Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ல்சமூகம்இலக்கிய

வக்கிர   வணிகம்

 

         சோம. அழகு

            நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலம். “என்ன இது? இவங்களுக்கெல்லாம் வேற கதையே தெரியாதா? பெண் பிள்ளையைக் கடத்திக் கொண்டு போற மாதிரியே எடுத்துத் தொலையுறாங்க?” – அப்போது தொடர்ச்சியாக வந்த அவ்வகைத் திரைப்படங்கள் குறித்து சற்று காட்டமாகவே அடிக்கடி சலித்துக் கொள்வார்கள் அப்பா. சலிப்பு என்றெல்லாம் சாதாரணமாக வரையறுத்து விட முடியாது அப்பாவின் அவ்வுணர்வை. “திரைப்படம்தானே? நல்லாருக்கு; நல்லா இல்ல. அவ்வளவுதானே? இதற்கு ஏன் இவ்வளவு எரிச்சல்?” எனத் தோன்றும் அப்போது. பத்து வருடங்கள் கழித்து அப்பாவின் மனநிலை இப்போது முழுவதுமாகப் புரிகிறது. அப்பாவினுள் தேவை இல்லாமல் விதைக்கப்பட்டுக் கொண்டே இருந்த பதைபதைப்புதான் ஒவ்வொரு முறையும் கோபமாக வெளிப்பட்டிருக்கிறது. 

            திரைத்துறையைப் பொறுத்த வரை எல்லாமே seasonalதான். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பேய்ப் படங்களாக எடுத்துத் தள்ளுவார்கள். பிறிதொரு காலத்தில் உருவக்கேலியை நகைச்சுவை என நம்ப வைக்க முயற்சிக்கும் படங்களாக வரும். திடீரென கார்ப்பரேட் முதலைகளிடம் இருந்து விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்கும் படங்கள் வரிசையாக வந்து திணறத் திணற அடிக்கும். சர்வகாலமும் எடுக்கப்படும் அடிதடி படங்கள்(gangster movies), தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டி தேசபக்தியை நிலைநாட்டும் படங்கள், ஏதேனும் ஒரு விளையாட்டை மையமாக வைத்து வரும் படங்கள், ஒரே formulaவுடன் ‘முந்திரி பக்கோடா’, ‘திரிமுந் டக்கோப’, ‘ரிதிமுந் படாக்கோ’, ‘கோப திரிமுந்டா’, ‘பக்கோ முந்டாதிரி’…. என வெளிவரும் கமர்ஷியல் திரைப்படங்கள் என வகைப் படுத்திக் கொண்டே போகலாம். ஒவ்வொரு வகையறாவிலும் ஒன்று பார்த்தாலே போதும்தான். ஆனால் இவ்வகைப் படங்களின் எண்ணிக்கை மிகுந்திருந்தாலும் பிரச்சனையில்லை. Good, OK, So So, Boring என அங்கேயே அப்படியே மறந்துவிடலாம். பொழுதுபோக்கைத் தவிர இவற்றில் மனதைப் பதம் பார்க்கும் விஷ(ய)ம் எதுவும் இருக்காது.

            தற்காலத்தில் புதிதாக ஒரு கதைக்களம். குழந்தை வன்புணர்வு. வாசிக்கும் போதே நடுக்கம் வருகிறதல்லவா? இதை வைத்து ஏதோ ஒரு படம் (strictly one!) என்றால் பரவாயில்லை, அதுவும் கூட அது பாதிக்கப்பட்டவரின் குரலாகவோ அவருக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களைப் பேசும் படமாகவோ இருந்தால் மட்டுமே. ஆனால் மீண்டும் மீண்டும் இந்தக் கதைக் கருவை வைத்து எடுக்கப்படுபவை சுற்றியுள்ளவர்களின் வேதனையைப் பேச, பிற கதாபாத்திரங்களின் நற்பண்புகள் பாசம் கோபம் ஆகியவற்றைக் காட்ட, நீதியை நிலைநாட்ட, சில மனங்களின் கோளாறுகளை(psychological disorders) வெளிச்சம் போட்டுக் காட்ட முயலும் படங்களாகத்தான் உள்ளன. இதற்கு ரசிக்கவில்லை, பிடிக்கவில்லை என்றெல்லாம் மென்மையான சொற்களைப் பயன்படுத்த விருப்பமில்லை.

ஒரு படைப்பு நம்மை அழ வைக்கலாம்; சிரிக்க வைக்கலாம்; வருத்தப்பட வைக்கலாம்; நெக்குருக வைக்கலாம்; ஓர் அழகிய நல்லுணர்வை விட்டுச் செல்லலாம்; ஒன்றுமே தோன்ற வராமல் அமைதியாகக் கூட இருக்கச் செய்யலாம். ஆனால் இவ்வகைப் படங்கள் முடிந்த உடன் பயம் கலந்த பதற்றம் கரிய இருளாகக் கவிந்து கொள்கிறது. குழந்தைகளை, ஓடோடிச் சென்று வாரி அள்ளி நெஞ்சோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டு விடுவிக்கத் துணிவில்லாமல் தவிக்க வைக்கும் அச்சம் படர்ந்து அகல மறுக்கிறது. எந்த கலை வடிவமும் விட்டுச் செல்லக் கூடாத உணர்வு இது.

கார்கி, செம்பி, வான் மகள், சித்தா, பொம்மை நாயகி என நீளும் இப்பட்டியலின் உச்சமாக மகாராஜா.

மகாராஜா திரைப்படத்தின் நேரியல் அல்லாத(nonlinear screenplay) சுவாரஸ்யமான திரைக்கதை அத்திறமையான இயக்குநரின் சாதூர்யத்தைக் காட்டுகிறது. ஆனால் எல்லாம் தவிடுபொடியாகும் வண்ணம் அவர் படைத்த எதிர்மறை கதாபாத்திரங்கள் குழந்தை வன்புணர்வை துளியும் உணர்வில்லாமல்(height of insensitivity) அணுகியிருப்பது அதிர வைக்கிறது. நடிகர் சிங்கம் புலி கதாபாத்திரத்தின் வசனங்கள்… எப்படி ஒருவரால் அவ்வளவு வன்மம் தெறிக்கும் வார்த்தைகளை யோசிக்க முடிந்தது? எவ்வித உறுத்தலும் இல்லாமல் எப்படி எழுதி படமாக்க முடிந்தது? ஏன் அல்லது எப்படி வந்தது அத்துணிவு? அக்காட்சியில் நடிக்க எப்படி ஒருவரால் ஒப்புக்கொள்ள முடிந்தது? இந்தப் படத்தில் வரும் ஒருவருக்குக் கூடவா வீட்டில் குழந்தைகள் இல்லை? கதாபாத்திரங்களின் மீதான வெறுப்பு அத்தனி மனிதர்களின் மீது திரும்பியதில் வியப்பேதும் இல்லை. ‘அவ்வளவு திறமையாக நடித்திருக்கிறார்கள். கதாபாத்திரமாவே வாழ்ந்திருக்கிறார்கள்…’ என்றெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்து இங்கு பெருமைப்பட ஒரு மண்ணாங்கட்டியும்(எழுத்து நாகரிகம் கருதி வன்சொற்களைத் தவிர்த்திருக்கிறேன்!) இல்லை.

அக்குற்றம் ஒரு முறை நிகழ்ந்ததைப் பதிவு செய்வதே கொடூரம். “எப்படியும் கொல்லத்தான் போறோம்… அதுக்குள்ள இன்னொரு வாட்டி… போயிட்டு வந்துரட்டுமா?” (எழுதும் போதே விரல்கள் நடுங்குகின்றன) என இரண்டாம் முறையில் மனசாட்சியோடு அறத்தையும் முற்றிலுமாகக் குழி தோண்டி புதைத்து விட்டார் போலும் இயக்குநர். இந்த அளவிற்கு அருவருக்கத்தக்கதாகக்(sick) காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன?  சிங்கம் புலி விஜய் சேதுபதியை மறைமுகமாக மிரட்டுவது, இறுதிக் காட்சியில் அனுராக் கஷ்யப் அக்குழந்தையிடம் திமிராகப் பேசுவது என சில இடங்களில் கதாபாத்திரங்கள் இம்மி அளவு குற்றவுணர்வைக் கூட உணராமல் மிருகத்தனத்தை வெளிப்படுத்தும் அரக்கத்தனம் தேவைதானா? முழு படத்தின் விறுவிறுப்பையும் இக்காட்சிகள் மொத்தமாக விழுங்கியதில் கசப்பும் பயமும்(anxiety) தாம் மிஞ்சி நின்றன. போதாக் குறைக்கென்று அக்குழந்தை தன்னை அந்நிலைக்கு ஆளாக்கியவனை நேரில் காண வேண்டும் என்று கேட்டு அவனை மிகத் தைரியமாக எதிர்கொண்டு தன்னம்பிக்கை மிளிரப் பேசும் சினிமாத்தனம் எல்லாம் சுத்த அபத்தம். ஏதோ கை கால் அடிபட்டு விழுந்ததைப் போல் இதைக் கையாண்டிருப்பதெல்லாம் ஹாஃப் பாயில்தனமாக இருக்கிறது.

            ‘கார்கி’ சாய் பல்லவி சுக்கு நூறாக உடைந்த போதிலும் நியாயத்தின் வழி நின்றதைப் பேசுகிறது. ‘செம்பி’யில் அக்குழந்தையை நாசம் செய்த அம்மூன்று மிருகங்களும் வெற்றிக் களிப்பில் திளைப்பது போலவும் ஒவ்வொரு வாரமும் அதே போன்று செய்ய வேண்டும் என அவை உறுதி ஏற்கும் காட்சிகளையும் காண்பித்துதான் அவர்களின் மனப்பிறழ்வை பிரகடனப் படுத்த வேண்டுமா? ‘பொம்மை நாயகி’யும் கூட கிட்டத்தட்ட இப்படித்தான். நிமிஷா சஜயனின் மனப் போராட்டத்தை ஒரே ஒரு காட்சியில் போனால் போகிறது என வைத்து விட்டு சித்தார்த்தின் கோபத்தையும் வில்லனின் கொடூரச் செய்கைகளையும்தான் பூதக்கண்ணாடியில் காண்பித்தது ‘சித்தா’. வான் மகளில் துயரில் உழலும் அக்குழந்தையின் பெற்றோர்; ஊருக்குப் பயந்து எதுவும் அறியாத பாதிக்கப்பட்ட தன் பிள்ளையை மலை மேல் இருந்து தள்ளி விடுவாதாகக் கற்பனை செய்து பின் அதன் மடமையை உணரும் தாய் கதாபாத்திரம்…..  இப்படியாக ஒவ்வொருவர்  கோணத்திலும் இருந்து காண்பிப்பதற்கு இது ஒன்றும் விளையாட்டோ லேசான விஷயமோ அல்ல. என்னதான் மற்றவர்களைச் சுற்றி காட்சிகள் அமைத்து கதையை நகர்த்தி மையப்புள்ளியில் இருந்து திசைதிருப்ப முயன்றாலும் ஆழ்மனதில் அக்குழந்தைகளின் பறஅதிர்ச்சி(trauma) பற்றித்தான் ஓடிக் கொண்டிருந்தது. அப்படியொரு ரணம் நடந்ததாகச் சொன்னாலே எங்களுக்கு நெஞ்சம் இறுகி வயிற்றைப் பிசையும். அதை அப்படியே காட்சிப் படுத்த ஏன் வரிந்து கட்டிக் கொண்டு அலைகிறார்கள்?

எல்லா படங்களிலும் குற்றவாளிகளுக்கு ஏதோ ஒரு வகையில் தண்டனை கிடைத்து விடுகிறதுதான். ஆனால் அவைகளின்(என்ன மரியாதை வேண்டிக்கெடக்கு?) இறப்பு கூட போதுமான தண்டையாகத் தோன்றாத அளவிற்கு என் ஆங்காரமே முந்திக் கொண்டு நிற்கிறது. மீண்டும் மீண்டும் இது போன்ற படங்களைத் தயாரித்துத் திரையில் இதையும் சாதாரணமாகக் கண்டு கடந்து செல்ல மக்களைப் பழக்கப் போகிறார்களா?  ‘இவ்வளவு நீளப் படத்தில் அந்த ஒன்றை மட்டும் ஏன் பிடித்துத் தொங்க வேண்டும்? மற்றபடி படம் உணர்வுப்பூர்வமாக நன்றாகத் தானே இருந்தது?’ – ‘வேக வைத்த தண்ணீர் மட்டும்தானே கழிவுநீர்? மற்றபடி பிரியாணி நன்றாகத்தானே இருந்தது?’, இரண்டிற்கும் ஆறு வித்தியாசம் சுட்டுக!

‘எதார்த்தம்(Reality)… அன்றாடம் நடப்பதைத்தானே காட்டியிருக்கிறார்கள்’ என மொன்னைத்தனமான வாதம் எல்லாம் வேண்டாம். புகை பிடிப்பது, மது குடிப்பது, பெண்களைக் கேலி செய்வது, அவர்களின் பின்னாலேயே பொறுக்கித்தனமாகச் சுற்றுவது, பெண்கள் எவ்வாறெல்லாம் அடக்க ஒடுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என பக்கம் பக்கமாக வசனம் பேசுவது – ஒரு கதாநாயகனின் குறைந்தபட்ச தகுதியாக இவற்றையெல்லாம் ஏற்றுக் கொண்டிருக்கும் பெரும்பான்மைச் சமூகம் இப்படித்தான் பிதற்றும். அப்பெருந்தகைகளிடம் கேட்டால் ‘Hero இல்லை… protagonist’ என்றும் உருட்டுவார்கள்.

திரையில் காணும் பல அக்கிரமங்களையும் கொடூரங்களையும் மிக இயல்பாகவும் சில சமயம் நகைச்சுவையாகவும் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு எங்களை மெருகேற்றியதற்கு நன்றி! அதற்காக ‘வக்கிரம்’ நன்றாக வியாபாரம்(!) ஆகிறது என வரிசையாக இக்கருவைக்(concept) கொண்டு கல்லா கட்ட முனைவது குரூரம் இல்லையா? It’s not a bloody selling concept! அல்லது எப்படியேனும் புகழைச் சம்பாதிக்கும் முனைப்பா? இதைக் கையில் எடுக்கும் இயக்குநர்கள் அப்படங்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் எனச் சம்பந்தப்பட்டிருக்கும் ஒவ்வொருக்கும் நிச்சயம் கொடூரமான உளப்பிறழ்ச்சி இருந்தாலொழிய இக்கதைக்கு ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். ‘அடுத்தது? அடுத்தது? அடுத்தது?’, ‘இன்னும் வேறு எப்படி எடுத்தால் மக்களை ஆழமாக உலுக்கும்?’, ‘படத்தில் இந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது?’, ‘பழிவாங்கலுக்கு என்ன காரணத்தை வைக்கலாம்?’ என எல்லாவற்றிற்குமான சர்வ ரோக ‘நோயாக’ இதைப் பயன்படுத்துவதற்கெல்லாம் முதலைத் தோல் வாய்க்கப் பெற்றிருக்க வேண்டும். அதிலும் இப்போது வழக்கமாக்கப்பட்ட கொடூரங்களில் அசிங்கத்தைக் கலந்து கொடுத்தால்தான் மக்களுக்கு மழுங்கிப் போய்விட்ட adrenaline, cortisol நன்றாகச் சுரக்குமாம். பார்த்துக் கொண்டே இருங்கள். அண்ணன்-தங்கை, பெற்றோர்-குழந்தைகள் என எந்த உறவையும் விட்டு வைக்கப் போவதில்லை இவர்கள். தணிகைக் குழுவும் இப்போது முகச்சவரத்தில் மும்மரமாக ஈடுபட்டிருப்பதால் அவர்கள் கவனத்தில் இருந்து எல்லாம் தப்பி விடுகிறது…. ஹூம். என்ன செய்ய?

‘அறம்’ என்று ஒரு வார்த்தை இருப்பது இவர்களுக்குத் தெரியுமா?    

                எதார்த்தத்திற்கு மிக அருகில் நின்று அறத்தோடு சமரசம் செய்து கொள்ளாமலும் திரைப்படம் எடுக்கலாம். அது நிச்சயம் நல்ல திரைப்படமாகத்தான் அமையும். இயக்குநர் மாரி செல்வராஜின் ஒவ்வொரு படமும் ஆகச் சிறந்த சான்று. ‘பரியேறும் பெருமாள்’ல் ஆணவக் கொலை செய்யும் தாத்தா கதாபாத்திரம், ‘மாமன்னன்’ திரைப்படத்தில் ஃபகத் ஃபாசில் கதாபாத்திரம் – இவ்விருவரும் கொலை செய்யப்படுவதைப் போல் காண்பித்திருந்தால் சராசரி மனிதனின் மனது நிச்சயம் நீதி வழங்கப்பட்டுவிட்டதாகக் கூத்தாடியிருக்கும். ஆனால் பார்வையாளனின் மனதில் வெறியைத் தூண்டுவதோ வெறுப்பை விதைப்பதோ மாரி அவர்களின் நோக்கமல்ல. “இனிமே நீ துப்பாக்கிய தூக்கி மிரட்டுனா கூட அவனவன் அவனவன் திசையை நோக்கி ஓடிட்டுதான் இருப்பான்” என்று அமைதியாக ஆனால் வலிமையாக ஃபகத் பாத்திரத்தின் தோல்வியைக் காண்பித்திருப்பார். அதிகாரப் போக்கைச் சாடி அடக்குமுறைக்கு ஆளானவர்களின் கம்பீரமான எழுச்சி குரலாக ஒலிக்கும் இவ்வகை கண்ணியமான படங்கள்தானே சமூகத்தைப் பண்படுத்துவதாக இருக்க முடியும்? அவ்வகையில் எளியவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ‘விசாரணை’ போன்ற உண்மைச் சம்பவங்களை இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் தம் திரைப்படங்களின் மூலம் பதிவு செய்வதும் அவசியமான ஒன்றே!

            இயக்குநர் மணிகண்டனின் ஒவ்வொரு படமும் கூட எதார்த்த வாழ்வியலோடு கலந்ததுதான். பெரிய பெரிய கருத்துகளை மிக எளிதாக ஆணித்தரமாக அவரால் தமது படங்களின் மூலம் சொல்ல முடிந்திருக்கிறதே? இவ்விருவரையும் போல் அழகியல் ததும்பத் ததும்ப எடுக்கப்பட்ட ‘சில்லுக்கருப்பட்டி’ ஹலீதா ஷமீம் அவர்களை எப்படி மறக்க முடியும்? திரைப்படம் என்பது சக்தி வாய்ந்த ஊடகம். மக்களின் ரசனையை மீட்டெடுக்க ஆரோக்கியமானதாக வளர்த்தெடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த என இவர்களைப் போன்றோர் போராடிக் கொண்டிருக்கையில்…..

            ஐயா கனவான்களே! எவ்வளவு அறுவையாகக் கூட படம் எடுங்கள். பிடிக்காவிட்டாலும் பார்த்துத் தொலைகிறோம். தயவு செய்து பிள்ளைகளை மட்டுமாவது விட்டுவிடுங்கள். இயக்குநராக நடிகராகத் தோற்கலாம்; மனிதனாக அல்ல. அதிலும் கண்டிப்பாக மனிதத்திடம் அல்ல.

  • சோம. அழகு

 

https://puthu.thinnai.com/2024/07/29/வக்கிர-வணிகம்/

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

ஐயா கனவான்களே! எவ்வளவு அறுவையாகக் கூட படம் எடுங்கள். பிடிக்காவிட்டாலும் பார்த்துத் தொலைகிறோம். தயவு செய்து பிள்ளைகளை மட்டுமாவது விட்டுவிடுங்கள். இயக்குநராக நடிகராகத் தோற்கலாம்; மனிதனாக அல்ல. அதிலும் கண்டிப்பாக மனிதத்திடம் அல்ல.

நான் இந்தப் படத்தை பார்க்க முன்னரேயே அராத்து இப்படம் பற்றி எழுதியிருந்ததை வாசித்துவிட்டேன். அராத்து எழுத்தில், சொற்களில் எந்தக் கட்டுப்பாடுகளுக்கும், நெறிகளுக்கும் அடங்காதவர். மிகமிக நேரடியாகவே ஒரு தாண்டவம் ஆடியிருந்தார். 

நீங்களும் எழுதியிருப்பதை, உங்களின் பார்வையையும் வாசித்த பின், நான் உட்கார்ந்து யோசிக்க வேண்டிய சில விசயங்கள் இருக்கின்றன என்று தெரிகின்றன. மிக்க நன்றி..........🙏.

 

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரசோதரன் said:

நீங்களும் எழுதியிருப்பதை, உங்களின் பார்வையையும் வாசித்த பின்,

இது என் மகள் சோம.அழகுவின் எழுத்து, நண்பரே ! உங்கள் வாசிப்புக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.