Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுத்தைகளும் எமது சொத்துக்களே! இலங்கைக்கு கிடைக்கும் வருமானத்தில் சிறுத்தைகளின் பங்கு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: PRIYATHARSHAN     23 NOV, 2023 | 09:31 PM

image

வீ. பிரியதர்சன்

இலங்கையில் வாழும் சிறுத்தைகள் உலகளாவிய ரீதியில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இலங்கையின் வருமானம் ஈட்டும் சுற்றுலாத்துறையில் பெரும் பங்கையும் கொண்டுள்ளன. அந்த வகையில், ஹோட்டன் சமவெளி தேசிய சரணாலயத்தில் காணப்படும் சிறுத்தைகளை பார்வையிடுவதற்கென உலகின் பல நாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கானவர்கள் வருகை தருகின்றனர்.

“சுற்றுலாத்துறையை பொறுத்தவரையில், குறுகிய காலத்தில் சிறுத்தைகளை பார்வையிடுவதற்கான சிறந்த நாடாக இலங்கை காணப்படுகிறது. தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள சரணாலயங்களில் பல நாட்கள் செலவு செய்தாலும் சிறுத்தைகளை பார்வையிட முடியாத நிலை காணப்படுகிறது” என கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞான பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான இனோக்கா குடாவிதானகே கூறுகிறார்.

20221228-A03I8786_2__2_.jpg

“ஹோட்டன் சமவெளி தேசிய சரணாலயம் 1900ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வருடமொன்றுக்கு 4 இலட்சம் பேர் வருகை தருகின்றனர். கடந்த 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கொவிட் தாக்கத்தால் எவரும் இங்கு வரவில்லை. அதேபோன்று வருடத்துக்கு இங்கு மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளை தவிர 60 ஆயிரம் வாகனங்களில் மக்கள் வருகை தருகின்றனர்” என்கிறார்  ஹோட்டன் சமவெளி தேசிய சரணாலயத்தின் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சிசிரகுமார ரத்நாயக்க.

இந்தப் பகுதிக்கு பெருந்தொகையான வாகனங்கள் வந்துசெல்வதையும் மக்களின் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்துவதென்பது மிகவும் சிரமமான காரியம். இங்குள்ள வாகன தரிப்பிடம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை உரிய அதிகாரிகள் புனரமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுலாத்துறை மூலம் இங்கு வருமானம் ஈட்டப்படுவதால் குறித்து வாகனத் தரிப்பிடம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

IMG_20230814_065709.jpg

ஹோட்டன் சமவெளி (Horton Plains) இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசிய வனப்பூங்காவாகும். இது மொத்தம் 3159.8 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்டதுடன், சராசரியாக 2130 மீற்றர் (7000 அடி) உயரமானது. 1969ஆம் ஆண்டு முதல் வனவிலங்கு சரணாலயமாக காணப்பட்ட ஹோட்டன் சமவெளி, 1988 முதல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.

இங்கு பத்தனைப் புல் நிலங்களும் என்றும் பசுமையான மலைக்காடுகளும் காணப்படுகின்றன. இது நுவரெலியா நகரில் இருந்து 32 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

இது இலங்கையில் மிக உயரமானதும் தனிமைப்படுத்தப்பட்டதுமான மேட்டுநிலமாகும். இச்சமவெளி அயனமண்டல மலைக்காடுகளாலும் ஈர பத்தனைப் புல் நிலங்களாலும் ஆனது. இது இலங்கையில் உயிரினப் பல்வகைமை கூடிய இடங்களில் ஒன்றாகும்.

IMG_20230814_112438.jpg

“வருடத்துக்கு 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிக வருமானம் கிடைக்கிறது. இவ்வாறு கிடைக்கும் பணத்தில் ஒரு சிறு பகுதி கூட வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு கிடைப்பதில்லை. இவ்வாறு கிடைக்கும் பணம் திறைசேரிக்கே செல்கிறது. அங்கிருந்து வெவ்வேறு தேவைகளுக்கு அந்தப் பணம் பயன்படுத்தப்படுகிறது” என்றும் சிசிரகுமார ரத்நாயக்க கூறுகிறார்.

IMG_20230814_104214.jpg

ஹோட்டன் சமவெளி தேசிய சரணாலயத்தின் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சிசிரகுமார ரத்நாயக்க

“எமது நாட்டுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளில் 60 வீதமானோர் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளை பார்வையிடுவதற்கே இங்கு வருகை தருகின்றனர். இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் சிறுத்தைகளின் பங்களிப்பு அதிகமாக காணப்படுகிறது” எனக் கூறுகிறார், பிரபல வனவிலங்கு புகைப்படப் பிடிப்பாளரும் சிறுத்தை ஆர்வலருமான சங்க வன்னியாராட்சி.

இலங்கையின் காடுகளில் வாழும் சிறுத்தைகள் கடும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றன. இவற்றின் வாழ்வியலையும் காடுகளின் இயற்கை சமநிலையையும் பாதுகாக்கும் வகையில் வனஜீவராசிகள் திணைக்களம், இலங்கை வனஜீவராசிகள், வனவள பாதுகாப்பு சங்கம் உட்பட பல அமைப்புகள் ஒன்றிணைந்து சிறப்புத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. ஆனாலும் அவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதில் அலட்சியப் போக்கு காணப்படுவதாக வனவிலங்கு ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

“குற்றச் செயல்களில் ஈடுபடுவோரிடமும் இங்குள்ள நடைமுறைகளை மீறுவோரிடமும் அபராதங்களை அறவிடுகின்றோம். நாங்கள் இங்கு வருபவர்களிடம் சிகரெட் புகைக்க வேண்டாம், பொலித்தீன்களை பாவிக்க வேண்டாம் என்று கூறினால் எம்முடன் முரண்பட்டுக்கொள்வார்கள். இங்கு வருபவர்களுக்கு சிறந்த விழிப்புணர்வு இருந்தால்தான் எம்மாலும் சிறப்பாக இந்த இடத்தை பராமரிக்க முடியும்” எனவும் சுட்டிக்காட்டுகிறார் சிசிரகுமார ரத்நாயக்க.

சரணாலயங்களுக்கு வருவோர் குப்பைகளை அனைத்து இடங்களிலும் வீசுகின்றனர். இங்குள்ள மரைகளுக்கு உணவுகளை கொடுக்கின்றனர். பூக்களை பிடுங்குகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்.

IMG_20230813_153502.jpg

ஆகவே, சரணாலயங்களில் வழங்கப்படும் அறுவுறுத்தல்களை மக்கள் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் இவ்வாறான சரணாலயங்களை பாதுகாக்க முடியும் என்பதுடன் எமது அடுத்த தலைமுறையினரும் இதனை அனுபவிக்க முடியும்.

ஹோட்டன் சமவெளி தேசிய சரணாலயத்தில் 14 இனங்களைச் சேர்ந்த பாலூட்டி விலங்குகளும், 16 முதல் 20 வரையான ஈரூடக வாழ் உயிரினங்களும், 6 வகையான ஊர்வன இனங்களும், 98 வகையான பறவையினங்களும், 2 வகையான மீனினங்களும், 20 வகையான வண்ணத்துப் பூச்சியினங்களும் காணப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

“எனக்கு 6 வயதாக இருக்கும்போது முதன் முதலில் இங்கு சிறுத்தையை என் கண்களால் பார்த்தேன். வனவிலங்கு படப்பிடிப்பை எனது 24 வயதில் ஆரம்பித்தேன். இதுவரை 64 முறை என்னால் சிறுத்தைகளை அவதானிக்க முடிந்தது. ஹோட்டன் சமவெளியில் நாம் சிறுத்தைகளை அவதானிப்பது மிகவும் அரிதான விடயம். ஏனெனில், சிறுத்தைகள் மனிதர்களுடன் பழகுவது குறைவு. இதனால் அவற்றை நாம் அவதானிக்க முடியாதுள்ளது” என புகைப்படப் பிடிப்பாளர் சங்க வன்னியாராட்சி கூறினார்.

20231010-A03I1419-2__3_.jpg

98 வகையான பறவையினங்களில் 21 வகையான பறவைகள் இலங்கைக்கே உரியவையாக கணக்கிடப்பட்டுள்ளன. பல பறவையினங்கள் வேறு நாடுகளில் இருந்து குளிர்காலத்தைக் களிக்க வருபவையாகும். 70 வீதமான பறவைகள் இலங்கைக்கே உரிய பறவைகள் இங்கு காணப்படுகின்றன. இங்கு தற்போது 500க்கும் மேற்பட்ட சாம்பர் மான்கள் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போது 23 சிறுத்தைகள் மற்றும் காட்டுப் பன்றிகள் என்பன இங்கு காணப்படும் ஏனைய பெரிய பாலூட்டிகளாகும். இலங்கைக்கே உரிய கரடிக் குரங்கு, புள்ளிப் பூனைகள் என்பனவும் மீன்பிடிப் பூனைகளும் இங்கே காணப்படுகின்றன.

Researcher-and-Professor-of-Zoology-and-

விலங்கியல் துறை மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞான பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான இனோக்கா குடாவிதானகே

“ஹோட்டன் சமவெளியில் பல விலங்குகளும் பறவையினங்களும் வாழ்கின்றன. இலங்கையில்  4 வகையான பூனை இனங்கள் காணப்படுகின்றன. மீன்பிடிப் பூனை, காட்டுப் பூனை, துரும்பன் பூனை, சிறுத்தை (Fishing Cat, Jungle Cat, Rusty spotted cat and Leopard) இவையே தற்போது நமது நாட்டில் வாழ்கின்றன” என்கிறார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞான பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான இனோக்கா குடாவிதானகே.

சிறுத்தைகள், உணவுச் சங்கிலியை பேணுவதன் மூலம் இயற்கை சமநிலையை பேணுவதில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் (International Union for Conservation of Nature - IUCN) சிறுத்தைகள் அழிவுறக்கூடிய நிலையிலுள்ள இனமாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. விஞ்ஞான ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இலங்கையில் ஆயிரத்துக்கும் குறைவான சிறுத்தைகளே தற்போது வாழ்கின்றன.

20230709-A03I7422.jpg

சிறுத்தைகள் தனித்து வாழும் இயல்புடையவை. ஒரு நாளில் 18 மணித்தியாலங்கள் வரை ஓய்வெடுத்து உறங்கும் தன்மை கொண்டவை.  அத்துடன், அவை மாலை முதல் இரவு மற்றும் அதிகாலை நேரங்களிலேயே சுறுசுறுப்பாக காணப்படுவதோடு மான், மரை, காட்டுப்பன்றி, குரங்கு, முள்ளம்பன்றி ஆகியவற்றையும் பறவைகளையும் வேட்டையாடி இரையாக உட்கொள்கின்றன.

IMG_20230814_112047.jpg

“இந்த சரணாலயத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மரைகள் உள்ளன. அவை உண்ணுவதற்கு தேவையான புற்களை நாம் பராமரித்து வருகின்றோம். மரைகள் இருப்பதனால் தான் சிறுத்தைகளும் உயிர் வாழக்கூடியதாக இருக்கிறது. எனவே, நாம் புற்தரைகளில் வளரும் காட்டு மரங்களை கட்டம் கட்டமாக அகற்றி வருகிறோம்” என்கிறார் சிசிரகுமார ரத்நாயக்க.

இலங்கையில் கடந்த பத்து வருடங்களில் 96 சிறுத்தைகள் வரை உயிரிழந்திருப்பதாக வன ஜீவராசிகள் திணைக்களத் தகவல்கள்  கூறுகின்றன. 

“சிறுத்தைகள் மனிதனை வேட்டையாடுவதில்லை. மனிதர்கள் தான் வேட்டையாடும் சந்தர்ப்பத்தை உருவாக்குகின்றனர். மக்கள் வாழும் பகுதிகளில் சிறுத்தைகள் வருவதற்கு பிரதான காரணமே விறகு வெட்டுவதற்காக மனிதர்கள் காடுகளை அழிக்கின்றமையே ஆகும். சிறுத்தைகளின் உணவாக காணப்படும் மிருகங்களை வேட்டையாடி மனிதர்கள் உண்ணுகின்றனர். இதனால் சிறுத்தைகள் காடுகளை விட்டு மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்கின்றன. அங்கு சென்று கோழிகள், நாய்கள், ஆடுகள் போன்ற பிராணிகளை வேட்டையாடுகின்றன. இவ்வாறு மனிதர்களின் செயற்பாடுகளே சிறுத்தைகள் மனிதர்களின் வாழ்விடங்களுக்குள் நுழைய பிரதான காரணங்களாகின்றன” என்கிறார் சங்க வன்னியாராட்சி.

மக்கள் வாழும் பிரதேசங்களில் சிறுத்தைக் குட்டியை அவதானித்தால் உடனடியாக வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் சிறுத்தைக் குட்டியை நாம் கையால் தொடக்கூடாது. அத்துடன், சிறுத்தைக் குட்டியை பார்க்க வரும் மக்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரை குறித்த இடத்துக்கு வரவழைக்க வேண்டும்.

20230614-0Y4A9392.jpg

“காட்டு விலங்குகளை வேட்டையாடுவது நிறுத்தப்பட வேண்டும். அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மனிதன் உணவுக்காக காட்டு விலங்குகளை வேட்டையாடுவதால் சிறுத்தை போன்ற அருகிவரும் விலங்குகளுக்கு உணவில்லாமல் அவை மக்களின் இருப்பிடங்களுக்கு உணவுக்காக செல்லவேண்டிய நிலை காணப்படுகிறது” என இனோக்கா குடாவிதானகே தெரிவிக்கிறார்.

பொதுவாக சிறுத்தைகளின் இறப்புக்கு செயற்கை காரணிகளான காடழிப்பு, வாழ்விட இழப்பு, பொறிகளில் சிக்கி இறத்தல், தோல், பல், நகம் மற்றும் இறைச்சிக்காக வேட்டையாடப்படுதல், இயற்கைக் காரணியான  முதுமை மற்றும் ஏனைய மிருகங்களான முதலை, கரடி, எருமை போன்றவற்றின் தாக்குதல் போன்றவை காரணங்களாக உள்ளன.

சிரேஷ்ட சுற்றுச்சூழல் வழக்கறிஞரான கலாநிதி ஜெகத் குணவர்தன சிறுத்தைகள் தொடர்பான குற்றச்செயல்களை பற்றி கூறுகையில், 

“தாவர மற்றும் விலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் 30ஆவது பிரிவின் கீழ் சிறுத்தைகளை கொலை செய்வதோ அல்லது துன்புறுத்துவதோ அல்லது சிறுத்தையின் தோல், பல், நகம் மற்றும் இறைச்சியினை வைத்திருப்பதோ அல்லது விற்பனை செய்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.

இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் பொலிஸாராலோ அல்லது வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தினராலோ அல்லது வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினராலோ உத்தரவின்றி கைதுசெய்யப்படுவார்கள்” என்கிறார்.

20230621-A03I5973-4.jpg

“சிறுத்தைகள் அதிகளவு கால்நடைகளை வேட்டையாடுவதனால் கால்நடை உரிமையாளர்கள் சிறுத்தைகளை நஞ்சூட்டப்பட்ட மாமிசங்களை கொண்டு இறக்கச்செய்து புதைக்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுகிறது. இதனால் ஒப்பீட்டளவில் ஒரு யானையின் இறப்பு வெளிப்படையாக தெரிய வருவது போல் சிறுத்தைகளின் இத்தகைய இறப்புச் சம்பவங்கள் வெளிவருவதில்லை” என்கிறார் வவுனியா பல்கலைக்கழக உயிரியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ச. விஜயமோகன்.

சிறுத்தைகளுடைய வாழ்விடம், பரம்பல், உணவுப் பழக்கம் மற்றும் மனித - சிறுத்தை மோதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கிளிநொச்சி, சிகிரியா, பெலிகுல் ஓயா, பானம, கொட்டகல மற்றும் மோர்னிங் சைட் போன்ற இடங்களில் சிறுத்தைகள் ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டு வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கத்தினால் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

“இலங்கையில் 6 முக்கியமான இடங்களான பாணம, சிங்கராஜ வனம், கிளிநொச்சி, வலியுல்ல, கொட்டகலை, சிகிரியா ஆகியவை கருதப்படுகின்றன. இங்கு சிறுத்தைகளின் நடமாட்டம் மற்றும் அவற்றின் செயற்பாடுகள், பாதுகாப்பு குறித்து தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. அத்துடன் சிறுத்தைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இங்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பணிகளில் ஈடுபடும் எமது குழுவினர் சிறுத்தைகள் தொடர்பான புள்ளிவிபரங்கள், அவற்றின் இறப்பு தொடர்பான தரவுகள், மனித - சிறுத்தை மோதல் சம்பவங்கள் பதிவாகும் பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். சிறுத்தைகளின் நடமாட்டங்களை அவதானித்து, அவற்றுக்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். நாம் இவ்வாறான தரவுகளை பெற்று, அவற்றை வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்கி, அவர்களுடன் இணைந்தே நாம் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்” என இனோக்கா குடாவிதானகே கூறுகிறார்.

 

“குற்றச் செயல்களுக்கு அறவிடும் அபராதத் தொகைகளே வன ஜீவராசிகள் நிதியத்துக்கு கிடைக்கப் பெறுகின்றன. இதன் மூலமே வனஜீவராசிகள் திணைக்களம் ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது.இது ஒரு இலாபமீட்டும் நிறுவனம் அல்ல. உள்ளூர், வெளியூர் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து அறவிடப்படும் பணம் நேரடியாக திறைசேரிக்கே அனுப்பப்படுகின்றது. கடும் பிரயத்தனத்துக்கு மத்தியிலேயே நாம் இதனை பாதுகாத்து வருகின்றோம்” என்கிறார் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சிசிரகுமார ரத்நாயக்க.

 

“தேசிய வனங்களை வனஜீவராசிகள் திணைக்களம் பாதுகாத்து பராமரிக்க வேண்டும். அங்கு வாழும் விலங்குகளுக்கு ஏற்றாற்போல் அவற்றை பராமரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஹோட்டன் சமவெளியைப் பொறுத்தவரையில், இது மரைகளும் சிறுத்தைகளும் வாழும் வகையில் பராமரிக்கப்பட வேண்டும். அவற்றின் வாழ்விடங்கள் அழிக்கப்படும் பட்சத்தில் சிறுத்தை போன்ற அரிய வகை விலங்கினங்களை பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும்” என்று இனோக்கா குடாவிதானகே கூறுவதனூடாக வனங்களை பாதுகாப்பதில் அரச அதிகாரிகளுக்கு உள்ள பொறுப்புணர்வு சுட்டிக்காட்டப்படுகிறது.

IMG_20230813_153618.jpg

மேலும் சிசிரகுமார ரத்நாயக்க கூறுகையில், "ஹோட்டன் பிளேஸ் 3159.8 ஹெக்டேயர் நிலப்பரப்புடையது. ஆனால், இங்கு 26 பேரே கடமையில் ஈடுபடுகின்றோம். முன்பு இங்குள்ள விலங்குகளை பாதுகாப்பதற்கு 14 பேர் இருந்தனர். ஆனால், தற்போது ஒருவர் மாத்திரமே உள்ளார். காடுகளை பராமரிக்கவும் மரை போன்ற விலங்குகளுக்கான புற்தரைகளை பராமரிப்பதற்கும் நாம் பெரும் சிரமப்பட்டாலும், பராமரிப்பு பணிகளை நாம் சிறந்த முறையில் முன்னெடுத்து வருகிறோம்" என தெரிவித்தார்.

இவ்வாறு ஹோட்டன் சமவெளியில் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் சிறுத்தைகள் மனிதர்களுடன் பழகுவது குறைவு என்பதால் இங்கே சிறுத்தைகளை நாம் காண்பது அரிதான விடயமே.

யால, குமண சரணாலயங்களில் வசிக்கும் சிறுத்தைகளை விட ஹோட்டன் சமவெளியில் வசிக்கும் சிறுத்தைகள் முற்றிலும் வேறுபட்டவை. குளிர் காலநிலையில் இவை வசிப்பதால் இங்குள்ள சிறுத்தைகள் சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுகின்றன.

20230830-0Y4A3885__1_.jpg

ஹோட்டன் சமவெளியில் வசிக்கும் சிறுத்தைகள் சூழலுக்கு ஏற்ற வகையில், தங்களை மாற்றிக்கொள்கின்றன. சிறுத்தைகள் எப்போதும் தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காகவே மனிதர்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றன. நாம் எவ்வாறு சிறுத்தைகளுடன் இணைந்து வாழ முடியும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். சரணாலயங்களுக்கு செல்வோர் அங்குள்ள அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப செயற்பட வேண்டும்.

சரணாலயங்களில் பராமரிக்கப்படும் நம் நாட்டு விலங்குகளின் பாதுகாப்பு என்பது அங்கே விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள், நடைமுறைகளை உரிய முறையில் பார்வையாளர்கள் பின்பற்றுவதிலேயே தங்கியுள்ளது. இதனை பொது மக்கள் கருத்திற்கொள்ள வேண்டியது மிக அவசியம்.

அத்துடன் நாட்டிலுள்ள தேசிய வனங்களை கண் போல் பாதுகாத்து, பராமரிக்கும் பொறுப்பு வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு உண்டு. வனங்களில் வாழும் விலங்குகளுக்கு ஏற்றாற்போல் அவற்றை பராமரிக்க வேண்டிய கட்டாயமும் தற்போது ஏற்பட்டுள்ளது.

IMG_20230813_171647.jpg

நாட்டின் வன மற்றும் சரணாலய விலங்குகள் தொடர்பான அரச நிறுவனங்கள் மற்றும் விலங்குகளின் நலன் தொடர்பில் செயற்பட்டு வரும் துறைசார் நிபுணர்களும் இலங்கை நாட்டின் உயிருள்ள சொத்துக்களான விலங்குகளின் பராமரிப்பு தொடர்பில் சிந்திக்க வேண்டியவர்கள் ஆகின்றனர்.

அதன் அடிப்படையில், ஹோட்டன் சமவெளியானது மரைகளும் சிறுத்தைகளும் வாழும் வகையில் பராமரிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பொறுப்புக்குரிய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

வாழ்விடங்களான காடுகள் அழிக்கப்படும் பட்சத்தில் சிறுத்தைகள் போன்ற அரிய வகை விலங்கினங்களை பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும்.

இலங்கையில் சிறுத்தைகளின் பாதுகாப்பு தொடர்பில் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS) பல்வேறு நடவடிக்கைகளையும் சிறுத்தை - மனித மோதல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் நாட்டில் முன்னெடுத்து வருகின்றது. 

முக்கியமாக சிறுத்தைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்வதன் மூலம் அவற்றிடமிருந்து எம்மை பாதுகாத்து, இயற்கையோடு இணைத்து வாழ முயற்சி செய்து, அழிந்து வரும் இலங்கைக்கு சொந்தமான சிறுத்தைகளையும் பாதுகாத்து சூழல் சமநிலையை பேண நாம் கை கோர்ப்போம்.

leopard picture - Thivanka Thomas 

https://www.virakesari.lk/article/170075

  • கருத்துக்கள உறவுகள்

அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாத்தல் ஒவ்வரினதும் கடமையாகும்.......!   😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.