Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டாபய பதவி விலகி ஒரு வருடம் கடந்த நிலையில்……!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய பதவி விலகி ஒரு வருடம் கடந்த நிலையில்……!

on July 10, 2023

IMG_1853-scaled.jpg?resize=1200%2C550&ss

Photo, SELVARAJA RAJASEGAR

‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி குறித்து ஒரு மீள்பார்வை

இலங்கை வரலாறு முன்னென்றும் கண்டிராத மக்கள் கிளர்ச்சி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவை அதிகாரத்தில் இருந்து விரட்டி நாட்டை விட்டு வெளியேற வைத்து சரியாக ஒரு வருடம் கடந்தோடிவிட்டது.

ஜூலை 9 இலங்கை அரசியலில் மாத்திரமல்ல, தெற்காசிய பிராந்திய அரசியலிலும் கூட  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமாக பதிவாகிவிட்டது எனலாம். எமது பிராந்தியத்தின் வேறு எந்தவொரு நாட்டிலும் ஜனநாயகத் தேர்தல் ஒன்றில் மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட     ஒரு ஆட்சியாளரை அதே மக்கள் கிளர்ச்சிசெய்து பதவியில் இருந்து இறங்கச் செய்ததாக வரலாறு இல்லை.

அரசியல் புரட்சி ஒன்றின் பரிமாணங்களை எடுத்திருந்த ‘அறகலய’ என்று அழைக்கப்படும் அந்த மக்கள் கிளர்ச்சி அதன் முதற்கட்ட வெற்றியை அடைந்த பிறகு படைபலம் கொண்டு அரசாங்கத்தினால் அடக்கியொடுக்கப் பட்டிருந்தாலும், அதன் மூலமான வலுவான  ‘அரசியல் செய்தி’ ஆட்சியதிகார வர்க்கத்தை இன்றும் கலங்கவைத்துக் கொண்டேயிருக்கிறது. மீண்டும் ஒரு மக்கள் கிளர்ச்சி மூளாதிருப்பதை உறுதிசெய்வதற்கு விதம்விதமான கொடூரமான சட்டங்களைக் கொண்டுவருவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இடையறாது கவனம் செலுத்திக் கொண்டிருப்பதில் இருந்து இதை விளங்கிக்கொள்ள முடியும்.

எதிர்ப்புக்களை அடக்குவதில் ஈவிரக்கமற்ற போக்கை கடைப்பிடிக்கக்கூடியவர் என்று பரவலாக நம்பப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரியான ஒரு தலைவரை அரசியல் அதிகார பீடங்களின் வாசல்களுக்கு திரண்டுவந்து பதவியில் இருந்து விரட்டியதன் மூலம் எதிரணி அரசியல் கட்சிகளோ அல்லது சிவில் சமூக அமைப்புக்களோ கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமுடியாத ‘சாதனையை’  இலங்கை மக்கள்  நிகழ்த்திக் காட்டினார்கள்.

சுதந்திர இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சொல்லொணா துன்பங்களை அனுபவித்த மக்கள் ஒரு எல்லைக்கு அப்பால் பொறுத்துக்கொள்ள முடியாமல் வீதிகளில் இறங்கி செய்த கிளர்ச்சி ஆட்சியதிகாரத்தின் வலுவற்ற தன்மையையும் மக்கள் சக்தியின் பலத்தையும் வெளிக்காட்டியது; அதுபோக, ராஜபக்‌ஷ குடும்பத்தின் தணியாத அதிகாரத் தாகத்தையும் நாட்டு மக்களின் வாழ்வு மற்றும் கண்ணியம் மீதான அவர்களின் அலட்சியத்தையும் அம்பலப்படுத்தியது.

தெளிவான அரசியல் தலைமைத்துவமோ அல்லது ஒழுங்கமைப்போ இல்லாமல் ஒரு மக்கள் போராட்டம் ஆட்சியாளர்களை உலுக்கும் அளவுக்கு பிரமாண்டமான சக்தியாக வெளிப்பட்டது என்பது உண்மையில் ஆச்சரியமான ஒன்றுதான்.

ஆனால், ஒரு நான்கு தசாப்த காலப்பகுதிக்குள் ஒரு உள்நாட்டுப் போரையும் இரு ஆயுதக் கிளர்ச்சிகளையும் கண்ட நாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் என்பது ஒன்றும் புதுமையானவையல்ல. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஆட்சியாளர் முன்னரும் ஒரு தடவை போராட்டத்தின் விளைவாக பதவியில் இருந்து இறங்க நிர்ப்பந்திக்கப்பட்டதை நாடு கண்டது.

பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் உணவு மானியங்களில் குறைப்பு செய்ததை அடுத்து 1953 ஆகஸ்ட் 12 இடதுசாரி கட்சிகளின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் போராட்டம் இலங்கையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்கு எதிரான முதலாவது மக்கள் போராட்டமாக அமைந்தது. அதை ஒடுக்குவதற்கு அரசாங்கம் எடுத்த கடுமையான நடவடிக்கைகளில் குறைந்தது பத்துப் பேர் பலியான கொந்தளிப்பான நிலைவரத்துக்கு மத்தியில் அமைச்சரவையே கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்ற பிரிட்டிஷ் கப்பலில் தான் கூடியது.

ஆனால், கடந்த வருடம் கோட்டபாய பதவி விலகியதைப் போன்று டட்லி சேனநாயக்க உடனடியாக பிரதமர் பதவி விலகவில்லை. இரு மாதங்கள் கழித்து அக்டோபரில் தான் பதவி விலகினார். அவருடன் பணியாற்றிய சில உயரதிகாரிகள் பிற்காலத்தில் எழுதிய தங்களது நினைவுக் குறிப்புகளில் அவர் சுகவீனம் காரணமாக பதவி விலகியதாக குறிப்பிட்டிருக்கின்ற போதிலும், ஹர்த்தால் போராட்டத்தின் விளைவாக தோன்றிய அரசியல் நெருக்கடிகளே பதவி விலகலுக்கான உண்மையான காரணம் என்பதில் சந்தேகமில்லை.

ஹர்த்தாலுக்கு இடதுசாரிக் கட்சிகள் தலைமைதாங்கி வழிநடத்தியதைப் போன்று ‘அறகலய’வுக்கு அரசியல் தலைமை எதுவும் இருக்கவில்லை. அதில்தான் அந்தக் கிளர்ச்சியின் தனித்துவம் வெளிப்பட்டது. தன்னியல்பான மக்கள் கிளர்ச்சியின் இறுதிக்கட்டங்களில் தீவிரவாத அரசியல் சக்திகள் ஊடுருவி வன்முறைகளுக்கு வழிவகுத்துவிட்டதாக அதிகார வர்க்கம் குற்றஞ்சாட்டி அடக்குமுறைக்கு நியாயம் கற்பித்த போதிலும், தங்களது வாழ்வை அவலத்துக்குள்ளாக்கிய தவறான ஆட்சிமுறைக்கும் ஊழல் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் குடும்ப அரசியல் ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிரான வெகுஜனங்களின் சீற்றம் இலங்கையை நோக்கி முழு உலகத்தையும் பார்க்கவைத்தது.

‘அறகலய’ மக்கள் கிளர்ச்சியின் குறுகிய வரலாற்றை நான்கு கட்டங்களாக சுருக்கமாக கூறலாம்.

இயற்கைப் பசளை பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கென்று கூறிக்கொண்டு இரசாயன பசளை வகைகள் இறக்குமதிக்கு தடைவிதித்த கோட்டபாயவின் முன்யோசனையற்ற தீர்மானத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் முதலில் நாட்டுப்புறங்களில் எதிர்ப்பியக்கங்களை பல மாதங்களாக  முன்னெடுத்தனர்.

பிறகு பொருளாதார இடர்பாடுகளை தாங்க முடியாமல் சில வாரங்களாக தலைநகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் ஆங்காங்கே சிறிய கவன ஈர்ப்பு எதிர்ப்பியக்கங்களை நடத்திய மக்கள் தினமும் பல மணிநேர மின்வெட்டு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பாவனைப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்று நிலைமை தொடர்ந்து  மோசமடையவே 2022 மார்ச் 31 கொழும்புக்கு வெளியே மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டபாயவின் வீட்டுக்கு வெளியே  திரண்டு ‘கோட்டா வீட்டுக்கு போ’ என்று முழக்கங்களை எழுப்பினார்கள்.

பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்ப்பீரங்கி தாக்குதல்களை நடத்தி அவர்களைக்  கலைத்தார்கள். நிலைவரத்தை கட்டுப்படுத்த இராணுவமும் அழைக்கப்பட்டது.

மக்கள் வீதிகளில் இறங்குவதைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து  அவசரகாலச் சட்டப்  பிரகடனமும் வந்தது. ஆர்ப்பாடடம் செய்தவர்களை  தீவிரவாதிகள் என்று வர்ணித்து அறிக்கை வெளியிட்ட ஜனாதிபதி இலங்கையில் ‘அரபு வசந்தம்’ ஒன்றை முன்னெடுக்க அவர்கள் சதி செய்வதாக குற்றஞ்சாட்டினார்.

ஊரடங்கு சட்டத்தையும் அவசரகாலச் சட்டத்தையும் அலட்சியம் செய்த மக்கள் பெரும் எண்ணிக்கையில் வீதிகளில் இறங்கி ஆட்சியாளர்கள் மீதான தங்கள் ஆவேசத்தை வெளிக்காட்டினார்கள். அடுத்து ஒரு வாரத்தில் காலிமுகத்திடலில் ‘கோட்டா கோ கம’ போராட்டக் கிராமம் அமைக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டு ஜனாதிபதி செயலகத்துக்கு அண்மையாக பேரை வாவிக்கு பக்கத்தில் ‘ஆர்ப்பாட்ட இடம்’ ஒன்றை பிரகடனம் செய்து எதிர்ப்பியக்கங்களை மதிக்கும் ஒருவராக உலகிற்கு தன்னைக் காட்டிக்கொள்ள முயன்ற கோட்டபாய காலிமுகத்திடல் முழுவதையும் முற்றுகை செய்து தனக்கு எதிராக ஒரு போராட்டக் கிராமமே நாளடைவில் உருவாகும் என்று ஒருபோதும் நினைத்திருக்கமாட்டார்.

மக்கள் கிளர்ச்சியின் உலகறிந்த சின்னமாக ‘கோட்டா கோ கம’ மாறியது. அதேபோன்ற கிராமங்கள் வேறு நகரங்களிலும் போராட்டக்காரர்களினால் அமைக்கப்பட்டது. குறிப்பாக காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ ராஜபக்‌ஷ அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான மக்கள் போராட்டத்துக்கு ஒருமைப்பாட்டை வெளிக்காட்டுவதற்கு சமூகத்தின் சகல பிரிவுகளையும் சேர்ந்தவர்களுக்கு ஒரு பரந்த அடையாளபூர்வமான களமாக அமைந்தது.

மூன்று மாத காலமாக இன, மத பேதமின்றி ஆண்கள், பெண்கள், முதியவர்கள், ஊனமுற்றவர்கள், சிறுவர்கள், குழந்தைகளை கையில் ஏந்திய இளம் தாய்மார்கள், கல்விமான்கள், மதத்தலைவர்கள்,  அறிவுஜீவிகள், கலைஞர்கள், அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள் என்று பல தரப்பினரும் ‘கோட்டா கோ கம’வுக்கு படையெடுத்தனர்.

ஏப்ரில் 9ஆம் திகதியில் இருந்து போராட்டங்கள் கடுமையாக தீவிரமடையத் தொடங்கின.  அலரிமாளிகை முன்பாகவும் போராட்டக்காரர்கள்  ‘மைனா கோ கம’வை அமைத்து பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவை பதவி விலகுமாறு கோரினர். ஜனாதிபதி செயலகமும் முற்றுகைக்குள்ளானது.

பிறகு முக்கிய சம்பவங்கள் எல்லாமே ஒரு நாடக பாணியில் 9ஆம் திகதிகளிலேயே நடந்தேறியதை காணக்கூடியதாக இருந்தது.

சரியாக ஒரு மாதம் கழித்து மே 9ஆம் திகதி தனது பெருமளவு ஆதரவாளர்களை  அலரிமாளிகைக்கு வரவழைத்த மஹிந்த ஆவேசமாக உரையாற்றி காலிமுகத்திடலில் முகாமிட்டிருந்த போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு அவர்களைக்  கட்டவிழ்த்துவிட்டார். பொலிஸார் பார்வையாளர்களாக இருந்தனரே தவிர வன்முறையை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

அந்தத் தாக்குலுக்கு பதிலடியாக நாட்டின் பல பாகங்களிலும் வன்முறைகள் மூண்டன.  எழுபதுக்கும் அதிகமான அரசாங்க அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த விலக வேண்டியேற்பட்டது. அலரிமாளிகையை மக்கள் முற்றுகையிட்ட நிலையில் தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஹெலிகொப்டர் மூலம் வெளியேறிய அவர்  திருகோணமலையில் கடற்படை தளத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார்.

அதற்கு பிறகு ஒரு தடவை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராஜபக்‌ஷ சகோதரர்களில் மூத்தவரான சமல் ராஜபக்‌ஷ சகோதரர் மஹிந்த ஜனாதிபதியாக தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவில் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஜூன் மாதம் 9ஆம் திகதி முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார். அன்றைய தினம் செய்தியாளர்கள் மகாநாட்டைக் கூட்டிய அவர் தங்களது தவறான ஆட்சிமுறையின் விளைவாக நாடு வங்குரோத்து நிலையடைந்ததற்காக மக்களிடம் வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக மக்களும் கூட நெருக்கடி நிலைக்குப் பொறுப்பு என்று கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது.

அடுத்து ஜூலை 9 நாடு பூராவுமிருந்து இலட்சக் கணக்கில் மக்கள் தலைநகரில் திரண்டு ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர். இராணுவத்தின் உறுதியான ஆதரவைக் கொண்டவர் என்று நம்பப்பட்ட கோட்டபாய  கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்க முடியாத நிலையில் ஜனாதிபதி மாளிகையின் கொல்லைப்புறமாக வெளியேறி துறைமுகத்தில் கப்பல் ஒன்றில் தங்கியிருந்து பிறகு வெளிநாடு சென்றார்.

முதலில் மாலைதீவுக்கும் சிங்கப்பூருக்கும் பிறகு தாய்லாந்துக்கும் மனைவி சகிதம் சென்ற அவருக்கு எந்த நாடுமே தஞ்சமளிக்க முன்வராத நிலையில் இறுதியில் செப்டெம்பர் முதல் வாரத்தில் நாடு திரும்பி முன்னாள் ஜனாதிபதிக்குரிய அரசாங்க வசதிகளுடன் தற்போது வாழ்ந்துவருகிறார். அடிக்கடி வெளிநாடுகளுக்கும் போய்வருகிறார்.

உலகில் மக்கள் கிளர்ச்சியை அடுத்து நாட்டில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட வேறு எந்த ஆட்சியாளரும் கோட்டபாயவைப் போன்று சுலபமாகவும் விரைவாகவும் நாடு திரும்பக்கூடியதாக இருந்ததாக நாம் அறியவில்லை.

இலங்கையில் முன்னைய எந்த ஜனாதிபதிக்கும் எதிராக மக்கள் கிளர்ச்சி செய்ததில்லை. கோட்டபாயவே பதவிக்காலத்தின் இடைநடுவில் அதிகாரத்தைக் கைவிட நிர்ப்பந்திக்கப்பட்ட முதல் இலங்கை ஜனாதிபதியாவார். நீண்டகாலத்துக்கு தங்களது குடும்ப ஆட்சியை தொடருவதை எவராலும் தடுக்கமுடியாது என்று  நம்பிக்கொண்டிருந்த ராஜபக்‌ஷர்கள் தங்களுக்கு எதிராக சிங்கள மக்கள் இவ்வளவு விரைவாக கிளர்ந்தெழுவார்கள் என்று கனவிலும் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்கள்.

விடுதலை புலிகளை தோற்கடித்து உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்காக சிங்கள மக்கள் என்றென்றைக்கும் தங்களுக்கு கடமைப்பட்டவர்கள் என்று கர்வத்தனமாக கருதிய ராஜபக்‌ஷர்கள் அதனால் ஆட்சியதிகாரம் என்பது ஏதோ தங்களிடம் இருந்து பறிக்கமுடியாத உரித்து என்ற நினைப்பில் தங்களின் முறைகேடான ஆட்சியை மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்று விபரீதமாக நம்பினார்கள்.

சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான பேரினவாத அணிதிரட்டல் என்றென்றைக்கும்  தங்களுக்கு கைகொடுக்கும் என்றும் ராஜபக்‌ஷர்கள் நம்பினார்கள்.

இலங்கை அரசியல் முன்னரும் கூட சில உயர்வர்க்க குடும்பங்களின் ஆதிக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. ஆனால், அந்தக் குடும்பங்களுக்கு எதிராக மக்கள் ஒரு போதும் கிளர்ச்சி செய்ததில்லை. குடும்ப ஆதிக்க அரசியலை ராஜபக்‌ஷர்கள் மிகவும் அருவருக்கத்தக்க மட்டத்துக்குக் கொண்டுசென்றார்கள். ஆனால், மக்கள் கிளர்ச்சியில் இருந்து அவர்கள் பாடம் எதையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. வெளிநாடுகளின் குறிப்பாக மேற்குலக நாடுகளின் சதி முயற்சியின் காரணமாகவே தாங்கள் அதிகாரத்தை இழக்கவேண்டி வந்ததாக  கூறும் அவர்கள் மீணடும் தங்களால் தேர்தல்கள் மூலம் ஆட்சியதிகாரத்துக்கு வரமுடியும் என்று மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் கூறுகிறார்கள்.

தவறான ஆட்சிமுறைக்கும் வங்குரோத்து நிலைக்கு நாட்டைக் கொண்டுவந்த பொருளாதாரக் கொள்கைகளுக்கும் கோட்டபாயவும் அவருக்கு ஆலோசனை கூறியவர்களும் மாத்திரமே  பொறுப்பு என்பது போல அவரின் ஆட்சிக்கால செயற்பாடுகளில் இருந்து தங்களை தூரவிலக்கும் ஒரு தந்திரோபாயத்தை கடைப்பிடிக்க ஏனைய ராஜபக்‌ஷர்கள் முயற்சிப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

ஆனால், கோட்டபாயவை ஒரு ‘அப்பாவி’ போன்று காட்டுவதற்கு அவருக்கு நெருக்கமானவர்கள் முயற்சிக்கிறார்கள்.

ஜூன் 20 கோட்டபாயவின் 74ஆவது பிறந்ததினம். அவரின் அந்தரங்க செயலாளராக இருந்த சுஜீஸ்வர பண்டார என்பவர் அதற்கு இரு நாட்கள் முன்னதாக சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். ‘வரலாற்றினால் தவறிழைக்கப்பட்ட ஒரு ஜனாதிபதி’ என்பது அதன் தலைப்பு.

“பண்டார ஒரு விசித்திரமான சில கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். பதவி விலகிய நேரத்தில் கோட்டபாய மக்கள் செல்வாக்குடன் இருந்தாரா இல்லையா என்பதைத் தேர்தல் ஒன்றின் மூலம் மாத்திரமே அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்திருக்கும். அத்தகைய ஒரு தேர்தல் இல்லாத நிலையில் தீய நோக்குடைய நிகழ்ச்சி நிரலைக் கொண்டவர்கள் வெற்றிபெற்றுவிட்டார்கள்.

“முன்னாள் ஜனாதிபதியின் கோட்பாடுகளையும் கொள்கைகளையும் அறியாதவர்கள் குடும்பத்தவர்களுடன் சேர்த்து அவரையும் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆளுமையைப் பொறுத்தவரையிலும் கூட அவர் ஏனைய சகோதரர்களையும் விட வித்தியாசமானவர். அவர் பதவியேற்றபோது நாட்டின் பொருளாதாரம் ஏற்கெனவே வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தது. கொவிட் – 19 பெருந்தொற்று நோயே வீழ்ச்சியை விரைவுபடுத்தியது.

“உண்மை ஒரு நாள் வெளிச்சத்துக்கு வந்து தவறான குற்றச்சாட்டுக்கள் சகலவற்றில் இருந்தும் முன்னாள் ஜனாதிபதியை விடுவிக்கும் என்று அவருடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றியவன் என்ற முறையில் நான் உறுதியாக நம்புகிறேன் ” என்று பண்டார எழுதியிருக்கிறார்.

கடந்த வருடம் ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது அவர்களை சுடுவதற்கு உத்தரவைத் தருமாறு இராணுவ அதிகாரிகள் கோட்டபாயவை கேட்டதாகவும் அதனால் அமைதியிழந்த அவர், “உங்களுக்கு என்ன பைத்தியமா? இந்த மக்கள்தான் எனக்கு வாக்களித்து அதிகாரத்துக்குக் கொண்டுவந்தவர்கள். அவர்களை எவ்வாறு சுட முடியும்?” என்று அவர்களைப் பார்த்து திருப்பிக் கேட்டதாகவும் பண்டார கூறுகிறார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள்  தன்னை பதவி விலகுமாறு கோரியபோது 69 இலட்சம் வாக்குகள் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவான தான் எதற்காக சொற்ப எண்ணிக்கையானவர்களின் வற்புறுத்தலுக்காக பதவி விலகவேண்டும் என்று கேட்டவர் இந்த கோட்டபாய. ஆனால், இறுதியில் கிளர்ச்சியில் இறங்கியவர்கள் தன்னை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்த மக்களே என்பதை ஒத்துக்கொள்கின்ற அளவுக்காவது அவரிடம் ஒருவித ‘நேர்மை’ இருந்திருக்கிறது.

வரலாற்றினால் தவறிழைக்கப்பட்டவரா கோட்டபாய அல்லது வரலாறு தந்த வாய்ப்பை பயன்படுத்துவதற்கு பரிதாபகரமான முறையில் தவறியவரா கோட்டபாய என்பதே முக்கியமான கேள்வி.

Thanabalasingam-e1660548844481.jpeg?resiவீரகத்தி தனபாலசிங்கம்
 

 

https://maatram.org/?p=10936

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.