Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எலும்பு வலு இழப்பது ஏன்?

கு.கணேசன்

spacer.png

ம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும்.

இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது.

‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன?

நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும்.

பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’.

ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.    

 

காரணங்கள் என்னென்ன?

எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது. 

குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு. 

இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.

 

என்னென்ன தொல்லைகள்?

பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும்.

நோயைக் கண்டறிவது எப்படி?      

முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது.

இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள்.

இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும்.

இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம்.

யாருக்கு வாய்ப்பு அதிகம்?

உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர்.

கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

  • உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா?
  • லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா?
  • உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா?
  • உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா?
  • அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா?
  • அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா?

சிகிச்சை என்ன?

இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது.

முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது.

கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம். 

என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம்.

சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். 

தடுப்பது எப்படி?

  • இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள்.
  • யோகாசனங்களைச் செய்வதும் நல்லது.
  • புகைபிடிக்கக் கூடாது.
  • மது அருந்தக் கூடாது.
  • காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது.
  • எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும்.
  • 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
  • ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 
  • இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும்.

https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis

  • கருத்துக்கள உறவுகள்

50 வயதில் இருந்து, மிகக்கூடிய விழும் விபத்து நடப்பது, படிகளில், குறிப்பாக மாடிப் படிகளில் இறங்கும் போது (uk சராசரி வீடுகளுக்கு மாடி இருப்பதால், UK இல் அதிகம்).

 

இதன் காரணம், இறங்கும் போது (அல்லது அதை ஒத்த அசைவில், உ.ம். துள்ளிச்  செய்யும்  Lunge உடற் பயிற்சியில்,  கீழ் சென்று நிலை எடுப்பது, மேல் எழும்புவதிலும் கடினம், அனால் செய்பவர்களுக்கு இதன் வேறுபாடுணர்வதில்லை, காரணம் சமநிலை பேணுவதில்  உள்ள பழக்கமும்,  பயிற்சியும்), குறிப்பிட்ட ஒரு தசை நார் ஏறத்தாழ ஒரே நேரத்தில் குறுகிறது, நீள்கிறது.


(ஆனால், நான் நினைக்கிறன், காலம் போக, இது 40   வயதில் இந்த மாடிப்படி இறங்கும்போது விழும்  விபத்து பிரச்சனை தொடங்கும். ஏனெனில், இருப்பது (sitting), நவீன  புகைத்தலாக மாறி வருகிறது. சில கம்பனிகள் இதை கவனத்தில் எடுத்து, நிற்கும் நேரத்தை கூட்ட கதிரைகள் , மேசையில்,  ஒன்று கூடும்  இடங்களில் நீக்கி விட்டன, வேலை முறையையும் மாற்றி உள்ளன).

 

அனால், 50 வயதில் இருந்து, படி இரங்கி  ஏறுதல் மற்றும் கவனமும்  அவசியம் , மற்றும் எல்லா அங்கங்களையும் கிரமமாக  பாவிப்பது அவசியம்.

 

பாவிப்பதால் தான் மூளைக்கு தெரிகிறது, ஆம், குறிப்பிட்ட  அங்கங்கள் பாவிக்கப்படுகிறது, அவற்றுடன் அதன் (மூளையின்) தொடர்பாடலை உற்சாகமாக வைத்து இருக்க வேண்டும் என்று.

 

பாவிக்காவிட்டால்,மூளையுடன் அங்கங்களின்  தொடர்பாடல் நலிவடைந்து, கிட்டத்தட்ட அங்கங்களின் அசைவுகளை மூளை தேவை இல்லை எனும் முடிவுக்கு வந்து, அங்க அசைவுகளை மூளை அணைத்து விடும் நிலைக்கு வருகிறது.

 

அசைவுகள் குறையும் போது, படிப்படியாக, அங்கங்கள் கிட்டத்தட்ட துருப்பிடிக்கும் நிலையை அடைகின்றன.

 

மற்றது, muscle mass (தசை திணிவு) குறைவடைதல், 50 இல் இருந்து, ஒவ்வொரு தசாப்தத்துக்கும் ஆக  குறைந்தது 10% ஆல் குறைகிறது.  இதன விளைவு, வெகு இலகுவாக விழுவது, முறிவது போன்ற விளைவுகள்.

 

முக்கியமான பிரச்சனை, சாதாரண அசைவில் எல்லா தசை நார்களும் பங்கெடுப்பதில்லை, அல்லது பங்கெடுப்பது குறைவு.  

(உ.ம். வேறு பதிவில் சொல்லி இருக்கிறேன், வயிற்று, நெஞ்சு கோறை தசை நார்கள் பாவிப்பது மிக குறைவு (ஆனால், உண்மையில் பாவிக்க வேண்டும்). பலருக்கு அப்படி தசை நார்கள் இருப்பதாய் உணர்வதில்லை, அறிவதில்லை.  மருத்துவ, உயிரியல் துறையில் இருப்பவர்களுக்கு தெரியும், ஆனால், பயிற்சி இல்லாமல் அவை பாவிக்கப்படுவது இயல்பாக வராது.)

 

(எனவே, தர்க அடிப்படையில்  பார்த்தல், muscle ஐ இயன்ற அளவு கட்டி எழுப்புவது 50 இல் இருந்து அவசியமாகிறது, அல்லது குறையும் வீதத்தை குறைப்பது. இதில் உடற்பயிற்சி பெரிய பங்கு வகிக்கிறது) 

 

முதல் உடல் பயிற்சியில் கவனம் செலுத்தாவிட்டாலும், 50 ஐ அண்மிக்கும் போது மிகுந்த கவனம் எடுத்து, இயன்ற அளவு, கிரமமாக உடல் பயிற்சி அல்லது அதை ஒத்த அசைவுகள் செய்ய வேண்டும்.

 

மற்றும் உடம்பை, உடல் பயிற்சி அல்லது அதை ஒத்த அசைவுகள் மூலம், இயன்ற அளவு, தொடர்ந்து இந்த அசைவு செய்ய  முடியாது (கிட்டத்தட்ட சவால்) என்பதை அவ்வப்போது எதிர்கொள்ள வைக்க வேண்டும்.
இந்த பயிற்சி மூளைக்கும் பொருந்தும்.

   

ஏன் 50 களில் இது வீறுகொண்டு தொடங்குகிறது என்பதற்கு (ஏனெனில் உடம்பு சரிவு தொடங்குவது 30 க்கு பின்)  வயது போகிறது, டெஸ்ட்ரோன்  குறைகிறது, மாதவிடாய் நின்று விடுகிறது என்ற பொதுவிளக்கங்களை என்பதை தவிர வேறு விளக்கங்கள் நான் அறியவில்லை.

 

(இயன்ற அளவு செய்தால் கிடக்காமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை). 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.