Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

மன்னாரின் முள்ளிக்குளத்துக்கும் கீரிசுட்டானுக்குமிடையே சோலைக் காடொன்று உண்டு. காட்டின் ஒரு திசையில் போனால் விளாத்திக்குளம் வரும். அங்கே லெப். சாள்ஸ் அன்ரனி படையணியினர் சில கண்காணிப்பு நிலைகளை அமைத்தார்கள்.

விளாத்திக்குளத்தின் பின்புறமாக ஒரு திசையில் சோலைக் காட்டினுள் புகுந்த 2 ஆம் லெப். மாலதி படையணியின் ஒரு அணி தமிழ்தென்றலின் வழிகாட்டலில் கண்காணிப்பு நிலைகளுக்கான இடங்களைத் தேர்வு செய்து, இயற்கையான மரக்காப்புகளுடன் நின்றுகொண்டு, தேவையான அகழிகள் சிலவற்றைத் தம் தேவைக்கேற்ப வெட்டியது.

காட்டிடையே எழுந்த இந்த முன்னரண் தொகுதிக்கு வலப்புறம் கோயில்மோட்டை இருந்தது. அவர்களும் இவர்களுமாக வேலை செய்து போர் முன்னரங்கை இணைக்க வேண்டும்.

வலப்புறம் வீதியை விட்டு, வீதியின் இடதுபுறம் ஒரு காப்பரண், அதற்கு இடப்புறமாக இன்னொரு காப்பரண் – இந்தக் காப்பரண் அமைவிடத்தில் எமது முன்னரங்க நிரையைக் குறுக்கறுத்தவாறு ஒரு சிறு அணை வடிவிலான உயரமான நிலப்பரப்பு இருந்தது-, அதற்கு இடப்புறம் ஒரு காப்பரண் – இதில் கொம்பனியின் மேலாளர் தமிழ்தென்றல் வானலைக் கருவித் தொகுதியோடும் ஒரு பீ.கே. எல்.எம்.ஜி அணியோடும் போர் முன்னரங்கிலேயே நின்றார்-, இதற்கு சற்று இடப்புறத்தில் எமது முன்னரங்க நிரையைக் குறுக்கறுத்தபடி ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்தது.

ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட அணை வடிவிலான நிலப்பரப்பானது முன்னரங்கின் சற்றுப் பின்புறமாக இடது புறமாகத் திரும்பி அருவியைக் குறுக்கறுத்துப்போனது. ஆற்றுக்கு இடப்புறம் இரு காப்பரண்கள், தொங்கலில் செங்கயலும் முடியரசியும் நின்றனர்.

மேலே உயர்ந்த சோலைக்காடு. நிலமட்டத்தோடு நெருக்கமான பற்றைக்காடு. எழும்பி நின்றாலும் எதிரியைக் கண்காணிக்க முடியாது. நிலமட்டத்தோடு பார்த்தாலும் ஒன்றும் தெரியாது. குனிய ஐந்து நிமிடங்கள், குனிந்தவர்கள் நிமிர பதினைந்து நிமிடங்கள் எடுக்கும். கொழுக்கி வடிவில் அமைந்த முட்கள் ஆட்களை அசையவிடாமல் பிடித்து வைத்திருக்கும். தட்டிவிட முடியாது. ஒவ்வொரு முட்களாகக் கழற்றித்தான் நிமிரலாம். சண்டை பிடிப்பது ஒன்றும் சிரமமாகத் தெரியவில்லை. இந்த முட்களுடனான பிணக்கும் விலக்கும்தான் பெரிய வேலை அவர்களுக்கு.

நாளாந்தம் சோறு, கறி வராது. ஐந்தாறு நாட்களுக்கொரு தடவை தரப்படுகின்ற உலர் உணவுகளைச் சுமந்தபடி காலை, மதியம், இரவு என்று தேடுதல் செய்தபடி அந்த அணி நின்றது.

அன்று அவர்களுக்கான உணவுகளை எடுக்கப்போக வேண்டிய நாள் மூவர் தேடுதல் செய்தனர். இடையிலே அந்நியமான தடயங்களைக் கண்டுவிட்டு, அதைப் பின் தொடர்ந்தனர். ஆனால் இடையிலே அவற்றைக் காணவில்லை. இருண்டுவிட்டது. எனவே சாப்பாடு எடுக்கப்போகவில்லை. அன்று எவரும் சாப்பிடவில்லை. ஒருவரிடமும் சாப்பிட ஒன்றுமில்லை.

மறுநாள் நால்வர் தேடுதல் செய்தபடி எடுத்துவரப் போயினர். மெல்ல மெல்ல நகர்ந்த அணி அந்த உயரமான நிலப்பகுதியருகே இருந்த வெளியில் இறங்க, அந்த உயரமான நிலப்பகுதித்தொடரின் மேலே மறைந்திருந்த சிங்களப் படையினர் இவர்களைத் தாக்கத் தொடங்கினர். நேற்றைய தடயங்களுக்குரிய சிங்களப் படையினர் எங்காவது மறைத்திருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து அவர்கள் அந்த அணைத் தொடரை நெருங்கவே நீண்ட நேரமாகிவிட்டது.

முதலாவதாகப் போன தமிழிசை அணையில் ஏற முற்பட, அதன் மறுபுறமாக மேலே மறைந்திருந்த சிங்களப் படையினர் சுட, எதிர்பார்ப்புடனே போனதால் இவர்களும் சுட, சண்டை தொடங்கிவிட்டது. முன்னர் ஒரு சமரில் காலில் காயப்பட்டிருந்த தமிழிசை ஏறிய நிலையில் நின்று நிமிர்ந்து மேலே சுட, காயமடைந்த கால் சறுகி கீழே விழுந்துவிட்டார். விழுந்தகணமே எழும்பித் திரும்பவும் எதிரியின் ரவை தமிழிசையின் முதுகை உரசி, வானலைக் கருவியின் தொங்குபட்டியை அறுத்து, ரவைக்கூட்டுத் தூளியைக் கிழித்துச் சென்றது.

அவர் குனிந்து வானலைக் கருவியை எடுப்பதற்குள் சிங்களப் படையினர் அவரை நெருங்க முயன்றனர். தோளில் காயம்பட்ட தமிழிசை நிமிர்ந்த வேகத்திலேயே சிங்களப் படையினரைச் சுட்டார். சிலர் காயமடைந்து விழ, தமிழிசை போர் முன்னரங்குக்கு, தனது காப்பரணுக்கு வந்துவிட்டார்.

சண்டை தொடங்கிய சத்தம் கேட்டவுடனேயே தமிழ்தென்றல் தன்னோடு நின்ற பீ.கே.எல்.எம்.ஜி அணியை அந்த அணை வடிவிலான நிலத்தொடரை நோக்கி நகர்த்தினார். ஆனால் சுட முடியவில்லை. அதற்கு அப்புறம் இருப்பவர்களை இப்புறம் கீழே நின்று சுட்டால் குருவிக்குத்தான் படும். ஒரு எதிரிக்கும் படாது. எனவே அணைத்தொடரைக் கண்காணித்தபடி அவ்வணி மறைவாக நிலைகொண்டது.

வீதியருகிலிருந்த காப்பரணில் நின்ற புலியரசி தனது காப்பரணின் பின்புறமாக அணைபோன்ற நிலத்தொடரை நோக்கித் தேடுதல் செய்தபடி ஒரு அணியோடு நகர்ந்தார். அவர்களை வானலையில் வழிநடத்தினார் தமிழ்தென்றல். அவர்களின் பின்புறமாக ஒரு கிளை ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றைக் கடக்க முற்பட, ஆற்றின் மறுகரையில் சிங்களப் படையினர் நிற்பதைக்கண்டு அங்கு சண்டையைத் தொடக்கியது அவ்வணி.

ஆற்றுக்கு அப்புறம் நின்ற சிங்களப் படையை பீ.கே.எல்.எம்.ஜி அணியினர் அடையாளங்கண்டு அவர்களும் சண்டையைத் தொடங்கினர்.

தம்மை நோக்கி இருபுறமும் தாக்குதல் வந்ததால் அவ்விடத்தில் மேலும் நிற்க முடியாத நிலை தோன்ற, சிங்களப் படையினர் தமது பகுதியை நோக்கி நகர முயன்றனர். பின்வாங்கும் முயற்சியில் அவர்கள் நகர்ந்த பாதைக்கு குறுக்கே இருந்தது தமிழ்தென்றலின் கட்டளை மையமான காப்பரண் – காயப்பட்ட சிங்களப் படையினர் கத்திக்கொண்டிருக்க அவர்களைச் சுமந்தபடி வந்த ஏனைய படையினரை நோக்கி தமிழ்தென்றலோடு நின்றவர்கள் தாக்கினர்.

எல்லாப்புறமும் அடிவிழ, வீதிப்புறமாக நகர்ந்து எமது முன்னரங்கைக் கடக்க அவர்கள் முயன்றனர். வீதியோரக் காப்பரணில் நின்ற புலியரசியின் அணி சண்டைக்கென அணை போன்ற உயரமான நிலத்தொடரை நோக்கிப் போனபோது, அக்காப்பரணில் சேரமலரின் அணியைத் தமிழ்தென்றல் விட்டிருந்தார். தம்மைக் கடக்க முயன்ற சிங்களப் படையினரைச் சேரமலரின் அணி போட்டுத் தள்ளியது. சிங்களப் படையினரில் சிலர் தமது பகுதியை நோக்கி ஓட, சிலர் மீளவும் எமது போர் முன்னரங்கின் பின்புறமாக ஓடினர். முற்றுகையிட வந்தவர்கள் இப்போது தப்பிப்போக வழியற்று, முற்றுகைக்குள் அகப்பட்டனர்.

புலியரசியோடு சண்டைக்குப் போனவர்களில் இசை என்ற ஆண் போராளி விழுப்புண்ணடைந்து காலில் முறிவு ஏற்பட்டதால், புலியரசியோடு தொடர்ந்து முன்னேறாமல், மேட்டு நிலத்தொடருக்கு அருகாக போர் முன்னரங்கின் பின்புறம் காட்டினுள் மறைந்து நின்றார். மேட்டு நிலத்தொடருக்கு மறுபுறம் நிற்கும் சிங்களப் படையினரின் குரல்கள் அவருக்குக் கேட்டுக் கொண்டிருந்தன. அவரின் தகவலுக்கமைய வழுத்திருத்தங்களுடன் எறிகணைகள் வீசப்பட்டன.

தமிழ்தென்றலின் அணிக்கு உதவியாக லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியினர் தமது 50 கலிபருடன் ஓடோடி வந்து, அணை போன்ற உயரமான பகுதியின் அடிவாரப் படையினரைத் தாக்கினர். மீண்டும் நிலைகுலைந்த சிங்களப் படையினர் சிதறிக் கலைந்தனர்.

இப்போது பி.ப.3.00 மணியாகிக் கொண்டிருந்தது. நேற்று முழுதும் சாப்பாடு, தண்ணீரில்லை. இன்றும் அதே நிலைமை. எல்லோர் நாக்குகளும் உலர்ந்துபோயின.

ஆற்றுக்கு அப்பால் நின்ற லெப். சாள்ஸ் அன்ரனி படையணிப் போராளி யாழவனும் 2 ஆம் லெப். மாலதி படையணிப் போராளிகள் முடியரசியும் மதியழகியும் தேடுதல் செய்தபடி தண்ணீர் அள்ளுவதற்காக ஆற்றை நோக்கி நகர்ந்தனர். சண்டைக்குள் நிற்பவர்களின் தாகத்தைத் தீர்க்கவேண்டுமே. ஆற்றுக்குப் போவதற்கிடையில் சிங்களப் படையினரைக் கண்டு, எல்.எம்.ஜி.யால் வெளுத்து வாங்கினார்கள். ஐயாமாருக்கு அப்புறமும் அடி, இப்புறமும் அடி, உட்புறமும் அடி. திருப்பித் தாக்காமலேயே ஐயாமார் நடையைக் கட்டினர். காயப்பட்டவர்களைக் காவிக்கொண்டோ, கைவிட்டோ போய்ச் சேர்ந்தால் போதும் சாமி. யுத்தம் சரணம் கச்சாமி.

இம்முறை சிங்களப் படையினர் தமது பகுதி நோக்கிப்போக முயற்சித்த பாதைக்குக் குறுக்கே இருந்தது செங்கயலின் காப்பரண்.

செங்கயலின் பக்கம் படையினர் போவதாக தமிழ்தென்றலுக்கு யாழவன் சொல்லிக் கொண்டிருந்தபோது சண்டைச்சத்தம் கேட்டது.

‘ஆள் என்ரை பக்கம்தான் வந்தவர். நல்லாக் குடுத்திருக்கிறன். திரும்பி ஓடுறார்”

என்று செங்கயல் அறிவித்தார்.

செங்கயலுக்குச் சற்றுப் பின்னே 2 ஆம் லெப். மாலதி படையணியில் செந்துளசியுடனும், லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் சுடருடனும் ஒருவர் இருவராக மரங்களோடு நிலைகொண்டிருந்தனர். செங்கயலின் அணியிடம் அடிவாங்கிப் பின்னே வந்த சிங்களப் படையினரை இவர்கள் தாக்கினர். கத்திக்குளறிக்கொண்டு விலகி மறுபடி ஆற்றை நோக்கி நகர முற்பட்டவர்களை யாழவன், முடியரசி, மதியழகி உள்ளடங்கலான மூவர் அணி சுட்டுத் தள்ளியது.

அதற்கிடையில் சிங்களப் படையினர் வந்த திசை நோக்கி தமிழ்தென்றலோடு நின்ற பீ.கே.எல்.எம்.ஜி அணியினர் தாக்கிக் கொண்டிருந்தனர். எல்.எம்.ஜி.யின் அடி கேட்டதும் பீ.கே.எல்.எம்.ஜி அடியை நிறுத்தினார்கள்.

மறுபடியும் தப்பியோடும் முயற்சியில் சிங்களப் படையினர் இறங்கினர்.

போராடும் அகவை கொண்ட அனைவருக்கும்,

 

வணக்கம்.

ஐந்து மாதங்களின் முன், முள்ளிக்குளத்தில் எம்மை முற்றுகையிட வந்த சிங்களப் படையினர் தமது முதுகெலும்பு முறிந்து திரும்பிப்போன கதை இது. எங்களின் பலம் இன்னும் சற்று அதிகமாக அன்று இருந்திருந்தால், அவர்களின் ஈமங்களைச் சுமந்த நூறு பொதிகள் சிங்கள நாட்டுக்குப் போயிருக்கும். எங்கள் பின்னே எழுந்து வாருங்கள் என்று அன்றும் நாம் உரத்த குரலில் கூப்பிட்டோம். இன்று முழங்காவிலில் நின்றும் கூப்பிடுகின்றோம்.

வீட்டுக்கு ஒருவர் போதும் என்று யார் முடிவெடுத்தது? கப்டன் வாசு (1987), கப்டன் சுந்தரி (1990), மேஜர் ஜேம்ஸ் (1991) என ஒரு வீட்டிலிருந்து மூவர் போராட வந்த பாரம்பரியம் அல்லவா எம்முடையது.

எழுந்து வாருங்கள்.

எத்தனைபேர் வந்தோம் என்பதை விடுதலையின் பின்னர் கணக்குப் பார்ப்போம்.

இப்போது எம் கைகோர்க்க வாருங்கள்.

நன்றி
அன்புடன்
தமிழ்தென்றல்.

 

நினைவுகளுடன்:- போராளி மலைமகள்.
வெள்ளிநாதம் (05 புரட்டாதி 2008) இதழிலிருந்து…..

https://pulikalinkuralradio.com/archives/34769

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து சில மீற்றர்கள் முன்னதாக தனது முன்னணி அவதானிப்பு நிலையை அமைத்திருந்தனர் படையினர். எதிரியை ஈர்க்கக்கூடிய ஆட்டங்கள், அசைவுகள் ஏதுமற்று இயற்கையோடு ஒன்றித்து முடியரசியின் அணி பதுங்கிக் கிடந்தது. எதிரியைப் பார்த்துக் கிடந்தது. வேவுப் பணியை ஒத்த முதன்மையான பணி அது.

அவர்களில் இருவரைக் காண அவர்களின் பெற்றோர் கேட்டிருந்தனர். முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து ஒருவர் பின்னகர்வது சின்ன விடயமல்ல. அவரை மாற்ற ஆட்கள் வரவேண்டும். பின்னே போகப் போவது ஒருவராயினும் இருவராயினும், போகவுள்ள பாதையின் பாதுகாப்பை ஒரு அணி தேடுதல் செய்து உறுதிப்படுத்தவேண்டும். வழியில் பகைப் படையினரின் அமுக்கவெடிகளைப் பாய்ந்து கடந்து, சண்டை வந்தால் சண்டை பிடித்து, விழுப்புண்ணடைந்தோரைச் சுமந்து, வித்துடலாக வீழ்ந்தோரைச் சுமந்து, பெருந்தொலைவுவரை நடந்துதான் போர்க்களத்தைவிட்டு வெளியேறமுடியும்.

அப்போது முழங்காவிலில் இருந்த 2ஆம் லெப்.மாலதி படையணியின் மக்கள் தொடர்பகத்துக்கு வரப்போகும் பெற்றோரைக் காண வர ஒருநாள், சந்திக்க ஒரு நாள், மறுபடியும் போய்ச்சேர ஒரு நாள் என மூன்று முழு நாட்கள் பிடிக்கும். மூன்று நாட்களும் இரு போராளிகளின் பணியை முடியரசி வெற்றிடமாக விடமுடியாது. எனவே மாற்றிவிட ஆட்கள் வந்தனர்.

முறியடிப்பு அணியிலிருந்து வினோதா, திசையருவி, அகிலானி மூவரும் வந்தனர். இவர்கள் வந்தபின் அவர்கள் போயினர். பெற்றோரைக் கண்டனர். இதோ இன்று அவர்கள் திரும்பி வருகின்றனர். முடியரசி யின் அணியிலிருந்தும் வேறு அணிகளி லிருந்தும் பெற்றோரைக் காணச் சென்ற வர்கள் ஒரு அணியாக, தேடுதல் செய்தபடி கொம்பனிப் பொறுப்பாளர் புகழரசியின் கட்டளை மையத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் தகவல் பகுதிக் கட்டளை அதிகாரி செங்கோல் அவர்களால் புகழரசிக்குச் சொல்லப்பட்டது. அந்த அணியின் கண்ணெட்டும் தொலைவில் புகழரசியின் கட்டளை மையம் தெரிந்த வேளை சிங்களப் படையினரின் தாக்குதலை அந்த அணி சந்தித்தது. போர் முன்னரங்கின் பின்புறம், கட்டளை மையத்தின் பின்புறம் சண்டை தொடங்கியது.

முன்னணி அவதானிப்பு நிலையின் முன்புறம் ஒரு குவியலாகச் சிங்களப் படையினர் வருவதை அதில் நின்றவர்கள் கண்டனர். சண்டையைத் தொடங்கினர். வினோதாவுக்கு இதுவே முதற்சண்டை.(இச் சண்டையின் முழுமையான விரிப்பு 2008.07.25 அன்றைய ‘உள்ளிருந்து ஒரு குரல்’ இல் உள்ளது.)பின்புறமும் முன்புறமும் சுற்றிவளைத்து சிங்களப் படையினர் செய்த முற்றுகையை முறியடிக்கும் முயற்சியில் புகழரசியின் வழிநடத்தலில் அணியின் முன்னணியில் திசைகாட்டி யுடன் நகர்ந்த முடியரசியும் கூடச் சென்ற ஆண் போராளி பாசறையும் சிங்களப் படையினருடனான மோதலில் வீரச்சாவடைய, இப்போது அணியின் முன்னணியில் திசைகாட்டியோடு வினோதா.

தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களை ஒருபோதும் நேரடியாகக் கண்டிராத வினோதாவை, அவரைப் பற்றிய பாடல் ஒன்று வழிநடத்தியது.

“அண்ணன் சொன்ன வேதம்
என்ன சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
முயன்றிடு பாதைகள் எப்போதும்
திறக்கும் இல்லையேல்
அவைகள் மூடியே கிடக்கும் என்றார்
இன்னும் அதிகமுண்டு.
தூரமென்று ஏதுமில்லை
பாரம் என்ற சொல்லே இல்லை
ஏலாதென்றால் சேரும் தொல்லை
போராடென்றான் போராடென்றான்”

(நன்றி – பாடல் தமிழவள்)

வினோதாவை வழிநடத்திய பாடல் எல்லோரையும் வழிநடத்தட்டும்.

கோயில் மோட்டையில் போர் முன்னரங்கை இளங்கிளையின் கொம்பனி அமைத்து நின்ற காலம் இது. செவிப் புலனுக்கும் எட்டாத இடைவெளிகளோடு, இயற்கை மறைப்புகளைப் பயன்படுத்தி, குளிப்பு, முழுக்கை அறவே மறந்து, உடன் சமைத்த உணவு பற்றிய சிந்தனை இன்றி இளங்கிளையின் கொம்பனி காவல் நின்றது.

முன்னே பெயர் சூட்டப்பட்ட சிங்களப் படைப்பிரிவுகள், பின்னே பெயர் சூடாத அமுக்கவெடி தாங்கிய சிங்களப் படையினர் என்று எந்நேரமும் தீ மூளக்கூடிய சமர்க்களம் அது. சிறிலங்காவின் வரை படத்தில் கோயில்மோட்டை என்று குறிப்பிடப்படும் அவ்வூருக்குத் தமிழீழப் போர் வீரர்கள் சூட்டிய செல்லப் பெயர் கிளைமோர் மோட்டை.

அந்தக் கோயில்மோட்டையில் முறியடிப்பு அணியாகக் கீதவாணியோடு வினோதா, செவ்விழி முதலானோர் நின்றனர். அன்று சுடரிசையின் பிளாட்டூனிலிருந்து இருவர் தமது பெற்றோரைக் காண்பதற்காக முழங்காவிலை நோக்கிய இடர் மிகு பயணத்தைத் தொடங்க இருந்தனர். போக வேண்டிய இருவரும் பிளாட்டூன் முதல்விக்கான காப்பரணில் நிற்பவர்கள். இவர்களை மாற்றிவிட வினோதாவும் செவ்விழியும் வந்தனர்.

வந்திறங்கியவர்களிடம் போகவேண்டியவர்கள் ஒரு தகவலைச் சொன்னார்கள். அன்று காலை அவர்களின் காப்பரணின் முன்புறம் அமுக்க வெடி ஒன்று கைப்பற்றப்பட்டதால், விழிப்போடு இருக்கும்படி எச்சரித்தனர். வந்தவுடனேயே வினோதா காவற்கடமையைப் பொறுப்பேற்றார். செவ்விழி வேறு சிலருடன் தண்ணீர் அள்ளிவரப் போய்விட்டார். வலம், இடம் உள்ள காப்பரண்களைப் பார்வையிடவோ, காப்பரண் முதல்விகளுடன் அறிமுகம் செய்துகொள்ளவோ நேரமிருக்கவில்லை.

நின்று அவதானிக்கமுடியாத அடர்காடு அது நிலத்தில் இருந்தால் அடி மரங்களிடையே ஓரளவு கவனிக்கலாம். திறந்த அகழியைக் கொண்ட காவலரணின் முன்புறமாக சில மீற்றர்கள் முன்னே மரமறைவில் அமர்ந்து காவல் செய்த வினோதாவை சில சத்தங்கள் ஈர்த்தன. யார் யாரோ நடக்கும் ஓசை, சருகுகள் மிதிபடும் ஒலி, மொழி பிரித்தறிய முடியா ஆண் குரல்கள் எல்லாவற்றையும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.தண்ணீர் அள்ளப் போனபோதும், திரும்பி வரும்போதும் தன்னோடு வந்த மூவரையும் மிக நீண்ட இடைவெளி விட்டே செவ்விழி கூட்டி வந்தார். முறியடிப்புப் பயிற்சி பெற்றவரல்லவா முன்னெச் சரிக்கையோடு செயற்பட்டார். திரும்பி வந்து சேர்ந்துவிட்டார்.

செவ்விழி வந்தவுடன் வினோதா புறப்பட வேண்டியிருந்தது. கண்ணிகளை விதைத்துவிட்டு நின்ற லெப்.கேணல் பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவுப் போராளிகள் நால்வரையும் பின்னரங்குக்குக் கூட்டிப் போய் விட வேண்டும். அந்த நால்வர், வினோதா, அணிமுதல்வி ஒருவர், போராளி ஒருவர் என ஏழு பேரும் செவ்விழி போய்வந்த பாதை வழியே புறப்பட்டனர்.

தலைக்கு மேலே சிங்களப் படையினர் ஏவிய எறிகணைகள் கூவியபடி கடந்தன. குறிப்பிட்டளவு இடைவெளி விட்டு நகர்ந்த அணியின் நான்காவதாக வினோதா, பின்னால் அணிமுதல்வி, பின்னால் ஏனையோர் போய்க்கொண்டிருக்க திடீரென ஏறத்தாழ ஐம்பது (50) மீற்றர்கள் முன்னால் ஒரு வெடிப்பொலி எழ, தொடர்ந்து புழுதி, கிளைகள், இலைகள் எல்லாம் சேர்ந்து எழுந்தன.

ஒரு எறிகணை விழுந்து வெடிப்பதாக உணர்ந்து கொண்ட வினோதா மரமொன்றோடு காப்பெடுத்தார். கண நேர இடைவெளியில் ஏறத்தாழ இருபத்தைந்து (25) மீற்றர்கள் முன்னால் மீண்டும் வெடிப்பொலி, புழுதி, கிளைகள், இலைகள் எழ, பரணி வித்துடலாக வீழ்வது தெரிந்தது. புழுதி சற்று அடங்கியபோது முன்னாலும் எவரையும் காணோம். பின்னாலும் காணோம். வினோதா தனித்து நின்றார். வெடிப்பொலி எழுந்த திசையில் ஆண்கள் சிலரின் நடமாட்டத்தைக் கண்டார். நம்மவர்கள் என்ற நினைவில் சில அடிகள் முன்னே வைக்கவும் இவரை நோக்கிப் பீ.கே.எல்.எம்.ஜி சுடுகலனால் அவர்கள் சுடத் தொடங்கினர்.வெடிப்பொலிகளுக்கான மூலம் அமுக்க வெடிகள் என்பதும், முன்னே நிற்பது யார் என்பதும் இப்போது வினோதாவுக்கு விளங்கியது. ஏனையவர் களுக்கு இவ்விடயம் நேர காலத்துக்கே விளங்கியதால், அவர்கள் பறந்துவிட்டனர் என்பதும் விளங்கியது.

நான்காம் இலக்கப் பாதணியை அணிகின்ற, நான்கரை அடிகள் உயரம் கொண்ட வினோதாவின் ஒல்லியான உருவைக் கண்ட சிங்களப் படையினர் அவரைக் கடுகென எண்ணி, வளைத்துப் பிடிக்க முயன்றனர். அவர்களுக்குத் தன் காரத்தைக் காட்டிய வினோதா, படையினரைச் சுட்டபடியே தான் நின்ற காப்பரணுக்கு வந்து சேர்ந்தார். வினோதாவின் வரவுக்காகக் காத்திருந்த சுடரிசை அமுக்கவெடித் தாக்குதல் நடந்த இடத்தைத் தேடுதல் செய்ய இவரோடு மருதஎழிலையும் ஒரு ஆண் போராளியையும் அனுப்பினார். தேடுதலின் போதான நேரடி மோதலில் மருதஎழில் விழுப்புண்ணேற்றார். அவரின் சுடுகலனை ஆண் போராளி எடுத்துக்கொள்ள, மருதஎழிலைக் காவும் பணி வினோதாவுக்கே. குருவி தலையில் பனங்காய்.உருவில் தன்னில் பெரியவரான மருதஎழிலைக் காவுவதும், சிங்களப் படையினரைச் சுடுவதும், காவுவதும் சுடுவதுமாக அவரைக் காப்பரணுக்குக் கொண்டு சேர்த்தார் வினோதா.

இப்போது மாலையாகிவிட்டது. நாடு இருளமுன்னரே இருண்டுவிடுகின்ற காட்டினுள்ளே தொடங்கியது வினோதாவின் அடுத்த பணி. உடனடியாகத் தயார்ப்படுத்தப்பட்ட காவுபடுக்கையில் மருதஎழிலை ஏற்றி மூன்று ஆண் போராளிகளும் ஒரு பெண் போராளியுமாகச் சுமந்து பின்னே வர, கப்டன் அறிவுமலர் வானொலிக் கருவியூடாக போய்ச் சேரவேண்டிய இடத்தில் உள்ளோருடனும் வழியனுப்பிய இடத்தில் உள்ளோருடனும் தொடர்பைப் பேணியபடி வர, ஒரு திசைகாட்டியின் உதவியுடன் அணியை வழி நடத்தியபடி முன்னே போய்க்கொண்டிருந்தார் வினோதா.

மாலை 5.30 மணியளவில் தொடங்கிய அவர்களின் நீண்ட பயணம், தொலைதூர இலக்கை அடைந்தபோது விடிகாலை 3.30 மணியாகிவிட்டிருந்தது. பெற்றோரைக் காணச் சென்ற இருவரும் தம் காப்பரணுக்குத் திரும்பியதும், செவ்விழியும் வினோதாவும் மீளவும் தமதணிக்குச் சென்றனர். அவர்களுக்காக அங்கே பல பணிகள் காத்திருக்கின்றன.

 

 

நினைவுகளுடன்:- போராளி மலைமகள்.
ஈழநாதம் (27 மார்கழி 2008) இதழிலிருந்து…..

https://pulikalinkuralradio.com/archives/10462

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மன்னாரில் இருந்து கொஞ்சமாக தமிழர் நிலங்களை விழுங்கிக்கொண்டு மல்லாவி வெள்ளாங்குளம் வரையும் வந்திருந்த சிறிலங்காப் படையினருக்கு மூக்கை நீட்டிக்கொண்டிருந்த வவுனியா பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதிகளிலிருந்த விடுதலைப் புலிகளின் நிலைகள் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது.

எப்பாடுபட்டாவது அடித்து உடைத்துக்கொண்டு மல்லாவியில் நிற்கும் தமது அணிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியே ஆகவேண்டும் என்ற நிலை சிறிலங்காப் படைகளுக்கு. பல வழிகளால் முட்டி மோதியும் அவை வெற்றியளிக்கவில்லை என்றாலும், அவர்கள் விடுவதாயில்லை. அதி உச்ச சூட்டு வலுக்களைப் பயன்படுத்தி உடைப்புக்களை ஏற்படுத்தப்ப படாதபாடு பட்டுக்கொண்டிருந்தனர்.

‘முடியுமானால் வந்து பார். எங்கள் வித்துடல்களைத் தாண்டியல்லாது நாமிருக்கும் வரையும் முடிந்தால் வந்துபார் பார்ப்போம்: என்று உறுதியுடன் காத்திருந்தனர் பெண்புலிகள் லெப்.இளமதியின் காப்பரணில் தான் தாரணியும் லெப்.தமிழ்மகளும் நின்றிருந்தனர். கடந்த ஆறுமாதங்களாக பழக்கப்பட்டுப்போன களமுனை என்பதனால் புளியங்குளம் தொடங்கி குஞ்சுக்குளம் வரையும் இவர்களுக்குத் தண்ணிப்பட்ட பாடம்.

அவர்கள் குளித்துப் பல வாரங்களாகிவிட்டன. அன்று நிலைமையைப் பார்த்துக்குளிக்க விடுவதாகப் பிளாட்டூன் முதல்வி மேஜர் சிவா கூறியிருந்தார். அரசியல்துறை மகளிர் அணி தாக்குதலணிப் போராளிகளின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவள் சிவா. இருந்தாலும் அன்று அவளால் அவர்களைக் குளிக்கவிடமுடியாமல் போய்விட்டது. அந்த முன்னணி நிலை புற்கள் நிறைந்த வெட்டை வெளி. காப்புகளென்றால் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் சில மரங்கள் இருந்தன.

காலாற நடந்துபோக எண்ணினால் அவர்கள் கட்டாயமாக குறிசூட்டுக்கோ, எறிகணைகளுக்கோ இலக்காக வேண்டியதுதான. அன்று காவற்கடமையில் நின்ற தாரணி படையினரின் நகர்வினைக் கண்டுவிட்டாள். அங்கிருந்து பீ.கே.எல்.எம்.ஜீ சுடுகலன்கள் ரவைகள், உந்துகணைகள், எறிகணைகள் என்று வலுவான சூடுகள் வர, இங்கிருந்தும் ரவைகளும் எறிகணைகளும் சீறிப்பாய்ந்தன.

முக்கால் மணிநேரம் மூர்க்கமாக முன்னேற முயன்ற சிங்களப் படைகளைத் தமக்கேயான தற்துணிவுடன் எதிர்த்து நின்றனர். புலிப்படைகள் இறுதியில் இளமதியின் நிலையைக் கைப்பற்ற முடியாமல், அவர்களின் குறிக்கும் கனவில் மண்ணைப் போட்டுவிட்டுப் பின்வாங்கிவிட்டனர் சிறிலங்காப் படையினர் வந்த இரண்டு நாட்களும் அமைதியாகக் கழிந்தது. கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி அணிகளைக் குளிக்கவிட எண்ணி ய சிவா, அவர்களை மாற்றிவிட மதுமதியின் அணியினை அனுப்பினாள். இளமதியிடம் காவலரணைப் பொறுப்பேற்றுக்கொண்ட மதுமதி அவர்களைக் குளிப்பதற்கு அனுப்பினாள் மதுமதி இருக்கும் இடம் எப்பொழுதுமே கலகலப்பான தாகவே இருக்கும்.

ஒளிப்படப்பிரிவில் இந்து களப்பிடிப்பாளராகப் பல களங்கள் சென்று வந்தவள் இங்கே ஒரு காவலரண் முதல்வியாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தாள். எந்த இறுக்கமான களமுனைகளிலும் இயல்பாக நிதானமாக இருந்து செயற்படுவது இவளின் சிறப்பியல்பு. குளிக்கச் சென்ற அணியும் அவர்களுக்கான ஆடைகளைத் தலைமை மையத்திலிருந்து எடுத்து வந்த செந்தாவின் அணியும் சந்தித்துப் பொருட்களைப் பரிமாறிக்கொள்ளும் அந்த நேரம் மதுமதியின் காவலரணில் சண்டை தொடங்கிவிட்டது. நிலைமையைப் புரிந்து கொண்ட சிவா சிறு அணியொன்றுடன் அவ்விடத்துக்கு விரைந்தாள். பாதுகாப்பான காப்புகளில் அனைவரையும் பிரித்து விட்டுவிட்டுத் தானும் ஒரு மரக்காப்புடன் நின்று கட்டளைகளை வழங்கிக் கொண்டு சண்டையிட்டாள்.

அந்த நேரம் சிவாவைக் குறிவைத்து ஏவப்பட்ட உந்துகணை சீறிவந்து வெடிக்க, அவளையும் காப்பரணையும் கைப்பற்றிவிடவேண்டும் என்ற முனைப்போடு எதிரிப்படைகளும் இரண்டையும் விடக்கூடாது என்ற உறுதியுடனும் சண்டையைத் தானே வழிநடத்த வேண்டும் என்ற பொறுப்புடனும் மதுமதி அணிகளை வைத்துச் சண்டையிட்டுக்கொண்டிருந்தாள். கைவசமிருந்த வெடிப்பொருட்களும் முடியும் நிலை. விழுப்புண்ணடைந்தவர்களின் சுடுகலன்களையும் வைத்துக்கொண்டு ஒவ்வொரு ரவையாகப் பார்த்துப் பார்த்து தேனெழில் சுட்டுக்கொண்டிருக்க, எந்தப் பதட்டமும் இல்லாமல் ‘மிக்சரை' மென்றபடி நிலைமையைக் கட்டளை மையத்துக்குத் தெரியப்படுத்திக்கொண்டிருந்தாள் மதுமதி.

வல்வளைப்பாளர்களின் ரவைகளும் உந்துகணைகளும் எறிகணைகளும் மழையாகப் பொழிந்து கொண்டிருந்தன. அந்தக்குண்டு மழைக்குள்ளும் இன்னுமொரு அணியினரால் இடையில் கொண்டுவந்து கொடுக்கப்பட்ட வெடிபொருட்களுடன் சிவாவின் வித்துடலையும் தமது காவலரணையும் விட்டுவிடக்கூடாது என்றஉறுதியுடன் ஆண் போராளிகளின் சிறிய அணியொன்றுடன் முன்னேறினர் இளமதியின் அணியினர். காவலரணில் இருந்து சில மீற்றர் தூரத்திலேயே தமிழ்மக்களும் இளமதியும் வீரச்சாவடைய, ஏனையோர் விழுப்புண்ணடைந்து வீழ்ந்தனர். விழுப்புண்ணடைந்தவர்களால் நகரமுடியவில்லை.

கையைத்தூக்கினாலோ, புல் அசைந்தாலோ ரவைகளும் எறிகணைகளும் அவ்விடத்தைக் குதறிவிடும். காவலரணைத் தக்க வைப்பதோடு வித்துடல்களையும் விழுப்புண் அடைந்தவர்களையும் அனுப்பவேண்டிய பொறுப்பும் மதுமதியினுடையது. அனால் வெடிபொருட்கள் வரும்வரையும் அவர்களால் தற்காப்புச் சூடுகளை மட்டுமே வழங்கமுடியும். குந்தியிருந்து கட்டளை மையத்துடன் தொடர்பை மேற்கொண்டிருந்த மதுமதியின் காலுக்குக் கீழ் எதிரியால் எறியப்பட்ட கையெறி குண்டு ஒன்று வந்துவிழுந்து வெடிக்க அவளும் விழிமூடிப்போக, கடுமையாக விழுப்புண்ணடைந்த தாரணியும் தேனெழிலும், மாமகளும் ஏனைய ஆண் போராளிகளும் ஊர்ந்து பின்னால் வந்து சேர, அந்தக் காவலரண் எதிரிப்படைகளிடம் விழுந்து போனது.

செந்தா அரசியல்துறை மகளிர் தாக்குதல் அணியின் மருத்துவப்போராளி. தேடுதல் அணியின் ஒருவராகத் தனது மருத்துவப் பையுடனும் கையெறி குண்டுகளுடனும் அவளை அதிகமாகக் காணலாம். அவளுக்கு ஓய்வு என்பதே இருந்ததில்லை. தனக்கு வழங்கப்பட்ட பணிக்கும் மேலாக முன்னணி நிலைகளுக்கு அவசரமாக வெடிபொருட்கள் வழங்கவேண்டுமா? உடனே முன்வருவாள். உணவு - தண்ணீர் வழங்கவேண்டுமா? நேரம் காலம் தேவையில்லை செந்தாவுக்கு உடனே புறப்பட்டுவிடுவாள். அது புதூரின் காட்டுப்பகுதி. சிறிலங்காப் படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரின் அமுக்க வெடிகள் அடிக்கடி முழங்கும் பகுதி. அன்றும் காலையே அமுக்கவெடித்தொகுதியொன்று வெடித்தனால் அன்றைய நாள் உணவு மாலையே வந்துசேர்ந்தது. முன்னணி நிலைக்கான உணவுகளை வழங்கும் பொறுப்பு செந்தாவிடம் விடப்பட்டது. அவளுக்குத்தான் அந்தப் பாதைகள் அத்துப்படி. ஒன்பது பேர் கொண்ட அணி புறப்பட்டது.

அதில் முதலாவது ஆளாக செந்தா செல்ல, அவளுக்குப் பின்னால் குறிப்பிட்ட தூரம் இடைவெளி விட்டு ஏனையவர்கள் நகர்ந்துகொண்டிருந்தனர். சிலகாவலரண்களுக்கு உணவு வழங்கப்பட்டுவிட்டது. இன்னும் சல காவலரண்களுக்குத்தான் வழங்க வேண்டும். அணி அடுத்த காவலரண்நோக்கி நகரத் தொடங்கியது. சடுதியாக மிக அருகில் வெடித்த அமுக்கவெடியால் தூக்கி எறியப்பட்ட செந்தா, நிதானித்துக்கொண்டு சுடுவதற்காகத் தனது சுடுகலனைத் தூக்கினாள்.

ஒருகை இயங்க மறுத்தது. அப்போதுதான் விழுப்புண்ணடைந்திருப்பதை அறிந்துகொண்ட செந்தா திரும்பிப் பார்த்தாள் எவரையும் காணவில்லை. கூப்பிட்டுப் பார்த்தாள் சத்தமில்லை. மெல்லப் பின்நோக்கி நடக்கத்தொடங்கினாள். இடையில் காலில் விழுப்புண்ணடைந்த நிலையில் ஒரு ஆண்போராளி கிடந்தார். ஆனால் செந்தாவால் அந்தப்போராளிக்கு உதவமுடியாதநிலை. உதவி அணியைக் கூட்டிவருவதாகக் கூறிவிட்டு நகர்ந்தவளை சம்பவ இடம்நோக்கி அணியுடன் வந்துகொண்டிருந்த கொம்பனி பதில்முதல்வி குயில் கண்டுகொண்டார். செந்தாவைப் பாதுகாப்பாக அனுப்பிவைத்துவிட்டு, அவளின் தகவலின்படி சம்பவ இடத்தையும் சுற்றுப்புறச் சூழலையையும் தேடுதல் செய்த குயிலின் அணி விழுப்புண்ணடைந்தவர்களை மீட்டு வந்தது.

சிறிலங்காப் படையினரின் அமுக்கவெடித் தாக்குதல்களுக்கும் பதுங்கித் தாக்குதல்களுக்கும் பெயர்போன இடம்தான் குஞ்சுக்குளம் நவ்விப்பகுதி. அங்குதான் அரசியல்துறை மகளிர் தாக்குதலணியும் ஒரு பகுதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பிளாட்டூன் பதில் முதல்வி கப்டன் கவிப்பிரியாவுடன் சுடர்மதி, முல்லை கதிரினி, சில ஆண் போராளிகள் என்று தமது கடமைகளுக்காகச் சென்றுகொண்டிருந்தனர். ஆறுகள் நிறைந்த வவுனியாக் களமுனையில் இவர்களும் அருகருகே இருந்த இரண்டு ஆறுகளைக் கடந்தே செல்லவேண்டும். பாதிப்பேர் முன் ஆற்றையும் மீதிப்பேர் பின் ஆற்றையும் கடக்க முற்பட்டனர். முன்னால் சென்ற கப்டன் கவிப்பிரியாவுக்கு சிங்களப் படையினரின் மணம் மூக்கினுள் நுழைந்ததோ என்னவோ அணிகளுக்குச் சைகை காட்டி நிலையெடுக்கச் செய்யவும், பதினைந்து இருபது மீற்றர் இடைவெளித் தூரத்தில் உருமறைப்புடன் அமைந்திருந்த நிலையிலிருந்து அவர்களின் சுடுகலன்கள் அவர்களைக் குறிவைத்துக் குண்டுகளைத் துப்பத்தொடங்கின.

கணப்பொழுதில் சமாளித்துக்கொண்ட கப்டன் கவிப்பிரியாவின் அணியினரும் தமது சுடுகலன்களால் தாக்க, வனம் அதிர்ந்தது. சுடர்மதியும், முல்லையும் ஆண்போராளி ஒருவரும் பின் ஆற்றுக்குள் நிலையெடுக்க அணி இரண்டாகப் பிரிந்துவிட்டது. வேகமாக முடிவெடித்துச் செயற்பட்டாள் முல்லை. கையெறி குண்டுடன் மாத்திரம் வந்திருந்த ஆண் போராளியைத் தங்களுக்குப் பின்னால் வரும்படி கூறிவிட்டு. சுட்டுக்கொண்டு முன்னேறி முன்னேறி அணியுடன் இணைந்துகொண்டனர் முல்லையும் சுடர்மதியும். அணிகளை ஒருங்கிடைத்துக் கொண்டு தாக்குல்களைக் கொடுத்துக்கொண்டே தமது பாதையை மாற்றிப் பயணத்தைத் தொடர்ந்தனர் கப்டன் கவிப்பிரியாவின் அணியினர்.

 

நினைவுகளுடன்: -உலகமங்கை

https://eluvom.blogspot.com/2009/04/blog-post_1505.html

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

2008 யூலை மாதம், மன்னார்க் கட்டளைப் பணியகப் போராளிகளும், 2ஆம் லெப்.மாலதி படையணியினரும் தேத்தாவாடியில் உடனடியாக ஒரு முன்னணிக் கோட்டை ஏற்பாடு செய்து அதில் காப்பிலீடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த உடனடி ஏற்பாடு போதிய காப்பானதாக இருக்கவில்லை. வெள்ளமெனத் திரண்டு வரும் கடலலைகளுக்கு முன்னால் சிறு சிறு கற்களைத் தூக்கிப் போட்டுத் தடுப்புச் செய்வதுபோல, மூர்க்கமும் போர்வெறியுங்கொண்டு முன்னேறும் சிங்களப் படைகளுக்கெதிராக மனத்திடத்தை மட்டும் காப்பாக முன்னிறுத்தியபடி புலிகள் சண்டை செய்து கொண்டிருந்தனர்.

தேத்தாவாடியில் அரண்களைப் போட்டு பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்வதற்குச் சிறிய கால அளவேனும் தேவையாக இருந்தது. இந்தக் கால அவகாசத்தைப் பெறுவதற்காகவும் வேலைசெய்து கொண்டிருக்கும் போராளிகள் மீது தாக்குதல் நடத்த வரும் எதிரியின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவும் ஒரு அணி முன்னே ஊடுருவி தீக்கழிக்குச் சென்றது. மன்னார்க் கட்டளைப் பணியகத்தைச் சேர்ந்த போராளிகள் ஆறுபேரும் மாலதி படையணிப் போராளிகள் ஆறுபேரும் வேவு அணியில் நான்கு பேருமாகப் பதினாறு பேர் கொண்ட அந்த அணி மூன்று நாட்களுக்குத் தேவையான உலருணவுடனும் தாக்குதலுக்குத் தேவையான வெடி பொருட்களுடனும் நகர்ந்தது.

முன்னே மூன்று கிலோ மீற்றர்கள் நகர்வு. நகரும் இடமெங்கிருந்தும் அடி கிடைக்கும் என்ற காரணத்தால் விழிப்புடனேயே அனைவரும் சென்றனர். இவர்களுக்கான கட்டளையை வழங்குவதற்காக மன்னார்க் கட்டளைப் பணியகத்தைச் சேர்ந்த ஜானும் உடன் சென்றார். போகுமிடமெல்லாம் படையினர் அவ்விடங்களில் நடமாடியதற்கான அடையாளங்கள் இருந்தன. காலணித்தடம், நெகிழப்பைகள், குருதித் தடுப்புப் பஞ்சணைகள், தீப்பெட்டி போன்ற இன்னபிற அங்கே காணப்பட்டன. சென்ற இடத்தை அவதானித்து இரண்டு நிலைகளைப் போட்டுக் காப்பில் ஈடுபட்டவாறே அவ்விரவைக் கழித்தனர். அடர்காடு, மையிருட்டு அடுத்தவரைத் தொடுகையின் மூலமின்றி இனங்காண முடியாத இருள். அந்த இரவு ஒருவாறு விடிந்துவிட்டது.

அடுத்த நாட்காலை வேவுப் போராளிகளும், இவர்களுமாகச் சேர்ந்து தடயம் பார்த்துப் பொறி வெடிகளைப் புதைத்தனர். நிற்கும் இடத்துக்குச் சற்றுப் பின்னே புதிய முன்னணிக் கோட்டை அமைப்பதற்கான திட்டம் உருப்பெறுவதற்காக பின்னிருந்து ஊர்தியொன்று தருவிக்கப்பட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டது. ஊர்தியின் சத்தத்தை இனங்கண்ட படையினர் தமது தொலைத்தொடர்பு உரையாடல்களில் அவ்வூர்தியையும், போராளிகளையும் சுற்றிவளைத்துப் பிடிப்பதற்குத் திட்டமிட்டனர்.

இந்த உரையாடல் ஒற்றாடலின் மூலம் தெரியவந்ததால் ஊர்தி உடன் பின்னுக்கு அனுப்பப்பட்டது. அன்று மதியம் ஊர்தி நின்ற இடத்தைக் குறிவைத்து எறிகணைகள் மழைபோல வந்து பொழியத் தொடங்கின. இதனால் ஊடுருவிச் சென்று நிலைகொண்ட அனைவரும் தமது நடமாட்டத்தை நிறுத்திக் காப்பில் இருந்தனர். அன்றிரவு அவ்விடத்தை விட்டுப் பின்னகர்ந்து வேறிடத்தில் நிலை கொள்ளுமாறு அவர்களுக்குக் கட்டளை கிடைத்தது. எப்படியும் இவர்களை மோப்பம் பிடித்துப் படையினர் வந்து தாக்குவார்கள் என்பதை இவர்களும் அறிந்திருந்ததால் கட்டளைக்கேற்ப பக்கவாட்டாக இடம்மாறி அதற்குப் பின்னே நகர்ந்து வேறோரிடத்தில் அந்த அணி காவலில் நின்றது.

முக்கோணவடிவத்தில் ஒருபுறம் வேவு அணியும், இன்னொரு பக்கம் பெண்புலிகளும், மறுபுறம் மன்னார்க் கட்டளைப் பணியகத்தினருமாக நிலையைப் போட்டு விடிய விடிய மாறி மாறி விழித்திருந்தனர். ஒருபுறம் நிற்பவர்களுக்கும் மறுபுறத்தில் நிற்பவர்களுக்கும் நாற்பது மீற்றர்களே இடைவெளி. அதிகாலை நான்கு மணிக்குக் காடுமுறிக்கும் சத்தம் கேட்டது. பெண்புலிகளின் பக்கம் காவலில் நின்ற வசியரசி புதியவர் என்பதால் சான்மொழியைத் துணைக்கு எழுப்பினார். சத்தங்கேட்டு அனைவருமே விழிப்பு நிலைக்குச் சென்று தகுந்த காப்புக்களில் நின்றனர்.

படையினர் பன்னிரண்டு பேரளவில் நகர்ந்து வருகின்றனர் என்பது அவதானிக்கப்பட்டது. நகர்ந்து வருபவர்கள் இவர்கள் போட்ட முக்கோணக் காப்பை அவதானித்தால் அந்த முக்கோணத்தின் மூன்று புறமிருந்தும் புலிகள் தமது எதிர்ப்பைக் காட்டத் தயாராக நின்றனர். கண்டமேனிக்குப் பரவலாக நகர்ந்த சிங்களப்படைகள் இவர்களுக்கு கிட்டவாக நகர்ந்து இவர்களது முக்கோண நிலையின் உட்புறத்தே வந்துவிட்டனர். சான்மொழி எழுந்து காப்பில் நிற்க ஜான்மாதிரி ஒரு உடற்பருமனானவர் அவரது உடையமைப்புடனேயே அவர்களுக்கு அருகில் வருவது தெரிந்தது. வந்தவர் P.மு சுடுகருவி வைத்திருப்பதைப் பார்த்தவுடன் இவர் ஜானல்ல என்பதைச் சான்மொழி இனங்கண்டார்.

எனினும் உள்ளே வந்த படையினரை ஒரு பகுதியினரும் சுட முடியாது. சண்டை வெளிப்புறமாகவே நடைபெறலாமென எதிர்பார்க்கப்பட்டது. இப்போது முக்கோணத்தின் உள்ளே எதிரிகள் தாக்கினால் மறுபுறத்திலிருக்கும் எம்மவர்களே பலியாகக் கூடும். இதையுணர்ந்த போராளிகள் முக்கோணத்தை விட்டுப் படையினர் வெளியேறு மட்டும் மறைவாக இருந்தனர். உள்ளே வந்தவர் கொற்றவையின் தலையை எட்டிப்பிடிக்கும் தூரத்துக்கு வந்துவிட்டார். மூன்று மீற்றரில் இப்போது எதிரி. மன்னார்க் கட்டளைப் பணியகத்தைச் சேர்ந்த பாலு சடுதியாகச் செயற்பட்டு கொற்றவைக்கருகே வந்தவனை விழுத்திவிட்டார்.

விழுந்தவன் தனது துப்பாக்கியால் கொற்றவைக்குச் சுட அதைக்கண்ட பரணிதா விழுந்தவனுக்கு மறுபடியும் சுட்டு அவனைச் செயலிழக்கப் பண்ணினார். இப்போது அனைவரையும் அனைவரும் இனங்கண்டு விட்டனர். உள்ளே வந்தவர்களை ஒருவாறு முக்கோணத்தின் வெளியே தள்ளியாகிவிட்டது. வெளிப்புறமாக எல்லோரும் தாக்கத்தொடங்கினர். "மகே அம்மே" என்ற சத்தம் வெளிப்புறமிருந்து கேட்கத் தொடங்கியது. முக்கோணத்தில் நின்ற போராளியொருவருக்குப் பாதக்காலில் பெரிய காயம்.

கட்டளைப் பணியகத்துடனான தொடர்பு சீராக இருக்க, நின்ற இடத்திலிருந்து இவர்களைப் பின்வாங்கி வருமாறு கட்டளை கிடைத்தது. வந்தவர்கள் இவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு "மகே அம்மே" சொல்லிக்கொண்டு பின்வாங்கி விட்டனர். எறிகணைகள் துரத்திவந்து விழுவதற்கிடையில் காயக்காரரை யும் தூக்கிக்கொண்டு அந்த ஊடுருவல் அணி பின்வாங்கியது. சற்றுப் பின்னே சென்று தடிவெட்டிக் காவு படுக்கை செய்து அவரைத் தூக்கலாமென்று சுற்றிலும் அவதானித்தால் விடத்தல் பற்றைகளே எங்கும் தென்பட்டன. வேறு வழியின்றி விடத்தல் தடிவெட்டி முள்ளைச் சிராய்த்து விட்டு காயக்காரரை காவு படுக்கையில் தூக்கிக்கொண்டு தேத்தாவாடிக்கு வந்து சேர்ந்தனர்.

அந்த இரண்டு நாட்களும் போதிய உணவும், நீரும், ஓய்வுமின்றி இருந்ததால் ஏற்கெனவே இரத்த அழுத்தம் இருந்த ஜானுக்குக் களைப்பாக இருந்தது. அவர் தனது நோயையும், இயலாமையையும் அதுவரை வெளிக்காட்டவில்லையெனினும் முன்னணிக்கோட்டுக்கு அண்மித்த வழியில் மயங்கிக் கீழே சரிந்தார். தனது தந்தையைப் போன்ற அகவையிலிருந்த அவரை சான் மொழியும் இன்னுமொருவருமாகத் தூக்கிச் சென்று அவருக்குரிய இடத்தில் விட்டனர். இவர்கள் ஊடுருவிச் சென்ற கால இடைவெளியைப் பயன்படுத்தி தேத்தாவாடி முன்னணிக்கோடு சண்டைக்குத் தயாரான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தது. அந்த ஏற்பாடுகள் நிறைவடையும் முன்னரே அந்த முன்னணிக் கோட்டின் ஒருபுறம் தனது அணியை காவலில் நிறுத்தியிருந்த அமர்வாணத்தின் பகுதியில் சண்டை தொடங்கி விட்டிருந்தது.

பாப்பா மோட்டையில் நின்ற 2ஆம் லெப்.மாலதி படையணியின் முறியடிப்பு அணியில் ஒருவராகத் துளசியும் நின்றார். அடிக்கடி படையினர் முன்னகர்வதால் அடிக்கடி முறியடிப்புச் சமர்களும் நடந்துகொண்டிருந்தன. காலை, நண்பகல், மாலை, இரவு என்று காலவேறு பாடுகளற்றுச் சண்டைகள் தொடர்ந்தன. முன்னணிக் கோட்டுக்கும், அதற்கான முதன்மைத் தளத்துக்கும் ஐம்பது மீற்றர் இடைவெளியே இருந்தது. ஒவ்வொரு நாளும் டாங்கிகளின் சூடுகள் இவர்களைத் தேடிவந்தன. முதன்மைத் தளத்துக்கருகே வீதி இருந்ததால் அவ்வீதி வழி டாங்கியுடன் படையினர் முன்னேற முற்பட்டனர்.

முதன்மைத் தளத்திலிருந்து எதிரிகளை இனங்கண்டதால் இவர்களும் பக்கவாட்டாகவே அடிக்கத் தொடங்கிவிட்டனர். டாங்கிச் சூடுகள் பற்றை பறகுகளையெல்லாம் கிளப்பியெறிந்ததால் எங்கோ நிம்மதியாகக் கூடுகட்டியிருந்த குளவிகள் தமது இருப்பிடத்தையிழந்து சினங்கொண்டு பறந்து படையெடுத்து வந்தன. ஈழமங்கை முதன்மைத் தளத்திலிருந்து முன்னணி நிலைகளுக்குக் கட்டளை வழங்கிக் கொண்டிருந்தார். அருகே நடைபெறும் சண்டையையும் வழிப்படுத்திக் கொண்டிருந்தார்.

குளவிகளின் கோபம் ஈழமங்கையை நோக்கித் திரும்பியது. கட்டளை வழங்க முடியாது குளவிகள் அவரைக் கொட்டித் தள்ளின. புவிநிலைகாண் தொகுதியுடன் நின்ற பிருதுவி ஈழமங்கை மயங்கிச் சரிய அவரது நடைபேசியை எடுத்துத் தானே கட்டளைகளை வழங்கிக் கொண்டிருந்தார். ஈழமங்கையைப் பின்னுக்கு அனுப்பிவிட்டு அவ்விடத்தைப் பொறுப்பெடுக்க அகமதி வந்தார். சிறிது நேரத்துக்குள் அவ்விடம் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. முன்னே, பின்னே பக்கவாட்டாக என்று எங்கும் சிங்களப் படைகள்.

கப்டன் மல்லிகாவுடனான முறியடிப்பு அணிமட்டும் அவ்விடத்தில் நிற்க ஏனையோர் அனைவரும் பகுதிப் பொறுப்பாளர் சத்தியாவின் கட்டளைக்கமைவாகப் பின்வாங்கிச் சென்றனர். அன்றைய நாள் இவர்களுக்கு உணவு கொடுக்க வந்து படையினரிடம் மாட்டிக்கொண்ட உழுபொறியை மீட்கும் பணி இரவிரவாகத் தொடர்ந்தது. உழுபொறியின் ஓட்டுநருடன் தேவா தலைமையில் சென்ற முறியடிப்பு அணி உழுபொறியை மீட்பதற்கான சண்டையைச் செய்தது. P.K யும், 50 கலிபருமாக அடித்துக் கொடுக்க, ஆண், பெண் போராளிகளடங்கிய முறியடிப்பு அணி அன்றிரவே சண்டையிட்டு உழுபொறியை மீட்டு வந்தது.

ஓயாது சண்டை, ஓயாது வேலை, ஊனுறக்கமில்லை, ஒழுங்கான குளிப்பு, முழுக்கில்லை, சேற்று வாடை, ஈரஆடை, குளவிகளும், நுளம்புகளும், பாம்புகளும் உறையுமிடத்தில் வாழ்க்கை என்றிருந்தாலும் போராட மறுப்பதில்லை புலிகள். சிங்களப் படைகளுக்கு இது அந்நியமண் புலிகளுக்கோ இது உரிமை மண். வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் இதுதான் நமது நிலம். இந்த நிலத்தில் நெருப்பெரித்து மக்களைக் கலைத்து அந்த நெருப்பிலே குளிர்காய வருகின்றான் எதிரி. அவன் மூட்டிய நெருப்புக்குள்ளேயே அவனைத் தள்ளி விழுத்திவிடக் கானகமெங்கும் காத்திருக்கின்றனர் புலிகள். நெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை. புலிகளின் பணியும் இன்னும் முடியவில்லை.

 

எழுதியவர் - அம்புலி

https://eluvom.blogspot.com/2009/04/blog-post_1505.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஏனைய குரல்கள் வரலாற்றில் விடுபட்டுப் போயின!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.