Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 15 வருடங்கள் ; தமிழர் அரசியல் எங்கே போகிறது?

உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 15 வருடங்கள் ; தமிழர் அரசியல் எங்கே போகிறது?

   — வீரகத்தி தனபாலசிங்கம் —

  சுமார் முப்பது வருடங்களாக நீடித்த இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டன. அரசியல் பிரச்சினைகளும் தீரவில்லை. பொருளாதாரத்திலும் நாடு் முன்னேறவில்லை. மாறாக சகல பிரச்சினைகளுமே  முன்னரை விடவும் மிகவும் மோசமாக தீவிரமடைந்து நாடு இறுதியில் வங்குரோத்து நிலை அடைந்ததையே நாம் கண்டோம்.

 நாட்டைச் சின்னா பின்னப்படுத்திய  போருக்கு காரணமான தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணங்கத்தீர்வு ஒன்றைக் காணவேண்டிய தேவை ஒன்று இருக்கிறது என்று  தென்னிலங்கை சிங்கள அரசியல் சமுதாயத்தின் பெரும்பகுதியிடம்  சிந்தனை இருப்பதாக தெரியவில்லை. 

இந்த பதினைந்து வருடங்களிலும்  சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை ஓரளவுக்கேனும் திருப்திப்படுத்தக்கூடிய  அரசியல் இணக்கத்தீர்வு ஒன்றைக் காண்பதை நோக்கிய திசையில் ஒரு அங்குலமேனும் நாடு முன்னோக்கி நகரவில்லை.

மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக அரசியலமைப்பின் அங்கமாக இருந்துவரும் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது கூட இறுதியில் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. உலகின் வேறு எந்த நாட்டிலும் அரசியலமைப்பில் உள்ள ஒரு ஏற்பாட்டை  நடைமுறைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி அரசியல் சக்திகள் வீதிகளில் இறங்கி போராடியதாக நாம் இதுவரை அறியவில்லை. ஆனால் இலங்கையில் அது நடக்கிறது.

 இலங்கைப் பாதுகாப்பு படைகள் போரில் விடுதலை புலிகளை தோற்கடிப்பதற்கு துணிச்சலான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய பெருமைக்கு எப்போதும் உரிமை கோரும்  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சிங்கள மக்களின் ஆதரவுடன் இனப்பிரச்சினைக்கு  அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான அரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. ஆனால் அவர் அந்த வாய்ப்பை வேண்டுமென்றே அலட்சியம் செய்து இலங்கையை நீண்டகாலத்துக்கு ஆட்சி  செய்யும் கனவுடன் பெரும்பான்மை இனவாத அரசியலை மேலும் தீவிரமாக முன்னெடுத்தார். அவர்  போர் வெற்றியை அதற்காக தாராளமாகப் பயன்படுத்தி முக்கிய பிரச்சினைகளில் இருந்து சிங்கள மக்களின் கவனத்தை திசைதிருப்பினார்.

  அந்த தந்திரோபாயம் சில வருடங்களுக்கு அவரது குடும்பம் ஆட்சியதிகாரத்தில் இருப்பதற்கு உதவியதே தவிர, சிங்கள மக்களுக்கு எந்த நன்மையையும் கொண்டுவரவில்லை. பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் என்பது அடிப்படையில் தவறான ஆட்சி முறையையும் ஊழல் முறைகேடுகளையும் மூடிமறைப்பதற்கான ஒரு உபாயமாகவே முன்னெடுக்கப்பட்டு  வந்திருக்கிறது என்ற உண்மை அம்பலமாவதற்கு நீண்டகாலம் எடுக்கவில்லை. என்றாலும் இன்னமும் கூட தென்னிலங்கை அதில் இருந்து முறையான பாடத்தைக் கற்றுக்கொண்டதாகத்  தெரியவில்லை.

 இலங்கை அரசியல் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சி  ராஜபக்சாக்களை இரு வருடங்களுக்கு முன்னர் ஆட்சியதிகாரத்தில் இருந்து விரட்டிய பின்னரும் கூட இன்னமும் அவர்கள் திரைக்குப் பி்ன்னால் இருந்து அரசாங்கத்தை இயக்கக்கூடியதாக இருப்பதும்  தங்களது ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் பெறும்  வேட்பாளரே  அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்று அவர்களால்  கூறக்கூடியதாக இருப்பதும் பெரும்  துரதிர்ஷ்டவசமானதாகும்.

 மக்கள் கிளர்ச்சியும் அதற்கு பின்னரான அரசியல் நிலைவரமும்  தென்னிலங்கை மக்களின் அரசியல் சிந்தனையில் ஏதாவது நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா என்பதை தேசிய தேர்தல் ஒன்றின் மூலம் மாத்திரமே தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

  இன்னமும் நான்கு மாதங்களில் நடத்தப்படவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பொருளாதார நெருக்கடி மீதே பிரதான வேட்பாளர்கள் கவனம் செலுத்துவார்கள். வேறு பிரச்சினைகளுக்கு குறிப்பாக தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணவேண்டிய அவசியம் குறித்து அவர்கள் அக்கறை செலுத்தக்கூடிய  சாத்தியமில்லை. 

  கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினப் பேரணியில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தனது எதிர்கால  அரசாங்கம் சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகளுக்கு சிங்கள மக்களின் ஆதரவுடன் தீர்வைக் காணும் என்றும்  அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் என்றும் கூறினார். ஆனால், தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதை அவர் குறிப்பிடுவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு சிறுபான்மைச் சமூகங்கள் குறிப்பாக தமிழர்கள் அணுகக்கூடிய ஒரே சிங்களத்  தலைவர் என்ற  தோற்றப்பாடு ஒன்று அவருக்கு இருக்கின்ற போதிலும், சிங்கள தேசியவாத வாக்காளர்களை அந்நியப்படுத்தக்கூடியதாக  இனிமேலும்  எந்த அணுகுமுறையையும் கடைப்பிடிக்கும் துணிச்சலை அவர் காண்பிக்கக்கூடிய சாத்தியம் இல்லை. 

 தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய உரையொன்றில் பதின்மூன்று பிளஸ் என்றோ அல்லது சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்றோ வாக்குறுதி வழங்குவதன் மூலம் தமிழர்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காக பேரம் பேசப்போவதில்லை என்று கூறியிருந்தார். சகல சமூகங்களையும் அரவணைக்கும் வகையில் இலங்கையர் என்ற அடையாளத்தை ஏற்படுத்தப்போவதாக அவர் உறுதியளித்தார். அது தொடர்பில் அண்மையில் தனது கட்டுரை ஒன்றில் அரசியல் ஆய்வாளர் ராஜன் பிலிப்ஸ் ஏற்கெனவே ஒவ்வொருவரினதும் தேசிய அடையாள அட்டையிலும் கடவுச்சீட்டிலும் ஒரு வகை அடையாளம் இருக்கிறது. அநுரா குமார மேலதிகமாக என்ன அடையாளத்தைக் கொடுக்கப்போகிறாரோ என்று நகைச்சுவையாக கேள்வி எழுப்பியிருந்தார்.

  சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகளைப் பெறுவதற்காக சிங்கள மக்கள் விரும்பாத எந்தவொரு வாக்குறுதியையும்  பிரதான வேட்பாளர்களில் எவரும்  வழங்கப்போவதில்லை என்பது நிச்சயமானது. அதேவேளை தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணவேண்டிய அவசியத்தை எந்த வேட்பாளரும் தங்களது தேர்தல் பிரசாரங்களில் சிங்கள மக்களிடம் உரத்து  வலியுறுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது. 

 சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் தவறான சிந்தனைகளின் பின்னால் செல்கின்றவர்களாகவே அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். பாரதூரமான விளைவுகளைக் கொண்டுவந்த கடந்த காலப் பாதையில் இருந்து சிங்கள மக்களை சரியான பாதைக்கு திசைதிருப்பும் வரலாற்றுப் பொறுப்பை  உணர்ந்த தலைவராக எவரையும் காண முடியவில்லை.

  இத்தகைய பின்புலத்தில், போருக்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் மாத்திரமல்ல, அவர்களின் வாழ்வாதார  மனிதாபிமானப் பிரச்சினைகளும் கூட மேலும் உக்கிரமடைந்திருக்கின்றன.

 அரசாங்கப் படைகளினதும் கடும்போக்கு சிங்கள தேசியவாத அரசியல் சக்திகளினதும் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புகளில் இருந்து தங்களது நிலங்களை தமிழ் மக்களால்  பாதுகாக்க முடியாமல் இருக்கிறது.போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு கூட அவர்கள் போராட வேண்டியிருக்கிறது. 

  அத்தகைய நினைவுகூரல் நிகழ்வுகளை படையினரையும் பொலிசாரையும் பயன்படுத்தி தடுப்பது இனப்பாகுபாட்டின் குரூரமான ஒரு வடிவமாகும். இந்த தடவை பொலிசாரின் நடவடிக்கைகளில் ஒரு விசித்திரமான அணுகுமுறையை காணக்கூடியாக இருக்கிறது. வடமாகாணத்தில் நினைவு நிகழ்வுகளுக்கு எந்த இடையூறையும் செய்யாத பொலிசார் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் அவற்றை தடுக்கிறார்கள். இதன் பின்னால் உள்ள தர்க்கத்தைப்  புரிந்துகொள்ள முடியவில்லை.

 போருக்கு பின்னரான காலகட்டத்தில் தமிழ் மக்களை உரிய முறையில்  வழிநடத்துவதற்கு உருப்படியான அரசியல் சமுதாயம் ஒன்று இல்லை என்பது அவர்கள் எதிர்நோக்குகின்ற ஒரு முக்கியமான  பிரச்சினையாகும். தமிழ் மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால், கடந்தகால அவல  அனுபவங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்று சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலைவரங்களுக்கு பொருத்தமான முறையில் அவர்களை வழிநடத்துவதற்கு விவேகமான அரசியல் தலைவர்கள் இல்லை.

  போரின் முடிவுக்கு பிறகு வடக்கு,கிழக்கு மாகாணங்களின் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் வரலாற்றுப் பொறுப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் தானாக வந்துவீழ்ந்தது. அதை  உகந்த முறையில் கையாண்டு மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் கட்டுறுதியான ஒரு அரசியல் சமுதாயத்தை நிறுவவுதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் தவறினர். வெறுமனே கட்சி அரசியல் நலன்களை முன்னிறுத்தி அவர்கள் செயற்பட்டார்களே தவிர, போருக்கு பின்னரான சூழ்நிலைகளில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தக்கூடிய  ஒன்றிணைந்த பலமான ஒரு அரசியல் சக்தியாக கூட்டமைப்பைக் கட்டியெழுப்புவதில் அக்கறை காட்டவில்லை. அதற்கான விவேகமோ அல்லது அர்ப்பணிப்போ அவர்களிடம் இருக்கவில்லை.

 அதன் விளைவாக  இன்று தமிழர் அரசியல் சமுதாயம் சிதறுண்டு கிடக்கிறது. சகல தமிழ்க்  கட்சிகளுமே ஏதோ ஒரு வகையில் பிளவுண்டு கிடக்கின்றன. அவர்கள் தங்களுக்கு இடையிலான  தகராறுகளைத் தீர்ப்பதற்கே இயலாதவர்களாக இருக்கும்போது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் அக்கறை காட்டுவதற்கு நேரம் எங்கே இருக்கிறது? 

தமிழர்களுக்கு எவற்றைக்  கொடுக்கக்கூடாது என்பதில் பல்வேறு முரண்பாடுகளுக்கு மத்தியிலும் சிங்கள அரசியல் சமுதாயம் பெரும்பாலும் ஐக்கியப்பட்ட ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்ற அதேவேளை, தமிழ் மக்களுக்கு தேவையானவற்றைக்் கோருவதற்கு ஐக்கியப்பட்ட ஒரு நிலைப்பாட்டுக்கு வரமுடியாமல் தமிழ்க்கட்சிகள்  இருக்கின்றன. 

 தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதில் தென்னிலங்கை அரசியல் சமுதாயம் அக்கறை அற்றதாக இருக்கும் நிலையில், ஜனநாயக அடிப்படையிலான போராட்டங்களை முன்னெடுத்து அரசாங்கத்தினதும் உலகத்தினதும் கவனத்தை ஈர்ப்பதற்கு முன்னென்றும் இல்லாத வகையில் தமிழ் அரசியல் சக்திகளின் ஐக்கியம் அவசியமாக தேவைப்படுகின்ற  வேளையில் அவர்கள் படுமோசமாக பிளவுண்டு கிடக்கும்  கவலைக்குரிய நிலையைக் காண்கிறோம்.

 அண்மைய வாரங்களாக ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனை தொடர்பில் தமிழ்க்கட்சிகள் கலந்தாலோசனைகளை நடத்திவருகின்ற போதிலும், அவர்கள் கருத்தொருமிப்புக்கு வருவார்கள் என்று எதிர்பார்ப்பது கஷ்டமானதாகும். சில தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கூறுகின்ற தான்தோன்றித்தனமான நகைப்புக்கிடமான  கருத்துக்களை நோக்கும்போது அரசியல் சார்பற்ற கண்ணியமான பிரமுகர் எவரும் பொது வேட்பாளராகக் களமிறங்க முன்வருவாரா என்பது சந்தேகமே.

  அதேவேளை, கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகளுடன் தமிழ் மக்களைக் கட்டிப்போடும் நடைமுறைச் சாத்தியமற்ற அரசியல் செயற்பாடுகள்  அண்மைக்காலமாக அதிகரித்து வருவதைக்  காணக்கூடியதாக இருக்கிறது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்களில் தங்களது உயிர்களைத் தியாகம் செய்தவர்களையும் போரில்  அநியாயமாக  கொன்றுகுவிக்கப்பட்ட   மக்களையும் நினைவுகூரவும்  கௌரவிக்கவும்  தமிழ் மக்களுக்கு சகல  உரிமைகளும் இருக்கின்றன.  ஆனால், கற்பனைசெய்து பார்த்திருக்க முடியாத தியாகங்கள் நிறைந்த அந்த போராட்டங்கள் இறுதியில் அவலமான ஒரு முடிவுக்கு வரவேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது  என்று சுயவிமர்சனம் செய்யாமல் வெறுமனே நினைவுகளுடன் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. இதை விளங்கிக் கொள்ளவேண்டியது மிக  மிக அவசியம்.

 இது இவ்வாறிருக்க, தமிழ் தேசிய அரசியலில் இரு புதிய ஆரோக்கியமற்ற போக்குகள் தீவிரமாக ஊடுருவுகின்றன. அதில் ஒன்று  மதத்தீவிரவாதம். தமிழ்த் தேசியவாத அரசியல் தொடக்கத்தில் இருந்தே மதசார்பற்றதாகவே இருந்து வந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள சகல மதப்பிரிவினரையும் அது அரவணைத்தது.பல  தசாப்தங்களாக தமிழர்களின் தலைவராக மதிக்கப்பட்ட  காலஞ்சென்ற எஸ்.ஜே வி. செல்வநாயகம் இந்து மதத்தைச் சேர்ந்தவர் அல்ல. ஆனால் முஸ்லிம்கள் உட்பட தமிழ்பேசும் சமூகத்தின் சகல மதப்பிரிவினரும் அவரது தலைமையை ஏற்றுச் செயற்பட்ட காலம் ஒன்று இருந்தது. தமிழ்த் தேசியவாத அரசியலில் இருந்த மிகவும் குறிப்பிடத்தக்க ஆரோக்கியமான அம்சமாகவும் அது விளங்கியது.

 அண்மைக்காலமாக தமிழர் அரசியலை இந்துமதத்துடன் அடையாளப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளராக இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரே களமிறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. அது  மாத்திரமல்ல அண்மைக்காலமாக அரசியல் செயற்பாடுகளில் தங்களை தீவிரமாக ஈடுபடுத்தும் இந்து துறவிகளில் ஒருவரை பொதுவேட்பாளராக நிறுத்தலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டது. இந்த முயற்சிகளில்  இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா முன்னெடுக்கும் இந்துத்வா கொள்கையின் தாக்கம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

மற்றையது இலங்கைத் தமிழர் அரசியலில்   புலம்பெயர் தமிழ்ச்  சமூகத்தின் மத்தியில் உள்ள தீவிரவாத நிலைப்பாட்டைக் கொண்ட சக்திகளின் அதிகரித்த செல்வாக்கு.

  புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு பயனுறுதியுடைய பங்களிப்பைச் செய்த நீண்ட காலகட்டம் ஒன்று இருந்தது. தமிழ் மக்கள் மீதான  அரசாங்கங்களின் ஒடுக்குமுறையை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றதில் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் மகத்தான பங்களிப்பைச் செய்தது. 

  ஆனால், போரின் முடிவுக்கு பின்னரான காலப்பகுதியில் தமிழர் அரசியலில் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள சில சக்திகள் அநாவசியமான ஆதிக்கத்தைச்  செலுத்த முனைந்து நிற்கிறார்கள். இதனால் இன்றைய தமிழர் அரசியலில் முன்னென்றும் இல்லாத வகையில் ஊழல்தனமான போக்குகள்  அதிகரித்திருக்கின்றன.வெளிநாட்டில் இருந்து அனுப்புகின்ற பணத்தின் மூலம் இலங்கைத் தமிழர் அரசியலின் திசைமார்க்கத்தை தீர்மானிக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றார்கள். நாட்டில் வாழும் தமிழர்களுக்கு எத்தகைய அரசியல் தீர்வு வேண்டும் என்பதை மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பாதுகாப்பான சூழலில் வாழ்ந்துகொண்டு நடைமுறைச் சாத்தியமற்ற தீவிவாதம் பேசுகின்ற சக்திகள் ஒருபோதும் தீர்மானிக்க முடியாது. அதற்கு ஒருபோதும் அனுமதிக்கவும் கூடாது.

வெளிநாட்டு தமிழ்ச் சக்திகளின் ஆரோக்கியமற்ற தலையீடுகள் தமிழ்ப் பகுதிகளில் சமூக  விரோத செயற்பாடுகளுக்கும் ஊக்கமளிக்கின்றன. இன்றைய இலங்கைத் தமிழ்ச் சமூகம்  நினைத்துப்பார்க்க முடியாத தியாகங்கள் நிறைந்த மூன்று தசாப்தகால விடுதலைப் போராட்டம் ஒன்றைக் கடந்துவந்த சமூகத்துக்கு இருக்கவேண்டிய எந்த குணாதிசயத்தையும் கொண்டதாக இல்லை.

  இவ்வாறாக, நிலைவரங்கள் தொடருமாக இருந்தால், உலகம் கவனிக்காத ஒரு மக்கள் கூட்டமாக இலங்கை தமிழர்களும் நடைமுறைச் சாத்தியமற்ற அரசியல் முழக்கங்களைச் செய்துகொண்டு குடாநாட்டுக்குள் மாத்திரம்  கொக்கரிக்கின்ற ஒரு கூட்டமாக தமிழ் அரசியல்வாதிகளும் மாறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. 

 

https://arangamnews.com/?p=10762

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகளுடன் தமிழ் மக்களைக் கட்டிப்போடும் நடைமுறைச் சாத்தியமற்ற அரசியல் செயற்பாடுகள்  அண்மைக்காலமாக அதிகரித்து வருவதைக்  காணக்கூடியதாக இருக்கிறது.

large.IMG_6508.jpeg.efdc60fda9e62dbc55c0



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.