Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜிவ் நோக்கி வந்த 3 தோட்டாக்கள், இந்திரா மீது வீசப்பட்ட கற்கள், காத்திருந்த மோதி - பிரதமர்களை பாதுகாப்பது யார்?

இந்தியப் பிரதமர்களின் பாதுகாப்பில் நடந்த குளறுபடிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரெஹான் ஃபசல்
  • பதவி, பிபிசி இந்தி
  • 25 ஜூலை 2024, 02:33 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்தியாவில் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

எந்தவொரு பாதுகாப்பு கட்டமைப்பும், தாக்குபவர்கள் ஊடுருவும் வரை முற்றிலும் உஷார் நிலையில் இருப்பதாகத் தோன்றும்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு இதற்கு ஒரு சமீபத்திய உதாரணம்.

டிரம்ப் மீதான தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி உலகெங்கிலும் விஐபிகளின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள ஏஜென்சிகளும் தங்கள் அமைப்புகளை மதிப்பாய்வு செய்யத் தொடங்கியுள்ளன.

இந்தியாவில் பிரதமரின் பாதுகாப்பு உலகின் வலிமையான ஒன்றாகக் கருதப்படுகிறது. பிரதம மந்திரி இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டது. அது தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது.

வரலாற்று ரீதியாக இதுபோன்ற பல குறைபாடுகள் இந்தியாவில் நடந்துள்ளன. பிரதமர் பதவியில் இருப்பவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டபோது, பாதுகாப்பு ஏஜென்சிகள் தர்மசங்கடத்தை சந்திக்க நேரிட்டன.

புவனேஷ்வரில் இந்திரா காந்தி மீது தாக்குதல்

இந்திரா காந்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தேர்தல் பிரசாரத்தின் போது பேரணியில் உரையாற்றும் இந்திரா காந்தி

புவனேஷ்வரில் 1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது நடைபெற்ற தேர்தல் பேரணியில் இந்திரா காந்தி பேசத் தொடங்கியவுடன், கூட்டத்தில் இருந்த சிலர் மேடை மீது கற்களை வீசத் தொடங்கினர்.

ஒரு கல் பாதுகாப்பு அதிகாரியின் நெற்றியிலும், மற்றொன்று ஒரு பத்திரிகையாளரின் காலிலும் பட்டது. இதைப் பார்த்த இரண்டு பாதுகாப்புப் பணியாளர்கள் இந்திரா காந்தியின் இரு பக்கங்களிலும் நின்று கொண்டனர்.

பேச்சை உடனடியாக முடிக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர் அதற்கு செவிசாய்க்கவில்லை. இதற்கிடையில் மேடை மீது அவ்வப்போது கற்கள் வீசப்பட்டன. சிறிது நேரம் கழித்து இந்திரா தனது பேச்சை முடித்துக்கொண்டு மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

அவர் தனது உரையை முடித்தவுடன் உள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் பேசத் தொடங்கினார். அப்போது மேடை மீதான கல்வீச்சு மீண்டும் தொடங்கியது.

"இதைப் பார்த்த இந்திரா காந்தி மீண்டும் மைக் அருகில் சென்று, 'இது என்ன அடாவடித்தனம்? இப்படியா நாட்டை கட்டி எழுப்புவீர்கள்?' என்று கேட்டார். அப்போது பல கற்கள் ஒரே நேரத்தில் வீசப்பட்டதில் ஒரு கல் இந்திரா காந்தியின் முகத்தில் பட்டது . அவர் மூக்கில் இருந்து ரத்தம் வழியத்தொடங்கியது. கல்வீச்சு காரணமாக அவருடைய மூக்கின் எலும்பு உடைந்தது,” என்று இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் கேத்தரின் ஃபிராங்க் குறிப்பிட்டுள்ளார்

ஆனால் இந்திரா காந்தி தனது தேர்தல் பிரசாரத்தை நிறுத்தவில்லை. அடுத்த சில நாட்களுக்கு மூக்கில் பிளாத்திரியுடன் அவர் தேர்தல் பிரசாரங்களில் தொடர்ந்து உரையாற்றினார். “நான் பேட்மேனைப் போலவே இருக்கிறேன்,” என்று சிரித்தபடி அவர் கூறினார். இது பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட பெரும் குளறுபடியாகும்.

ப்ளூ புக் (பிரதமருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை விளக்கும் புத்தகம்) விதிகளை மீறி மக்கள் மேடைக்கு மிக அருகில் வர அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக அவர்கள் வீசிய கற்கள் மேடையை அடைந்தன. இது பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஒரு பாடமாக அமைந்தது.

ராஜ்காட்டில் ராஜீவ் காந்தி மீது தாக்குதல்

ராஜ்காட்டில் ராஜீவ் காந்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி

இந்திரா காந்தி 1984இல், அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளால் எப்படி படுகொலை செய்யப்பட்டார் என்பது பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. இது நடந்து இரண்டு வருடங்கள்கூட ஆகாத நிலையில் ராஜீவ் காந்தியைக் கொல்ல முயற்சி நடந்தது.

1986, அக்டோபர் 2 ஆம் தேதி காலை 6:55 மணிக்கு ராஜீவ் காந்தி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஒரு பெரிய சத்தம் கேட்டது.

பிரதமருடன் இருந்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக அவரைச் சுற்றி நின்றுகொண்டனர். சுடப்பட்ட தோட்டா ராஜீவ் காந்திக்குப் பின்னால் இருந்த பூச்செடிகள் மீது பாய்ந்தது. அந்த பூச்செடிகளுக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் பாய்ச்சப்பட்டு வந்தது. ஏதாவது வெடிபொருள் அங்கே புதைக்கப்பட்டிருந்தால், அது வெடிக்காமல் தடுப்பதே இதன் பின்னணியில் இருந்த நோக்கம்.

பாதுகாப்புப் பணியாளர்கள் அனைவரும் உடனடியாக ராஜ்காட் முழுவதும் பரவி, ஒவ்வொரு புதரையும், செடிகளையும் சோதனை செய்யத் தொடங்கினர். அங்கு எதுவும் கிடைக்காததால் சாலையை சுற்றியுள்ள கட்டிடங்களை பார்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் ராஜீவ் காந்தியை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய கரம்வீர் சிங் பதுங்கியிருந்த, கொடிகளால் மூடப்பட்டிருந்த மரத்தை அவர்கள் சோதனை செய்யவில்லை.

மூன்று தோட்டாக்கள் சுடப்பட்டன

காந்தி சமாதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதி

எட்டு மணியளவில் மகாத்மா காந்தியின் சமாதியில் மலரஞ்சலி செலுத்திவிட்டு ராஜீவ் காந்தி தனது காரை நோக்கித் திரும்பிச் செல்லத் தொடங்கியபோது, இரண்டாவது புல்லட் சத்தம் கேட்டது.

அப்போது ராஜீவ் காந்தியும் குடியரசுத்தலைவர் கியானி ஜைல் சிங்கும் ஒன்றாக தங்கள் கார்களை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

"தோட்டா சத்தம் கேட்டவுடன் ஜைல் சிங் ராஜீவ் காந்தியிடம், 'இந்தத் தாக்குதல் எங்கிருந்து வருகிறது?' என்று கேட்டார். 'நான் வந்தபோதும் என்னை இப்படியேதான் வரவேற்றார்கள். இப்போது திரும்பிச்செல்லும்போதும் துப்பாக்கியால் சுட்டு வழி அனுப்புகிறார்கள் போலிருக்கிறது,' என்று ராஜீவ் காந்தி நகைச்சுவையாக பதிலளித்தார்,” என்று 1986 அக்டோபர் 31, ’இண்டியா டுடே’ இதழில் இந்தர்ஜித் பத்வார் மற்றும் தானியா மிடா ஆகியோர் எழுதியுள்ளனர்.

அவரது குண்டு துளைக்காத மெர்சிடிஸ் காரில் ஜைல் சிங்கை அமரவைத்த ராஜீவ், தன் மனைவி சோனியாவுடன் தனது அம்பாசிடர் காரில் உட்காரப் போகும் போது மூன்றாவது தோட்டா சுடப்பட்டது.

ராஜீவ் காந்திக்கு பின்னால் நின்றிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ பிரிஜேந்தர் சிங் மோவாய் மற்றும் முன்னாள் பயானா மாவட்ட நீதிபதி ராம் சரண் லால் ஆகியோரை தோட்டா தாக்கியது. ராஜீவ் கூச்சலிட்டு சோனியாவை காருக்குள் அமரும்படி சொன்னார். பாதுகாப்புப் பணியாளர்கள் ராஜீவை சூழ்ந்துகொண்டனர்.

இதற்கிடையில் அடர்ந்த இலைகளால் மூடப்பட்ட மரத்தில் இருந்து புகை எழுவதை பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்தனர். தங்கள் 9 மிமீ ஜெர்மன் மவுசர் துப்பாக்கியால் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டனர். பச்சை நிற உடை அணிந்த வாலிபர் ஒருவர் திடீரென கைகளை உயர்த்தியபடி புதரில் இருந்து வெளியே வருவது தெரிந்தது.

ராஜீவ் காந்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி

அப்போது அங்கு இருந்த உள்துறை அமைச்சர் பூட்டா சிங் மற்றும் டெல்லியின் துணைநிலை ஆளுனர் எச்.எல்.கபூர் ஆகியோர் அந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

ஆனால், டெல்லி கூடுதல் போலீஸ் கமிஷனர் கெளதம் கவுல், ‘துப்பாக்கி சூடு நடத்தாதீர்கள்’ என குரல் எழுப்பினார்.

கரம்வீர் சிங் அங்குள்ள புதர்களுக்குள் நீண்ட நேரமாக பதுங்கி இருந்தது பின்னர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அவரிடமிருந்து ஒரு பெரிய பிளாஸ்டிக் தாள், கைக்குட்டையில் கட்டப்பட்ட வறுத்த பருப்பு, தண்ணீர் நிரப்பப்பட்ட ஜெர்ரிகேன், மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

ஒரு நாள் முன்னதாக நடந்த தீவிர தேடுதலின் போது நாய்கள் குரைத்து அந்த புதரை அடையாளம் காட்டின. ஆனால் அங்கு தேனீக்கள் இருந்ததால் பாதுகாப்பு ஊழியர்கள் மேற்கொண்டு செல்லவில்லை.

ராஜீவ் காந்தி ராஜ்காட்டில் தாக்கப்படலாம் என்று சில நாட்களுக்கு முன் உளவுத்துறை தகவல் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய நிகழ்வுகளுக்கு முன்பு இதுபோன்ற தகவல்கள் பெரும்பாலும் வருகின்றன, எனவே இது வழக்கமான எச்சரிக்கையாக கருதப்பட்டது என்று டெல்லி போலீசார் பின்னர் தெளிவுபடுத்தினர். இந்த பாதுகாப்பு குறைபாடு காரணமாக ராஜீவ் காந்தியின் உறவினரான டெல்லி கூடுதல் போலீஸ் கமிஷனர் கெளதம் கவுல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பிரதமரின் பாதுகாப்பில் மீண்டும் ஏற்பட்ட ஓட்டை

ஒரு வருடம் கழித்து, 1987 அக்டோபரில், ரஷ்ய பிரதமர் நிகோலாய் ரிஷ்கோவ் இந்தியா வந்தபோது பிரதமரின் பாதுகாப்பில் மீண்டும் ஒரு குளறுபடி ஏற்பட்டது. டெல்லி பாலம் விமான நிலையத்தில் இரண்டு பிரதமர்களும் ஒரே காரில் குடியரசு தலைவர் மாளிகைக்கு செல்வதாக முடிவு செய்தனர்.

இரு பிரதமர்களுக்கு முன்பாக சவுத் பிளாக்கை அடையும் பொருட்டு வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங், டெல்லி போலீஸ் கமிஷனர் வேத் மார்வாவின் காரில் செல்ல முடிவு செய்தார்.

இதற்கு ஒரு காரணம் போலீஸ் கமிஷனரின் காரை யாரும் நிறுத்த மாட்டார்கள், அது வேகமாக முன்னோக்கி நகரும் என்பதாகும்.

நட்வர் சிங் தனது சுயசரிதையான 'ஒன் லைஃப் இஸ் நாட் இன்ஃப்'இல், "நாங்கள் சவுத் அவென்யூவை அடைந்து பின்னர் குடியரசு தலைவர் மாளிகையின் தெற்கு வாயில் நோக்கி திரும்பினோம். அங்கிருந்து சவுத் பிளாக் செல்லும் சாலையை நோக்கி சென்றோம். அப்போது இரண்டு பிரதமர்களின் வாகன அணியும் எங்களுக்கு எதிரில் வந்துகொண்டிருந்தன,” என்று குறிப்பிட்டுள்ளார்.

“எதிரில் வரும் வாகனங்களின் வழியில் இருந்து நீங்கும்பொருட்டு வேத் மார்வா உடனடியாக காரைப் பின்நோக்கி ஓட்டுமாறு டிரைவரிடம் சொன்னார். காங்கிரஸ் தலைவர் பஜன் லாலின் கார் எங்களுக்குப் பின்னால் வந்ததால் இரண்டு கார்களும் பின்னோக்கிச் செல்ல அரை நிமிடம் ஆனது. ஓரிரு நொடிகள் வித்தியாசத்தில் எங்கள் கார்கள் விஐபி கார்களுடன் நேருக்கு நேர் வராமல் காப்பாற்றப்பட்டது."

"இதற்கிடையில் ரஷ்ய பிரதமருடன் வந்த பாதுகாப்புப் பணியாளர்கள் எங்களை நோக்கி துப்பாக்கியை நீட்டினர். இது குறித்து கேள்விப்பட்ட ராஜீவ் காந்தி, உள்துறை அமைச்சர் பூட்டா சிங்கிடம், போலீஸ் கமிஷனர் வேத் மார்வாவை சஸ்பெண்ட் செய்யுமாறு கூறினார். மறுநாள் நான் பிரதமரை சந்தித்தபோது அவர் என்னை மிகவும் ஏசினார்,” என்று முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, "நான் தெளிவுபடுத்த முயற்சித்தேன். ஆனால் அது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. நீங்கள் பாதுகாப்பு விதிகளை மீறியுள்ள காரணத்தால் ரஷ்ய மெய்க்காப்பாளர்கள் உங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என்று அவர் கூறினார். என் காரணமாக வேத் இடைநீக்கம் செய்யப்பட்டதால் நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். நல்ல விஷயம் என்னவென்றால் சில நாட்களுக்குப் பிறகு பிரதமர் முழு விஷயத்தையும் புரிந்து கொண்டார். வேத் மார்வாவின் இடைநீக்கமும் திரும்பப் பெறப்பட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை

பட மூலாதாரம்,SENA VIDANAGAMA/AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு,இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இலங்கை அரசும், பாதுகாப்பு நிறுவனங்களும் தலைகுனிய வேண்டியிருந்தது.

ராஜீவ் காந்தி பிரதமராக கொழும்பு சென்றிருந்தபோது, இலங்கையின் அதிபர் மாளிகை முற்றத்தில் அவர் தாக்கப்பட்டார்.

1987ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டிருந்த ராஜிவ் காந்தியை, இலங்கை கடற்படை அதிகாரி விஜித ரோஹனா பின்னால் இருந்து தாக்கினார்.

ராஜீவ் காந்தியின் தலையைத் தாக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால் தனக்கு பின்னால் ஏதோ நடக்கிறது என்ற உள்ளுணர்வு அவருக்கு ஏற்பட்டது. அதனால் அவருக்கு அதிக காயம் ஏற்படவில்லை.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இலங்கை அரசும், பாதுகாப்பு நிறுவனங்களும் தலைகுனிய வேண்டியிருந்தது.

நரேந்திர மோதியின் வாகன அணியில் பாதுகாப்பு குறைபாடு

பிரதமர் மோதியின் வாகன அணி.

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,பஞ்சாபில் பிரதமர் மோதியின் வாகன அணி.

2022ஆம் ஆண்டில் விவசாயிகள் போராட்டத்தால் ஏற்பட்ட நெரிசல் காரணமாக பஞ்சாபில் உள்ள மேம்பாலத்தில் பிரதமர் நரேந்திர மோதியின் வாகன அணி 15-20 நிமிடங்கள் நிற்க வேண்டியிருந்தது. இது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தது.

பிரதமர் எந்த இடத்துக்குச் சென்றாலும் அவருக்கு மாற்றுப் பாதையும் ஏற்படுத்தப்படுகிறது.

படிண்டா விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் பிரதமர் ஹெலிகாப்டரில் தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு செல்வார் என்று முன்னதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக அவர் சாலை வழியாக செல்ல வேண்டியதாயிற்று.

பஞ்சாப் டிஜிபி-யிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்ததும் பிரதமர் சாலை வழியாக அழைத்துச் செல்லப்பட்டார். அதற்கு இரண்டு மணி நேரம் ஆனது.

 

எஸ்பிஜி படையிடம் பிரதமரின் பாதுகாப்பு பொறுப்பு

எஸ்பிஜி படையிடம் பிரதமரின் பாதுகாப்பு பொறுப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பிரதமர் மோதியின் வாகன அணி

பிரதமரின் பாதுகாப்புப் பொறுப்பு, சிறப்புப் பாதுகாப்புக் குழுவான எஸ்பிஜியிடம் உள்ளது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அவருடைய பாதுகாப்பை அது உறுதி செய்கிறது.

ஆரம்பத்தில் பிரதமரின் வீட்டில் வசிக்கும் அவரது நெருங்கிய உறவினர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த விதி 2019இல் மாற்றப்பட்டது.

புதிய விதிகளின்படி இப்போது பிரதமருக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

எஸ்பிஜி 1988ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் டெல்லியின் துவாரகா பகுதியில் உள்ளது.

அதன் பாதுகாப்புப் பணியாளர்கள், எல்லைப் பாதுகாப்புப் படை, சிஆர்பிஎஃப், சிஐஎஸ்எஃப், ஆர்பிஎஃப் மற்றும் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இவர்கள் அந்தந்த ஏஜென்சிகளின் மிகச்சிறந்த வீரர்கள். பிரதமரைச் சுற்றியுள்ள வட்டத்தில் நடந்து செல்லும் எஸ்பிஜி வீரர்கள் கருப்பு உடை அணிகின்றனர். அவர்களது கண்கள் இருண்ட சன்கிளாஸ்களால் மூடப்பட்டிருக்கும்.

அவர்கள் எங்கு பார்க்கிறார்கள் என்று தெரியாதபடி சுற்றியுள்ள இடங்களை கண்காணிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

அவர்கள் ’ஸ்லிப் எதிர்ப்பு’ சோல்கள் கொண்ட சிறப்பு காலணிகளை அணிகிறார்கள். அவர்களின் கையுறைகளும் வேறுபட்டவை. இதன் காரணமாக ஆயுதங்கள் அவர்கள் கைகளிலிருந்து நழுவாது.

இரண்டாவது வட்டத்தில் உள்ள எஸ்பிஜி கமாண்டோக்கள் பெல்ஜியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூன்றரை கிலோ எடையுள்ள ரைபிள்களை வைத்திருப்பார்கள். இவை 500 மீட்டர் வரை தாக்கும் திறன் கொண்டவை.

ஒவ்வொரு கமாண்டோவும் இரண்டே முக்கால் கிலோ எடையுள்ள புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டை அணிந்திருப்பார்கள்.

‘ப்ளு புக்’ விதிகளைப் பின்பற்றுதல்

‘ப்ளு புக்’ விதிகளைப் பின்பற்றுதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பிரதமர் மோதியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள எஸ்பிஜி கமாண்டோக்கள்

கமாண்டோக்களின் பயிற்சியின் போது, ஆயுதங்கள் இல்லாமல் கூட தாக்குபவர்களுடன் சண்டையிடும் வகையில் அவர்களுக்கு தற்காப்பு கலைகள் கற்பிக்கப்படுகின்றன. இவை க்ளோஸ் ப்ரொடெக்‌ஷன் டீம் என்று அழைக்கப்படுகின்றன. சாமானியர்கள் கண்ணில் படாதவகையில் கைத்துப்பாக்கிகளை அவர்கள் வைத்திருப்பார்கள்.

கைபேசிகள் மூலம் வெடிபொருட்களை வெடிக்கச் செய்யும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமரின் வாகனத் தொடரணியில் ஜாமர்களின் பயன்பாடு தொடங்கியது. தாக்குதல் நடத்துபவர்களை குழப்பும் வகையில் பிரதமரின் வாகன அணியில் அவரது வாகனம் போலவே மேலும் இரண்டு வாகனங்கள் செல்லும்.

பிரதமர் மாநிலங்களுக்கு பயணம் செய்வதற்கு முன் எஸ்பிஜி, ப்ளூ புக்கில் எழுதப்பட்டுள்ள விதிகளை கண்டிப்பாக பின்பற்றுகிறது.

பிரதமரின் வருகைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு எஸ்பிஜி, பயணத்துடன் தொடர்புடைய எல்லா நபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் முன்கூட்டியே சந்திப்பை நடத்துகிறது. இதில் புலனாய்வு அதிகாரிகள், மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் அடங்குவர்.

இந்த சந்திப்பில் அந்த பயணம் தொடர்பான சிறிய விவரங்கள் கூட விவாதிக்கப்படுகின்றன. அவசரநிலை ஏற்பட்டால், ஒவ்வொரு சூழ்நிலையையும் சமாளிக்க ஒவ்வொரு மட்டத்திலும் மாற்றுத் திட்டம் தயாரிக்கப்படுகிறது.

பிரதமரின் வாகன அணியின் கார்களின் வரிசையும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுகிறது. முன்னணியில் பைலட் கார், பிறகு மொபைல் சிக்னல் ஜாமர், அதைத் தொடர்ந்து டிகோய் கார், பிறகு பிரதமரின் கார், ஆம்புலன்ஸ் மற்றும் பிற கார்கள் செல்கின்றன. பிரதமரின் கார் பழுதடைந்தால் பயன்படுத்துவதற்காக வேறு ஒரு காரும் உடன் செல்கிறது.

வெளிநாட்டு பயணங்களில் ஏர் இந்தியா-1 பயன்பாடு

பிரதமர் எப்போதும் ஏர் இந்தியா-1 விமானத்தில்தான் வெளிநாடு செல்வார். இது 747-400 போயிங் விமானம்.

பிரதமர் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன், இந்திய விமானப்படையின் மேலும் இரண்டு விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்படுகின்றன.

கடைசி நேரத்தில் விமானத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் இந்த விமானங்களை பயன்படுத்தலாம்.

பிரதமரின் விமானம் புறப்படுவதற்கு முன், அந்த பகுதி முழுவதும் சிறிது நேரம் 'நோ ஃப்ளையிங் சோன்' (No Flying Zone) ஆக்கப்படும்.

கமாண்டோக்கள் குழு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,எஸ்பிஜி கமாண்டோக்கள்

தீவிர பயிற்சிகள்

இந்த கமாண்டோக்கள் குழுவில் பணியமர்த்தப்படுவதற்கு முன் மூன்று நிலை பின்னணி சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

அவர்களது குடும்ப உறுப்பினர்கள், தொலைதூர உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூட சோதிக்கப்படுகிறார்கள்.

முதல் மூன்று மாதங்களுக்கு, என்எஸ்ஜி கமாண்டோக்களுக்கு ஆயுதங்கள் மற்றும் ஆயுதங்கள் இல்லாமல் சண்டையிடுதல் மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

பின்னர் எல்லா வகையான வெடிகள் மற்றும் வெடிமருந்துகள் பற்றிய தகவல்களும், அவற்றை செயலிழக்கச் செய்வதற்கான தந்திரங்களும் கற்பிக்கப்படுகின்றன.

இதுதவிர யோகா, தியானம், மனப் பயிற்சி போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

இந்த கமாண்டோக்கள் நகரும் வாகனத்தில் இருந்துகூட இலக்குகளை துல்லியமாக தாக்குவார்கள். மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் கூட்டத்தில் நிற்கும் ஒருவரை குறிவைக்கவும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது,” என்று முன்னாள் என்எஸ்ஜி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர்கள் சிறந்த நீச்சல் வீரர்களாகவும், நவீன தகவல் தொடர்பு சாதனங்களை சிறப்பாக இயக்குபவர்களாகவும் உள்ளனர். முதல் மூன்று மாத பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு, அடுத்த மூன்று மாதங்களுக்கு அவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.

அவர்கள் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளுக்கும் தயார் செய்யப்படுகின்றனர். தாக்குதல்கள் மற்றும் மருத்துவ அவசரநிலைகளை சமாளிக்கவும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

எவரேனும் ஒருவர் எஸ்பிஜி வட்டத்திற்கு மிக அருகில் செல்ல முயன்றால் அவரை முழங்கையால் பின்னுக்கு தள்ளவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

முழங்கையால் தள்ளியதன் தாக்கம் பாதிக்கப்பட்டவருக்கு பல வாரங்கள் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ரகசிய சேவையின் வழிகாட்டுதலின்படி அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்போது இஸ்ரேலின் பயிற்சி கையேடு 'க்ராவ் மாகா'வும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கமாண்டோவுக்கும் வருடாந்திர சோதனை உண்டு. அதில் தோல்வியுற்றால் எந்த தாமதமும் இன்றி அவர்கள் முன்பிருந்த அமைப்பிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.