Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலத்தடி நீரை அதிகப்படுத்தும் முறை மற்றும் நுட்பங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிராமப்புறங்களில் நிலத்தடி நீர்வளத்தை உயர்த்துதல்

கிராமப்புறங்களில், நீர்பிடி முகடு அமைப்பின் கீழ் மழைநீர் அறுவடை செய்யப்படுகிறது. நீர்பரவும் பரப்பு அதிகம் இருப்பதால், பெய்யும் மழையை நிலத்தின் மேற்பரப்பில் ஊடுருவச் செய்து, சேமிக்கும் வழிமுறையே கிராமங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் மூலம், சேமிக்கப்படும் நீரின் அளவும் அதிகமாகும். ஓடைகள், ஆறுகள், நிலச்சரிவுகள் போன்றவை மூலம் இழக்கப்படும் வழிந்தோடும் நீரை சேமிக்க கீழ்கண்ட நுட்பங்களை கடைப்பிடிக்கலாம்.

கல்லி ப்ளக்

  • உள்ளூரில் கிடைக்கும் கற்கள், களிமண், புதர்கள் ஆகியவை கொண்டு, மலைப்பாங்கான இடங்களில் ஓடும் மழைநீரை எடுத்துச் செல்லும் சிறிய ஓடைகள்,  நீரோட்டம் போன்ற இடங்களில் கட்டப்படுகிறது. மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பிற்கு இந்த கல்லி ப்ளக் உதவுகிறது.
  • நீரோட்டத்தில் ஏற்படும் இயற்கையான தடுப்பு பகுதிகளைத் தேர்வு செய்து, கல்லி ப்ளக் கட்டலாம். இதன் மூலம் தடுப்பணைகளில் அதிகளவு நீர் சேமிக்கப்படும் கற்கள், களிமண், புதர்கள் ஆகியவை கொண்டு, மலைப்பாங்கான இடங்களில் ஓடும் மழைநீரை எடுத்துச் செல்லும் சிறிய ஓடைகள்,  நீரோட்டம் போன்ற இடங்களில் கட்டப்படுகிறது.
  • மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பிற்கு இந்த கல்லி ப்ளக் உதவுகிறது.
  • நீரோட்டத்தில் ஏற்படும் இயற்கையான தடுப்பு பகுதிகளைத் தேர்வு செய்து, கல்லி ப்ளக் கட்டலாம். இதன் மூலம் தடுப்பணைகளில் அதிகளவு நீர் சேமிக்கப்படும்.

கான்டூர் வரப்பு

  • நீர்பிடி முகடு பகுதிகளில், மண்ணின் ஈரப்பதத்தை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க இவை உதவுகிறது.
  • குறைவான மழை பெய்யும் இடங்களில் இது உகந்த முறையாகும். இம்முறையில், சரிவுக்கு குறுக்கே, ஒரே உயரமுள்ள இடங்களை இணைத்து வரப்பு அமைத்து மழை நீர் சேமிக்கப்படுகிறது.
  • சரியான இடைவெளியில் வரப்புகள் கட்டப்படுவதால், வேகமாக ஓடி மண்அரிப்பு  ஏற்படுத்தும் நீரை, இந்த வரப்புகள் தடுக்கிறது.
  • இரண்டு வரப்புகளுக்கு இடையேயான இடைவெளி, பரப்பு, சாய்வு, மண்ணின் நீர் இழுக்கும் திறன் ஆகியவற்றை பொறுத்து அமையும். மண்ணின் நீர் இழுக்கும் திறன் குறைவாக இருந்தால், இடைவெளி குறைவாக இருக்கும்.
  • சாதாரணமாக சரிவு காணப்படும் நிலங்களில் இவ்வரப்புகள் ஏற்றதாகும்.

கேபியன் கட்டுமானம்

  • சிறிய நீரோடைகளில் கரைக்குள் ஓடும் நீரை பாதுகாக்க இந்தக் கட்டுமானம் உதவுகிறது.
  • நீரோடைகளின் குறுக்கே இரு கரைகளுக்கிடையே, உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை கம்பி வலைகளுக்கிடையே போட்டு, அமைப்பது தான் கேபியன் கட்டுமானம்.
  • கேபியன் கட்டுமானத்தின் உயரம் 0.5 மீட்டர் அளவாகும். நீரோடைக்கு குறுக்கே கட்டப்படும் இந்தக் கட்டுமானத்தின் அகலம் குறைந்தது 10 மீட்டருக்கு உட்பட்டது.
  • கட்டுமானத்தினால் ஓரளவிற்கு நீர் சேமிக்கப்படும், மீதி இருக்கும் தண்ணீர் கட்டுமானத்தின் மேல் வழிந்தோடுகிறது. சேமிக்கப்படும் நீர் நீலத்தடி நீர்வளம் பெருக்க உதவும். காலப்போக்கில் நீரோட்டத்தால், கட்டுமானப் பொருட்களிடையே மண் தேங்க தொடங்கும். இந்த மண்ணின் மேல் செடிகள் வளரும்போது தடுப்பணை, கடினமான கட்டுமானமாக உருவாகிறது. இது, மேற்பரப்பில் வழிந்தோடும் நீரைத்தடுக்கிறது. பெய்யும் மழைநீரும் சேமிக்கப்படுகிறது.

உறுஞ்சு குளங்கள்

  • இது நாம் உருவாக்கும் ஒருவகை நீர்சேமிப்புக் கட்டுமானமாகும். நீர் அதிகம் இழுக்கும் நிலத்தை உள்ளடக்கி இந்த அமைப்பு கட்டப்படுகிறது. இதன் மூலம், நீர் ஊடுருவிச் சென்று, நிலத்தடி நீர்வளத்தை உயர்த்தும்.
  • நிலத்தடி ஊற்றுகளுடன் தொடர்புடைய உடையும் அல்லது உடைந்த பாறைகளாலான இரண்டாவது அல்லது மூன்றாவது வகை நீரோடையில் இந்த அமைப்பு கட்டப்படுகின்றது.
  • இவ்வமைப்புகள் அமைந்துள்ள பகுதியின் கீழ் தட்டுகளில், கிணறுகளும், பாசனம் தேவைப்படும் நிலங்களும் இருந்தால்தான், சேமிக்கப்படும் நீரை முறையாக பயன்படுத்தலாம்.
  • உறுஞ்சு குளங்களின் அளவு, குளங்களின் அடிப்பாகத்தின் ஊடுருவும் திறன் பொறுத்தது.  பொதுவாக 3 முதல் 4 மீட்டர் வரை குளத்துநீர் சேமிக்கும் அளவிற்கு தொட்டி அமைக்கப்பட வேண்டும்.
  • மண் கொண்டுதான் இக்குளங்கள் கட்டப்படுகின்றன. வழிந்தோடும் பகுதி மட்டுமே சிமெண்ட் கட்டுமானம் உடையதாக இருக்கும்.  இக்கட்டுமானத்தின் நோக்கமே நிலத்தடி நீர்வளத்தை உயர்த்துவதுதான். கட்டுமானத்தின் அடிப்பகுதி அதாவது தரைப்பகுதி வழியாக நீர் ஊடுருவும் வகையில் அமைக்கப்படுகிறது. 4.5 மீட்டர் உயரமுள்ள குளங்களில், வழிந்தோடும் நீருக்கான கால்வாய்கள் தேவையில்லை. நிலத்தின் தரைப் பகுதிக்கும், குளத்தின்  அடிப்பகுதிக்கும் இடையே சேர்ப்பு பகுதி மட்டும் தேவை.

தடுப்பணைகள் / சிமெண்ட் ப்ளக் / நளா அணை

  • லேசான சரிவுள்ள  சிறிய நீரோடையின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படுகின்றன.  தடுப்பணை கட்டப்படும் பகுதியில் சேமிக்கப்படும் நீர் இறங்கும் வண்ணம் மண்கண்டம் இருத்தல் வேண்டும். அப்போது தான், சேமித்த நீர் குறுகிய காலத்தில் நிலத்திற்குள் இறங்கும்.
  • இந்த அமைப்புகளில் சேமிக்கப்படும் நீர் நீரோடையின் நீர்மட்டத்திற்கு மட்டுமே போதுமானது. பொதுவாக, இதன் உயரம் 2 மீட்டருக்குட்பட்டது. இதற்கு மேல் வரும் நீர் வழிந்தோட அனுமதிக்கப்படும். வழிந்தோடும் நீர் நின்று செல்ல கீழ்ப்பகுதியில் வசதி செய்யவேண்டும்.
  • நீரோடையில் வேகத்தைக் கட்டுபடுத்த, வரிசையாக தடுப்பணைகள் கட்டப்பட்டு நீர் சேமிக்கப்பட்டு நீர் நிறுத்தப்படுகிறது.
  • சிறிய நீரோடைகளை தடுத்து நிறுத்த, சிமெண்ட் பைகளில் களிமண் அடைக்கப்பட்டு, தடுப்புச்சுவர்போல் வைக்கப் படுவதும் நல்ல பயனை அளித்துள்ளது. சில இடங்களில், மேலான கால்வாய்கள் தோண்டப்பட்டு, இருபுறமும் ஆஸ்பெஸ்டாஸ் கூரைத்தகடுகள் வைக்கப்படும் போது நீர் சேமிப்பு ஏற்படுகிறது.  ஆஸ்பெஸ்டாஸ் கூரைத்தகடுகளின் இடையே களிமண் நிறைக்கப்படுகிறது. இது செலவு குறைவான ஒரு தடுப்பணைகட்டும் முறை. மேற்பகுதியில் களிமண் அடைக்கப்பட்ட சிமெண்ட் பைகளை அடுக்கும்போது தடுப்பணைக்கு எவ்வித பாதிப்புமில்லாமல் பாதுகாப்பு ஏற்படுகிறது.

ரீசார்ஜ் ஷாப்ட்

  • இது ஒரு செலவு குறைந்த, ஆனால் திறன் வாய்ந்த, முறை. மண்ணின் உரிஞ்சும் தன்மை குறைவாக காணப்படும் போது, இம்முறை நீரை சேமிக்கும் ஒரு வழிமுறை.
  • மண் உள்வாங்காத பகுதிகளில், இந்த அமைப்பினை ஆட்கள் கொண்டு வெட்டலாம். இந்த அமைப்பின் விட்டம் 2 மீட்டருக்கும் அதிகமாக இருக்கும்.
  • நிலத்தின் அடிபகுதியில், நீர் ஊடுருவா பகுதியை கடந்து நீர் உடுருவும் பகுதி வரை இந்த அமைப்பு செல்ல வேண்டும். இருந்த போதிலும் கீழுள்ள நீர்மட்டத்தை தொடாமல் காணப்படலாம்.
  • இந்த அமைப்பின் ஒரங்கள் ஜல்லி, கற்கள், மணல்கொண்டு நல்லமுறையில் அடுக்கப்பட்டு பாதிப்பில்லாதவாறு பராமரிக்கப்படுகிறது.  சேமிக்கப்படும் நீர், சிறிய குழாய் மூலம் வடிகட்டும் பகுதிக்கு எடுத்து செல்லப்படுகிறது.
  • கிராமங்களிலுள்ள சில குளங்கள் மழைகாலங்களில் நிரம்பி காணப்படும். ஆனால், குளத்தின் அடியில் வண்டல் படிந்து, நீர் பூமிக்கடியில் புகுந்து செல்லாதபடிக்கு தடை செய்யும். இதனால், குளத்தின் அருகில் காணப்படும் கிணறுகள் கூட நீரின்றி காணப்படும். குளத்தின் நீர் ஆவியாகி உபயோகமில்லாமல் போய்விடும்.
  • மேற்கூறிய சூழலில், ரீசார்ஜ் ஷாப்ட் அமைப்புகளை ஏற்படுத்தி, குளங்களில் அதிகப்படியான நீரை நிலத்தடி நீர் மேம்பாடிற்கு பயன்படுத்தலாம். ரீசார்ஜ் அமைப்புகளின் விட்டம் 0.5 லிருந்து 3 மீட்டர் வரையும், ஆழம் 10-15 மீட்டர் ஆகவும், குளத்தின் நீரளவு பொருத்து அமைக்கலாம். ஷாப்டின் மேற்பகுதி குளத்தின் தரைப்பகுதிக்குமேல் இருக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. குளத்தின் பாதி அளவு நீர்மட்டத்தின் மேல் ஷாப்டின் மேற்பகுதி இருத்தல் நலமாகும். ஷாப்ட்டின் வலுவுக்காக, அதனை சுற்றி ஜல்லி, கல், மணல் ஆகியவற்றை சுற்றி இடலாம்.
  • வலுவிற்காக, ஷாப்ட்டின் மேற்பகுதியின் 1 அல்லது 2 மீட்டர் ஆழம் வரை, செங்கல், சிமென்ட் கொண்டு சுற்றமைப்பு கட்டப்படுகிறது.
  • இந்த நுட்பத்தின் மூலம் சேமிக்கப்படும் நீரில் 50 சதம் நிலத்தடிக்கு செல்கிறது. நிலத்தடி நீர்வளம் இதன் மூலம் அதிகரிக்கிறது. மீதி இருக்கும் நீர் குளத்திலேயே இருப்பதால் நமது அன்றாடத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

வெட்டிய கிணறுகளில் ரீசார்ஜ்

  • ஏற்கனவே உள்ள மற்றும் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட கிணறுகளை சுத்தம் செய்து நீரை சேமிக்கலாம்.
  • சேமிக்கப்படும் நீர் குழாய் மூலம் கிணறின் அடிப்பகுதிக்கு எடுத்து செல்லப்படுகிறது.
  • சேமிக்கப்படும் தண்ணீர் மண் கலப்பு இல்லாமல் இருக்க வேண்டும். வழிந்தோடும் நீரும் வடிகட்டும் கட்டுமானம் வழியாக செல்லும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • அவ்வப்போது தொடர்ந்து க்ளோரினை தண்ணீரில் கலப்பதால், நுண்ணுயிர்களால் மாசுபடும் பிரச்சனை இருக்காது.

நிலத்தடி நீர் அணைகள்

  • நிலத்தடி நீர் அணை என்பது பூமிக்கடியில் ஓடையின் குறுக்கே கட்டப்படும் ஒரு அமைப்பாகும். இதன் மூலம் ஓடையின் அடிமட்ட நீரோட்டம் தடுக்கப்பட்டு, நீரானது பூமிக்குள் உரிஞ்சப்பட வழி செய்யப்படுகிறது. இதனால் நிலத்தடியில் நீர் சேமிக்கப்பட்டு சரிவின் மேட்டுப்பகுதிகளில் நீர்வளம் அதிகப்படுத்தப்படுகிறது.
  • நிலத்தடி நீர் அணை கட்டப்படும் பகுதியானது, நீர் ஊடுருவா வண்ணம் கடினமாய் காணப்படும் மண்கண்டம் குறைவாக இருத்தல் வேண்டும். சுற்றிலும் பெரிய நிலப்பரப்பு கொண்டுள்ளதாகவும், நீர் வெளிச்செல்லும் அமைப்பு சிறியதாகவும் இருக்கவேண்டும்
  • தகுந்த இடத்தை தேர்வு செய்த பிறகு, 1-2 மீட்டர் ஓடையின் குறுக்கே நீர் ஊடுருவா மட்டம் வரை அகலமுள்ள குழியை எடுக்க வேண்டும். இக்குழியில், நிலமட்டத்திலிருந்து 0.5 மீட்டர்  கீழ் வரை, களிமண், செங்கள் மற்றும் கான்கிரீட் சுவர் எடுக்க வேண்டும்.
  • நீர் முழுமையாக உட்புகுந்து செல்ல 400 - 600 காஜ் PVC சீட்டுகள் அல்லது 200 காஜ் பாலித்தீன் ஷீட்டுகளால், வெட்டிய நிலத்தடி நீர்த்தடுப்பணைகளின் முகப்பை மூடிவிடலாம்.
  • தண்ணீர் பூமியின் நீர் மட்டத்திற்குள்ளேயே சேமிக்கப்படுவதால், நிலப்பரப்பு நீரினால் மூழ்கடிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இதனால், மேற்பரப்பு நாம் எப்போதும்போல் பயன்படுத்தமுடியும். தடுப்பணையில் சேமிக்கப்படும் நீர் ஆவியாவதில்லை. மண்ணும் அதிகளவில் தடுப்பணையில் சேர்வதில்லை. பெரியளவில் இயற்கை இடர்பாடுகளினால், தடுப்பணைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

நகர்புறங்களில் நிலத்தடிநீர் சேமிப்பு

நகர்புறங்களில், கூரைவழியாக வரும், கட்டிடங்களில் விழும் மழை நீர் சேமிக்கப்படாமல், வீணாகிறது. இந்த நீர் பூமியின் நீர் மட்டத்தில் சேமிக்கப்படலாம். தேவை ஏற்படும்பொழுது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மழை நீர் அறுவடைக்கு அதிக பரப்பு இடம் தேவைப்படாது. நிலத்தில் முழுமையாக மழை நீர் சேமிக்க இயலும். கூரையிலிருந்து விழும் மழை நீரை சேமிக்க, ஒரு சில தொழில் நுட்பங்கள் உள்ளன.

i. ரீசார்ஜ் குழி

  • நீர் ஊடுருவும் பாறைகள் நிலமட்டத்தில் காணப்படும் பகுதிகளில், மழைநீர் சேமிப்பு இம்முறையில் செய்யப்படுகிறது.
  • இம்முறை 100 ச.மீட்டர் கூரை பரப்புள்ள கட்டிடங்களில் விழும் மழை நீரை சேமிக்கவும் உதவுகிறது. மேலான பூமி நீர் மட்டம் உள்ள இடங்களில் நீர் சேமிப்பிற்கு ரீசார்ஜ் குழிகள் கட்டப்படுகிறது.
  • இந்தக் குழிகளின் அளவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். சாதாரணமாக, 1-2 மீட்டர் அகலம்,  2-3 மீட்டர் ஆழமுள்ளதாக அமைக்கப்படும். இந்த குழிகளில் பெரிய கற்கள் (5-20 செ.மீ), ஜல்லிகள் (5-10 மி.மீ.) மற்றும் மணல் (1.5-2 மி.மீ.) போடப்படுகின்றன. கற்கள் கீழ்பகுதியிலும், அடுத்து ஜல்லிகளும், அதற்கு மேல் மணலும் போடப்படுவதால் மழை நீரோடு சேர்ந்து வரும் வண்டல்மண் மேல்பரப்பில் தங்கிவிடும். அதனை, எளிதாக அகற்றிவிடலாம். சிறிய கூறை பகுதி உள்ள கட்டிடங்களுக்கு குழியில் உடைந்த செங்கற்கள் அல்லது கூழாங்கள் போட்டால் போதுமானது.
  • குழிக்கு கட்டிடத்தின் கூரையில் இருந்து செல்லும் மழை நீர் வடிகட்டி வழியாக சென்றால் கழிவுகள், இலைகள், தழைகள் போன்றவை குழிக்கு செல்லாமல் தடுக்கலாம். சிறிய மண்துகள்கள் குழிக்கு செல்லாவண்ணம், தடுப்பு / சேமிப்பு அமைப்பு ஒன்றும் அமைக்கலாம்.
  • குழியின் மேலுள்ள மணற்பரப்பு அவ்வப்போது சுத்தம் செய்யப்பட வேண்டும்.
  • முதல் மழை பெய்யும்போது, சேமிப்புக்குழியில் அத்தண்ணீர் விழாதவாறு மாற்று அமைப்பு இருப்பது நல்லது.

ii. ரீசார்ஜ் டிரன்ச்

  • இந்த அமைப்பு, 200-300 சதுர மீட்டர் கூரை பரப்புடைய கட்டிடங்களுக்கு ஏற்றதாகும். நீர் ஊடுருவும் மட்டம் மேல்மட்டத்தில் காணப்படும் பகுதிக்கும் இம்முறை ஏற்றதாகும்.
  • குழியின் அளவு 0.5 - 1 மீட்டர் அகலம், 1 - 1.5 மீட்டர் ஆழம், மற்றும் 10-20 மீட்டர் நீளம் உடையதாக அமைக்கலாம். சேமிப்பு நீரின் அளவைப் பொறுத்து குழியின் அளவு மாறுபடும்.
  • நீர் சேமிப்புக் குழிகளில், பெரிய கற்கள், ஜல்லிகள் மற்றும் மணல் ஆகிய மூன்றும் தட்டுகளாக போடப்பட வேண்டும். கற்கள் அடிப்பகுதியிலும், ஜல்லிகள் அதற்கு மேலும், மணல் மேல்மட்டத்திலும் போடப்படுகின்றன. மழை நீரோடு வரும் வண்டல்மண் மேற்பரப்பில் சேமிக்கப்பட்டு, அவ்வப்போது எடுத்து விடும் வகையில், இம்மூன்று அடுக்குகள் போடப்படுகின்றன.
  • நீர் சேமிப்பு குழிக்கு கட்டிடத்தின் கூரையிலிருந்து வரும் மழைநீர், சல்லடை போன்ற அமைப்பு வழியாக சென்றால் கழிவுகள், இலைகள், தழைகள் போன்றவை சேமிப்பு குழிக்கு செல்லாமல் தடுக்கப்படும். சிறிய வண்டல்மண் குழிக்கு செல்லா வண்ணம், மேற்கூறப்பட்ட மூன்று அடுக்கு அமைப்பும் அமைத்துக் கொள்ளலாம்.
  • முதல் மழை பெய்யும் போது சேமிப்புக் குழியில் நேரடியாக நீர் விழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • சேமிப்புக் குழியின் மேற்பரப்பு அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டால், நீர் சேமிப்பு முழுமையாக நடைபெறும்.

iii. குழாய் கிணறுகள்

  • மேல்மட்ட நிலத்தடிநீர் விரைவில் உளர்ந்து விடுவதால், கீழ்மட்டத்தில் உள்ள நிலத்தடிநீரை உறிஞ்சும் குழாய் கிணறுகளில், மழைநீர் சேமிப்பு முறை பயன்படுத்தி, கீழ்மட்ட நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்கலாம்.
  • 10 செ.மீ விட்டமுடைய PVC குழாய்கள் மழைநீரை சேமிப்பதற்காக கூரைகளில் இணைக்கப்படவேண்டும். முதல் மழைநீர் குழாய் வழியாக வெளியேற்றப்படும். குழாயின் அடிபாகத்தை மூடிவிட்டு, 'T' வடிவ பைப் மூலம், குழாயின் வழியாக வரும் மழைநீரை PVC வடிகட்டிக்கு திருப்பிவிடவும். குழாய் கிணறுக்கு மழைநீர் சென்றடைவதற்கு முன் வடிகட்டப்படுகிறது. வடிகட்டியானது 1-1.2 மீட்டர் நீளமுடைய, PVC குழாய் கொண்டு செய்யப்படுகிறது. அதன் விட்டமானது, மேற்கூரையின் பரப்பை பொறுத்து மாறும். கூரை பரப்பு 150 சதுர மீட்டருக்கு குறைவாக இருந்தால், விட்டம் 15 செ.மீட்டர் ஆகவும், 150 சதுர மீட்டருக்கு மேல் கூரைப்பரப்பு இருந்தால் 20 செ.மீ  விட்டமுடைய வடிகட்டியை பயன்படுத்த வேண்டும். வடிகட்டியின் இரண்டு பக்கங்களும் 6.25 செ.மீ அளவு சிறிய குழாய் காணப்பட வேண்டும். PVC வடிகட்டி மூன்று பாகங்களாக பிரிக்கப்படுகிறது. இதனால் கழிவுகள் எதுவும் ஒன்றோடொன்று கலக்காமல் இருக்கும். வடிகட்டியின் முதல் பகுதியில் ஜல்லிக் கற்கள் (6-10 மில்லி மீட்டர்) நடுப்பகுதியில் கூழாங்கற்கள் (12-20 மில்லி மீட்டர்) மற்றும் கடைசி பகுதியில் பெரிய கூழாங்கற்கள் (20-40 மில்லி மீட்டர்) போடப்பட்டிருக்கும்
  • கூரை பரப்பு பெரியதாக இருக்கும் பட்சத்தில், வடிகட்டும் குழி ஒன்று போடலாம். கூரையிலிருந்து மழைநீர் நேரடியாக தரைமட்டத்தில் உள்ள சேமிப்பு குழிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. சேமிப்பு குழி குழாய் மூலம் வடிகட்டியுடன் இணைக்கப்பட்டிருக்கும். வடிகட்டும் குழியின் அளவு கூரையிலிருந்து கிடைக்கும் மழைநீரின் அளவைப் பொறுத்து மாறுபடும். வடிகட்டும் குழியானது, அடிப்பகுதியில் பெரிய கற்கள், நடுப்பகுதியில் ஜல்லிக்கற்கள் மற்றும் மேற்பகுதியில் மணற்கொண்டும் அடுக்கடுக்காக மூடப்பட்டிருக்கும். குழி இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கும். முதல் பாகத்தில் வடிகட்டும் பொருட்களும், அடுத்தபகுதி காலியாக, வடிகட்டப்பட்ட உபரி நீர் சேமிக்க பயன்படுகிறது. சேமிப்பு குழியின் கீழ்பகுதியிலிருந்து கிணறோடு இணைக்கும் குழாய் பொறுத்தப்படுகிறது. இதன் மூலம், வடிகட்டப்பட்ட மழைநீரானது குழாய் கிணற்றில் முறையாக சேர்க்கப்படுகிறது.

iv. குழிகளுடன் கூடிய ரீசார்ஜ் கிணறு

  • மேல் மண்ணிற்குள் தண்ணீர் ஊடுருவ முடியாத நிலையில், கூரையிலிருந்து வழிந்தோடும் மழைநீர் அதிகளவு காணப்படும் பகுதிகளில், குழிகளுடன் கூடிய ரீசார்ஜ் கிணறு பயன்படும். வடிகட்டிய மழைநீரை குழிகளில் சேமித்து, பின்பு, சேமிக்கப்பட்ட நீரானது நிலத்தடிக்கு செல்லும் வகையில் சிறப்பு நீர் சேமிப்பு கிணறுகள் கட்டப்படுகின்றன.
  • இந்த அமைப்பானது, நீர் ஊடுருவிச் செல்லும் மட்டம், தரைமட்டத்திலிருந்து 3 மீட்டருக்குள்ளாக உள்ள பகுதிக்கு ஏற்றது.
  • சேமிப்பு கிணறு, நிலத்தடி நீர்மட்டத்தின் கீழ் 3-5 மீட்டர் ஆழத்திற்கு எடுக்கப்படுகிறது.
  • 1.5-3 மீட்டர் அகலம், 10-30 மீட்டர் நீளம் உடைய குழி, சேமிப்பு கிணற்றை நடுவாகக் கொண்டு கட்டப்படுகிறது. இது கிடைக்கும் நீரைப் பொருத்து அமைக்கப்படுகிறது.
  • கிடைக்கும் மழை நீரின் அளவு, பகுதியின் பாறைகளின் அமைப்பு போன்றவற்றை பொறுத்து சேமிப்பு குழாய்களின் எண்ணிக்கை அமையும்.
  • குழியில், பெரியகற்கள், ஜல்லிகள், மணல் ஆகியவை அடுக்கடுக்காக, மழைநீரை வடிகட்டும் நோக்கோடு போடப்படுகிறது.
  • நிலத்தடி நீர்மட்டம் அதிக ஆழத்தில், அதாவது 20 மீட்டருக்கு மேல் அமையுமானால், 2-8 மீட்டர் விட்டமுள்ள, 3-5 மீட்டர் ஆழமுள்ள அமைப்பு கட்டப்படுகிறது. வழிந்தோடும் நீரையும் இதில் கணக்கெடுத்துக் கொள்ளகிறோம். இந்த அமைப்பின் உள்ளே, 100-300 மி.மீட்டர் விட்டமுள்ள ரீசார்ஜ் கிணறு கட்டப்பட்டு, ஆழமான நிலத்தடி நீர் பகுதிகளில், தண்ணீர் சேமிக்கப்படுகிறது. இந்த அமைப்பின் அடிப்பகுதியில் ஒரு வடிகட்டும் அமைப்பும் உண்டு. இது சேமிப்புக் கிணற்றை கழிவுகள் மூடிவிடாமல் பாதுகாக்கிறது.

https://ta.vikaspedia.in/energy/b9abc1bb1bcdbb1bc1b9abc2bb4bb2bcd/ba8bc0bb0bcd/நிலத்தடி-நீரை-அதிகப்படுத்தும்-முறை-மற்றும்-நுட்பங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இது நாம் உருவாக்கும் ஒருவகை நீர்சேமிப்புக் கட்டுமானமாகும். நீர் அதிகம் இழுக்கும் நிலத்தை உள்ளடக்கி இந்த அமைப்பு கட்டப்படுகிறது. இதன் மூலம், நீர் ஊடுருவிச் சென்று, நிலத்தடி நீர்வளத்தை உயர்த்தும்.

15 ஆவது நிமிடத்தில் பாருங்கோ ஒர் குளத்தின் ஊற்று எப்படி மூடப்பட்டுள்ளது என அறியலாம்..சரியான பாதுகாப்பு வழங்காத காரணத்தால் மக்கள் தங்களது அறிவுக்கு ஏற்ற வகையில் மூடி விட்டார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.