆண்டு இவருக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்தது. இப்போது 62 வயதாகிறது. கடமை நேரத்தில் சட்டை அணிவதற்கு ஆசிரியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"எனக்கு நியமனம் கிடைத்தபோது, சட்டை அணிந்தே பணிக்குச் செல்வேன் என்று அதிகாரிகளிடம் கூறினேன். காரணம் புடவை (Saree) அணிந்து எனக்குப் பழக்கமில்லை. எனது கோரிக்கையை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்," என்கிறார் ஓய்வுபெற்ற ஆசிரியை ஷெரின்.

சட்டையுடன் கடமைக்குச் சென்றபோது - தனக்கு எதிர்ப்புகள் இருக்கவில்லை என்றும், ஆனால் 'புடவை அணிந்துகொண்டு பணிக்கு வந்தால் நலம்தானே' என சில ஆசிரியர்கள் தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

"சட்டை போட்ட டீச்சர் என்று பாடசாலையில் எனக்கு இன்னொரு பெயர் இருந்தது. அதற்காக நான் வருந்தவில்லை, அதை அவமானமாகவும் கருதவில்லை" என்று கூறும் அவர், புடவைவையை ஒருபோதும் தான் நிராகரிக்கவில்லை என்கிறார்.

எனினும் தமது கலாசார ஆடையான சட்டையை, தன்னுடைய பணிக்காலம் முழுவதும் அணிந்து சென்றவர் என்கிற அடையாளமும் மதிப்பும் ஷெரின் டீச்சருக்கு மட்டக்களப்பு பரங்கியர் மத்தியில் உள்ளது.

இலங்கையில் போர்த்துக்கேய வம்சாவளியினர்
 
படக்குறிப்பு,

ஷெரின் டெனாரன்ஸ் (பணிக் காலத்தில்)

இன்னும் தொடரும் குடும்பப் பெயர்கள்

பரங்கியர்கள் தமது பெயருக்குப் பின்னால் தங்களுடைய குடும்பப் பெயரையும் சேர்த்தே கூறுவர். அவை வித்தியாசமானவை, புழக்கமற்றவை. செலர், அவுட்ஸ்கோன், பாத்லட், ஃபெலிசிற்றா, பல்த்தசார், பம்பெக், ஸ்தொக்வஸ், லப்பான் போன்றவை பயங்கியர்களின் குடும்பப் பெயர்களில் சிலவாகும்.

பரங்கியர் பயன்படுத்தும் போர்த்துகீசிய சொற்கள், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலும் அதே அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்கா்டாக தமிழில் பயன்படுத்தப்படும் குசினி, கக்கூஸ், அலுமாரி போன்றவை போர்த்துகீசிய சொற்கள்.

அதேபோன்று 'ஸ்பிரிதாலய' (வைத்தியசாலை) மற்றும் 'கசாத' (திருமணம்) போன்ற சிங்களச் சொற்களும் போர்த்துகீசிய மொழியில் அதே அர்த்த்தத்தில் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தச்சு, தையல் போன்ற தொழில்களில் பரங்கியர்கள் பிரசித்தமானவர்கள். முன்னர் துப்பாக்கி தயாரிக்கும் தொழிலிலும் பரங்கியர்கள் சிறந்து விளங்கியதாகக் கூறுகின்றார் கொட்பிரி ஜோன்சன். 72 வயதான இவர், இப்போதும் தச்சு தொழிலைச் செய்து வருகின்றார்.

இலங்கையில் போர்த்துக்கேய வம்சாவளியினர்
 
படக்குறிப்பு,

தச்சுத் தொழிலில் போர்த்துகீசிய வம்சாவளியினர்

போர்த்துகீசியர் திருமணச் சடங்குகள்

பரங்கியர்கள் அநேகமாக தமது சமூகத்துக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வார்கள். அதைத் தாண்டி - பரங்கியர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் - வேறு சமூகத்து ஆண்களைத் திருமணம் செய்துகொண்டால், அதன் பிறகு குறித்த பெண்கள் பரங்கியராகக் கருதப்பட மாட்டார்கள்.

அவர்கள் திருமணத்துக்கு முன்னர் பங்கேற்ற பரங்கியர் சமூகத்தின் சடங்குகள் மற்றும் கலாசாரங்கள் போன்றவற்றில் கலந்து கொள்வதற்கு அனுமதி இல்லை.

ஆனால், பரங்கியர் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், வேறு சமூகத்துப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதில் பிரச்னையில்லை. பரங்கி ஆண்கள் திருமணம் முடிக்கும் ஏனைய சமூகத்துப் பெண்களும், பரங்கியராகவே கருதப்படுவர்.

பரங்கியர் திருமணத்தில் 'மாப்பிள்ளைச் சாப்பாடு' என்கிற பாரம்பரியம் விசேஷமானது என்றும், ஆனால் அது தற்போது வழக்கொழிந்து விட்டதாகவும் கூறுகிறார் றொக்ஸ்மன் டிலிமா. இவர் மட்டக்களப்பு 'பரங்கியர் கலாசார ஒன்றியத்தின்' (burgher cultural union) பொறுப்பாளர்களில் ஒருவராகச் செயற்பட்டு வருகின்றார்.

இலங்கையில் போர்த்துக்கேய வம்சாவளியினர்
 
படக்குறிப்பு,

றொக்ஸ்மன் டிலிமா

”திருணம் முடிந்து மறுநாள் 'மாப்பிள்ளை சாப்பாடு' வழங்கப்படும். சாப்பாட்டுக்கான இறைச்சி மற்றும் சமையலுக்கான விறகு ஆகியவற்றை மாப்பிள்ளை தரப்பு வழங்கும்.

சமையலுக்குரிய ஏனைய பொருட்கள் அனைத்தையும் பெண் வீட்டார் வழங்குவார்கள். மாப்பிள்ளை வீட்டார்தான் உணவைச் சமைப்பார்கள்” என்கிறார் றொக்ஸ்மன். பரங்கியர்களின் உணவில் பன்றி இறைச்சி பிரதானமானது.

இவ்வாறு தமது சமூகம் இழந்து வரும் மொழி, கலை மற்றும் கலாசாரங்களைப் பாதுகாக்கும் ஆர்வத்துடன், பரங்கியர் சமூகத்தினுள் இயங்கும் அமைப்புகள் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துகீசிய மொழி, கஃப்றிஞ்ஞா நடனத்திற்கான இசை மற்றும் பைலா ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்கும் வகுப்புகளைத் தமது மட்டக்களப்பு 'பரங்கியர் கலாசார ஒன்றியம்' (burgher cultural union) நடத்தி வருவதாக றொக்ஸ்மன் கூறுகின்றார்.

ஆனாலும் மட்டக்களப்பு பரங்கியர் சமூகம், தமது மொழியை முற்று முழுதாகவே இழந்து விடலாம் என்கிற அச்சமும் கவலையும், அந்த சமூகத்தின் மூத்தோரிடம் நிறையவே உள்ளன.

https://www.bbc.com/tamil/articles/cl5ze744ygyo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.