Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

27.02.2024, அழைப்பு மணி அடித்ததுகதவைத் திறந்த கிளவ்டியாவுக்கு (65) ஆச்சரியமாக இருந்தது. சிறப்பு அதிரடிப்படையினர் ஆயுதங்களுடன் நின்றனர். அதிர்ந்து போன அவளுக்கு இமைகளை மூடித் திறக்கக் கூட அவகாசம் கிடைக்கவில்லை. அவளது கைகளில் விலங்கை மாட்டிவிட்டார்கள்.

கிளவ்டியா பெர்னாடி  இத்தாலி நாட்டைச் சேர்ந்தவள். கடந்த இருபது வருடங்களாக யேர்மனியில்தான் வாழ்கிறாள். கிழக்கு - மேற்கு யேர்மனியைப் பிரித்திருந்த சுவர் உடைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகாமையில், 1962 இல் எந்த இடத்தில் சுரங்கம் அமைத்து கிழக்கு யேர்மனியில் இருந்து மேற்கு யேர்மனிக்கு தப்பிக்க முயன்றார்களோ அதற்கு அருகாமையில்  உள்ள செபஸ்ரியான் வீதியில் இருக்கும் குடியிருப்பில் ஐந்தாவது மாடிதான் அவளது இருப்பிடம். அவளுக்குத் துணையாக இருந்தது அவளதுபெரிய வெள்ளை நிறமானமலைக்காஎன்ற நாய் மட்டுமே!

IMG-5961.webp

கிளவ்டியா, எல்லோருடனும் மிக அன்பாகப் பழகுவாள். புத்தக வாசிப்புகளில் கலந்து கொள்வாள். அவள்  நடன வகுப்பும் நடத்திக் கொண்டிருந்தாள். சிறார்களுக்கு படிப்பும் சொல்லித் தந்தாள். யேர்மனியில் மட்டுமல்ல பிறேஸிலில் நடைபெறும் கார்னிவெல், களியாட்ட விழாக்களில் எல்லாம் ஆர்வத்துடன் பங்கேற்பாள். தான் பங்குபற்றும் நிகழ்வுகளின் படங்களை மறக்காமல் முகநூலிலும் பதிந்து நண்பர்கள் தெரிந்தவர்களுடன் மகிழ்ந்திருப்பாள்.

“எதற்காக என் கையில் விலங்கு மாட்டியிருக்கிறீங்கள்?”

“உங்களைக் கைது செய்யிறதுக்கு மட்டுமல்ல, உங்களின்ரை வீட்டைச் சோதனை செய்யிறதுக்கும் எங்களுக்கு அரச சட்டத்தரணி அனுமதி தந்திருக்கிறார்

கிளவ்டியாவின் புருவம் மேல் ஏறி கீழ் இறங்கியது. “நான் நினைக்கிறன், நீங்கள் விலாசம் மாறி வந்திருக்கிறீங்கள் எண்டு

“இல்லையே. செபஸ்ரியான் வீதி, இலக்கம் 73, ஐந்தாம் மாடி, கிளவ்டியா பெர்னாடி எல்லாமே சரியாகத்தானே இருக்கிறது

கிளவ்டியாவை, பொலீஸ் வாகனத்தில் ஏற்றும் போது, அவளது கையில் விலங்கு மாட்டிய பொலீஸ் அதிகாரி அவளிடம் கேட்டார், “ உங்களுக்கு டேனிலா கிளெட்டைத் தெரியுமோ? முப்பது வருடங்களாக அவரைத் தேடிக் கொண்டிருக்கிறோம்”  என்று.

 

டதுசாரித் தீவிரக் கொள்கையைக் கொண்ட செம்படை அமைப்பு (Red Army Faction) யேர்மனிய அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்திருக்கிறது. மூன்று தசாப்தங்களாக,  கொலைகள், கடத்தல்கள், கொள்ளைகள் என செம்படையின் செயற்பாடுகள் தொடர்ந்திருக்கின்றன. அதிலும், குறிப்பாக 1977இன் பிற்பகுதியில் அவர்களது செயற்பாடுகள் மிகவும் மோசமாக இருந்திருக்கின்றன. அந்தக் காலத்தை யேர்மனியின் 'இலையுதிர் காலம்' என்று யேர்மனியில் அடையாளப் படுத்தியிருக்கிறார்கள்.

IMG-6014.png

இந்தச் செம்படை அமைப்பில்தான் டேனிலா கிளெட் இருந்தாள். அவளது தாயார் ஒரு பல் வைத்தியர். போதுமான வருமானம். நிறைந்த வாழ்க்கை. டேனிலா கேட்பவை எல்லாம் வீட்டில் கிடைத்தன. ஆனாலும் அவள் விரும்பியது ஒன்று அவளுக்குக் கிடைக்கவில்லை - அது எல்லோருக்குமானசம உரிமை’. அதற்காகத்தான் படிப்பு, குடும்பம், ஆடம்பரமான வாழ்க்கை எல்லாவற்றையும் விட்டு விட்டு அவள் தன்னை செம்படையில் இணைத்துக் கொண்டாள்.

20 ஏப்ரல் 1998 அன்று, ஜெர்மனிய மொழியில் தட்டச்சு செய்யப்பட்ட எட்டுப் பக்கங்கள் அடங்கிய செய்தி ஒன்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தொலைநகல் மூலம் வந்திருந்தது. அதில் செம்படை கலைக்கப்பட்டுவிட்டதாக RAF இன் இலச்சினையுடன் கையொப்பமும் இடப்பட்டிருந்தது. அதன் பிறகு யேர்மனி, தனது இளவேனிற் காலத்தை அனுபவிக்க ஆரம்பித்தது.

ஜூலை 30, 1999இல் ஒரு கோடை காலத்தில் செம்படையின் சில நடவடிக்கைகள், அவர்கள் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறார்கள் என்று அடையாளம் காட்டினஅந்த வருடத்தில், டியூஸ்பேர்க் நகரத்தில் நடந்த ஒரு கொள்ளையில் செம்படை உறுப்பினர்களான, எர்ன்ஸ்ட்வோல்கர் ஸ்டாப், புர்ஹாட் ஹார்வெக், மற்றும் டேனிலா கிளெட், ஆகிய மூன்று பேரும் அந்தக் கொள்ளையில் ஈடுபட்டதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பணப் பரிமாற்றம் செய்யும் வாகனத்தில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணம் கொள்ளை இடப்பட்டதாக பொலீஸ் அறிக்கை வெளிவந்தது. யேர்மனியப் பொலீஸாரால் கொள்ளையிடப்பட்ட பணத்தை மீட்கவும் முடியவில்லை, அந்த மூன்று பேர்களையும் கண்டுபிடிக்கவும்  முடியவில்லை. அந்தக் கொள்ளைக்குப் பிறகு, நீண்ட காலமாக எந்தவிதமான சம்பவங்களிலும் RAF அமைப்பின் உறுப்பினர்களாக இருந்த எவரும் எந்தச் செயலிலும் ஈடுபட்டதாகத்  தகவல்களும் வெளிவரவில்லை.

2016, மே மாதம்  25ந்திகதி, மீண்டும் ஒரு பணப் பரிமாற்றம் செய்யும் வாகனத்தைத் தாக்கி 400,000 யூரோக்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததுதலைமறைவாக வாழும் செம்படை உறுப்பினர்களுக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் இந்த முறையிலான கொள்ளைகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பது தெளிவானது.

இந்தக் கொள்ளைகளை நிறுத்துவதற்காக, எர்ன்ஸ்ட்வோல்கர் ஸ்டாப், புர்ஹாட் ஹார்வெக், மற்றும் டேனிலா கிளெட் ஆகிய மூவரைப் பற்றிய புகைப்படங்களுடன் அவர்கள் பற்றிய விபரங்களையும் வெளியிட்டு தகவல் தருவோருக்கு 150,000 யூரோக்கள் தருவதாக யேர்மனியப் பொலீஸ் திணைக்களம் அறிவித்ததுபலன் கிடைக்கவில்லை. ஆனால் கொள்ளைகள் தொடர்ந்து இடம்பெறவில்லை என்பது ஆறுதலாக இருந்தது.

PimEyes,  இரண்டு போலந்து நாட்டு  அறிவியல் பட்டதாரிகளால், 2017 இல்  வடிவமைக்கப்பட்ட ஒரு கணினி மென்பொருள். PimEyes மென்பொருளில் ஒரு  புகைப்படத்தைக் கொடுத்தால், அது எவ்வளவு பழமையானதாக இருந்தாலும் கூடசில விநாடிகளிலே  அந்தப் படத்தில் உள்ளவரின், கண்ணின் குழிகள், கன்னத்தின் எலும்புகளின் உயரம், வாயின் பக்கங்கள் போன்றவற்றை அளவிட்டு அவரையோ, அல்லது அவரை மிக ஒத்த புகைப்படங்களையோ வெளிக் கொணர்ந்து விடும். இன்று அநேகமானவர்கள் தங்கள் படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதால், PimEyes மென்பொருள் இலகுவாக செயற்பட அது வாய்ப்பாக அமைகிறது. தங்களது ஆபாசப் படங்களையும், தேவையில்லாத சில புகைப்படங்களையும் இணையத்தில் இருந்து அகற்றுவதற்காக இந்த மென்பொருளைப் பலர் பயன்படுத்துகிறார்கள்.

IMG-6013.jpg

மூன்று மாதங்களுக்கு முன்னர்ஊடகவியாலாளரான மைக்கேல் கோல்போர்ன், தற்செயலாக தேடப்படுபவர் பட்டியலில் இருந்த டேனிலா கிளெட்டின் படத்தைக் கண்டு, PimEyes மென்பொருளில் அதைத் தரவிட, அது முகநூலில் இருந்த டேனிலா கிளெட்டின் பல புகைப்படங்களை வெளிக் கொணர்ந்தது. ஆனால் அவை இத்தாலி நாட்டைச் சேர்ந்த கிளவ்டியா பெர்னாடியின் புகைப்படங்களாக இருந்தன

பொந்துக்குள் பதுங்கியிருந்த பாம்பு ஒன்று, வெளியே வந்து, தான் எடுத்த படத்தை முகநூலில் போட்டு ஆடப் போய் மாட்டிக் கொண்டது பதுங்கி வாழ்வார்கள் என்று பொலிஸார் நிலத்தடியில் தேடிக் கொண்டிருக்க அவர்கள் வெளி உலகில் சர்வசாதாரணமாக வாழ்ந்திருக்கிறார்கள்.

கிளவ்டியா பெர்னாடி, “ எதற்காக என் கையில் விலங்கு மாட்டியிருக்கிறீங்கள் ?” என்று கேட்டதற்கு பொலீஸார் பதில் சொல்லாமல் இருந்ததற்கு காரணம் இப்பொழுது புரிந்திருக்கும்.

கிளவ்டியா பெர்னாடி வீட்டில் இருந்து கைப்பற்றப் பொருட்களின் பட்டியல், துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள், கைக்குண்டுகள், பெருமளவு பணம், 1200 கிராம் தங்கம் என  நீண்டு கொண்டிருக்கிறது.

 நாட்டை, பெயரை மற்றினாலும் கைரேகையை மாற்ற ஒருவரால் முடியாதுதானே. பெரியளவில் விளம்பரப் படுத்தப்பட்டு யேர்மனி முழுதும் தேடப்பட்ட ஒருவர், யேர்மனியின் தலை நகரமான பேர்லினில் அதுவும் பலர் வந்து பார்த்துப் போகும் பிரபலமான இடத்தில் மிகச் சாதாரணமாக இருபது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து கொண்டிருந்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சாதாரணமாக யேர்மனியில், 65 வயதில் ஓய்வூதியம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கிளவ்டியா பெர்னாடி என்கின்ற டேனிலா கிளெட்டின், 65 வயதில் சிறைக்குப் போகிறார்.

பொலீஸ் திணைக்களம் அறிவித்ததன்படி ஊடகவியாலாளரான மைக்கேல் கோல்போர்னுக்கு 150,000 யூரோக்கள் கிடைக்கத்தானே வேண்டும்.

'எர்ன்ஸ்ட்வோல்கர் ஸ்டாப், புர்ஹாட் ஹார்வெக் இருவரும் பேர்லினில்தான் இருக்கிறார்கள். அவர்களைத் தேடுகிறோம். விரைவில் கைது செய்துவிடுவோம்' என்று ஒவ்வொரு நாளும் காலையில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

 

 

  • Like 9
  • கருத்துக்கள உறவுகள்
Posted

150,000 யூரோக்கள் கிடைத்ததா .........முதலில் அதைச் சொல்லுங்கள்........!   😂

மற்ற இருவரையும் இன்னும் இருபது வருடங்களுக்குப் பிடித்தாலும் பரவாயில்லை........!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, suvy said:

150,000 யூரோக்கள் கிடைத்ததா .........முதலில் அதைச் சொல்லுங்கள்

கிடைத்திருக்கும். பொதுவெளியில் வந்து அவர் சொல்லப் போவதில்லை.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.