Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சீனா
கட்டுரை தகவல்
  • எழுதியவர், கோர்டன் கோரேரா
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சீனா மீது கவனம் செலுத்த வேண்டும் என்று மேற்குலகத்தைச் சேர்ந்த நாடுகள் நீண்ட காலமாகவே பேசி வருகின்றன. இந்நிலையில் இந்த வாரம், பிரிட்டனின் அரசாங்க தகவல் தொடர்பு தலைமையக(GCHQ) உளவு முகமையின் தலைவர், “இது ஒரு சகாப்தத்தின் சவால்” என்று விவரித்துள்ளார்.

மேற்குலக நாடுகளில் சீனாவுக்கு ஆதரவாக உளவு பார்த்தல் மற்றும் ஹேக்கிங் செய்வதாக பலரும் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. ஹாங்காங் உளவு முகமைகளுக்கு உதவி வருவதாக பிரிட்டனில் மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமையன்று சீன தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது பிரிட்டன் வெளியுறவுத்துறை.

அதிகாரம் மற்றும் செல்வாக்கு விஷயத்தில் சீனா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு இடையில் போட்டி நிலவி வரும் நிலையில், அது பொதுவெளிக்கு வந்துள்ளதற்கான அறிகுறியே இந்த கைதுகள்.

அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் சீனாவை பின்னுக்கு தள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. ஆனால், மூத்த அதிகாரிகள் மேற்கு நாடுகள் சீனாவின் சவாலை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், உளவுத்துறை சார்ந்து பின்தங்கிவிட்டதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

இது மேற்கு நாடுகளில் சீன உளவு அச்சுறுத்தலை அதிகரித்துள்ளதாகவும், இரு தரப்பிலும் தீவிரமான தவறுகளுக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

 
சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சீனா குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், இப்போது வரையிலும் அதன் மீது கண்காணிப்பை பலப்படுத்த மேற்குநாடுகள் போராடின வருகின்றன.

ஒரு புதிய சர்வதேச ஒழுங்கை உருவாக்க முயற்சித்துவரும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் உறுதியே மேற்கத்திய அதிகாரிகளை கவலை கொள்ள செய்துள்ளது.

பிபிசியின் புதிய சீனா - மேற்கு நாடுகள் என்ற தொடருக்காக பிரிட்டனின் வெளிநாட்டு உளவு முகமையான எம்ஐ6 அமைப்பின் தலைவர் சர் ரிச்சர்ட் மூர் அளித்த அரிதான பேட்டி ஒன்றில், “ சீனா உலகின் உச்ச அதிகாரத்தில் இருக்கும் அமெரிக்காவின் இடத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறது” என்றார்.

என்னதான் சீனா குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், இப்போது வரையிலும் அதன் மீது கண்காணிப்பை பலப்படுத்த மேற்கு நாடுகள் போராடி வருகின்றன.

மேற்குலக நாடுகளின் கவனம் இதர பிரச்னைகளில் இருந்த வேளையில், உலகின் முக்கிய சக்தியாக சீனா உருவெடுத்தது என்று கூறுகிறார் எம்ஐ6 அமைப்பின் இரண்டாம் நிலை தலைவராக இருந்த நைகல் இன்க்ஸ்டர். இவர் 2006ஆம் ஆண்டு அந்த அமைப்பில் இருந்து ஓய்வு பெற்றார்.

2000களில் பெய்ஜிங் உலக அரங்கில் தன்னை உயர்த்துவதில் மும்முரமாக இருந்த வேளையில், மேற்கத்திய கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் சிந்தனையும், உளவுத்துறைகளின் கவனமும், ஆப்கானிஸ்தான், இராக் ஆகிய நாடுகளில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் இராணுவ தலையீடுகளில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன.

 
சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சீனா சைபர் உளவு மூலமாகவும், அல்லது நிறுவனங்களில் நேரடியாக ஆட்களை ஊடுருவ செய்வதன் மூலமாகவும் உளவு பார்ப்பதாக மேற்குலக உளவு அமைப்புகள் கூறுகின்றன.

சமீபத்தில், மீண்டும் எழுச்சி பெற்றுள்ள ரஷ்யா மற்றும் இஸ்ரேல்-காஸா போர் உலகிற்கு கூடுதல் அவசர சவால்களாக தோன்றியுள்ளன என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.

அதே நேரத்தில், சீனா ஏற்படுத்தும் பாதுகாப்பு அபாயத்தை விட, அதன் மிகப்பெரிய சந்தையை பயன்படுத்தும் வாய்ப்பை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதற்கு அரசாங்கம் மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து அழுத்தம் உள்ளது.

இதனால் அரசியல் தலைவர்கள் தங்கள் உளவுத்துறை தலைவர்கள் அடிக்கடி சீனாவை பற்றி குறிப்பிட வேண்டாம் என்று விரும்புகின்றனர். வணிக நிறுவனங்களும் கூட தங்கள் ரகசியங்கள் குறிவைக்கப்படுவதை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை.

"பொருளாதாரம் மற்றும் வணிக நலன்களின் திசையில்தான் காற்று வீசும்" என்கிறார் நைகல் இன்க்ஸ்டர்.

ஏற்கனவே 2000 களில் தொழில்துறை சார்ந்த உளவுப்பணியில் சீன உளவுத்துறை ஈடுபட்டிருந்தது என்று கூறும் அவர், அப்போதும் மேற்கத்திய நிறுவனங்கள் அமைதியாகவே இருந்தன என்கிறார்.

"அதை எதிர்ப்பது அல்லது வெளிப்படுத்துவது சீனாவின் சந்தைகளில் தங்கள் நிலையை பாதிக்கும் என்ற அச்சத்தில் அவர்கள் அதைப் பற்றி கேள்வி எழுப்ப விரும்பவில்லை," என்று அவர் கூறுகிறார்.

மேற்குலகின் பாணியில் இருந்து சீனா வேறு மாதிரியான பாணியில் உளவு பார்ப்பது மற்றொரு பெரிய சவாலாக உள்ளது. இது அதன் செயல்பாட்டை அடையாளம் காண்பதையும், எதிர்கொள்வதையும் கடினமாக்கியுள்ளது.

முன்னாள் மேற்குலக உளவாளி ஒருவர், ஒருமுறை சீனா "தவறான வகையில்" உளவு பார்ப்பதாக சீனப் பிரதிநிதி ஒருவரிடம் கூறியதாகக் தெரிவித்தார்.

அதாவது, மேற்கத்திய நாடுகள் தங்கள் எதிரிகளைப் புரிந்துகொள்ள உதவும் வகையான உளவுத்தகவல்களை சேகரிப்பதில் கவனம் செலுத்த விரும்புகின்றன. ஆனால் சீன உளவாளிகளுக்கு அதில் வெவ்வேறு முன்னுரிமைகள் உள்ளன.

எஃப்.பி.ஐ.-இன் எதிர்உளவு அதிகாரி ரோமன் ரோஜாவ்ஸ்கி கூறுகையில், "ஆட்சியின் நிலைத்தன்மையே அவர்களின் முதல் குறிக்கோள்" என்று விளக்கினார்.

அதற்கு பொருளாதார வளர்ச்சியை தருவது அவசியமாகும். எனவே சீனாவின் உளவாளிகள் மேற்கத்திய தொழில்நுட்பத்தைப் பெறுவதை ஒரு சிறந்த தேசிய பாதுகாப்புத் தேவையாகக் கருதுகின்றனர்.

பெய்ஜிங் உளவாளிகள் தாங்கள் சேகரித்த தகவல்களை சீன அரசு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதாக மேற்கத்திய உளவாளிகள் கூறுகிறார்கள். ஆனால், மேற்குலக உளவுத்துறை முகமைகள் தங்கள் சொந்த உள்நாட்டு நிறுவனங்களுடன் அவற்றை பகிர்ந்து கொள்வதில்லை.

 
சீனா

பட மூலாதாரம்,FBI

படக்குறிப்பு,கடந்த அக்டோபரில் முதன்முதலாக கலிபோர்னியாவில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஃபைவ் ஐஸ் உளவுத்துறை-பகிர்வு கூட்டணியின் கூட்டம் வெளிப்படையாக நடந்தது.

ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்பின் (ASIO) தலைவரான மைக் பர்கெஸ், "எங்கள் 74 ஆண்டுகால வரலாற்றில், இதுவரை நாங்கள் இருந்ததை விட எங்களது நிறுவனம் தற்போது மிகவும் பிஸியாக உள்ளது" என்று என்னிடம் கூறினார்.

"நான் இதர நாடுகளை மிகவும் அரிதாகவே குறிப்பிட்டு அவர்கள் உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டுகிறேன். காரணம் உளவு என்று வரும்போது நாங்களும் அவர்களுக்கு அதையேதான் செய்கிறோம்” என்று கூறுகிறார் பர்கெஸ்.

"வணிக உளவு பார்ப்பது முற்றிலும் வேறுபட்ட விஷயம், அதனால்தான் சீனா இந்த விஷயத்தில் சிறப்பு கவனத்தை பெறுகிறது."

மேற்கத்திய நட்பு நாடுகள் இந்த அச்சுறுத்தலைப் புரிந்துகொள்வதில் தாமதம் காட்டியுள்ளன என்பதை அவர் ஒப்புக்கொண்டார். "இது நீண்ட காலமாக நடந்து வருகிறது என்று நான் நினைக்கிறேன், கூட்டாக நாங்கள் அதை தவறவிட்டு விட்டோம்," என்று அவர் ஒப்புக்கொள்கிறார்.

கடந்த அக்டோபரில் முதன்முதலாக கலிபோர்னியாவில் வெளிப்படையாக நடந்த அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஃபைவ் ஐஸ் என்று அழைக்கப்படும் உளவுத்துறை-பகிர்வு கூட்டணியின் பாதுகாப்புத் தலைவர்களின் கூட்டத்தில் நான் இருந்தேன்.

ஒரு அசாதாரண நிகழ்வாக, இந்த ஐந்து நாடுகளின் உளவுத்துறை தலைவர்களும் வெளிப்படையாக சீனா மேற்கொண்டு வரும் வணிக உளவு குறித்து எச்சரிக்கை விடுத்தனர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் நடத்தப்பட்ட இந்த கூட்டம், சீனா குறித்த எச்சரிக்கைகளின் அளவை அதிகரிப்பதற்கான மிகவும் திட்டமிட்ட முயற்சியாகும். காரணம் இன்னமும் பல நிறுவனங்களும் அமைப்புகளும் இந்த எச்சரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்ற அச்சம் உள்ளது.

இதற்காக சிலிக்கான் வேலி தேர்வு செய்யப்பட்டதும் கூட காரணத்துடன் முடிவு செய்யப்பட்டதே. டெக் நிறுவனங்கள் நிறைந்த அந்த பகுதியில் , சைபர் உளவு மூலமாகவும், நிறுவனங்களில் ஆட்களை ஊடுருவ செய்வதன் மூலமாகவும் தொழில்நுட்பத்தை திருடும் சீனாவின் செயல் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த செயல்களுக்கான சீனாவின் ஆதாரங்கள் வேறு அளவில் உள்ளன. ஒரு மேற்கத்திய உளவுத்துறை அதிகாரியின் தகவலின்படி, சீனாவில் உளவு மற்றும் பாதுகாப்புத் துறையின் கீழ் சுமார் 6,00,000 பேர் பணிபுரிவதாக மதிப்பிட்டுள்ளார். இது உலகின் வேறு எந்த நாட்டையும் விட அதிகம்.

 
சீனா

மேற்கத்திய பாதுகாப்பு சேவைகள் ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக விசாரிக்க முடியாது. பிரிட்டிஷ் உளவுத்துறை நிறுவனமான எம்ஐ6 கூற்றுப்படி, பிரிட்டனில் மட்டும் 20,000 க்கும் மேற்பட்டவர்கள், சீன உளவாளிகளால் லிங்க்டு-இன் போன்ற தொழில்முறை நெட்வொர்க்கிங் தளங்கள் வழியாக உறவுகளை வளர்ப்பதற்காக அணுகப்பட்டுள்ளனர்.

"அவர்கள் உண்மையில் வேறொரு நாட்டைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரியுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதை அறியாமல் இருக்கலாம். ஆனால் இறுதியில் அவர்கள் தங்கள் சொந்த நிறுவனத்தின் எதிர்காலத்தையே அழிக்கக் கூடிய தகவல்களைக் அவர்களுக்கு பகிர்ந்துகொண்டிருப்பார்கள்" என்று எம்ஐ5 - இன் தலைவர் கென் மெக்கலம் கலிபோர்னியா கூட்டத்தில் என்னிடம் கூறினார்.

சீனா உள்நாட்டு கண்காணிப்பில் கவனம் செலுத்தும் அதே வேளையில், வெளிநாட்டில் அதன் நடவடிக்கைகள் மீதான விமர்சனத்தை மட்டுப்படுத்தவும் அதன் உளவாளிகளை பயன்படுத்துகிறது.

சமீபத்தில், மேற்கத்திய அரசியலை குறிவைத்து இயங்கி வந்த சீன உளவாளிகள் பிரிட்டன், பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவில் விசாரணை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சீனாவின் "வெளிநாட்டு காவல் நிலையங்கள்" இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. மேற்கு நாடுகளில் உள்ள சீன அதிருப்தியாளர்களைப் கண்காணிப்பதற்காக, பெய்ஜிங்கின் உளவுத்துறை அதிகாரிகள் பொதுவாக உளவாளிகளை களத்தில் நேரடியாக பயன்படுத்துவதை விட, தனியார் புலனாய்வாளர்களை பணியமர்த்துவது அல்லது அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வது போன்று தொலைதூரத்தில் இருந்தே செயல்படுகிறார்கள் என்று கூறுகின்றனர் பாதுகாப்பு அதிகாரிகள்.

உண்மையில், 2000களின் முற்பகுதியில் பிரிட்டன் அரசாங்க அமைப்புகளை இலக்காகக் கொண்ட முதல் இணைய நிகழ்வுகள் ரஷ்யாவிலிருந்து அல்ல, சீனாவிலிருந்து வந்தவை. அவை திபெத்திய மற்றும் உய்குர் குழுக்கள் போன்ற வெளிநாட்டு எதிர்ப்பாளர்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டவை.

அரசியல் தலையீடுகள் பற்றி கவலைப்படுவதில் தற்போது ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது. 2016 ஆம் ஆண்டிலிருந்து, தேர்தல்களில் வேட்பாளர்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளைக் கண்டறியத் தொடங்கியதாக ASIO அமைப்பு கூறுகிறது.

"அவர்கள் இங்கு தங்கள் விருப்பங்களை புகுத்த முயற்சிக்கிறார்கள், அதை செய்வதற்கு திறன் படைத்தவர்களும் கூட. அவர்கள் அதை மறைமுகமான வழிகளில் செய்வதை நாங்கள் விரும்பவில்லை" என்று மைக் பர்கெஸ் பிபிசியிடம் கூறினார். இதை எதிர்கொள்ளும் வகையில், 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா புதிய சட்டங்களை இயற்றியது.

 
சீனா
படக்குறிப்பு,பிரிட்டனைச் சேர்ந்த வழக்குரைஞர் கிறிஸ்டின் லீ

ஜனவரி 2022 இல், பெய்ஜிங்கின் விருப்பங்களை முன்னெடுப்பதற்காக, பிரிட்டனைச் சேர்ந்த வழக்குரைஞர் கிறிஸ்டின் லீ பல பிரிட்டிஷ் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதாகக் குற்றம் சாட்டி எம்ஐ5 ஒரு அசாதாரண எச்சரிக்கையை வெளியிட்டது.

அவர் தற்போது எம்ஐ5க்கு எதிராக ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் தான் பிரிட்டன் ஒரு புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. இது வெளிநாடுகளின் தலையீடு மற்றும் பிற செயல்பாடுகளைச் சமாளிக்க புதிய அதிகாரங்களை வழங்கியது. ஆனாலும் , இவை தாமதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சீனா மேற்குலகை உளவு பார்ப்பது போலவே, மேற்குலகமும் சீனாவை உளவு பார்க்கிறது. ஆனால் எம்ஐ6 மற்றும் சிஐஏ போன்ற மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகளுக்கு சீனாவில் உளவுத்தகவலை சேகரிப்பது தனித்தன்மை வாய்ந்த சவாலாக உள்ளது.

நாட்டிற்குள் கண்காணிப்பின் பரவலான தன்மை, டிஜிட்டல் கண்காணிப்பு உள்ளிட்டவை மனித நுண்ணறிவின் பாரம்பரிய மாதிரி - உளவாளிகளை நேருக்கு நேர் சந்திப்பதை - கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக ஆக்குகிறது.

சீனா ஒரு தசாப்தத்திற்கு முன்னர் சிஐஏ உளவாளிகளின் பெரிய வலையமைப்பு ஒன்றை துடைத்தெடுத்தது. மேலும் தகவல் தொடர்புகளை இடைமறித்து டிஜிட்டல் நுண்ணறிவை சேகரிக்கும் பிரிட்டனின் அரசாங்க தகவல் தொடர்பு தலைமையகம் மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமைக்கு தொழில்நுட்ப ரீதியாக இது கடினமான இலக்காகும்.

ஏனெனில் சீனா மேற்கத்திய தொழில்நுட்பத்தை விட, அதன் சொந்த தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.

"சீனாவின் பொலிட்பீரோ எப்படி சிந்திக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை" என்று ஒரு மேற்கத்திய அதிகாரி ஒப்புக்கொண்டார்.

இது புரிதலுக்கு வழிவகுக்கும் மற்றும் இது கடுமையான அபாயங்களைக் கொண்டுள்ளது. பனிப்போரில், மாஸ்கோ எவ்வளவு பாதுகாப்பற்றதாக உணர்ந்தது என்பதை மேற்கு நாடுகள் புரிந்து கொள்ளத் தவறிய காலங்கள் இருந்தன. இதன் விளைவாக இரு தரப்பும் விரும்பாத ஒரு பேரழிவுப் போரை நெருங்கின.

தைவான் மீதான கட்டுப்பாட்டை மீட்பதற்கான சீனாவின் விருப்பத்தின் மீது, இன்றும் இதேபோன்ற தவறான கணக்கீடுகளின் அபாயங்கள் உள்ளன. தென் சீனக் கடலிலும் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

 
சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான அதிக இராணுவ மற்றும் இராஜதந்திர தொடர்பு சமீபத்திய மாதங்களில் சூட்டைக் குறைத்திருந்தாலும், நீண்ட காலப் பாதை தொடர்ந்து எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டிருக்கிறது.

"நாம் வாழும் மிகவும் ஆபத்தான, போட்டி நிறைந்த இந்த உலகில், எப்போதும் மோதலைப் பற்றி கவலைப்பட வேண்டும், அதைத் தவிர்ப்பதற்கான பாதையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்" என்று எம்ஐ6 இன் தலைவர் சர் ரிச்சர்ட் மூர் என்னிடம் கூறினார்.

"குறிப்பாக நீங்கள் எப்போதும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாத அதிகாரம் கொண்டிருக்கும்போது, எனது சேவை அங்குதான் வருகிறது."

எம்ஐ6-இன் பணியே, சாத்தியமான அபாயங்கள் வழியாக செல்ல தேவையான உளவுத்தகவல்களை வழங்குவது என்று அவர் கூறுகிறார்.

"வரையறையின்படி தவறான புரிதல்கள் எப்போதுமே ஆபத்தானவை - உங்களிடம் தகவல் தொடர்புக்கான வழிகள் திறந்திருப்பதும், நீங்கள் போட்டியிடும் நபர்களின் நோக்கங்களைப் பற்றிய நுண்ணறிவு இருப்பதும் எப்போதும் சிறந்தது" என்கிறார் அவர்.

இது தகவல் தொடர்புக்கான வழிகள் திறந்திருப்பதை உறுதிசெய்வதற்கு முன்னுரிமை அளிக்கிறது. பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பாக எம்ஐ6 உளவு ஸ்தாபனம், சீன அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. தற்போது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் சில ராணுவத் தொடர்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன என்ற உண்மை பரவலாக வரவேற்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான அதிக இராணுவ மற்றும் இராஜதந்திர தொடர்பு சமீபத்திய மாதங்களில் சூட்டைக் குறைத்திருந்தாலும், நீண்ட காலப் பாதை தொடர்ந்து எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டிருக்கிறது.

உளவு பார்ப்பது பற்றிய அனைத்து வெளிப்பாடுகளும் இரு தரப்பிலும் உள்ள பொதுமக்களிடையே அவநம்பிக்கையையும் அச்சத்தையும் தூண்டுகிறது. இது நெருக்கடி நிலையில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ஒருவரையொருவர் புரிந்துகொண்டு பயணிப்பதற்கான வழியைக் கண்டறிவது, இருதரப்பு உறவின் மோதல் போக்கிலிருந்து விலகுவதற்கு இன்றியமையாத ஒன்றாகும்.

https://www.bbc.com/tamil/articles/c03dllppx7wo

  • கருத்துக்கள உறவுகள்

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு  😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.