Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திலீபனின் தீர்க்கதரிசனம் – புகழேந்தி தங்கராஜ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் தீர்க்கதரிசனம் – புகழேந்தி தங்கராஜ்

September 26, 2023

திலீபனின் மரணத்தை ‘ஈடு இணையற்ற உயிர்க் கொடை’ என்று சொல்வதைவிட, ஈவிரக்கமற்ற படுகொலை என்று சொல்வதுதான் பொருத்தம்.  அண்ணல் காந்தியின் அகிம்சைக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகத் தம்பட்டமடிக்கிற இந்தியத் துணைக்கண்டம், தன்னுடைய ஆணவத்தாலும் அகம்பாவத்தாலும் தன்முனைப்பாலும், லட்சக்கணக்கான மக்களின் கண்ணெதிரில் அந்த இளைஞனைச் சிறுகச் சிறுகச் சாக விட்டது.

அந்தச் சமயத்தில், ஈழத் தமிழரின் தாய்மண்ணில் நின்றுகொண்டிருந்த இந்திய அமைதிப்படையின் தலைவர் ஹர்கிரட்சிங், இந்த உண்மையை  மனசாட்சியோடு அம்பலப்படுத்தினார்.

 

thileepan uk 2023 திலீபனின் தீர்க்கதரிசனம் – புகழேந்தி தங்கராஜ்1987 செப்டம்பர் 17ம் தேதி, திலீபனின் அறப்போர் தொடங்கிய மூன்றாவது நாளே,  உயரதிகாரி தீபிந்தர் சிங்குக்கும், இலங்கைக்கான இந்திய ஹைகமிஷனர் தீட்சித்துக்கும் ஹர்கிரட்சிங் அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பினார். “மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் நீடிக்கிறது. இதற்குப் பிறகு திலீபனின் உடல்நிலை மோசமடையக் கூடும். அவரைக் காப்பாற்றுவது முக்கியம். திலீபனைக் காப்பாற்றத் தவறினால், அமைதிப்படைக்கு எதிராகத் தமிழ்மக்கள் திரும்பிவிடக்கூடும்” என்று குறிப்பிட்டதோடு நில்லாது, பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதையும் சுட்டிக் காட்டினார்.

“ஊர்க்காவல் படையினருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட வேண்டும்… பயங்கரவாத தடைச் சட்டத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் 1300 தமிழர்களையும் பேரம் பேசிக் கொண்டிருக்காமல்  விடுவிக்க வேண்டும்… இடைக்கால அரசின் பொறுப்பிலேயே நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும்…” – என்பன உள்ளிட்ட ஹர்கிரட்சிங்கின் யோசனைகள் அனைத்துமே, திலீபனின் கோரிக்கைகளிலிருந்த நியாயத்தை எடுத்துச் சொல்வதாக இருந்தன.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தீட்சித் மீண்டும் சந்தித்தால் கருத்துவேறுபாடுகள் அகன்றுவிடும், திலீபனையும் தீட்சித் சந்திக்க வேண்டும் – என்றெல்லாம் ஹர்கிரட்சிங் வலியுறுத்தினார்.  தீட்சித் அதற்கு மறுத்துவிட்டார்.

praba 00 திலீபனின் தீர்க்கதரிசனம் – புகழேந்தி தங்கராஜ்திலீபன் உயிர்துறந்தபிறகான சூழலை ஹர்கிரட் சிங் அளவுக்கு இந்தியத் தரப்பில் புரிந்துகொண்டவர்களும், யதார்த்தத்தை வெளிப்படையாகப் பேசியவர்களும்  மிகச் சிலரே!

“திலீபனைப் பார்க்க நல்லூர் வாருங்கள்….  திலீபனைச் சந்தித்துப் பேசுங்கள்… என்று மீண்டும் மீண்டும் தீட்சித்தை வலியுறுத்தினேன்… அவர் அந்தச் சந்திப்பைத்  தாமதப்படுத்தினார். கடைசியில், திலீபன் இறந்த அன்று தான் பலாலி வந்தார்….! திலீபனை நாம் காப்பாற்றியிருக்க வேண்டும். இந்தியாவால் அந்த உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்” என்கிற ஹர்கிரட்சிங்கின் ஒவ்வொரு வார்த்தையும் அவரது மனத்துயரை எடுத்துக் காட்டுகின்றன. கூடவே இந்தியாவின் அதிகாரத் திமிரையும் எடுத்துக் காட்டுகின்றன.

‘இந்திய அமைதிப்படை மீது புலிகளும் தமிழ் மக்களும் நம்பிக்கையிழக்கக் காரணம் திலீபனின் மரணம் தான்…” என்று வேதனையுடன் குறிப்பிட்டார் ஹர்கிரட்சிங். அது, தாக்குதல் நடத்தச் சென்ற ராணுவமல்ல, அமைதியைக் காப்பாற்றுவதற்காகச் சென்ற ராணுவம். அந்தப் பொறுப்புணர்வோடுதான், அந்தப் படையின் தலைவரான அவர் பேசினார். அதற்கு நேர்மாறாக இருந்தது, அவருக்கு மேலிருந்த அதிகார வர்க்கம். அமைதி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அது உறுதியாக இருந்தது.

திலீபனின் அறப்போர் தொடங்கிய மறுநாளே, செப்டம்பர் 16ம் தேதி, பிரபாகரனை நேரில் சந்தித்தார்கள், ஹர்கிரட் சிங், தீபிந்தர்சிங் உள்ளிட்ட அமைதிப்படை உயரதிகாரிகள். பலாலி விமானதளத்துக்கு இந்திய விமானப்படை  ஹெலிகாப்டரில் அவரை அழைத்துச் சென்றனர்.  கொழும்பிலிருந்து பலாலி தளத்துக்கு வந்த இந்திய ஹைகமிஷனர் தீட்சித்துக்கும் பிரபாகரனுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை நம்பிக்கையூட்டுவதாக இருக்க, ஹர்கிரட்சிங் உள்ளிட்ட பொறுப்புள்ள அதிகாரிகள் மிகுந்த  மகிழ்ச்சியடைந்தார்.

ipkf2 திலீபனின் தீர்க்கதரிசனம் – புகழேந்தி தங்கராஜ்இருதரப்புக்கும் இடையிலிருந்த பல முட்டுக்கட்டைகள் அந்தப்  பேச்சுவார்த்தையின்போது  தகர்ந்ததாகவும், மூன்றே மாதத்தில் (டிசம்பரில்)  அமைதிப்படை இந்தியாவுக்குத் திரும்பிவிடும் என்று  தாங்கள் நம்பியதாகவும் எழுதினார் ஹர்கிரட்சிங். அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. மூன்று மாதத்துக்கு பதிலாக, மூன்றாண்டுகள் பிடித்தது இந்தியப் படை  திரும்புவதற்கு! அதற்குள் துணைக்கண்டத்தின் ராணுவம் கடுமையான இழப்புகளையும் அவமானங்களையும் சந்திக்க நேர்ந்தது.

16ம் தேதி நடந்த சந்திப்பின் முடிவில், தவறான சில அபிப்பிராயங்கள் தலைதூக்கின. அன்று காலையில் அமைதிப்படை அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் பலாலிக்கு வந்த பிரபாகரன், தீட்சித்துடனான சந்திப்புக்குப் பிறகு, பலாலியிலிருந்து யாழ்ப்பாணத்துக்குத் தனது சொந்தப் பாதுகாப்பில் திரும்ப விரும்பினார். அவர் சொன்னதை ஏற்று, கனிவுடன் வழியனுப்பினார் ஹர்கிரட்சிங். அது தீட்சித்துக்கு எந்த அளவுக்கு எரிச்சலூட்டியது என்பதை அப்போது அவர் உணரவில்லை.

பலாலியிலிருந்து திரும்பியபிறகு, ஹர்கிரட்சிங் பற்றி டெல்லிக்குப் புகார் அனுப்பினார் தீட்சித். ‘அமைதிப்படை அதிகாரிகள் தங்கள் கடமையை நிறைவேற்றத் தயாராக இல்லை. மாறாக பிரபாகரனுக்குத் தனி மரியாதை தருகின்றனர். அவருக்கு சல்யூட் கூட செய்கிறார்கள். 54வது டிவிஷன் GOC ஹர்கிரட்சிங்கை மாற்றாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும்’ என்றெல்லாம் தீட்சித் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. கள நிலவரத்தை உள்ளது உள்ளபடி ஹர்கிரட்சிங் எடுத்துச் சொல்ல, அதற்கு நேர்மாறாக, ராஜீவ்காந்திக்குத் தவறான தகவல்களை வழங்குவதிலேயே தீட்சித் குறியாயிருந்திருக்கிறார். இதிலிருந்து, வடகிழக்கில் அமைதி திரும்பிவிடக் கூடாது என்று விரும்பிய பௌத்த சிங்கள அரசின் ஏஜென்ட் போலவே தீட்சித்  செயல்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ராஜீவ்காந்தியின் அரசு இதைப்  புரிந்துகொள்ளவில்லை.

மறுநாள், 17ம் தேதி, புலிகளின் தளபதிகள் ஹர்கிரட்சிங்கைச் சந்தித்தனர்.  திலீபனின் கோரிக்கைகள் குறித்து அவரிடம் விளக்கினர். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதையே அவர் வலியுறுத்துகிறார் என்பதை எடுத்துக் கூறினர். அதையும் கொழும்பிலுள்ள இந்திய ஹைகமிஷனர் அலுவலகத்துக்குத் தெரியப்படுத்துகிறார் ஹர்கிரட்சிங்.

19ம் தேதி, கொழும்பிலிருந்து இந்தியத் தூதரக துணை ஹைகமிஷனர் நிருபம் சென் பலாலி வந்தார். அவர், கள நிலவரத்தைப் புரிந்துகொள்ள வந்ததாகவே தெரியவில்லை. புலிகள் விஷயத்தில் அமைதிப்படை மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாக ஹர்கிரட்சிங்கிடம் நேரடியாகவே குற்றஞ்சாட்டுவது ஒன்றே அவரது நோக்கமாக இருந்தது. அதைச் சொல்லவே  வந்ததைப் போலிருந்தது அவரது வருகை.

thileepa திலீபனின் தீர்க்கதரிசனம் – புகழேந்தி தங்கராஜ்இந்திய அரசின் கடுமையான நிலைப்பாட்டுக்கு முரணானதாக அமைதிப்படையின் அணுகுமுறை இருப்பதாக நிருபம் சென் கடுப்படித்தபோது, உண்மை நிலவரத்தை அவருக்கு  எடுத்துச் சொன்னார் ஹர்கிரட்சிங்.  ‘ராணுவத்துக்கு உத்தரவிடுபவர்கள், அதற்கு முன் அதுகுறித்து நன்கு பரிசீலிக்க வேண்டும். பிரபாகரனுக்கு ராஜீவ் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். இருதரப்புக்கும் இடையிலான கருத்து வேற்றுமைகளை நீக்குவது தான் இப்போதைக்கு முக்கியம்’ என்று கூறினார் ஹர்கிரட்சிங்.

ஹர்கிரட் சிங்கின் வாதத்திலிருந்த யதார்த்தத்தை நிராகரித்த நிருபம்சென்,   உண்ணாவிரதப் போராட்டம் மூலம் இந்தியாவை யாரும் நிர்பந்திக்க முடியாது.. என்றார். அது, எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்த காந்தியின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியபோது பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் சொன்ன வார்த்தை.  ‘காந்தியின் விருப்பப்படி அவரைச் சாக விடுங்கள்… இறுதிச் சடங்குக்குத் தேவையான வேலையைப் பாருங்கள்’ என்று சொன்ன சர்ச்சிலின் திமிருக்கும், நிருபம் சென் மற்றும் தீட்சித்தின் நடவடிக்கைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

சர்ச்சிலின் அகந்தையைக் கண்டு கலங்காமல் இந்தியாவின் தேசத்தந்தை உண்ணாவிரதத்தைத் தொடர்ந்ததைப் போலவே, திலீபன் எதைக் குறித்தும் கலங்காமல் தன் நிலையில் உறுதியாக இருந்தான்.

அறப்போரின் நான்காவது நாளன்று திலீபன் எவ்வளவு உற்சாகமாக இருந்தானென்பதை, அவனுடனேயே இருந்த வாஞ்சிநாதன் குறிப்பிடுகிறார். ‘விளக்கு அணையும் முன் பிரகாசமாக எரியுமாம்.. அதுபோல இன்று உற்சாகமாக இருக்கிறேன்… …. எனக்கு விடை தாருங்கள்…. இந்தப் போராட்டத்தைக் கைவிடும்படி யாரும் என்னைக் கேட்க வேண்டாம்… இதுவரை தாய்மண்ணுக்காக உயிர் துறந்திருக்கும் 650 விடுதலைப் புலிகளுடன் இணைந்து எம் தாய்மண் விடுதலை அடைவதை மேலிருந்து பார்ப்பேன்…. எங்கள் உயிர் உங்களுடன் ஒட்டிவிடும்…’ என்றான், எந்தக் கலக்கமும் இல்லாமல்!

thilepa திலீபனின் தீர்க்கதரிசனம் – புகழேந்தி தங்கராஜ்உண்ணா நிலை அறப்போரைத் தொடங்கியபோதே, “தேசிய எழுச்சி எப்போதெல்லாம் குமுறியெழத் தொடங்குகிறதோ அப்போதெல்லாம் அதை அடக்க எமது எதிரிகள் ஒப்பந்தங்களுடன் வருகிறார்கள்…. இந்திய இலங்கை ஒப்பந்தமும் தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையை அடக்கி ஒடுக்குகிற முயற்சி தான்” என்று தெள்ளத்தெளிவாக விளக்கியவன் அவன்.

தண்ணீர் கூட அருந்தாமல் மேற்கொண்ட உண்ணாநிலை அறப்போரால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட பிறகும்,  தன்னுடைய ஐந்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக இந்தியா எழுத்துப் பூர்வமாக உறுதியளிக்காதவரை,  உண்ணாநிலை அறப்போரைக்  கைவிடப் போவதில்லை –  என்று உறுதியாகத் தெரிவித்தவன். பேச முடியாத நிலையிலும், இதை ஒவ்வொரு வார்த்தையாக கரகரத்த குரலில் திலீபன் சொன்னதாக வாஞ்சிநாதன் எழுதியிருப்பதைப் படிக்கிறபோதே. திலீபனின் மெலிந்த தேகமும், மெலியாத உறுதியும் நம் கண்முன் வருகின்றன.

கொடுத்த வாக்குறுதிகளுக்கும், செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கும் விரோதமாகவே இந்தியா தொடர்ந்து செயல்பட்டது. இந்த அளவுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்கிற இந்தியா தன்னைக் காப்பாற்ற வாய்ப்பில்லை  என்பதைத் திலீபன் உணர்ந்திருக்க வேண்டும். என்றாலும்,  தன்னுடைய மரணம் இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றக் கூடுமென்று அவன் நம்பியிருக்க வேண்டும். இன்னொரு கோணத்தில் பார்த்தால், திலீபனின் போராட்டம், ஈழத்தின் சுய மரியாதை தொடர்பானதாக மட்டுமே இருக்கவில்லை. இந்திய ராணுவத்தின் மாண்பையும் மரியாதையையும்  காப்பாற்றும் நோக்கமும் அதற்கு இருந்தது.

திலீபனின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டிருந்தால், விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதி காப்புப் படைக்கும் இடையே மோதல் வந்திருக்க வாய்ப்பேயில்லை. ஒரு துணைக்கண்டத்தின் ராணுவம் அவமானங்களைச் சந்தித்திருக்க நேர்ந்திருக்காது. இந்தியாவை நிஜமாகவே நேசித்தவர்கள் விடுதலைப் புலிகள். அதனால் தான், அதற்கு எளிதில் புரிகிற அகிம்சை மொழியில் பேசிப் பார்த்தான் திலீபன். இந்தியா அதைப் புரிந்துகொள்ளவில்லை, புரிந்துகொள்ள முயலவுமில்லை.

அதற்கு முந்தைய மாதம், ஆகஸ்ட் 4ம் தேதி பிரபாகரன் நிகழ்த்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுதுமலை உரையிலும், இந்தியா தொடர்பான சிநேகப் பார்வை இருந்ததை இந்த இடத்தில் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பிரபாகரனை வீட்டுக்காவலில் வைத்துவிட்டு ஜெயவர்தனவுடன் ஒப்பந்தம் செய்துகொள்வது…. பிரபாகரனின் ஆதரவே இல்லாமல் ராஜீவ்-ஜெயவர்தன ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் விடுதலைப் புலிகளை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டித் தனிமைப்படுத்துவது….. டம்மி பொம்மைகளை வைத்தே காய் நகர்த்துவது….

இதுதான் ராஜீவ் காந்திக்குத் தவறான ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தவர்களின் பிழையான வழிகாட்டுதலாக இருந்தது. உண்ணாநிலை அறப்போரைத் தொடங்கியபோது திலீபனுக்கு இருந்ததைப் போன்ற நம்பிக்கை, அப்போது பிரபாகரனுக்கும் இருந்தது. இந்தியா உண்மையைப் புரிந்துகொள்ளும் என்று நம்பிக் காத்திருந்தார். அவர் நினைத்ததுதான் நடந்தது.

ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு கூட அல்ல..  ஒப்பந்தத்துக்கு முந்தைய நாளே,  பிரபாகரனின் சம்மதம் இல்லாமல் ஒப்பந்தம் செய்துகொள்ள முடியாது என்கிற நிதர்சனத்தை ராஜீவ் புரிந்துகொண்டுவிட்டார். அன்று நள்ளிரவில் அவசர அவசரமாக பிரபாகரனை பிரதமர் இல்லத்துக்கு வரச்செய்து,  நேரடியாகவே சில வாக்குறுதிகளை ராஜீவ் வழங்கியதற்கு இந்தத் திடீர் ஞானோதயம் தான் காரணமாயிருந்திருக்க வேண்டும்.

ராஜீவுடனான சந்திப்பின்போது, எம்.ஜி.ஆரின் பிரதிநிதியாக உடனிருந்த தமிழக அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான  உரையாடல், மறக்க இயலாத வரலாற்றுப் பதிவுகளில் ஒன்று.  பேச்சுவார்த்தைக்கு இடையே, ‘ நீங்கள் எல்லா ஆயுதங்களையும் ஒப்படைக்க வேண்டுமென்று அவசியமில்லை’ என்று ராஜீவ் ஆங்கிலத்தில் குறிப்பிட, அதை பிரபாகரனுக்கு மொழிபெயர்த்த பண்ருட்டி ‘இந்தியா உங்களுக்குக் கொடுத்த ஆயுதங்களில் பயனற்ற துருப்பிடித்த ஆயுதங்களை ஒப்படைத்தாலே போதும்’ என்று மேலதிகமாக எடுத்துச் சொல்ல, அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பிரபாகரன், நறுக்குத் தெறித்ததைப் போல் நான்கு வார்த்தை சொன்னார். ‘இந்தியா எங்களுக்கு வேறென்ன கொடுத்தது’ என்கிற பிரபாகரனின் உடனடி பதிலடி, அவரது ஸ்மார்ட் பவருக்கான இன்னொரு சான்று.

பிரபா அப்படிக் கேட்டதும் பண்ருட்டியாரின் முகம் மாறிவிட, அதைக் கவனித்த ராஜீவ் ‘என்ன சொல்கிறார்’ என்று கேட்க, பிரபாகரன் சொன்னதை பாலசிங்கம் ஆங்கிலத்தில் விவரிக்க, அதைக் கேட்டு ரசித்துச் சிரித்திருக்கிறார் ராஜீவ்காந்தி. பிரபாகரன் என்கிற இளந் தலைவனின் Sharp Reaction நிச்சயம் அவரை வியப்பில் ஆழ்த்தியிருக்கும்.

பிரபாகரன் என்கிற சமரசமற்ற போராளி, ராஜீவின் முகத்துக்கு நேராக ஒன்றும், முதுகுக்குப் பின்னால் வேறொன்றும் பேசுகிற சாமர்த்தியசாலியாக இருக்கவில்லை. பிரபாகரனின் முகத்துக்கு நேராக வெளிப்படையாகத்தான்  பேசினார். அவரிடம் சொன்னதைத்தான், சுதுமலை கூட்டத்தில் பேசினார்.

இந்தியாவை நம்பி ஆயுதங்களை ஒப்படைக்கிறோம் – என்று மக்கள் வெள்ளத்துக்கிடையில் நின்று பகிரங்கமாக அறிவித்ததோடு நின்றுவிடவில்லை பிரபாகரன். கூடவே, இந்தியாவின் பொறுப்பை, தெள்ளத் தெளிவாகச் சுட்டிக்காட்டினார்.

‘எம் மக்களின் பாதுகாப்புக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்தியாவிடம் ஓப்படைக்கிற இந்தக் கணத்திலிருந்து எம் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்… ஆயுத ஒப்படைப்பு என்பது பொறுப்பு கைமாறுவதையே குறிக்கிறது…’

ஹிட்லர் போன்று கையைக் காலையெல்லாம் ஆட்டி அங்க சேட்டைகளுடன் பேசுகிற தலைவர்கள் பலரை வரலாற்றில் பார்த்திருக்கிறோம். அவர்களது பேச்சின் பெரும்பகுதி வெற்று வார்த்தை ஜாலமாகவே இருக்கும்.  அப்படியெல்லாம் பேசத்தெரியாத பிரபாவின் இந்த சுதுமலை வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.  இதை விடச் சுருக்கமாக இந்தியாவுக்கு அதன் கடமையை நினைவூட்ட வேறெவரால் முடியும்!

திலீபனும் அப்படித்தான். தன் தலைவனைப் போலவே சுருக்கமாகப் பேசினான். உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொன்னான். மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த நிலையிலும் தடுமாற்றமில்லாமல் உறுதியாகப் பேசினான்.

“நான் இறப்பது நிச்சயம்… மில்லரைப் போலவே என் தாய்நாட்டுக்கான கடமையை நான் செய்து முடித்திருக்கிறேன்… எமது மக்கள் என்றாவது ஒருநாள் தமது விடுதலையை வென்றெடுப்பார்களென்று உறுதியாக நம்புகிறேன்… “

இந்த நம்பிக்கையுடன்தான்மரணத்தைத் தழுவினான் திலீபன். கனவல்ல அது. நிஜம். பொய்மை நெருப்பால் சுட்டெரிக்க முடியாத நிஜம்.

பௌத்த சிங்கள இனவெறிக்கு தொடர்ந்து இரையாகி வந்தவர்கள், அப்பாவித் தமிழ் மக்கள். அவர்களுக்குத் துணை நிற்காமல், இனவெறி இலங்கைக்குத் துணைபோனது ராஜீவின் அரசு. அது, இந்திய ராணுவத்துக்கு மிகப்பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியதில் போய் நின்றது. இப்போதும் இந்தியாவின் பிழையான நிலைப்பாடு பெரிதாக மாறிவிடவில்லை. தமிழரின் பூர்விகத் தாயகமான ஈழ மண்ணில் ஒரு மிகப்பெரிய தமிழினஅழிப்பை இலங்கை ராணுவம் செய்துமுடித்த பிறகும், கள்ள மௌனம் சாதிக்கிறது இந்தியா. இனப்படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காக்க 14 ஆண்டுகளாக தொடர்ந்து முயல்கிறது. இது இந்தியாவை எங்கே கொண்டுபோய் நிறுத்தப் போகிறதென்பது தெரியவில்லை.

1987ல், கொழும்பில் இருந்துகொண்டு செய்த துரோகத்தை, இன்று ஜெனிவாவில் இருந்துகொண்டு செய்கிறது இந்தியா. வித்தியாசம் இது தான்! இனப்படுகொலைக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதே அதன் அதிமுக்கிய வேலையாக இருக்கிறது. இந்தத்  துரோகத்தையும் மீறி, இனப்படுகொலைக்கு நீதி பெற தமிழினத்தால் முடியும். அப்படிப் பெறுகிற நீதி, திலீபன் உள்ளிட்டோர் கனவு கண்ட தமிழீழத்தை நடைமுறை சாத்தியமாக்கும். அப்படியொரு சூழலில், அதைத் தடுக்க இந்தியாவால் நிச்சயம் முடியாது. குறுக்கு வழியில் ஏதாவது செய்து தமிழின அழிப்புக்கு நீதி கிடைக்கும் வாய்ப்பைத் தடுக்க முயன்றால், இந்திய அமைதிக் காப்புப் படைக்கு ஏற்பட்ட அவமானத்தைக் காட்டிலும் கூடுதலான அவமானத்தை சர்வதேச அரங்கில் இந்தியா சந்திக்க நேரலாம்.

thilee people திலீபனின் தீர்க்கதரிசனம் – புகழேந்தி தங்கராஜ்விடுதலை உணர்வும், சுய மரியாதையும் தமிழரின் ரத்தத்திலேயே ஊறியவை. தாய்மண்ணுக்காக தம்மையே கொடுக்கத் தயாராக இருக்கும் பேராண்மை தமிழினத்தின் பிதுரார்ஜித சொத்து. ஒரு உயிர் போனால், அடுத்த உயிர் அதற்குத் தயாராக இருக்கும். இந்த விடுதலைத் தாகத்தை  இந்தியா எப்போது உணரப் போகிறதென்பது புரியவில்லை.

திலீபனுக்கு வீர வணக்கம் செலுத்தியபிறகு, ‘ஒரு விடுதலை வீரன் சாவதில்லை…அவனது உயிராக இயங்கிவந்த லட்சிய நெருப்பு அணைந்துவிடுவதில்லை……. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவை அது  தட்டியெழுப்புகிறது…’ என்றார் பிரபாகரன். இந்தியாவின் மனசாட்சியையும் அது தட்டியெழுப்பினால், வங்கக் கடல் சார்ந்த இந்தியாவின் பாதுகாப்புக்கு அது மிக மிக நல்லது.

இந்த யதார்த்தத்தை எடுத்துச் சொல்ல, ஹர்கிரட் சிங் போன்ற மனசாட்சியுள்ள அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள். ‘இந்தியா நினைத்திருந்தால் திலீபனைக் காப்பாற்றியிருக்க முடியும்’ என்கிற அவரது குரலைப் போல், ‘இந்தியா நினைத்தால், ஈழத்தில் நடந்த இனப் படுகொலைக்கு நீதி பெற்றுக் கொடுக்க முடியும்’ என்று எடுத்துச் சொல்கிற ஒரு குரல் மிக மிக அவசியம். அது ஈழத்துக்கு மட்டுமின்றி, இந்தியா என்கிற காந்தி தேசத்துக்கும் மரியாதையைத் தேடித்தரும். இந்தியா செய்த துரோகத்துக்குப் பரிகாரமாகவும் அது இருக்கும்.

திலீபனின் தீர்க்கதரிசனம் – புகழேந்தி தங்கராஜ் | September 30, 2023 (ilakku.org)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.