Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பொது வேட்பாளர்: யாரால்? யாருக்கு? யாருக்காக ? - நிலாந்தன்

 

image_140aba5788-c.jpg

சில மாதங்களுக்கு முன்பு வடமராட்சி கட்டை வேலி கிராமத்தில் ஒரு மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. சமகால நிலைமைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டும் நோக்கிலான அச்சந்திப்பின் போது, வளவாளர் அங்கு வந்திருந்த மக்களை நோக்கி பல்வேறு கேள்விகளையும் கேட்டார். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள்? ஏன் வாக்களிக்க விரும்புகிறார்கள்? என்றும் கேட்டார். கேள்விகளின் போக்கில் அவர் ஒரு கட்டத்தில் கேட்டார், தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் அவருக்கு நீங்கள் வாக்களிப்பீர்களா? என்று. அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஏறக்குறைய ஒரே குரலில் ஆம் என்று பதிலளித்தார்கள். அதில் யாரோ ஒரு பெண் ரகசியமான குரலில் சொன்னார் “அந்தப் பொது வேட்பாளர் தமிழ் ஈழம் கேட்டால் சந்தோஷமாக வாக்களிப்போம்” என்று.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, சில மாதங்களுக்கு முன்னரே ஈபிஆர்எல் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் முன் வைத்தார். அதன் பின் அவர் அங்கம் வகிக்கும் குத்துவிளக்குக் கூட்டணி அதை ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது. அதன்பின் விக்னேஸ்வரன் அவ்வாறு ஒரு பொது வேட்பாளராக நிற்பதற்குத் தான் தயார் என்று அறிவித்திருந்தார்.

இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சி அதன் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை இன்றுவரை வெளிப்படுத்தவில்லை. அவ்வாறு ஒருமித்த முடிவை எடுக்க முடியாதபடி அக்கட்சி நீதிமன்றம் ஏறிக்கொண்டிருக்கிறது. எனினும், தமிழரசுக்  கட்சிக்குள் தேர்தல் நடப்பதற்கு முன்பு, சாணக்கியன் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருந்தார். அதேசமயம் அண்மையில் டான் டிவி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு சிவில் சமூகம் ஒழுங்குபடுத்திய ஒரு கருத்தரங்கில் பேசிய சிறீதரன் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாகக் கருத்துரைத்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வழமை போல தேர்தலைப் பகிஷ்கரிக்கப் போகின்றது.

இதனிடையே, புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர் ஒருவருடைய தூதுவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர், சில மாதங்களுக்கு முன், தமிழ்க் கட்சிகள் சிலவற்றோடு உரையாடியிருக்கிறார். குறிப்பிட்ட முதலீட்டாளர் தென்னிலங்கையில் உள்ள இரண்டு கட்சிப் பதிவுகளை விலைக்கு வாங்கி வைத்திருப்பதாகவும், அதில் ஒரு கட்சியின் பதிவின் கீழ் தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சிப்பதாகவும் கூறப்பட்டது. அத்தமிழ்ப் பொது வேட்பாளர், தமிழ் வாக்குகளை ஒன்று திரட்டி ரணில் விக்ரமசிங்கவை நோக்கித் திருப்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது ரணிலை வெல்ல வைப்பதற்கே அந்த முயற்சி என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் அக்கோரிக்கைக்கு இணங்கவில்லை என்றும் தெரிகிறது.

அதேசமயம் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட டான் டிவி ஒரு சிவில் சமூகத்தை முன்னிறுத்தி, தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக ஒரு கருத்தரங்கை சில கிழமைகளுக்கு முன் நடத்தியது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர ஏனைய பெரும்பாலான கட்சிகள் அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தன.

articles_oqF2dgHWywdy2xvr1yHd-1c-1024x53

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவை தமிழ் மக்கள் பேரவை கையில் எடுத்தது. அது வெற்றி பெறவில்லை. இப்பொழுது குத்துவிளக்குக் கூட்டணி, புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர், டான் டிவியின் சிவில் சமூகம் போன்றன அதைக் கையில் எடுத்திருக்கின்றனவா?

இந்த விடையத்தில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்கள் பேரவை ஏன் வெற்றி பெறவில்லை என்ற கேள்விக்கு விடை முக்கியம்.

அன்றைக்கு அந்த முயற்சிக்கு சம்பந்தர் ஆதரவாக இருக்கவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்தது. ஆனால் ஏனைய கட்சிகள் தயக்கத்தோடு தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்க முன்வந்தன. அவ்வாறு ஆதரித்த கட்சிகளை ஒன்று திரட்டி அதை ஒரு அரசியல் செய்முறையாக பரிசோதிப்பதற்கு பேரவையால் முடியவில்லை. அதற்குத் தேவையான பலமும் கட்டமைப்பும் தமிழ் மக்கள் பேரவையிடம் இருக்கவில்லை.

இப்பொழுதும் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தத் தேவையான பலம், அது பற்றி உரையாடுபவர்களிடம் உண்டா?

இது ஏறக்குறைய கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியின் மறு வடிவம்தான். அதை இன்னும் தெளிவாகச் சொன்னால், ஜனாதிபதி தேர்தல் என்ற ஒர் அரசியல் நிகழ்வை முன்வைத்து தமிழ் ஐக்கியத்தைக் கட்டி எழுப்புவது; தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்புவதுதான்.

ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக அதைச் செய்யத்தான் தமிழ் பரப்பில் ஆட்கள் இல்லையே? தமிழ்க் கட்சிகளை ஒன்றாக்குவதற்கு ஏதாவது ஒரு பலம் இருக்க வேண்டும். கட்சிகளைக் கூப்பிட்டுக் கருத்தரங்கை வைக்கலாம். ஆனால் கட்சிகளை ஒன்று திரட்டி இதைச் செய்யுங்கள் என்று நெறிப்படுத்த ஒரு பலமான அரசியல் கட்டமைப்பு வேண்டும். அது தமிழ் மக்களிடம் உண்டா? இல்லையென்றால் தமிழ் ஐக்கியத்தைப் போலவே தமிழ்ப் பொது வேட்பாளர் தெரிவும் நெருக்கடிக்கு உள்ளாகும்.

உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி இந்த விடயத்தில் ஆதரவளிக்காவிட்டால் அது வெற்றி பெறாது என்ற கருத்து குத்துவிளக்கில் உள்ள சில கட்சிக்காரர்களிடம் உண்டு. இதில் தன்னம்பிக்கை குறைவும் தாழ்வுச் சிக்கலும் உண்டு என்பதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். தன் சொந்தப் பலத்தில்; சொந்த உழைப்பில்; தான் சரியென்று கருதும் ஒன்றை வெற்றிபெறச் செய்வதற்கான திடசித்தம் குத்துவிளக்குக் கூட்டுக்குள் எத்தனை கட்சிகளிடம் உண்டு?

தமிழரசுக் கட்சி இந்த விடயத்தில் முடிவெடுக்க முடியாதபடி இரண்டாக நிற்கின்றது. அது நீதிமன்றத்தில் இருந்து வீட்டுக்குத் திரும்பும் வரையிலும் இந்த நிலைமை தொடரும். இவ்வாறு அக்கட்சி இரண்டாகி நிற்பது தென்னிலங்கை வேட்பாளர்களுக்குச் சாதகமானது.

ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் என்ற விடயத்தை தமிழ் மக்கள் உருப்படியாகச் செய்து முடிப்பார்கள் என்று தென்னிலங்கையில் உள்ள எந்த ஒரு வேட்பாளரும் நம்பவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்கள் பேரவையின் சுயாதீனக் குழுவோடு உரையாட சஜித் பிரேமதாச முயற்சித்தார். அவருடைய மனைவி “ஜெட் விங்” ஹோட்டலில் தங்கியிருந்து அதற்கான அழைப்பையும் எடுத்தார். இம்முறை சஜித் அந்த விடயத்தைப் பொருட்படுத்தவில்லை என்று தெரிகிறது. சுமந்திரனும் சாணக்கியனும் தனக்குச் சாதகமாக தமிழ் வாக்குகளைத் திரட்டுவார்கள் என்று அவர் நம்புகிறார் போலும். மனோ கணேசன், ரவூப் ஹக்கிம் போன்றவர்கள் தமிழ் வாக்குகளையும் முஸ்லிம் வாக்குகளையும் தன்னை நோக்கிச் சாய்க்கலாம் என்றும் அவர் நம்புவதாகத் தெரிகிறது. அதனால், தமிழ்ப் பொது வேட்பாளரைக் குறித்து அவர் அலட்டிக் கொள்ளவில்லை.

276238730_523328779139985_62592831040002

அப்படித்தான் ரணிலும் ஜேவிபியும். தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் சிங்கள வேட்பாளர்களுக்குப் பதட்டத்தை ஏற்படுத்தும் ஒரு வளர்ச்சிக்கு இன்னும் வரவில்லை. அதை நோக்கி தமிழ்க் கட்சிகள் கட்டமைப்பாக ஒன்றிணைையவில்லை.

அவ்வாறு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்தாலும், சிங்கள வேட்பாளர்களுடன் பேரம் பேசுவது என்ற தெரிவை முதன்மைப்படுத்துவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்துவதாக அமையலாம்.

ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரின் கோரிக்கைகள் தொடர்பாக குத்துவிளக்குக் கூட்டணியோ அல்லது சிவில் சமூகமோ இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. தமிழ்ப் பொது வேட்பாளரின் கோரிக்கைகள் சிங்கள வேட்பாளர்களுடன் பேரம் பேசக்கூடியவைகளாக அமைய வேண்டும் என்று குத்து விளக்குக் கூட்டணிக்குள் உள்ள சில கட்சிகள் கருதுவதாகத் தெரிகின்றது. அவ்வாறு சிங்கள வேட்பாளர்களை நோக்கித் தமிழ்ப் பொது வேட்பாளரின் கோரிக்கைகளை வளைப்பது என்பது, 13 ஐ அமல்படுத்துவது வரையிலும் போக முடியும். ஆனால்,தமிழ் மக்களின் கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்களை நோக்கி வளைப்பதற்கு ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் தேவையில்லை. தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதற்குத்தான் அது தேவை.

தமிழ்ப் பொது வேட்பாளர் தெரிவு எனப்படுவது பேரம் பேசலுக்கானது என்பது அதன் முதன்மை நோக்கம் அல்ல. முதன்மை நோக்கம் எதுவென்றால், தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்புவதும் தமிழ் மக்களின் ஐக்கியத்தை உலகத்துக்குக் காட்டுவதும் தமிழ் மக்களின் உச்சமான கோரிக்கைகளுக்குரிய ஆகப் பிந்திய மக்கள் ஆணையை பெறுவதும்தான். தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுவது தமிழ் ஐக்கியத்தின் குறியீடு. தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்பும் ஒரு தெரிவு. தமிழ் மக்களின் உச்சமான கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதித் தேர்தலை ஒரு மறைமுக பொதுசன வாக்கெடுப்பாகப் பயன்படுத்தும் ஒரு தெரிவு. தேர்தல் முடிவை தமிழ் மக்களின் ஆகப் பிந்திய மக்கள் ஆணையாக உலகத்துக்கு காட்டப்படலாம்.

மாறாக,பேரம் பேசுவதை அடிப்படையாக வைத்து சிந்தித்தால், அது தமிழ் மக்களின் கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்களை நோக்கி வளைப்பதில்தான் போய்முடியும். மேலும், பொது வேட்பாளர் உச்சமான கோரிக்கைகளை முன்வைத்தால் பேரம் பேசலுக்கான வாய்ப்புக் குறைந்து விடும். எந்த ஒரு சிங்கள வேட்பாளரும் அவரோடு பேரம் பேசி தனக்குரிய சிங்கள பௌத்த வாக்குகளை இழக்கத் தயாராக இருக்க மாட்டார்.

அதேசமயம், தமிழ் மக்களின் உச்சமான கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் ஆணையைப் பெறுவதற்குரிய மறைமுக வாக்கெடுப்பாக ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்தி அதில் தோல்வி கண்டால், அது தமிழ் மக்கள் ஒரு தேசமாக இல்லை என்பதை வெளியுலகத்திற்கு நிரூபித்து விடும் ஆபத்தும் உண்டு.  எனவே ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவு எடுத்தால், அதற்காகக் கூட்டாக உழைக்க வேண்டும். அர்ப்பணிக்க வேண்டும். அது ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்கான உழைப்பு என்பதைவிட, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான உழைப்பு என்பதே சரி.
 

https://www.nillanthan.com/6668/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.