Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் நாலு வீடியோ ஏற்படுத்திய அதிர்வுகள்? நிலாந்தன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“சனல்-4” குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு !!

சனல் நாலு வீடியோ ஏற்படுத்திய அதிர்வுகள்? நிலாந்தன்.

“போர் தொடர்பில் நான் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன்.போர் என்பது கூட்டு முயற்சியாகும்.. போரை ஜெனரல் ஒருவரால் செய்ய முடியாது. கூட்டு முயற்சியின் அவசியத்தை கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை நான் எனது கட்டுரைகளில் சுட்டிக் காட்டி இருந்தேன். ராணுவத்தால் மட்டும் போர் செய்ய முடியாது. கடற்படை இருக்க வேண்டும். வான்படை இருக்க வேண்டும். நமக்கு சிவில் பாதுகாப்பு படை இருந்தது. போலீசாரின் ஒத்துழைப்புக் கிடைத்தது. சிறந்த அரசியல் தலைமைத்துவம் இருக்க வேண்டும். பிக்குகள் எம்மை தைரியப்படுத்தினர். வைத்தியர்கள் தாதிமார் சிகிச்சை அளித்தனர். மக்கள் வரி செலுத்தினர். தமது பிள்ளைகளை நாட்டுக்காக வழங்கினர். அமெரிக்கா நமக்கு தொழில் நுட்ப உதவிகளை வழங்கியது. சீனா மற்றும் பாகிஸ்தான் ஆயுதங்களை வழங்கின. இந்தியா புலனாய்வுத் தகவல்கள் உட்பட சிற்றில உதவிகளை வழங்கியது. அதேபோல இப்போதுள்ள ஜனாதிபதி புலிகள் அமைப்பிலிருந்து கருணாவை பிரித்து எடுத்து அந்த அமைப்பை பலவீனப்படுத்தினார். இதுதான் கூட்டு முயற்சி. ஒசாமா பின் லேடன்கூட உதவினார் என்றே சொல்ல வேண்டும். அவர் அமெரிக்காவின் மீது தாக்குதல் நடத்தியதால் பயங்கரவாதம் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு மாறியது. நிதி முடக்கம் உட்பட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. போர் வெற்றி எனப்படுவது தனி நபருக்கு உரியது அல்ல. அது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி”…..

இவ்வாறு தெரிவித்திருப்பவர் இலங்கை ராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா. 2010ல் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக இருந்தவர்.கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்

அண்மையில் சனல் நாலு வெளியிட்ட வீடியோ தொடர்பில் முன்னாள் படை தளபதியும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிய சரத் பொன்சேகா தெரிவித்த ஒரு கருத்துக்கு எதிராகவே மேற்படி நேர்காணல் வழங்கப்பட்டிருக்கிறது. ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கும் பொனிபஸ் பெரேராவுக்கும் இடையே தொடர்புகள் இருப்பதாக சரத் பொன்சேகா குற்றச்சாட்டியிருக்கிறார். குற்றச்சாட்டை நிராகரித்து பொனிபஸ் பெரேரா மேற்கண்ட நேர்காணலை வழங்கியிருக்கிறார்.

அவர் இலங்கை அரச நோக்கு நிலையில் இருந்து அவ்வாறு கூறுகிறார். ஆனால் அதில் அவர் கூறுவதில் ஓரளவுக்கு உண்மை உண்டு. போர் வெற்றி தொடர்பாகவும் பிராந்திய மற்றும் அனைத்துலக அளவில் தமக்கு கிடைத்த உதவிகள் தொடர்பாகவும் அவர் கூறுவதில் இருந்து தமிழ் மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

முதலாவதாக, அவர் கூறுவது போல, போர் ஒரு கூட்டு முயற்சி. அதில் கிடைக்கும் வெற்றியும் அந்த கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான்.அதில் கிடைக்கும் தோல்வியும் கூட்டு முயற்சி இல்லாததால் கிடைத்த ஒன்றுதான்.

இறுதிக்கட்டப் போரில் வன்னி கிழக்கில், ஒரு சிறிய நிலத் துண்டில் ஆயிரக்கணக்கான மக்கள் சுற்றி வளைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. ஐநா கப்பல் அனுப்பும்; புலம்பெயர்ந்த தமிழர்கள் வணங்கா மண் கப்பலை அனுப்புவார்கள்…. என்றெல்லாம் வதந்திகள் பரவின. ஆனால் வணங்காமண்ணும் வரவில்லை ஐநாவும் வரவில்லை. இறுதியாக கைகளை உயரத் தூக்கிபடி சரணடைவதைத் தவிர வேறு தெரிவு சாதாரண ஜனங்களுக்கு இருக்கவில்லை.

தமிழ் மக்களிடம் மிகப் பலமான ஒரு புலம்பெயர்ந்த சமூகம் உண்டு. உலகின் மிக இளைய, ஆனால் மிகக் கவர்ச்சியான, மிகத் தாக்கமான, சக்தி மிக்க, துடிப்பான, நிதிப் பலம் மிக்க ஒரு புலம்பெயர்ந்த சமூகமாக அது பார்க்கப்படுகிறது.

பிராந்தியத்தில் பாக்கு நீரிணைக்கு அப்பால் சுமார் எட்டு கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள். ஈழத் தமிழர்களுக்காக அவர்களின் 19 பேர் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள்.

இவ்வாறு நிதிப்பலம் மிக்க ஒரு புலம்பெயர்ந்த சமூகமும் எண்ணிக்கையால் பெரிய தமிழகமும் இடுக்கத்தக்கதாக ஈழத் தமிழர்கள் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டார்கள்?

அதிலும் குறிப்பாக மேஜை ஜெனரல் பொனிபஸ் பெரேரா கூறுவது போல பிராந்தியத்தில் ஒன்றுக்கொன்று எதிராகக் காணப்படும் சீனா- இந்தியா- அமெரிக்கா- பாகிஸ்தான் ஆகிய வெவ்வேறு நாடுகள் எவ்வாறு இலங்கைக்கு உதவி புரியும் ஒரு நிலைமை தோன்றியது? அல்லது அதனை மறுவளமாகக் கேட்டால், தங்களுக்கிடையே பிராந்தியத்திலும் உலக அளவிலும் முரண்படும் மேற்படி நாடுகள் எப்படி தமிழ் மக்களுக்கு எதிராக ஒரே கோட்டில் வந்து நின்றன? பிராந்தியத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒத்து வராது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் ஒத்து வராது. உலக அளவில் சீனாவின் எழுச்சியை அமெரிக்கா ரசிக்கவில்லை. இவ்வாறாக பிராந்திய அளவிலும் உலக அளவிலும் ஒன்றுக்கு ஒன்று நட்பாக இல்லாத நாடுகள் அனைத்தையும் தமிழ் மக்களுக்கு எதிராக ஒன்று திரட்ட எப்படி இலங்கை அரசாங்கத்தால் முடிந்தது?

இந்தக் கேள்விகளுக்கு தமிழ் மக்கள் விடை காண வேண்டும்.தமிழ் மக்கள் எங்கே தோற்றார்கள்? எப்படித் தோற்கடிக்கப்பட்டார்கள்?

மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா கூறுவது போல செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின் ஆயுதப் போராட்டங்களுக்கு எதிரான அனைத்து உலகச் சூழல் ஒன்று உருவாகியது என்பது உண்மை. அவ்வாறு மாறிய ஓர் அனைத்து உலகச் சூழலை அரசுடைய தரப்பாகிய சிங்கள மக்கள் கெட்டித்தனமாகக் கையாண்டார்கள். ஆனால் அரசற்ற தரப்பாகிய ஈழத் தமிழர்கள் ஏன் கையாள முடியவில்லை?

இக்கேள்விகள் 2009க்கு பின்னிருந்து தல தடவைகள் கேட்கப்படுகின்றன. ஆனால் இக்கேள்விகளுக்கு உரிய விடைகளைக் கற்றுக் கொள்வதில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் ஆர்வமாக இருக்கிறார்களா?

இக் கேள்விகளை எழுப்பக் காரணமாக உள்ள பொனிபஸ் பெரேராவின் நேர்காணலானது அண்மையில் வெளியிடப்பட்ட சனல் நாலு வீடியோவின் விளைவு ஆகும். அந்த வீடியோ மேற்கத்திய நாடுகளின் நலன்களைப் பிரதிபலிப்பது. ராஜபக்சக்களை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கும் உள்நோக்கமுடையது.

அந்த வீடியோவின் விளைவாக இலங்கை அரசுக் கட்டமைப்பைச் சேர்ந்த போரில் சம்பந்தப்பட்ட வெவ்வேறு தரப்புக்களும் நபர்களும் ஒருவர் மற்றவருக்கு எதிராக தெரிவிக்கும் கருத்துக்களை தென்னிலங்கை ஊடகங்களில் காண முடிகிறது. அவ்வாறு சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்கு எதிராகவே பொனிபஸ் பெரேரா மேற்கண்ட நேர்காணலை வழங்கியுள்ளார். அவ்வீடியோவானது போரில் வெற்றி பெற்ற தரப்பைத் தங்களுக்கு இடையே மோத விட்டிருக்கிறது. ஆனால் அந்த மோதலின் விளைவாக தமிழ் மக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய சில விடயங்கள் வெளிப்படுகின்றன.

பொனிபஸ் பெரேரா கூறும் கூட்டு முயற்சிக்கும் அவர் கூறாமல் விட்ட சில தரப்புக்களும் உண்டு. ஐநா போன்ற உலகப் பொது நிறுவனங்களுக்கும் இதில் கூட்டுப் பொறுப்பு உண்டு.இறுதிக்கட்டப் போரில் சில நாடுகள் நேரடியாக தலையிட்டன.சில நாடுகள் மறைமுகமாகத் தளியிட்டன.சில நாடுகள் தலையிடாமல் விட்டு அரசாங்கத்தை வெற்றிபெற வைத்தன.அங்கு தலையிடாமையே ஒரு தலையீடுதான். சில உலகப் பொது நிறுவனங்களும் அவ்வாறு பொருத்தமான நேரத்தில் பொருத்தமான விதங்களில் தலையிடத் தவறின. இதில் ஐநாவுக்கும் பொறுப்பு உண்டு.

இப்பொழுது 54ஆவது ஐநா கூட்டத் தொடர் போய்க்கொண்டிருக்கிறது. இக்கூட்டத்தொடரை முன்னிட்டே சனல் நாலு மேற்கண்ட வீடியோவை வெளியிட்டது. அவ்வீடியோவானது மேற்கத்திய நோக்கு நிலையில் இருந்தே வெளியிடப்பட்டிருக்கிறது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சக்கள் போட்டியிடுவதை தடுப்பது அந்த வீடியோவின் நோக்கங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அதே சமயம் அந்த வீடியோ வெளிப்படுத்தும் செய்தி தமிழ் மக்களுக்குச் சாதகமானது. இலங்கைத் தீவின் அரசுக் கட்டமைப்பும் புலனாய்வுக் கட்டமைப்பும் பொறுப்புக்கூறும் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதனை நிரூபிப்பதற்கு உதவும் சான்றுகளில் அந்த வீடியோவும் ஒன்று. ஐநா மனித உரிமைகள் அலுவலகம், இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக் கூற வைப்பதற்காக என்று கூறிக்கொண்டு சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் ஒரு பொறிமுறையை உருவாக்கியிருக்கிறது. எனவே பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் மீது தமிழ் நோக்கு நிலையில் இருந்து நிர்ப்பந்தங்களை பிரயோகிப்பதற்கு அந்த வீடியோ உதவும். அதைத் தமிழ் மக்கள் வெற்றிகரமாகக் கையாள வேண்டும்.

பொனிபஸ் பெரேரா கூறுவது போல அது ஒரு கூட்டு முயற்சியாக இருந்தால்தான் வெற்றி கிடைக்கும். போர் மட்டுமல்ல இறந்த காலத்துக்குப் பொறுப்புக் கூற வைக்கும் நடவடிக்கைகளும், நீதிக்கான போராட்டங்களும் கூட்டு முயற்சிகள்தான். கட்சி முயற்சிகள் அல்ல.

https://athavannews.com/2023/1349985

  • கருத்துக்கள உறவுகள்

சனல் நாலு திறந்திருக்கும் வாய்ப்புக்கள் 

நிலாந்தன்

spacer.png

சனல் நாலு வெளியிட்ட வீடியோவை முதலில் அதிகமாக பரவலாக்கியதும் பரப்பியதும் சாணக்கியனுக்கு ஆதரவான சமூக வலைத்தளக் கணக்குகள் தான். அந்த ஆவணப் படத்தில் பிள்ளையானுக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் இருப்பதனால், சாணக்கியனுக்கு ஆதரவான தரப்புகள் அதை வேகமாகவும் அதிகரித்த அளவிலும் பரப்பினார்கள். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சாணக்கியன் போன்ற தரப்புக்களிடம் பலமான சமூக வலைத்தள பிரச்சாரகக் கட்டமைப்புக்கள் உண்டு. சாணக்கியனுக்கு ஆதரவான சமூக வலைதளக் கட்டமைப்புக் கூடாகத்தான் பிள்ளையானுக்கு எதிரான அசாத் மௌலானாவின் சாட்சியம் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.

அந்த வீடியோவானது, ரணிலைப் பலப்படுத்தும் மேற்கத்தய நிகழ்ச்சி நிரலின் பிரதிபலிப்பு எனலாம். அதேசமயம் அதில் தமிழ் மக்களுக்குச் சாதகமான அம்சங்கள் உண்டு. இலங்கை அரசுக் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் குற்றச்சாட்டுக்கள் அந்த வீடியோவில் உண்டு. தமிழ்மக்கள் ஏன் பரிகார நீதியைக் கேட்கின்றார்கள் என்பதற்குத் தேவையான தர்க்கபூர்வமான சான்றுகளை அந்த வீடியோ வெளிப்படுத்துகின்றது. அந்த வீடியோவில் கூறப்படும் தகவல்கள் உண்மையா  இல்லையா என்பதனை விசாரிப்பதற்கு அனைத்துலக விசாரணை வேண்டும் என்று பேராயர் மல்கம் ரஞ்சித் கேட்கிறார். முஸ்லிம்கள் ஏற்கனவே கேட்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேட்கிறார். குண்டுவெடிப்பின் போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரி கேட்கிறார். முன்னாள் படைத்தளபதியும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சரத் பொன்சேகா  கேட்கிறார்.

அப்படி ஒரு விசாரணை நடக்கலாம் நடக்காமல் விடலாம். ஆனால் பொறுப்புமிக்க பதவிகளில் இருந்தவர்களும் இருப்பவர்களும் அவ்வாறு கேட்பது  என்பது இலங்கைத்தீவின் அரசுக் கட்டமைப்பின் பொறுப்புக்கூறும் தன்மையை கேள்விக்கு உட்படுத்துகின்றது. அது தமிழ்மக்களுக்குச் சாதகமானது. தமிழ் மக்கள் வேறு காரணங்களுக்காக அதாவது இனப்படுகொலைக்கு எதிரான நீதியை நிலைநாட்ட அனுத்துலக விசாரணை வேண்டும் என்று கேட்கிறார்கள். பேராயர் மல்கம் ரஞ்சித் அப்படிக் கேட்கமாட்டார். ஆனாலும் தமிழ்மக்கள் ஏன் உள்நாட்டு விசாரணையை நம்பவில்லை என்ற கேள்விக்கான விடை பேராயரின் கோரிக்கைக்குட் பொதிந்து கிடக்கின்றது.

எனவே சனல் நாலு வெளியிட்ட வீடியோவானது இலங்கையில் மேற்கு நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கிலானது என்பது அதன் ஒரு பரிமாணம். இன்னொரு பரிமாணம் அது தமிழ்மக்களின் நீதிக்கான போராட்டத்திற்குப் பலம் சேர்க்கின்றது என்பது.

எனது கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டதுபோல,சனல் நாலு வீடியோ மட்டுமல்ல, இந்தப் பூமியிலே இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அல்லது இலங்கைத்தீவின் சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்புக்கு எதிராக வெவ்வேறு நாடுகள், அனைத்துலக நிறுவனங்கள் முன்னெடுக்கும் வெவ்வேறு வகைப்பட்ட நடவடிக்கைகள் அனைத்துமே ஏதோ ஒருவிதத்தில் ஈழத்தமிழர்கள் கெட்டித்தனமாகக் கையாளவேண்டிய வாய்ப்புகள்தான். அவ்வாறான வாய்ப்புகளை வழங்கும் மேற்கத்திய மற்றும் பிராந்திய அளவிலான நகர்வுகளைப் பின்வருமாறு பட்டியலிடலாம்.

முதலாவதாக, அமெரிக்க கண்டத்தில் அங்குள்ள இரண்டு பெரிய நாடுகளாகிய அமெரிக்காவும் கனடாவும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும் அதன் படைப்பிரதானிகள் சிலருக்கு எதிராகவும் நிர்ணயகரமான நகர்வுகளை முன்னெடுத்திருக்கின்றன. இலங்கைத் தீவின் இப்போதுள்ள படைத் தளபதியை அமெரிக்கா நாட்டுக்குள் வருவதற்கு தடை விதித்திருக்கிறது. அதுபோலவே முன்னாள் கடற்படை தளபதி ஒருவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின்படி போர்க் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு வழக்குத் தொடுக்க முடியும். அவ்வாறு மூத்த ராஜபக்சக்கள் இருவருக்கும் எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடுக்கத் தேவையான வாய்ப்புகளை அந்தச் சட்டம் அதிகப்படுத்தியிருக்கிறது. இது முதலாவது.

இரண்டாவதாக,கனடாவில் இனப்படுகொலை தொடர்பில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தவிர, மூத்த ராஜபக்சக்கள் இருவருக்கும் எதிராக இந்த ஆண்டு மார்ச் மாதம் கனடா தடைகளை விதித்திருக்கின்றது. அதன்படி அவர்கள் அந்த நாட்டில் தமது பினாமிகளின் ஊடாகக்கூட முதலீடுகளைச் செய்ய முடியாது.

spacer.png

கனடாவின் மேற்கண்ட நடவடிக்கைகள் அங்குள்ள பலமான தமிழ் புலம்பெயர் சமூகத்தின் வாக்குகளைக் கவரும் நோக்கிலானவை என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் அவை அவற்றின் விளைவுகளைக் கருதிக்கூறின் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்திற்குப் பலம் சேர்ப்பவை.

மூன்றாவது நகர்வு, ஐநாவின் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒர் அலுவலகம். இது கடந்த ஆண்டு ஐநாவில் நிறைவேற்றப்பட்ட 46\1 தீர்மானத்தின் பிரகாரம் ஐநா மனித உரிமைகள் பேரவைக்குள் இயங்கி வருகிறது. அங்கே சேகரிக்கப்படும் தகவல்கள் என்றைக்கோ ஒரு நாள் இலங்கைக்கு எதிராக கையாளப்படத் தக்கவை. அண்மையில் தொடங்கிய ஐநா கூட்டத் தொடரில் மனித உரிமைகள் உதவி ஆணையாளர் அந்த அலுவலகத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். அடையாளம் காணப்பட்ட பத்து நபர்களைப் பற்றிய விபரங்களை உறுப்பு நாடுகள் கேட்பதாகவும் குறிப்பிடுகிறார். ஏற்கனவே அமெரிக்காவும் கனடாவும் குறிப்பிட்ட சில படை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கும் ஒரு பின்னணியில், மேலும் பத்து பேர் பற்றி பிரஸ்தாபிக்கப்படுகிறது.

அந்த அலுவலகத்தால் சேகரிக்கப்படும் தகவல்களில் தமிழ்த் தரப்பு மனித உரிமை மீறல்களும் தொடர்பான தரவுகளும் இருக்கலாம்.. ஏனெனில் ஐநா அதைத் தமிழ் நோக்கு நிலையில் இருந்து தொகுக்கவில்லை. சீன விரிவாக்கத்தின் கருவிகளாகக் காணப்படும் ராஜபக்ச சகோதரர்களை எப்பொழுதும் சுற்றிவளைத்து வைத்திருக்கும் ராஜதந்திர உள்நோக்கங்கள் ஐநா தீர்மானங்களில் உண்டு. ஆனாலும் தமிழ் நோக்கு நிலையில் இருந்து இலங்கைத்தீவின் அரச கட்டமைப்பும் அரசியல் பாரம்பரியமும் பொறுப்புக்கூறலுக்கு உகந்தவை அல்ல என்பதனை நிரூபிப்பதற்கு அவை உதவும்.

spacer.png

நான்காவது நகர்வு, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் ராமேஸ்வரத்தில் வைத்துக் கூறிய கருத்துக்கள். இலங்கைத்தீவில் இடம் பெற்றது பெரிய மனிதப் படுகொலை அல்லது இனப்படுகொலை என்ற பொருள்பட அவர் கருத்து தெரிவித்திருக்கிறார். தனது ருவிற்றர் பக்கத்தில்  இனப்படுகொலை என்று தமிழில் எழுதிருந்தார். தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கிக்குள் இருந்து ஈழ ஆதரவாளர்களைப் பிரித்து எடுப்பதற்கான ஓர் உத்தியாகத்தான் அமித் ஷா அப்படிச் சொன்னார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் ஒர் உள்துறை அமைச்சர். அவர் அவ்வாறு கூறியிருப்பதை ஈழத்தமிழர்கள் பொருத்தமான விதங்களில் கையாளலாம். ஏற்கனவே 40 ஆண்டுகளுக்கு முன் 1983இல், அப்பொழுது இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்திய நாடாளுமன்றத்தில் வைத்து “இலங்கையில் நடப்பது இனப்படுகொலையேயன்றி வேறு எதுவுமில்லை”என்று கூறினார். அடுத்த ஆண்டு அப்பொழுது உள்துறை அமைச்சராக இருந்த சவான் இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக நடப்பவற்றில் “இனப்படுகொலையின் கூறுகள் உண்டு” என்று கூறினார். இப்பொழுது அமித் ஷா கூறியிருக்கிறார்.

அமித்ஷா கூறியிருப்பது பெருமளவுக்கு உள்நாட்டுத் தேர்தல் தேவைகளுக்கானதாக இருக்கலாம். ஆனால் அதை ஈழத்தமிழ் நோக்கு நிலையில் இருந்து வெற்றிகரமாகக் கையாள வேண்டும். அதற்குரிய உபாயங்களை ஈழத்தமிழர்கள் வகுத்துக்கொள்ள வேண்டும்.

spacer.png

இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். கனடாவோ அமெரிக்காவோ அல்லது இந்திய உள்துறை அமைச்சரோ அல்லது ஐ.நாவோ அல்லது ஏனைய உலகப் பொது நிறுவனங்களோ சனல் நாலோ, தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து முடிவுகளை எடுக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது அப்பாவித்தனமானது; அம்புலிமாமாக் கதை போன்றது. அரசியல் என்பது நலன்சார் உறவுகளின் இடையூடாட்டம் தான். அங்கே அறநெறி,நீதி நியாயம் போன்றவை இரண்டாம்பட்சம். உலக நாடுகளும் உலகப் பொது நிறுவனங்களும் உலகளாவிய ஊடக நிறுவனங்களும் தங்கள் தங்கள் நலன்சார் நோக்கு நிலைகளில் இருந்துதான் முடிவுகளை எடுக்கும். தமது அரசியல்,பொருளாதார,ராணுவ இலக்குகளை முன்வைத்தே எந்தவோர் அரசும் வெளிவிவகார முடிவுகளை எடுக்கும்.

ஆனால் இலங்கை சம்பந்தப்பட்ட அவர்களுடைய நகர்வுகள் ஈழத்தமிழர்கள் தமக்குச் சாதகமாகக் கையாளத்தக்கவைகளாக இருக்குமானால், .அவற்றைப் பொருத்தமான விதத்தில் பொருத்தமான வேளைகளில், வெற்றிகரமாகக் கையாண்டு நீதிக்கான தமது போராட்டத்துக்கு எப்படி அணி சேர்க்கலாம் என்று ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

கடந்த மே 18ஆம் திகதியன்று கனேடியப் பிரதமர் தன்னுடைய உத்தியோகபூர்வ ருவிற்றர் பக்கத்தில் இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்குச் சாதகமான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அப்பதிவை  எத்தனை லட்சம் தமிழ்மக்கள் திரும்பத்திரும்ப ரீ ருவீற் பண்ணினார்கள்? என்று ஓர் அரசியற் செயற்பாட்டாளர் கேட்டார். அங்கேதான் தெரிகிறது தமிழ் மக்களின் இலத்திரனியல் வலையமைப்புகளின் பலவீனம். கனேடியப் பிரதமரின் கருத்துக்கு இலங்கை உத்தியோகபூர்வமாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதாவது அதை இலங்கை அரசுக் கட்டமைப்பு எதிர்கின்றது. அப்படியென்றால் அதைத் தமிழ் மக்கள் எப்படிக் கையாண்டிருக்க வேண்டும்?கனேடியப் பிரதமரின் உத்தியோகபூர்வ ருவிற்றர் பக்கத்துக்கு சென்று அவர் அங்கே பதிவிட்டிருப்பதை திரும்பத் திரும்ப லட்சக்கணத்தில் கோடிக்கணக்கில் திரும்பத் திரும்ப ரீ ருவிற் பண்ணியிருக்க வேண்டும். அது அவருக்கு உற்சாகமூட்டும். தமிழ்மக்கள் கனடாவோடு தமது சகோதரத்துவத்தை, வாஞ்சையைத் தெரிவிப்பதற்கு அது ஓர் அருமையான சந்தர்ப்பமாக இருந்தது.

அப்படிதான் அமித்ஷா தனது ருவிற்றர் பக்கத்தில் தமிழில் இனப்படுகொலை என்று பிரசுரித்திருந்ததை தமிழர்கள் தமக்குச் சாதகமாகப் பரப்பியிருந்திருக்க வேண்டும். ஆனால் எத்தனை தமிழ்க்கட்சிகள் அல்லது தமிழ் அமைப்புகள் அல்லது செயற்பாட்டாளர்கள் அதை அவ்வாறு கையாண்டன?

அதுதான் பிரச்சினையே. மேற்சொன்ன வெளியுறவு வாய்ப்புக்களை வெற்றிகரமாகக் கையாளத் தேவையான ஒன்றிணைந்த கட்டமைப்புக்கள் தமிழ் மக்களிடம் இல்லை. கட்சிகளை அல்லது அரசியல் வாதிகளின் தனிப்பட்ட வாக்கு வங்கிகளைக் கட்டியெழுப்பும் நோக்கத்தோடு இலத்திரனியல் கடடமைப்புக்கள் உண்டு. ஆனால் தேசத்தைக் கட்டியெழுப்பும் கட்டமைப்புக்கள் குறைவு. அவ்வாறான ஒன்றிணைந்த கட்டமைப்புக்கள் இல்லாத ஒரு வெற்றிடத்தில், ஈழத்தமிழர்கள் வெறுவாய் சப்பிக்கொண்டு, வீர வசனம் பேசிக்கொண்டு வெளியாருக்காகக் காத்திருக்கிறார்கள் ?

 

https://www.nillanthan.com/6280/

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.