Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இமாலய பிரகடனம்: மறுவாசிப்பும் – பின்னணியும்……!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இமாலய பிரகடனம்: மறுவாசிப்பும் – பின்னணியும்……!

இமாலய பிரகடனம்: மறுவாசிப்பும் – பின்னணியும்……!   (மௌன உடைவுகள் -60)

 — அழகு குணசீலன் —

2009 ஆயுத மௌனிப்புக்குப்பின்னர் தமிழ்த்தேசிய அரசியலை இனி நிர்ணயிப்பவர்கள் – கட்டுப்படுத்தி – நெறிப்படுத்தப்போகிறவர்கள் யார்? என்ற கேள்வி எழுந்தது. நிலமும், புலமும் ஒரே  நேர்கோட்டில்  பயணிக்க முடியாது விட்டாலும், ஒரே இலக்கில் சமாந்தரமாக பயணிக்கமுடியும் என்ற நம்பிக்கை இருந்தது. மறுபக்கத்தில் இரு நேர்கோடுகளும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றை ஒன்று வெட்டி ஒரு புள்ளியில் சந்திக்கமுடியும் என்ற கருத்துக்களும் நிலவாமல் இல்லை.

இந்த அடிப்படையில் நிலத்தில்  நாடாளுமன்ற கட்சி அரசியலும், புலத்தில் டயஸ்போரா அமைப்புக்களின்  மனித உரிமைகள் செயற்பாட்டு அரசியலுக்கும் , போர்க்குற்ற விசாரணை கோரிக்கைகளுக்கும்  இடையே ஒரு இணக்கப்பாட்டை எட்டுவது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. பல முயற்சிகள் உள்ளும், வெளியும் தோல்வியையே தழுவின. இப்போது யுத்தம் முடிவடைந்து சுமார் பதினைந்து ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில் இன்னொரு முயற்சி இடம்பெறுகிறது.

ஆம்…! டயஸ்போரா அமைப்புக்களுள் ஒன்றான உலகத்தமிழர் பேரவை (Global Tamils Forum -GTF) இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறது. இது குறித்து ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பேசப்படுகிறது. பெயரளவில் இந்த அமைப்பு பெரிதாக தெரிந்தாலும்,  வேறு பலமான அமைப்புக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.(?). எது எப்படியோ இமாலயப்பிரகடனம் நாகர்கோர்ட், நேபாளம் முகவரியில் 2023  ஏப்ரல் 27 இல் திகதியிடப்ட்டு  வெளியிடப்பட்டுள்ளது. உலகத்தமிழர் பேரவையும், சிறந்த இலங்கைக்கான சங்க ஒன்றியத்தின் தேரர்கள் குழுவினரும் இணைந்து இந்த பணியில் இறங்கியுள்ளனர். இது ஒரு புது முயற்சி மட்டும் அல்ல இனங்களுக்கிடையிலான நண்லிணக்க புதிய அணுகுமுறையும் கூட.

இந்த பிரகடனத்தின் பெயர், நேபாளத்திற்கும் இலங்கை இனப்பிரச்சினைக்குமான தொடர்பு,  இரு நாடுகளுக்கும் இடையிலான இந்து -பௌத்த மத உறவுகள், இதற்குப்பின்னால் உள்ள பிராந்திய, சர்வதேச  அரசியல் அதிகாரப் பின்னணி என்பன ஆழமாக நோக்கப்பட வேண்டியவை என்பதை கருத்தில் கொள்ளவேண்டிய தேவை தட்டிக்கழிக்க முடியாதது. திம்பு முதல் நோர்வே வரையான தீர்வு முயற்சிகள் மீதான நம்பிக்கை இழப்பு இதற்கான காரணமாக அமைகிறது.

இமாலயப்பிரகடனம் பேசுகின்ற தனிநபர் சமாதானம், கௌரவம், நம்பிக்கை, பயம், சந்தேகம், சமமான உரிமைகள்,  ஒரே இலங்கை நாடு என்ற உள்ளடக்கங்கள் இன, மத, கலாச்சார , பண்பாட்டு பன்மைத்தன்மையை கொண்ட ஒரு தேசத்தின்  சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பில் வேற்றுமையிலும் ஒற்றுமையான மக்கள் வாழ்வியலுக்கு அடிப்படையானவை. சுதந்திரத்திற்கு பின்னரான சகல தரப்பு கட்சி அரசியலும் இந்த பன்மைத்துவத்தை சீரழித்தற்கான பொறுப்புக்குரியவை. இது வரையான இனங்களுக்கு இடையிலான மோதலுக்கும் , உரிமை மறுப்புக்கும் பௌத்தம் பெரும் வகிபாகத்தை வழங்கி இருக்கிறது. இந்த வகையில் பௌத்த மத பீடங்களின் அனுசரணையுடன் இமாலய பிரகடனம் உருவாகி இருப்பது இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பு முனை.

இலங்கை சமூகங்களின் பல்வகைத்தன்மை, வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு,  மாகாண மட்டத்திலான அதிகாரப்பகிர்வு -புதிய அரசியலமைப்பு, ஒன்றுபட்ட பிளவுபடாத இலங்கை, கடந்த கால கசப்பான நிகழ்வுகளுக்கு பொறுப்புக்கூறல்,  பல தரப்பட்ட உடன்படிக்கைகளை  அங்கீகரித்தல், சுயாதீனமான வெளிநாட்டுக்கொள்கை என்பன முக்கிய இலக்குகளாக பிரகடனத்தில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

சர்வதேச சமாதான இராஜதந்திர சாயல்….!

——————————————————————————-

உலகில் வெற்றியடைந்த, மற்றும் தோல்வியுற்ற சமாதான முயற்சிகளில் அனுசரணையாளர்கள் அல்லது மத்தியஸ்தர்கள் நகர்த்தும் இராஜதந்திரம் இருதரப்பிலும் பிரச்சினைக்குரிய உள்ளடக்கங்களை, கோரிக்கைகளை தவிர்த்து கொள்வதாகும். பாலஸ்தீனம், வட சூடான், கிழக்கு திமோர், நேபாளம் போன்ற நாடுகளின் அரசியல்தீர்வுகளில் இவற்றை நன்கு அவதானிக்க முடியும். இந்த அவதானிப்பை இமாலய பிரகடனத்தில் காணமுடிகிறது. 

குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய தாயகம், இணைந்த வடக்கு -கிழக்கு, சுயநிர்ணய உரிமை, சமஷ்டி, சுயாட்சி, ஒருநாடு இருதேசம் போன்ற கடந்த கால சமாதான முயற்சிகளில் தோல்விக்கு பெரும் பங்களிப்பை வழங்கிய , பேச்சுவார்த்தை மேசைகளில் இருதரப்பு முரண்பாட்டையும், இடைவெளியையும் அதிகரித்த “வார்த்தையாடல்கள்” தவிர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பிரகடனம் கூறுகின்ற அச்சம்,  நம்பிக்கையின்மை, சந்தேகம், மேலாண்மை போன்றவற்றை தவிர்க்கவும் புரிந்துணர்வு, பல்வகைத்தன்மை, அங்கீகாரம் என்பனவற்றை ஏற்படுத்தி சம்பந்தப்பட்ட சமூகங்களுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கவும் இது மிகவும் முக்கியமானது.

பிரகடனம் சகல மக்களுகுமான சம உரிமைகள் பற்றி பேசுகிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக பிரச்சினைக்குரிய மொழி, மதம், நிலம் பற்றி பேசவில்லை. ஒரே வார்த்தையில் புதிய அரசியலமைப்பு ஊடான அதிகாரப்பகிர்வு பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர், முஸ்லீம்கள், சிங்களவர்கள், மலையக மக்கள் போன்ற இனப்பிரிவுகளை சுட்டுகின்ற வார்த்தைகளும் பிரகடனத்தில் இல்லை. ஒருதரப்புக்கு எதிராக இன்னொரு தரப்பு சுட்டுவிலை நீட்டுவது தவிர்க்கப்பட்டுள்ளது. பொதுப்படையாக பொறுப்புக்கூறல், சர்வதேச ஒழுங்குகளுக்கு மதிப்பளித்தல் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை சகல தரப்புக்குமானவை .

இதனால் தான் இந்த பிரகடனத்தின் பின்னால் உலகின் கைதேர்ந்த சமாதான முயற்சியாளர்களின் மறைகரம் இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.   பிரகடனத்தில் சர்வதேச சமாதான முயற்சிகளின் அனுபவங்கள், படிப்பினைகளை அடையாளம் காணமுடிகிறது. நேபாள இடதுசாரிகளுக்கும், இந்து இராட்சிய மன்னர்ஆட்சிக்கும் இடையே சமாதானம் செய்த கரங்கள் பின்னணியில் உள்ளனவா?  சுவிஸ், நோர்வே, இந்தியா……? .பிராந்திய வல்லரசுகளான இந்தியா, சீனா பற்றிய தேவையற்ற பேச்சும் , ஈழம்தான் இந்தியாவுக்கு பாதுகாப்பு என்ற கதையாடல்களும் இங்கு இல்லை. ஒட்டு மொத்தத்தில் இந்த விவகாரம் ஒரு உள்நாட்டு- தேசிய விவகாரம் இதை சர்வதேச நடைமுறைகளுக்கு இணங்க தீர்வுகாண முடியும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

பௌத்த பீடங்களின் அங்கீகாரத்துடனான செயற்பாட்டு அரசியல் என்பதும் ஒரு முக்கிய விடயம். ஜனாதிபதி மாளிகையில் இருந்து மக்களுக்கான அதிகாரப்பகிர்வு பற்றி பேசாது, மக்களிடம் இருந்து ஒரு கருத்துருவாக்கத்தையும், அரசியல் தீர்வுகுறித்த விழிப்பூட்டலையும் செய்வதன்மூலம் கொழும்பு அதிகாரபீடத்திற்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கின்ற வழிமுறையை இது கொண்டுள்ளது. இது வரையிலான மேலிருந்து கீழ் நோக்கிய அரசியலுக்கு மாறாக இது கீழிருந்து மேல் நோக்கியது என்று கூறுகின்றனர் இமாலய பிரகடனப்பங்காளர்கள்.

இமாலய பிரகடனம் குறித்த எதிரொலி…….!

——————————————————————————

முக்கியமாக எழுப்பப்படுகின்ற கேள்வி உலகத்தமிழர் பேரவை என்ற டயஸ்போரா அமைப்பு ஈழத்தமிழர்களின் அதிகாரபூர்வ பிரதிநிதிகளா? தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து பேசுவதற்கான அங்கீகாரம் அந்த அமைப்புக்கு உண்டா? இலங்கை பிரஷைகளே இல்லாத இந்த வெளிநாட்டு பிரஷைகள் ஈழத்தமிழரின் தலைவிதியை எவ்வாறு தீர்மானிக்க முடியும் என்பதாகும்? 

 கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவர்களுடன் பேச விரும்பவில்லை. அவர்களின் ஒரு நாடு இருதேசத்தை பிரகடனம் கவனத்தில் கொள்ளவில்லை . பிளவுபடாத  இலங்கை ஒற்றையாட்சி. ரவூப் ஹக்கீம் வரவேற்கிறார் காரணம் பிரகடனம் தமிழர் தாயகம் பற்றி அல்லது வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி பேசவில்லை. மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு பற்றி பேசுகிறது அதாவது மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொள்கிறது. மற்றைய கட்சிகள்  மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் …… வாய்க்குள் அடக்கி வைத்துள்ளன.

உலகத்தமிழர் பேரவைக்கான  வடக்கு கிழக்கு மக்களின் அங்கீகாரம் குறித்த கேள்வி ஜனநாயக அடிப்படையில் ஒரு நியாயத்தன்மையை கொண்டிருந்த போதும், நாடாளுமன்ற அரசியல் இலக்கை குறிவைத்த கட்சி அரசியல் போட்டியில் தமிழ்த்தேசிய கட்சிகளால் மக்கள் பந்தாடப்படுகிறார்கள்.  சாத்தியமான அரசியல் தீர்வொன்றை விடவும் தேர்தலில் வெற்றி பெறுவது முதன்மைப்படுத்தப்படுகிறது.

 இந்த நிலையில் பாராளுமன்ற அரசியலில் ஆர்வம் அற்ற உலகத்தமிழர் பேரவை இந்த விவகாரத்தை நகர்த்துவதில் பல நன்மைகள் உண்டு. கடந்த 75 ஆண்டுகளாக பௌத்த பீடங்களுடன் ஒரு இணக்கத்திற்கு வரமுடியாத அரசியல் கட்சிகள் சாதிக்காததை இவர்கள் இந்தளவுக்காவது நகர்த்தி இருக்கிறார்கள் இல்லையா…? பல நாடுகளின் அரசியல் தீர்வுகளில் டயஸ்போரா அமைப்புக்கள் பெரும் பங்களிப்பை செய்திருக்கின்றன என்பதையும் இங்கு குறிப்பிடலாம்.

2020 இல்  மக்களால் தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்றம் அதன் தகுதியை இழந்து விட்டது என்று  தமிழ்த்தேசிய கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகளும் பேசுகின்றன. பல சந்தர்ப்பங்களில். பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கும், பாராளுமன்றத்திற்கும் தீர்மானங்களை எடுக்கும் உரிமை இல்லை என்று பேசப்படுகிறது. இது  தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு பொருந்தாதா? அப்படியானால் இன்று மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாக கூறி உலகத்தமிழர் பேரவையை ஓரங்கட்டுவது எந்தளவு ஏற்புடையது?  

விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கிறார், அவரது குடும்பம் உயிருடன் இருக்கிறது என்ற புரளியை உலகத்தமிழர் பேரவையின் இந்த முயற்சி பொய்யாக்கி இருக்கிறது. அப்படியிருந்தால் உலகத்தமிழர் பேரவை இந்த முயற்சியில் பகிரங்கமாக இறங்கியிருக்கமுடியாது என்ற நம்பிக்கையை இலங்கை மக்களுக்கும், டயஸ்போராவுக்கும் இவர்கள் சொல்லியிருக்கிறார்கள். புலிகளின் மீள் உருவாக்கம் குறித்த சிங்கள பேரிவாத அரசியல் குரல் இனியும் சத்தமாக ஒலிக்கமுடியாது. தமிழ்த்தேசிய கட்சிகளும் போலித்துவாரகாவின் சூட்டில் இனி குளிர்காயமுடியாத நிலையை இமாலய பிரகடனம் ஏற்படுத்தி உள்ளது.

இமாலய பிரகடன புதிய முயற்ச்சிக்கும் , புதிய அணுகுமுறைக்கும் குறுக்கே நிற்காமல் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவை வழங்குவதன் மூலம் ஒரு புதிய அரசியல்  கலாச்சார பாதையில் பயணிக்கின்ற வாய்ப்பை ஏன் பயன்படுத்திக்கொள்ள முடியாது….? 

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இதுவரை இருந்த வந்த பெரிய தடை  ஒரு புறம் சிங்கள, பௌத்த பாறாங்கல். மறுபுறம் போலித் தமிழ்த்தேசிய சுயநல கட்சி அரசியல். இவற்றை இமாலயப்பிரகடனம் என்ற நெம்புகோல் கொண்டு சற்று தள்ளி வைத்திருக்கிறது GTF.

மக்களுக்கு அரிசிதான் தேவை என்றால் அதை யார் குற்றினால் என்ன? அது எங்கிருந்து வந்தால் என்ன?

உள்ளூரில் அதற்கு பற்றாக்குறை என்றால் , இறக்குமதி செய்வதில் என்ன தவறு இருக்கிறது ?

தமிழ்த்தேசிய அரசியலின் பற்றாக்குறை உலகத்தமிழர் பேரவையை இறக்குமதி செய்திருக்கிறது….!

 

https://arangamnews.com/?p=10237

  • கருத்துக்கள உறவுகள்

இதனை தீர்வு திட்டம் என கூறமுடியாது, அடிப்படையில் இலங்கையின் சட்டவமைப்பில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சம  உரிமையின மத, இன, பொருளாதார, அதிகார, சமூக வேறுபாடு என்பவற்றின கடந்து பெறுவதாகும்.

இது ஒரு அடிப்படை முயற்சி மட்டுமே, ஆனால் இது இனங்களுக்கிடையேயான முறுகல் நிலையினை தவிர்த்து அமைதியாக வாழ வழிவகுக்கலாம்.

இலங்கையில் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் தமது இனம் சார்ந்த ஆளுனர், அதிகார மையம் எனும் அடிப்படைவாத எண்ணத்தில் செயற்படும் நிலையில் இது நிகழ்வதற்கு இலங்கை நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.

முதலில் நீதிமன்றங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட இலங்கை அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்படவேண்டும்.

ஆனால் இது நடைமுறை சாத்தியமற்ற விடயமாகவே இலங்கையில் நிலவும், அதற்கு காரணம் இது ஆழமாக புரையோடிப்போயிருக்கும் நம்பிக்கைகளே, அவ்வாறு சட்டவாக்கம் செய்தாலும் அதனை தற்போதிருக்கும் அரசியலமைப்பு சட்டம் மூலம் உடனடியாகவே இரத்து செய்யலாம், ஆனால் இலங்கை அரசு தனது உண்மையான முகத்தினை வெளிக்காட்ட விரும்பாது, அதனால் இவ்வாறான ஒரு  நிகழ்வு நிகழ்வதற்கான சாத்திய கூறுகள் குறைவாக உள்ளது.

பயங்கரவாத தடை சட்டம்தான் தற்போதுள்ள இலங்கை அரசுகளின் பிராணவாயு முதலில் இந்த நிலை மாற வேண்டும், அத்துடன் ஜனாதிபதி ஆட்சிமுறைமையும் நீக்கப்படவேண்டும்.

இது ஒன்றும் தமிழர்களுக்கும் மட்டுமான தீர்வல்ல, இது அனைத்து சமுகத்திற்குமான அடிப்படை உரிமைகளை கோருகிறது, இலங்கையில் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாலேயே பல பிரச்சினை தோற்றம் பெறுகிறது, ஆனால் பூர்வீகமாக வாழும் மக்களை அவர்கள் எந்த இனமாக இருந்தாலும் அவர்களை வெளியேற்றுவதற்கான காரணங்களை அபிவிருத்தி எனும் போர்வையில், நில உச்சவரம்பு சட்டம் போன்ற சட்டங்களையும் உருவாக்கிய நாடான இலங்கையில் மாற்றம் ஏற்பட நீண்ட காலம் ஏற்படும்.

பலவீனமானவர்களுக்கு பலமானவர்கள்தான் உதவ வேண்டும் உபத்திரவம் செய்ய கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.