Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வானத்திலிருந்து யாழ்ப்பாணத்தைப் பார்த்த மாணவர்கள்! - நிலாந்தன்

 
airforce.jpg

சிறீலங்கா விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் “நட்பின் சிறகுகள்” என்ற தலைப்பில், 125 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை விமானப்படை முன்னெடுக்கின்றது. இதில் 73 பள்ளிக்கூடங்களை புனரமைக்கும் திட்டமும், பள்ளிக்கூடங்களுக்கு 73000 புத்தகங்களை வழங்குவதும் அடங்கும். ”நட்பின் சிறகுகளின்” ஒரு பகுதியாக இம்மாதம் ஆறாந் திகதியிலிருந்து பத்தாம் திகதி அதாவது இன்றுவரையிலும் யாழ் முற்ற வெளியில் – Air tattoo 2024 -எயார் டாட்டு 2024 என்ற பெயரில் ஒரு கல்வி மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி இடம்பெறுகிறது. இக்கண்காட்சியில் விமானப்படையினரின் செயற்பாடுகள் தொடர்பான தொழில்நுட்ப விளக்கங்களும் வான சாகசங்களும் இசை அணிநடைகளும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. அது ஒரு கல்வி மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி என்ற அடிப்படையில் பாடசாலைப் பிள்ளைகள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.

spacer.png

விமானங்களின் இயக்கங்கள் தொடர்பாக மாணவர்கள் விளக்கம் தருகிறார்கள். மேலும் மாணவர்களுக்கு சிறிது நேரம் ஹெலிகொப்டரில் பயணம் செய்ய வாய்ப்புத் தரப்பட்டது. மாணவர்களும் உட்பட பெற்றோரும்  ஏனையவர்களும் விருப்பத்தோடு உலங்கு வானூர்திகளில் ஏறிப் பயணம் செய்வதை காணக்கூடியதாக இருக்கிறது. வடக்கில் உள்ள வெவ்வேறு பாடசாலைகள் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகளுக்கு ஹெலிகொப்டரில் பறப்பதற்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அவர்கள் அதை விருப்பத்தோடு அனுபவித்தார்கள். வானத்திலிருந்து யாழ்ப்பாணத்தைப் பார்ப்பதில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கும். முதலாவது பறப்பு அனுபவம் அவர்களுக்குப் பரவசமூட்டக்கூடும். ஆனால் இதே வானத்தை அவர்களுடைய பெற்றோர்களும் பெற்றோர்களின் பெற்றோர்களும் பயத்தோடும் பிரார்த்தனைகளோடும் அண்ணாந்து பார்த்த ஒரு காலம் உண்டு என்பதை அவர்களுக்கு யார் சொல்லிக் கொடுப்பது?

15ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களுக்கு வானம் ஒரு மரணக் கூரையாக காணப்பட்டது. வானில் போர் விமானங்கள் தோன்றும்போது இந்த பிள்ளைகளின் பெற்றோரும் பெற்றோரின் பெற்றோரும் பதுங்கு குழிகளுக்குள் ஓடி ஒளித்தார்கள். அவ்வாறு பதுங்கு குழிகளுக்குள் புகலிடம் தேடிய சிலருக்கு பதுங்கு குழியே புதை குழியாகவும் மாறியதுண்டு. யுத்தம் வாழ்க்கையை விடவும் நிச்சயமானது போல தோன்றிய அக் காலகட்டத்தில் சிறீலங்காவின் வான் படை தமிழ் மக்கள் மீது குண்டுகளைப் போட்டது. வானத்தையும் காற்றையும் கிழித்துக்கொண்டு போர் விமானங்கள் தமிழ் மக்களின் தலைகளை நோக்கி குத்திப் பதிந்தன.

பயணிகள் போக்குவரத்து விமானம் ஆகிய “அவ்ரோ” ரக விமானங்களில் இருந்து தொடங்கி சியா மாசற்றி; அன்ரனோவ்; புக்காரா; கிபிர்; சூப்பர்சோனிக்; மிக்; சீனத் தயாரிப்பான Y12 முதலாய் பல்வேறு நாட்டு தயாரிப்புகளும் தமிழ் மக்களின் இரவுகளையும் பகல்களையும் கனவுகளையும் குண்டுகளால் பிளந்தன.

ஈழப் போரின் முதலாவது கட்டத்தின்போது பயன்படுத்தப்பட்ட அவ்ரோ என்று அழைக்கப்படும் பயணிகள் விமானம் பீப்பாய்க் குண்டுகள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்பட்ட குண்டுகளை வீசியது. சில சமயங்களில் பீப்பாய்களில் குண்டுகளுக்கு பதிலாக மனித மலம் நிரப்பப்பட்டிருந்தது. அப்படித்தான் சீனத் தயாரிப்பான Y12 விமானத்தை தமிழ் மக்கள் சகடை என்று அழைத்தார்கள். மெதுமெதுவாக மிக உயரத்தில் பறந்து போகும் அந்த விமானத்திலிருந்து எவ்வளவு பெரிய குண்டைப் போட முடியுமோ அவ்வளவு பெரிய குண்டு போடப்பட்டது. ஒரு குண்டு ஒரு பெரிய வீட்டை அப்படியே தரைமட்டமாக்கியது.

ஈழப் போரின் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிகளின் போது மிக நவீன குண்டு வீச்சு விமானங்கள் அரங்கினுள் பிரவேசித்தன. அவை காற்றையும் வானத்தையும் கிழித்துக்கொண்டு குத்தி பறந்து குண்டுகளை வீசின. சந்தைகள், சாவடிகள், பாடசாலைகள்,கோயில்கள்,தேவாலயங்கள் என்று பொதுசன இலக்குகளின் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். அல்லது உடல் உறுப்புகளை இழந்தார்கள். சொத்துக்களை இழந்தார்கள்.

குண்டு வீச்சு விமானங்கள் மட்டுமல்ல, கண்காணிப்பு விமானங்கள் அதாவது வேவு விமானங்களும் தமிழ் மக்களின் இரவுகளையும் பகல்களையும் வேவு பார்த்தன. நான்கு கட்ட ஈழப் போர்களின் போதும் வானில் வேவு விமானங்கள் நிரந்தரமாக ரீங்காரமிட்டபடி பறந்தன. குறிப்பாக இறுதிக்கட்டப் போரில் வானில் வேவு விமானங்கள் சூரியனைப் போல சந்திரனைப் போல நட்சத்திரங்களைப் போல நிரந்தரமாக காணப்பட்டன.

சோளகக் காற்று பலமாக வீசும் காலங்களில் யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளில் பட்டங்கள் பறக்க விடப்படும். பிரம்மாண்டமான பட்டங்களில் விண் பொருத்தப்படும். காற்றில் விண் அதிரும் பொழுது ஒரு வித ரீங்கார ஒலியை எழுப்பும். யுத்தம் இல்லாத காலங்களில் சோழகக் காற்று வீசும் இரவுகளில் பட்டங்களின் விண் ஒலி வானத்தில் நிரந்தரமாக உறைந்து நிற்கும். அதுபோலவே யுத்த காலங்களில் வேவு விமானங்களின் ரீங்கார ஒலி வானில் நிரந்தரமாக உறைந்து நின்றது. இறுதி கட்டப் போரின் இறுதி நாளுக்கு பின்னரும் அது கேட்டது.

spacer.png

சிறீலங்கா விமானப்படை தமிழ் மக்களை வீட்டுக்கும் பதுங்கு குழிக்கும் இடையே கிழிபட வைத்தது. போரில் குண்டுகளை, துண்டுப் பிரசுரங்களை வீசிய அதே வான் படை ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் நல்லூர் தேர்த் திருவிழாவில் பூக்களைத் தூவியது.

அந்தப் போரில் பயன்படுத்தப்பட்ட தொழிநுட்பம் இப்பொழுது முற்ற வெளியில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருக்கின்றது. ஒரு காலம் தமிழ் மக்களைக் கொல்லும் கருவிகளாக காணப்பட்டவை இப்பொழுது கண்காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டிருப்பது ஒரு மாற்றம்தான். காங்கேசந்துறை வீதியில் அமைந்திருக்கும் “ஃபொக்ஸ் ரிசோர்ட்ஸ்” என்று அழைக்கப்படுகின்ற விருந்தினர் விடுதியில் யுத்தகாலத்தில் வெட்டப்பட்ட பதுங்கு குழிகள் காட்சிக் கூடங்களாக மாற்றப்பட்டுள்ளன.

அந்தக் கட்டிடம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் யாழ்ப்பாணம் இருந்த காலகட்டத்தில் அவர்களுடைய பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமையகமாக இருந்தது. அந்தக் கட்டடத்துக்கு கீழே பாதுகாப்பான பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின் அக்கட்டிடத்தின் உரிமையாளர் அதை விருந்தினர் விடுதியாக மாற்றியுள்ளார். அங்கிருந்த பதுங்கு குழி ஞாபகச் சின்னமாக ஒரு “ஷோகேஸ் பீசாகப்” பேணப்படுகின்றது. அதன் சுவர்கள் செப்பனிடப்பட்டு, அழகாக்கப்பட்டு, அது ஒர் ஓவியக் கூடமாக, உல்லாசப் பயணிகளைக் கவரும் காட்சிப் பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது. அங்கே ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு காலம் துர்க்கனவாகக் காணப்பட்ட பதுங்குழி, இப்பொழுது ஃபொக்ஸ் விருந்தினர் விடுதியில் காட்சிப் பொருளாகப் பராமரிக்கப்படுகின்றது. அது ஒரு விருந்தினர் விடுதியின் விளம்பர உத்தி.

spacer.png

ஆனால் முற்றவெளியில் நடப்பது என்ன? ஒரு காலம் தமிழ் மக்களின் தலைகளின் மீது மலத்தைக் கொட்டிய கொலைக் கருவிகளும் கொலை வாகனங்களும் இப்பொழுது முற்ற வெளியில் காட்சிப் பொருட்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. ஒரு தொகுதி யுடியூப்பர்கள் அதை ஒளி பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த மாற்றம் மேலோட்டமானது என்பதுதான் இங்குள்ள பிரச்சினை. போர் ஒரு விளைவு. அது மூல காரணம் அல்ல. மூல காரணம் இன ஒடுக்குமுறையாகும். இன ஒடுக்குமுறை எங்கிருந்து வருகிறது? தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள மறக்கும் பொழுதுதான். தமிழ் மக்களின் தேசிய இருப்பை அழிக்க முற்படும்பொழுதுதான் இன முரண்பாடுகள் ஆயுத மோதலாக மாறின. எனவே போர் ஒரு விளைவு. இன ஒடுக்குமுறைதான் மூல காரணம். அது இப்பொழுதும் உண்டு. கண்காட்சியில் கலந்துகொள்ளும் படைப் பிரதானிகளின் பாதுகாப்புக்காக நடுப்பகல் வேளைகளில் பலாலி வீதி நீட்டுக்கும் பிரதான சந்திகளில் படையினர் நிறுத்தப்பட்டிருந்தார்கள். இக்கட்டுரை எழுதப்படுகையில், வெட்டுக்குநாறி மலையில் சிவராத்திரியை அனுஷ்டிப்பதற்கு தமிழ்மக்கள் போராட வேண்டியிருக்கிறது.

இன முரண்பாடுகளை நீக்கும் விதத்தில் இனப்பிரச்சினைக்கு இன்றுவரையிலும் தீர்வு வழங்கப்படவில்லை. இப்போதுள்ள ஜனாதிபதி அதை வடக்கின் பிரச்சினை என்று வர்ணிக்கிறார். அவருக்கு முன்பிருந்த கோட்டாபய அதனை பொருளாதாரப் பிரச்சினை என்று வர்ணித்தார். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த 15 ஆண்டுகளின் பின்னரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. அவ்வாறு தீர்வு காணப்படுவதற்குரிய அரசியல் திடசித்தம் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே போரின் மூல காரணங்கள் அப்படியே இருக்கத்தக்கதாக, யுத்தவெற்றியின் நினைவுச் சின்னங்களைப் பேணும் ஒரு படைத்தரப்பு, தனது போர்க்கருவிகளையும் போர் வாகனங்களையும் காட்சிப் பொருட்களாக கண்காட்சியில் வைப்பது என்பது, போர் தொடர்பான கொடுமையான நினைவுகளை மறக்கச் செய்யும் உள்நோக்கமுடையது. மிலன் குந்தேரா கூறுவதுபோல “அதிகாரத்துக்கு எதிரான மனிதர்களின் போராட்டம் எனப்படுவது மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டமே” மாணவர்களுக்கு மறதிக்கு எதிரான ஞாபக சக்தி இருக்க வேண்டும். அது கற்றலுக்கு அவசியம். அதைவிட அவசியம் தமது சொந்த வரலாற்றை மறந்துவிடாமலிருக்க.

ஈழத் தமிழர்கள் தாயகத்துக்கு வெளியே அதிக தொகையில் வாழும் நாடு கனடா. அங்கு இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அது தொடர்பான அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கோடு இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் ஒன்றை அந்த நாட்டின் அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கிறது. அதாவது அடுத்தடுத்த தலைமுறை தமிழ் பிள்ளைகளுக்கு இனப்படுகொலை தொடர்பாக அறிவூட்டப்பட ஓர் ஏற்பாடு. ஆனால் தாயகத்தில் இனப்படுகொலை புரிந்ததாக தமிழ் மக்கள் குற்றம் சாட்டும் ஒரு படைத்தரப்பின் விமானங்களை தமிழ் மாணவர்களே “எங்களுடைய விமானங்கள்” என்று கூறுகிறார்கள். ஆயின்,தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்படுகின்றார்களா?
 

https://www.nillanthan.com/6597/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கோலங்கள்

கோலங்கள்! [தேசப்பிரியன்]

விமானம் யாழ்ப்பாணம் பலாலியில் இருந்து கிளம்புகிறது. ஏக்கம் கவ்விய மனதோடு கவின் யன்னலோர இருக்கையில் இருந்து சொந்த தேசத்தின் அவலங்களை பார்த்தபடி பறக்கிறான். என்ன அழகான தேசம், என்ன நேர்த்தியான கட்டுமானங்கள், கட்டம் கட்டமாக வயல்களும் தோட்டங்களும், இன்று அவை இருந்த அடையாளங்கள் சிதைந்து சின்னாபின்னமாகி..காவலரண்களால் நிறைந்திருக்கின்றன. காணும் காட்சி கவலையைத் தந்தாலும் ஐரோப்பிய இயந்திர வாழ்க்கைக்குள் செயற்கைச் சூழலுக்குள் கடந்த பதினைந்து ஆண்டுகளாக சுழன்றவனுக்கு சொந்த தேசத்தின் அலங்கோலம் கூட ரசிக்கக் கூடியதாவே இருந்தது.

அன்று ஒரு நாள், அதிகாலை நேரம், சன்னங்கள் வீட்டு யன்னல்களைப் பதம்பார்க்கின்றன. நாய்கள் விடாமல் தொடர்ந்து குரைக்கின்றன. "பூட்ஸ்" சத்தங்கள் வீட்டைச் சுற்றிவளைக்கின்றன. சிறிது நேரம் கழித்து பூட்டப்பட்டிருந்த வீட்டுக்கதவு தட்டப்படுகிறது. "சலோ சலோ" என்று ஹிந்தியில் சொல்லி சிலர் கத்துகிறார்கள். "அம்மா இந்தியன் ஆமி வந்திருக்கிறான் என்ன செய்யுறது" கவின் சிறுவனாக பயத்தால் குரல் நடுங்கியடி, தாயை அணைத்துக் கொண்டு கேட்கிறான். " பொறு..பயப்பிடாத.. அப்பா போய் என்னென்று பார்ப்பார்.." அம்மா மகனைத் தேற்றியபடி. கணவனைப் பார்த்து "என்னங்க தனியப் போகாதேங்கோ நாங்களும் வாறம்". தகப்பன் முன்னே செல்ல தாயும் கவினும் பின்னே நிற்க, கதவு திறக்கப்பட்டதும் ஹிந்தியில் ஏதோ கத்தியபடி இந்தியன் ஆமி வீட்டுக்குள் நுழைந்து நாலு பக்கமும் சூழ்ந்து கொள்கிறது. அவர்களில் ஒருவன் சென்னைத்தமிழில் " உங்க வீட்டுக்க எல்ரிரிஈ ஆக்கள் பதுங்கி இருக்கிறதா..? சோதனை பண்ணனும்". அவன் சொல்லி முடிப்பதற்குள் வந்த மற்றையவர்கள் வீடு முழுவதும் தட்டிக்கொட்டி சோதனை செய்யும் சத்தம் கேட்கிறது.

தொடங்கிய சோதனை முடிவதற்குள் மீண்டும் அந்த ஆமிக்காரன் தமிழில் " உங்க வீட்டில இருந்துதான் எல்ரிரிஈ சுட்டிருக்கு.. விசாரணைக்கு ஒருவர் வரனும்" அதைக்கேட்ட கவினின் அப்பாவும் அம்மாவும் செய்வதறியாது திகைத்துப் போயினர். " என்ர அவரை தனிய விட ஏலாது நானும் பிள்ளையும் கூட வாறம்" என்று கவினின் அம்மா காட்டமாகச் சொல்ல " எல்லாரும் நட, ஜீப்பில ஏறு" என்று உத்தரவு வருகிறது. நடந்த சம்பவம் தொடர்பாக எதுவும் அறியாத அவர்கள் மூவரும் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு கண்கள் கட்டப்பட்டு நீண்ட பயணத்தின் பின் முகாம் ஒன்றில் இறப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். விசாரணையின் பின் தாய் வேறாகவும் தகப்பனும் சிறுவனான கவினும் சேர்த்து வேறாகவும் பிரிக்கப்பட்டு அடைக்கப்படுகின்றனர். பல மணி நேரம் விசாரணை தொடர்வதாக சொன்னாலும் இறுதியில் கவின் மட்டும் வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்து வரப்படுகிறான். பள்ளிச் சிறுவன் என்று காரணம் காட்டி அவனை வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.

அந்த நாள் வரை தாயையும் தந்தையும் பிரிந்தறியாத கவின் அன்று அவர்களின் பிரிவால் பெரும் துன்பப்பட்டான். பதட்டம் பயம் ஒரு புறம் பெற்றோறைப் பிரிந்த கவலை மறுபுறம் வாட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவனின் துன்பத்தைப் பாராது விடுப்பு கேட்பதிலேயே அதிகம் அக்கறை காட்டினர். அதுவும் கூட அவனுக்கு மிக வேதனை அளித்தது. பிறர் உதவிகள் ஏதும் இல்லாது தனிமைக்குள் தனித்துவிட்ட சின்னவனான கவின் வீட்டில் அழுதபடி கண்ணீரோடு காலம் தள்ளத்தொடங்கினான். அதுவே தொடர்கதையுமானது. இப்படியே வந்த நாட்கள் சோகமாக கடந்தனவே தவிர தாயும் தகப்பனும் விடுவிக்கப்படுவதாக இல்லை. பின்பு ஒரு நாள் தாயும் தகப்பனும் காங்கேசன்துறை இந்திய இராணுவ வதை முகாமுக்கு மாற்றப்பட்டு அங்கு நீண்ட நாள் காவலில் அடைக்கப்பட்டிருப்பதாக உறவினர்கள் மூலம் அறிந்து கொண்டான். நீண்ட நாள் பெற்றோரின் பிரிவு, அது தந்த விரக்தி, நீதி என்பதே கிட்டாது எனும் போது எழுத்த ஆதங்கம், மனச்சோர்வு இவை தந்த பாதிப்புக்களால் வாழ்கையில் வெறுமைக்குள் சென்ற கவின் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமலே வீட்டை விட்டு வெளியேறி இயக்கத்தோடு இணைந்து செயற்படத் தொடங்கினான். சில காலம் இயக்கத்தோடு செயற்பட்ட பின் அவன் ஐரோப்பாவுக்கு நெருங்கிய உறவினர்களால் அழைக்கப்பட்டுக்கொண்டான்.

ஐரோப்பிய மண்ணில் பல வித்தியாசங்களை சந்தித்த போதும் வசதிகள் வாய்ப்புக்கள் இருந்த போதும் அவனால் மனதளவில் அவற்றோடு ஒன்றித்து அவற்றை திருப்தியோடு அனுபவிக்க முடியவில்லை. அவற்றோடு ஒன்றித்து தன்னை வித்தியாசமானவனாக காட்டி போலியாக வாழவும் முடியவில்லை. பெற்றோரின் பிரிவும் அவர்களுக்கு என்ன நேருமோ என்ற ஏக்கமுமே அவனுக்குள் எப்போதும் குடிகொண்டிருக்கும். வீட்டு நினைவுகளால் அவன் அடிக்கடி ஆளப்படுவான். சொந்த மண்ணில் கண்ட அனுபவங்களே அவனை அந்நிய மண்ணிலும் கொள்கைப்பற்றோடு ஒரு தெளிவான வளமான இலட்சியத்தோடு பற்றுறுதியோடு வாழ வழி சொல்லிக்கொண்டிருந்தது. ஐரோப்பாவிலும் அவன் தனிமையையே விரும்பினான். தானும் தன் படிப்பும் வேலையும் அதுவே அவனுக்கு வாழ்வாகிப் போனது. மற்றைய ஊர் ஆட்கள் போல அவனால் சொந்த மண்ணின் அவலங்களை மறந்து சொந்த வாழ்வில் சந்தித்த துயரங்களை மறந்து போலிப் போர்வைக்குள் புகுந்து இயல்பான அடையாளங்கள் தொலைத்து ஐரோப்பியனாக தன்னை அடையாளம் காட்டி போலித்தனத்தனமாக வாழவும் அவனால் முடியவில்லை. அதற்காக அவன் அப்படி வாழும் மற்றவர்களைக் குறை கண்டதும் இல்லை. அவரவர் தங்கள் மனத்துக்குப் பிடித்தது போல வாழ்கிறார்கள்.அது அவரவர் சுதந்திரம் என்றுணர்ந்தும் கொண்டான்.

விமானம் இரத்மனால விமான தளத்தை நெருங்குகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய இராணுவ வதை முகாமுக்குள் விட்டுவிட்டு வந்த பெற்றோரைக் கண்டு, கொஞ்சி மகிழ்ந்த திருப்தியும், சொந்த மண் பெரும் அவலத்தைக் கண்டிருந்தாலும் இன்னும் அழியாது வைத்திருக்கும் சில அழகுகளை ரசித்த திருப்தியும் மனதிற்கு ஒரு சின்ன ஆறுதலை தந்தாலும், வானூர்தியில் இருந்து அவன் அவதானித்த தாய் மண்ணின் கோலத்தையும் சிங்கள மண்ணின் கோலத்தையும் ஒப்பிட்ட பார்த்த போதுதான் தன் தாய் மண்ணின் ஏழ்மையையும் அவள் இன்னும் ஓரவஞ்சனையை சந்தித்துக் கொண்டிருப்பதையும் தெளிவாக உணரமுடிந்தது. மனதில் அதை படமாக்கிப் பதிந்தும் கொண்டான். ஐரோப்பாவிலும் சரி சிங்கள மண்ணிலும் சரி கடனோ சொந்தமோ வசதிகள் என்று வாழ்ந்தாலும் அந்நியத்தனம் என்பது மனதுக்குள் தேடாமல் தேடி வரும் ஒன்று. அதை சொந்த மண்ணில் அவன் உணரவே வாய்ப்பிருக்கவில்லை. வசதிகளால் ஏழ்மை என்றாலும் சொந்த மண் மனதுக்கு தரும் திருப்தியால் என்றும் நிறைவானதுவே." சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல் ஆகுமா"...என்ற கவிவரிகளின் யதார்த்தத்தை அனுபவம் தந்த உணர்வுகளால் உள்வாங்கியபடி கவின் கொழும்பு இரத்மனால விமான தளம் விட்டு வெளியே நடக்கிறான்.

https://eluthu.com/kavithai/267955.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.