Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாருக்கு வெற்றி – யாருக்கு தோல்வி ? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு வெற்றி – யாருக்கு தோல்வி ?

யதீந்திரா

கடந்த மாதம் 29ம் திகதி, இந்தியாவின் கடற்படைக் கப்பல் ஜ.என்.எஸ் கஞ்சர் (Khanjar)  திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, குக்குரி வகுப்பு (Khukri-class) ஏவுகணை பொருத்தப்பட்ட கப்பல். அன்று மாலை ஒரு வரவேற்பு விருந்துபசாரமும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பங்குகொள்வதற்கான வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. யூலை – 29ம் திகதி, இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட திகதி. இவ்வாறானதொரு திகதியில், இந்திய கடற்படைக் கப்பலின் வருகை தற்செயலானதுதான் ஆனால் முக்கியத்துவம் மிக்கது.

spacer.png

1990ம் ஆண்டு, மார்ச் மாதம் 24ம் திகதி, ஜ.என்.எஸ் துருப்புக்காவி கப்பல், மகர் (INS troop ship Magar) இணைந் வடக்கு கிழக்கு மாகாண சபைக்காக செயற்பட்டவர்களையும் உள்ளடக்கியவாறு, இந்திய அமைதிப்படையின் கடைசித் துருப்புக்களுடன், திருகோணமலை துறைமுகத்திலிருந்து வெளியேறியது. அத்துடன் வடக்கு கிழக்கில், நிலைகொண்டிருந்த, 50000 இந்திய அமைதிப் படையின் 32 மாதகால சகாப்தம் முடிவுற்றது. குறித்த கப்பலை, தமிழ் நாட்டு துறைமுகத்தில் நிறுத்துவதற்கு, அப்போதைய தமிழ் நாட்டு முதலமைச்சர் கருணாநிதி அனுமதிக்கவில்லை. மார்ச் மாதத்தில், வடகிழக்கு மாகாண சபையை கலைத்த, அண்ணாமலை வரதராஜப் பெருமாள், தனிநாட்டுக்கான பிரகடணம் ஒன்றை முன்வைத்திருந்தார். இதனை காரணம் காண்பித்தே, கருணாநிதி, தமிழ் தேசிய இராணுவத்தின் உறுப்பினர்கள், தமிழ் நாட்டுக்கள் நுழைவதற்கான அனுமதியை மறுத்தார். இதனைத் தொடர்ந்து, கேரள துறைமுகத்திலும் குறித்த கப்பல், அனுமதிக்கப்படவில்லை. இறுதியாக. ஓடிசா, விசாக பட்டணத்தில்தான் குறித்த கப்பல் நங்கூரமிடப்பட்டது. கடந்த மாதம் யூலை29 இல், திருகோணமலை துறைமுகத்தில் தரித்துநின்ற ஜ.என்.எஸ் கஞ்சர், விசாகபட்டணத்திலிருந்தே அதன் பயணத்தை ஆரம்பித்திருந்தது.

spacer.png

விடுதலைப் புலிகள் அமைப்பு, பிரேமதாச அரசாங்கத்துடன் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டதை தொடர்ந்தே, இந்திய படைகள் வடக்கு கிழக்கிலிருந்து முற்றிலுமாக வெளியேற்றப்பட்டது. இந்தியா, வடக்கு கிழக்கில் அதன் செல்வாக்கை இழந்துவிட்டதாக, முக்கியமாக, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தை இழந்துவிட்டதாக, அப்போது, நியூயோக்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரையொன்று வெளியானது. 2023, யூலை, 29ம் திகதி, இந்திய கடற்படை கப்பலின் நிகழ்வில் மகழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கும் போது, எனக்கு இந்த விடயங்களே நினைவுக்கு வந்தது. இதனை கப்பலின் கேப்டனிடம் தெரிவித்தேன். இதெல்லாம் உங்களைப் போன்ற புத்திஜீவிகளுக்கான விடயமென்று கூறி, சிரித்துக் கொண்டார்.

spacer.png

இலங்கை விடயத்தில் இந்தியாவின் நேரடியான தலையீடு தோல்வியடைந்தது. அன்றைய சூழலில், இது தொடர்பில் இந்தியா கடும் அதிருப்தியுற்றது. குறிப்பாக பிரேமதாச மீது அவர்களுக்கு கோபம் இருந்தாலும் கூட, இந்திய படைகளுடன் விடுதலைப் புலிகள் மோதியமை, இந்தியாவின் வெளியேற்றத்திற்காக பிரேமதாசவுடன் இணைந்து கொண்ட விடயங்களே, இந்தியாவை பொறுத்தவரையில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, இலங்கையின் உள்நாட்டு அரசியல் பிரச்சினையில் தலையீடு செய்வதிலிருந்து இந்தியா விலகிக்கொண்டது. இந்தியா விலகியிருக்க வேண்டுமென்பதே விடுதலைப் புலிகள் அமைப்பின் விருப்பமாகவும் இருந்தது.

இந்தியா விலகிய பின்னரான 30 வருட காலப்பகுதியில் இலங்கையில் பல்வேறு விடயங்கள் இடம்பெற்றுவிட்டன. ஆனால் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை காணும் விடயத்தில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தாண்டி இரண்டு தரப்புக்களாலுமே நகர முடியவில்லை. இது எங்களின் உள் விவகாரம், நாங்கள் இதனை பார்த்துக் கொள்கின்றோமென்று கூறித்தான், இந்திய படைகள் வெளியேற்றப்பட்டன. ஆனால் இந்தியா இல்லாமல் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியுமென்று கூறியவர்களால் ஒரு அடி கூட முன்னோக்கி நகர முடியவில்லை. இந்தியா இல்லாமல், தனிநாடு ஒன்றை காண முடியுமென்று கூறித்தான், விடுதலைப் புலிகள் அமைப்பு, தனி வழியில் சென்றது. ஏராளமான உயிர் தியாகங்களையும் செய்தது. பெருந் தொகையான மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இப்போது, 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியாவின் தலையீட்டை தமிழ் கட்சிகள் கோருகின்றன. எங்களுடைய பிரச்சினையை நாங்களே பேசித் தீர்த்துக் கொள்வோமென்று கூறிய சிங்கள தரப்புக்களாலும், இனப்பிரச்சினைக்கான தீர்வை காண முடியவில்லை. இந்தியா எங்களுக்குத் தேவையில்லை, வெளியேறு – என்று கூறிய தமிழர்களாலும் வெற்றிபெற முடியவில்லை. இப்போது தோல்வியடைந்திருப்பது யார்?

சந்தர்ப்பங்களை தவறி விட்டால், அது எவ்வாறான நிலைமையை ஏற்படுத்தும், ஒரு இனத்தை எந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதற்கு ஈழத் தமிழினம் ஒரு வாழும் சாட்சி. ஈழத் தமிழரின் இந்த நிலைக்கு யார் காரணமென்று கேட்டால், இந்தியாவை நோக்கி, அமெரிக்காவை நோக்கி விரல் நீட்டுவதற்கு, நம் மத்தியில் இப்போதும் பலருண்டு. ஆனால் இந்தியாவும் அமெரிக்காவும் முன்னர் எவ்வாறு சிந்தித்தனரோ, அவ்வாறுதான் இப்போதும் சிந்திக்கின்றனர். அவர்கள் எப்போதும் அப்படித்தான் இருப்பார்கள். பலம்பொருந்திய நாடுகளை வழிநடத்துவது அவர்களின் நலன்கள் மட்டுமேயாகும். அவர்களது நலன்களுக்குள் நமது நலன்களை தேடுவதில் வெற்றிபெற முடிந்தால், அதுவே ஈழத் தமிழனத்தின் வெற்றியாக இருக்கும் ஆனால், அவ்வாறானதொரு வெற்றியை நம்மால் பெற முடியவில்லை. வெற்றிக்கான வாய்ப்புக்களை நாங்கள் தவறவிட்டுவிட்டோம். இப்போது இருப்பதை பாதுகாத்துக் கொண்டு, வாய்ப்புகளுக்காக காத்திருப்பதை மட்டுமே ஈழத் தமிழர் தலைமைகள் என்போர் செய்ய முடியும்.

இந்தியா தொடர்பில் ஈழத் தமிழ்ச் சூழலில் போதிய புரிதல் இருந்திருக்கவில்லை. இது சர்வதேச அரசியலை புரிந்துகொள்வதிலுள்ள பலவீனத்தின் விளைவு. இந்தியாவை எட்ட வைக்க வேண்டும், இந்தியா இல்லாமல் விடயங்களை கையாள முடியுமென்னும் சிந்தனையானது, இந்த அரசியல் புரிதலிலுள்ள, பலவீனத்தின் விளைவுதான். ஆரம்ப காலத்தில் இந்த விடயத்தில் போதிய புரிதல் இல்லாமலிருந்ததை மன்னிக்கலாம். ஆனால் ஒரு கட்டத்திற்கு பின்னர் அவ்வாறான புரிதல் ஏற்படாமல் போனதுதான் தவறானது.

spacer.png

இந்தியா எக்காலத்திலும் தவிர்க்க முடியாத ஒரு சக்தி. இது நமது விருப்பு வெறுப்புக்கள் தொடர்பான விடயமல்ல. சர்வதேச அரசியலை விருப்பு வெறுப்புக்களிலிருந்து நோக்கினால் நம்மால் ஒரு போதுமே விடயங்களை புரிந்துகொள்ள முடியாமல் போகும். இது தொடர்பில் எனது முன்னைய பத்திகளிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். அதே போன்று, நீதி, அநீதி, தர்மம் என்னும் சொற்கள் கொண்டும் சர்வதேச அரசியலை உற்று நோக்கக் கூடாது. அவ்வாறு நோக்கினாலும் நாம் விடயத்தை தவறவிட்டு விடுவோம். ஒரு காலத்தில், தமிழ் இயக்கங்களின் மத்தியில், உலகெங்கும் ஒடுக்கப்பட்ட சக்திகளோடு நாங்கள் தொடர்புகளை பேணிக்கொள்ள வேண்டும், அவர்களின் ஆதரவை திரட்டிக் கொள்ள வேண்டுமென்னும் பார்வை மேலோங்கியிருந்தது. தங்களை ஒரு புரட்சிகர சக்தியாக எண்ணிக் கொண்டன் விளைவாகவே, இவ்வாறான பார்வையை பலரும் வரித்துக் கொண்டனர். ஆனால் இதற்கு மாறாக அரசுகளுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் சிந்தித்திருந்தால், அது, நமக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு வாய்ப்பாக இருந்திருக்கும்.

இந்தியாவுடனான தொடர்பு, இயக்கங்களுக்கு அவ்வாறான அங்கீகாரத்தையே வழங்கியது. திம்பு பேச்சுவார்த்தையின் மூலம், இயக்கங்களின் அதுவரையான ஆயுத நடவடிக்கைகள் அனைத்துக்கும் அரசியல் பெறுமதி கிடைத்தது. இந்தியாவின் தலையீட்டினால்தான் அந்த வாய்ப்பு கிடைத்தது. அதன் நீட்சிதான் இந்திய-இலங்கை ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தை பயன்படுத்துவதன் மூலம் மட்டும்தான், தமிழர் அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியுமென்னும் நிலைமையே அன்றிருந்தது. ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் அதனை எதிர்ப்பதன் மூலம், அடுத்த கட்டத்தை நகர்த்த முடியுமென்று நம்பியது. இந்தியாவை விரோதித்துக் கொள்வதன் ஊடாக, அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியுமென்று நம்பியது. அதற்காக செயற்பட்டது. அதன் விளைவு, இப்போது தமிழர்களை ஒரு இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. இந்த இடத்திலிருந்து எங்கு செல்வது – செல்ல முடியுமா என்னும் கேள்வியுடன்தான், கடந்த 14 வருடங்களாக, மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றோம்.

விடயங்களை திரும்பிப் பார்த்தால் ஒரு படிப்பினை நமக்கு முன்னாலிருக்கின்றது. சில விடயங்களை ஏற்றுக்கொண்டு செல்ல மறுக்கின்ற சந்தர்பங்களில், நாங்கள் மேலும் மோசமான பின்னடைவுகளை சந்தித்திருக்கின்றோம். 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு, மாகாண சபையில் பங்குகொள்ளும் முடிவை அனைவருமாக எடுத்திருந்தால், அதிலிருந்து முன்னோக்கி பயணித்திருக்கலாம். இங்கு விடயம் எவ்வளவு அதிகாரங்கள் கிடைக்கின்றன என்பதல்ல முக்கியம், முன்னோக்கி செல்வதற்கு நமக்கு எந்தளவு வாய்ப்புண்டு என்பதை மட்டுமே நோக்க வேண்டும். இந்த இடத்தில் இணங்கிச செல்ல மறுத்ததால், அரசியல் சூழ்நிலை முற்றிலும் மாற்றமடைந்தது. நண்பராக இருந்த ஒரு பிராந்திய சக்தி நம்மிலிருந்து விலகிச் சென்றது. இந்தியாவின் பார்வையில், ஈழத் தமிழர் நம்பிக்கைக்குரிய தரப்பல்ல என்னும் நிலைமை உருவாகியது. அவ்வாறு இந்தியா கருதினால், அது தவறான பார்வையல்ல. ஏனெனில் அவ்வாறான சம்பவங்களே நடந்திருக்கின்றன.

இரண்டாவது, சந்தர்ப்பம், ஒஸ்லோ பேச்சுவார்த்தை. அப்போதும் தனிநாட்டுக்கான மாற்றுத் தீர்வொன்றை சர்வதேச அரங்கில் முன்வைப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை விடுதலைப் புலிகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்தக் காலத்தில், தென்னாபிரிக்க ராஜதந்திரி, தற்போது தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக இருக்கும் சிறில் ரமபோசா, ஒரு தனிப்பட்ட கலந்துரையாடலில், இப்படிக் கூறினாராம். எங்களுடைய அனுபவத்தில் உங்களுக்கு ஒன்றை சொல்வேன். இப்போது கிடைத்திருக்கும் இந்த சந்தர்பத்ததை பயன்படுத்திக் கொண்டு ஏதாவது, ஒரு தீர்வுக்கு நீங்கள் செல்லவில்லையென்றால், இந்த யுத்தத்தில் நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள், நீங்கள் 40 வருடத்திற்கு பின்நோக்கிச் செல்வீர்கள். இறுதியில் அதுதான் நடந்திருக்கின்றது. 36 வருடங்களுக்கு முன்னரான இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற, 13வது திருத்தச்சட்டத்தை நோக்கி, அதனையாவது, பாதுகாக்க முடியுமா என்னும் கேள்வியுடன் எங்களுடைய அரசியல் நாட்கள் நகர்கின்றன. அதற்கும் இந்தியாவின் ஆதரவில்லாமல் சாத்தியமில்லையென்னும் நிலையில்தான் நாமிருக்கின்றோம்.

இன்றுள்ள, இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. ஜெயசங்கர், இந்திய – இலங்கை ஒப்பந்த காலத்தில், கொழும்பிலுள்ள, இந்தியத் தூதரகத்தில், அரசியல் செயலராக கடையாற்றிக் கொண்டிருந்தார். விடுதலைப் புலிகளின் எதிர்ப்பை தொடர்ந்து, மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு அனைவரும் தயங்கிய போது, அவர் நேரடியாகவே சிலரிடம் பேசியதாகக் கூட தகவலுண்டு. இந்த சந்தர்ப்பத்ததை பயன்படுத்துங்கள். தவறவிடாதிர்களென்று அவர் கூறியிருக்கின்றார். இன்று காலம் எவ்வாறு நகர்ந்திருக்கின்றது? இன்று அவரிடம் சென்று, 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு உதவுங்கள், மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று நாம் கோருகின்றோம். இது எதனை உணர்த்துகின்றது? அன்று சந்தர்பம் நமது காலடியில் கவனிப்பாரற்று கிடந்தது. இன்றோ, பயன்படுத்தத் தவறியதை, மீண்டும் பயன்படுத்துவதற்கு வாய்பொன்றை தருமாறு இரந்து நிற்கின்றோம்? நாங்கள், எங்களை அரசியல் தெரிந்த சமூகமென்று கூறிக்கொள்ள முடியுமா? எங்கள் இதுவரையான பெருமைகளுக்கு ஏதாவது அர்த்தமுண்டா?

1990இல் இறுதி துருப்புக் காவிக் கப்பலில் வெளியேறிதன் மூலம், இந்தியா எதனையும் இழக்கவில்லை. 36 வருடங்களுக்கு பின்னர், அன்றை ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருகோணமலை மீதான அதன் செல்வாக்கை மீளவும் உறுதிப்படுத்துகின்றது. தென்னிந்தியாவிற்கும் – திருகோணமலைக்கும் இடையில் எண்ணை குழாய்களை பொருத்துவது பற்றி ஆலோசிக்கப்படுகின்றது. இந்தியா மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துiமுகத்தின் மீதான அதன் செல்வாக்கை இழக்கவில்லை. இழக்கவும் மாட்டாது. இழந்ததெல்லாம் ஈழத் தமிழர்கள் மட்டும்தான். இந்திய – இலங்கை ஒப்பந்த காலத்தில், திருகோணமலையின் பெரும்பாண்மை சமூகமாக தமிழர்கள் இருந்தனர். திருகோணமலை தலைமையாகக் கொண்டு வடக்கு கிழக்கு மாகாண சபையின் தலைமைக் காரியாலயம் இயங்கியது. அனைத்தும் தமிழரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது எதுமில்லை. இப்போது யாருக்கு வெற்றி – யாருக்கு தோல்வி?
 

 

http://www.samakalam.com/யாருக்கு-வெற்றி-யாருக்/

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அன்று சந்தர்பம் நமது காலடியில் கவனிப்பாரற்று கிடந்தது. இன்றோ, பயன்படுத்தத் தவறியதை, மீண்டும் பயன்படுத்துவதற்கு வாய்பொன்றை தருமாறு இரந்து நிற்கின்றோம்? நாங்கள், எங்களை அரசியல் தெரிந்த சமூகமென்று கூறிக்கொள்ள முடியுமா? எங்கள் இதுவரையான பெருமைகளுக்கு ஏதாவது அர்த்தமுண்டா?

இந்த கட்டுரையில் highlight செய்யப்படவேண்டிய ஒவ்வொருவர் மனதையும் உறுத்தும் முக்கிய விடயம்.  ஜதார்த்தத்தை புறந்தள்ளி மாயைக்குள்ளேயே வாழ ஆசைப்படும் விசித்திர மனிதக்கூட்டம் நாங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, island said:

இந்த கட்டுரையில் highlight செய்யப்படவேண்டிய ஒவ்வொருவர் மனதையும் உறுத்தும் முக்கிய விடயம்.  ஜதார்த்தத்தை புறந்தள்ளி மாயைக்குள்ளேயே வாழ ஆசைப்படும் விசித்திர மனிதக்கூட்டம் நாங்கள். 

தமிழ் மக்கள் அனைவரும் இந்தியாவுக்கு எதிரானவர்களாகக் கட்டுரயாளர் சித்தரிக்கிறார். தவிர இல்லாத புலிகளுக்குமேல் பழிபோட்டு இப்போதிருக்கும் அரசியல் தலைமைகளைத் தப்பிக்கவிடுகிறார். முதலில் ஒன்றைக் கட்டுரையாளரும் அவரது கட்டுரைக்கு உச்சுக்கொட்டுபவர்களும் கவனிக்கவேண்டும்.

இந்தியா இப்போதும் புலிக்காச்சல் பிடித்து அப்பப்போ உளறிக்கொண்டு இருக்குது.

வெறும் போதை வஸ்துக்கூட்டத்தையும் கஞ்சாக் கூட்டத்தையும்  புலி எனப் பிரகடனப்படுத்துகிறது. 

இதில் என்ன வேடிக்கை எனில் இந்திய ஊடகத்துறைக்கு இந்த விசையம் தெரியும் வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இலங்கையிலுள்ள ஊடகங்களுக்கும் இது தெரியும் ஆனால் அவர்களுக்கும் காசு பார்க்கவேணுமே பத்திரிகையை அச்சுறுத்தல் இல்லாது நடாத்தவேண்டுமே அதுக்காக செய்தி எனும் பெயரில் இவைகளை வெளியிடுகின்றது. 

இலங்கையிலும் இந்தியாவிலும் ஊடகம் நடாத்துவது யாழ்ப்பாண மல்லிகை பதிப்பிபாளர் திரு டொமினிக் ஜீவா இல்லை தனது மாதந்தச் சஞ்சிகையை அச்செடுத்து கடை கடையாக ஏறி இறங்கி அதை வித்துக் காசு வாங்கி அடுத்த பதிப்புக்கான வேலையைத் தொடங்குவதற்கு.

எனது வாழ்நாளில் நான் நேரே கண்ட ஒரு எழுத்துலக ஜாம்பவானை ஆரம்பகாலத்தில் அடையாளம் காணாது விட்டதையிட்டு நான் மனம் வருந்தியதுண்டு ஆனால் அவரை நான் அணுக எண்ணியபோது காலம் என்னை விடவில்லை.

மேலே இணைத்துள்ள கட்டுரையை எழுதியவர் டொமினிக் ஜீவாவைப் போல சாமானியர் இல்லை ஒரு போர்க்கப்பலில் இரவு விருந்தைச் சுவைப்பதற்கான தொடர்புகள் அனைத்தையும் கொண்டுள்ளவர். 

அவரிடம் ஒன்றைக் கேட்டுக்கொள்கிறேன் தமிழ் நாட்டில் புலிகள் தம்மை மீளமைக்க போதை வஸ்து கடத்துகிறார்கள் அந்தக்கசில ஆயுதம் வாங்க முயற்சிக்கிறார்கள் எனப் புலுடாக்கதைகளை விடவேண்டாம் இன்னுமொரு பக்கம் தலைவரது மனைவி பிள்ளை இருக்கிறார்கள் வருகிறார்கள் என பம்மாத்து விடவேண்டாம் அப்படிச்சொல்லும் காசியர் நெடுமாறன் கேணல் கரிகரன் ஆகியோரை பிடித்து உள்ளுக்கை போட்டு விசாரியுங்கோ காரணம் ராஜீவ் காந்தியின் கொலை விசாரணை இன்னமும் முடிக்கப்படாது கிடப்பில கிடக்குது அவர்களுக்குத் தெரிந்த வ்சையத்தை விசாரியுங்கோ.

ஆனால் வடக்குக் கிழக்கை இந்தியா தமது இன்னுமொரு மாநிலமாகப் பிரகடனப்படுத்தினால் சிங்களத்தின் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் தமிழர் தரப்பு மறுப்பேதும் சொல்லாது எனச் சொல்லச்சொல்லுங்கோ.

சும்மா அங்க புலி வருகுது புண்ணாக்கு வருகுது என் இல்லாத புலிகளை அரவழையாதையுங்கோ என அனைத்துத் தமிழர் தரப்பின் சார்பாகவும் கேட்டுக்கொள்ளுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.