Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓட்டிச உலகில் நானும் - தன் வரலாற்று நூல் - ஆசிரியர் : மைதிலி றெஜினோல்ட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்டிச உலகில் நானும்

தன் வரலாற்று நூல்

autism-book.jpg?w=732

ஆசிரியர் : மைதிலி றெஜினோல்ட்
வெளியீடு : எங்கட புத்தகங்கள் (யாழ்ப்பாணம்).
“இந்தப் புத்தகத்தை எங்கட புத்தகங்கள் வெளியீடாக வெளியிட வேண்டும் என்று முழுமூச்சாகச் செயற்பட்டு சிறப்புற வெளிக் கொணர்ந்திருக்கும் வெற்றிச்செல்வி அவர்களுக்கும் எமது நன்றிகள்” என எங்கட புத்தகங்கள் குலசிங்கம் வசீகரன் அவர்கள் குறிப்பிடுகிறார்.

நூல் அறிமுகம்

ஓட்டிசம் (Autism) என்பதற்கான தமிழ்ப் பதம் தீரனியம் எனவும் தன்னியம் எனவும் இருவேறு வார்த்தைகளால் சொல்லப்படுகிறது. இந் நூல் தீரனியம் என்ற வார்த்தையை பாவிக்கிறது.

தனது குழந்தை ஓட்டிச குறைபாடால் பாதிக்கப்பட்டதை அறிந்த அந்தக் குடும்பம் அதிர்ச்சிக்கு உள்ளாகிறது. தமது எதிர்பார்ப்புகளின் மீது விழுந்த ஒரு அடியாக அது இருந்தது. துவண்டு போய்விடுகிறார்கள். தமது குழந்தையைக் கையாள்வதில் எல்லாமே புதிய அனுபவமாகவும் சகிப்புத்தன்மையின் எல்லையை விசாலிக்க வேண்டிய போராட்டமாகவும் ஆகிவிடுகிறது. இவைகளை வெற்றிகொண்டு போராடி முன்னேறிய ஒரு தாயினதும் குடும்பத்தினதும் அனுபவங்களை கொண்ட நூல் இது.

வாசிக்கும்போது அடுத்த கணம் அந்தக் குழந்தையின் நடவடிக்கை எப்படி வெளிப்படும் என தெரியாத திகிலும், நேரம்சமான சம்பவத்தைத் தேடும் பதகளிப்பும் எனது உணர்வை தொடர்ந்தபடியே இருந்தது.

இருந்தபோதும் நூல் அந்தத் தாயின் மீது ஏற்படுத்துகிற கழிவிரக்கத்தை மீறி ஒரு இயல்பூக்க (motivation) நிலையில் வாசகரை வைத்துக் கொள்ளுமளவுக்கு அவரது விடாப்பிடியான போராட்டம் நூலை நகர்த்திச் செல்கிறது. 

இப் புத்தகத்தை இலக்கிய ரீதியிலும், அறிவியல் ரீதியிலும், உளவியல் ரீதியிலும் ஒரு முக்கியமான நூலாக நான் பார்க்கிறேன்.

எல்லோர் வாழ்க்கையும் ஏதோ ஒரு வகையில் போராட்டம் நிறைந்ததாகவே இருக்கிறது. அதை பேச்சில் வெளிப்படுத்துவது போல எழுத்தில் அதாவது ஒரு இலக்கிய வடிவில் வெளிப்படுத்த முடியாது. அதற்கான மொழிவளம் மட்டுமல்ல அந்த எழுத்து சக மனிதர்களோடு ஏதோவொரு வடிவில் தொடர்புகொண்டால்தான் அதை முழுமையாக வாசிக்க முடியும். அதை இந் நூல் செய்கிறது. அந்த வகையில் இந்த நூல் எழுத்தில் ஒரு இலக்கிய வடிவம் பெற்றிருக்கிறது.

அத்தோடு அது பேசுகின்ற பொருள் முக்கியமானது. தமிழர்களுக்கு புதியது என சொல்ல முடியும். ஓட்டிசம் குறித்த ஓர் அடிப்படை அறிவை இந் நூல் தரக்கூடியது. அப்படியான பிள்ளைகளை எப்படி கையாள்வது என்பது பற்றிய ஒரு அனுபவ அறிவையும் தருகிறது. அதன்மூலம் ஒரு முன்னுதாரணத்தை தரவல்லதாக அது அமைந்திருக்கிறது.

உளவியல் ரீதியில் ஒரு இயல்பூக்கம் (motivation) தரக்கூடிய நூலாக இருப்பது அதன் சிறப்பு. துன்பத்தை மட்டும் அது பேசவில்லை. ஏமாற்றம், துவண்டுவிடல், அதிர்ச்சி என்பவற்றின் தாக்கத்திலிருந்து விடுபடுதலுக்கான போராட்டத்தையும், ஓட்டிச பாதிப்புக்கு உட்பட்டவர்களின் உலகை அங்கீகரித்து, புரிந்து, அந்த உலகை எமது உலகுக்கு அருகே கொண்டுவர செய்வதில் ஒரு நம்பிக்கையை தக்கவைத்துக் கொண்டே இருக்கிறது இந் நூல். இவ் வகையிலும் இந் நூல் முக்கியமான ஒன்று.

நூலை எழுதுதல்

இது சுய அனுபவங்களை கொண்டு எழுதப்பட்ட நூல் என்பது மிக முக்கியமானது. புனைவு இலக்கியம் அல்ல. வாழ்க்கையில் நாம் கடந்து சென்ற சுய அனுபவங்களை எழுதுவது என்பது அவளவு இலகுவானதல்ல. அது ஒருவகை சித்திரவதை போன்றது. அதேநேரம் சுயதிருப்தியையும் சேர்த்தே தருவது. Time Travel போல அதாவது கடந்த காலத்துக்கு திரும்பிச் சென்று அங்கிருந்து தொடங்க வேண்டும். எல்லாம் காட்சிகளாக நம்முன் மீளவும் விரியத் தொடங்கும். அந்த சம்பவங்களின்போது அன்று அனுபவித்த வேதனைக்குள் மீண்டும் போய்வர வேண்டியிருக்கும். இது உளவியல் ரீதியில் பாதிப்பாக இருக்கும். இரத்த அழுத்தத்தைக்கூட அதிகரிக்க வைக்கும். கண்ணீரை வரவைக்கும். உளம் இருண்டு போய்விடும். அதை எழுதி முடிப்பது என்பது ஒரு பிரசவ வலி போன்றது. இந்த நூலின் ஆசிரியர் மைதிலி அவர்களுக்கும் இவை ஏற்பட்டிருக்கும். இந்த பிரசவம் சமூகத்துக்கான ஒரு நூலை தந்திருப்பதில் அவர் திருப்தி அடையலாம். அதேபோல் அவருக்கும் ஒரு உளவள சுய சிகிச்சையாகவும் அமையலாம்.

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு சாதாரணமாக இருக்கிற நிறைய விடயங்கள்எங்களுக்கு மலையைக் குடையிற மாதிரி பயங்கரமாக இருக்கும் என்கிறார் மைதிலி.

போராட்டம்

ஒரு தாய் தனது பிள்ளைகளுக்காக எந்தவிதமான போராட்டத்தையும் தன்னால் முடிந்த எல்லை வரை நடத்த தயாராக இருப்பாள். அதை மழுங்கடிக்கிற விதத்தில் ‘தலையெழுத்து’ அல்லது ‘விதி’ என்ற நம்பிக்கைகளில் தன்னை நிலைநிறுத்திவிட்டால், அவர்களின் வலு அல்லது ஆளுமை தேங்கிப் போய்விடுகிறது. தன்மீதான நம்பிக்கையை, ஆற்றலை அவர்கள் இழந்து விடுவர். இந்த சிக்கலுக்குள் மைதிலி அகப்படவில்லை. மாறாக போராடத் தொடங்குகிறார். தனது அறிவுக்கு புதிதாக அறிமுகமாகும் ஓட்டிசம் பற்றி தேடி அறியத் தொடங்குகிறார். அந்த அறிவை வளர்த்துக் கொள்கிறார். அதற்கான உளவியல் சிகிச்சை முறைகளை அவர் சுவிஸில் மட்டுமல்ல, நாம் வளர்ந்த கலாச்சாரச் சூழலுக்குள்ளும் தேடி இலங்கை, இந்தியா என பன்முகமாகத் தேடிப் போகிறார்.

தனது மகனின் பாடசாலைக்கு தானே சென்று இருந்து அவதானிக்கிறார். இதேபோன்ற மற்றைய பிள்ளைகளுக்கும் பாடசாலையில் சேர்ந்து பணியாற்றி உதவ ஆரம்பிக்கிறார். இது மிக முக்கியமானது. மொழி அறிவு தடையாக வருகிறபோது அதையும் வெற்றிகொள்ள வழிவகைகளை தேடுகிறார். இதன்மூலம் தனது பிள்ளைக்கான ஒரு தனிமைச் சூழலை இல்லாமலாக்கவும் கூட்டுவாழ்வுக்குள் மகனை கொண்டுவரவும் தன்னாலானவரை முயற்சிக்கிறார். அது அவருக்கு ஒரு போராட்ட முறைமையை தனக்குள் ஆரம்பித்து தொடர காரணமாகிறது. இந்தப் போராட்டத்தில் கணவனின் பாத்திரமும் மிக முக்கியமானது. வேலைத்தளத்துக்கும் வீட்டுக்கும் இடையிலான அவரின் அலைச்சலும், வேலை செய்யும்போது மகனையே நினைத்தபடியும், மனைவியிடமிருந்து எந் நேரமும் திடீர் அழைப்புகள் வரக்கூடும் என்ற பதட்டமும் அவரோடு சகவாசம் செய்திருக்கும்.

தோற்றுப் போய்விடுவோம் என முயற்சி செய்யாமல் இருக்கிறதை விட முயற்சி செய்து தோற்றுப் போவது எவளவோ சிறந்தது. ஏனெனில் ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் நாம் ஒவ்வொரு பாடத்தைப் படிக்கிறோம். அது எங்களுக்கு வெற்றிதான் என்கிறார் மைதிலி.

மனிதஜீவி என்பது தனிநபரை மட்டும் குறிப்பதல்ல. அது சமூகத்தோடு இணைந்த ஜீவியாகவும், இயற்கையோடு இணைந்த ஜீவியாகவும் பொருள் பெறுவது. அதாவது சமூகத்தோடும் இயற்கையோடும் தொடர்புபட்டவர்கள். அந்த இயக்கம் ஒத்திசைவோடும் முரண்பாட்டோடும் இருக்கும். இதை மைதிலி புரிந்துகொண்டு செயற்பட்டது இன்னொரு சிறப்பு அம்சமாக எனது வாசிப்பினுள் அகப்பட்டது. அத்தோடு சமூகத்தோடான உறவு என்பதை சமூகசேவைகளிலும் ஈடுபடுவதன் மூலம் இன்னொரு படிக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். இவையெல்லாம் அவரின் ஆளுமையை வளர்க்கச் செய்பவையாக அமைந்திருக்கின்றன. அது அவரது போராட்டத்துக்கான சக்தியை வழங்கியபடி இருந்திருக்கிறது.

இவ்வாறு இயற்கையுடனான உறவு மட்டுமே எமது மன இறுக்கத்தை குணப்படுத்தும் ஆற்றல் மிக்கதாக இருந்தது. அதுவும் எமக்கு மென்மேலும் சமூக நல பணிகளுக்கான ஊக்கத்தை அதிகரித்து விட்டது. அதன்மூலம் கிடைக்கும் மனமகிழ்ச்சியும் ஆத்ம திருப்தியும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் எனவும எண்ணினோம். எல்லோரும் சின்னச்சின்ன மகிழ்ச்சியை கொண்டாடுவதன் மூலம் மன இறுக்கங்களை தளர்த்திக் கொள்ளலாம் என எண்ணினோம்.

வெளி இயற்கைச் சூழலை மட்டுமன்றி, அகச் சூழலை அதாவது வீட்டுக்குள்ளான சூழலையும் ஆனந்தமாக இருக்குமாறு பேணுவதை வாசித்தபோது சுவாரசியமாக இருந்தது.

வீடு என்பது ஒரு வசிப்பதற்கு மட்டுமான ஒரு பௌதிக பொருள் மட்டுமல்ல. அது வாழ்வுப் பூங்காவாகவும் பேணப்பட வேண்டும். தூய்மை, அழகுபடுத்தல், வெளிச்சம், வெளிக் காட்சிகள், பொருட்களின் தேர்வு அதன் ஒழுங்கு என பல அம்சங்களை கவனத்தில் எடுக்க வேண்டும். அது ஒரு ஏழையின் குடிசையிலும் வாழும் கலை. அந்தக் கட்டடக் கலை வீட்டில் உயிர் பெற்று இருக்க வேண்டும். வேலைக் களைப்பிலோ அழுத்தங்களிலோ வீடு திரும்பும்போது அது எம்மை அரவணைத்துக் கொள்கின்றன என்பது நான் கண்ட அனுபவம். இவ்வளவு நெருக்கடிக்குள்ளும் இந்தத் தாய் இதிலும்கூட கவனம் செலுத்துகிறாள்.

தூய்மையாகவும் ஒழுங்காகவும் அடுக்கப்பட்ட வீட்டை இரசிக்கும்போது அன்றைய நாளுக்கான அதிகபட்ச ஆனந்தம் எனக்குக் கிடைத்துவிடும் என்கிறார் மைதிலி.

வீட்டுக்குள் முடங்கிய வாழ்வை தனக்கோ தன் பிள்ளைக்கோ அறிமுகமாக்காமல் அவர் சமூகத்தையும் இயற்கையையும் இணைத்தே தனது போராட்டத்தை நடத்தியிருக்கிறார். தீடீர் திடீரென முகங்கொடுக்க வேண்டி வரக்கூடியதும் அதை முன்கூட்டியே உய்த்தறிய முடியாததுமான ஒரு சூழலை அவர் புரிந்துகொண்டாலும், தயக்கமின்றி வெளியே அழைத்துச் செல்வதை அவர் செய்கிறார். ஒரு நடைப்பயிற்சிக்கோ கடைதெருவுக்கோ கொண்டாட்டங்களுக்கோ உறவினர்களை பார்க்கச் செல்வதற்கோ என எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் வெவ்வேறான அனுபவங்களை சந்திக்க நேர்கிறது. அது அதிர்ச்சியாகவோ, துயரமாகவோ, பயமாகவோ, பதட்டமாகவோ இருந்துவிடுகிறது. அதை அவர் அதை எதிர்கொள்வதிலும் எப்படி கையாளவேண்டும் என்பதிலும் புதியபுதிய அனுபவங்களைப் பெறுகிறார். ஒரு தாயாக அவர் போராடுகிறார். அதை தொகுத்து இந்த நூலில் வழங்கியிருக்கிறார். அதுவே இந்த நூலை கழிவிரக்கம் கோரும் ஒரு நூலாக இல்லாமல் சமூகத்துக்கு அறிவுறுத்தும் ஒரு நூலாக ஆக்கியிருக்கிறது. இதை ஒவ்வொருவரும் வாசித்து அறிய வேண்டும்.

ஓட்டிசம் என்பது மன அழுத்தம் அல்ல. ஆனால் அது மன அழுத்தக் கூறுகளையும் கொண்டது. மன அழுத்தம் என்பது நம் எல்லோரிலும் வெவ்வேறு வடிவில் வெவ்வேறு அளவில் இருக்கிறது. அதிலிருந்து தப்பிக் கொள்ள மகிழ்ச்சியாய் இருத்தல் முக்கியம். “பணத்தை” மையமாக வைத்து அமைத்துக் கொள்ள முற்படும் வாழ்வுக்குப் பதிலாக “மகிழ்ச்சியை” மையமாக வைத்து வாழ்வை அமைத்துக் கொள்ளல் மன அழுத்தத்திலிருந்து தப்பிக் கொள்ள வழிவகுக்கும். இந் நூலை வாசித்து முடிக்கிறபோது இதுவும் வந்துபோனது.

*

20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஓட்டிசம் என்ற பதம் உருவாகியது. அதுபற்றிய ஆராய்ச்சிகள் பல படிகளில் முன்னேறி இருக்கிறது. இன்னும் அது குறித்த ஆராயச்சிகளும் குணப்படுத்தல் முறைகளும் முன்னேறியபடி இருக்கிறது. அதன் உட்கூறுகள் குறித்த ஆய்வுகளும் முன்னேறியபடிதான் உள்ளது. Autism Spectrum Disorder (ASD) இனை மூன்று படிநிலைக்களாக வகுத்திருக்கின்றனர். (படிநிலை-2, படிநிலை-3) மோசமான பாதிப்புக்கு உள்ளாகுபவர்களைப் போலன்றி, படிநிலை-1 இல் இருப்பவர்கள் சிகிச்சை முறைகளின் மூலம் தம்மிடம் இந்தக் குறைபாடு இருப்பதாக உணரும் நிலையை அடைகின்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் வைத்தியர்களாகவும் ஆசிரியர்களாகவும்கூட பணியாற்றிக் கொண்டு இருக்கின்றனர்.

இன்னொரு புறம் ஆச்சரியம் தரும் வகையில், புகழ்பெற்ற விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பாளர்களில் பலர் இப்போதைய மருத்துவத்துறை வரையறுப்புகளின்படி ஓட்டிசக் கூறுகளைக் கொண்டவர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். அவர்கள் வாழ்ந்த காலம் ஓட்டிசம் என்ற பதமோ வரையறையோ பிரயோகத்தில் இல்லை. மாறாக அசாதாரணமான மனிதர்களாக அன்று அடையாளப்படுத்தப் பட்டனர். அயன்ஸ்ரைன், நியூட்டன், டார்வின், mad scientist என அழைக்கப்பட்ட நிக்கொலா ரெஸ்லாபோன்றவர்களை இந்தக் கூறுகளின் தாக்கத்துக்கு உட்பட்டவர்களாக சில ஆய்வுகள் வகைப்படுத்துகின்றன. இவர்களது சமூகத் தொடர்பாடல் தவிர்ப்பு, மொழிவழி தொடர்பாடல் குறைபாடு, நேராக முகங்கொடுத்து பேச முடியாமை என்ற ஓட்டிச பண்புகள் கொண்டவர்களாக இருந்ததால், இவர்கள் பாடசாலை கல்விமுறை ஒழுங்குக்குள்கூட இணைய முடியாமல் அல்லது தொடர்ந்து பயணிக்க முடியாமல் தவித்தனர் என சொல்லப்படுகிறது. தமக்கான தனி உலகில் அவர்கள் வலம் வந்தனர். அதிக IQ இனைக் கொண்டிருந்த அவர்கள் மாபெரும் கண்டுபிடிப்புகளை படைப்பாக்கம் செய்து காட்டிய சாதனையாளராகவும் இருந்திருக்கின்றனர்.

எனவே ஓட்டிசம் ஒரு நோய் என வகைப்படுத்த முடியாது. அது மூளை நரம்பியல் மண்டலத்தின் இயங்குமுறையில் நிகழும் ஒரு மாறுபாடு. அதை கணனி இயங்குமுறைமையோடு (Operating System) Kaye-O’Conner போன்ற நவீன மருத்துவர்கள் ஒப்பிடுகிறார்கள். இந்த இயங்குமுறைமையில் சிறு பாதிப்புகள் நிகழும்போது மூளை அதனுடன் சேர்ந்த இன்னொரு இயங்குமுறைமைக்குள் நின்று தொழிற்படுகிறது என்கிறார் அவர். அதை எமது நியம (norm) வகைப்பாட்டால் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது.

அத்தோடு அது பல வகைமைகளில் இருப்பதால் ஓட்டிச பாதிப்புள்ளவர்களை குணமாக்க செயற்படுத்தப்படும் முறைகளும் மாறுபடுகிறது. கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களை முற்றாக குணப்படுத்த இன்னும் மருத்து விஞ்ஞானம் முன்னேறவில்லை. ஆயினும் அதை கையாளவும் முடிந்தளவு குணப்படுத்தவும் பல சிகிச்சை முறைகளை மேற்குலகம் முன்னேற்றகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அத்தோடு சமூகமும் அவர்களை புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டு இருப்பது மிகப் பெரும் ஆதாரமாக உள்ளது. 

மனித உருவக் கேலியையும் மனித மூளை செயலூக்கக் குறைபாடுகளை அல்லது மாறுபாடுகளையும் நகைச்சுவையாக சிலாகித்து அட்டகாசமாகச் சிரித்து மகிழும் நமது சமூகத்தில் இதுபோன்ற பண்பாட்டு மனநிலை அல்லது மனவளம் இப்போதைக்கு சாத்தியமா எனத் தெரியவில்லை!

  • Ravindran.pa, 10122023

இந் நூல் வெளியீட்டு விழா 09.12.2023 அன்று Glarus (swiss) இல் “நாடோடி மன்னர்கள்” என்ற அமைப்பினால் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

//இன்னொரு புறம் ஆச்சரியம் தரும் வகையில், புகழ்பெற்ற விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பாளர்களில் பலர் இப்போதைய மருத்துவத்துறை வரையறுப்புகளின்படி ஓட்டிசக் கூறுகளைக் கொண்டவர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். அவர்கள் வாழ்ந்த காலம் ஓட்டிசம் என்ற பதமோ வரையறையோ பிரயோகத்தில் இல்லை. மாறாக அசாதாரணமான மனிதர்களாக அன்று அடையாளப்படுத்தப் பட்டனர். அயன்ஸ்ரைன், நியூட்டன், டார்வின், mad scientist என அழைக்கப்பட்ட நிக்கொலா ரெஸ்லாபோன்றவர்களை இந்தக் கூறுகளின் தாக்கத்துக்கு உட்பட்டவர்களாக சில ஆய்வுகள் வகைப்படுத்துகின்றன. இவர்களது சமூகத் தொடர்பாடல் தவிர்ப்பு, மொழிவழி தொடர்பாடல் குறைபாடு, நேராக முகங்கொடுத்து பேச முடியாமை என்ற ஓட்டிச பண்புகள்கொண்டவர்களாக இருந்ததால், இவர்கள் பாடசாலை கல்விமுறைஒழுங்குக்குள்கூட இணைய முடியாமல் அல்லது தொடர்ந்து பயணிக்க முடியாமல் தவித்தனர் என சொல்லப்படுகிறது. தமக்கான தனி உலகில் அவர்கள் வலம் வந்தனர். அதிக IQ இனைக் கொண்டிருந்த அவர்கள் மாபெரும் கண்டுபிடிப்புகளை படைப்பாக்கம் செய்து காட்டிய சாதனையாளராகவும் இருந்திருக்கின்றனர்.  //

 

 

 

நன்றி கிருபன் இணைப்பிற்கு… நானும் ஓட்டிசம் குழந்தைகள் இருவரை கொண்டிருக்கிறேன்.. அவர்கள் இருவரின் நினைவாற்றல் மற்றும் iq வுக்கு முன்னால் சாதாரணகுழந்தைகளால் ஈடுகொடுக்க முடியாத நினைவாற்றலை கொண்டிருக்கிறார்கள்.. பாடங்களை நான் விளங்கப்படுத்தி புரியவைப்பதை விட படமாக பார்த்தால் உடனும் புரிந்துவிடுகிறார்கள்.. சிக்கலான பாடங்கள், கணக்கை கூட வாயால் சொல்லி விளங்கப்படுத்துவதை விட எழுதி காட்டினால் உடனும் புரிந்துவிடுகிறார்கள்.. இது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.. சாதாரண குழந்தைகளிடம் இந்த தன்மை வேறுபாடாக இருக்கிறது.. அவர்கள் பேச ஆரம்பித்தது மிக மிக தாமதாக நாலுவயதுக்கு அப்புறம்தான்.. அப்பொழுதுதான் எமக்கே புரிந்தது அவர்களுக்கு ஆட்டிசம் ஸ்பெக்ரம் இருக்கிறது என்று.. பெற்றோரான எம்மைத்தவிர மற்றவர்களால் அவர்கள் ஆட்டிசம் உள்ளவர்கள் என்று அடையாளம் காணமுடியாது.. சாதரண குழந்தைகள் போலவே இருப்பார்கள்.. இலேசில் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.. அந்தந்த உடுப்பு அந்தந்த இடத்தில் இருக்கவேண்டும்.. செருப்பு அதன் இடத்தில் இருக்கவேண்டும்.. அந்த ரைமுக்கு சாப்பிடவேணும் தூங்கவேணும்.. இப்படி பல.. மற்ற குழந்தைகளுடன் சேருவதை விட தனிமையிலையே அதிகம் செலவளிக்க விரும்புகின்றனர்.. புதியவர்களுடன் இலகுவில் சேராமாட்டார்கள்..

இந்த நூலை எங்கு வாங்கமுடியும் கிருபன்..?

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு நூலாக இருக்கும் என இந்த முன்வாசிப்பிலிருந்து தெரிகிறது. இணைப்பிற்கு நன்றி.

 தீவிரத்தைப் பொறுத்த வரை ஆட்டிசம் ஒரு நிறமாலை (spectrum) போல படி நிலைகளைக் கொண்ட ஒரு நிலை. எல்லா ஆட்டிசம் நிலைகளிலும் மூளையின் உணர்வுப் பகுதி, செயல்படும்/யோசிக்கும் பகுதியோடு தொடர்பு கொள்வதில் தடங்கல் இருக்கும். இதனால் உணர்வுகளின் இடையீடு இல்லாமல் யோசிக்க சில ஆட்டிச வகைகளில் முடியுமாக இருக்கும். High-functioning autism எனப்படும் Asperger syndrome இல், மூளை மிகவும் தர்க்க ரீதியாகச் செயல்பட்டு சாதாரண மூளையுடையோர் செய்ய இயலாத காரியங்களையும் செய்ய வைக்கும். சில ஆண்டுகளுக்கு முன்னர், ஆட்டிசம் உடைய ஒரு பிரிட்டன் பதின்ம வயது இளைஞன், அமெரிக்காவின் பென்ரகன் கணணிகளை ஹக் செய்து ஊடுருவிய சம்பவம் இதற்கு நல்ல உதாரணம்.

ஆட்டிசம் கொண்ட ஒரு பெண் வழக்கறிஞரின் கதையைச் சொல்லும் "Extraordinary Attorney Woo" என்ற கொரிய தொலைக்காட்சித் தொடர் ரசிக்கக் கூடிய ஒரு ஆட்டிசம் தொடர்பான படைப்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த நூலை எங்கு வாங்கமுடியும் கிருபன்..?

 

பதிவில் விபரங்கள் இருக்கவில்லை. எனினும் முகநூலில் வெளியீட்டாளர்களின் பக்கம் இருக்கின்றது. அவர்களிடம் கேட்டால் விபரங்கள் கிடைக்கலாம்

https://www.facebook.com/engadapuththakangal

ஜஸ்ரின் கூறியதைப் போன்று ஆட்டிசத்தின் spectrum பல படி நிலைகளைக் கொண்டது.  சிலருக்கு வெளியே தெரியாத mild ஆக இருக்கும். சிலருக்கு strong ஆக இருக்கும். பிள்ளைகளை அன்பாக, அவர்களின் இயல்புக்கு ஏற்றவகையில் புரிந்து நடந்துகொண்டால் அவர்களின் வாழ்வும் பெற்றோர் வாழ்வும் நன்றாக இருக்கும். இந்த நூலின் ஆசிரியர் எதிர்மறையாக எடுக்காமல் இயல்பூக்கத்துடன் அணுகியிருக்கின்றார். ஆனால் எல்லோரும் அப்படியல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.