Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

 

புத்தாண்டின் குருதி தோய்ந்த விடியல்: காரைதீவு 1985

 

 

மூலம்https://tamilnation.org/tamileelam/muslims/0310karativu.htm
வெளியிடப்பட்ட ஆண்டு: அக்டோபர்/நவம்பர் 2003
மூல எழுத்தாளர்: கே.என்.தர்மலிங்கம் - நோர்த் ஈஸ்ரேன் ஹெரால்ட்
முதன் முதலில் வெளியிடப்பட்ட இதழ்: 'பியொன்ட் த வால்' இதழ்,
மொழிபெயர்ப்பு: நன்னிச் சோழன் 

 

1985 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனாவின் ஐ.தே.க அரசாங்கமானது தமிழரின் ஊர்கள் மீது முறைமையான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு கிழக்கில் ‘பயங்கரவாதத்தை’ கைதுசெய்ய முயன்றது. அதன் போது அம்பாறை மாவட்டத்தின் காரைதீவில் இடம்பெற்ற கொலைகளையும் சூறையாடல்களையும் வரலாற்றறிக்கைப் படுத்துகிறது, இக்கட்டுரை. இக்கட்டுரையானது முதன்முதலில் 'பியொன்ட் த வால்' (த: மதிலுக்கு அப்பால்) என்ற கொழும்பில் உள்ள மனிதவுரிமைகள் இல்லத்தின் காலாண்டு இதழில் வெளிவந்ததாகும்.

"ஒரு சமூகத்தை அதிகாரத்திலிருந்து விலக்குவது நீண்ட காலத்திற்கு அதிகாரத்தின் நலன்களிலிருந்து அவர்களை விலக்கிவிடும்."

கிராமர் ஒஃவ் பொலிரிக்ஸ் (த: அரசியலின் இலக்கணம்) - ஹரோல்ட் லாஸ்கி

 

“அமைதியானது திடீரென வானத்திலிருந்து கீழிறங்க முடியாது, கரைச்சல்களின் மூலகாரணம் அகற்றப்படும் போது தான் அது வரும். போர் என்பது கூர்ந்துகவனிப்பதற்கு இதமான பாடப்பொருளல்ல. இது ஒரு கேவலமான பொருள்… கோடிக்கணக்கான இளைஞர்களை அவர்களின் ஆரம்ப காலத்திலேயே துடைத்தழித்துவிட்டது."

கிளிம்ஸெஸ் ஒஃவ் வேர்ள்ட் ஹிஸ்றி (த: உலக வரலாற்றின் கண்ணோட்டம்) - ஜவஹர்லால் நேரு.

 

இஸ்லாமிய வரலாற்று ஆய்வில் ஒரு முன்னணி அதிகாரியான அர்னால்டின் கூற்றுப்படி,

"இதுகாறும் துட்டுவமான (கருத்தில் கொள்ளும் அளவிற்கு முக்கியமற்றது) பாலைவன இனத்தின் இந்த வியப்பான விரிவாக்கமானது பணக்காரர்களாக இருந்த அயலவர்களின் நிலங்களையும் பொருட்களையும் தம் சொந்தமாக்கிக்கொள்ளும் விருப்பத்தின் காரணமாக எழுந்ததே அன்றி புதிதாகப் பிறந்த அவர்களின் மதத்தின் பால் ஏற்பட்ட வெறியால் அன்று."

என்றார்.

 

“சிந்துவின் பிராமண அரசனுக்கு எதிராக முகமது-பின்-குவாசிம் போர் தொடுத்த போது, தெகப்பான போர் மூண்டதோடு அரசனும் சமரில் கொல்லப்பட்டான். அனைத்து ஆண்களும், ஆறாயிரம் பேர், பின்-குவாசிமால் படுகொலை செய்யப்பட்டனர். அரசியும் கோட்டாரத்தில் இருந்த மற்றப் பெண்களும் அவமானத்திலிருந்து தப்பிக்க தங்களைத் தாங்களே எரித்துக் கொண்டனர், மேலும் இஸ்லாத்தைத் தழுவ மறுத்த பதினேழு வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இந்துக் கோயில்கள் அழிக்கப்பட்டன, கோயில்களில் இருந்த தங்கம், விலைமதிப்பற்ற நகைகள் மற்றும் பிற செல்வங்களும் கொள்ளையடிக்கப்பட்டன."

இந்தியன் ஹிஸ்றி (த: இந்திய வரலாறு) - சிங் மற்றும் பானர்ஜி

மேலே மேற்கோள் காட்டப்பட்ட பத்திகள் 1985 ஏப்ரல் 12 முதல் காரைதீவில் நடந்த சம்பவங்களுக்கும், 1980களில் தமிழர்களை முறைமையாக அழிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருந்த போது, அவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட வெறுப்புக்கும் வன்மத்துக்குமான சூழலுக்கும் பொருத்தமானது ஆகும்.

கிழக்கில் உள்ள மூன்று ஆளுகை மாவட்டங்களில் ஒன்று அம்பாறையாகும். இது இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வறண்ட பசுமைமாறா இரண்டாம்-நிலை காட்டுப் பரப்பில் பரவியுள்ள மிகப் பெரியதும் அதிக மக்கள்தொகை கொண்டதுமான மாவட்டமாகும். இங்கு தமிழ் சிறுபான்மையினர் சிங்களவர்களுடனும் முஸ்லிம்களுடனும் இணக்கமாக வாழ்ந்து தங்கள் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கரவாகு–நிந்தவூர் பற்றில் உள்ள செழிப்பான நகரமான காரைதீவானது வடக்கு, தெற்கு மற்றும் மேற்கில் முறையே சாய்ந்தமருது, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய முஸ்லிம் நகரங்களால் சூழப்பட்ட ஒரு தமிழர் வேற்றுச்சூழாகும்.

கிழக்கில் உள்ள தமிழ் ஊர்கள் அவற்றின் பெயர்களை பல்வேறு மூலங்களில் இருந்து பெற்றுள்ளன. அருகில் இருக்கும் குன்றுகள், ஆறுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற புவியியல் சிறப்பியல்புகளோடு வரலாற்று நிகழ்வுகள் என அனைத்தும் ஊர்களுக்குப் பெயரிட பங்களித்துள்ளன. அம்பாறை என்ற பெயர் நிர்வாக மாவட்டத்தையும் நகரத்தையும் என இரண்டையும் குறிக்கும் ஒரு தூய தமிழ்ச்சொல் - அம்-பாறை - தமிழர்களின் பண்டைய குடியேற்றத்தின் மையத்தில் இருந்த 'அழகிய பாறை' என்று பொருள்படும். அதேபோன்று காரைதீவு, கருங்கொட்டித்தீவு, சாய்ந்தமருது, நிந்தவூர், திருக்கோவில், தம்பிலுவில் ஆகிய தமிழ் ஊர்கள் ஒவ்வொன்றையும் வருணிக்க ஒரு வரலாறு உண்டு.

காரைதீவு மக்கள் முற்றிலும் தமிழர்களாவர், மதப்படி இந்துக்கள் அல்லது கிறிஸ்தவர்கள் ஆவர். கி.பி 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படும் பத்தினி தேவியின் மிகவும் பழமையான கோவில் அங்குள்ளது, இது யாத்திரையர்களால் மிகவும் மடங்கப்படுகிறது. இப்பகுதியில் மேலும் 10 இந்துக் கோவில்களும் ஒரு தேவாலயமும் உள்ளன. புத்தருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு விகாரையும் உள்ளது, அங்கு ஆயுதப்படைகள் காரைதீவை வன்வளைத்து அதைக் கைப்பற்றும் வரை இந்து வழிபாட்டாளர்கள் வழிபாடு செய்துள்ளனர்.

மனித குலத்திற்கு (சிற்சிறு தடைகள் முற்றொழிந்த மனித இனத்திற்கு) சிறப்புத்தகுதியோடு சேவை செய்த பல கோமகன்களை விளைவித்த தனித்த பெருமை காரைதீவுக்கு உண்டு. அவர்களில் சீர்வளர் இராமகிருஷ்ணா இயக்கத்தின் இரண்டு அறிவார்ந்த துறவிகளும் அடங்குவர். ஒருவர் பெரு வண. சீர்வளர் சீர் சுவாமி விபுலானந்த அடிகள் ஆவார். இவர் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, தற்போதைய அம்பாறை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பாடசாலைகள் பலவற்றைக் கட்டினார். சுவாமிகள் சிலோன் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட போது பேராசிரியர் பதவியை வகிக்க அழைக்கப்பட்ட அரிய சிறப்புத்தகுதியைப் பெற்றிருந்தார்.

அங்கீகாரம் பெற்ற மற்றொரு துறவி, புனித சீர்வளர் சீர் சுவாமி நடராஜானந்தா அடிகள் ஆவார். அவர் அனைத்து உதவி பாடசாலைகளையும் அரசு கையகப்படுத்தும் வரை இராமகிருஷ்ணா இயக்கத்தால் ஆளுகைப்படும் அனைத்து பாடசாலைகளின் பொது மேலாளராக தொழிற்பட்டார்.

பல நூல்களை எழுதிய க.கணபதிப்பிள்ளை, 'பெரிய' கணபதிப்பிள்ளை, 'சின்ன' கணபதிப்பிள்ளை, ஆறுமுகம், தங்கராசா, இராசையா, வேலுப்பிள்ளை, மகாதேவன், விநாயகமூர்த்தி, கிருஷ்ணப்பிள்ளை போன்ற சிறந்த புலமை பெற்ற ஆசிரியர்கள் தாராளமயக் கல்வி பரவுவதற்குப் பங்களித்தவர்களில் சிலராவர். அவர்களின் கற்பித்தலானது "பயனுள்ள அனைத்தையும் சொல்லிக்கொடுத்தல்" இல் மையமாக இருந்ததோடு மாணாக்கரின் ஒவ்வொரு கூறிற்கும் வல்லிதம் (ஏதோ ஒன்றிற்கு கொடுக்கப்பட்ட சிறப்பு முக்கியத்துவம் அல்லது மதிப்பு) அளித்து, திறமையை வளர்த்துக்கொள்ளவும், விழிப்புடனும் உணர்திறனுடனும் இருப்பதற்கு மனதை வளர்க்கவும் வாய்ப்பளித்தது. அவர்கள் இறை நம்பிக்கையை வலுப்படுத்தவும் உதவினர். அவர்களின் மாணவர்கள் ஒழுங்குமுறைமையிற்கு குறிப்பிடத்தக்கவர்களாக திகழ்ந்தனர். காரைதீவானது அரச ஊழியர்கள், மருத்துவர்கள், பொறிஞர்கள், வைப்பகர்கள் மற்றும் ஈடேற்றிய எழுதுவினைஞர்கள் மற்றும் கவிஞர்களை விளைவித்துள்ளது.

காரைதீவு மக்கள் அறிவையும் செல்வத்தையும் கொண்டிருந்தனர், அது அவர்களுக்கு மற்ற சமூகத்தினரிடமிருந்து மரியாதையைப் பெற்றளித்தது. அவர்கள் சுதந்திரமான, மனவொடுக்கம் நிறைந்த, எளிதான சூழ்நிலையில் வாழ்ந்து வந்தனர். 1977 பொதுத் தேர்தலின் பின்னர் அவர்கள் அரசியல் சாராக ஐக்கிய தேசியக் கட்சியுடன் அடையாளப்படுத்தப்பட்டனர். காரைதீவைச் சேர்ந்த கல்விமான் இ.விநாயகமூர்த்தி 1981 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக மாவட்ட மேம்பாட்டுச் சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். 1982 இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் காரைதீவு முழுவதுமாக அதிபர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவிற்காக தமிழ் வேட்பாளர் குமார் பொன்னம்பலத்திற்கு விருப்பத்தேர்வாக வாக்களித்தது. இதனால் காரைதீவு ஐக்கிய தேசியக் கட்சியின் அரணிருக்கையாக (ஒரு குறிப்பிட்ட காரணம் அல்லது நம்பிக்கை வலுவாக வலுவெதிர்க்கப்படும் அல்லது ஆதரிக்கப்படும் இடம்) விளங்கியது.

சுமார் 1981 ஆம் ஆண்டு முதல் அம்பாறைக்கு அருகில் உள்ள சிங்களப் பரப்புகளில் இருந்து உருவான பல இன மோதல்களானவை தமிழர்கள் ஐ.தே.க.வை ஆதரிப்பதைத் தடுத்திருக்கவில்லை. 1984ல் மார்ச்சில் தேசிய பாதுகாப்பு அமைச்சு உருவாக்கப்பட்ட பிறகும், 1985ல் தமிழர்கள் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

1981 ஆம் ஆண்டு கல்முனையில் உருவாக்கப்பட்ட ஒரு கோட்ட அரசியல் கட்சியானது 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற முற்றுத்தெறுவிற்குப் (Holocaust; பேரளவிலான அழிவு அல்லது காதம்) பின்னர் அரசின் சார்ந்தொழுகுகையையும் ஆதரவையும் அனுபவிக்கத் தொடங்கியது. அப்போது, முஸ்லிம்களை தமிழர்களை விட்டு ஒதுக்கி வைப்பதற்கு அதனது அங்கத்துவத்தை ஆப்புக்கட்டையாகப் பயன்படுத்திக் கொள்ள அரசாங்கம் சீராட்டுவது புலப்பட்டது. தமிழர்களை இழப்புறுகையாலும் (ஒரு சமூகத்தில் அடிப்படைத் தேவைகளாகக் கருதப்படும் பொருண்ம நலன்களின் பற்றாக்குறை அ தீங்கு செய்தல்) அச்சுறுத்தலாலும் கீழ்நிலைப்பட வைக்கும் திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்தத் தொடங்கியது. அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைகள் மற்றும் வேண்டுமென்று தீமூட்டுதல் ஆகிய அச்சுறுத்தல்களானவை தமிழர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி, இடப்பெயரச் செய்து, உடைமையற்றதாக்குவதை நோக்கமாகக் கொண்டவையாகும்.

புதிய அரசியல் கட்சி அரசாங்கத்திற்கு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கியது, மேலும் காரைதீவில் தமிழர்கள் மீதான தாக்குதலானது மொசாட், ஜிகாத் மற்றும் அரசாங்கப் படைகளின் கடினக் கூட்டு முயற்சியால் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. அம்பாறையில் காரைதீவு, மீனோடைக்கட்டு, ஒலுவில், அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் உள்ள தமிழர்களை அவர்களது தாயகங்களில் இருந்து விரட்டியடிப்பதற்கு பாதுகாப்புப் படையினரை பணியில் அமர்த்துவதுதான் தரும விதியின் கீழ் அரசாங்கத்தின் கமுக்கத் திட்டங்களாகும், இது 1984 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு மணலாற்றில் நடந்ததைப் போன்றதாகும். 

1983 இல் தமிழர்களுக்கெதிரான வன்முறையின் பின்விளைவுகளால் நிலைகுலைந்த அதிபர் ஜெயவர்த்தனா, ‘தருமம்’ ஆட்சியுடன் ஒத்திணங்கிவராத தமிழ்க் கோரிக்கைகளை எதிர்கொண்டு அவர்களுக்கு எதிராகப் புதிய உத்திகளை நாடுவது கண்கூடானது.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த வாடகைக் குண்டர்கள் தமிழர்களைத் தாக்கி, கொன்று, அங்கவீனமாக்கி, பின்னர் அவர்களின் சொத்துக்களைச் சூறையாடி அழித்து, தமிழர்களும் முஸ்லிம்களும் பிளவுபடும் அரசியல் சூழலை உருவாக்குவதே புதிய உத்தியாகும். ஜும்மாவில் தொழுகைக்குப் பிறகு காரைதீவு, அக்கரைப்பற்று, மீனோடைக்கட்டு, ஒலுவில் மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் தமிழர்கள் மீதான தூண்டப்படாத கொடுகிய (பிறருக்கு ஈவிரக்கம் காட்டாமை) தாக்குதல்கள் ஆரம்பமானது. காவல்துறை ஆதரவு நல்கிய போது மொசாட் பயிற்சியளித்த சிறப்பு அதிரடிப்படையும் ஜிஹாத்தும் தாக்கியதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காரைதீவில் தமிழர்கள் மீதான முதலாவது தாக்குதல் 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி காலை 6.00 மணிக்குத் தொடங்கியது. தாக்குதலில் உலங்குவானூர்திகள் கூடப் பாவிக்கப்பட்டன. மறுநாள் அதிகாலையில் வரவிருந்த தமிழ்-சிங்களப் புத்தாண்டைக் கொண்டாடத் தயாராகிக்கொண்டிருந்த தமிழர்களுக்கு இது கணிசமான சமய முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்.

காரைதீவு தமிழர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொள்வனவு செய்வதற்காக கல்முனையில் உள்ள அதிகரித்த நகர்ப்புற சந்தை நகரத்திற்கு செல்வது விந்தையாக இருந்தது. விடைபெறும் ஆண்டின் கடைசி நாளில், அவர்களின் வாடிக்கையான வணிகர்களான சோனகர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டன.

கல்முனையில் கொள்வனவு செய்யும் வழக்கத்தை கடைப்பிடித்து, சிலர் ஏப்ரல் 12 அதிகாலையில் காரைதீவிலிருந்து புறப்பட்டனர். 

மாளிகைக்காடு என்பது காரைதீவுக்கும் சாய்ந்தமருதுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு சிறிய சோனகக் குடியேற்றமாகும். காரைதீவில் இருந்து கல்முனைக்கு செல்வோர் மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது ஊடாக பொத்துவில்-கல்முனை வீதி எனப்படும் முதன்மை கேந்திர நெடுஞ்சாலையூடாக பயணிக்க வேண்டும்.

1967 ஏப்ரலில் முஸ்லிம் பிரிவை அண்டிய தமிழ் பிரிவுக்குள் வல்லோச்சாளர்கள் (முதலில் பிறரைத் தாக்குபவர்கள்) புயலெனப்புகுந்து வீடுகளுக்கு தீ வைத்தும் சொத்துக்களை அழித்ததாலும் பல நூற்றாண்டுகளாக சாய்ந்தமருதில் நிரந்தர மக்கள்தொகையாக இருந்த தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அதன் பின்னர், முஸ்லிம் பிரிவு மற்றும் தமிழ்ப் பிரிவு என இரு பிரிவுகளைக் கொண்டிருந்த சாய்ந்தமருது, தனித்த முஸ்லிம் பிரிவாக மாறியது. அது ஒரு முஸ்லிம் கோட்டமாக மாறியது. தமிழர்களை வலுக்கட்டாயமாக விரட்டியடித்து, அவர்களின் இந்துக் கோவில்கள் அழிக்கப்பட்டு, கோவில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் ஆட்டையப்போடப்பட்டு இன்னும் உசாவப்படாமல், இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளன. சாய்ந்தமருது மற்றும் பிற இடங்களில் தமிழர்கள் மீதான தாக்குதலானது மிகவும் பழங்காலத்திலிருந்தே பதிவுசெய்யப்பட்ட சாய்ந்தமருதில் இந்து-தமிழ் அடையாளத்தின் அனைத்து குறியீடுகளையும் தடயங்களையும் முற்றழித்து பூண்டோடகற்றுவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

கடந்த 12ஆம் திகதி காலை காரைதீவில் இருந்து மாளிகைக்காடு ஊடாக கல்முனை நோக்கி பயணித்த மக்கள் ஜிஹாத் உறுப்பினர்கள் மற்றும் மொசாட் பயிற்சியளித்த சிறப்பு பணிக்கடப் படையினரால் (STF) தாக்கப்பட்டு கடுமையாக அடிக்கப்பட்டனர். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் வலுத்த காயமடைந்தனர். எனினும், அவர்கள் சாவிலிருந்து தப்பியிருந்தனர். தாக்குதலுக்குள்ளான ஒருவர் பின்வருமாறு விரிக்கிறார்: 

“புத்தாண்டின் விருந்துகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் பொருட்களை வாங்குவதற்கு நாங்கள் அதிக பணத்தை எடுத்துச் சென்றிருந்தோம். நாங்கள் மாளிகைக்காடு சந்திப்பை நெருங்கிய போது, வீதியின் ஓரத்தில் காவல்துறை ஊர்திகள் சில நிறுத்தப்பட்டிருப்பதையும், சில காவலருடன் படைய உருமறைப்பு அணிந்த ஆட்கள் நிற்பதையும் கண்டோம். காவலர்களுக்கு சற்றுத் தொலைவில் ஏராளமான ஆண்கள் நின்றிருந்தனர், அனைவரும் அப்பரப்புக்கு வேற்றிடத்தவர். நாங்கள் அவர்களின் அருகில் சென்ற போது, அவர்கள் முஸ்லிம் இளைஞர்கள் என்பதைக் கண்டுபிடித்தோம், அவர்களின் உடை மற்றும் தாடியால் அடையாளம் காணப்பட்டனர். இளைஞர்கள் மீறத்துடிப்போடு (குறிப்பாக பொறுமையின்மை, மனக்குறை அல்லது சலிப்பு காரணமாக அசைவில்லாமலும் அமைதியாகவும் இருக்க முடியாமல் கட்டுப்படுத்த கடினமாக இருக்கும் நிலை) காணப்பட்டனர்."

சாட்சி மேலும் தெரிவிக்கையில், “காவல்துறையினர், அதிரடிப்படையினர் (களுவாஞ்சிக்குடி) மற்றும் மாளிகைக்காட்டில் வேற்றிடத்தவரின் இருப்பால் எங்களின் மனதில் எந்தவித ஏந்தின்மையோ (அமைதி குலைவாக, கவலையாக அல்லது சங்கடமாக உணர்தல்.) பதட்டமோ ஏற்படவில்லை. முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும் பிறருக்கும் இடையே ஏற்படக்கூடிய அமைதிக் குலைப்பைத் தடுப்பதற்காகவே காவல்துறையினர் இருக்கிறார்கள் என்று நினைத்தேன். மாளிகைக்காட்டில் எமக்கு அயல் முஸ்லிம்களுடன் எந்தவித முரண்பாடும் இல்லாததால் நாங்கள் ஓம்பமாக (safe) உணர்ந்தோம். எங்கள் பயணமும் தொடர்ந்தது. நாங்கள் சந்தியை அடைந்த போது, பல இளைஞர்கள் அச்சுறுத்தும் தோற்றத்துடன் எங்களை நோக்கி விரைந்து வந்து கொட்டன்களால் தாக்கத் தொடங்கினர். தாக்குதல் நடத்தியவர்களைத் தவிர, கொல்லக்கூடிய ஆயுதங்கள் ஏந்தியவர்களும் இருந்தனர். இருப்பினும் அவர்கள் தாக்குதலைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“எதிர்பாராத தாக்குதலால் எங்கள் உணர்வுகள் அச்சத்துடனேயே ஓடின. நாங்கள் எங்கள் பணத்தை இழந்து காயத்தையும் மன வேதனையையும் அனுபவித்தோம். இளைஞர்களின் வெறுக்கத்தக்க நடத்தை இதுவாகும். சட்ட நிறைவாக்க அதிகாரி முன்னிலையில் நெடுஞ்சாலையின் சட்டப்படியான வாணிபத்தைப் பயன்படுத்துபவர்கள் மீது தாக்குதல் நடந்தது அருவருப்பான அட்டூழியமாகும். 

“தாக்கப்பட்ட போது, தாக்குதல் நடந்த இடத்திற்கு மிக அருகில் இருந்த காவல்துறையினரின் கவனத்தை ஈர்க்க நாங்கள் கதறினோம். காவல்துறையினரோ அதிரடிப்படையினரோ கண்டுகொள்ளவில்லை. இந்தப் பகுதியினூடாகப் பின்னாளில் பயணித்த பல தமிழர்கள் காணாமல் போனதால், அன்று அந்த ஆட்கள் எங்களைக் கடத்தாமல் போனது எங்களின் நல்லகாலமே. தனது சொந்த குடிமக்களுடன் உள்ள சிக்கலுக்கு நியாயமான தீர்வைக் காண முடியாத அரசு, சமூகங்களுக்கு இடையே வன்முறையை ஊக்குவிப்பதில் ஈடுபட்டது என்பது மெய்யுண்மையாகும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள பூர்விக தமிழர்களை தாக்குவதற்காக வேறு இடங்களில் இருந்து குண்டர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.”

கல்மேல் எழுதியது போல அதிகாலையில் நடந்த தாக்குதலானது தொடர்ந்து வரப்போகின்ற கசப்பான விடயங்களை காட்டும் ஒரு மோசமான செய்தியை அனுப்பியது. அது தமிழர்களுக்கு பேரிடர் வரப்போகிறது என்பதைச் சுட்டிக்காட்டியது. அதிகாரத்தில் இருப்பவர்களின் தீய அறிவினால் மனித உரிமைகளுக்கான மரியாதை குலைக்கப்பட்டது.

ஹெர்பேர்ட் ஸ்பென்சர் (1903) என்பவர் தனது 'பிரின்சிப்பல்ஸ் ஒஃவ் குட் கவர்னென்ஸ்' (த: நல்ல ஆளுகையின் கொள்கைகள்) என்ற நூலில், “ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் உரிமைகளை மீறுவதைத் தடுக்கவே நல்ல அரசாங்கம் உள்ளது.” என்று கூறி எந்த ஒரு நல்ல அரசாங்கத்திற்கும் ஒரேயொரு கடமையை ஒதுக்கினார். 'சப்ஸ்ரன்ஸ் ஒஃவ் பொலிரிக்ஸ்' (த. அரசியலின் சாரப்பொருள்). அனைத்துத் தரநிலைகளின் படியும், அன்றைய அரசாங்கம் இந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப நிற்கத் தவறிவிட்டது.

மொசாட் பயிற்சி பெற்ற தரைப்படை மற்றும் தொலைவான இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட வாடகைக் குண்டர்கள் மூலம் தமிழர்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்க அரசு தனது படைகளை ஊக்குவித்து வலுப்படுத்தி வருகிறது என்பதை அடுத்தடுத்த நிகழ்வுகள் உறுதிப்படுத்தின.

யாழ்.பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டதாரியான கந்தவனம் தேவமனோகரன், 20 வயது, 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி முஸ்லிம்களுக்கு எவ்வித சினமூட்டலையும் செய்யாமலேயே முஸ்லிம் தாக்குதலாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாதிக்கப்பட்டவர் கொல்லப்பட்ட போது படலைக்கு அருகே நின்று கொண்டிருந்தார். கொலையாளிகளை காவலர்கள் பிடித்தாத்துடரவில்லை (தேடிப்பிடித்துத் தண்டித்தல்/கொல்லுதல்).

காரைதீவு தமிழ் அகதிகள் குமுகத்தால் (எ. விநாயகமூர்த்தி) தெரிவிக்கப்பட்டவை:
“அப்போது சுமார் பகல் 2.00 மணி. 1985ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி, வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, சுடுகலன்கள், பெற்றோல் குண்டுகள், எரிபொருள் கலன்கள் மற்றும் பிற கொல்லக்கூடிய ஆயுதங்களுடன் சுமார் 800 முஸ்லிம் இளைஞர்களைக் கொண்ட கும்பல் ஒன்று - அனைவரும் வேற்றிடத்தவர் - காரைதீவுக்குள் புகுந்தது. அவர்களை யாராலும் தடுக்கவியலாமல் இருந்ததோடு முதன்மை வீதியில் இருந்த வீடுகளையும் வணிக நிலையங்களையும் தாக்கினர். இந்த நிகழ்வைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

"முதலில், தாக்குதலாளிகள் வீடுகளையும் கடைகளையும் சூறையாடினர், பின்னர் கட்டிடங்களுக்குத் தீ வைத்தனர். மிகவும் பழமையான பத்தினி கோவில் (கண்ணகி அம்மன் கோவில்) கூட விடப்படவில்லை (முஸ்லிம்கள், நோய் அல்லது கெடுவேளைகளால் தாக்கப்பட்டால், இக்கோவில் தேவியை சாந்தப்படுத்த பல்வேறு பொருட்களை வழங்கினர் என்பது தெரிந்த மெய்யுண்மையாகும்.). கோவிலின் ஒரு பகுதியை எரித்த கும்பல், அதைச் சுற்றியுள்ள மதிலை இடித்தது. கட்டிடங்கள் மீது பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டு எரிக்கப்பட்டன.

"வெறுப்பின் வெறியில் முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை, வேண்டுமென்று தீமூட்டுதல் மற்றும் கடைகள், வீடுகள் மற்றும் இந்து மத வழிபாட்டுத் தலங்களைச் சூறையாடுதல் போன்ற கொடூரங்களில் ஈடுபட்டனர். வெடிகுண்டுகளால் ஏற்பட்ட அழிவின் தடங்களை விட்டுவிட்டு அவர்கள் நகர்ந்த போது, காரைதீவு சாம்பலாக்கப்பட்டிருந்தது.

"பலர் கும்பலால் கொல்லப்பட்டனர். அன்றைய நாள் கொல்லப்பட்டவர்களில் 58 வயதான நல்லரத்தினம் தேவவிரதன் ஒரு ஓய்வூதியம் பெற்றவர் ஆவார். அவர் தனது குடும்ப உறுப்பினர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவிட்டு தனது வீட்டிலேயே இருந்தார். அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட அனைத்து விலையுயர்ந்த பொருட்களையும் சூறையாடிய கும்பல், பின்னர் அந்த ஆளையும் தாக்கியது. கீழே விழுந்து கிடந்த அவரை பெற்றோல் ஊற்றி உயிருடன் எரித்ததாகக் கூறப்படுகிறது.

"அதேபோன்று கொல்லப்பட்ட நடுத்தர வயதுடைய க.சின்னத்தம்பியின் மீதான மற்றொரு கொலை வழக்கு. சின்னத்தம்பி ஒரு கமக்காரர் என்பதோடு ஒரு வணிகரும் ஆவார். அவர் கமம் மற்றும் வணிகம் இரண்டிலும் வளப்பட்டிருந்தார். குண்டர்கள் முதலில் அவரது கடையை சூறையாடினர், பின்னர் அவரது கடையை தீவைத்து எரித்தனர். அவரது மகிழுந்து, உழுபொறி, இழுபெட்டி ஆகியவையும் தீ வைத்து எரிக்கப்பட்டன.

"அனைத்தும் தீப்பிடித்து எரிந்ததும், சின்னத்தம்பியை அவரது கடைகளுக்கு எதிரே உள்ள நெடுஞ்சாலைக்கு இழுத்துச் சென்ற குண்டர்கள், அவர் மீது பெற்றோல் ஊற்றி தீவைத்தனர். அந்த நபர் உயிருடன் எரிக்கப்பட்டார்."

மனித உரிமை ஆர்வலர் ஒருவர் பின்வரும் தகவலை வழங்கினார். தமிழ் ஊர்கள் மீதான தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னர், பயிர்களைக் காப்பதற்காகவும் தனிப்பட்ட பாதுகாப்பிற்காகவும் உரிமம் பெற்ற சுடுகலன்களை வைத்திருந்த அனைத்து ஆட்களையும் பிடித்து ஆயுதங்களை தம்மிடம் சரணடையச் செய்தனர், காவல்துறையினர்.

வன்முறை வெடிப்பதற்கு முன்னர் சட்ட நிறைவாக்க அதிகாரிகளால் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது என்பது தமிழர்களை ஆயுதமற்றவர்களாக அட்டூழியங்களுக்குப் புலப்படுத்துவதற்கான முன்கூட்டியே திட்டமிடப்பட்ட உத்தியாக விளங்கிக்கொள்ளப்படுகிறது.

தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் போது அவர்கள் மீது ஜிஹாத் மற்றும் சிறப்பு அதிரடிப்படை தாக்குதல் நடத்துவது என்பது ஒரு நுண்ணியமான சூழ்ச்சித்திட்டமாகும். இது 1967 இல் கல்முனையில் தமிழர்கள் தம்மைத் தாக்க வந்த ஒரு கும்பல் மீது சுட்டு தமது உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்றியது போலல்லாமல் அதற்கு முரணாக்குவதாகும்.

1985 ஆம் ஆண்டு புத்தாண்டு பண்டிகைக்கு முன்னாளில் காரைதீவில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்தனர். இதுவரை அனுபவித்திராத அச்சங்களுடனும் துயரங்களுடனும் புத்தாண்டு உதயமானது. அரசாங்கத்தை வில்லன் என்று குற்றம் சாட்டும் விரலும் நீட்டப்பட்டது.

வீடிழந்த குடும்பங்கள் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களிடம் உணவோ உடையோ எதுவும் இருக்கவில்லை. தமிழர்களின் தனியாள் பாதுகாப்பு மற்றும் வாழ்வுரிமை இன்மையாலும் குமுகாயங்களுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்துவதில் காட்டிய அப்பட்டமான அவமரியாதையாலும் மனித உரிமைகளுக்கான உலகளாவிய சாற்றாணையின் (UDHR) பிரிவு 3 இல் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளை அரசாங்கம் மீறுவது புலப்பட்டது. அப்பாவிகள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறிய போது, தமிழர்களின் வாழ்வுரிமை, விடுதலை, பாதுகாப்பு ஆகியவை கேள்விக்குறியாக இருந்தன. இரவைச் சாவு அச்சத்தில் மக்கள் கழித்தனர். அவர்களுக்கு இரவு நெடியதாக இருந்ததோடு, விடிந்ததும் புத்தாண்டு நாளானது!

பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் இரவைக் கழித்த பாடசாலைகளை விட்டு வெளியேறுவதற்கு முன் காலை 8 மணி வரை காத்திருந்தனர். அவர்கள் சூறையாட்டத்தால் ஏற்பட்ட சேதத்தின் அளவை உண்ணோட்டமிட கவலை கலந்த ஏக்கமுடன் இருந்தனர்.

ஏப்ரல் 13 ஆம் திகதி பாடசாலைகளை விட்டு வெளியேறத் தயாராகிக்கொண்டிருந்த மக்கள் கேட்ட சுடுகல வேட்டொலிகள், முன்னை நாள் மாலையில் குண்டர்களால் தாக்க முடியாத காரைதீவின் ஏனைய பரப்புகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி நாசமாக்க அவர்கள் திரும்பி வந்துள்ளதைப் பறைந்தன. என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் பதகளித்துப் போயினர்.

அன்றைய நாள் ஊரின் மீதான தாக்குதலில் 500 இளைஞர்கள் கலந்து கொண்டதாக காரைதீவு புனர்வாழ்வுக் குமுகம் தெரிவித்துள்ளது. அரசாங்க அதிபருக்கு அவர்கள் அளித்த அறிக்கையில், 

“ஊர் (காரைதீவு) மீதான தாக்குதல் குறைந்தபட்சம் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் ஒரு மணி நேரத்திலேயே தொடங்கிவிட்டது. ஏறக்குறைய 500 பேர் கொண்ட கும்பல் மூன்று திசைகளிலிருந்தும் காரைதீவு எல்லைக்குள் நுழைந்தது.

“கல்முனை – பொத்துவில் … டிரங்க் வீதியோரமாக வடக்கு நுழைவாயிலின் ஊடாக முதல் குழு வந்து வழியெங்கிலும் உள்ள சொத்துக்களை அழித்தது.

“இந்த நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் குழுவானது பூசாரி தவிர மற்ற அனைவரும் நுழைவது தவிர்க்கப்பட்ட புனிதமான இடமான பத்தினி தேவியின் தங்க உருவம் பதிவிடப்பட்ட உள்ளறையான கோவில் கருவறைக்குள் நுழைந்தது. நுழைந்தவர்கள் அங்கிருந்த தங்க உருவத்தை அகற்றியதோடு  சுற்றுவட்டாரத்தில் இருந்த பிள்ளையார், முருகன் மற்றும் பிற தெய்வங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட கோயில்களின் கோபுரத்தில் உள்ள சிலைகளையும் உடைத்தனர். குண்டர்கள் எந்த வீட்டையோ கடையையோ விட்டுவைக்கவில்லை. முன்னைய நாள் போலவே வீடுகளும் கடைகளும் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. அவர்கள் சூறையாடிய பொருட்கள் பாரவூர்திகளில் கொண்டு செல்லப்பட்டன.

“ஜிஹாத்களின் இரண்டாவது குழு, சித்தனைக்குட்டி சுவாமி கோவில் இருக்கும் வடகிழக்கு திசை வழியாக காரைதீவுக்குள் நுழைந்தது. சற்று எழுதருகையோடு செயற்பட்ட அவர்கள் அருகில் தமிழ்ப் போராளிகள் இல்லை என்பதை உறுதி செய்யும் வரை எந்தத் தாக்குதலிலும் ஈடுபட தயக்கம் காட்டினர். தமிழ்ப் போராளிகளிடமிருந்து எதிர்த்தாக்குதலை அவர்கள் எதிர்நோக்கியதாகத் தெரிகிறது. அவர்கள் தாக்குதலைத் தொடங்க சிறிது நேரம் எடுத்துக்கொண்டனர். தமிழ்ப் போராளிகள் யாரும் இல்லை என்று உறுதியளித்தவுடன், அவர்கள் காட்டு ஆர்வத்துடன் களத்தில் இறங்கினர்.

“அவர்கள் கோவில்களுக்குக் குண்டு வீசியதோடு மதிப்புமிக்க பொருட்களையும் அகற்றினர். இதையடுத்து, கடைகளையும் வீடுகளையும் தாக்கினர். அவற்றின் கதவுகளை உடைத்து, தங்கள் கைகளால் எடுக்க இயன்ற அனைத்தையும் எடுத்துக்கொண்டனர்.

“இவர்களின் தாக்குதலின் போது, செங்கல் மற்றும் சீமெந்து கொண்டு கட்டப்பட்டிருந்த அனைத்தும் இடிந்து தரைமட்டமானது. வீடுகளை மட்டுமல்ல, வீடுகளின் சுவர்களையும் கோயில்களையும் கூட அடித்து நொறுக்கினார்கள். சுமார் 2.00 மணியளவில் அப்பரப்பை விட்டு வெளியேறினர். அவர்கள் சென்றபின் அப்பரப்பு முழுவதும் புகை மண்டலமாகவே காட்சியளித்தது.

“மூன்றாவது குழு ரி.மயில்வாகனம் தெருவுக்கு வந்து கொள்ளையடிக்கத் தொடங்கியது. முதலில், தங்கள் வருகையை அறிவிக்க கையெறிகுண்டை வெடிக்கச் செய்தனர். முன்னைய நாள் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதால் ... தாக்குதல் நடத்தியவர்களுக்கு வீடுகளையும் கடைகளையும் உடைத்துத் திறப்பதில் சிரமம் ஏதுமிருக்கவில்லை. தாக்குதலாளிகளின் சூறையாடல் குழு வீடுகளையும் கடைகளையும் கொள்ளையடித்த பிறகு கட்டிடங்களுக்குத் தீ வைத்தது. ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குக் கையளிக்கப்பட்ட மதிப்புமிக்க உடைமைகள் சில நிமிடங்களிலேயே அழிந்துபோயின.

“மஹா காலத்துப் பயிரில் அறுவடை செய்யப்பட்ட 450,000 புசல் நெல் தீக்கிரையாக்கப்பட்டது. 1,50,000 மூடைகளையும் எடுத்துச் செல்ல முடியாததால், சேமித்து வைக்கப்பட்ட நெற் களஞ்சியத்தை எரிக்கும் தெரிவை எடுத்திருந்தனர்.

“வீடுகளில் தங்கியிருந்த என்.அருளானந்தம், த.பேரின்பமூர்த்தி, வி.தங்கவடிவேல், கே.காசிதுரை ஆகிய 4 பேர் சாக்கொல்லப்பட்டனர். அவர்களின் சாவு குறித்து உசாவல் நடத்தப்படவில்லை. கொலையாளிகள் தண்டிக்கப்படாமல் விடப்பட்டனர்.”

தொலைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால், மக்கள் நிகராளிகள், மாவட்ட மேம்பாட்டுச் சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களால் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களைத் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

ஜிஹாத் இயக்கம் பெரிய அளவிலான கொள்ளை, வேண்டுமென்று தீமூட்டுதல், வழிபாட்டுத் தலங்களை இழிவுபடுத்துதல் மற்றும் அப்பாவித் தமிழர்களைக் கொல்லுதல் போன்றவற்றில் ஈடுபட்டதாக அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது. எனினும், நடந்தவை குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 1983க்குப் பின்னரான காலப்பகுதியில் இப்படியான ஒரு நிலைமைக்குத் தான் தமிழர்கள் இறக்கப்பட்டிருந்தனர்.

14 ஏப்ரல் 1985 - ஒரு ஞாயிற்றுக்கிழமையாகும். கடந்த இரு நாட்களில் காரைதீவு மீதான அடுத்தடுத்த தாக்குதல்களின் இன்னாமையான அனுபவங்களை அனுபவித்து மிகவும் வேதனையான இயல்புடைய ஒரு மனவடுவினால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் பொதுமக்கள், தாக்குதலாளிகள் மீண்டும் தோன்றமாட்டார்கள் என்றே நினைத்திருந்தனர்.

ஆனால் மூன்றாவது தாக்குதலை காரைதீவு சந்திக்க வேண்டும் என்பது விதி போலும். அது ஏப்ரல் 14 ஞாயிற்றுக்கிழமையின் காலை 8 மணி. மூன்றாவது நாளில் ஜிஹாத்களின் வருகையை கையெறிகுண்டுகளின் வெடிப்புகள் அறிவித்தன. இதே வேளை காவல்துறையினர் காணாமல் போனதும் குறிப்பிடத்தக்கதாகும். 

பாடசாலைகளில் மக்கள் தஞ்சமடைந்தனர். தங்கள் உயிரையும் உறுப்புகளையும் ஓம்பிட (save) இதுவொரு தற்காலிக நடவடிக்கை என்று நினைத்திருந்தனர். பன்னாட்டு குமுகாயம், கத்தோலிக்க திருச்சபை, இளைஞர்கள் கிறிஸ்தவ சங்கம், சிறி இராமகிருஷ்ணா இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம், லயன்ஸ் கிளப் மற்றும் பலவற்றின் ஆதரவுடன் தங்கள் வீடுகள் மீளக்கட்டப்படும் வரை, தாம் பாடசாலைகளில் தான் சில காலத்திற்குத் தங்கியிருக்கப்போவதை அவர்கள் யாரும் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. 

வடக்கு, கிழக்கு என இரு திசைகளிலிருந்தும் கைக்குண்டு வெடியோசைகள் கேட்டன. கைக்குண்டு வெடித்ததைத் தொடர்ந்து வேட்டொலியும் கேட்டது, கடல் உவர்க்கத்தில் (beach) நடந்ததாக நம்பப்படுகிறது. இந்த மோசமானதின் அச்சத்தால் அருண்டு மக்கள் விழிப்படைந்தனர்.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் மலைத்துப்போயினர். அரசியல்வாதிகளின் ‘தமிழர் சிக்கலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான’ வடிவமைப்புகள், நோக்கங்கள், உள்நோக்கங்கள் மற்றும் சூழ்சித்திட்டங்களுக்காக மட்டுமே தாக்குதலாளிகள் சேவை செய்கின்றனர் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. தமிழர்களின் உரிமைகளை முறைமையாக மீறுவதன் மூலம் சிக்கலை முடிவுக்கு கொண்டுவர அரசு திட்டமிட்டது.

இத்தருணத்தில், காரைதீவு மீதான தாக்குதல் நடாத்தப்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னரான 1984 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு எமது சிந்தனைகளை எடுத்துச் செல்வது பயனுள்ளதாகும்.

மணலாறு, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் ஆகிய பரப்புகளில் இருந்து சுமார் 300 தமிழ்க் குடும்பங்களை வன்முறை மூலம் விரட்டியடிப்பதற்கு தரைப்படையையும் வான்படையை அரசு பாவித்ததை நினைவுகூர வேண்டியுள்ளது. இது அறியப்பட்ட அனைத்து நீதிப் பொதுவிதிகளையும் தெளிவாக மீறுவதாகும். ஜிஹாதிகளையும் மொசாட் பயிற்சி பெற்ற ஆயுததாரிகளையும் அறிமுகப்படுத்தியதன் மூலம் இங்கும் சிறிய மாறுபாடுகளுடன் அதே முறைகளை அரசு கையாண்டது. மற்ற மாவட்டங்களில் வெற்றிகரமாக நடத்தியது போல் தமிழர்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி எறிவதே தாக்குதலாளிகளின் நோக்கமாக இருந்தது.

ஐநா மனித உரிமைகள் சாற்றாணையின் 17வது பிரிவு, "யாரும் தன்னிச்சையாக ஒருவரது சொத்துக்களை இல்லாமலாக்கேலாது." என்று கூறுகிறது. ஆனால், சிறிலங்காவில், அரசு தன்னால் கட்டளையிடக்கூடிய அனைத்து வழிகளையும் பாவித்ததன் மூலம் இது வெட்கக்கேடான முறையில் மீறப்பட்டது. தமிழர்களின் மனித உரிமைகளை அவமதிப்பதும், எல்லா வகையான காட்டுமிராண்டித்தனத்தை அனுமதிப்பதும் போராளிகளை வலுப்படுத்த உதவியது.

பெற்றோருடன் தங்கியிருந்த சிறுவர்கள் மெய்யுண்மைகளை அறிய மரங்களின் உச்சியில் ஏறினர். அப்போது அவர்கள் கடலை நோக்கிப் பார்த்ததில் தாக்குதலாளிகள் கிழக்கிலிருந்து தங்கள் தாக்குதலைத் தொடங்குவதற்காக மீன்பிடிக் கடற்கலங்களில் வந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.

தாக்குதலாளிகள், உவர்க்கத்தில் தரையிறங்குவதற்கு முன், அவர்கள் அங்கு தரையிறங்குவது ஓம்பலானதா (safe) என்பதை உறுதிசெய்யும் முன்னெச்சரிக்கையை எடுத்தனர். அவர்களை எதிர்ப்பதற்கும் எதிர்த்தாக்குதலைத் தொடங்குவதற்கும் அருகில் தமிழ்ப் போராளிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பியதால் கடற்கலத்தில் இருந்தபடி சுடுகலனால் சுட்டனர். எந்த ஊறும் இல்லை என்பதை உணர்ந்த அவர்கள் தங்கள் வெடிமருந்துகளுடன் கரைக்குக் குதித்தனர்.

தாக்குதலாளிகள் கரடித்தோட்டம் பிரிவை நோக்கிச் சென்று வீடுகளையும் கடைகளையும் சூறையாடத் தொடங்கினர். அவர்கள் வெதுப்பகங்கள், மருந்தகங்கள், விலங்குகள் உள்ள கால்நடை கொட்டகைகள், அரிசி ஆலைகள், அரைவை ஆலைகள், அஞ்சல் அலுவலகம், மாவட்ட மேம்பாட்டுச் சபையின் அலுவலகம் மற்றும் கமநல சேவைகள் மையம், கமப் பயிற்றுனர் அலுவலகம் மற்றும் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம் போன்ற அனைத்து அரசு நிறுவகங்களையும் தாக்கினர். வீடுகளும் கடைகளும் விரைவில் தீக்கிரையாக்கப்பட்டதால் புகை மேகங்கள் காற்றில் பரவின.

பதினெட்டு மீன்பிடிக் கடற்கலங்கள், மீன்பிடி ஏந்தனங்கள் (equipments) மற்றும் ஐந்து மீனவர்களின் குடிசைகள் கூட எரிக்கப்பட்டன. விநாயகர், வீரபத்திரர், அம்பராயன் கோவில், ஆனைக்குட்டி கோவில்களை சேதப்படுத்தினர். தாக்கப்பட்ட கோவில்களின் உடைந்த சுவர்களில் “அல்லாஹு அக்பர்” என்ற வாசகங்களை வரைந்தனர். இரண்டு அரசுப் பாடசாலைகளும் ஒரு பாலர் பாடசாலையும் எரிக்கப்பட்டன. அவர்களின் தாக்குதல் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் நீடித்தது. மக்களுக்கு உணவோ தண்ணீரோ இல்லாததோடு அச்சத்தின் விளைவாக உயிருடன் இருப்பதை விட 'இறந்தவர்கள்' ஆயினர்.

காரைதீவில் பொதுமக்கள் மீதும் அவர்களது சொத்துக்கள் மீதும் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காணாமல் போயுள்ளதோடு ஏராளமானோரும் காயமடைந்துள்ளனர். ஆதரவற்றுப்போன 84 சிறார்களுக்கு கிராமத் தலைவர்கள் தங்குமிடம் தேடினர்.

மொத்தம் ஆறு இந்துக் கோவில்கள் தீயாலும் சூறையாடலாலும் சேதப்பட்டன, 802 வீடுகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன; 210 கால்நடைகள், 332 ஆடுகள் மற்றும் 3500 கோழிகள் காதப்பட்டன (பொதுவாக அதிக எண்ணிக்கையில் மக்கள் அல்லது விலங்குகளை ஒரு கொடூரமான அல்லது வன்முறையான வழியில் கொல்வது).

ஒரு அரசு மருத்துவமனையும் மருத்துவப் பயிற்சியாளர்களால் நடத்தப்படும் இரண்டு மருந்தகங்களும் முற்றிலும் சேதமடைந்தன, 84 கடைகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன; 17 மகிழுந்துகள், இரண்டு உழுபொறிகள், இழுபெட்டிகள், இரண்டு உந்துருளிகள், 22 இரட்டை-மாடு வண்டிகள், 987 மிதிவண்டிகள் என்பன எரிந்து நாசமாகின. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் குண்டர்களுடன் காவல்துறையினர் பாதியாகவா முழுதாகவா உடந்தையாக இருக்கிறார்கள் என்பது மனித உரிமை ஆர்வலர்களை குழப்பியிருந்தது.

ஏப்ரல் மாதத்தில் வரும் "சித்திரை ஆண்டுப் பிறப்பு" அல்லது இந்துப் புத்தாண்டுப் பிறப்பு என்பது தமிழர்களுக்கு கணிசமான முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். அதை அளப்பரு பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட ஒன்றாக கருதுகின்றனர், இந்துக்கள்.

சோதிடசாராக, வசந்த காலத்தில், நல்லவேளையாக, செழிப்பையும் மகிழ்ச்சியையும் குறிக்கும் 'வசந்த ருது' காலத்தில் சூரியன் மேஷ இராசியில் நுழையும் போது, இம்மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் கோள்களின் தீய விளைவுகளிலிருந்து விடுபட மத வழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள். புத்தாண்டானது கோள்களால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்க்கையில் இனிமையான ஆச்சரியங்களையும் களிப்பான தருணங்களையும் தருகிறது என்று நம்பப்படுகிறது.

ஏப்ரல் மாதத்தில் மரங்கள் இலைகளை உதிர்த்து, மொட்டுகளை மலர்விக்கத் தொடங்குவதோடு சுற்றிலும் இனிமையான நறுமணத்தைப் பரப்புவதால் இயற்கையானது அழகையும் கவர்ச்சியையும் சேர்த்துக்கொள்கிறது. கமக்காரர் தனது கடின உழைப்பிற்கு வெகுமதியாக மஹா பயிரில் இருந்து மிகைப்படியான அறுவடையைப் பெறுவார். புத்தாண்டைக் கொண்டாடும் நேரத்தில், வீட்டில் தானியங்களைச் சேமித்து வைத்துவிட்டு மகிழ்ச்சியாக இருப்பார். வீடுகளுக்கு வெள்ளையடித்து, பழைய பாத்திரங்கள் தூக்கி எறியப்பட்டு, புதியவை வாங்கப்படுகின்றன.

காரைதீவு மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் ஏவல்செய்யப்பட்ட போது தமிழர்கள் எந்த மனநிலையில் இருந்தார்கள் என்பதை புரிந்து கொள்வது முக்கியமானதாகும். இந்தச் சமயத்தில் வரும் இந்தக் கொண்டாட்டமானது (புத்தாண்டு) சோதிடத்திலும் நேர-கால முக்கியத்துவத்திலும் மூழ்கியிருக்கும் இந்த எளிய, ஊர்ப்புற குமுகாயங்களின் நம்பிக்கை முறைமையிலும், அவர்கள் செய்த எல்லாவற்றிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

காரைதீவைச் சுற்றியுள்ள முஸ்லிம் சமுதாயமானது தமிழர்களுடன் பொதுவான நலன்களைப் பகிர்ந்து கொண்டதுடன், பல ஆண்டுகளாக நிலையான நம்பிக்கையையும் நட்பையும் கட்டியெழுப்பியதோடு, அவர்களைத் தாக்க எந்த காரணத்தையும் கொண்டவர்களாக இருந்ததில்லை. "கடவுள் இரக்கமும் கருணையும் கொண்டவர்" என்று இஸ்லாம் போதிக்கிறது. முஸ்லிம்கள் விருந்தோம்பலையும் தொண்டுகளையும் கடைப்பிடித்ததோடு முயஸினின் கூவலின் பேரில் ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் சென்றும் நடுத்தர வழியைப் பின்பற்றினர்.

நண்பகலில் வழிபாட்டிற்கு அழைக்கப்படும் தமிழர்களுக்கும் தொழுகைக்கு அழைக்கப்படும் முஸ்லிம்களுக்கும் வெள்ளிக்கிழமைகள் சிறப்பு மத முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஒரு வெள்ளிக்கிழமையில் தான் ஜும்மா தொழுகைக்குப் பிறகு காரைதீவில் அரச வன்முறைகள் ஆரம்பமாகியதோடு தாக்குதலில் சுமார் 800 பேர் இணைந்தனர் என்பதை சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வீடற்ற நிலையில் நின்றவர்கள் மீது உலங்குவானூர்திகளிலிருந்து சுட்டுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் எரிக்கப்பட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டையிலிருந்து தாக்குதலில் ஈடுபட்ட சிலரின் அடையாளம், தாக்குதலுக்குப் பிறகு, உடனடியாக நிறுவப்பட்டது. பங்கேற்பாளர்கள் கொழும்பு வாசிகள் என்றும், 'ஜிஹாத்'தோடு நெருக்கமாக சேர்ந்தியங்குபவர்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். 1977 முதற்கொண்டு இலங்கையில் காணப்படுபவற்றிலிருந்து முடிபை எடுப்பதற்கு ஒருவர் மிகையான புத்திசாலித்தனத்தை கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தேவை இல்லை.

1977 ஆகஸ்ட் முதல் அரச படைகளிடமிருந்து தமிழ் குமுகாயம் நையப் புடைப்பைப் பெற்றுவருகிறது. 1977, 1981, 1983 மற்றும் 1984-85 ஆண்டுகளில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், தமிழர்களை அவர்களின் பாரம்பரிய தாயகத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்கும் அவர்களை வெளியேற்றுவதற்கும் அரசாங்கம் எந்த விலையும் கொடுக்க முனைந்திருப்பதை சுட்டிக்காட்டியது. 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற காரைதீவு மீதான தாக்குதலிலும் இதே முறையை கடைப்பிடித்த போது, நாட்டில் உள்ள தமிழர்களை வேரோடு பிடுங்குவதற்கு அரசு கையாண்ட மிருகத்தனத்தை மறக்க முடியாது போனது.

அரசாங்கம் மடைத்தனமாக காரைதீவு மீதான தாக்குதல் ஒரு தனிமைப்பட்ட, தன்னியல்பான தாக்குதல் என்று காட்ட முயற்சித்ததோடு அதை முஸ்லிம்களால் நடத்தப்பட்ட "புனிதப் போர்" என்றும் முத்திரை குத்தியது. போர்கள் சில நேரங்களில் புனிதப் போர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அந்த புனிதப் போர்கள் முஸ்லிமல்லாதவர்களை இஸ்லாத்திற்கு மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தன, அவை ஜிஹாத் என்று அழைக்கப்பட்டன. உருவ வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக நபி றசூல் (ஸல்) அவர்கள் இத்தகைய போர்களைப் போதித்ததாகக் கோரப்படுகிறது. காரைதீவு மீதான போர் தமிழர்களை அழிப்பதற்காகவே தவிர மதமாற்றம் செய்வது நோக்கமல்ல!

1985ல் காரைதீவை அழிக்கத் திட்டமிட்டவர்களின் செல்திசையின் இயல்திறத்தை புரிந்துகொள்ள ஜிஹாத் பற்றிய ஒரு சிறு விளக்கம் பொருத்தமானதாக இருக்கும். “ஜிஹாத் என்பது முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக வாள் ஏந்திப் போரிடும் கருத்தாக்கம்” என்று என்ஸைக்ளோபீடியா விளக்குகிறது.

இஸ்லாம் என்பது "தார்-அல்-இஸ்லாம்" (இஸ்லாத்தின் இருப்பிடம்) மற்றும் டார்-அல்-பார்ப், (போரின் உறைவிடம்) ஆகியவற்றைக் குறிக்கிறது. ‘பகைவர்களான’ அதாவது முஸ்லிமல்லாத அயலவருக்கு எதிராக, ஜிஹாத் என்று குறிப்பிடப்படும் ஆகாததில் வயது வந்த ஆண்களும், உடல் திறன் கொண்ட ஆண்களும் பங்கேற்க வேண்டும் என்று புனித நூல் வேண்டுகிறது. பகைவர்கள் "காஜி" (இஸ்லாத்தை நம்பாதவர்கள்) மற்றும் 'அக்ல்-அல்-வியரல்' (புத்தகங்களின் மக்கள்) என வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். புத்த சமயத்தவரும் இந்துக்களும் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள் ஆவர். பகைவர்களுக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன. ஒன்று இஸ்லாத்தை தழுவுவது மற்றொன்று சாவொறுப்பை எதிர்கொள்வது என்பன அவையாகும்.

காரைதீவில் தாக்குதல் நடத்தியதில் ஜிஹாத் தவிர்ந்து பாதுகாப்புப் படையினரும் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் புத்த சமயத்தை சேர்ந்தவர்களாகயிருந்தனர். புத்த சமயத்தவரை இரக்கம் மற்றும் மனக்கசிவின் பாதை என்ற வேறுபட்ட பாதையைப் பின்பற்றுமாறு பொரவழைக்கப்பட்டுள்ளனர். உயிரை மதிக்கவும், விலங்குகளிடம் கூட இரக்கம் காட்டவும் புத்த மதம் அதன் பின்பற்றுநர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளது.

பௌத்தத்தின் மெய்ப்பொருளாயும் அதன் ஒழுக்க நிலைகளை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட எட்டுக் கட்டளைகளில் மூன்றுமான இவை ஒவ்வொரு முறையும் வழிபாட்டின் போது மீளச் சொல்லப்படுகின்றன: "உயிர் எடுப்பதைத் தவிர்ப்பது; திருடுவதையும், சூறையாடுவதையும் தவிர்ப்பது மற்றும் பொய்யுரைப்பதைத் தவிர்ப்பது” என்பன காரைதீவை அழித்தவர்களிடத்தில் இருக்கவில்லை.

காரைதீவு என்ற ஊரை சிறப்பு அதிரடிப்படை அழித்ததாகவும் 23 தமிழ் இளைஞர்களை நற்பிட்டிமுனையில் இருந்து கடத்திச் சென்று அனைவரையும் தம்பிலுவிலில் வைத்துக் கொன்றதாகவும் குற்றஞ்சாட்டி கள்ளக் கூற்றுரைகளை வெளியிட்டு அவசரகால சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்தார் என்று கல்முனை குடிமக்கள் குழுவின் தலைவர் பால் நல்லநாயகத்தை எதிர்த்து அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 'குடிமை உரிமைகள் இயக்கம்' மற்றும் 'மனித உரிமைகளுக்கான இல்லம்' என்பன அவர்களின் முன்னணி மனித உரிமைகள் சட்டத்தரணி அணியினரான N. நடேசன், Q.C., J.C.D. கொத்தலாவெல, I.F. சேவியர், சூரிய விக்கிரமசிங்கே, M. அழகராஜா, A. சமரஜீவா மற்றும் N. பெர்னாண்டோ ஆகியோரைப் போட்டு பால் நல்லநாயகம் சார்பாக வாதாடிய போது காரைதீவின் அழிவு கொழும்பு உயர் நீதிமன்றச் சுவர்களுக்குள் எதிரொலித்தது.

காரைதீவு மீதான தாக்குதலில் ‘தர்மிஸ்த’ அரசின் கைகளான தேசியப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் காவல்துறையினரின் கைவரிசை காணப்பட்டது. இதில் விந்தை என்னவென்றால், இறந்தவர்களுக்கான உசாவல்கள் நடத்தப்படவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தமையே. குற்றவாளிகளை தண்டிக்க அரசு தவறியதே ஊரின் அழிவுக்கு அரசு உடந்தையாக இருந்ததற்கு போதுமான சான்றாகும்.

காரைதீவை அழிப்பதற்காக பல பாரவூர்திகளில் குண்டர்களை கொழும்பில் இருந்து கொண்டு வந்ததாக பகிரங்க குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், முஸ்லிம்கள் தமிழர்களுக்கு எதிராகப் போராடினார்கள் என்று கூறி முஸ்லிம் சமூகத்தைக் காட்சிக்கு இழுக்க அரசாங்கம் முயற்சித்தது.

அம்பாறை மாவட்டத்தில் 1977 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட அச்சுறுத்தலைத் தொடர்ந்து பொருளாதார சாராக நலிவடைந்த தமிழர்கள், இன்றைய பண்பாட்டுச் சூழலுக்குப் பொருந்தாத பழங்காலத் தத்துவங்களைக் கொண்டுள்ளனர். தமிழர்கள் நடுவணில் பரவலறியான தலைவராக இருந்த ஒருவர் இரு பத்தாண்டுகளுக்கு முன்னர் என்னிடம் கூறினார்,

“ 'அவரைப்' பற்றி ஆழ்ந்து சிந்தியுங்கள்
காலமற்ற பொருள், துய்ய* ஆன்மா,
‘ஓம் சத் சித் ஆனந்தம்’. எம்மூலத்திலிருந்து பிறந்தோம்?
எவ்விடம் செல்லப்போகிறோம்? இன்பங்களும் துன்பங்களும்,
உலகின் செல்வமும் வலுவும்
அனைத்தும் நிலையற்றது.”

இது தான் தவிர்க்கவியலாததை ஏற்கும் மெய்மை.

அவரின் இந்தச் சொற்கள், “பரலோக அரசை அடைய, உங்களிடம் இருப்பதை கூட கொடுத்து விடுங்கள்” என இயேசு நாதர் தன் மக்களுக்கு கூறியதை எனக்கு நினைவூட்டியது. கிறீஸ்தவர்கள் தங்கள் மன்றாட்டின் போது “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்கு தாரும்” என மட்டும் கேட்கிறார்கள் அல்லவா? அதே போல் வேதாகமமும் “பூமியிலே உங்களுக்கு பொக்கிஷத்தை தேடி வைக்காதீர்கள்” என அவர்களுக்கு கட்டளை இடுகிறதல்லவா?

1956 ஆம் ஆண்டு முதல் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தமிழ் குமுகாயத்தை அழிக்க முற்பட்டன. காரைதீவின் அழிவு என்பது காரைதீவில் இருந்து தமிழர்களை வெளியேற்றுவதற்கான ஒரு தந்திரமான தடூக (maneuver) முயற்சியாகும்.

கலாநிதி என்.டி. விஜேசேகராவை மேற்கோள் காட்டுவது பயனுள்ளதாக கருதப்படுகிறது, அவர் தனது ‘பீப்பிள் ஒஃவ் சிலோன்’ (த. சிலோனின் மக்கள்) என்ற நூலில் (1945) பின்வருமாறு பதிவு செய்கிறார்:

"இன்றைய தமிழ் மக்கள் தொகையானது தீவு முழுவதும் பரவி வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் செறிவுடன் உள்ளது"

அநுராதபுரம், குருநாகல், பொலன்னறுவை, கலாவெவ, தம்புத்தேகம, எப்பாவெல, மன்னம்பிட்டி ஆகிய இடங்களில் வாழ்ந்த தமிழ்ச் சமூகம் ஒன்று அழிக்கப்பட்டுவிட்டது அல்லது உள்வாங்கப்பட்டுள்ளது. இதே போன்று முல்லைத்தீவு மற்றும் திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அரசாங்கத்திற்கு வெற்றியளித்துள்ளன. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக பின்பற்ற வேண்டிய திசை தெரியவில்லை. பரவலறியான பாரசீகக் கவிஞரான உமர் கையும் அவர்கள் ரூபையாத்தில் கூறியதை மட்டுமே நாம் அவர்களுக்கு நினைவுபடுத்த முடியும்.

“முட்டாள்களே, உங்கள் தலைவிதியாக நீங்காப்பழியைக் கொண்டு,
நரகத்தின் நித்திய நெருப்பிற்கான எரிபொருளாகும் ஒறுப்புப் பெற்றீர்.
"நைகரப்படாமல்* அனைத்துப் பேராசையையும் பொறாமையையும் தவிர்க்கவும்,
வரிசைமாற்றம்* மூலம், ஊத்தைகள் வெல்வது நியாயமானது:
முழு காட்சியும் விரைவில் கண்டிப்பாக மறைவுறும்.”

 

(நைகரப்படாமல்* - unperturbed, வரிசைமாற்றம் - permutation, துய்ய - supreme)

 

 

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to புத்தாண்டின் குருதி தோய்ந்த விடியல்: காரைதீவு 1985 | பியொன்ட் த வால்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.