Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அநுரகுமாரவின் இந்திய விஜயம்; ஜே.வி.பியின் இந்திய விரோத கடந்த காலத்தை பொருட்படுத்தாத மோடி அரசு

on March 1, 2024

GFjedoSW4AAHFrA.jpeg?resize=1200%2C550&s

Photo, X, @DrSJaishankar

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவும் அவரது மூன்று தோழர்களும் ஐந்து நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியிருந்தார்கள். தங்களையும் கூட இந்திய அரசாங்கம் அழைத்துப் பேசவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகி வேண்டுகோள் விடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. அந்தளவுக்கு தேசிய மக்கள் சக்தி தலைவரின் இந்திய பயணம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்புடன் கூடிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்தியா வழமையாக  தமிழ் அரசியல் கட்சிகளுக்குப் புறம்பாக ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற பெரிய கட்சிகளுடனேயே ஊடாட்டங்களைச் செய்துவந்திருக்கிறது; ஆனால், தேசிய ஐக்கிய மக்கள் சக்தி போன்ற இடதுசாரிக் கட்சிகளை அழைத்துப் பேசியதில்லை.

இந்திய, இலங்கை இடதுசாரி அரசியல்வாதிகள் அவர்களின் கட்சிகளின் மகாநாடுகளில் கலந்துகொள்வதற்காக பரஸ்பரம் விஜயங்களை மேற்கொள்வதுண்டு. அத்தகைய விஜயங்கள் குறிப்பிட்ட கட்சி வட்டாரங்களுக்கும் ஒரளவுக்கு ஊடக கவனிப்புக்கும் அப்பால் பெரிதாகக் அக்கறைக்குரியவையாக  இருப்பதில்லை.

ஆனால், இந்தத் தடவை தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களின் இந்திய பயணத்துக்கு அதிவிசேட முக்கியத்துவம் ஒன்று இருக்கிறது. திசாநாயக்கவையும் தோழர்களையும் இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைத்து இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறது. இலங்கை அரசியல் கட்சியொன்றின் தலைவர்களை இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைத்துப் பேசியிருப்பது அண்மைய தசாப்தங்களில் இதுவே முதற்தடவையாக இருக்கவேண்டும்.

திசாநாயக்கவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க, தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோரும் இந்தியா சென்றிருந்தனர்.

அவர்களுடன்  இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் மற்றும் வெளியுறவு செயலாளர் வினாய் மோகன் கவாட்ரா ஆகியோர் இலங்கையின் பொருளாதாரம், அரசியல் நிலைவரம், எதிர்கால அரசியல் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடியதாக செய்திகள் கூறின.

திசாநாயக்கவுடனான சந்திப்புக்குப் பிறகு கலாநிதி ஜெய்சங்கர் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் “இலங்கையின் தேசிய மக்கள் சக்தியினதும் ஜனதா விமுக்தி பெரமுனவினதும் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவை  சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி. இருதரப்பு உறவுகள், பரஸ்பர நலன்கள், இலங்கையின் பொருளாதாரச் சவால்கள், முன்னோக்கிச் செல்வதற்கான பாதை குறித்து நல்ல பேச்சுவார்த்தையை நடத்தினேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஐந்து நாள் விஜயத்தின்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் உள்ள தென்னிந்திய மாநிலமான கேரளாவுக்கும் சுற்றுலாவை மேற்கொண்டு சிந்தனைக் குழாம்கள் உட்பட பல்வேறு தரப்புகளுடனும் கலந்துரையாடினார்கள்.

இவ்வருட பிற்பகுதியில் இரு தேசிய தேர்தல்களுக்கு இலங்கை தயாராகிவரும் நிலையில், ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தன்னை அறிவித்திருக்கும் திசாநாயக்கவின் மக்கள் செல்வாக்கு பெருமளவுக்கு அதிகரித்திருப்பதாக தோன்றும் ஒரு நேரத்தில் இந்திய அரசாங்கம் அவரை அழைத்துப் பேசியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

இரு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சிக்கு பின்னரான அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் ஆதரவைப் பெருமளவுக்கு வளர்த்துக்கொண்ட கூட்டணியாக கட்சியாக தேசிய மக்கள் சக்தி விளங்குகிறது. அதன் தலைமைக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின்  (ஜே.வி.பி.) பொதுக் கூட்டங்களிலும் ஊர்வலங்களிலும் மக்கள் பெருமளவில் அணிதிரண்டாலும் அந்த திரட்சி தேர்தல்களில் வாக்குகளாக மாறுவதில்லை என்ற ஒரு வரலாறு இருக்கிறது. ஆனால், அதே வரலாறு இனிமேலும் தொடரும் என்று கூறமுடியாது என்றே தோன்றுகிறது.

மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஜனாதிபதி வேட்பாளரா திசாநாயக்கவே விளங்குவதாக கொழும்பை தளமாகக் கொண்டியங்கும் ‘சுகாதாரக் கொள்கைக்கான நிறுவனம்’ என்ற ஆய்வு அமைப்பு ஜனவரியில் செய்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்திருக்கிறது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 50 சதவீதமானவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கே வாக்களிக்கப்போவதாக கூறியிருக்கும் அதேவேளை, 33 சதவீதமானவர்கள்  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெறுமனே 9 சதவீதமானவர்கள் மாத்திரமே ஆதரிப்பதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. இந்த பிந்திய ஆய்வு கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

தேசிய மக்கள் சக்தி அமைக்கப்பட்ட சில மாதங்களில் நடைபெற்ற 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட திசாநாயக்க 3.1 சதவீத வாக்குகளையே பெறக்கூடியதாக இருந்தது. மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு தேசிய மக்கள் சக்தியின் ஆதரவு எவ்வளவுதான் அதிகரித்திருந்தாலும் திசாநாயக்க அடுத்த  ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறவேண்டுமானால் அவரின் வாக்குகள் அந்த மூன்று சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரிக்கவேண்டும். அது சாத்தியமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

எது எவ்வாறிருந்தாலும், இலங்கையின் இன்றைய அரசியல் நிலைவரத்துக்கு மத்தியில் தேசிய மக்கள் சக்தியை புதுடில்லிக்கு உத்தியோகபூர்வமாக அழைத்துப் பேசும் அளவுக்கு முக்கியமான அரசியல் சக்தியாக இந்திய அரசாங்கம் நோக்குகிறது என்பது தெளிவானது.

இந்திய விரோத கடந்த காலம்

ஜே.வி.பியைப் பொறுத்தவரை அதன் ஆரம்பம் முதலிருந்தே மிகவும் வெறித்தனமான இந்திய விரோதக் கொள்கையைக் கடைப்பிடித்த வரலாற்றைக் கொண்டிருக்கிறது.

காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் என். சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபர் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்த ரோஹண விஜேவீர 1960 களின் பிற்பகுதியில்  கட்சியில் இருந்து வெளியேறி புதிதாக அமைத்துக்கொண்ட ஜே.வி.பியின் கொள்கைகளில் இந்திய விரோதம் முக்கியமான ஒரு கூறாக இருந்தது.

இலங்கையின் ஏனைய சமூகங்களின் தொழிலாளர் வர்க்கத்தினருடன் ஒப்பிடும்போது மெய்யான  பாட்டாளி வர்க்கத்தினராக நோக்கக்கூடிய  தமிழர்களான இந்திய வம்சாவளி மலையக தோட்டத்தொழிலாளர்களை இந்தியாவின் ஐந்தாம் படையென்றும் இந்திய விஸ்தரிப்புவாதத்தின் கருவிகள் என்றும்  விஜேவீர வர்ணித்தார்.

மலையக பெருந்தோட்டங்களில் தேயிலைச் செடிகளை அகற்றிவிட்டு உருளைக் கிழங்கை பயிரிடுவது குறித்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது.

1980 களின் பிற்பகுதியில் கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையை ‘இரண்டாவது மலைநாட்டு உடன்படிக்கை’ (Second Upcountry Pact) என்று விஜேவீர வர்ணித்ததாக இலங்கையில் இந்தியாவின் தலையீடுகள் தொடர்பில் அவரின் சிந்தனைகள் குறித்து 2019ஆம் ஆண்டில் உதேனி சமன் குமார என்ற என்பவர் எழுதிய விரிவான கட்டுரையொன்றில் பதிவு இருக்கிறது.

கண்டி பிரதானிகளுக்கும் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளுக்கும் இடையில் கைச்சாத்திப்பட்ட உடன்படிக்கையே இறுதியில் முழு இலங்கையும் பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ் வருவதற்கு வழிவகுத்தது. அதுவே முதலாவது மலைநாட்டு உடன்படிக்கை எனப்படுகிறது. இந்தியாவுடனான சமாதான உடன்படிக்கையை இலங்கை முழுவதும் இந்தியாவின் ஆதிக்கத்தின் கீழ் வருவதற்கு வழிவகுக்கக்கூடியது என்று விஜேவீர சிங்கள மக்களுக்கு கூறினார் என்பதை இதில் இருந்து புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.

அந்த சமாதான உடன்படிக்கையை அடுத்து இரண்டாவது ஆயுதக்கிளர்ச்சியை முன்னெடுத்த ஜே.வி.பி. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணமுடியும் என்ற நம்பிக்கையில் மாகாண சபை முறையை ஆதரித்த தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலரை படுகொலை செய்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் கணவர் விஜய குமாரதுங்கவும் அவர்களில் ஒருவர். ஆனால், விஜேவீரவின் மறைவுக்கு பிறகு சில வருடங்கள் கழித்து ஜே.வி.பி. தேர்தல்களில் போட்டியிட்டு மாகாண சபைகளில் அங்கம் வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஜே.வி.பியும் அதன் நவீன அவதாரமான தேசிய மக்கள் சக்தியும் மாகாண சபை முறைக்கு வழிவகுத்த அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன. அந்த திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தனக்கு இருக்கும் விருப்பத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க கடந்த வருட முற்பகுதியில்  வெளியிட்டபோது  கடும்போக்கு சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத அளவுக்கு தேசிய மக்கள் சக்தி அதை எதிர்த்தது.

ஆனால், தற்போதைய புவிசார் அரசியல் நிலைவரங்களுக்கு மத்தியில் ஜே.வி.பியின் இந்திய விரோதக் கடந்தகாலத்தை மோடி அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. தேசிய மக்கள் சக்தியும் அதன் இந்தியா தொடர்பிலான அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது.

இந்தியாவின் முக்கியமான ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றான சென்னை இந்துவின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு கடந்த டிசம்பரில் திசாநாயக்க வழங்கிய நேர்காணலில் இலங்கையின் நெருங்கிய அயல்நாடான இந்தியா முக்கியமான அரசியல் மற்றும் பொருளாதார மையமாக மாறிவிட்டது என்றும் அரசியல், பொருளாதாரத் தீர்மானங்களை எடுக்கும்போது அவை இந்தியாவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எப்போதும் கவனத்திற்கொண்டே செயற்படப்போவதாகவும் கூறினார்.

சீனாவுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இந்திய விஜயத்தின் பின்னர் சீனாவை எவ்வாறு கையாளுவார்கள் என்பது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதாகும்.

கடந்த வாரம் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரியவிடம் அவரது கட்சி வல்லரசுகளுடனான உறவுகளை எவ்வாறு கையாளும் என்று கேள்வியழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “எமக்கு சிறப்பான முறையில் பொருத்தமாக அமையக்கூடிய நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையிலேயே நாம் எந்த நாட்டுடனும் விவகாரங்களைக் கையாளவேண்டும். சீனாவோ, இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ அவர்களுக்கென்று ஒரு நிகழ்ச்சித்திட்டம் இல்லாமல் எம்முடன் விவகாரங்களைக் கையாள வரப்போவதில்லை. எமக்கென்று ஒரு நிகழ்ச்சித்திட்டம் இல்லாவிட்டால் அவர்களின் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரகாரமே நாம் செயற்படவேண்டியிருக்கும்” என்று பதிலளித்தார்.

சீனாவின் வியூகங்கள் பற்றிய அக்கறை 

இலங்கை உட்பட இந்து சமுத்திரத்தின் கரையோர நாடுகளில் சீனா அதன் செல்வாக்கைத் திணிக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருக்கும் பினபுலத்தில், இந்திய வெளியுறவு அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் வெளியுறவுச் செயலாளரும் தங்களது நாட்டின் அக்கறைகளை தேசிய மக்கள் சக்தியின் தலைவரின் கவனத்துக்குக் கொண்டுவருவந்திருப்பார்கள் என்பது நிச்சயம்.

இலங்கையில் இந்தியாவின் நலன்கள் உறுதிசெய்யப்படுவதை ஆதரிக்கக்கூடிய மாற்றுக் கட்சியொன்றை புதுடில்லி தேடுவதன் அறிகுறியே தேசிய மக்கள் சக்திக்கு நீட்டப்பட்ட நேசக்கரமாகும் என்று இலங்கையில் சில அவதானிகள் உணருகிறார்கள்.

ஆனால், திசாநாயக்கவின் புதுடில்லி விஜயத்தை விக்கிரமசிங்க அரசாங்கம் முழுமையாக ஆதரிக்கிறது போன்று தெரிகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவருவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் திட்டத்துக்கு தேசிய மக்கள் சக்தியின் ஒத்துழைப்பைப் பெறுவதில்  ஜனாதிபதி அக்கறையாக இருக்கிறார். இது இந்திய நலன்களுடனும் ஒத்துப்போகக்கூடியது  என்று கொழும்பை மையமாகக்கொண்டியங்கும் இந்தியப்  பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான பி.கே. பாலச்சந்திரன் கூறுகிறார்.

பொருளாதார மறுசீரமைப்பு செயற்திட்டத்துக்கு சகல கட்சிகளினதும் ஒத்துழைப்பை நாடிநிற்பதாக நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்த பிறகு  கொள்கைவிளக்க உரையில் விக்கிரமசிங்க கூறினார்.

தமிழர்களின் மனநிலை

அதேவேளை, சமஷ்டி அரசாங்க முறையையோ அல்லது குறைந்தபட்சம் 13ஆவது திருத்தத்தையோ கூட ஆதரிக்காத தேசிய மக்கள் சக்தியுடனான இந்தியாவின் ஊடாட்டத்தை தமிழர்கள் விரும்பமாட்டார்கள் என்பது நிச்சயம். ஆனால், இந்தியாவுடன் ஆரம்பித்திருக்கும் நெருக்கம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுதொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்துவதற்கு உதவவும் கூடும் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுவதாகவும் பாலச்சந்திரன் கூறுகிறார்.

ஆனால், தற்போதைய சூழ்நிலையில் இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய விவகாரங்கைளை திசாநாயக்க குழுவினருடன் இந்திய அதிகாரிகள் கலந்துரையாடியிருப்பார்கள் என்று பெரும்பாலும்  எதிர்பார்ப்பதற்கில்லை.

இது இவ்வாறிருக்க, இந்தியா நேசக்கரத்தை நீட்டியிருக்கும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தென்னிலங்கையில் உள்ள இந்திய விரோத அரசியல் சக்திகள் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுக்கத் தொடங்கியிருப்பதையும்  காணக்கூடியதாக இருக்கிறது.

பெரும்பாலான இலங்கையர்கள் எதிர்க்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு ஆதரவைப் பெறும் நோக்குடனேயே தேசிய மக்கள் சக்திக்கு இந்தியா அழைப்பை அனுப்பியதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறியிருக்கிறார்.

தங்களுக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி இந்தியா அந்த உடன்படிக்கையில் விரைவில் கைச்சாத்திடவிருக்கிறது என்று செய்தியாளர்களிடம் கூறிய வீரவன்ச, இலங்கையின் வர்த்தகத்தையும் தொழிற்சந்தையையும் இந்தியாவுக்கு திறந்துவிடுவதே அந்த உடன்படிக்கையின் நோக்கம். இலங்கையை தனது காலனி நாடாக மாற்றவிரும்பும் இந்தியா சகல அரசியல் கட்சிகளையும் பூனைக்குட்டிகள் போன்று கட்டுப்படுத்தி வைத்திருக்க விரும்புகிறது என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

ஸ்ரீலங்கா ரெலிகோமுடன் இந்தியா உடன்பாடு ஒன்றுக்கு வருவதற்கான சாத்தியம் இருக்கும் பின்புலத்திலேயே தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான அனில் ஹேவத்த நெத்திக்குமார  கூறியிருக்கிறார்.

தேசிய மக்கள் சக்தி தலைவர்களின் இந்திய விஜயத்துக்கு எதிரான பிரசாரங்கள் தேசிய தேர்தல்களுக்கு இலங்கை தயாராகும் சூழ்நிலையில் புதிய இந்திய விரோத உணர்வு அலைக்கு வழிவகுக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக சில அவதானிகள் கருதுகிறார்கள்.

இலங்கையில் இந்திய முதலீடுகளுக்கு எதிராக குரலெழுப்பிவந்த தேசிய மக்கள் சக்தி இனிமேல் அத்தகைய முதலீடுகள் தொடர்பில் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என்பதும் இந்திய விஜயம் தொடர்பில் தேசியவாத சக்திகளினால் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எவ்வாறு பதிலளிக்கும் என்பதும் முக்கியமான கேள்விகள்.

இந்திய விஜயம் தேசிய மக்கள் சக்திக்கும் அதன் தலைவர்களுக்கும் பிராந்திய மட்டத்தில் ஒரு பெரிய அரசியல் மற்றும் இராஜதந்திர வெற்றி என்று நோக்கப்படுகின்ற போதிலும், இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மிக முக்கியமான ஒரு அரசியல் சக்தியாக அவர்களை இந்தியா நோக்குவது எந்தளவுக்கு விவேகமானது, பொருத்தமானது என்ற கேள்வி பல மட்டங்களில் எழுப்பப்படுகிறது.

Thanabalasingam-e1660548844481.jpeg?resiவீரகத்தி தனபாலசிங்கம்
 

https://maatram.org/?p=11249

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.