Jump to content

இராமன் வில் - நெற்கொழு தாசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இராமன் வில் - நெற்கொழு தாசன்

 

அவன் சாவோடும் போரோடும் வளர்ந்த குழந்தை. இப்போது எல்லாம் அழிவுற்றதான ஒரு தனியன்.  எறும்பைப் போல,  இலையானைப் போலவாவது தனக்குமொரு  வாழ்க்கை   இருந்துவிடாதாவென எண்ணுகின்ற போதெல்லாம் தனது பெயரைத்தான்  நினைத்துக்கொள்வான். பார்க்கும், பழகும்  அனைவருக்கும் அவன் எல்லாவற்றாலும் விடுதலை பெற்றவொரு  சாமானியன்.  விடுதலை என்பதன் அர்த்தம் உள்ளங்கை ரேகைபோல ஆளுக்காள் மாறுபட்டாலும்  விடுதலையில்தான் எல்லாமுமிருக்கிறது  என்பவர்களுக்கு, தனது பெயரே விடுதலை என்பதுதான்  என்பதை,  விளங்கவைக்கவே தன் கதையை சொல்லுவான். அந்தக் கதை கருப்பிகுளத்திலிருந்து ஆரம்பிக்கும். 

"இராமன் வில்லு காட்டுகிறேன் வா" என்று மதுரா அவனது கையைப் பிடித்து அழைத்துச்சென்று கருப்பி குளக்கட்டில் இருத்தி வைத்திருந்த, கருமேகங்கள் சூழ்ந்த அந்த மாலைப்பொழுதை நினைவிலிருந்து மெதுவாக மீட்கத் தொடங்கும்போதே ஆக்காட்டி அலைவுற்றுக் கத்தும் ஓசை அவனது ஒற்றைக் காதுக்குள் கேட்கத் தொடங்கும். அந்த ஓசை தலையைப் பிளந்து நெருப்புக்கோளம் வெளிவருவதுபோல  உணரவைக்கும்.  பின்வந்த  நாள்களில் யாருமில்லாமல் தனியனாகக்  குளக்கட்டில்போய் அமர்ந்திருந்தால், அந்த வழியாக தலைச்சுமையுடன் நடந்து செல்வோரையும், மாடுகளை ஓட்டிச்செல்வோரையும், அருகிலிருந்த முகாமிலிருந்து பயிற்சிக்காக ஓடும் போராளிகளையும் பார்த்துக் கொண்டதெல்லாம்  நினைவுக்கு வருவதில்லை. ஆனால் அந்த முதல்நாள் நினைவுகள், ஆக்காட்டியின் அலறல் இடைவிடாது தொடர்ந்துகொண்டே இருந்தது. அந்தச் சாவும் நிழல்போல வளர்ந்துகொண்டே இருந்தது. 

வவுனிக்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதும் அதுவழியாக நுரைத்துப் பெருகிவரும் நீர்  வயல்களையும், குடிமனைகளையும் கடந்து கருப்பிகுளத்தை வந்தடையும். குளம் நிரம்பியதும் அங்கிருந்து மூன்று கிளை வாய்க்கால்களால்  பிரிந்து வடக்கு வயல்களைக் கடந்து விரிந்துகிடக்கும் பெருங்காட்டை ஊடறுத்துச் சென்று பாலியாற்றில் கலக்கும். யானைகளும் கரடிகளும் நிறைந்துகிடக்கும் அந்தக் காட்டிலிருந்து பலதடவைகள்  யானைகள் கருப்பி குளத்தில் இறங்கி நீர் தூவிக் குதூகலிப்பதும் உண்டு. தாமரைகளும் அல்லியும் நிறைந்து  கருப்பிகுளம் எக்காலமும் செழிப்புற்றுக்கிடக்கும். குளத்தின் அகன்ற கட்டில் இருந்து அந்த நீரின் அசைவுகளையும் மிதக்கும் தாமரை இலைகளையும் அதில் தாவும் சிறு பூச்சிகளையும், பசியகருமைபடர்ந்து விரிந்துகிடக்கும் பெருங்காட்டையும்  பார்த்துக்கொண்டிருந்தால்  நேரமே போவது தெரியாது. எல்லாவற்றையும் இழந்த பின்னும் விடுதலைக்கு அந்தக் குளக்கட்டில் வந்திருந்ததும் கிடைக்கும் அமைதி அலாதியானது. இரவுகளையும் கூட அந்தக் குளக்கட்டிலேயே உறங்கிக் களித்துவிடவும் தயாராகவே இருந்தான். ஆனால்  இரவுகளில் அங்கு வரும் யானைகளுக்கும் நரிகளுக்கும் இடையூறாக மனிதவாடை இருந்து விடக்கூடாதென எழுந்து சென்றுவிடுவான். கருப்பி குளத்திலிருந்து இருநூறு மீற்றர்கள் தூரத்தில் அவனது தற்போதைய வீடு இருந்தது. அவனுக்கு அது வீடு. ஏனையோருக்கு வயல்காவலுக்கு கட்டப்பட்ட  குடில் அல்லது கொட்டில்.

அன்று கையைப்பிடித்து அழைத்துச்சென்றவள், அவனைக் கட்டில் இருத்திவிட்டு குளத்தில் இறங்கி தாமரைப் பூக்களையும் சில தாமரைக் கிழங்குகளையும் பிடிங்கி வந்தாள். பின் கட்டில் வாகாக ஏறி அவனுக்கருகில் அமர்ந்துகொண்டு தாமரை இதழ்களைப் பிரித்து, நடுவில் மகரந்தம் சூழ்ந்திருந்த பகுதியை காரித்தின்றாள். தானே கடித்து துண்டாக்கி விடுதலைக்கும் கொடுத்தாள். ஒரு கையில் நிறைந்த தாமரைப்பூக்களுடன் தன்னருகில் இருந்த மதுராவை பிரியத்துடன் பார்த்தான்.சில்லெனகுளிர்ந்த காற்று அவனது கழுத்தைத் தடவிப்போனது. அப்போதுதான்  "அங்க பார் இராமன் வில்லு" என  வானத்தில் தோன்றிய வளைந்த வண்ணக்கலவையை சுட்டிக்காட்டினாள்.  குளக்கட்டிலிருந்து நீருக்குள் குதித்து இராமன் வில்லு, இராமன் வில்லு வா வாவெனக் கத்தினாள்.  அவனும்  குளத்தின் நீருக்குள் மெதுவாக  இறங்கினான். பல தடவைகள் தாயுடன் அந்தக் குளப்பகுதியை நடந்தோ சைக்கிளிலோ கடந்துபோயிருந்தாலும் குளத்தின் அருகிலோ அல்லது குளத்தின் கட்டுகளுக்கோ சென்றதில்லை. குளத்தில் முதலை இருக்கிறதென வெருட்டியிருந்தார்கள். அந்த பயம் காரணமாக  அவன்  குளத்திற்குள்  இறங்கிப் பார்க்க கேட்டதுமில்லை. விரும்பியதுமில்லை. 

அன்றுதான் குளத்தின்கரையில், கால்கள் நீரில் புதைய முதன் முதலாக நின்று வியந்து பார்த்தான். கால்களுக்கு கீழே பூமியே புதைவதுபோல தோன்ற மதுராவின் கைகளைப் பற்றிக்கொண்டான். தூரத்தே தெரிந்த கரும் முகில்களை, அவற்றின்  திரண்ட பருமன்களை, அதனூடு இடைவெட்டி உருவாகிக் கிடந்த வானவில்லை கண்கள் விரியப் பார்த்தான். பதினைந்து வயதேயான மதுரா, தான் வானவில்லை பார்க்கவும், தாமரைப் பூக்களை ஆய்ந்து விளையாடவும் வேண்டுமென்ற  ஆவலில்தான் அவனை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். அவளுக்கு அந்த வனப்புமிகுந்த நிலமும் குளமும் குளத்தின் அருகிலிருந்த விளாத்தி மரநிழலும்  மிகப் பிடித்தமானது. நிழல் வளர்வதைப்போல தானும் வளர்வேன் என்று சொல்லுவாள். பற்றிப்பிடித்திருந்த கையை விலக்கிவிட்டு இராமன் வில் என்ற அந்த வர்ணக்கலவையை  எட்டிப் பிடித்துவிடலாம் என்பதுபோல மகிழ்ந்து  துள்ளியதைப் பார்த்தான். அந்தக் கணத்தில்தான் அது நிகழ்ந்தது. வானம் இடிந்து விழுந்ததுபோலவொரு ஓசை.  மதுரா முகங்குப்புற விழுந்தாள். அவளது தலையிலிருந்து வழிந்த குருதி குளத்து நீரில்கலந்து   வானில் தோன்றியதுபோலவே  இராமன் வில்லுகள் பல  தோன்றின. அந்த சத்தத்தால் கலவரமுற்ற ஆக்காட்டியொன்று அலைவுற்றுக் கத்தியபடி வட்டமிட்டுப்  பறந்தது.

அவன் அருகிலிருந்து பார்த்த முதல் சாவு அவளது. ஏன் சுட்டார்கள். எதற்கு சுட்டார்கள். எங்கிருந்து சுட்டார்கள். எதுவுமே அவனுக்குப் புரியவில்லை. மறுநாள் பலவித தோரணைகள் கொண்ட  பலர் அவனிடம் கேள்விகள் கேட்டார்கள். கருப்பிகுளத்தின் மறுகரையில், "எங்களூர்காரங்க" என்று அந்தக் கிராம மக்களால் அழைக்கப்பட்ட, இந்திய இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி  மலர்வளையத்துடன் வந்து நீண்டநேரம் கைகளை கட்டியபடி கண் கலங்க மதுராவில் உடலருகில் நின்றிருந்தார். தவறுதலான சூடு என்று ஊர்ப்பிரஜைகள் குழுவிடம் கூறி, சூட்டினை மேற்கொண்ட நபரை  இராணுவ நீதிமன்றில் நிறுத்துவதாகவும், சாட்சி சொல்லவரும்படியும் கோரிக்கை விடுத்து தன்னை தவறற்றவனாக நிறுவிக்கொண்டார். கரும் பச்சை உடையில், முகத்தில் மீசையோ தாடியோ இல்லாமல் பளிச்சென்றிருந்த  அவரது தோற்றமும், கையில் தன்னைப்போலவே  சின்னவிரலோடு சேர்ந்திருந்த ஆறாவது விரலும் அவனுக்குள் படிந்துகொண்டது. வீட்டுக்கு அடிக்கடி வந்து சாப்பிட்டு செல்லும் தாடிமீசை தரித்த பலருடன் அந்த அதிகாரியை ஒப்பிட்டுப் பார்த்தான். இவர், அவர்கள் யாரைப்போலவும்  இல்லையென தலையை அசைத்துக் கொண்டான்.  அப்போதுதான்  அந்த அதிகாரியின் சீருடையில் இருந்த மூவர்ணத்தை பார்த்தான். அதுவொரு சிதைவுற்ற இராமன் வில் என மனதுக்குள் எண்ணிக்கொண்டான்.  

மதுராவின் சாவின் பின்வந்த பத்தாம் நாள் அவனது வீடு எரிக்கப்பட்டது. அவனும் அம்மம்மாவும் தவிர மற்ற அனைவரும் கருகி இறந்தனர். பயத்தில் நடுங்கிய ஊர் காட்டுக்குள் இறங்கி ஒளிந்துகொண்டது. ஊரோடு அவனும் சேர்ந்துகொண்டான். காடு அம்மம்மாவை வாங்கிக் கொண்டு தன்  வெம்மையை அவனுக்குக்  கொடுத்து அரவணைத்துக் கொண்டது. செஞ்சிலுவைச்சங்கத்திடம் முறையிட்டதாலும், சாட்சியாக அவன் இருந்த காரணங்களாலும் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக்குழுவே வீட்டினை எரித்து படுகொலையை நிகழ்த்தியதாக காடெங்கும் முணுமுணுப்புகளால் நிறைந்திருந்தது. குடும்பத்தோடு அவனும் எரித்தழிக்கப்பட்டுப்போனான் என வரலாறு பதிந்துகொண்டது. விடுதலை என்ற அவனது பெயர் காட்டைத்தாண்டி, கருப்பிகுளத்தை கடந்து தமிழ் நிலமெங்கும் பரவியது. 

சிறுவயதில் மயிலிறகு பொறுக்கக் கூட்டிச்செல்லும் தம்பியின் நினைவாகவே விடுதலை என்ற பெயரை தனக்கு வைத்தாக தாய் சொல்லியிருந்தாள். முகம் தெரியாத அந்த மாமனின் கண்களும் உனது கண்களைப்போலதான்  இருக்குமென்று  அம்மம்மா கூறிய நாளில் அவனுக்கு அந்தப்பெயர் குறித்தொரு பெருமித உணர்வே கிடைத்தது. அந்தப் பெருமிதம்தான்  இன்றைய வாழ்வின் நாசமறுப்புக்கு ஆரம்பப்புள்ளி என்று சொல்வான். தன் நினைவுகளிலிருந்து தப்பி ஓட நினைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இயலாமையால் திரும்பி வந்து கருப்பிகுளத்தின் கட்டினில் அமைதியாக இருந்துவிடுவதை அல்லது அந்தப் பெருங்காட்டுக்குள் இறங்கிவிடுவதைத்  தவிர வேறுவழி தோன்றியதில்லை. காலையோ மாலையோ குளத்தின் கரையினில் அல்லது விளாத்திமர நிழலில் அமர்ந்துவிட்டால் போதும் எல்லா நினைவுகளும்  கழன்றுபோக  வெற்று மனிதனாகிடுவேன் என்பான்.

சிறுவயதுகளில், பச்சை உடுப்புடன் கம்பீரமாக வந்து, மயில் இறகு பொறுக்கித்தரும் மாமனை கனவுகளில் கண்டிருக்கிறான். கைவிரலைப்  பிடித்து அழைத்துச்செல்லும் மாமன் அப்படியே வானம் இறங்கும் தொலைவுவரை நடந்து கொண்டிருக்க, ஆயுதமொன்றின்மேல் தொப்பியை கவிழ்த்து வைத்து சுவர்களில் வரையப்பட்ட ஓவியமொன்றொடு கனவு முடியும். பாடசாலைகளில் தன் கனவு பற்றிப் பகிர்ந்துகொண்ட போதெல்லாம் மற்ற நண்பர்களும், தங்களுக்கும் அதேசாயலிலொரு கனவு தோன்றுவதாக கூறுவார்கள். மாமாக்களினதும், அண்ணாக்களினதும் கதைகளால் அந்தக் காலங்கள் நிரம்பியிருந்தன. அவனிடம் மாமாவின் கதை அரைகுறையாவே இருந்தது. 

மதுராவின் சாவின்பின் பலநாட்கள் கழிந்து, ஒரு புகைப்படம் கூட இல்லாமல்போன மாமனைப் பற்றி அயல்வீட்டு "மணிமுத்தாறு" ஆச்சியிடம் கேட்டான். "ஒன்றாக வந்தோமே மாநகரத்திலிருந்து நன்றாகத்தான் இருந்தோமா" என ஆரம்பித்து, றப்பர் தோட்டத்தில் ஒரேயொருநாள்  வேலைக்கு போகாத காரணத்தால் ஆப்கானிலிருந்து வேலைக்கு வந்த காவலாளியொருவன்  சுட்டுக்கொன்ற கதையையும், பதின்நான்கு வயதுப் பாலகியை  நிர்வாணமாக்கி பிரம்பாலடித்த தோட்டத்துரையின் திமிரையும், அங்கிருந்து ஒளிந்தோடி இங்கு வந்தும் ஒளியுறமே, பழைய கப்பல் ஏறி வாழவென்று வந்தோமேயென, தங்கள் பூர்வீகக் கதையை  ஒப்பாரியோடு கூறியதையும்,  மண் அள்ளித் தூற்றியதையும் பார்த்தான்.  அதன்பின் அதைப்பற்றி எதுவுமே கேட்கவில்லை. மாமன் குறித்து தனக்குள் ஒரு சித்திரத்தை வரைந்துகொண்டான். அது ஊரவர்களின், மாமனின் நண்பர்கள் சொன்ன கிளைக் கதைகளிலிருந்து அவன் உருவாக்கியது. மாமன் இருந்திருந்தால் வீடு எரிந்திருக்காது. அப்படி எரிந்திருந்திருந்தாலும் ஒரு தேவதூதன்போல கையைப்பிடித்து  தங்களை காப்பாற்றி இருப்பானென உளமார  நம்பிக்கை கொண்டான்.

எப்படியும் திரும்பி வந்துவிடுவானென்று அத்தனை பேரும் நம்பியிருந்தாக சொல்லியிருந்ததுதான் அவனுக்கு வியப்பை கொடுத்தது. ஏனென்றால் ஆபத்துவேளைகளில்  காற்றோடு காற்றாற்றவும் நீரோடு நீராகவும் மரத்தோடு மரமாகவும் மாறிவிடக்கூடிய அசாத்தியமான திறமை கொண்டவனென  கூறியிருந்தார்கள். ஒருநாள் பத்துமணி சேவல் கூவும்போது அவனோடு வந்துசென்றவர்கள் மறுநாள் வெள்ளிவிழும் பொழுதில் வந்து அவன் இல்லையென்றும் உடல் கிடைக்கவில்லையென்றும் கூறினார்களாம். அதுவொரு இயக்க இரகசியம் எனக் கருதி எப்படி  நடந்தது என்று யாருமே கேட்கவில்லை. அவர்களும் சொல்லவில்லை. பின் பல தடவைகள் வந்துசென்றிருந்தாலும் அதைபற்றி எதுவுமே அவர்களும்  பேசியதில்லை. இவர்களும் கேட்டதில்லை.   அவர்கள் அவனுக்கு வைத்த பெயரை மட்டும் கூறினார்களாம். அந்தப் பெயரை இவன் பிறந்தபோது அவர்களே  இவனுக்கு வைத்துவிட்டார்கள். "விடுதலைக்கு எத்தனை மாமன்கள் பாருங்கள்" அக்கா என்று கூறுவர்களாம். 

சுற்றியிருந்த அத்தனையும் இல்லாமல்போய் காட்டிலிருந்து மீண்டும்  திரும்பி வந்தபோது அவன் வாழ்ந்த நிலத்தில் எதுவுமே மிஞ்சியிருக்கவில்லை. ஒவ்வொரு இடமாக மாறிமாறி இனி ஒழிய இடமில்லையென்ற நிலைவந்தபோதுதான் திரும்பிப் பார்த்தான் கூட யாருமேயில்லை. காட்டின்  வெம்மை அவனுக்குள் நீறாமல் எரிந்துகொண்டிருந்தது.  எல்லாக் காலங்களிலும், தங்கள் எல்லோரிலும்   ஆயுதங்களால் நிகழ்ந்த வடு  அவனுக்குள் ஆறாமல் கிடந்தது. ஆயுதங்களை வெறுத்தான். அது வழங்கிவிடும் அதிகாரபோதையை காறி உமிழ்ந்தான். அதன் மூலம் கிடைக்கின்ற பாதுகாப்பையும் துணிவையும் நிராகரித்தான். அது நிகழ்த்திய  கொலைகளை  துயரத்தோடு சுமந்தான். ஆனால் ஆயுதம் மீதான வெறுப்பு அதனைச் சுமந்து திரிந்தவர்கள் மீது வரவேயில்லை. அவர்களை பரிதாபத்துடன் நேசித்தான். இது அவனுக்குள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது. 

இரண்டுபட்ட மனநிலையில் நிராகரிக்கவும் வெறுக்கவும் அதேசமயம் நேசிக்கவும் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டான். தனிமை சூழ்ந்த நாட்களில்  கருப்பிகுளத்தை கடந்து காட்டுக்குள் இறங்கிவிட்டால் நாளும் பொழுதும் போவது தெரியாமல் அலைந்துகொண்டே இருப்பான். காடு அவனுக்கு சலிப்பதில்லை. காட்டுக்குள் ஓடும் ஆறொன்றின் அமைதியுடன் நடந்துகொண்டே இருப்பான். ஊருக்குள் திரும்பிவந்த  நாள்களில்  அவன் நடந்த வழியெங்கும் சாவுகள் வளர்ந்து கொண்டே இருந்ததைப் பார்த்தான். அதனால் ஊருக்கே வர அஞ்சினான். யாரும் யாருக்காவும் காத்திருக்கவில்லை. எல்லைகள் மாறிக்கொண்டிருந்தன. எந்த ஆயுதத்தாலும் அவனை நெருக்க முடியவில்லை. நெருங்க முயன்ற போதெல்லாம் காடு அவனை தனக்குள் மறைத்துக் கொண்டது. வெளியில் திசைகள் பற்றியெரிந்த பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. மக்களின் பெரும் நம்பிக்கை சரிந்துபோனதை அவனால் உணர்ந்துகொள்ளமுடிந்தது. ஆயுதம் மீதான அவனது வெறுப்பும், நிராகரிப்புமே வாழ்வதற்கு போதுமானது எனக் கண்டுகொண்டான். மதுராவில் தொடங்கி ஒவ்வொருவராக அவனைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கக் கண்டான்.  

வீடு எரிந்தபோது ஊரவர்களுடன் காட்டுக்குள் இறங்கியவன், ஊரே எரிந்து எழுந்து திசையறியாது ஓடியபோது, தனியனாக காட்டுக்குள் இறங்கினான். காடு அபயமளித்தது. எப்பவாவது ஒருதடவை ஊருக்கு திரும்புவான். அவன் திரும்பும்  ஒவ்வொரு தடவையும் ஊர் மாறிக்கொண்டிருந்தது. முகங்கள் மாறின.மொழிகள் மாறின. ஆயுதங்கள் மாறின. பச்சை உடைகள் மாறின. மனிதர்கள் மாறினார்கள். அந்தமாற்றங்கள் அவனை ஊரிலிருந்து விலகவைத்தன. இருந்தும் கருப்பிகுளமும் அவன் வாழ்ந்த நிலமும் அவனை அழைத்துக்கொண்டுதான்  இருந்தது. அதற்காக ஒருநாள்  ஊருக்கு திரும்பியவன் கைதுசெய்யப்பட்டான்.  

மீண்டும் ஒருதடவை விடுதலை என்ற பெயர் தமிழ் நிலமெங்கும் பேசுபொருளானது. ஊடகங்களில் சில முன்னாள் போராளியென்றன, சில அப்பாவி  இளைஞன் என்றன,  அரசியல் தலைவர்களில் சிலர் போராளிகளை திரட்டி புதிய அமைப்பை கட்டியெழுப்பும் தலைவன் என்றார்கள். தாக்குதலுக்கு மீண்டும் தயாராகின்றன படையணிகள் என்றார்கள். ஆயுதங்களை வெறுத்து நிராகரித்த அவனைச் சுற்றிலும் ஆயுதங்கள் பேசுபொருளாயின.  தடுப்புக்காவலில் இருந்த அவனுக்கு இவை எதுவுமே தெரியாது. விசாரணையின்போது எங்கெல்லாம் உறங்கியதாக கூறினானோ, எங்கெல்லாம் உணவு தயாரித்ததாக கூறினானோ அங்கெல்லாம் அழைத்துச் செல்லப்பட்டான். அவன் கண்முன்னாலேயே  அந்த இடம் உருக்குலைக்கப்பட்டது. தன்னால், தனக்கு அபயமளித்த காடு சிதைக்கப்படுவதை நேரில் பார்த்தான். இயலாமையோடு யாருக்கும் தெரியாமல் அன்றுவரை காப்பாற்றிவந்த ஆயுதம் பற்றிய இரகசியத்தை காட்டுவதாக கூறினான். தன்னைச் சுற்றிலும் ஆயுதங்கள் குறிபார்க்க  அழைத்துச் சென்றான்.  அவர்கள் எழுப்பிய ஆரவாரங்களால் கலவரமுற்று ஆக்காட்டியொன்று அவலக்குரல் எழுப்பியபடி பறந்துபோனது.

கருப்பிகுளத்துக்கு நேர் எதிராக இருந்த கட்டுப்பகுதிக்குள் நீண்ட நேர பயணத்தின் பின், வானத்தை மறைத்துநின்ற பெருமரங்களிடையில் திசையெங்கும் கிளையெறிந்து உயர்ந்து நின்ற அரசமரத்தின் கிளையொன்றை சுட்டிக்காட்டினான். அவன் காட்டிய திசையில் பார்த்த அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். துருவெறிப்போன ஆயுதமொன்றை தோளில் சுமந்தபடியொரு  எலும்புக்கூடு  கயிற்றில்  அசைந்து கொண்டிருந்து. அதற்கு நேர்கீழே நிலத்தில் குவியலாக இருந்த கரிய கற்களில்  யாரோ வழிபாடு நிகழ்த்தியமைக்கு ஆதாரமாக கருகிய காட்டுப்பூக்கள் கிடந்தன.

உயரதிகாரியின் கட்டளைக்கு இணங்க மரத்தில் எறிய இராணுவ வீரர்கள் கயிறை அறுத்து மெதுவாக எலும்புக்கூட்டை இறக்கினார்கள். அதன் தோளில் கொழுவியிருந்த துருப்பிடித்திருந்த ஆயுதத்தில் மிகப் பழையதான தினக்குறிப்பேடு சேர்த்து கட்டப்பட்டிருந்தது. அதனை எடுத்துப் பார்த்தபோது எழுத்துக்கள் எல்லாம் அழிந்துபோய் பக்கங்கள் சிதைந்து மக்கி கையோடு கழன்று வந்தன. அதிலொன்றை எடுத்து  பார்த்தபோது அதில் அச்சிடப்பட்டிருந்த ஆண்டு மட்டும் தெரிந்தது. அது  ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து எட்டு. 

விடுதலை விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டான்.  எலும்புக்கூடு ஆயுதம் தினக்குறிப்பேடு கயிறு  கீழே இருந்த கருகிய மலர்கள் என எல்லாவற்றையும் சேகரித்து  ஆய்வுக்கு அனுப்பினார்கள். நீதிமன்றத்தால்  விடுதலையை விசாரணைக் கைதியாக வைத்திருக்க அனுமதியளிக்கப்பட்டது. ஆய்வுக்கு அனுப்பிய பொருள்களின் முடிவு கிடைத்தபோது, கருகிக்கிடந்த மலர்களில் விடுதலையின் கைரேகை இருப்பதாக சொல்லி அவனை புனர்வாழ்வுக்கு அனுப்பினார்கள்.   வழக்கை முடித்துவைத்த நீதிமன்றம்  இலங்கைக்கான இந்திய வதிவிடப் பிரதிநிதியை அழைத்து, எலும்புக்கூட்டையும், ஆயுதத்தையும், தினப்பதிவேட்டையும்  கையளித்தது. அந்த நபர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாமென்ற அய்யத்தையும் நீதிமன்றம் தெரிவித்துக்கொண்டது.

எலும்புக்கூட்டை பெற்றுக்கொண்ட இந்திய தூதுவராலயம், தமது சார்பில் டீ. என்.ஏ சோதனைகள் உட்பட அனைத்தையும் மீண்டும் செய்து கொண்டார்கள். பின்   முழு இராணுவ மரியாதையுடன் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கிருந்து திரட்டப்பட்ட  தகவல்களுடன் ஒப்பிடப்பட்டு அடையாளம் காணப்பட்டு தமிழகத்தின் "மணிமுத்தாறு"  என்ற கிராமத்திற்கு இராணுவ மரியாதையுடன் எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு  உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட பின்னர்,  உறவினர்கள் கூடிநிற்க, இலங்கையில் இராணுவப் பணியிலிருந்தபோது அனுப்பியிருந்த கடிதமொன்றும் வாசிக்கப்பட்டது. அதில் விடுதலையின் கண்கள் ஆயிரமாயிரமென பெருகுவதாகவும் ஒருவரி எழுதப்பட்டிருந்தது.  தங்களது தந்தை இலங்கையில் வாழ்ந்த இடத்தை பார்க்க விரும்புவதாக அவர்கள் கோரிகை விடுத்தார்கள். நீண்ட பரிசீலனையின் பின் அவர்களது விருப்பத்தை  நிறைவேற்ற இந்திய தூதரகம் முன் வந்தது. அத்தோடு அவர்கள் விடுதலையை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. 

அவர்கள் விடுதலையை சந்தித்தநாளில், காட்டினை ஊடறுத்து முகாம்கள் முளைத்திருந்தன. விலங்குகள் யாவும் இடம்பெயர்ந்திருந்தன. பறவைகள் தூரப்போயிருந்தன. தாமரைகள் இல்லாமல் கருப்பிகுளம் பாளம் பாளமாய் வெடித்துக்கிடந்தது. காடு தன்னை காடென மறந்து வெம்மையை இழந்து  விட்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக  காடு எல்லோருக்கும் எட்டாத இடமாயிற்று. இப்போது காற்றும் காட்டாற்று வெள்ளமும் அனுமதி பெற்றுத்தான் காட்டுக்குள் உள்நுழைய முடிகிறதென, இந்தக் கதையை கருப்பிகுளக்கட்டில் இருந்து, காட்டைப் பார்த்தபடி சொல்லிமுடித்தான். 

(இமிழ் – மார்ச் 2024)

மூலம்: நெற்கொழு தாசன் Messenger ஊடாக.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

கொலைகளை  துயரத்தோடு சுமந்தான். ஆனால் ஆயுதம் மீதான வெறுப்பு அதனைச் சுமந்து திரிந்தவர்கள் மீது வரவேயில்லை. அவர்களை பரிதாபத்துடன் நேசித்தான்.

பதிவுக்கு நன்றி கிருபன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதங்களை வெறுத்த ஆனால் ஆயுதம் தாங்கியவர்களை (போராளிகளை) வெறுக்காத இருமையான மனநிலை. தமிழர்களின் போராட்டம் பெரிய அழிவுகளைக் கொடுத்தது. ஆனால் ஆயுதப்போர் ஒரு பலனையும் தரவில்லை. இந்த விரக்தியான நிலைதான் 90 களுக்கு முன்னர் பிறந்தவர்களினது. அது கதையில் தெரிகின்றது.

கதையின் முடிவில் காட்டாற்று வெள்ளமும் அனுமதி பெற்றுத்தான் ஓடுகின்றது என்பது “அமைதி”யான இக்காலத்தில் அதிகாரமும், இராணுவ பலமும் எப்படி அடக்குமுறையைத் தொடர்கின்றன என்ற குறியீட்டுடன் முடித்தமாதிரி உள்ளது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பதினைந்தாவது மே 18: குற்றமாகிய கஞ்சி? - நிலாந்தன் 15 ஆண்டுகள் சென்றுவிட்டன. இப் 15 ஆண்டுகளில் தமிழரசியலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன? இருந்த பெரிய கூட்டுக்கள் உடைந்து சிறிய கூட்டுக்கள் உருவாக்கியுள்ளன. கட்சிகளுக்குள்ளே உடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. மக்கள் இயக்கங்கள் தோன்றிப் பின் மறைந்திருக்கின்றன. ஐநாவில் சான்றுகளைத் திரட்டும் ஒரு பலவீனமான பொறிமுறை இயங்கிக்கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரும் போராட்டத்தில் குறிப்பாக கனடாவில், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சில வெற்றிகள் எட்டப்பட்டிருக்கின்றன. அதேசமயம் இமாலயப் பிரகடனம் போன்ற பிரகடனங்களும் அங்கிருந்துதான் உற்பத்தியாகின்றன. இவற்றைவிட முக்கியமாக இறுதிக்கட்டப் போரின் பின், யார் உயிருடன் இருக்கிறார்கள்? யாருக்கு அஞ்சலி செய்யலாம்? செய்யக்கூடாது? என்ற விடயத்தில், புலம்பெயர்ந்த தமிழர்கள் மேலும் இரண்டாக உடைந்திருக்கிறார்கள். அதாவது 15ஆண்டுகளில் ஏற்பட்ட ஆகப்பிந்திய உடைவு அது. இப்பொழுது தொகுத்துப் பார்த்தால் மிகத்தெளிவாக தெரியும் சித்திரம் என்னவென்றால், கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ்மக்கள் உடைந்து கொண்டே போகிறார்கள். நினைவு கூர்தல்தான் தமிழ் மக்களை ஒரு உணர்ச்சி புள்ளியில் ஒன்றுகூட்டி வைத்திருக்கிறது. அதே நினைவு கூரும் விடயத்தில், தமிழ்ச் சமூகத்தில் உடைவுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளிலும் தாயகத்திலும் புலம்பெயர்ந்த பரப்பிலும் கட்சிகளாய்; அமைப்புகளாய்; குழுக்களாய்; கொள்கைகளாய்; பிரகடனங்களாய்; ஊர்களாய்; சங்கங்களாய்; வடக்காய்; கிழக்காய்; சமயமாய்; சாதியாய் ;இன்ன பிறவாய் சிதறிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தை, நினைவு நாட்கள்தான் ஓரளவுக்காவது உணர்வுபூர்வமாக ஒன்றுகூட்டி வைத்திருக்கின்றன. அதனால்தான் அரசாங்கம் நினைவுகளைக் கண்டு பயப்படுகின்றது. நினைவின் குறியீடாக தமிழ் மக்களால் உருவகப்படுத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சியை அரசாங்கம் ஒரு குற்றப் பொருளாகப் பார்க்கின்றது. 15 ஆண்டுகளுக்கு முன் உணவு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு யுத்த களத்தில், கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கு “தமிழ் சிவில்சமூக அமையம்” உணவையே நினைவுப் பொருளாக உபயோகித்தது. அதுதான் முள்ளிவாய்க்கால் கஞ்சி. இப்பொழுது அந்த உணவையே அதாவது, நினைவையே ஒரு குற்றமாக அரசாங்கம் பார்க்கின்றது. சில நாட்களுக்கு முன், திருகோணமலையில் உணவு ஒரு குற்றமாகக் காட்டப்பட்டது. இறுதிக்கட்டப் போரில் ஒடுங்கிய கடற்கரைக்குள் முற்றுகையிடப்பட்டிருந்த மக்கள் மத்தியில் கஞ்சி இருந்தது; போண்டா இருந்தது; ரொட்டி இருந்தது. இதில் கஞ்சியானது தமிழ்ப் பண்பாட்டில் வெவ்வேறு பண்பாட்டு நிகழ்வுகளோடு சம்பந்தப்படுகின்றது. அது மிக எளிமையான உணவு. ஆனால் தமிழ் வீடுகளில் காய்ச்சும் கஞ்சியும் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் ஒன்று அல்ல.ஆனந்தபுரம் சண்டையோடு தேங்காய்க்குத் தட்டுப்பாடு வந்து விட்டது. எனவே அது ஒரு பால் இல்லாத கஞ்சி. அரிசியை கிடாரத்தில் போட்டு நீர் விட்டு, உப்புப் போட்டு வேக வைப்பார்கள். அரிசி வெந்ததும் அதில் இரண்டு பால்மா பக்கெட்டுகளை உடைத்துக் கரைத்து அதில் சேர்ப்பார்கள். அதுதான் முள்ளிவாய்க்கால் கஞ்சி. அது தேங்காய்ப் பாலற்றது. பயறு இல்லாதது. ருசியற்றது. அந்த ருசியின்மைக்குள் அதன் அரசியல் செய்தியிருக்கிறது. அந்த ருசியின்மைக்குள் ஒரு கொடிய போர்க்களத்தின் நினைவு இருக்கிறது. அந்த ருசியின்மைக்குள் இனப்படுகொலையின் பயங்கரம் இருக்கின்றது. அந்த ருசியின்மைக்குள் ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் நீதிக்கான தாகம் இருக்கிறது. அந்த ருசியின்மைதான் இனப்படுகொலையின் ருசி. அந்த ருசியின்மைதான் மரணத்தின் ருசி. கூட்டுக் காயங்களின் ருசி. கூட்டு மனவடுக்களின் ருசி. சுற்றி வளைக்கப்பட்டிருந்த; தனித்து விடப்பட்டிருந்த ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் கண்ணீரின் ருசி; ரத்தத்தின் ருசி.தோல்வியின் ருசி; ஒரு யுகமுடிவின் ருசி. அந்த ருசியை தலைமுறைகள் தோறும் கடத்தும் பொழுது ஏன் அது ருசியாயில்லை என்ற கேள்வி வரும். அந்த ருசியின்மைக்குப் பின்னால் மேலும் பல கேள்விகள் அவிழும். ஒடுங்கிய சிறிய கடற்கரையில் ஏன் அந்த மக்கள் தனித்துவிடப்பட்டார்கள்?அருகில் இருந்த தமிழகம் ஏன் அவர்களைக் காப்பாற்றவில்லை? முழு உலகமுமே ஏன் அவர்களை காப்பாற்றவில்லை? உலகப் பெரு மன்றங்களான ஐநா போன்றவை ஏன் அவர்களைக் காப்பாற்றவில்லை? அவர்களை நோக்கி அனுப்பப்பட்ட” வணங்கா மண் “என்ற கப்பல் ஏன் வந்து சேரவில்லை? என்ற கேள்விகளை  அந்த ருசியின்மை எழுப்பும். அந்த ருசியின்மையை தலைமுறைகள் தோறும் கடத்தும் போதுதான் நீதிக்கான போராட்டம் மேலும் வலுப்பெறும். மட்டுமல்ல, தமிழ் மக்கள் இறந்த காலத்தில் இருந்து கற்றுக் கொள்ளவும் முடியும். அந்த ருசியின்மைக்குள் இருக்கும் கேள்விகளை வீடுகள் தோறும் கேட்டு அதற்கு பதில் கொடுக்க வேண்டும். மூத்த தலைமுறை அதைச் செய்ய வேண்டும். தமிழ் வீடுகளில் சாப்பாட்டு மேசைகளில்; பாடசாலைகளில்; பொது இடங்களில்; என்று எல்லா இடங்களிலும் அந்தக் கேள்விகள் கேட்கப்பட வேண்டும்.அது நினைவுகளைக் கடத்தும் ஒரு பொறிமுறை மட்டுமல்ல, அதைவிட ஆழமாக அது ஓர் அறிவூட்டும் செய்முறை.அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தோற்காமல் போராட வேண்டும் என்ற உத்வேகத்தை அது கொடுக்கும்.எனவே அந்த நினைவுகளைப் பரிமாற வேண்டும். தலைமுறைகள் தோறும் கடத்த வேண்டும். உலகில் பொதுவாக எல்லா மக்கள் கூட்டங்களின் மத்தியிலும் கதை சொல்லும் பாரம்பரியம் உண்டு. உறங்கும் நேரக் கதைகள்;பாட்டி செல்லும் கதைகள் என்று பலவாறாகக் கதை சொல்லும் பாரம்பரியங்கள் உண்டு. இவ்வாறு கூறப்படும் பல கதைகள் நீதிநெறிக் கதைகள். ஈழத் தமிழர்கள் அதைவிட மேலதிகமாக நீதிக்காகப் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் கதைகளை தமது அடுத்த தலைமுறைக்குக் கூறவேண்டும். நீதிக்கான போராட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்மக்கள் எங்கே தேங்கி நிற்கிறார்கள்? என்பதனைச் சிந்திப்பதற்கு அவர்களைத் தூண்டவேண்டும்.எனவே கஞ்சியின்மூலம் கடத்தப்படும் நினைவுகள் அல்லது கேள்விகள் எனப்படுகின்றவை,ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை நீதிக்கான போராட்டத்தின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதியாகும். இவ்வாறு அடுத்த தலைமுறைக்கு இறந்த காலத்தின் நினைவுகளைப்  பகிர்வது, கடத்துவது என்பது பழைய காயத்தை திரும்பத்திரும்பக் கிண்டி இரத்தம் பெருகச் செய்யும் வேலை என்று ஒரு பகுதியினர் குற்றம் சாட்டுவார்கள். காயங்களைக் கிண்டாதீர்கள். அயர் மூடிய காயங்களின் அயரை உரித்து அதை புதுப்பிக்காதீர்கள் என்றெல்லாம் கேட்கிறார்கள். அவர்களிடம் திருப்பிக் கேட்க வேண்டும். காயம் எப்பொழுது ஆறியது? காயங்கள் ஆறவில்லை. அவை எப்பொழுதும் உண்டு. புதிய காயங்களும் உண்டு. மயிலத்தமடுவில் குருந்தூர் மலையில் வெடுக்கு நாறி மலையில் புதிய காயங்கள் உண்டு. ஓர் உணவை அதாவது நினைவை குற்றமாகப் பார்க்கும் அரசியல் காயங்களை ஆற விடாது.ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய கூட்டுக் காயங்கள் ஆறாதவை. அவை ஆறாதவை என்பதனால்தான் அவற்றைக் குறித்து உரையாட வேண்டியிருக்கிறது. அவற்றை எப்படி சுகப்படுத்துவது என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. பலஸ்தீன கவிஞர் ஒருவர் எழுதினார் “குணப்படுத்தவியலாத ஒரு காயமாக” நினைவைப் பேணுவது என்று. அதுதான் உண்மை. ஈழத் தமிழர்களின் கூட்டுக் காயங்களும் கூட்டு மனவடுக்களும் குணப்படுத்தப்படாதவை. அதற்கான குணமாக்கல் செய்முறைகளை சிறு தொகை மருத்துவர்கள் மட்டுமே முன்னெடுக்கின்றார்கள். அதற்கும் போதிய அளவு மனநல மருத்துவர்கள் கிடையாது. அது மட்டுமல்ல,அது மருத்துவர்களால் மட்டும் சுமக்கப்படக்கூடிய ஒரு சுமை அல்ல. அது ஒரு கூட்டுச் சுமை. கூட்டுக் காயங்களுக்கும் கூட்டு மன வடுக்களுக்கும் கூட்டுச் சிகிச்சை தான் இருக்கலாம். தனிய மருத்துவர்கள் மட்டும் அதைச் சமாளிக்க முடியாது. தவிர்க்க முடியாதபடி அது ஓர் அரசியல் பண்பாட்டுச் செய்முறையாகத்தான் இருக்கலாம். அதற்குப் பொருத்தமான அரசியல் தலைமை வேண்டும். அத்தலைமையின் கீழ் குடிமக்கள்சமூகங்கள்; மதத்தலைவர்கள்; கருத்துருவாக்கிகள்; புத்திஜீவிகள்;படைப்பாளிகள் என்று எல்லாத் தரப்புக்களும் இணைக்கப்பட வேண்டும். கூட்டுச் சிகிச்சையானது மேலிருந்து கீழ் நோக்கியும் கீழிருந்து மேல் நோக்கியும் செய்யப்பட வேண்டும். மேலிருந்து கீழ் நோக்கி அது ஓர் அரசியல் தீர்மானமாக இருக்க வேண்டும். அது அரசியல் தீர்வாக அமைய வேண்டும். இனப் படுகொலைக்கு எதிரான நீதியாக அது அமைய வேண்டும். கீழிருந்து மேல் நோக்கி அந்தத் தீர்வை நோக்கி தமிழ்மக்கள் போராட வேண்டும். அந்தப் போராட்டம்தான் தமிழ் மக்களை தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுதலை செய்யும். தமிழ்மக்கள் இப்பொழுது சிதறிப் போய் இருக்கிறார்கள். ஒருவர் மற்றவரை நம்பாத ஒரு மக்கள் கூட்டமாக; ஒருவர் மற்றவரைச் சந்தேகிக்கும் ஒரு மக்கள் கூட்டமாக;எல்லாருக்கும் பின்னாலும் சதிகளையும் சூழ்ச்சிகளையும் தேடும் ஒரு மக்கள் கூட்டமாக; கட்சிகளாக; வடக்குக் கிழக்காக;சமயமாக; சாதியாக இன்னபிறவாக சிதறிப்போய் இருக்கிறார்கள். அதேசமயம் மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு புலம்பெயரும் தமிழர்கள் மத்தியில் படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள்,உயர் உத்தியோகங்களில் இருந்தவர்கள் என்ற வகையினரும் அடங்குவர். இவ்வாறாக மூளைசாலிகளும் தொழில் அனுபவம் மிக்கவர்களும் வெளியேறிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தைத் திரட்டுவது எப்படி? ஒருவர் மற்றவரை நம்பாமல் சமூகத்தைத் திரட்ட முடியாது. ஒருவர் மற்றவரை நம்புவதில் இருந்துதான் சமூகத் திரட்சி தொடங்குகின்றது. எனவே நம்பிக்கை முக்கியம். சமூகத்துக்கு நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். புலம்பெயரும் தலைமுறைக்கு நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு நம்பிக்கையைக் கொடுக்க யார் உண்டு? அந்தக் கூட்டு நம்பிக்கைதான் கூட்டுத்தோல்வி மனப்பான்மையிலிருந்தும்,கூட்டுக் காயங்களில் இருந்தும், கூட்டு மனவடுக்களில் இருந்தும் ஒரு மக்கள் கூட்டத்தை விடுதலை செய்யும். ஈழத் தமிழர்கள் கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு புவிசார் அமைவிடத்தில் அமைந்திருக்கிறார்கள். எல்லாப் பேரரசுகளுக்கும் அவர்கள் தேவை. தமிழ் மக்களின் இக்கேந்திர முக்கியத்துவத்தை தமிழ் மக்களே உணராதிருக்கிறார்கள். அனுமார் தன் பலத்தை தானே அறியாதிருந்ததுபோல. தமிழ் மக்களுக்கு அவர்களின் பலத்தை உணர்த்தி,அவர்களைப் பலமான திரளாக்கி,அவர்களை கூட்டு அவநம்பிக்கையிலிருந்து விடுவிப்பதுதான் கீழிருந்து மேல் நோக்கிய கூட்டுச் சிகிச்சையாக அமையும்.அதுதான் கூட்டுத் துக்கத்தை அரசியல் ஆக்க சக்தியாக மாற்றும்.அதுதான் உண்மையான நினைவு கூர்தலாக அமையும்.   https://www.nillanthan.com/6761/
    • மே18.2024 – நிலாந்தன்! மீண்டும் ஒரு நினைவு நாள் தமிழ் மக்களைக் கூட்டிக் கட்டியிருக்கிறது திரட்டி யிருக்கிறது.இம்முறையும் ஆயிரக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்காலை நோக்கித் திரண்டிருக்கிறார்கள்.விசேஷமாக பன்னாட்டு மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் அங்கே காணப்பட்டார்.கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் தமிழ் அதிகாரி ஒருவரும் அங்கே காணப்பட்டார்.சுமந்திரனும் உட்பட செல்வம் அடைக்கலநாதன்,சித்தார்த்தன்,சிறீரீதரன்,கஜேந்திரன் முதலாய் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கே காணப்பட்டார்கள். சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கே காணப்பட்டார்கள்.மதகுருக்கள்,சிவில் சமூகப் பிரதிநிதிகள்,அரசியல் செயற்பாட்டாளர்கள் போன்றவர்களும் அங்கே காணப்பட்டார்கள்.ஈழத் தமிழர்களை பொருத்தவரை கட்சி பேதமின்றி,இயக்க பேதமின்றி,வடக்கு கிழக்கு என்ற பேதம் இன்றி,சமய பேதமின்றி,சாதி பேதமின்றி, தமிழ் மக்கள் ஒன்றாகக் கூடும் ஒரே நிகழ்வு மே 18 தான்.இந்த முறையும் அந்த நாளின் புனிதம்;அந்த நாளின் மகிமை தாயகத்தில் நிலைநாட்டப்பட்டது. அந்த நாளின் மகிமை என்பது எல்லாத் தமிழ் தரப்புகளும் அங்கே திரள்வதுதான். முள்ளிவாய்க்காலுக்கு வெளியே தமிழ் பகுதிகளெங்கும் பரவலாக நினைவு கூர்தல் நடந்திருக்கின்றது.கொழும்பிலும் நடந்திருக்கிறது.புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் வழமை போல பெருமெடுப்பில் நடந்திருக்கின்றது. எனினும்,விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரையும் அவருடைய குடும்பத்தவர்களையும் நினைவு கூர்வதா இல்லையா என்ற விடயத்தில் புலம்ம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் உடைவு தென்படுகின்றது.கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் சமூகத்தில் ஏற்பட்ட ஆகப்பிந்திய உடைவு அது. தமிழ் மக்கள் இன்னும் எத்தனை துண்டுகளாக உடையப் போகின்றார்களோ? தமிழர்கள் எத்தனை துண்டுகளாக உடைந்தாலும் நினைவு நாட்கள் அவர்களை திரட்டிக் கட்டி விடும் என்று அரசாங்கத்திற்கு தெரியும்.அதனால் தான் கிழக்கில் மே 18ஐ அனுஷ்டிக்க முற்பட்ட அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் சாதாரண மக்களுக்கு எதிராக கடுமையான கெடுபிடிகள் ஏவி விடப்பட்டுள்ளன ஆனால் வடக்கில் நிலைமை அப்படியல்ல. வடக்கில் மே 18ஐ அனுஷ்டிப்பதற்கு போலீசார் பெரிய அளவில் தடைகள் எதையும் விதிக்கவில்லை. சில இடங்களில் படைவீரர்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்தியிருக்கிறார்கள். வடக்கில் கஞ்சி காய்ச்சுவதற்குத் தடைகள் இருக்கவில்லை.தமிழர் தாயகப் பகுதியில் ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவிலும் பரவலாகவும் கஞ்சி காய்ச்சப்பட்டது வடக்கில்தான்.பல்கலைக்கழக மாணவர்களும் உட்பட கட்சிகளும் செயற்பாட்டு அமைப்புகளும் சமூக நிறுவனங்களும் தாமாக முன்வந்து.தன்னார்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியைச் சமைத்துப் பரிமாறியிருக்கிறார்கள். ஆனால் கிழக்கில் போலீசார் அதைத் தடுக்க முற்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னரும் கூட, கிழக்கில் போலீசார் முள்ளிவாய்க்கால் கஞ்சி சமைப்பதை தடுக்க முனைந்தார்கள். சில இடங்களில் அடுப்பை கால்களால் தட்டி நெருப்பை அணைக்க முற்படுகிறார்கள். கடந்த ஆண்டும் மாவீரர் நாளை முன்னிட்டும் கிழக்கில் கெடுபிடிகள் அதிகமாகக் காணப்பட்டன.இந்த விடயத்தில், அதாவது நினைவுகளை அனுஷ்டிக்கும் விடயத்தில் அரசாங்கம் வடக்கை வேறாகவும் கிழக்கை வேறாகவும் கையாள்வதற்குக் காரணம் என்ன? இரண்டு காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கிழக்கில் காலூன்ற முற்படுகின்றது.கடந்த ஆண்டு திலீபனின்நினைவு நாளின்போது, அந்தக் கட்சியானது ஒரு வாகன ஊர்தியை திருகோணமலை வழியாக எடுத்துச் சென்றபொழுது அந்த வாகன அணி தாக்கப்பட்டது. அதன் பின் மாவீரர் நாளை அனுஷ்டிக்க முயன்ற கட்சியின் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டார்கள்.இம்முறையும் மே 18ஐ முன்னிட்டு அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.அல்லது நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதாவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது கிழக்கில் பலமடைவதை அரசாங்கம் தடுக்க முயற்சிப்பதை இது காட்டுகிறது. இது ஒரு காரணம். இரண்டாவது காரணம் கிழக்கில் ஏற்கனவே பலமடைந்து வரும் பிள்ளையான்,வியாழேந்திரன் போன்றவர்களைத் தொடர்ந்தும் பலப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.கிழக்கில்,கிழக்குமைய அரசியலை ஊக்குவிப்பதன் மூலம், வடக்கையும் கிழக்கையும் அதாவது தமிழர் தாயகத்தை உடைக்கலாம்.அதேசமயம், கிழக்குமையக் கட்சிகள் பெருமளவுக்கு முஸ்லிம்களுக்கும் எதிரானவை. அங்கே அக்கட்சிகளைப் பலப்படுத்தினால் கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவுகளை மேலும் பகை நிலைக்குத் தள்ளலாம். அதன்மூலம் வடக்குக் கிழக்கு இணைப்புக்கு எதிராக முஸ்லிம்களைத் தூண்டி விடலாம். அதாவது அரசாங்கத்தின் நோக்கம் மிகத்தெளிவானது.கிழக்கில் கிழக்குமையக் கட்சிகளைப் பலப்படுத்துவது. அதற்கு நினைவு கூர்தலை அங்கே அனுமதிக்கக்கூடாது.ஏனென்றால் நினைவு நாட்கள் தமிழ் மக்களை ஒன்றாக்கும் சக்திமிக்கவை .அவை வடக்கையும் கிழக்கையும் அதாவது தமிழர்களின் தாயகத்தை,தாயக ஒருமைப்பாட்டைப் பலப்படுத்தும் சக்தி மிக்கவை.எனவே வடக்கையும் கிழக்கையும் பிரிக்க நினைப்பவர்களைப் பொறுத்தவரை, நினைவு கூர்தலை கிழக்கில் அனுமதிக்கக் கூடாது.அதுதான் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகின்றது. ஆனால் கிழக்கில் நினைவு கூர்தலைத் தடுக்கும் அதே அரசாங்கம் இன்னொரு புறம்,உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றைப்பற்றி உரையாடுகின்றது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு எனப்படுவது நிலைமாறு கால நீதியின் கீழ் உருவாக்கப்பட வேண்டிய ஒரு கட்டமைப்பு. நிலை மாறுகால நீதி எனப்படுவது 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட முப்பத்தின் கீழ் ஒன்று ஐநா தீர்மானத்தின் அடிப்படையில் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பொறுப்பு.அதன்படி உருவாக்கப்பட வேண்டிய ஒரு கட்டமைப்புத்தான், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகும். ஆனால் நிலைமாறு கால நீதியின் கீழ் பாதிக்கப்பட்ட மக்கள் நினைவு கூரும் முழு உரிமையையும் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக நிலை மாறுகால நீதியின் நான்கு தூண்களில் ஒன்று ஆகிய “இழப்பீட்டு நீதி” என்ற பகுதிக்குள் அது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இழப்பீட்டு நீதியின் கீழ்,தமிழ் மக்கள் போரில் இனஅழிப்பு செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் உரிமையுடையவர்கள் ஆகும். தனிப்பட்ட முறையில் அல்லது கூட்டாக நினைவுச் சின்னங்களை நிறுவி நினைவு நாட்களை அனுஷ்டிப்பதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் கிழக்கில் அது மறுக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் நல்லெண்ண முயற்சிகளை,நல்லிணக்க முயற்சிகளை தமிழ் மக்கள் ஏன் நம்புவதில்லை என்பதற்கு கிழக்கில் கடந்த வாரம் போலீசார் நடந்து கொண்ட விதம் ஓர் ஆகப்பிந்திய சான்று ஆகும். இதே அரசாங்கம் போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கு ஒரு பொதுச் சின்னத்தை உருவாக்கும் நோக்கத்தோடு நிபுணர் குழு ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறது. அந்நிபுணர் குழு மாவட்டங்கள் தோறும் பயணம் செய்து மக்கள் கருத்துக்களை கேட்டது.தமிழ்ப் பகுதிகளில் அவர்களுக்கு கருத்துக்கூறிய அனேகர், பொது நினைவுச் சின்னத்தை நிராகரித்திருக்கிறார்கள். கொலை செய்தவர்களையும் கொல்லப்பட்டவர்களையும் ஒன்றாக நினைவு கூர முடியாது என்று தமிழ் மக்கள் மேற்படி நிபுணர் குழுவுக்குக் கருத்து கூறியிருக்கிறார்கள். அதாவது அரசாங்கம் நினைப்பதுபோல ஒரு பொது நினைவுச் சின்னத்தை உருவாக்குவது இலகுவானது அல்ல என்பதைத் தமிழ் மக்கள் நிபுணர்களுக்கு அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார்கள்.அவ்வாறு ஒரு பொது நினைவுச் சின்னத்தை உருவாக்க முற்படும் அரசாங்கம் நினைவை ஒரு உணவின்மூலம் பகிர முற்படும் தமிழர்களைத் தடுக்கின்றது. ஒர் உணவைப் பார்த்து அதாவது கஞ்சியைப் பார்த்து அரசாங்கம் பயப்படுகிறது என்றால் அதன் பொருள் என்ன? அந்தக் கஞ்சி கடத்தக்கூடிய அல்லது பேணக்கூடிய நினைவுகளைக் கண்டு அரசாங்கம் அஞ்சுகிறது என்றுதானே பொருள் ? “மக்கள் ஒன்றுகூடுவதன் மூலம் உணவைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் நோய் பரவும் என்பதாலேயே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக”மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா கேள்வி எழுப்பியுள்ளார். அப்படியென்றால் ஏன் மே தினக்கூட்டங்களை தடை செய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களை கேட்டுக்கொள்ளவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.வெசாக் கொண்டாட்டங்கள்,தேர்தல் பிரச்சார பேரணிகளையும் தடைசெய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களிடம் வேண்டுகோள் விடுப்பார்களா என கேள்வி எழுப்பியுள்ள அவர்,இதன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் முயற்சிகளை ஜெனீவாவில் மற்றுமொரு தீர்மானத்தை தடுப்பதற்கான ஏமாற்று நடவடிக்கை என தமிழ்மக்கள் கருதுகின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார். எனினும்,இம்முறை நினைவு கூர்தலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கிழக்கில் தமிழ் மக்களைப் பயமுறுத்தப் போதுமானவைகளாக இல்லை என்பதோடு, முக்கியமாக திருக்கோணமலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு முஸ்லிம் சட்டத்தரணிகள் தாமாக முன்வந்து உதவியிருக்கிறார்கள் என்பது இங்கு முக்கியமாகச் சுட்டிக் காட்டப்பட வேண்டியது. அரசாங்கம் நினைப்பதுபோல கிழக்கில் நிலைமைகளைக் கையாள முடியாது என்பதனை அது காட்டுகின்றதா? https://athavannews.com/2024/1383017
    • வவுனியாவில் முள்ளிவாயக்கால் நினைவேந்தலில் குழப்பத்தினால் வெளியேறிய சர்வ மத தலைவர்கள் ! வுனியாவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் ஏற்பட்டிருந்த குழப்பம் காரணமாக சர்வ மத தலைவர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். வவுனியா நகரசபை மைதானத்தில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக மூவின மக்களின் நினைவேந்தல் நிகழ்வு என அறிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர். இதன்போது அங்கு அறிவிப்பில் ஈடுபட்டவர்கள் விபத்தில் இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு, யுத்ததில் வெற்றி பெற்றமைக்கான நிகழ்வு, போரில் உயிரிழந்தர்வர்களுக்கான நிகழ்வு, முள்ளிவாய்காலில் மரணித்தவர்களுக்கான நிகழ்வு என மாறி மாறி அறிவித்திருந்த நிலையிலேயே அங்கு குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டபாளர்கள் இது போரில் இறந்தவர்களை அனுஸ்டிக்கும் நிகழ்வு என அறிவிக்கும்படி தெரிவித்திருந்தனர். இதனால் குறித்த நிகழ்வு எதற்காக என மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டிருந்ததுடன், ஏற்பாட்டுக் குழுவின் நடவடிக்கைக்கு அங்கு வந்திருந்த இளைஞர்கள் சிலரும் விசனம் வெளியிட்டதுடன் முரண்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து வருகை தந்திருந்த தமிழ் மக்கள் தீபம் ஏற்றிவிட்டு வெளியேறிச சென்றிருந்தனர். இதனையடுத்து அதிதிகளாக வருகை தந்திருந்த மதத்தலைவர்களும் அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்தனர். https://athavannews.com/2024/1383033
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.