Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கிருந்து உயிர் துறத்தல்: சேர, சோழ மன்னர்கள் உண்ணா நோன்பிருந்து உயிரை விட்டது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், மாயகிருஷ்ணன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழர் வரலாற்றில் வடக்கிருத்தல் அல்லது உண்ணா நோன்பிருந்து உயிர் துறத்தல் என்று அறியப்படும் ஒரு செயல்பாடு மன்னர்களிடையே இருந்துள்ளது.

வடக்கிருத்தல், நிசீதிகை போன்ற பெயர்களால் அறியப்படும் இதுகுறித்து இங்கு விரிவாகக் காண்போம்.

"வடக்கிருத்தல் என்பது அக்கால தமிழர்களின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் ஒன்று," என்று கூறிய விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ், "ஊருக்கு வடக்குப் பகுதியில் வட திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாமல் நோன்பிருந்து உயிர் துறப்பதே வடக்கிருத்தல் என்று இலக்கியங்கள் விவரிப்பதாக" கூறினார்.

முற்காலத் தமிழர்களில், போர்களின்போது முதுகிலே புண்பட்ட வீரர்கள், அதை அவமானமாகக் கருதினர். இதனால், "அந்தப் போர்க்களத்திலேயே வடக்கு திசை நோக்கியபடி உணவேதும் உண்ணாமல் பட்டினியிருந்து தமது உயிரைத் துறந்தனர்."

 
வடக்கிருந்து உயிர் துறத்தல்: சேர, சோழ மன்னர்கள் உண்ணா நோன்பிருந்து உயிரை விட்டது ஏன்?

அக்காலத் தமிழர்கள், "தனக்கு இழுக்கு நேர்ந்தாலோ, மானம் இழந்தாலோ, அதைத் தாங்கிக்கொள்ள இயலாத மனநிலை ஏற்படும்போது, வடக்கிருந்து உயிர் விட்டனர்," என்று விளக்கினார் பேராசிரியர் ரமேஷ்.

மேலும், பிரச்னை அல்லது துன்பத்தை எதிர்கொள்ள இயலாமல், வாழும் வழியிருந்தும் மனக்குறைபாடு ஏற்படும் நிலையிலும் உணவு மறுத்து உயிர் துறப்பது பெரும் பண்பாக அக்காலத்தில் பார்க்கப்பட்டதாகவும் அவர் விவரித்தார்.

மேலும் "வடக்கிருந்து உயிர் துறந்தோருக்கு நடுகல் இட்டு நினைவுச் சின்னமாக வழிபடுவதும் தமிழரின் மரபாகவே இருந்து வந்துள்ளது."

 

அரசன் சேரமான் வடக்கிருத்தல்

வடக்கிருந்து உயிர் துறத்தல்: சேர, சோழ மன்னர்கள் உண்ணா நோன்பிருந்து உயிரை விட்டது ஏன்?
படக்குறிப்பு,

பேராசிரியர் ரமேஷ்

சேரமான் பெருஞ்சேரலாதனுக்கும் சோழன் கரிகாற் பெருவளத்தானுக்கும் ’வெண்ணிப் பறந்தலை’ என்னும் இடத்தில் போர் நடைபெற்றது.

அதில் வளவன் செலுத்திய வேல் சேரமான் மார்பில்பட்டு முதுகின் புறத்தே ஊடுருவிச் சென்று புண்ணாகிப்போனது. "அக்காலப் போர் மரபின்படி முதுகில் புண்படுதல் என்பது புறமுதுகிட்டு ஓடுதல் என்னும் வீரக்குறைபாடாகும்," என்கிறார் ரமேஷ்.

"தமிழ் மக்கள் போர்க்களத்தில் மார்பில் புண்பட்டு இறப்பதை கௌரவமாகக் கருதினர். ஆனால் முதுகில் புண்படுதலை அவமானமாகக் கருதினர். எனவே, முதுகில் புண் ஏற்பட்டுவிட்டதை மானக் குறைபாடாக எண்ணிய சேரமான் பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து உயிர் நீத்தான். இதை புறநானூறு 65, 66ஆம் பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன," எனத் தெரிவித்தார்.

அதேபோல் கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரிக்கும் புலவர் கபிலருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. இந்த நிலையில் மன்னன் பாரி இறந்ததும் அவர் பெண்களைத் திருமணம் செய்து கொடுத்த பின்பு புலவர் கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்தார் என்று புறநானூற்று பாடல் தெரிவிப்பதாகவும் கூறினார் அவர்.

 

கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் வடக்கிருத்தல்

வடக்கிருந்து உயிர் துறத்தல்: சேர, சோழ மன்னர்கள் உண்ணா நோன்பிருந்து உயிரை விட்டது ஏன்?

அதேபோல் "உறையூரை ஆண்ட கோப்பெருஞ்சோழன் அரசுரிமைக்காக சினம் கொண்டு தன் மகன்கள் மீது கோபம் கொண்டார். அவர்கள் மேல் போர் செய்யவும் முயன்றார். அப்போது புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் புலவர் அறிவில்லாத மகன்களின் மேல் தந்தை போர் செய்வது தவறு என்று எடுத்துக் கூறி அதைத் தடுத்தார். பின்னர் தனது மகன்களின் செயலால் வருத்தப்பட்டு கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கத் தீர்மானிக்கிறார். அவ்வாறே அவன் வடக்கு திசையில் அமர்ந்து உண்ணாமல் இறந்து போகிறார்."

மேலும், சோழனுடைய நண்பர் பிசிராந்தையார் என்னும் புலவர் தன் நண்பர் கோப்பெருஞ்சோழன் உயிர் விடுவதைக் கண்டு மனம் வருந்தி அவரும் வடக்கிருந்து உயிர் விட்டதாகக் கூறுகிறார் பேராசிரியர் ரமேஷ். கொப்பெருஞ் சோழனுடைய மற்றொரு நண்பரான பொத்தியார் என்பவரும் சில ஆண்டுகளுக்குப் பிறகு மனம் வருந்தி வடக்கிருந்து உயிர்விட்டார் என்று புறநானூறு குறிப்பிடுகிறது.

சிறுபஞ்சமூலம் என்னும் உரைநூல் இதைக் கீழ் வருமாறு தெரிவிக்கிறது.

''வலி இழந்தார் மூத்தார் வடக்கு இருந்தார் நோயின், நலிபழிந்தார் நாட்டறை போய் நைந்தார்- மெலிவொழிய, இன்னவரால் எண்ணாராய் தந்த ஒரு துற்று, மன்னவராச் செய்யும் மதிப்பு"

இந்தப் பாடல் மூலம் வடக்கிருத்தல் பற்றித் தெளிவாக அறிய முடியும்.

 

பெண்களும் உண்ணா நோன்பு இருந்து உயிர் பிரிதல்

வடக்கிருந்து உயிர் துறத்தல்: சேர, சோழ மன்னர்கள் உண்ணா நோன்பிருந்து உயிரை விட்டது ஏன்?

திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மூன்று கல் தூண்களில் பெண்களும் வடக்கிருந்து உயிர்துறந்தது குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.

'ஸ்வஸ்தி ஸ்ரீ பாலுச...' எனத் தொடங்கும் கல்வெட்டில் ஒன்று பாலூர் உடையான் பெருங்காடன் என்பவரின் மகள் பொக்கி என்பவர் உண்ணாநோன்பு நோற்று இறந்துள்ளார் என்பதைக் குறிப்பிடுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவனூர் கிராமத்தில் நைனார் தெருவில் பரமசிவம் வீட்டுத் தோட்டத்தில் வேடன் கோவில் மேட்டில் உள்ள பலகைக் கற்களில் கி.பி. 10ஆம் நூற்றாண்டு எழுத்தமைதி (கல்வெட்டில் பொறிக்கப்படும் எழுத்தின் ஒரு வகை வடிவ அமைப்பு) கொண்ட கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. முதல் கல்வெட்டு குப்பை பிராமணி என்ற சமணர் 12 நாள் நோன்பு நோற்று மறைந்த பின்னர் அவர் நினைவாக நடப்பட்ட நீசிதிகை பற்றியது.

'ஸ்வஸ்தி ஸ்ரீ ஓம் க்ரீம் ரிம் க்ரீம் குப்பை பிராமணி..' என அந்தக் கல்வெட்டு தொடங்குகிறது. அதேபோல், திருக்கோவிலூர் வட்டம் வசந்த கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் நடப்பட்டுள்ள கல்வெட்டில் எச்சில் நங்கை என்பவர் நோன்பு நோற்று மறைந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கிருந்து உயிர் துறத்தல்: சேர, சோழ மன்னர்கள் உண்ணா நோன்பிருந்து உயிரை விட்டது ஏன்?

திருவண்ணாமலை மாவட்டம் கணியாம்பூண்டி கிராமத்தில் வீரபத்திர சாமி கோவிலில் கற்பலகையில் உள்ள கல்வெட்டில் ஆன்றாள் என்பவரின் மகள் நங்கையான பெற்றாள் என்பவர் நோன்பு நோற்று உயர் நீத்துள்ளார் என்பதைத் தெரிவிக்கின்றது. செஞ்சி வட்டம் பறையன் பட்டு கிராமத்தில் சுனை பாறை என்ற மலைப்பகுதி குகையில் சமணப் படுக்கையும் அதன் மேற்பகுதியில் வட்டெழுத்துக் கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளது.

"நமோத்து பாணாட்டு...." எனத் தொடங்கும் அந்தக் கல்வெட்டு பாண நாட்டைச் சேர்ந்த வச்சணந்தி என்கின்ற ஆசிரியரின் மாணவர் ஆராராதன் என்பவர் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த இடம் என்ற செய்தியைத் தெரிவிக்கின்றது.

"கோயம்புத்தூரில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் அமைந்துள்ள விஜயமங்கலத்தில் இருக்கும் சந்திரப்பிரப தீர்த்தங்கரர் ஆலயத்தின் முன் மண்டபத்தில் ஒரு தூணில் கீழ்ப்புறமாகக் கிரந்தத்திலும் தமிழிலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது.

அதில், சாமுண்ட ராஜனின் தங்கை புல்லப்பை என்ற பெயருடைய சமணப் பெண்மணி "நிசீதிகை' செய்து கொண்டதாகக் கூறுகிறது. சாமுண்டராஜன் கங்க அரசர்களிடம் அமைச்சராக இருந்தவர்.

இதில் நோன்பிருந்து உயிர் நீத்த சமணப் பெருமாட்டி புல்லப்பை என்பவரின் குவிந்த கரங்களுடன் தவநிலையில் அமர்ந்த கோலத்தில் இருக்கும் திருவுருவமும் காணப்படுகின்றன," என்று விவரித்தார் பேராசிரியர் ரமேஷ்.

 

நிசீதிகை - வடக்கிருத்தல் வேறுபாடு

வடக்கிருந்து உயிர் துறத்தல்: சேர, சோழ மன்னர்கள் உண்ணா நோன்பிருந்து உயிரை விட்டது ஏன்?

"நிசீதிகை' என்றால், சமண நெறியில் உண்ணா நோன்பால் உயிர்விடும் நெறி என்பதாகும். இதை "நிஷிதா' என்றும் அழைப்பர். தமிழகத்தில் கொள்கைக்காகவும் மானத்துக்காகவும் நாணப்பட்டு அரசர்களும் புலவர்களும் வடக்கிருத்தல் என்னும் கோட்பாட்டைக் கடைப்பிடித்து உயிர் துறந்தனர். சமண நெறியைக் கடைப்பிடிக்கும் துறவியரும் உண்ணா நோன்பிருந்து உயிர் துறப்பார்கள்.

இவை இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. சமணத் துறவியர் உயிர் துறந்த இடத்தில் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம் "நிசீதிகை' எனப்படும். உண்ணா நோன்பிருந்து உயிர் விடுதல் அனசனம்(வடக்கிருத்தல்) ஆகும்.

சல்லேகனை - இதுவும் உயிர் துறக்க சமண நெறியில் கடைப்பிடிக்கப்படும் ஒரு வகை நோன்பாகும். "தமிழர்களின் வடக்கிருத்தலுக்கும் சமணர்களின் சல்லேகனைக்கும் இருக்கும் ஒற்றுமைகளாகத் துயர் பொறுக்கும் துணிவையும், யாக்கைப் பற்றின்மையையும் அடிப்படைப் பண்புகளாகக் கூறலாம்," என்கிறார் பேராசிரியர் ரமேஷ்.

கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், பெருஞ்சேரலாதன், கபிலர், சேரமான் கணைக்கால் இரும்பொறை ஆகியோர் வடக்கிருந்து உயிர் துறந்தமையைச் சங்க நூல்களின் வாயிலாக அறிய முடிகிறது.

அதைத் தொடர்ந்து சல்லேகனை வடக்கிருத்தல் குறித்து திருச்சியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் பார்த்திபன் பிபிசி தமிழிடன் விவரித்தார்.

"வடக்கு நோக்கி விரதம் (உண்ணா நோன்பு) இருப்பதை உத்ரக மனம், மகாப் பிரத்தானம் என்று வரலாறு கூறுகிறது. அவமானம், போர்க்களத்தில் தோல்வி, நட்பு கருதி உயிர்நீத்தல், நோக்கம் நிறைவேறாமைக்குப் பொறுப்பேற்றல், கோரிக்கை நிறைவேற, கவனம் உண்டாக்க எனப் பல்வேறு காரணங்களுக்காக இந்த உண்ணா நோன்பிருந்து உயிர்விடும் வழக்கம் தமிழக மக்களிடையே இருந்துள்ளது.

சமண மதத்தின் முக்கியக் கொள்கைகளில் ஒன்று சல்லேகனை விரதம். உண்ணா நோன்பிருந்து இறக்கும் முறையே சல்லேகனம் எனப்படும்.

சல்லேகனை என்னும் சொல் ஆரம்பக் காலத்தில் ஆராதனை, நிசீதி என வழங்கப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் வரும்`வடக்கிருத்தல்' வழக்கமே சல்லேகனையாக வந்திருக்கக்கூடும்," என்றும் பார்த்திபன் தெரிவித்தார்.

 

தற்கொலை... சல்லேகனை...

வடக்கிருந்து உயிர் துறத்தல்: சேர, சோழ மன்னர்கள் உண்ணா நோன்பிருந்து உயிரை விட்டது ஏன்?

ஐங்குறுகாப்பியங்களில் ஒன்று நீலகேசி. அது, நீலகேசி என்னும் பெண், குண்டலகேசி என்னும் பௌத்த பெண்ணிடம் வாதிட்டு வெற்றி பெறுவதாய் அமைந்த ஒரு காப்பியம். அதில் முகமலர்ந்து விரும்பியேற்கும் சாவினை `தற்கொலை' என குண்டலகேசி கூறுகிறது.

அதை மறுத்து, உடம்பாகிய சிறையிலிருந்து உயிர் விடுதலையடைய இவ்விரதம் (சல்லேகனை) உதவுகிறதென நீலகேசி கூறுகிறது. இவ்விரதம் இருப்போர் பிறவா நிலையடைவோர் என நீலகேசி கூறுகிறது.

57 நாட்கள் உண்ணாமல் இருந்து உயிர் நீத்த நிசீதிகைக் கல்வெட்டுகள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவில் திருநாதர்குன்று என்னும் மலைக்குன்று உள்ளது. இக்குன்றின் மேற்குப் பகுதியில் காணப்படும் நிசீதிகைக் (உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவர்களின்) கல்வெட்டு ஒன்றில், `ஐம்பத் தேழன சனந் நோற்ற சந்திர நந்தி ஆ சிரிகரு நிசீதிகை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது சந்திரநந்தி என்னும் சமண ஆசிரியர் 57 நாட்கள் உண்ணா நோன்பிருந்து அங்கு உயிர்நீத்துள்ளார். மற்றொரு கல்வெட்டு இளையபத்ரர் என்பவர் 30 நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்ததைத் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டுகளின் காலம் கி.பி. 5-6ஆம் நூற்றாண்டு.

விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையில் இருந்து தேவிகாபுரம் செல்லும் சாலையில், இரண்டு குன்றுகள் காணப்படுகின்றன. அதில் இரண்டாவது குன்றின் உச்சியில் முருகர் கோவில் அமைந்துள்ளது. குன்றின்மேல் உள்ள முருகர் கோவிலைக் கடந்து குன்றின் உச்சியில் ஒரு பழமையான வட்டெழுத்து நிசீதிகை கல்வெட்டு காணப்படுகிறது.

''நமோத்து பாணாட்டு வசணந்தி சாரி...' எனத் தொடங்கும் இந்தக் கல்வெட்டில் ஆராராதன் என்பவர் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த நீசிதிகை (இடம்) என்று இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கி.பி. 6ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.

இதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தல், அல்லது வடக்கிருத்தல், சல்லேகனை தொடர்பான கல்வெட்டுகள் மற்றும் நடு கற்கள் காணப்படுவதாகக் கூறுகிறார் வரலாற்று ஆர்வலர் பார்த்திபன்.

https://www.bbc.com/tamil/articles/c1064vjzd0po

தியாக தீபங்கள் அன்னை பூபதி, திலீபன் ஆகியோரும் கீழ்வரும் காரணங்களில் ஒன்றிற்காகவே

அவமானம், போர்க்களத்தில் தோல்வி, நட்பு கருதி உயிர்நீத்தல், நோக்கம் நிறைவேறாமைக்குப் பொறுப்பேற்றல், கோரிக்கை நிறைவேற, கவனம் உண்டாக்க 
உண்ணா நோன்பிருந்து உயிர்விட்டனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.