Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"காலம் கடந்தும் காதல் வாழும்" [மனைவியின் 17 ஆவது நினைவு தினம்: 08/06/2024] / உண்மையும் கற்பனையும் சேர்ந்த கதை 
 
 
"காலம் மாறினால் அன்பு மாறுமா?
கோலம் கலைந்தால் அன்பு போகுமா?
ஓலம் எழுப்பினால் பிணம் எழும்புமா?
நிலம் வறண்டால் பயிர் துளிர்க்குமா?"
 
நீங்கள் ஒருவருடன் உண்மையான அன்பு அல்லது காதல் வசப்படும் போது, அந்த அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கையுடன், வாழ்க்கையின் அனைத்து ஏற்ற தாழ்வுகளிலும் ஒன்றாக பயணிப்பதுடன், அதில் பெரும் மகிழ்வையும் கண்டு, ஒருவருக்கு ஒருவர் கொண்ட அன்பு முழுமையாக வாழ்வதை உணர்வீர்கள்! சொந்த நாட்டை விட்டு வெளிநாடு போனாலும், மாற்று கலாச்சாரத்தின் சில தாக்கங்கள் உங்களை வசப்படுத்தினாலும் அந்த அன்பு, ஒவ்வொரு நாளும் உங்களுக்கு தைரியம், வலிமை மற்றும் மகிழ்ச்சியைத் தருவதுடன், 'காலம் கடந்தும் நாடு கடந்தும் அன்பு வாழும்' என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கும்!
 
அது ஒருவர் இறந்தாலும் கட்டாயம் மற்றவரிடத்தில் அவர்பால் கொண்ட அன்பு தொடரும்! ஆனால் இன்னும் ஒன்றையும் நான் சொல்லவேண்டும், இரு காதலர்கள், தம்பதியர்கள் எண்பது, தொண்ணூறு வயது மட்டும் பிரியாமல் ஒன்றாய் வாழ்கிறார்கள் என்பது 'காலம் கடந்தும் அன்பு வாழும்' என்று பொருளல்ல! அவர்கள் மற்றவர்கள் பார்ப்பதற்காக வெளியில் அன்பாகக் காட்டிக் கொண்டே, உள்ளே வெதும்பும் உறவுகளாகவோ அல்லது சமூகம் மற்றும் மதத்தின் கட்டுப்பாட்டின் காரணமாக பிரிந்து செல்லத் தயாராக இல்லாதவர்களாகவோ இருக்கலாம்!
 
நீங்க உண்மையான காதல் அல்லது அன்பு ஒன்று இருக்கு என்று நம்புகிறீர்களா? கண்டதும் காதல் என்பது உண்மையா? காதல் அல்லது அன்பு என்றென்றும் நீடிக்கும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? இந்த மூன்று கேள்வியிலும் தான் உங்க வாழ்க்கைகூட தங்கியுள்ளது.
 
சங்கத் தலைவி ஒருவள் "மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய, காமம் கலந்த காதல் உண்டு எனின், நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி;" என 'அப்படிப் பட்ட மலை நாட்டின் தலைவன் அவன். அவனுக்கும் எனக்கும் உள்ள உறவு ‘காமம் கலந்த காதல்’ என்றால் மிகவும் நல்லது. அதனை நீ தேடித் தருவ தென்றால் அவனிடம் செல்லும் படிக் கூறு' என்று கூறுகிறாள்.
 
அதாவது "வெறும் காமம் என்றால், தயவு செய்து வேண்டாம் என்கிறாள்.
 
அதாவது, காதல் மிகுந்த காமக் கூட்டம் (புணர்ச்சி) உளதாயின் அது மிக நன்றாகும், நீடிக்கும் என்கிறாள்! இன்னும் ஒருவனோ, தங்கள் கண்ணெதிரே தோன்றிய செம்மண் நிலத்தோடுச் சேர்ந்த நீரை எப்படி பிரிக்க முடியாதோ அதுபோலவே நம்மிருவரையும் பிரிக்கமுடியாது என்று காதல் மிகுதியில் தலைவியிடம்
 
"யாயும் ஞாயும் யாராகியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர். யானும் நீயும் எவ்வழி அறிதும், செம்புலப் பெயல்நீர் போல, அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’’
 
என்கிறான். இந்த இரண்டிலும் உண்மை உண்டு. அதை அனுபவித்தவன், அனுபவித்துக் கொண்டு இருப்பவன் நான்!
 
எம் சமூகப் பண்பாடு, பழக்கவழக்கங்கள், நாம் இன்று வாழும் இடத்தில் சூழ உள்ள மற்ற பெரும்பான்மையான மனிதர்கள், மற்றும் இன்றைய நாளாந்த வாழ்க்கையில் ஏற்படும் பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் என எத்தனையோ எம்மை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கும். ஆகவே இது காதலையும் சிலவேளை சோதனைக்கு ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை. இவை எல்லாம் தாண்டியது தான் உண்மையான, மனங்களிளும் ஆன்மாக்களிளும் இணைவாகிய காதல் / அன்பு! முதிர்ந்து காலம் கடந்தாலும் மூச்சில் நின்று வாழும் காதல் / அன்பு அதுதான்!
 
இன்று 14/02/2024, அன்பு கொண்டோர் தினம். நான் இன்று நேரத்துடன் எழும்பிவிட்டேன். மற்ற நாள்களை விட இது ஒரு சிறப்பு நாள். எதோ காதலர் தினம் [valentine's day] என்பதால் நான் சொல்லவில்லை. எனக்கு அதில் அக்கறையும் இல்லை.
 
ராசாத்தி, என் மூன்று பிள்ளைகளின் தாய், எனக்காக காத்திருக்கிறாள். வெளிய கொஞ்சம் பனி பொழிகிறது. எங்கும் பால் போல வெள்ளை. முட்டுக்கு கொஞ்சம் கீழே வரை இருக்கும் என் புதை மிதியடிமூடு காலணியை [boots] காலில் மாட்டிக்கொண்டு, குளிரை தாங்கும் உடைகளையும் அணிந்து கொண்டு, வழுக்கி விழக் கூடாது என்று நான் மெல்ல மெல்ல அடிவைச்சு பேருந்து தரிப்புக்கு போனேன். இந்த வயதில் சறுக்கி தவறி விழுந்தால் அவ்வளவும் தான். ஒவ்வொரு அடி வைக்கும் பொழுதும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னைய நினைவுதான் மனதில் ஊஞ்சல் ஆடியது.
 
திங்கள் கிழமை 14/02/1983, ஆம் நாள் அன்று நான் முதல் முதல், படிப்பு முடித்தபின், அரசநிறுவனம் ஒன்றில் கொழும்பில் வேலை ஆரம்பிக்கிறேன். நான் நேற்றுத்தான் கொழும்பு வந்து தற்காலிகமாக ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளேன். இன்று லேசான தூறல். தார் வீதி வழுக்கும் என்பதால், மெல்ல மெல்லமாக பார்த்து நடந்து அருகில் இருந்த பேருந்து தரிப்பு நிலையம் போனேன். அங்கு வேறு சிலரும் காத்து இருந்தார்கள். அப்ப தான் அவசரம் அவசரமாக அங்கு கொஞ்சம் தலை நனைந்தபடி ஓடிவந்த அவள், கைக்குட்டையால், முகம் முழுவதையும் துடைத்தாள். முகம் துடைத்த ஈரத்தில் பளபளத்தன. ஒரு சிறு கைக் கண்ணாடி ஒன்றை தன் கைப்பையில் இருந்து எடுத்து முகத்தை பார்த்தாள், அவளுக்கு அது சந்தோசமாக இருந்தது போலும். அவள் முகத்தில் ஒரு புன்னகை தொற்றியது. நான் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன். அதை எப்படியோ கவனித்த அவள், தன்னை சமாளித்தவாறு, மறுபக்கம் பார்க்கத் தொடங்கினாள். இதற்கு இடையில் என் பேருந்து வர, நான் அதில் ஏறி, இருக்கையில் அமர்ந்தேன். என்ன ஆச்சரியம் அவளும் அதே இருக்கையில் அமர்ந்தாள்.
 
நான் ஹாய் என்று அவளிடம் கூறி, நான் கொழும்பு புதிது, மட்டக்குளி, காக்கை தீவில் உள்ள கடற்தொழில் அமைச்சுக்கு போகவேண்டும், அது வரும் பொழுது சொல்லுகிறீர்களா என்று கேட்டேன். அவள் என்னை மேலும் கீழும் பார்த்தாள், நீங்கள் தானா புதிதாக வரும் பொறியியலாளர் என்று எடுத்தவுடன் கேட்டாள்.
 
என்னைத் தூக்கிவாரி போட்டது. 'ஆமாம்', ஆனால் நீங்க யார் என்று கேட்டேன். அவள் சொல்லவில்லை, ஆனால் பேருந்து நின்றதும், இங்குதான் இறங்கவேண்டும் வாங்க சார் என்றாள். இன்று காதலர் தினம் என ஞாபகத்துக்கு வர, 'ஹாப்பி வேலன்டைன் நாள்' என்று சொல்லிவிட்டு முகத்தை பார்த்தேன். புதிதாக தாமரை பூ பூத்ததுபோல அவள் முகம் மலர்ந்து இருந்தது. 'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்'. என என் உள்ளத்தில் என்னை அறியாமலே அவள் நிறைந்துவிட்டாள். என்றாலும் அவள் என்னை விரும்புகிறாளா என்று எனக்குத் தெரியா ? அவள் திருப்பி சந்தோசமான வேலன்டைன் நாள் சொல்லவே இல்லை, அது தான் என் மனதை அரித்துக்கொண்டு இருந்தது.
 
அவள் அங்கே தட்டச்சாளர் ஆக இருந்தாள். நான் அன்று முழுவதும் வேலையை பாரம் எடுப்பதிலும், மற்றும் தேவையான அறிமுகங்களிலும் போய்விட்டது. அதனால் அவளை மீண்டும் அங்கே சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மற்றும் என் உயர் அதிகாரிகளுடன் கதைத்து, அன்றைய வேலையை முடித்து வெளியேவர அரைமணித்தியாலம் சுணங்கியும் விட்டது. நான் அவசரம் அவசரமாக பேருந்து நிலையம் வந்தேன். அவள் இன்னும் அங்கு நின்றாள். 'பஸ் வரவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு பதில் சொல்லாமல் 'ஹாப்பி காதலர் தினம்' என்றாள். இருவரும் ஒன்றாக அமர்ந்து வீடு திரும்பினோம். ஒரே அமைதி, கண்கள் மட்டுமே பேசின! அன்று இணைந்த இரு இதயங்களும் அதன் பின் பிரியவே இல்லை. அந்த நாள் தான் இன்று. அதுதான் இது ஒரு சிறப்பு நாளாக இருக்கிறது. அவ்வளவுதான்!
 
ரோசா மலர்கொத்து ஒன்று என் கையில் இருந்தது. அதை கவனாக பிடித்துக்கொண்டே பஸ்சில் ஏறினேன். இது முதல் தடவை இல்லை முன்பும் பல முக்கிய நாட்களில் போய் உள்ளேன். வெள்ளை மேல் சட்டை மற்றும் கருப்பு கால்சட்டை அணிந்தும் இருந்தேன். அது அவளுக்கு பிடித்த நிறம். என்றாலும் ஜம்பர், ஜாக்கெட் மற்றும் ஸ்னோ பேண்ட் [jumper, jacket and snow pant] போட்டு இருப்பதால், அது அவளுக்கு தெரியப் போவதில்லை. இது ஒரு மரியாதை மட்டுமே!
 
என்னை அந்த பஸ்சில் பார்ப்பவர்கள் தங்களுக்கும் எதோ கதைப்பது தெரிகிறது. எனக்கு பக்கத்தில் இருந்த இளம் பெண் ஒருவள் ஆங்கிலத்தில் ' மாமி எப்படி? ஏதாவது சுகயீனமாய் வைத்திய சாலையில் இருக்கிறாரா' என்று கருணையுடன் விசாரித்து, 'ஹாப்பி வேலன்டைன்' என்று வாழ்த்தும் கூறினார். எனக்கு பேத்தியின் ஞாபகம் தான் வந்தது, ஆனால், அவள் இன்னும் பாடசாலை போகாத சிறு பிள்ளை. என் கண்ணில் இருந்து கண்ணீர் துளிகள் விழுந்தன. வாய் பேச மறுத்துவிட்டது. அந்த இளம் பெண் என்னையே பார்த்துக் கொண்டு 'நான் உங்களை காயப்படுத்தி இருந்தால், வருந்துகிறேன்' என்றாள். 'இல்லை, நீ என் பேத்தி மாதிரி' என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டேன்!
 
1983 ஜூலை 24 இரவு, கொழும்பில் தமிழர்களுக்கு எதிராக காடையர்களாலும் அரசின் சில தலைவர்களாலும் ஏற்படுத்தப்பட்ட கலவரம் அடங்க ஏழு நாட்கள் சென்றது. முக்கியமாக சிங்களக் காடையர் கும்பல் தமிழரைத் தாக்கினர், உயிருடன் எரித்தனர், படுகொலைகளைப் புரிந்தனர், உடமைகளைக் கொள்ளையடித்தனர். இறப்பு எண்ணிக்கை 400 முதல் 3,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது, 150,000 பேர் வீடற்றவர்களாயினர். ஏறத்தாழ 8,000 வீடுகளும், 5,000 வணிக நிறுவனங்களும் அழிக்கப்பட்டன.
 
இக்கலவரத்தின் போது ஏற்பட்ட மொத்தப் பொருளாதாரச் செலவு $300 மில்லியன் என மதிப்பிடப்பட்டது. இவை எல்லாவற்றையும் விட , அவளின் தொடர்புகூட அறுந்துவிட்டது. அன்று கைத்தொலைபேசி இலங்கையில் இல்லாத காலம். போய் பார்க்கக்கூடிய சூழ்நிலையும் இல்லை. என்றாலும் அவள் கொழும்பில் பிறந்து வளர்ந்தவள். பல சிங்கள நண்பர்களும் அவள் குடும்பத்துக்கு உண்டு. எனவே பெரிதாக கவலைப்படத் தேவை இல்லை என்றாலும், மனதில் ஒரு வேதனை வதைத்துக்கொண்டே இருந்தது.
 
பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம் என்ற அரச-சார்பற்ற அமைப்பு 1983 டிசம்பரில் வெளியிட்ட அறிக்கையில் இப்படுகொலைகளை ஒரு இனப்படுகொலை என்று விவரித்தது குறிப்பிடத்தக்கது. கலவரங்களுக்கு சில நாட்களுக்கு முன்னதாக, 1983 ஜூலை 11 இல் இலண்டன் 'டெய்லி டெலிகிராப்' பத்திரிகைக்கு அரசுத்தலைவர் ஜெயவர்தன அளித்த ஒரு நேர்காணலில், ஜெயவர்தன இவ்வாறு கூறினார்:
 
"யாழ்ப்பாண (தமிழ்) மக்களின் கருத்தைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. இப்போது நாம் அவர்களை நினைக்க முடியாது. அவர்களின் வாழ்க்கையைப் பற்றியோ அல்லது எங்களைப் பற்றிய அவர்களின் கருத்தைப் பற்றியோ அல்ல. வடக்கில் எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் இங்கு மகிழ்ச்சியடைவார்கள்... உண்மையில் நான் தமிழர்களை பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்"
 
இது ஒன்றே இந்த கலவரத்தின் நோக்கத்தையும் கொடுமையையும் எடுத்துக்காட்டும்!
 
நான் இந்தியா அரசாங்கத்தின் சரக்கு கப்பல் மூலம் , மற்ற நூற்றுக்கணக்கான உள்நாட்டு தமிழ் அகதிகளுடன் யாழ்ப்பாணம் சென்றேன். ஏறத்தாழ ஆறுமாதம் வேலைக்கு திரும்பவில்லை. அவளுடன் தொடர்புகளும் நின்றுவிட்டது, என்றாலும் மீண்டும் சந்திப்பேன் என்ற நம்பிக்கை மட்டும் வாழ்ந்து கொண்டே இருந்தது. இதற்கிடையில் என் அண்ணாவின் உதவியுடன் கனடா போகும் வாய்ப்பு கிடைத்தது. எனவே ஆறு மாதத்தின் பின் கொழும்பு , திரும்பி, என் ராஜினாமா கடிதம் கொடுக்க வேலைத்தளம் போனேன், கடிதத்தை விட அவள் அங்கு இருக்கிறாளா இல்லையா என்பதை சரிபார்ப்பதே எனக்கு முக்கியமாக இருந்தது. என்னைக் கண்டதும், அவள் ஓடிவந்து, வேலைத்தளம் என்பதையும் மறந்து, என்னை அணைத்து ஆனந்த கண்ணீர் சிந்தினாள்.
 
மற்றவர்களும் ஒருவர் ஒருவராக, அணைத்து நலம் விசாரித்தனர். ஏன் அவசரப் படுகிறீர்கள், ராஜினாமா வேண்டாம் என்றும் கூறினர். எனினும் நான் அண்ணா கூப்பிடுவதை கூறி, ராஜினாமா கடிதத்தை கொடுத்தேன். அன்று மாலையே அவளின் வீட்டிற்கும் சென்று, நான் கனடா போய் வேலை எடுத்து, ஓரளவு நிரந்தரமானதும் உங்க மகளை, என் துணைவியாக அங்கு கூப்பிட உள்ளேன் என்பதை தெரியப்படுத்தினேன். அப்படியே அவளும் 1985, அக்டோபர் 22 அங்கு வந்தாள். ஆனால் நாம் நினைப்பது ஒன்று நடப்பது வேறு?
 
நான் அவளுடன் கதைத்த அந்த கடைசி நாளை நினைத்தேன். வைத்தியர்கள் கைவிரித்துவிட்டார்கள். அது வெள்ளிக்கிழமை ஜூன் 8, 2007 அதிகாலை நாலு மணி இருக்கும். நான் அவளின் கட்டிலில் இருந்து கொண்டு அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன், மகன் அதுவரை அங்கு நின்றவர், கொஞ்சம் வெளியே போய்விட்டார். இரண்டு மகளும். பல்கலைக்கழக விடுதியில், அவர்கள் விடிந்த பின்புதான் தொடர்வண்டி எடுத்து வருவார்கள். அந்த நேரம் திடீரென என் மடியில் சாய்ந்தவள், 'அன்பே நான் இனி சாகிறேன்' - அது தான் அவள் கதைத்த கடைசி வார்த்தை. இன்னும் என் நெஞ்சை உருக்கும் சோக வார்த்தை!
 
நான் மலர்க்கொத்தை இறுக்கமாக பிடித்தபடி, அந்த பனி தூறலிலும், படலையை திறந்து உள்ளே போனேன். அவளுக்கு இந்த காதலர் தினத்தில் மகிழ்வாக மலர் கொத்துடன் அன்பு முத்தமும் பரிமாறியது நெஞ்சை விட்டு அகலவில்லை. என்னில் ஒரு தடுமாற்றம் தானாக வந்தது, பனியுடன் குளிர் காற்றும் கொஞ்சம் கடுமையாக வீச தொடங்கி விட்டது. என் கை சரியாக விறைத்துக் கொண்டு வந்தது, பூக்கொத்து கையில் இருந்து நழுவியது, ஆனால் கடும் காற்று அதை அவளின் உடல் மேலே போட்டது. அவள் எழுந்து, அந்த பூக்கொத்தை கையில் எடுத்து நுகர்ந்து பார்த்தாள், அவள் முகம் கண்டு அந்த ரோசாக்கள் தலை குனிந்து காற்றுடன் பறந்து சென்றன. நான் சிலநிமிடம் அங்கு இருந்துவிட்டு 'மீண்டும் வருகிறேன்' என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினேன்! "காலம் கடந்தும் காதல் வாழும்"
 
 
"ஆந்தை அலறவில்லை?- சுடர் ஒளி அணையவில்லை?
எந்தை அவள்- தன் ஒளி அணைத்துவிட்டாள்
முந்தை நாளில்- கொஞ்சி கூடி குலாவினாள்
பந்தை அடித்து-சேயுடன் ஆனந்தக் கூத்தாடினாள்"
 
"சிந்தை ஓடவில்லை?- என் மனம் ஆறவில்லை?
எந்தை அவள்-கண் மூடி உறங்கிவிட்டாள்
நிந்தை பேசாள்- நினைவிலும் கெடுதல் செய்யாள்
விந்தை புரிந்தாள்-எந்நாளும் உள்ளம் கவர்ந்தாள்"
 
"மந்தை கூட்டம் போல் நாம் இருந்தோம்!
தந்தை தாயாக சேர்ந்து நாம் இருந்தோம்!
இந்தை பிள்ளை இன்னும் கண்ணீர் துளியில்
கந்தை கொண்டு கண் துடைக்க வாரயோ?"
 
"குந்தை அண்டி அவள் ஒய்யாரமாய் இருப்பாள்
விந்தை காட்டி சேயுடன் ஒன்றி இருப்பாள்
சிந்தை குளிரும் அவள் சிங்கார சிரிப்பில்
எந்தை அவள் வாய் மூடி உறங்கிவிட்டாள்"
 
"தீந்தை விழியால் தினம் காதல் பேசியவள்
சாந்தை பூசி சந்தன பெட்டிக்குள் போயிற்றாள்
வேந்தைக்கும் ஏழைக்கும் அவள் ஒரே பார்வை
குழந்தைக்கும் குஞ்சுக்கும் அவள் ஒரே அன்பு"
 
"உந்தை வழியில் -தினம் கடவுள் வேண்டினாய்
விந்தை உலகமடா- இன்று நீயே கடவுள்?
எந்தையே என்றன்- குலப் பெருஞ் சுடரே!
மடந்தையே என்று -நான் உன்னை காண்பேன்??"
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
337148008_762370721866487_1440481466062891025_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=1KIIi1s7o2IQ7kNvgHJksCv&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYDqkY6DQFp0oumaOTpLnMK305NUff7eBs0EGphyv7PNEg&oe=666744C2 337241612_761611585372146_5000116653776615783_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=qeZ1cgfT-YsQ7kNvgF90lSO&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYCnIz6gx3w5Zr9n_iZaeLGHDQrM0gNBAYlkebeVxruLbQ&oe=66674EE1 326923_5001086307708_1260136012_o.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=MWKn9ONpVZAQ7kNvgFYExaI&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYBtBeQYIKrQIPZ5aWGWwTXzqhPSUTL0XVhKhuhYqj0jEg&oe=6688E74F 10419628_10202139845920414_917909223715512076_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=pUVxcnoscs4Q7kNvgEHbh_j&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYD2kAbDSXDEzwDVmCRHXrj1tuIIQsqAPnf3Ess4beLb1Q&oe=6688F21F
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

படிக்க மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கின்ரது ஐயா. வாழ்வில் நடந்த இனிய சம்பவங்களை அசைபோடுவது எவ்வளவு மன மகிழ்சியை கொடுக்கின்ற்து. 
இப்பொழுது இந்த காக்கை தீவு மட்டக்குளி மிகவும் மாறி விட்டது. அருமையான காதலர் பூங்கா ஒன்றுள்ளது. இன்னும் இங்கு காதலர்கள் கைகோர்த்து திரிகின்றார்கள். 

மாலை மயங்கும் நேரத்தில் இங்கு சூரிய அஸ்தமனத்தை பார்த்தவாறு பூங்காவில் நடப்பது / உடற்பயிற்சி செய்வது எனக்கு மிகவும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.  

ஈழத் தமிழர் வரலாற்று நிகழ்வுகளோடு இனிமையான தருணங்களையும் உள்வாங்கிக் கடந்து வந்த பாதையை அருமையாக எழுதியுள்ளீர்கள். நாம் திரும்பிப் போக முடியாத மனதில் ஆழமாகப் பதிந்த அந்த நினைவுகளை அசை போடுவது இனிமை. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.