Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆலகாலச் செடி – குறியீட்டு எண்: 420

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆலகாலச் செடி – குறியீட்டு எண்: 420

panel-of-the-rhinos-chauvet-cave-replica பிரான்ஸ் குகை ஓவியம்

1971ல் கலிபோர்னியாவின் சான் ராஃபெல்  பள்ளியின் ஐந்து பேர் கொண்ட அந்தக் குழு  தங்களை ’வால்டோஸ்’ என்று அழைத்துக் கொண்டது. அவர்கள் கையில் தற்செயலாக கிடைத்திருந்த ஒரு வரைபடம்  பள்ளியின் அருகிலிருக்கும் அடர் காட்டுக்குள் சட்டவிரோதமாக வளர்க்கப்படும் போதைச்செடிகளின் இருப்பிடத்தைக் காட்டியது. ஸ்டீவ், டேவ், ஜெஃப்ரி, லேரி மற்றும் மார்க் ஆகிய ஐவரும் மாலை பள்ளி முடிந்த பின்னர் ரகசியமாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று கூடி அந்த செடிகளை தேடிக்கண்டுபிடிக்க முடிவெடுத்தனர்.

மறுநாள் பள்ளி வளாகத்தின் பின்புறமிருந்த லூயி பாஸ்டரின் வெண்கலச்சிலையின் அருகிலிருந்த பீச் மரப்பொந்திற்குள் 4;20 என்று மட்டும் எழுதியிருந்த நீலகாகிதத்துண்டை வைத்துவிட்டு ஜெஃப்ரி சைக்கிளில் புறப்பட்டுச் சென்றான். அந்த காகிதத்தை குழுவின் மற்ற நால்வரும் தனித்தனியே எடுத்துப் பார்த்துவிட்டு அவர்கள் முன்பே பேசி வைத்திருந்ததை போல பள்ளியின் பின்புறம் விரிந்திருந்த காட்டின் தொடக்கத்தில் இருந்த மாபெரும் ஓக் மரத்தடியில்  மிகச்சரியாக மாலை 4. 20 க்கு  சந்தித்தார்கள்.

தினந்தோறும் மாலை  4.20க்கு தேடல் பயணத்தை துவங்கிய அக்குழுவின் முயற்சி  இரண்டு மாதங்களில் வெற்றியடைந்து, அங்கு வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளின் இலைகளை போதைப்பொருளாக உருவாக்கி பயன்படுத்தவும் துவங்கிய அவர்கள் தங்களுக்குள் போதைக்கான ரகசிய குறியீடாக   4.20 என்பதை புழங்கினர். பிற்பாடு இந்த நேரம் பிறருக்கும் தெரிந்து 420, 4.20, 4:20 4/20 என்பவை கஞ்சா புகைத்தலுக்கான ரகசிய குறியீட்டுச் சொல்லாக மாறிவிட்டிருந்தது’

1991லிருந்து கஞ்சா புகைப்பவர்களின் கொண்டாட்டங்கள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 20 அன்று 4/20 வது தேதி என்பதை குறிக்க  அமெரிக்க தெருக்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்த வருடங்களில்  கஞ்சா போதையில் நடைபெறும் குற்றங்களை கட்டுப்படுத்த காவல் துறையும் அதே 4.20 என்பதை  சங்கேத குறியீடாகப் பயன்படுத்த துவங்கினர்.

மே 1991ல்  கஞ்சா பயன்பாட்டிற்கான பிரத்யேக மாத இதழான ‘’High times ‘’முதன் முறையாக கஞ்சா பயன்பாட்டிற்கான குறியீட்டு எண்களாக 4.20 என்பதை குறிப்பிட்டது. கஞ்சா பயன்படுத்திய பல ராக் இசைக்குழுக்களும் இந்த எண்களையும் மாலை 4.20க்கு கஞ்சா பயன்படுத்துவதையும் பெருமளவில் பரப்பினார்கள். பின்னர் அமெரிக்காவெங்கிலும் கஞ்சா புகைப்பதற்கான நேரம் மாலை 4.20 என குறிக்கப்பட்டது. உலகின் பல நாடுகளிலும் இந்த 4.20  கஞ்சா புகைத்தலை, கஞ்சா உபயோகிப்பவர்களை, கஞ்சா குற்றங்களை குறிக்க பயன்படுத்தப்பட்டது. கஞ்சா புகைப்பவர்களால் நேரிடும் வழிப்பறி உள்ளிட்ட அபாயம் இருக்கும் இடங்களில் 420 என்னும் எச்சரிக்கைப் பலகை காவல்துறையினரால் அப்போதிலிருந்து வைக்கப்படுகிறது. அப்பலகைகள் பெரும்பாலும் திருடப்பட்டு அகற்றப்படுகின்றன. (இந்திய தண்டனை சட்டம் 420க்கு இத்துடன் தொடர்பில்லை)

2003ல் கஞ்சாவின் மருத்துவ உபயோகங்களுக்கான புதிய சட்டமும்  California Senate Bill 420  என்றே பெயரிடப்பட்டது. 2015ல் குறிப்பிட்ட அளவு கஞ்சாவை மனமகிழ்ச்சிக்கு பயன்படுத்துவதை அனுமதிக்கும் சட்டவரைவிற்கான போராட்டமான Initiative 71  என்பதை  முன்னெடுத்த  Adam Eidinger அதில்  வெற்றி பெற்றதும் தனது கார் லைசென்ஸ் எண்ணாக 420 என்பதை வைக்துக்கொள்ள அனுமதி பெற்றார். கஞ்சா பயன்பாட்டை குறித்தான பலநூல்களின் தலைப்புக்களிலும் 420 இடம்பெற்றது. 2018ல் டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க்  தனது நிறுவனத்தின் பங்குகளை 420 டாலர்களாக அறிவித்தபோது அவர் கஞ்சா பயன்பாட்டை மறைமுகமாக ஊக்குவிக்கிறார் என்னும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால் எலான் அந்த எண் கஞ்சா பயன்பாட்டுடன் தொடர்புள்ளதாக அமைந்தது தற்செயல் என்று சொல்லி அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பொதுவாக கஞ்சாவைப் பயன்படுத்துவோரும் கஞ்சா என்பதை அறிந்து மட்டும் வைத்திருப்போரும் கஞ்சா என்பது ஒரு இலை, இலைப்பொடி அல்லது இலைப்பசை என்று மட்டுமே நினைக்கின்றனர். கஞ்சாப்பயிரென்பது  போதை அளிக்கும் வேதிச்சேர்மானங்களை கொண்டிருக்கும் கன்னாபிஸ் பேரினத்தின் மூன்று சிற்றினங்களான கன்னாபிஸ் சடைவா, இண்டிகா மற்றும் ருட்ராலீஸ் ஆகியவை. கஞ்சா ஆண் பெண் என தனித்தனி செடிகளாக இருக்கும். அரிதாக இருபால் மலர்களும் இருக்கும். கலப்பின வகைகளும் உண்டு.

இவற்றின் இலைகள், உலர்ந்த மலர்கள், தண்டு, மலரரும்பு  பிசின் மற்றும் விதைகள் கஞ்சா மாரிவானா, வீட், டோப் அல்லது பாட் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. உலகின் பல நாடுகளில் கஞ்சா செடியின் பாகங்களுக்கும், கஞ்சா பொருட்களுக்கும் பலவிதமான பெயர்கள் புழக்கத்தில் இருக்கின்றன. கஞ்சா சாகுபடியில் சணப்பை (Hemp) நார்ப்பயிர்கள் தனியாகவும் போதைப்பண்புகள் கொண்டிருப்பவை தனியேவும் சாகுபடி செய்யப்படுகின்றது.

பொதுவாக கஞ்சா செடியிலிருந்து பாங், கஞ்சா, சரஸ், ஹஷீஷ் என்னும் நான்கு வகையான  போதைப்பொருட்கள் கிடைக்கின்றன. பெண் கஞ்சா செடிகளின்  பிசின்  நிறைந்த உலர்ந்த மலர்த்தலை என்னும் மஞ்சரிகள் கஞ்சா எனப்படுகின்றன. உலர்த்தப்பட்ட இலைகள், இலைப்பொடி, இலைச்சாறு இலைப்பசை உருண்டைகள் பாங் எனப்படுகின்றது. இது கரும்பச்சை நிறத்தில் காணப்படும்.   பச்சையாக பிரத்யேக நறுமணத்துடன் இருக்கும் சரஸ் இலை மற்றும் மலர்களின் பிசினை கொண்டு செய்யப்படுகிறது. மெல்லிய வளரிகள் கொண்டிருக்கும்  பிசின் நிறைந்த பெண்மலரரும்புகள் நன்கு அழுத்தப்பட்டு பிசைந்து உருவாவது ஹஷீஷ். இது பழுப்பு கருப்பு மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்

10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே மனித குல வரலாற்றுடன் நெருக்கமான தொடர்பிலிருக்கும் பல தாவரங்களில் கஞ்சாச்செடியை போல நெருக்கமான கலாச்சார  தொடர்புடையவை  வெகுசில தாவரங்கள் தான். கஞ்சா தனது காட்டுமூதாதையான  ஹாப்ஸ் எனப்படும் தாவரத்திலிருந்து பிரிந்து புதிய நிலப்பகுதிகளில் 28 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தனித்த தாவரமாக தோன்றியது. வளமான மண்ணும் சூரிய ஒளியும் இருந்த இடங்களில் கஞ்சா செழித்து வளர்ந்தது. மனிதகுடியிருப்புகள் தோன்றும் இடங்களிலெல்லாம் உடன் சென்று வளரும் “camp follower plants”  என்றழைக்கப்படும் தாவரங்களில் கஞ்சா செடியும் ஒன்று. கஞ்சாச்செடி  மனிதர்களால் மட்டுமே மிக விரைவாக உலகின் பல இடங்களுக்கு பரவியது. இவற்றின் கனிகள் மிகச்சிறியவை, மேலும் சதைப்பற்றோ சுவையோ இல்லாதவை. எனவே விலங்குகளும் பறவைகளும் கஞ்சா செடியின் பரவலில் அதிகம் பங்கெடுக்கவில்லை. இவை உருண்டையாக இறகுகள் இல்லாமல் இருப்பவை என்பதால் காற்றில் பறந்து பரவும் சாத்தியமும் இல்லை. 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாடோடிகளாக பல இடங்களுக்கு பெயர்ந்த மனிதர்களுடன் கஞ்சாசெடியின் விதைகளும் பயணித்து பல இடங்களில் வளரத்துவங்கியது.  இந்த கூட்டுப்புலம்பெயர்தல் மனிதர்களுக்கும் தாவரங்களுக்குமான பகிர்வாழ்விற்கான மிகசிறந்த உதாரணங்களிலொன்று.  ஒரு மையப்புள்ளியில் இருந்து யூரேசியா முழுவதும் கஞ்சா பரவிப் பெருகியதை, இம்மாபெரும் நிலப்பரப்பின் பெரும்பாலான மொழிகளில்  கஞ்சாச்செடியின் பெயரைக்குறிக்கும்  ஒன்றுக்கொன்று வேர்த்தொடர்புடைய சொற்களைக்கொண்டும் அறியலாம்.

கிரேக்க  “kannabia” மற்றும் லத்தீன  “cannabis” ஆகிய பெயர்கள் சணப்பைக்கான அரேபியச் சொல்லான “kinnab” லிருந்து தோன்றியிருக்கலாம். ஆங்கிலக்சொல்லான  “assassin”  என்பது ஹஷீஷ் உபயோகித்து போதையேற்றிக்கொள்ளும்  hashishin என்னும் சொல்லில் இருந்தே உருவானது என்றும் சொல்லப்படுகிறது. ஆங்கிலத்தில்  hemp ஜெர்மானிய மொழியில் Hanf ஆகிய இரண்டும் கிரேக்கத்தின் கவாபிக், லத்தீன கன்னாபிஸ், இத்தாலிய கனப்பா மற்றும் ருஷ்யாவின் கொனொப்லியா போன்ற சொற்களின் வேர்கொண்டவை. சணப்பையின் ஆங்கிலச்சொல்லான  hemp பண்டைய ஆங்கிலச்சொல்லான  hænep, லிருந்து வந்தது. அரபியில் இச்செடி qunnab, துருக்கியமொழியில் kendir,  ஜார்ஜிய மொழியில்  kanap’is  என்றும் பெயர் கொண்டிருக்கிறது.

மத்திய ஆசியாவின்  அல்தாய் மலைத்தொடர்களில் 12000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கஞ்சா மத்திய ஆசியாவின் நாடோடி இனங்களால் கிமு 700ல் கிழக்கு ஐரோப்பாவுக்கு அறிமுகமானது. ஆங்காங்கே பயிராகிக்கொண்டிருந்த கஞ்சா செடியின் நார் மற்றும் எண்ணெய் உபயோகங்களுக்கு பின்னர் தற்செயலாகவே கஞ்சாவின் போதைப்பண்புகள் தெரியவந்து அதன் சாகுபடி அதிகரித்திருக்ககூடும்.

யுனானி மருத்துவ முறையை உருவாக்கியவரான கேலன் (Claudius Galen AD 129-199/217) இத்தாலியில் இரவுணவுக்கு பிறகு சிறிய கஞ்சா கட்டிகள் இனிப்புக்களுடன் பரிமாறப்பட்டது வழக்கமாக இருந்ததை குறிப்பிடுகிறார். ஒரு காலகட்டத்தில் கஞ்சா உண்பதைக்காட்டிலும் புகைப்பது அதிக போதையளிக்கும் என கண்டறியப்பட்டிருக்க கூடும். ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹெரோடோட்டஸ் (c. 484-c. 425 bc) என்னும் வரலாற்றாய்வாளர் ஈரானிய தொல்குடிகளான சித்தியன்கள் (Scythians) சிறுசிறு நிலவறைகளுக்குள் தவழ்ந்து சென்று அமர்ந்து கம்பளியால் உடலை போர்த்திக்கொண்டு நெருப்பில் கஞ்சாசெடியின் விதைகளை இட்டு அந்த புகையை  நுகர்ந்து மகிழ்ச்சியாக இருந்தததை விவரித்திருக்கிறார். ரோமனிய ஆட்சிக்காலத்தில் கஞ்சாவின் மருத்துவ பயன்பாடுகள் இருந்ததை பிளைனி, டயாஸ்கொரிடஸ் கேலன் ஆகியோர் பதிவு செய்திருக்கின்றனர்.

அரேபிய நூல்களின் மொழியாக்கங்களின் வழியே ஐரோப்பா கஞ்சாவின் மருத்துவப்பயன்களை அறிந்து கொண்டது. கிமு 2700 ல் எழுதப்பட்ட உலகின் மிகப்பழமையான சீன மருத்துவ நூலான pen-ts’ao, கஞ்சா செடியின் மருத்துவப்பயன்களை குறிப்பிடுகிறது பண்டைய இந்தியாவில் கஞ்சா தயாரிப்பான பாங் விருந்தோம்பலின் அடையாளமாக அளிக்கப்பட்டிருக்கிறது. கிமு 10ம் நூற்றாண்டில் சிந்துச்சமவெளி நாகரிகத்திலும் ஓபியத்துடன் கஞ்சாவும் சாகுபடி செய்யப்பட்டு போதைப்பொருளாக பயன்பாட்டில் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றது. 

சுஷ்ருதர் கஞ்சாவை உடலின் திரவங்களை சமப்படுத்துவதன் பொருட்டும் பாலுணர்வை ஊக்குவிக்கவும் வலிநிவாரணியாகவும் அளித்திருக்கிறார். சித்தர்களில் ஒருவரான கோரக்கர் கஞ்சாவை முதன்முதலில் மனச்சிக்கல்களுக்கு மருந்தாக பயன்படுத்தினார். பல எகிப்திய பிரமிடுகளில் கஞ்சாப்பொருட்கள் கிடைத்திருக்கின்றன. இரண்டாம் ராம்சேயின் கல்லறையில் இருந்து கஞ்சா மலர்களின் மகரந்தங்கள் கிடைத்தன.

1253ல் சூஃபி துறவிகள் மிக வெளிப்படையாகவே கெய்ரோவில் கஞ்சாவை சாகுபடி செய்தனர். எகிப்திய அரசு சூஃபியிசம்  மக்களுக்கு அச்சுறுத்தலானது என்று அறிவித்து கஞ்சா வயல்களை முற்றிலுமாக அழித்தது. எனினும் நைல் நதிக்கரையோர விவசாயிகளுடன் உடன்படிக்கை செய்துகொண்ட சூஃபிக்கள் பிற பயிர்களுடன் கலந்து கஞ்சாப்பயிரை சாகுபடி செய்தனர்.  1378ல் எகிப்திய அரசு கஞ்சாவுடன் சேர்த்து விவசாயிகளின் அனைத்துப்பயிர்களையும் அழித்தார்கள். கஞ்சா சாகுபடிக்கு உடந்தையாக இருந்த விவசாயிகளைக் கைது செய்து தலை கொய்தார்கள். எனினும் கஞ்சாவின் தேவை எகிப்தில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தது. தொடர்ந்த நூற்றாண்டுகளுக்கு எகிப்தில்  கஞ்சா சட்டவிரோதமாக சாகுபடியானது. இன்று வரையிலுமே கஞ்சா சூபிக்களின் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. 

சீனாவிலும் ஜப்பானிலும் மந்திர தந்திரங்களுக்கெனவும் மருத்துவ சிகிச்சையிலும் கஞ்சா பெருமளவில் பயன்படுத்தபட்டது. சீன மந்திரவாதிகள் கஞ்சா செடியின் தண்டுகளை பாம்புகளை போல் வளைத்து ஆவிகளை விரட்டும் சடக்குகளில் உபயோகித்தனர். அஸிரியர்களின் களிமண்கட்டிகளில் கஞ்சாவின் மருத்துவ உபயோகங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

புகையிலையுடன் திரும்பி வந்த கொலம்பஸின் இரண்டாம் உலகப்பயணத்துக்கு பிறகுதான் கஞ்சா புகைத்தல் ஐரோப்பாவுக்கு அறிமுகமானது திபெத்திய தாந்த்ரீக மரபில் கஞ்சா புகைநுகர்வு தீயஆவிகளை விரட்டும் என நம்பிக்கை உள்ளது. கெளதம புத்தர் ஒரு நாளுக்கு ஒன்று என 6 நாட்களுக்கு கஞ்சாவிதைகளை ஞானம் பெறு முன்பு எடுத்துக்கொண்டாரென்றும் சொல்லப்படுகிறது. ஆரம்ப கால குகை ஓவியங்கள்கூட போதை இலைகளின் மயக்கத்திலேயே வரையப்பட்டிருக்கக்கூடும் என உளவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

ஆப்பிரிக்க பழங்குடியினரிடம் கஞ்சா புகைக்கும் கஞ்சா பொருட்களை பயன்படுத்தும் வழக்கம் நெடுங்காலமாகவே இருக்கிறது. பசியை தூண்டவும் பல்வேறு சிகிச்சைகளுக்கு, போதைப்பொருளாகவும் வழிபாட்டிலும் கஞ்சா பெருமளவு அங்கு பயன்பாட்டில் இருந்தது . ஆப்பிரிக்க இனக்குழுக்கள் கஞ்சா வழிபாட்டிலும் ஈடுபட்டிருக்கின்றனர். பண்டைய இந்திய கிரேக்க ரோமானிய அசிரிய நூல்கள் பலவற்றிலும் கஞ்சாச்செடியின் மருத்துவ பயன்பாடுகள் கூறப்பட்டிருக்கிறது. 16ம் நூற்றாண்டில் பிரேசிலுக்கு கப்பலில் வந்த  போர்த்துக்கீசிய அடிமைகள் தங்கள் உடைகளில் தைக்கப்பட்டிருந்த கஞ்சா விதைகளை பிரேஸிலில் விதைத்து அங்கு கஞ்சாவை அறிமுகம் செய்தனர் பிரேஸிலின் நிலத்தில் அடிமைகள் கொண்டு வந்த அனைத்து வகை கஞ்சாவிதைகளும் செழித்து வளர்ந்தது.  

திபெத்திலிருந்து கஞ்சாச்செடி நாடோடிப் பழங்குடியினரால் இந்தியாவிற்குச் கிமு 2000த்தில்  அறிமுகமானது கஞ்சா பரவலில் இந்தியாவின் பங்கு பெரும்பான்மையானது.   கன்னாபிஸ் இண்டிகா  சிற்றினம் நூற்றாண்டுகளாக இமாலயமலைப்பகுதியிலும் சுற்றுப்புறங்களிலும் இயற்கையாக செழித்து வளர்ந்திருந்தது.கஞ்சா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் சடங்கு, மத, சமூக மற்றும் மருத்துவ பழக்கவழக்கங்களுடன் தொடர்புடையது. 18ம் நூற்றாண்டில் சீக்கிய குரு கோவிந்த் சிங் மிகக்கடுமையான போர்களுக்கு செல்லும் வீரர்களுக்கு கஞ்சா உருண்டையான பாங் அளித்திருக்கிறார்

இந்தியாவில் கஞ்சா செடியின் உபயோகம் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தே பக்தி மார்க்கத்திலும் மருத்துவத்திலும் இருந்தது.  மனிதர்களுக்கும் கஞ்சாச்செடிக்குமான நீண்ட நெடிய உறவை பல நாகரிகங்களின் தொன்மங்களும் உறுதிசெய்கின்றன. இந்திய தொன்மங்களில் கஞ்சா சிவனுடன் தொடர்புடையாதாகவே சித்தரிக்கப்படுகிறது. மகாபாரதத்தில் சிவமூலி என்று கஞ்சா குறிப்பிடப்படுகிறது.

ஆலகால விஷம் தொண்டையில் நின்றதால் அவதிப்பட்ட சிவனுக்கு வலி நிவரணமாக கஞ்சா பார்வதியால் அளிக்கப்பட்டது என்றும், பாற்கடல் கடையப்பட்ட போது கிடைத்த அமுத்தத்தை சிவன் தனதுடலில் இருந்து உருவாக்கிய கஞ்சாவை கொண்டு தூய்மை படுத்தினாரென்றும், பாற்கடலில் கிடைத்த அமுதத்தின் ஒரு துளி பூமியில் விழுந்து கஞ்சா செடியானது என்றும் இந்திய தொன்மங்களில் கூறப்படுகிறது. சைவம் சிவனை கஞ்சாவின் தலைவன் என்கிறது.

பண்டைய இந்தியாவிலும் இப்போதும் கஞ்சா பொருட்கள் சிவபக்தர்கள் சைவ துறவிகளால் பயனபடுத்தப்படுகிறது.  சிவ வழிபாட்டில் கஞ்சா பரவலாக இந்தியாவெங்கிலும் உபயோகிக்கப்படுகிறது. கனவுகளில் கஞ்சா செடியைக் கண்டாலும் பயணங்களுக்கு முன் கஞ்சா வைத்திருப்பவரை  காண்பதும் நல்ல சகுனம் என பண்டைய இந்தியாவில் நம்பப்பட்டது. நவராத்திரியின் போது சிவலிங்கங்கள் பாங்’கால் அபிஷேகம் செய்யப்படுவதும், பட்டினிவிரதம் இருக்கும் சாதுக்களுக்கு விரதம் முடித்து வைக்க பாங் பானம் அளிப்பதும் தொன்று தொட்டு மத்திய மற்றும்  வட இந்தியாவில் இருக்கும் வழக்கம்

 துர்கா பூஜையின் இறுதி நாளன்று வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு கஞ்சா கலந்த பானம் அளிப்பது இன்றும் வங்காளத்தில் வழக்கமாக இருக்கிறது. வங்காளத்தின் தாரகேஸ்வரர் ஆலயத்தில்  சிவராத்திரியில் கஞ்சா இலைகளால் சிவனை அர்ச்சனை செய்கிறார்கள். ஒரிஸா ஜகன்னாதர் ஆலயத்தில் சிவராத்திரியின் போது இறைவனுக்கும் பக்தர்களுக்கும் கஞ்சா அளிக்கப்படுகிறது. இந்தியாவில் பல பாகங்களில் ஹோலி தீபாவளி மற்றும் திருமணம் உள்ளிட்ட விழாக்களில் கஞ்சா பொருட்கள் பயன்படுத்தப் படுகிறது. மார்வாரிகளும் சிவபூஜையில் கஞ்சாவை உபயோகிக்கின்றன.

19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பிய ஹோமியோபதி மருத்துவர்கள் கஞ்சாவிதைகளை பல்வேறு சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தினர். 1840களில ஐரிஷ்மருத்துவரன  வில்லியம் புரூக்  (William Brooke O’Shaughnessy) உள்ளிட்ட பல மருத்துவர்கள்  கஞ்சாவை சிகிச்சையளிக்க பயன்படுத்த துவங்கினர். 1960களில் ஹிப்பி கலச்சாரம் உருவானபோது கஞ்சா மேலும் பரவலாக பயன்படுத்தப்பட்டது அவ்விளைஞர்களின் அடையாளமாகவே கஞ்சா புகைத்தல் சித்தரிக்கப்பட்டது.   

1960களில் கஞ்சா பயன்பாடு உலகெங்கிலுமே அதிகரித்திருந்தது. பல்லாயிரக்கணக்கான அமெரிக்க  இளைஞர்களின் உதடுகளில் கஞ்சா சிகரெட் புகைந்தது. ஆனால் அறிவியலாளர்களுக்கு அச்சமயத்தில் கஞ்சா குறித்து அதிகம் தெரிந்திருக்கவில்லை. அப்போது  30 வயதில் இருந்த இஸ்ரேலின் வைஸ்மேன் அறிவியல் நிறுவனத்தில் இளம் வேதியியலாளராக பணிபுரிந்த  ரஃபேல் மெக்குலம் ஆர்வமூட்டும் இயற்கைப்பொருட்களுக்கான தேடலில் ஈடுபட்டிருந்தார்.  1964ல் மெக்குலமும் அவரது குழுவும் முதன்முதலாக THC  எனப்படும் Delta-9-tetrahydrocannabinol  மற்றும் cannabidiol என்கிற CBDயையும் கஞ்சா செடியிலிருந்து கண்டறிந்தார்கள்

கஞ்சாவின் வரலாற்றில் கஞ்சாவுகெதிராகவும் கஞ்சா பயன்பாட்டை ஆதரித்தும் சட்டங்களும் சட்டத் திருத்தங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சமீப காலங்களில் கஞ்சாவின் மருத்துவ பயன்பாடுகள் பல நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மருத்துவத்தின் பொருட்டு கஞ்சா சாகுபடியும் சட்டபூர்வமாக தொடங்கப்பட்டிருக்கிறது. ஆச்சர்யமூட்டும் விதமாக மேற்கில் சமீபத்தில் துவங்கி இருக்கும் கஞ்சாவின் மருத்துவப்பயன்பாடுகள் குறித்த அறிதல் பண்டைய இந்தியாவில் பலநூறாண்டுகள் முன்பே புழக்கத்தில் இருந்திருக்கிறது. சுவாசக்கோளறுகளுக்கு கஞ்சா தயாரிப்புக்கள் பயன்படுத்தப்பட்டதற்கான குறிப்புக்கள் சுஷ்ருத சம்ஹிதையில் குறிப்பிட்டிருக்கிறது.

பல்வலிக்கு சரஸை வலிக்குமிடத்தில் வைப்பதும் தூக்கமின்மை  மனஅழுத்தம் போன்றவற்றிற்கு கஞ்சா வீட்டு மருத்துவத்திலும் சாதாரணமாக  பண்டைய இந்தியாவில் உபயோகிக்கபட்டது. கஞ்சா பாலுணர்வு ஊக்கியாகவும்  இந்தியாவில் பெரிதும் பயன்பாட்டில் இருந்தது. கஞ்சா பல நூறாண்டுகளாக உலகில் வலிநீக்கியாக, வலிப்புகள் குணமாக பசிஉணர்வை தூண்ட பதட்டத்தை குறைக்கவென்று பயன்பாட்டில் இருந்தது. ஆஸ்பிரின் போன்ற வலி நிவரணிகளும் தூக்கமருந்துகளும் கண்டறியப்பட்ட பின்னர் கஞ்சாவின் மருத்துவப்பயன்பாடுகள் மெல்ல மெல்ல குறைந்தன. தற்போது மீண்டும் கஞ்சா சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுவது பல நாடுகளில் சட்டபூர்வமாக்க  அனுமதிக்கப்பட்டிருக்கிறது

2018-இல் கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்பட்ட Epidiolex,  வலிப்பு நோய்க்கான சிகிச்சைக்கென சந்தைப்படுத்தப்பட்டது. மேலும் மூளைப்பிளவாளுமைச் சிக்கல், புற்றுநோய், பார்கின்சன், OCD போன்றவற்றிற்கும் கஞ்சாபொருட்கள் உலகெங்கிலும் பரவலாக மருத்துவரின் பரிந்துரையுடன்  உபயோகிக்கப்படுகின்றன. கடந்த செப்டம்பர்  2020ல் அமெரிக்கா கஞ்சா பயன்பாட்டிற்கான சட்டங்களையும் கெடுபிடிகளையும் தளர்த்தியது. THC மற்றும் THCக்கு இணையான செயற்கை பொருட்களை  FDA   புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் சிகிச்சையினால் உண்டாகும் பக்கவிளைவுகளுக்கான மருந்தாக அங்கீகரித்திருக்கிறது. ஆட்டிசம், வலி நிவாரணம், உறக்கம் வரவழைப்பது ஆகியவற்றில் கஞ்சா வேதிப்பொருட்களின் பங்கு குறித்து மேலும் ஆய்வுகள் தொடர்ச்சியாக நடந்த வண்ணம் இருக்கின்றன. 

இந்தியாவில் முதன்முதலாக CSIR-IIIM ல் கஞ்சா ஆய்வுத்திட்டம் 2023ல் கனடாவைச்சேர்ந்த ஆய்வு நிறுவனத்துடன் கூட்டாக துவங்கப்பட்டு ஜம்முவில் மருத்துவ உபயோகங்களுக்காக கஞ்சா சாகுபடி செய்யப்படுகிறது. ‘Cannabis Research Project’ of CSIR-IIIM  என்னும் இத்திட்டத்தின் முதன்மை நோக்கம்.  வலிப்பு, புற்று மற்றும் நரம்பு நோய்களுக்கான வலி நிவாரணியாக கஞ்சாவை பயன்படுத்துதல். இத்திட்டத்தில் சாகுபடியாகும் கஞ்சாப்பயிர் ஏற்றுமதித்தரம் வாய்ந்தது.

மனிதகுலத்துடன் பின்னிப்பிணைந்த கஞ்சாவின் பயன்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் இடையிலான  உறவு சிக்கலானதாவே இருக்கிறது.இனி வரும்காலங்களில் , கஞ்சாவின் மருத்துவ உபயோகங்கள் மற்றும் கவனமான கஞ்சா நுகர்வு ஆகியவற்றிற்கான தீவிரமான ஆய்வுகள் தேவைப்படுகின்றது. போதைப்பொருளாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறியப்பட்டிருக்கும் கஞ்சா முறையான விரிவான ஆய்வுகள் நடந்தால் மனிதகுலத்திற்கு வரப்பிரசாதமாக மாறவும் கூடும். இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக கலைக்கும் ஞானத்துக்கும் செல்லும் ரகசிய வழியில் இதை எரித்து வெளிச்சமாய் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிட முடியாது.

 

லோகமாதேவி 

 

தாவரவியல் பேராசிரியர், கட்டுரையாளர். அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களை தமிழில் மொழிமாற்றம் செய்யும் பணியில் உள்ளார்.  தொடர்ந்து தாவரவியல் சார்ந்த தமிழ் கட்டுரைகளை மின்னிதழ்களில் எழுதி வருகிறார். தமிழ் விக்கி

 

https://akazhonline.com/?p=5208

கஞ்சாவுக்கு இந்தளவுக்கு வரலாறு உள்ளதா என ஆச்சரியமாக உள்ளது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.