Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அஸ்வினின் 100வது டெஸ்ட்: இந்திய மண்ணில் சாதித்தவர் வெளிநாடுகளில் சறுக்குவது ஏன்?

இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

39 நிமிடங்களுக்கு முன்னர்

“ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே எளிதல்ல. அதிலும் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடுவது என்பது எளிதானது அல்ல. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினாலே அது சிறப்புதான். அதிலும் 100 டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டால் அற்புதமான வீரர் என்றுதான் கூற வேண்டும்.”

இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்பட்டவரும், பயிற்சியாளருமான ராகுல் திராவிட், ரவிச்சந்திரன் அஸ்வினின் 100வது டெஸ்ட் போட்டி குறித்து இப்படி வெளிப்படையாகப் பேசினார். ராகுல் திராவிட் தனது வாழ்நாளில் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நூறு டெஸ்ட் போட்டிகள் விளையாடுவது என்பது சாதனையான செயல்தான். பேட்டராக இருந்தாலும் சரி, பந்துவீச்சாளராக இருந்தாலும் 100 போட்டிகளிலும் திறமையில் நிலைத்தன்மையை வெளிப்படுத்தினால்தான் தன் இருப்பை அணியில் வெளிப்படுத்த முடியும்.

தொடக்கத்தில் சிறப்பாகப் பந்துவீசிய அல்லது பேட் செய்த எத்தனையோ வீரர்கள் 50 டெஸ்ட் போட்டிகளைக்கூட கடக்க முடியாமல் ஓய்வை அறிவித்துச் சென்ற கதைகள் உண்டு. ஆனால், 100 டெஸ்ட் போட்டிகள் என்ற சாதனையை எட்டிப் பிடிக்க, முதல் போட்டியில் அறிமுகமாகும்போது இருந்த உற்சாகத்தை 100வது போட்டிவரை கடத்தி வந்தால்தான் இத்தகைய மைல்கல்லை அடைய முடியும்.

 

கடந்த 1968ஆம் ஆண்டு இங்கிலாந்து பேட்டர் கோலின் கோவ்ட்ரே இந்த மைல்கல்லை முதலில் எட்டி தொடங்கி வைத்தார். அதன்பின் இன்று உலகளவில் பல வீரர்கள் 100 டெஸ்ட் போட்டிகள் என்ற மைல்கல்லை கடந்துவிட்டனர். அந்த வரிசையில் தற்போது அஸ்வினும் இணைந்துவிட்டார்.

தரம்சாலாவில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். இந்தியாவில் இதுவரை 313 டெஸ்ட் வீரர்கள் வந்துள்ள நிலையில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 14வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.

இதுவரை அஸ்வின் 100 போட்டிகளில் விளையாடி(தரம்சலா டெஸ்ட் சேர்த்து) 511 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரியாக 93.21 , எகானமி ரேட் 2.79 , ஸ்ட்ரைக் ரேட் 51.3 என அஸ்வின் வைத்துள்ளார்.

 

உள்நாட்டில் சாதனை

இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அஸ்வின் இதுவரை வீழ்த்திய 511 விக்கெட்டுகளில் 358 விக்கெட்டுகள் உள்நாட்டில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் எடுக்கப்பட்டவை. இந்திய அணியைச் சேர்ந்த இதுவரை எந்த பந்துவீச்சாளரும் எட்ட முடியாத உயரத்தை அஸ்வின் எட்டியுள்ளார்.

அதாவது ஜாம்பவான் அனில் கும்ப்ளே உள்நாட்டில்(350) விக்கெட்டுகள், ஹர்பஜன் சிங்(265), கபில் தேவ்(219) விக்கெட்டுகள்தான் வீழ்த்தியுள்ளனர். ஆனால், அஸ்வின் 350 விக்கெட்டுகளையும் கடந்து பயணித்து வருகிறார்.

அஸ்வினின் பந்துவீச்சு ஸ்ட்ரைக் ரேட்டை எடுத்துக் கொண்டால் சேனா நாடுகளுக்கு எதிராக சுமாராகவும், ஆசிய நாடுகள், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சிறப்பாகவும் வைத்துள்ளார்.

சேனா(SENA) நாடுகளில் சறுக்கல்

வேகப்பந்துவீச்ச மைதானங்கள் அதிகம் இருக்கும் சேனா நாடுகளில் சுழற்பந்துவீச்சில் சாதிப்பது எளிதான காரியம் அல்ல. அங்கு அஸ்வின் தனது பந்துவீச்சுத் திறமையை வெளிப்படுத்தினாலும், சேனா நாடு அணிகளுக்கு எதிராக பெரிதாக விக்கெட் வீழ்த்தியதில்லை என்ற விமர்சனம் இருக்கிறது. சேனா நாடுகளின் மைதானங்களில் நடந்த போட்டிகளிலும் அஸ்வினின் 71 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி, சராசரி 39.4 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 83.7 ஆகவும் வைத்துள்ளார்.

அதுவே, கரீபியன் நாடுகளின் மைதானங்களில் அஸ்வின் சராசரி 19.3 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 41.4 ஆகவும் இருக்கிறது. இலங்கையில் அஸ்வினின் சராசரி 21.6 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 41.1 ஆகவும் இருக்கிறது. இந்தியாவில் அஸ்வினின் பந்துவீச்சு சராசரி 21.3 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 46.6 ஆகவும் இருக்கிறது.

வேகப்பந்துவீச்சு மைதானங்களாகப் பெரும்பாலும் அமைக்கப்பட்டிருக்கும் சேனா நாடுகளில் மட்டும் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 25 போட்டிகளில் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அங்கு அவர் ஒருமுறைகூட 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

 

இடதுகை பேட்டர்களுக்கு சிம்மசொப்பனம்

இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இடதுகை பேட்ஸ்மேன்களின் எதிரி என்று அஸ்வினை கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அவ்வப்போது கூறுவதுண்டு. அது உண்மைதான். அஸ்வின் எடுத்த விக்கெட்டுகளில் பாதிக்கு மேற்பட்ட விக்கெட்டுகள் சௌத்பா எனப்படும் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை.

எந்த பந்துவீச்சாளரும் சாதிக்காத வகையில், கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் 254(தரம்சலா டெஸ்ட் சேர்த்து) விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார். அதாவது அஸ்வின் இதுவரை வீழ்த்திய 511 டெஸ்ட் விக்கெட்டுகளில் 254 விக்கெட்டுகள் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை. இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் விக்கெட் வீழ்த்தும் சதவீதம் 49.7% ஆக இருக்கிறது.

சுழற்பந்துவீச்சு ஜாம்பவான்களான முத்தையா முரளிதரன், அனில் கும்ப்ளே, மறைந்த ஷேன் வார்ன் ஆகியோர்கூட இடதுகை பேட்டர்களுக்கு எதிராக 150 விக்கெட்டுகளை தாண்டவில்லை. ஆனால், அஸ்வின் இடதுகை பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாகவே கிரிக்கெட் உலகில் திகழ்ந்து வருகிறார். அஸ்வினுக்கு அடுத்தாற்போல் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நேதன் லேயான் இருக்கிறார்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 12 முறை அஸ்வின் பந்துவீச்சுக்கு தனது விக்கெட்டை இரையாக்கியுள்ளார். அடுத்தாற்போல் டேவிட் வார்னர்(11முறை), அலிஸ்டார் குக் (9 முறை), நியூசிலாந்து வீரர் டாம் லாதம் (8 முறை) என இடதுகை பேட்டர்கள் பெயர் பட்டியல் நீள்கிறது. சர்வதேச அளவிலான இடதுகை பேட்டர்கள் 15 பேரில் ஆன்டர்சன், நேதன் லேயான், மோர்க்கல் ஆகியோர் மட்டுமே டெய்லெண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தத்தில் அஸ்வின் பந்துவீச வருகிறார் என்றாலே இடதுகை பேட்டர்களுக்கு தொடை நடுங்கும் என்று கூறலாம்.

 

ஸ்ட்ரைக் ரேட்டில் சிறப்பு

இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெஸ்ட் கிரிக்கெட்டில் 197 பந்துவீச்சாளர்கள் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர். ஒரு பந்துவீச்சாளரின் ஸ்ட்ரைக் ரேட்தான், அவர் எத்தகைய திறமையான பந்துவீச்சாளர் என்பதை அறிய முடியும். பொதுவாக ஸ்ட்ரைக் ரேட்டை சுழற்பந்துவீச்சாளர்களைவிட வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வைத்திருப்பார்கள்.

ஆனால், சுழற்பந்துவீச்சாளர்களில் சிறப்பாக ஸ்ட்ரைக் ரேட்டை அஸ்வின் வைத்துள்ளார். முதல் 120 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர்களில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டை அஸ்வின் வைத்துள்ளார். இது முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன் ஸ்ட்ரைக் ரேட்டைவிட அதிகம்.

வெளிநாடுகளில் குறைந்தபட்சம் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் சிறப்பான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் சுழற் பந்துவீச்சாளர்களில் ஷேன் வார்ன் 54.7 ஸ்ட்ரைக் ரேட்டையும், வேகப்பந்துவீச்சாளர்களில் டேல் ஸ்டெயின் 45.5 ஸ்ட்ரைக் ரேட்டையும் சிறப்பாக வைத்துள்ளனர்.

அஸ்வின் இவர்களைவிட சளைத்தவர்கள் இல்லை என்றாலும், அவரின் ஸ்ட்ரைக் ரேட் 62.1 ஆக இருக்கிறது. அதாவது 10 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை அஸ்வின் வீழ்த்துகிறார்.

 

உள்நாட்டில் தவிர்க்க முடியாத வீரர்

இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

நூறு டெஸ்ட் போட்டியில் ஒரு பேட்டர் அல்லது பந்துவீச்சாளர் விளையாடுகிறார் என்றால், அவரின் ‘டிராக் ரெக்கார்டு’ மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். உள்நாட்டு டெஸ்ட் போட்டி அல்லது வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் என்றாலே தானாகவே ‘ப்ளேயிங் லெவனில்’ இடம் பெறும் வீரராக இருக்க வேண்டும், தவிர்க்க முடியாத வீரராக அமைய வேண்டும்.

அந்த வகையில் அஸ்வின் இந்திய அணிக்குள் அறிமுகமானதில் இருந்து டெஸ்ட் போட்டி என்றாலே தவிர்க்க முடியாத வீரராக இருந்து வருகிறார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அஸ்வின் அணிக்குள் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது அவர் பங்கேற்கும் போட்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மட்டும் அல்ல, எப்போதுமே இந்திய அணியின் வெற்றிகரமான ஆஃப் ஸ்பின்னராக வலம் வந்துள்ளார் என்பதுதான் நிதர்சனம்.

அதற்கு சேனா(SENA) நாடுகளான தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக அஸ்வின் எடுத்த விக்கெட்டுகளும், சராசரியும், ஸ்ட்ரைக் ரேட்டும் ஆசிய நாடுகளுக்கு எதிராக அஸ்வினின் முத்தாய்ப்பான விக்கெட்டுகளுமே சாட்சி.

ஆனால், இந்தியாவுக்கு வரும் சேனா நாடு அணிகளுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை எடுத்த அஸ்வினால், சேனா நாடுகளில் நடந்த போட்டிகளில் பெரிதாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை என்பதுதான் அவர் திறமையின் மீது தொக்கி நிற்கும் கேள்வி.

நுட்பமான பந்துவீச்சாளர் அஸ்வின்

இந்தியாவின் சிறந்த ஆஃப் ஸ்பின்னர்களான குலாம் அகமது முதல் எர்ரபள்ளி பிரசன்னா வரை, ஸ்ரீநிவாஸ் வெங்கட்ராகவன் முதல் ஹர்பஜன் சிங் வரை எடுத்துக்கொண்டால், கிரிக்கெட்டில் நுட்பமான பந்துவீச்சையும், கூக்ளி, கேரம் பால், டாஸ் செய்வது, நக்குல் பால் என ஒரு ஒவரில் 6 பந்துகளையும் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாக வீசக்கூடிய திறமை படைத்தவர், அஸ்வின் என்று கூற முடியும்.

இந்திய அணியில் அஸ்வின் கடந்த 2012ஆம் ஆண்டு அறிமுகமாகி ஏறக்குறைய 12 ஆண்டுகளாக தனித்து நிற்கக் காரணம், அவரின் பந்துவீச்சில் செய்யும் பரிசோதனை முயற்சி, தொடர்ந்து தன்னுடைய பந்துவீச்சைச் சிறப்பாக மாற்றச் செய்யும் முயற்சி, போராட்ட குணம், ஒவ்வொரு பந்திலும் விக்கெட் வீழ்த்த வேண்டும், பேட்டரை ஷாட் அடிக்கவிடாமல் செய்ய வேண்டும் என்ற நுட்பத்துடன் பந்துவீசும் உத்வேகம்தான் காரணம்.

இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளங்களில் மட்டும் அஸ்வினால் சிறப்பாகப் பந்துவீச முடிகிறது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சேனா நாடுகளின் ஆடுகளங்களில் பெரிதாக அஸ்வினால் சாதிக்க முடியவில்லை என்ற விமர்சனமும் தவிர்க்க முடியாதது. ஆனால், அஸ்வினுக்கு குருநாதராகக் கருதப்படும் அனில் கும்ப்ளே சேனா நாடுகளிலும் தனது பந்துவீச்சால் கோலோச்சியுள்ளார் என்பது அவரின் பந்துவீச்சு தரத்துக்குச் சான்று.

அஸ்வின் பந்துவீச்சு என்பது கடினமான, வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் மெல்போர்ன், வான்டரர்ஸ், சிட்னி, நியூசிலாந்து மைதானங்களுக்கு சரிவராது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், இந்த மைதானங்களில்கூட நேதன் லேயான், ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன், கும்ப்ளே போன்ற பந்துவீச்சாளர்கள் பந்தை பம்பரம்போல் சுழலவிட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்துக் காட்டியுள்ளனர் என்பதை மறந்துவிடக்கூடாது. அஸ்வின் திறமையான பந்துவீச்சாளர்தான், ஆனால் சிறந்த பந்துவீச்சாளரா என்பது கிரிக்கெட் விமர்சகர்கள் முன்வைக்கும் கேள்வி.

"தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரு தமிழர் 500 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்தது, 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது, உள்நாட்டில் 350 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியது போன்றவை என்றென்றும் பெருமைக்குரியது. ஆனால், இவை அனைத்தும் சிறந்த பந்துவீச்சாளராக அவரை உருவகப்படுத்திவிடுமா?" என்று விளையாட்டுத்துறையில் மூத்த பத்திரிகையாளரான ஆர். முத்துக்குமார் பிபிசி செய்திகளுக்கு அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

பெருமைக்குரிய விஷயம்

இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேலும் அவர் கூறுகையில் “தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த கிரிக்கெட் வீரரும் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை. சிவராமகிருஷ்ணன், வெங்கட்ராகவன், ஸ்ரீகாந்த் எனப் பல ஜாம்பவான்கள் தமிழகத்தில் இருந்து கிரிக்கெட் விளையாடினாலும் யாரும் 100 டெஸ்ட் விளையாடியதில்லை. இதை அஸ்வின் செய்திருப்பது மகத்தான சாதனை.

இந்திய ஆடுகளங்களில் தவிர்க்க முடியாத சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அஸ்வின் இல்லாமல் இந்திய அணி வெல்வது என்பதை கடந்த காலங்களில் விரல்விட்டு எண்ணி விடலாம். ஆனால், பந்தை டர்ன் செய்வதில் சிறந்த பந்துவீச்சாளர் என்று அஸ்வினை குறிப்பிட முடியாது," என்கிறார் அவர்.

முரளிதரன், நேதன் லேயன் போன்று பந்தை டர்ன் செய்யும் வீரர் அஸ்வின் என்று கூற முடியாது எனும் ஆர். முத்துக்குமார் "அரவுண்ட் தி விக்கெட்டில் அஸ்வின் பந்துவீசி வலது கை பேட்டர்கள் விக்கெட்டை வீழ்த்துவதில் சிறந்தவர்தான். ஆனால், அஸ்வினிடம் சிறந்த விஷயம் என்னவென்றால், கற்றுக்கொண்டே இருப்பார், புதிது புதிதாக நுட்பங்களைப் பயன்படுத்துவார். நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அஸ்வினால், முறையான ஆஃப் ஸ்பின் எடுக்கும் ஆடுகளங்களில் விக்கெட் எடுக்க முடியவில்லை," என்றார்.

மேலும் அவர், "ஆஃப் ஸ்பின்னராக இருந்தாலும் அந்த ஆஃப் ஸ்பின்னை எந்த அளவுக்கு வலிமையான ஆயுதமாக மாற்ற முடியும் என்பதில் இருக்கிறது. அனில் கும்ப்ளே மாதிரி துல்லியம், லைன் லென்த்தில் பந்தைச் சிதறவிடாமல் அஸ்வின் பந்துவீசுவது சிறப்பு. இதனால், அஸ்வின் பந்துவீச்சை பேட்டர் கவனமாகக் கையாள வேண்டும், சிறிது கவனக் குறைவாக விளையாடினால்கூட பேட்டர் விக்கெட்டை இழக்க நேரிடும். இதுதான் அஸ்வினின் சிறப்பு,” எனத் தெரிவித்தார்.

பந்தை டர்ன் செய்யாமலே சாதிக்கும் வீரராக அஸ்வின் இருப்பதுதான் அவருக்குரிய தனிச்சிறப்பு என்று முத்துக்குமார் தெரிவித்தார். அவர் அதுகுறித்துக் கூறுகையில், “இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் சிம்மசொப்பனம்தான் என்பதை மறுக்கவில்லை. இடதுகை பேட்டர்களை ஆட்டமிழக்க வைக்க லேசான டர்ன் பந்தில் இருந்தால் போதும், அதைத்தான் அஸ்வின் செய்கிறார். மற்ற வகையில் நல்ல டர்ன் செய்யக்கூடிய பந்துகளை வீசவில்லை,” எனத் தெரிவித்தார்.

 

சேனா நாடுகளில் சோதனை

இந்திய மைதானங்களில் மட்டுமே விக்கெட் வீழ்த்துபவரா அஸ்வின்? 100 டெஸ்ட் போட்டிகளில் கடந்த மைல்கல் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய ஆடுகளங்களின் உதவியுடன்தான் 500 விக்கெட்டுகளை அஸ்வினால் தொட முடிந்தது என்று முத்துக்குமார் விமர்சனம் வைத்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்திய ஆடுகளின் தன்மையால்தான் அஸ்வின் 350 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. அஸ்வின் சாதனைக்கு இந்திய ஆடுகளங்கள் உதவியுள்ளன. ஆனால், சேனா நாடுகளில் சென்று அஸ்வினால் பெரிதாக விக்கெட்டுகளை ஏன் வீழ்த்தமுடியவில்லை?" என்று அவர் கேள்வியெழுப்புகிறார்.

கும்ப்ளே முதலில் இந்திய ஆடுகளங்களில் மட்டும்தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆனால் காலப்போக்கில் தன்னை மேம்படுத்திக்கொண்டார். மெல்போர்னில் முதல் டெஸ்ட் முதல் நாளிலேயே கும்ப்ளே 5 விக்கெட்டை வீழ்த்தினார். கும்ப்ளே பந்துவீச்சைப் பார்த்து ஷேன் வார்னே பாராட்டினார்.

ஆனால், "அஸ்வின் பந்துவீச்சில் பந்து டர்ன் ஆகாமல் இருப்பதால்தான் அவரால் சேனா நாடுகளின் அணிகளுக்கு எதிராக சாதிக்க முடியவில்லை. அஸ்வின் தன்னுடைய ஆஃப் ஸ்பின்னை வளர்த்தெடுக்காமல், ஓவருக்கு 6 பந்துகளையும் பலவிதமாக வீசுவதில்தான் கவனம் செலுத்தினார். அஸ்வின் நல்ல வீரர். ஆனால், சிறந்த வீரர் என்று ஏற்க முடியாது,” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/crgv609x1l3o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Ashwin 100 : இதுவரை ஒரு தமிழக வீரர் கூட இந்த மைல்கல்லை எட்டியதில்லை

டெஸ்ட் கிரிக்கெட் மனவலிமை உடல் வலிமை இரண்டையும் அதிகமாகச் சோதனைக்கு உட்படுத்தும். அதனால்தான் ஆயிரக்கணக்கான வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான போதும் இதுவரை 76 வீரர்கள் மட்டுமே 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறார்கள். இந்த 76 வீரர்களில் 13 வீரர்கள்தான் இந்தியர்கள்.

இந்திய அணிக்காக ஆடியிருக்கும் 13 பேரிலுமே கூட அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா என மூன்று பேர்தான் முழுமையான பந்துவீச்சாளர்கள். கபில்தேவ்வையும் இதில் இணைத்துக் கொண்டால் மொத்தம் நான்கு பேர் என எடுத்துக் கொள்ளலாம். 100 டெஸ்ட் போட்டிகள் எனும் சாதனை மைல்கல்லின் முக்கியத்துவத்தை இந்த எண்களின் மூலமே புரிந்துகொள்ள முடியும்.

May be an image of 6 people and text

ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடிவிட்டார். மூன்று உலகக்கோப்பைகளில் ஆடிவிட்டார். உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்துவிட்டார். 100 டெஸ்ட் போட்டிகளை எட்டிவிட்டார். டோனி, கோலி, ரோஹித் என மூன்று கேப்டன்களின் கீழ் ஆடிவிட்டார். இந்திய அணியில் தற்போது இருக்கும் மூன்று, நான்கு சூப்பர் சீனியர்களுள் ஒருவர். ஆனால், இது எதுவுமே இந்திய அணியில் அவருக்கு நிலையான இடத்தை வாங்கிக் கொடுத்ததே இல்லை என்பதுதான் அஷ்வின் கரியரின் மகத்துவமும் சாபமும்.

அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் இவர்களின் காலகட்டத்திற்கு இந்திய ஸ்பின் பாரம்பரியத்தின் கண்ணி அறுபடாமல் பார்த்துக் கொண்டவர் அஷ்வின். முன்னவர்களைப் போலவே ஒரு தசாப்தத்தை தன் பெயரில் எழுதிக் கொண்டவர். ஆனாலும், ஒவ்வொரு கட்டத்திலுமே பெரும் போராட்டங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது. 2011 – 2015 வரை டோனி முழுமையாக இந்திய அணியின் கேப்டனாக இருந்த சமயத்தில் அஷ்வினின் செல்வாக்கு அதிகமாக இருந்தது. எந்தச் சூழலிலும் டோனியின் முழு நம்பிக்கையையும் பெற்ற வீரர்களாக சுரேஷ் ரெய்னாவும் அஷ்வினும் இருந்தனர். 2015க்குப் பிறகு டோனி மெது மெதுவாக கேப்டன் பதவிகளிலிருந்து விடைபெறுகிறார். முதலில் டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலி கேப்டன் ஆகிறார். அவர் தனக்கான அணியைக் கட்டமைக்க முயல்கிறார். அதில் முதல் தெரிவாக அஷ்வின் இல்லை. பிரதான வீரர் எனும் இடத்திலிருந்து தேவைப்பட்டால் அழைத்துக் கொள்ளலாம் எனும் இடத்திற்கு அவர் தள்ளப்படுகிறார்.

03-4-1024x683.jpg

white ball கிரிக்கெட்டில் முழுமையாக ஓரங்கட்டப்பட்டார். பிசிசிஐ அவரை முழுமையான டெஸ்ட் கிரிக்கெட்டராக மட்டுமே பார்த்தது. அதிலும் ஒரு க் வைக்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்தியாவில் ஆடப்படும் போட்டிகளில் மட்டுமே அஷ்வின் பிரதான தெரிவாக இருந்தார். குல்தீப் யாதவ்விற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. வெளிநாடுகளில் அவர்தான் முதல் தெரிவாக பார்க்கப்பட்டார்.

“ஓவர்சீஸ் போட்டிகளில் அணியில் ஒரே ஒரு ஸ்பின்னருடன் ஆடுகிறோம் எனில் அந்த ஒரு இடம் குல்தீப்புக்கு மட்டுமே!” என அப்போதே பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார்.

ஆனால், அதே ரவி சாஸ்திரி 2021ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியின் போது, “அஷ்வின் போன்ற வீரர்களை பிட்ச்சை மனதில் வைத்தெல்லாம் தேர்வு செய்ய முடியாது. அவர்கள் உலகின் எல்லா பிட்ச்களிலும் ஆடத் தகுதியானவர்கள்” என Taking Pitch Out of Equation தியரியை கூறினார். இந்தியா தோற்றபோதும் அந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அஷ்வின் மிகச்சிறப்பாக வீசியிருப்பார். அந்த இறுதிப்போட்டி முடிந்து ஒன்றரை மாத இடைவெளியில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி களமிறங்கியது. இந்த ஒன்றரை மாத இடைவெளியில் மற்ற வீரர்கள் கிரிக்கெட் ஆடவில்லை.

04-3-1024x683.jpg

ஆனால், அஷ்வின் கிட் பேக்கைத் தூக்கிக் கொண்டு கவுண்டி போட்டிகளுக்கு ஆடச் சென்றார். இந்த ஒன்றரை மாத இடைவெளியை வரவிருக்கும் இங்கிலாந்து தொடருக்கான பயிற்சி காலமாக பார்த்தார். சர்ரே அணிக்காக தனது மிகச்சிறந்த ஸ்பெல்லை வீசி ஒரு இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். முழு உத்வேகத்தோடும் தீர்க்கத்தோடும் இங்கிலாந்து தொடருக்கு வந்து சேர்ந்தார் அஷ்வின்.

ஆனால், நடந்தது என்ன தெரியுமா? அந்தத் தொடரின் ஒரு போட்டியில் கூட அஷ்வின் இல்லை. எல்லா போட்டிகளிலும் பெவிலியனில் ஒரு ஓரமாக அஷ்வின் அமர்ந்திருந்தார். அங்கு மட்டும்தான் அவருக்கு இடம் கொடுக்கப்பட்டது. 2023 டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியிலுமே ப்ளேயிங் லெவனில் அஷ்வினுக்கு இடம்கொடுக்கப்படவில்லை. இன்னமும் பதின்ம வயதின் ஆர்வத்தோடு பந்தைச் சுழற்றிக் கொண்டு எப்போதும் தயாராக நிற்கும் இந்தியாவின் சீனியர் பௌலரின் நிலை இதுதான். ஒவ்வொரு கட்டத்திலும் அவர் போராட வேண்டியிருந்தது. தனக்கான இடத்தையும் முக்கியத்துவத்தையும் அணியில் பெற்றுக்கொள்ள கடுமையான சோதனைகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அஷ்வின் இடத்தில் கொஞ்சம் மனவலிமை குன்றிய சலிப்புத்தட்டும் வீரர் வேறு யாராவது இருந்திருந்தால் எப்போதோ ஓய்வை அறிவித்துவிட்டு கமென்ட்ரி பக்கமாகச் சென்றிருப்பார்.

அஷ்வின் நெஞ்சுரம் மிக்கவர். போராடும் வலிமைமிக்கவர். அதை ஒவ்வொரு கட்டத்திலும் நிரூபித்துக் கொண்டே இருந்திருக்கிறார். white ball கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்து 50 ஓவர் உலகக்கோப்பையில் ஆடிவிட்டார். டி20 உலகக்கோப்பைக்கும் கம்பேக் கொடுத்துவிட்டார். டெஸ்ட்டிலும் அவரை இன்னும் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. 500 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லைக் கடந்து சாதனை மேல் சாதனை செய்து கொண்டிருக்கிறார்.

அம்மாவுக்கு உடம்பு சரியில்லை எனினும் ஒரே நாள் விடுப்பில் சென்றுவிட்டு அணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத மாதிரி மீண்டும் ஓடி வந்துவிடுகிறார். டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரின் ஏலத்தில் அமர்கிறார். இந்திய அணிக்காக ஆடிவிட்டு மறுநாளே சென்னையின் எதோ ஒரு கல்லூரி மைதானத்தில் டிவிஷன் போட்டிகளில் ஆடுகிறார். கிரிக்கெட்டின் மீதான அவரின் ஆத்மார்த்த காதல்தான் அவரை பல தடைகளையும் போராட்டங்களையும் தாண்டி ஓட வைக்கிறது.

நன்றி – விகடன்

https://thinakkural.lk/article/294793

Posted

 

குல்தீப் யாதவின் வேண்டுகோளை ஏற்க மறுத்த அஸ்வின்: வைரலாகும் வீடியோ

 

Capture-11-300x177.jpg

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி அஸ்வினுக்கு 100 ஆவது போட்டியாகும்.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்தை, இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோர் மிரட்டினர். இருவரின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 218 ரன்னில் சுருண்டது.

குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். மேலும் குறைந்த பந்துகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை ஆல்அவுட் ஆக்கியதும் இந்திய பந்து வீச்சாளர்கள் களத்தில் இருந்து வெளியே வந்தனர். பொதுவாக ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் பந்தை கையில் வைத்து ரசிகர்களை நோக்கி தூக்கி காண்பித்தவாற வெளியேறுவார்கள். அவரை சக வீரர்கள் கைத்தட்டி பாராட்டு பின் தொடர்ந்து வருவார்கள்.

 

அதன்படி குல்தீப் யாதவ் வெளியே வர வேண்டும். ஆனால் இது அஸ்வினுக்கு 100 ஆவது போட்டி என்பதால், நீங்கள் பந்தை தூக்கி காண்பித்து வெளியேறுங்கள் என அஸ்வினுக்கு அன்பு கட்டளையிட்டார். அத்துடன் பந்தை அஸ்வினிடம் தூக்கி போட்டார்.

அதற்கு அஸ்வின் இல்லை… இல்லை… நீதான் ஐந்து விக்கெட் எடுத்தது. நீ சென்றால்தான் நன்றாக இருக்கும் என குல்தீப் யாதவிடமே பந்தை மீண்டும் தூக்கிப் போட்டார். ஆனால் குல்தீப் யாதவ் நீங்கள்தான் செல்ல வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினா். அதற்கு அஸ்வின் உடன்படவில்லை. இறுதியாக குல்தீப் யாதவ் பந்துடன் வெளியேறினார். இருவரின் இந்த தன்னலமற்ற வேண்டுகோளை ரசிகர்கள் பாராட்டினர்.

https://thinakkural.lk/article/294963

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்லாந் அணியின் கொச் ம‌க்ம‌ன‌ல‌ நீக்க‌னும்.............இவ‌ர் இங்லாந் அணிக்கு கொச்சா வ‌ந்த‌ பிற‌க்கு இங்லாந் வீர‌ர்க‌ளுக்கு மொக்கையா ஊக்க‌ம் கொடுத்தார் 5நாள் விளையாட்டில் கூட‌ அதிர‌டியா விளையாட‌னும் என்று

 

ஜ‌ந்து நாள் விளையாட்டுக்கு நிதானுமும் பொறுமையும் மிக‌ முக்கிய‌ம்...............இங்லாந் இர‌ண்டாவ‌து இனிங்சில் 48 ஒவ‌ர் தான் அவையால் தாக்கு பிடிக்க‌ முடிந்த‌து.................இந்திய‌ அணி மூன்று சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுட‌ன் வ‌ரும் போது மூன்று வித‌ ப‌ந்தை ச‌ரிய‌ எதிர் கொள்ள‌னும் அஸ்வின்ட‌ ப‌ந்து வேர‌ மாதிரி சுழ‌லும் ஜ‌டேஜாவின் ப‌ந்து ம‌ற்ற‌ மாதிரி சுழ‌லும் கூல்டிப் ஜ‌டாவின் ப‌ந்து ம‌ற்ற‌ மாதிரி சுழ‌லும்

ரெஸ் விளையாட்டில் அதிக‌ ப‌ந்தை நெட்டி விட்டு தான் மெதுவாய் அடித்து ஆட‌னும்..............இங்லாந் வீர‌ர்க‌ளும் இந்த‌ தொட‌ரில் ஒழுங்காய் விளையாட‌ வில்லை............ப‌ல‌ ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் இருந்தும் அன்மைக் கால‌மாய் ச‌ர்வ‌தேச‌ போட்டி தொட்டு போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்து முடிந்த‌ உல‌க‌ கோப்பை வ‌ரை இங்லாந்தின் விளையாட்டு ப‌டு சுத‌ப்ப‌ல்.......................



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.