Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

சிறப்பு முகாமிலிருந்து ஓர் திறந்த மடல்

-இராபர்ட் பயஸ், சிறப்பு முகாம், கொட்டப்பட்டு, திருச்சி.

29/2/ 2024

உலகத் தமிழர்களுக்கு....

வணக்கம். நான் இராபர்ட் பயஸ் பேசுகிறேன். உங்களை உங்களோடு உங்களில் ஒருவனாக சுதந்திர மனிதனாக இல்லாமல் எங்களில் ஒருவரான சாந்தனை இழந்து இதோ இந்த கம்பிகளுக்கு பின்னால் இருந்து இப்படி உங்களை சந்திக்க நேர்ந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. 32 வருட நீண்ட சிறைக் கொட்டடிக்கு பிறகு கடந்த 11-11- 2022 அன்று உச்சநீதிமன்றம் விடுதலை செய்த ஆறுபேரில் நானும் ஒருவன். அந்த ஆறுபேரில் நான், ஜெயக்குமார், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய நால்வரையும் இலங்கைத் தமிழர் எனக் காரணம் கூறி இந்திய வெளியுறத்துறை நாட்டைவிட்டு வெளியே அனுப்பும் வரை சிறப்பு முகாமில் அடைத்து வைக்க உத்தரவிட்டது.

தொலைந்து போன வாழ்க்கையை எதிர்நோக்கி 32 வருட நீண்ட காத்திருப்பு முற்றுபெறும் தருவாயில் கூட விடுதலையை ருசிக்க முடியாமல், சிறிது நேரம் கூட விடுதலைக் காற்றை சுவாசிக்க முடியாமல் புழல் சிறையிலிருந்து நானும் ஜெயக்குமாரும் வேலூர் சிறையிலிருந்து சாந்தனும் முருகனும் திருச்சி சிறப்பு முகாமிற்கு கொண்டு வந்து அடைக்கப்பட்டோம். இதோ முடியப்போகுது 32 ஆண்டுக்கால சிறைக் காத்திருப்பு என்று எண்ணிய எங்களுக்கு அப்பொழுது விளங்கவில்லை நாங்கள் சிறை மாற்றப்படுகிறோம் என்று. ஆம், அன்று நடந்தேறியது அப்பட்டமான சிறை மாறுதல் தான் என்பதை எங்களுக்கு காலம் தான் விளக்கியது. இது சிறையல்ல சிறப்பு முகாம் தானே என்று எண்ணிய எங்களுக்கு இது சிறையல்ல சிறையை விட கொடுஞ்சிறை என்பதும் எங்களுக்கு போகப்போகத் தான் விளங்கியது.

நாட்டைவிட்டு அனுப்பும்வரை எங்களை சிறப்பு முகாமில் வைக்கிறோம் என்றவர்கள் இன்றைய தேதிவரை நாட்டைவிட்டு அனுப்புவதற்கு எடுத்த முன்னெடுப்புகள் என்னவென்று கேட்டால் மிகப்பெரிய கேள்விக்குறியும் ஆச்சரியக்குறியும் தான் மிஞ்சும். "சிறப்பு முகாமா..? அது ஜெயில் மாதிரிலாம் இல்லைங்க சார். எல்லா வசதிகளும் செய்து கொடுப்போம்" என்று பேசி சமாளிக்கும் அரசும் நிர்வாகமும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. கடந்த ஜனவரி 28 ஆம் தேதி ஒரு வார காலமாக மருந்து மாத்திரை கிடைக்காமல் ஒருவர் இறந்து போனார். இப்பொழுது சாந்தன் கல்லீரல் முழுவதும் செயலிழந்து, எழுந்து நிற்கக் கூட முடியாமல் மிக மோசமடைந்து பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் ஏதும் பலனளிக்காத நிலையில் இறந்து போயிருக்கிறார். இந்த மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது..? யாரை நாங்கள் நொந்துக்கொள்வது..?

அனைத்து அடிப்படை உரிமைகளையும் மறுத்து, உடல்நலன் குன்றி 'விடுதலை

ஆகிவிடுவோம். விடுதலை ஆகிவிடுவோம்.' என்று கனவு கண்டு விடுதலை ஆகிவிட்டோம் என்று பூரிப்பு கிடைத்த தருவாயில் மீண்டும் ஏமாற்றப்பட்டு சிறைமாற்றப்பட்டு இதனால் மனநலனும் பாதிக்கப்பட்டு இறந்து போன சாந்தனுக்கு சிறை வாழ்வு முடிந்தது. இன்னும் மீதம் மூன்று பேர் இருக்கிறோம். நாங்கள் மீண்டும் காத்திருக்க தொடங்குகிறோம் இந்த சிறப்பு முகாமில்.

சிறையில் கூட சிறை நிர்வாகத்திற்கு சிறை விதிகள் கையேடு இருக்கிறது. அதன்படி கைதிகளுக்கு இருக்கக்கூடிய மற்றும் இல்லாத உரிமைகள் கடமைகள் வரையறுக்கப்பட்டு இருக்கும். ஆனால் சிறப்பு முகாமோ சிறையை விட கொடுமையானது, இங்கு எந்த சட்டத்திட்டங்களோ வரையறைகளோ கிடையாது. அரசும், மாவட்ட ஆட்சியரும், முகாம் நிர்வாகமும் என்ன நினைக்கிறதோ அவையெல்லாம் விதிமுறைகளாகவும் சட்டத்திட்டங்களாகவும் ஆகின்றன. மருத்துவம் கிடையாது என்று இவர்கள் முடிவெடுத்தால் முகாம்வாசிகளுக்கு மருத்துவம் கிடையாது. தனிமைச் சிறை என்று இவர்கள் முடிவெடுத்தால் தனிமைச் சிறை யாரும் மனு பார்க்கக்கூடாது என்று இவர்கள் முடிவெடுத்தால் யாரும் மனுப்பார்க்க முடியாது. இப்படியான நிர்வாகம் தான் நாட்டைவிட்டு வெளியில் அனுப்புவதற்காக என்று காரணம் கூறி சிறப்பு முகாமில் அடைக்கப்படுபவர்கள் அதற்கான எவ்வித முயற்சிகளும் எடுக்கப்படாமல் வருடக்கணக்கில் அப்படியே கிடப்பில் போடப்பட்டு இன்னொரு சிறைவாசத்தை அனுபவித்து வருகின்றனர். நாங்கள் சிறு சிறு அடிப்படைத் தேவைகளையும் மற்றும் அடிப்படை உரிமைகளையும் கூட போராடி, உயிரைக் கொடுத்து பெறவேண்டிய சூழலே இருக்கிறது.

எங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியான 32 வருடங்கள் ராஜீவ்காந்தி பெயரைச் சொல்லியே சிறையில் கடத்தப்பட்டது. இறுதியில் உச்சநீதிமன்றத்தின் விடுதலை ஆணைக்கு பின்னும் எங்களை எங்கள் குடும்பங்களோடு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்காமல் காலங்கடத்தி காலங்கடத்தி இறுதியில் சாந்தனை இழந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மீதமுள்ள நாங்களும் எங்களுக்கான ஒவ்வொரு அடிப்படை உரிமையையும் பெறுவதற்கு இதுவரை எண்ணற்ற மனுக்களையும், வழக்குகளையும், உண்ணாநிலை போராட்டங்களையும் மேற்கொண்டே பெற்று வருகின்றோம். அதில் பெரும்பான்மையான வாக்குறுதிகள் காற்றிலே போகும். மீதி, கேட்கப்படாமலே மக்கிப் போகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், இந்த மாத தொடக்கத்தில் இலங்கை துணைத் தூதரகம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நானும் முருகனும் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட பொழுது ஒரு வாரத்தில் அழைத்துச் செல்கிறோம் என்று எங்களுக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டு 20 நாட்களை கடந்தும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இவ்வாறில்லாமல் உரிய அரசுப் பொறிமுறைகள் அவர்கள் கடமையை முறையே செய்திருந்தால் இன்று சாந்தன் உயிருடன் அவருடைய தாயாருடனும் குடும்பத்தினருடனும் மகிழ்ச்சியாக இன்னும் ஓரிரு வருடங்களாவது இருந்திருப்பார்.

33 வருடங்களாக தனது மகனை பிரிந்து கண்பார்வை குன்றி வயது
முதிர்ச்சியடைந்து கடைசியாக ஒருமுறையாவது தனது மகனை பார்த்துவிடவேண்டும் என்று ஏங்கிய ஒரு தாயின் கையில் அந்த மகனின் உயிரற்ற உடலைத்தான் கொண்டுபோய் சேர்க்கப் போகிறோம். கடைசியாக தனது கையால் தன்மகனுக்கு ஒருபிடி உணவு கொடுக்க மாட்டோமா என்று ஏங்கிய அந்த தாய் அந்தமகனுக்கு கடைசியாகக் வாய்க்கரிசி கொடுக்கத்தான் வாய்க்கப்பட்டிருக்கிறார். இதோ இன்று தன் மகன் வந்துவிடுவான், என்று எதிர்பார்த்து காத்திருந்த அந்தத் தாயிடம் 'உன் மகன் வரவில்லை. அவனின் உயிரற்ற உடல்தான் வருகிறது' என்கிற செய்தியை அந்தத் தாயிடம் யாரால் சொல்லியிருக்க முடியும். அத்தகைய கல்நெஞ்சம் படைத்த மனிதர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்களா என்ன.!? 33 வருடங்கள் கழித்து தன் மகனின் வருகைக்காக மகிழ்ச்சியாக காத்திருந்திருக்கும் அந்த வீட்டில் இந்த செய்தி ஏற்படுத்திய மயான அமைதியின் பேரிரைச்சலை தாங்கிக் கொள்ளும் கனத்த இதயம் கொண்ட மனிதர்களும் இவ்வுலகில் இருக்கிறார்களா என்ன?!

இதோ கடந்த மாதம் என்னுடன் நடந்து மருத்துவ பரிசோதனைக்கு வந்த சாந்தன் இன்று எங்களோடு இல்லை. ஒரு மாதத்தில், எங்களோடு உறவாடி, பேசி உலாவிய சாந்தன் இன்று உயிரோடு இல்லை.

மீதமிருக்கிற, ஜெயக்குமாரும் முருகனும் 33 வருடங்களாக தங்கள் குடும்பங்களை பிரிந்து வாடும் நிலையில் நானோ, மனைவி ஒரு நாட்டில் மகன் ஒரு நாட்டில் தாய், சகோதர சகோதரிகள் வேறு நாட்டில் என சிதறுண்டுக் சிதைந்துக் கிடக்கும் குடும்பத்தை ஒன்றுசேர்த்து ஒரு நாளேனும் வாழ்ந்து விட மாட்டோமா?! பச்சிளம் பாலகனாக பார்ந்த எனது மகன் எவ்வளவு உயரம் இருப்பான்? அவன் என்னைவிட உயரமா? அல்ல உயரம் குறைவா? அவனுக்கு திருமணம் ஆகி எனக்கு பேரன் பிறந்திருக்கிறானாம்.! நான் எந்த வயதில் என் மகனை பிரிந்தேனோ அந்த வயதில் எனக்கு இப்பொழுது பேரன் இருக்கிறான். அவனதுப் பஞ்சு பாதங்களை அள்ளியெடுத்து ஒருமுறையேனும் என் முத்தங்களை காணிக்கையாக்கிவிட மாட்டேனா..?!

அன்பார்ந்த உலகத் தமிழ் சமூகமே இன்னும் நாங்கள் மூன்று பேர் மிச்சம் இருக்கிறோம். எங்கள் நிலைமை?

நீண்டகால சிறைவாசமும், குடும்பங்களை பிரிந்த துயரமும் எங்களை முழுமையான நோயாளிகளாக்கியுள்ளது. சாந்தனைப் போலல்லாமல் எங்களையாவது எங்கள் கடைசி காலத்தில் மிஞ்சியிருக்கிற கொஞ்ச காலம் எங்கள் தாயார், மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகளுடன் வாழ்ந்து விட்டுப் போக இந்த அரசு இனியாவது நடவடிக்கை எடுக்குமா..?

எங்கள் குடும்பங்களை பிரிந்து வாழ்க்கையை இழந்து வாடும் இப்பெருந்துன்பங்கள் முடிவுக்கு வருமா..?

இப்படிக்கு 

இராபர்ட் பயஸ்

 

https://www.facebook.com/share/p/aZ7vRzda99wrq7mL/

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

“சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை சிறப்பு முகாமில் உள்ள மற்ற மூவருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது!” – ராபர்ட் பயஸ்

29 FEB, 2024 | 09:24 PM
image

சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை சிறப்பு முகாமில் உள்ள மற்ற மூவருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என ராபர்ட் பயஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட நளினி, முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், சாந்தன் ஆகியோரை கடந்த 2022 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் விடுவித்தது. இதில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் இந்தியர்கள் என்பதால் அவர்களது இல்லத்திற்கு சென்றனர்.

ஆனால் முருகன், ஜெயக்குமார், சாந்தன், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை குடிமக்கள் என்பதால் அவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சாந்தனின் இறப்பு குறித்து சிறப்பு முகாமில் உள்ள ராபர்ட் பாயஸ் உலகத் தமிழர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில், திருச்சி சிறப்பு முகாம் சிறையை விட கொடுமையானது என குறிப்பிட்டுள்ள அவர், தன் மகனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று ஏங்கிய சாந்தனின் தாயிடம் உயிரற்ற உடலை தான் கொண்டு சேர்க்கப்போகிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், நீண்டகால சிறைவாசமும், குடும்பங்களை பிரிந்த துயரமும் எங்களை நோயாளிகளாக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள ராபர்ட் பயஸ், சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை, சிறப்பு முகாமில் உள்ள மற்ற மூவருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.மேலும், தங்களின் கடைசி காலத்தை குடும்பத்தினருடன் செலவழிக்க அரசு இனியாவது நடவடிக்கை எடுக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

rober_letter.jpg

robert_lett1.jpg

robert_letter3.jpg

https://www.virakesari.lk/article/177629

  • கருத்துக்கள உறவுகள்

உயிரை உருக்கிப் பேனாவில் ஊற்றி எழுதப்பட்ட கடிதம். வாசிப்பவரின் கண்ணீரில் கரைந்து போகும் கடிதம்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய செய்திகள் பகுதியில் நானும் இந்தக் கடிதத்தை இணைத்திருந்தேன்..எனிவே..உரியவர்களுக்கு ஏதாவது விடிவு கிடைத்தால் மிக்க சந்தோசம்.🖐️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.