Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ் ஜனாதிபதி வேட்பாளர்: ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை

தமிழ் ஜனாதிபதி வேட்பாளர்: ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை

— கருணாகரன் —

2024 இல் ஜனாதிபதித் தேர்தல் நடக்குமா? பாராளுமன்றத் தேர்தல் நடக்குமா? என்று இன்னும் உறுதியாகச் சொல்ல  முடியாத நிலையே உள்ளது. ஜனாதிபதித் தேர்தல்தான் முதலில் நடக்கும் என சில இடங்களில் சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பு பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது நல்லது என்று பொதுஜன பெரமுன உள்ளிட்ட சில தரப்புகள் வலியுறுத்துகின்றன. எதையும் தீர்மானிக்கின்ற ஒரே மனிதராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார்.

இலங்கை அரசியல் யாப்பின்படி ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை உச்சமாகப் பயன்படுத்தியவர் ஜே.ஆர். ஜெயவர்த்தன. அவரே ஜனாதிபதிக்கான அதிகாரங்களை உருவாக்கியவர். அவருக்கு அடுத்தபடியாக அதனுடைய சுவையறிந்து செயற்பட்டுக் கொண்டிருப்பவர் ரணில் விக்கிரமசிங்க. இருவரும் உறவினர்கள் மட்டுமல்ல, ஒரே மாதிரிச் சிந்திப்பவர்களும் செயற்படுகின்றவர்களும். இதனால் இருவரையும் தந்திரமிக்கவர்கள் (நரித்தனமுள்ளவர்கள்) எனச் சொல்லப்படுவதுண்டு. இருவருக்கும் ஒரேயொரு வித்தியாசம். ஜே.ஆர், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி நடத்தியவர். அந்தப் பலத்தைப் பயன்படுத்தி எதிர்த்தரப்புகளின் முதுகெலும்பை உடைத்தவர். தன்னுடைய கட்சிக்காரர்களின் ராஜினாமாக் கடிதத்தை வாங்கிப் பொக்கற்றுக்குள் வைத்துக் கொண்டு முழுமையான நிறைவேற்று அதிகாரத்துக்கு அப்பாலும்  செயற்பட்டவர்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிறிய – சாதாரண பெரும்பான்மை கூட ஆட்சியில் இல்லை. அவர் ஜனாதிபதியாகிய விதமே – விந்தையே வேறுவிதமானது. யானை மாலை போட்டதால் ராணியாகியதைப்போல, ராஜபக்ஸவினரின் கூட்டுத் தவறுகளின் விளைவாகவும் ஏனைய அரசியல் தலைவர்களின் பலவீனங்களுக்குள்ளாலும் மேலெழுந்து ஜனாதிபதியானவர். இதனால் கேள்விக்கிடமற்று முழுமையான நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தும் ஆளாக மாறியிருக்கிறார் ரணில்.

ஆகவே இப்பொழுது ரணில் மிக வலுவான யானையாக உள்ளார். ஆனால், தேர்தலில் இந்த யானைப் பலம் அவருக்கு இருக்குமா? இல்லையா என்பது கேள்வியே. என்பதால்தான் எந்தத் தேர்தல் முதலில் வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாதுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் தேர்வு எதுவோ அதுவே நடக்கப்போகிறது.

எப்படியிருந்தாலும் 2024 தேர்தல் ஆண்டாக அமையும் என்று நம்பிக்கையாகச் சொல்ல முடியும். இலங்கைத் தேர்தல் ஆணையகமும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் – அதாவது ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானம் எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பொறுத்துள்ள சூழலில்தான் – இலங்கையின் அரசியற் செல்வழி அமையப்போகிறது. அதை மீறிச் செயற்படக் கூடிய நிகராற்றல் வேறெவரிடத்திலும் இல்லை. இதுதான் உண்மை நிலவரம். கவலையும் கூட.

இதற்குள் அவரவர் தமக்கேற்ற விதத்தில் தம்மைத் தயார்ப்படுத்தத் தொடங்கியுள்ளனர். “எந்தத் தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு பொதுஜன பெரமுன தயார்” என்று முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜனபெரமுனவின் தலைமைச் சக்தியுமாகிய மகிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

இருந்தாலும் கடுமையான குழப்பத்தில் இருப்பது, ராஜபக்ஸக்களின் பொதுஜன பெரமுனவாகும். முதலில் பாராளுமன்றத் தேர்தலையா அல்லது ஜனாதிபதித் தேர்தலையா எதிர்கொள்வது என்ற பதட்டத்தில் உள்ளது பெரமுன. ஜனாதிபதித் தேர்தல் என்றால் அதற்கு யாரை நிறுத்தலாம் என்ற குழப்பம் அதற்குள் நீடிக்கிறது. ராஜபக்ஸக்களின் கனவு நாயகன் நாமல் ராஜபக்ஸவை நிறுத்தலாம் என ஆரம்பத்தில் பேச்சடிபட்டது. பிறகு பஸில் ராஜபக்ஸவின் பெயரடிபட்டது. இப்போது அவர்கள் ரணிலையே நிறுத்தினால் என்ன என்று யோசிப்பாகச் சொல்லப்படுகிறது.

அடுத்ததாக உள்ள ஐ.தே.கவின் ஒரே தெரிவு ரணில் விக்கிரமசிங்கதான். அதற்குள் வேறு கவர்ச்சிகரமான ஆட்களில்லை. ஆனால் அதற்கு ரணில் தயாரா என்று தெரியவில்லை இன்னும். தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வதற்கு இன்னும் ஒரு நீண்ட கால அவகாசம் தேவைப்படுவதால் பெரமுனவினரும் (ராஜபக்கஸவினரும்) ரணிலையே விரும்புவதால் சிலவேளை இரு தரப்பின் வேட்பாளராக ரணில் போட்டியிடக் கூடும் – நிறுத்தப்படக் கூடும்.

இதற்குள் (இலங்கையின் தற்போதைய கையறு நிலையில்) தம்மை நிலை நிறுத்திக் கொள்ளலாம் என்று சிந்திக்கிறது தேசிய மக்கள் சக்தி என்கிற (மக்கள் விடுதலை முன்னணி) ஜே.வி.பி. அதற்காக அது தமிழ்ப்பரப்பிலும் தன்னுடைய செல்வாக்கு மண்டலத்தை விரிக்கப்பார்க்கிறது. கிளிநொச்சி தொடக்கம் கனடா வரையில் நிகழ்ந்துள்ள அநுர குமாரவின் பயணம் இதற்குச் சான்று.

ராாஜபக்ஸவினரின் மீதான கசப்புணர்வு, நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி, நிறுத்தப்படாத ஊழல், மர்மமாக மேற்கொள்ளப்படும் ரணில் விக்கிரமசிங்கவின் அதிகார அரசியல் போன்றவற்றுக்கு மாற்றாகத் தம்மை நிறுத்தி விடலாம் என்று ஜே.வி.பி சிந்திக்கிறது. இதற்கு அதனுடைய கவர்ச்சிகரமான தலைவரான அநுர குமார திஸநாயக்கவை நிறுத்தப் பார்க்கிறது.

இதற்கெல்லாம் அப்பால் ஐக்கிய மக்கள் சக்தி என்ற சஜித் பிரேமதாசவின் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணி சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்குத் தயாராகியுள்ளது. இதற்கான உடன்படிக்கைகள் கூடச் செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைக்கின்றன.

இந்த நான்கு தரப்பின் மூன்று வேட்பாளர்களும் புதியனவற்றை இலங்கைத்தீவுக்குத் தருவார்கள் என்று நம்புவதற்கொன்றுமில்லை. ஜே.வி.பியிடமிருந்து சிறிய அளவில் மாற்றங்கள் ஏதும் நிகழலாம். அதுகூட இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நிகழச் சாத்தியமில்லை. ஏனென்றால் அதற்கான இடம் ஜே.வி.பியின் இதயத்திலும் இல்லை. மூளையிலும் இல்லை. அதனுடைய கற்பனை வேறு விதமானது. இனவாதத்திலிருந்து மீண்டு விடாத சீர்திருத்தத்தையே அது கொண்டுள்ளது. மெய்யான மாற்றத்தை அல்ல. மாற்றம் போன்ற தோற்றத்தை.

ஆனால், சஜித், ரணில், ராஜபக்ஸவினரை விட வரலாறு அநுரகுமார விடம் அதிகமாக எதிர்பார்க்கிறது. வரலாற்றுச் சூழலும் அவருக்கு (தேசிய மக்கள் சக்திக்கு) வாய்ப்பாக உள்ளது. ஆனால் அதைப் புரிந்து கொண்டு சரியாகச் செயற்படுவதற்கு (துணிவாக முடிவெடுப்பதற்கு) அநுரகுமாரவும் தயாரில்லை. அவருடைய தேசிய மக்கள் சக்தியும் தயாராக இல்லை.

சஜித் பிரேமதாச தன்னை மிகத் தெளிவாகவே நிரூபித்து விட்டார். இனப்பிரச்சினைக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் எந்தப் பெரிய நன்மைகளையும் அளிக்கக் கூடிய வல்லமை எதுவும் தன்னிடமில்லை என. அவர் முல்லைத்தீவு – முருகண்டிப் பகுதியில் அமைத்த முழுமையடையாத  வீடுகள் இதற்குச் சாட்சியம். எந்தத் தீர்மானத்தையும்

ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஆனால் அவர்தான் மீட்பரைப்போலத் தோற்றம் காட்டிக் கொண்டிருப்பவர். அவரைக் கடந்து சிந்திக்கக் கூடிய – செயற்படக் கூடியவர் யாராவது வந்தால்தான் இலங்கையில் மாற்றம் நிகழும். அது அரசியல், பொருளாதாரம் எனச் சகல தளங்களிலுமாக இருக்கும்.

ஆனால் அப்படியான மூளையும் நல்லிதயமும் உள்ள எவரையும் அண்மையில் காண முடியவில்லை.

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதைப்போல, யாரும் எங்கிருந்தும் களமிறங்கலாம். அல்லது களமிறக்கப்படலாம். அப்படித்தான் முன்னர் எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் சந்திரிகா குமாரதுங்க களமிறக்கப்பட்டார். 2010 இல் யாருமே எதிர்பாராத வகையில் சரத் பொன்சேகா நிறுத்தப்பட்டார். ஒரு இராணுவத்தளபதி ஜனாதிபதி வேட்பாளரா என்று பலரும் புருவத்தை உயர்த்தி, முகத்தைச் சுழித்தனர். ஆனால், சரத் பொன்சேகா ஐம்பது லட்சம் வாக்குகளைப் பெற்றார்.

அதற்குப் பிறகு 2015 இல் கோட்டபாய ராஜபக்ஸ கூட அப்படியான ஒரு தெரிவினால் நிறுத்தப்பட்டவரே. உண்மையில் தான் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவேன், அதில் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவேன், அந்த வெற்றியின் ருசியை அனுபவிக்க முன்பு பதவியிலிருந்து அவ்வளவு விரைவாக விரட்டப்படுவேன் என்று கோட்டபாய சிந்தித்திருக்கவே மாட்டார். அவ்வளவும் நடந்து முடிந்தன.

ஆகவே இவற்றைப்போல எதிர்பாராத விதமாக நம்முடைய அவதானத்துக்கு வெளியிலிருந்து வேறு யாரும் கூடப் புதிதாக களமிறக்கப்படலாம். அதற்கான வாய்ப்புகளும் உண்டு.

ஏனென்றால் இலங்கை அரசியல், அண்மைய ஆண்டுகளில் இலங்கையர்களால் தீர்மானிக்கப்படும் நிலையிலிருந்து விலகிப் பிற சக்திகளால் தீர்மானிக்கப்படுவதாக மாறியுள்ளது.  குறிப்பாக, இந்தியா, சீனா, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் ஆகியன இதில் முழுதாக ஈடுபடுகின்றன. இவற்றின் சதுரங்க ஆட்டத்தின் விளைவுகளே இன்றைய இலங்கை, இன்றையை ஆட்சி, இன்றைய ஜனாதிபதி, இலங்கையில் உலக வங்கி உள்பட அனைத்தும்.

இதனுடைய தொடர்ச்சியாகவே இனிவரும் இலங்கையும் இருக்கும். அதற்கமைவாகவே ஆட்சியும் ஆட்சித் தலைவர்களும் தெரிவு செய்யப்படுவர். இந்தத் தரப்புகளின் விருப்பத்துக்கு மாறான தலைமைகள் அதிகாரத்துக்கு வந்தால் ராஜபக்ஸக்கள் எப்படி தூர விலக்கப்பட்டனரோ அவ்விதம் விலக்கப்படுவர். ஆகவே இங்கே தேர்தல், ஜனநாயகத் தெரிவு என்பதெல்லாம் வெறும் கனவே!

இந்த யதார்த்தத்தை உணராமல், யதார்த்தத்துக்கு வெகு தொலைவில் நிற்கிறது தமிழ்த் தேசியத் தரப்பு. அது எப்போதையும்போல ஜனாதிபதித் தேர்தலிலும் தவறைச் செய்யவே முனைகிறது. கடந்த 11.03.2024 இல் தமிழ்த் தேசியத் தரப்பினர் யாழ்ப்பாணத்தில் கூடி ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த்தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதைப் பற்றி யோசித்திருக்கின்றனர். இதன் காணொளியும் Yu tupe காணக்கிடைக்கிறது. அதைப் பார்த்தபோது “ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது” என்ற தமிழ்ப்பழமொழிதான் நினைவுக்கு வந்தது.

இந்த மாதிரியான உணர்ச்சிகரமான எதிர்மறைச் சிந்தனைகளால்  தமிழ்ச்சமூகம் மிகப் பெரிய விலையைக் கொடுத்துள்ளது. குறிப்பாக சமானிய மக்கள்.

இலங்கைத்தீவின் அரசியல் யதார்த்தத்தை இன்னும் புரிந்து கொள்ளாத – புரிந்து கொள்ள விரும்பாதவர்களின் கோமாளி விளையாட்டு அது. இதனுடைய விபரீதம் சாதாரணமானதல்ல. மேலும் சிங்களப் பேரினவாதத்தைக் கூர்மைப்படுத்தும் முட்டாள்தனமான யோசனை அது.

புதிதாகச் சிந்திக்க முடியாதவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. வரலாற்றிலிருந்தும் சொந்த அனுபவங்களிலிருந்தும் கூட எதையும் கற்றுக் கொள்ள முடியாதவர்களாக இவர்கள் இருக்கிறார்கள் என்பது எவ்வளவு துயரமானது!

தமிழ் வேட்பாளர் என்பது ஒன்றும் புதியதல்ல. முன்னர் குமார் பொன்னம்பலம் அப்படி நின்றார். பிறகு சிவாஜிலிங்கம். தமிழ் வாக்குகளின்றியே ஒருவர் ஜனாதிபதியாக வரமுடியும் என்பதற்கு கோட்டபாய ராஜபக்ஸ உதாரணம். எந்த வாக்குகளுமின்றியே ஒருவர் ஜனாதிபதியாக முடியும் என்பதற்கு ரணில் விக்கிரமசிங்க எளிய சான்று. 

இந்த நிலையிற்தான் தமிழ் வேட்பாளர் பற்றிய சிந்தனை இருக்கிறது. குறைந்த பட்சம் மலையக, முஸ்லிம் மக்களை உள்ளடக்கிய தமிழ் பேசும் தரப்பிலிருந்து ஒரு வேட்பாளர் என்று சிந்தித்தாற் கூடப் பரவாயில்லை.

ஆக மொத்தத்தில் தேர்தலுக்கு முன்பே தேர்தற் களம் சேற்றுக் குழியாகக் கிடக்கிறது. இதற்குள் முத்தெடுப்பது எப்படி இலங்கை மக்கள்?



https://arangamnews.com/?p=10617

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.