Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடையே பாலம் கட்டப்படாதது தமிழ் தேசியத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சியா?

தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 22 பிப்ரவரி 2024, 10:44 GMT
    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் அதிகளவில் வாழ்கின்றனர். இந்த இரண்டு மாகாணங்களுக்கு இடையில் சுமார் 800 மீட்டர் பகுதியை கடல் நீர் பிரிக்கிறது. இதை கடல் வழியாக கடக்க 6 நிமிடங்களே ஆகும், ஆனால் சாலை மார்க்கமாக செல்ல இரண்டரை மணிநேரம் தேவைப்படும்.

தற்போது, இந்த இரு மாகாணங்களை இணைக்கும் விதத்தில் ஒரு பாலம் இதுவரை கட்டப்படாதது ஏன், அதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கையில் மாகாண சபை முறைமை 1987-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அப்போது வடகிழக்கு மாகாணமாக இணைந்தே காணப்பட்டது. ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் ராஜீவ் காந்தி இணைந்து மாகாண சபை முறைமையை 1987-ஆம் ஆண்டு கொண்டு வந்திருந்தனர்.

இலங்கையில் 1978-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தற்போதைய அரசியலமைப்பில் 13-வது திருத்தமாக மாகாண சபை முறைமை கொண்டு வரப்பட்டது.

இதன்படி, தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்ததாகவே மாகாண சபைகள் உருவாக்கப்பட்டிருந்தன. இலங்கையின் முதலாவது மாகாண சபை தேர்தல் 1988-ஆம் ஆண்டு நடத்தப்பட்டு, மாகாண சபை அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

எனினும், வடகிழக்கு மாகாண சபை குறுகிய காலமே செயற்பட்ட நிலையில், 1990-ஆம் ஆண்டு குறித்த மாகாண சபை கலைக்கப்பட்டது.

அதன் பின்னரான காலத்தில் வடகிழக்கு மாகாண சபைக்காக தேர்தல் நடத்தப்படாத பின்னணியில், வடகிழக்கு மாகாண சபையை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளாக பிரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் பிரகாரம், வடகிழக்கு மாகாண சபை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளாக பிரிக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் 2006-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து, 2008-ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலும், 2013-ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலும் முதல் முறையாக நடத்தப்பட்டன.

 
தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்

நிலவியல் ரீதியில் பிரிந்திருக்கும் வடக்கும் கிழக்கும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் நிலப்பரப்பு ரீதியில் பிரிந்தே இன்றும் காணப்படுகின்றன. வடக்கு மாகாணத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் இடையில் சுமார் 800 மீட்டர் பகுதியை கடல் நீர் பிரிக்கின்றமையே இந்த இரண்டு மாகாணங்களும் இன்று வரை பிரிந்துள்ளமைக்கான காரணமாக அமைந்துள்ளது.

வடக்கு மாகாணத்தின் எல்லைப் பகுதியாக கொக்கிளாய் பகுதி காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தின் எல்லைப் பகுதியாக புல்மோட்டை பகுதி காணப்படுகின்றது.

இந்த இரண்டு மாகாணங்களுக்கும் இடையில் போக்குவரத்து செய்வதற்காக சிறிய படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. 800 மீட்டர் தூரத்தை படகின் மூலம் சுமார் 6 நிமிடங்களில் கடக்க முடியும். எனினும், கிழக்கு மாகாணத்திலிருந்து வடக்கு மாகாணத்தின் எல்லைக்கு வீதியூடாக செல்வதற்கு சுமார் 60 கிலோமீட்டர் காணப்படுகின்றன.

இந்த 60 கிலோமீட்டரை சென்றடைவதற்கு சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் தேவைப்படுகின்றன. 6 நிமிடங்களில் கடக்க வேண்டிய இந்த பயணத்திற்கு சுமார் இரண்டரை மணித்தியாலங்களை மக்கள் செலவிட்டு வருகின்றனர்.

இந்த இரண்டு பகுதிகளையும் படகில் கடப்பதற்கு 6 நிமிடங்கள் எடுக்கின்ற அதேவேளை, பாலம் அமைக்கப்பட்டால் 2 அல்லது 3 நிமிடங்களில் செல்ல முடியும் என மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

மேலும், கொக்கிளாய் மற்றும் புல்மோட்டைக்கு இடையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் ஓரிரு சிறிய படகுகளே காணப்படுகின்றன. ஏனைய படகுகள் கடற்றொழிலுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதை காண முடிகின்றது. அதனால், இரண்டு நகரங்களுக்கும் இடையில் பயணிக்க மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்

'தமிழ் தேசிய கோட்பாட்டை வலுவிழக்கச் செய்யும் முயற்சி'

தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்
படக்குறிப்பு,

பாலத்தை நிர்மாணித்தால் வடக்கு - கிழக்கு இணைப்பு உறுதியாகும் என்கிறார் அ.நிக்ஸன்

நில ரீதியாக இணைப்பு ஏற்படும் பட்சத்தில், தமிழ்த் தேசிய கோட்பாடு வலுவடையும் என அரசியல் விமர்சகரும், ஒருவன் செய்திச் சேவையின் பிரதம ஆசிரியருமான அ.நிக்ஸன் தெரிவிக்கின்றார்.

''இது மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பாலத்தை நிர்மாணித்தால் வடக்கு - கிழக்கு இணைப்பு என்பது உறுதியாகும். எப்படியென்றால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து இலகுவாகும். ஆகவே நில ரீதியான தொடர்பு அங்கே வருகின்றது. நிலத் தொடர்பு வருகின்ற போது, தமிழ்த் தேசிய கோட்பாட்டிற்கு அது வலுச்சேர்க்கும்," என்றார்.

மேலும், "தமிழ்த் தேசிய கோட்டை உடைக்க வேண்டும், அந்த கோரிக்கையை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக தான் நில ரீதியிலான பிரிவுகளை இலங்கை அரசாங்கம் செய்து வருகின்றது. 1941-ஆம் ஆண்டு கல்ஓயா திட்டத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட சிங்கள குடியேற்றம், சிங்கள, தமிழ், முஸ்லிம் குடியேற்றம் என்று சொல்லப்பட்டாலும், அங்கு சிங்கள மக்களே குடியேற்றப்பட்டார்கள்," என்றார்.

"அங்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த குடியேற்றத்தின் நோக்கமே, இந்த நிலப் பிரிப்பு தான். ஆகவே நில ரீதியாக பிரிக்கப்பட்டால் தான் வடக்கு, கிழக்கு மாகாணத்தை பிரிக்க முடியும். அத்தோடு, தமிழ்த் தேசியம் என்ற கோட்பாட்டையும் வலுவிழக்கச் செய்ய முடியும். ஆகவே தமிழ்த் தேசிய கோட்பாட்டின் மிக வலுவாக இருப்பது அந்த பாலம் தான்," என்கிறார் நிக்ஸன்.

மேலும், "இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நிலத் தொடர்பு ஏற்பட்டு விடும். தென் பகுதியுடன் இணையாது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்து இயங்கக்கூடிய நிலைமை ஏற்படும். கடல் மற்றும் விவசாய வளங்கள் அங்கு காணப்படுகின்றன," என்றார்.

"அந்த வளங்களின் ஊடாக உள்ளுர் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து, தாமாகவே தமது பொருளாதார வாழ்வாதாரத்தை சீரமைத்துக்கொள்ள முடியும். ஆகவே அந்த அடிப்படையில் தான் இது தடுக்கப்படுகின்றது," என நிக்ஸன் குறிப்பிடுகின்றார்.

 

'வடக்கு, கிழக்கு மாகாணங்கள் நிராகரிக்கப்படுகின்றன'

தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்
படக்குறிப்பு,

மக்கள் போக்குவரத்துக்காக மிகவும் கஷ்டப்படுகின்றார்கள் என்கிறார் ரவிகரன்

கொக்கிளாய் மற்றும் புல்மோட்டை பகுதிகளுக்கு இடையிலான பாலம் நிர்மாணிக்கப்படாமைக்கான பதிலை ஆட்சியாளர்களே வழங்க வேண்டும் என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

''கொக்கிளாய் பாலத்தை பொருத்த வரையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையிலிருந்து திருகோணமலை மாவட்டத்தின் எல்லையான புல்மோட்டை வரையான பகுதி கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டருக்கு உட்பட்ட தூரத்திற்கு தான் பாலம் போட வேண்டிய தேவை காணப்படுகின்றது. இது ஏற்கனவே, அமைச்சரவையில் பேசப்பட்டதாக கூறப்படுகின்றது. அது அங்கீகரிக்கப்பட்டதாக கூட செய்திகள் வந்துக்கொண்டிருந்தன," என்கிறார் ரவிகரன்.

"மாகாண சபை காலத்தில் நாங்கள் கொக்கிளாய் பாலத்தின் அவசியத்தையும், நந்திக்கடல் பாலத்தின் அவசியத்தையும் மிக முக்கியமாக சுட்டிக்காட்டப்பட்டது. இந்த பாலத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான நிதியை ஒதுக்கும் அளவுக்கு மாகாண சபைக்கு வசதிகள் கிடையாது," என்கிறார் ரவிகரன்.

தொடர்ந்து பேசிய அவர், "எல்லா மாவட்டங்களையும் ஒரே நோக்கத்தோடு தங்களுடைய பிரஜைகள் என்ற எண்ணத்தோடு அரசாங்கம் பார்க்குமாக இருந்தால், இந்த பாலத்தை எப்போதோ செய்திருக்கலாம். இந்த பாலம் இப்படியாக இருப்பதற்கு ஒவ்வொரு ஆட்சியாளரும் பதில் சொல்ல வேண்டும். முக்கியமான அபிவிருத்தி தேவைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதில்லை," என்றார்.

"எவ்வளவு மக்கள் போக்குவரத்துக்காக கஷ்டப்படுகின்றார்கள். பிரதான வீதியூடாக சுற்றி வருகின்றார்கள். பாலம் போட்டால் குறுகிய நேரத்தை செலவிடும் மக்கள், கூடுதலான நேரத்தை செலவிட்டு இந்த பாதை இல்லாத துன்பத்தை அனுபவிக்கின்றார்கள். வடக்கு கிழக்கு மாகாணங்களை எவ்வளவு நிராகரிக்க முடியுமோ? அந்தளவிற்கு நிராகரிக்கின்றார்கள்," என அவர் குறிப்பிடுகின்றார்.

தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்
படக்குறிப்பு,

சமூக செயற்பாட்டாளர் அன்டனி ஜெகநாதன் பீட்டர் இளஞ்செழியன்

‘தமிழ்-இஸ்லாமிய உறவுகள் வலுப்படும்’

கொக்கிளாய் மற்றும் புல்மோட்டை பகுதிகளுக்கு இடையில் பாலம் நிர்மாணிக்கப்படும் பட்சத்தில், தமிழ் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு இடையிலான உறவு வலுப் பெறும் என சமூக செயற்பாட்டாளர் அன்டனி ஜெகநாதன் பீட்டர் இளஞ்செழியன் தெரிவிக்கின்றார்.

''கொக்கிளாய் - புல்மோட்டை பகுதிகளுக்கு இடையிலான பாலமானது, மாறி மாறி வருகின்ற எந்த அரசாங்கமும் ஒரு போதும் அதை கண்டுக்கொள்ளவே இல்லை. அதற்கு உண்மையான காரணம் இந்த பாலம் ஒரு பிரசித்தி பெற்ற பாலம். வடக்கையும், கிழக்கையும் இணைக்கின்ற ஒரு பாலம். தமிழ் பேசுகின்ற இரண்டு உறவுகளை இணைக்கின்ற பாலம்," என்றார்.

"அமைச்சரவையில் இருந்தவர்கள் மிக இலகுவாக பெற வேண்டிய அனுமதிகளை கூட பெறாததற்கு காரணம், வடக்கும் கிழக்கும் இணையக்கூடாது என்ற கொள்கையில் இருந்த சில இஸ்லாமிய கட்சிகளும், சிங்கள பேரினவாதிகளும் தான் அதை தடுத்துக்கொண்டு வந்தார்கள். ஆனால், மாறி மாறி வந்த அரசாங்கங்களில் தமிழ் அமைச்சர்களும் இருந்திருக்கின்றார்கள். அவர்களும் சில சலுகைகளுக்காக அதைப்பற்றி பேசவில்லை," என்கிறார் இளஞ்செழியன்.

மேலும், "கிட்டத்தட்ட 1கி.மீ. இணைக்கின்ற பகுதியை தற்போது செல்ல ஒன்றரை மணிநேரம் பிடிக்கிறது. வேறு நாடுகளிடமிருந்து பணத்தை கேட்டு போர்ட் சிட்டி எல்லாம் கட்டுகின்றார்கள். ஆனால், இதற்கு அப்படியொரு காசு தேவையும் இல்லை. இலங்கை மக்களின் வரிப் பணத்திலேயே அதனை செய்யலாம். இந்த பாலம் நிர்மாணிக்கப்படும் பட்சத்தில், தமிழ் முஸ்லிம்களுக்கான உறவு நீடிக்கக்கூடும்," என்கிறார் அவர்.

"எங்களுடைய உற்பத்திகளை அங்குகொண்டு செல்வதும், அவர்களின் உற்பத்திகளை இங்கு கொண்டு வராதும் தங்களுடைய விவசாயம் மற்றும் தொழில் முயற்சிகளை கொண்டு செல்வது இலகுவானதாக இருக்கும். வெளிநாடுகளிடமிருந்து காசை கேட்டு, இந்த பாலத்தை அரசாங்கத்தினால் நிர்மாணிக்கலாம் என்பதே எனது கோரிக்கை," என சமூக செயற்பாட்டாளர் அன்டனி ஜெகநாதன் பீட்டர் இளஞ்செழியன் குறிப்பிடுகின்றார்.

 

கிழக்கு மாகாண மக்களின் கருத்து என்ன?

தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்
படக்குறிப்பு,

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பைசர்

பாலத்தை நிர்மாணிப்பதற்காக அளவீடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பாலம் இன்று வரை நிர்மாணிக்கப்படவில்லை என கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பைசர் குறிப்பிடுகின்றார். ஏமாற்றம் மாத்திரமே தமக்கு எஞ்சியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

''புல்மோட்டை மக்களுக்கும் சரி, கொக்கிளாய் மக்களுக்கும் சரி போக்குவரத்து பிரச்னையொன்று இருக்கின்றது. பாலம் ஒன்று முக்கியமாக தேவைப்படுகின்றது. பொதுமக்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு படகு மூலமாக போகின்றார்கள். மோட்டார் சைக்கிள்களை படகில் ஏற்றிக் கொண்டு போகின்றார்கள். படகிற்கு பணம் செலுத்த வேண்டும். படகில் ஏற்றப்படும் பொருட்களின் அளவுக்கு ஏற்ப பணம் செலுத்த வேண்டும்."

"வடக்கும் கிழக்கும் இணைந்து விடுமோ என்ற காரணத்தினாலோ தெரியவில்லை இந்த பாலம் போடாமைக்கு. அதுவாகவும் இருக்கலாம். இரண்டு பகுதிகளுக்கும் இடைப்பட்ட பகுதியை அளந்தார்கள். ஆனால் இதுவரை எந்தவித பயனும் இல்லை. மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தான் அளக்கப்பட்டது.ஆனால் இப்போது எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. ஏமாந்தது மாத்திரமே மிச்சமாக இருக்கின்றது." என கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பைசர் தெரிவிக்கின்றார்.

வியாபார நோக்கத்திற்காகவேனும் இந்த பாலம் அமைக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சாதீக் கோரிக்கை விடுக்கின்றார்.

''புல்மோட்டையிலுள்ள நோயாளர்கள் அண்மை காலமாக அதிகளவில் யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால், சுற்றி போக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு செல்வதற்கு அதிகளவான நேரத்தையும் அதிகளவான தூரத்தை கடக்க வேண்டியுள்ளது. காசு வீணாக செல்கின்றது என்பதை கவலையாக தெரிவிக்கின்றேன். குறிப்பாக வியாபார நோக்கத்திற்காக இந்த பாலம் அமைத்தால், மிகவும் நல்லதாக இருக்கும்," என கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சாதீக் கூறுகின்றார்.

வட மாகாண சிங்கள மக்களின் கருத்து

தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்
படக்குறிப்பு,

கொக்கிளாய் பகுதியைச் சேர்ந்த குமார

''இந்த பாலம் தொடர்பில் எந்த காலத்திலிருந்து சொல்கின்றார்கள். ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் என்றால் பரவாயில்லை. கடந்த 10-12 வருடங்களாக இழுத்தடிப்பாகவே காணப்படுகின்றது. இதற்கு தீர்வொன்று இதுவரை இல்லை. எமது ஊரில் தலைவர் இருக்கின்றார்கள். அவர் அனைவரிடமும் பேசுகின்றார். ஆனால், சரியான பெறுபேறு கிடைக்கவில்லை," என கொக்கிளாய் பகுதியைச் சேர்ந்த குமார தெரிவிக்கின்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த இடத்தில் பாலமொன்றை அமைப்பதற்கு எமக்கும் விருப்பம். கடலில் ஆராய்ந்தார்கள். உள்ளே உள்ள கல் பழுதடைந்துள்ளதாக கூறினார்கள். அந்த இடத்தில் மாத்திரம் கல் இல்லை. வேண்டியளவு கற்கள் இருக்கின்றன. அங்கு பாருங்கள் என கூறினோம். அந்த இடத்தின் ஊடாக செய்யுமாறு கேட்டோம்," என்றார்.

"அவசரமாக நோயாளர் ஒருவரை படகில் புல்மோட்டைக்கு அழைத்து செல்லும் போதே நோயாளர் இறந்து விடுவார். வாகனத்தில் ஏற்றி படகில் ஏற்றி அங்கு சென்று வாகனம் வரும் வரை காத்திருந்து அழைத்து செல்லவேண்டும். அவசரத்திற்கு அழைத்தாலும் வரமாட்டார்கள். சென்று வருவதற்கு படகில் 2,000 ரூபா எடுக்கின்றார்கள்," என கொக்கிளாய் பகுதியைச் சேர்ந்த குமார தெரிவிக்கின்றார்.

 

ஜனாதிபதி செயலகத்தின் பதில் என்ன?

தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்

மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் புல்மோட்டை மற்றும் கொக்கிளாய் பகுதிகளை இணைக்கும் வகையிலான பாலத்தை அமைக்க முயற்சித்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், இந்த பாலம் அமைக்கப்படுவதற்காக முயற்சிகள், பாலம் இதுவரை அமைக்கப்படாமைக்கான காரணம் உள்ளிட்ட தகவல்களை, தகவலறியும் சட்டத்தின் ஊடாக, பிபிசி தமிழ், ஜனாதிபதி செயலகத்திடம் கோரியது.

இதற்கு ஜனாதிபதி செயலகம் பதில் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது.

''உங்கள் தகவல் கோரிக்கையினால் கேட்கப்பட்டுள்ள தகவல்கள் 2016-ஆம் ஆண்டு 12-ஆம் இலக்க தகவல்களை அறிந்துக்கொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் 3(1)-ஆம் பிரவுக்கமைய பொது அதிகார உரிமையில், பொறுப்பில் அல்லது கட்டுப்பாட்டில் இருக்கும் ஓர் தகவல் அல்ல என்பதனால் உங்கள் தகவல் கோரிக்கையை நிராகரிக்க நேர்ந்துள்ளதை தயவுகூர்ந்து அறிவித்துக்கொள்கின்றேன்," என ஜனாதிபதி மேலதிக செயலாளரும், தகவல் உத்தியோகத்தருமான எஸ்.கே.சேனாதீரவினால் பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் இந்த இடத்தில் பாலமொன்று நிர்மாணிக்கப்படுவது மிகவும் முக்கியம் வாய்ந்து என இரண்டு மாகாண மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/cpr883wrpy8o

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka: North - East-ஐ இணைக்க Bridge இல்லை; 800 மீட்டருக்கு பாலம் அமைக்க அரசு தயங்குவது ஏன்?

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இணைப்பு யாரால் சாத்தியமாகும்?

அல்லது தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஆவல் காட்டும் காந்தி தேசம் இதனை செய்யுமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இந்த இணைப்பு யாரால் சாத்தியமாகும்?

அல்லது தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஆவல் காட்டும் காந்தி தேசம் இதனை செய்யுமா?

ராமர் சிலையை ஒரு பக்கம் வைக்கவும் மற்ற பக்கம் ஆஞ்சநேயரை வைத்துவிட்டு ...மோடியிடம் விண்ணப்பம் போட்டால் சில சமயம் மோடி உதவக் கூடும்....

அல்லது நம்ம செந்தில் தொண்டமானிடம் விண்ணப்பம் போட்டு பார்க்கலாம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
42 minutes ago, putthan said:

ராமர் சிலையை ஒரு பக்கம் வைக்கவும் மற்ற பக்கம் ஆஞ்சநேயரை வைத்துவிட்டு ...மோடியிடம் விண்ணப்பம் போட்டால் சில சமயம் மோடி உதவக் கூடும்....

அல்லது நம்ம செந்தில் தொண்டமானிடம் விண்ணப்பம் போட்டு பார்க்கலாம்..

அவர்களுக்கு
சம்மதமா சம்மதமா
வடக்கு கிழக்கு
இணைய
சம்மதமா
காத்தான்குடி சம்மதிக்குமா
மஞ்சள் 
கட்ட பிரம்மச்சாரிகள்
சம்மதிப்பார்களா?

சுமந்திரன்
சும்மா இருப்பாரா? 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.