Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் இளம் தாய் சிந்துஜாவின் மரணம் : முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் - சுகாதாரத்துறை அமைச்சர்

Published By: DIGITAL DESK 7   08 AUG, 2024 | 08:23 PM

image

 (எம் ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த  இளம் தாய் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். இந்த  விடயத்தில் ஏதாவது தவறுகள் இடம்பெற்றிருந்தால்  சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற மருத்துவ திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்,

மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற மரியராஜ் சிந்துஜாவின் மரணம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த  மரணம் குறித்து துரிதகரமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதன்போது எழுந்து பதிலளித்த சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன,

இந்த விடயம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான விசாரணை அறிக்கையை இதுவரை ஆராயவில்லை. குறித்த விடயத்தில் ஏதாவது தவறுகள் நடந்திருந்தால் அது தொடர்பில் நிச்சயமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்போம்.

இதேவேளை நாட்டில் நோயாளர்களை பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அதற்காகவே  புதிய சட்டமூலமொன்றையும் முன்வைத்துள்ளோம் என்றார். 

https://www.virakesari.lk/article/190580

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2024 at 22:06, தமிழ் சிறி said:

குறித்த பெண்ணின் மரணம் சம்பவ தினம் நோயாளர் விடுதியில் இருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்கள் அசமந்த போக்குடன் செயற்பட்டதாக பெண்ணின் தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளியை பராமரிக்க முடியவில்லை, சிகிச்சையளிக்க முடியவில்லை இதற்குள் இவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தாராம் வைத்தியர் அர்ஜுனா எனும் முறைப்பாட்டுக்கு அமைய அவர்  கைது செய்யப்பட்டார். ஆனால் அவர்கள் கைத்தொலைபேசியில் விளையாடினார்களா உரையாடினார்களா என்பதை அர்ஜுனா கண்டிருப்பார் என பயந்தனரோ தெரியவில்லை. இருக்க, மகப்பேற்று விடுதிக்கு வைத்தியர் அர்ஜுனா செல்லும்போது காணொளி எடுப்போரை வெளியே நிற்கும்படியும் யாரையும் காணொளி எடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி விட்டே அவர் உட்ச்சென்றார். அப்படியிருக்கும்போது தங்கள் கடமைக்கு இடையூறு விளைவித்தார், காணொளி எடுத்தார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்திருந்தால்; அந்தப்பெண் இன்று உயிரோடு இருந்திருப்பார் அர்ஜுனாவும் இரவோடிரவாக மன்னாருக்கு வந்து தடுப்புக்காவலில் இருந்திருக்க வந்திராது.

On 5/8/2024 at 22:06, தமிழ் சிறி said:

இந்த நிலையில் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு உரிய தரப்பினருடன் கலந்துரையாடியிருந்தார்.

இதேவேளை மன்னார் பொது வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனுமதியின்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு இடையூறை ஏற்படுத்திய வைத்தியர் அர்ஜுனாவின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

வைத்தியர் அர்ஜுனா சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த மோசடிகளை வெளிக்கொணர்ந்த போது தங்களால் பேச முடியாமல் தவித்த மக்கள்  தங்களுக்காக ஒருவர் பேசுகிறார் என அவரோடு அணி திரண்டு நின்றார்கள். அதனால் தங்கள் அரசியல் வாழ்வுக்கு சவாலாக வந்துவிடுவார் என  அவரை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டுமென அவருக்கெதிராக அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகளும் காவற்துறையை பயன்படுத்தி அடக்கப்பார்த்தனர். ஆனால் மக்கள் அரசியல் வாதிகளின் முத்திரையையும் சேர்த்தே கிழித்தெறிந்தனர். சம்பவம் நடந்து, வைத்தியர் அர்ஜுனா வந்து பிரச்சனையை வெளிகொண்டுவரும்வரை எந்த அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை, கேள்வி கேட்கவுமில்லை அவர் வந்ததன் பின் அவர் செயற்பாடுகளை விசாரிக்க போயிருக்கின்றனர். அவர் பிணையில் வெளிவந்து மக்கள் அவரை வரவேற்ற நிகழ்ச்சியை பார்த்து ஒரு அரசியல்வாதி பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார். அப்போ பார்த்துக்கொள்ளுங்களேன் நமது தலைவர்களின் கடமை, பொறுப்பு எந்த நிலையில் இருக்கிறது. பொறுப்பானவர்கள் பொறுப்புடன் நடந்திருந்தால் அர்ஜுனா ஏன் அத்துமீறி நுழையப்போகிறார்?       

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், நீதி கிடைப்பதைவிட வைத்தியர் அர்ஜுனாவுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்து அவரை இந்த களத்தில் இருந்து அகற்றி விட்டால், தாங்கள் தப்பித்துக்கொள்ளலாம் என சந்திப்புகளை நடத்துவோரும் முறைப்பாடளித்து அவர் குரல்வளையை நசுக்க துடிக்கும்  அரசியல்வாதிகளும் அதிகாரிகளுமே அதிகம். மக்களைப்பற்றியோ அவர்கள் தேவைகள் கவலைகள் இழப்புகள் பற்றியோ சிந்திப்பவர் எவருமில்லை, சிந்திப்பவர் யாரும் பேசக்கூடாது. இத்தனை அழுத்தங்களுக்கும் மத்தியில் முயன்று சேவையாற்றும் நல்ல வைத்தியர்களுக்கு எனது வாழ்த்துக்குள். என்ன செய்வது? ஒரு முசுறு கடிக்க கூண்டோடு அழிப்பது இயற்கையாகி விட்டது.  அதனால் உங்களைப்பற்றி யாரும் கதைக்கப்போவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. இந்த அசமந்தம் இன்று நேற்றல்ல புலிகளின் காலத்திலும் அவர்களுக்கு தெரியாமல் தெரிவிக்கப்படாமல் இருந்தது ஒரே இரவில் இரண்டு தாய்மார் அதுவும் பலகாலம் தவமிருந்து இனிமேல் கருத்தரிக்க  சாத்தியமில்லை எனும் தருவாயில் நடந்த சோகம். அங்கே இருந்த பொறுப்பான தாதி வைத்தியரின் அறிக்கையை சரியாக வாசிக்காமல் அந்த தாயையும் வருத்தி நடந்த துன்பியல். ஆனா அதன் பின்னும் அந்த தாதி அவர்களின் வலியை புரிந்து கொள்ளாமல் வைத்திய சாலை ஊழியர்களுக்கு பணம் கொடுத்து உங்கள் இறந்த குழந்தையை புதைத்து விடுங்கள் என்று அவர்கள் மனதையும் கொன்றார். சம்பந்தப்பட்டவர்கள் ஏழைகள், இடம் பெயர்ந்த நிலை, கையறுநிலையில்,  எத்தனையோ கனவு ஆசையோடு வந்தவர்கள்  மௌனமாக கண்ணீரோடுவைத்தியசாலையை விட்டு வெறுங்கையோடு கிளம்பினார்கள். "மக்கள் பணியே மகேசன் பணியாகும்." 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திசை திருப்பப்படும் சிந்துஜாவின் மரண விசாரணைகள்: எழுந்துள்ள குற்றச்சாட்டு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த வாரம் உயிரிழந்த இளம் பட்டதாரியான சிந்துஜாவின் மரண விசாரணைகள் திசை திருப்பப்படுவதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று (9) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

“சிந்துஜாவின் மரணம் நிகழ்ந்து ஏறக்குறைய 11 நாட்கள் நிறைவுற்றுள்ளது. இன்னும் பூர்வாங்கமான அறிக்கை வெளிவரவில்லை. ஆனால் அவர்கள் விசாரணைகளை வேறு கோணத்தில் திசை திருப்புவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது.

நீதியான விசாரணை

மன்னார் வைத்திய சாலையின் விசாரணை அறிக்கையும், பிராந்திய சுகாதார சேவைகள் பணி மனையின் அறிக்கையும், கள அறிக்கையும் ஒரு விடயத்தை சொல்ல மாகாண சுகாதார அமைச்சின் விசாரணை இன்னொரு விதமாக காணப்படுகின்றது.

குறிப்பாக மாகாண சுகாதார அமைச்சின் அறிக்கையில் இந்த கொலையில் சம்மந்தப் பட்டவர்களை அல்லது சம்மந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்க கூடியவர்களை அதிகார மிக்கவர்களை காப்பாற்றுவதாக அமைந்துள்ளதாக நம்பதகுந்தவர்கள் கூறியுள்ளனர்.

இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்கள், இரண்டு தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட ஒரு வைத்தியரையும் தண்டிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே விசாரணைகள் ஒரு குறுகிய அளவிலேயே முன்னெடுக்கப்படுகின்றது.

 

தற்போது சம்பந்தப்பட்டவர்களை இடைநீக்கம் செய்யாது வெறுமனே இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் வைத்தியசாலை தரப்பாலும் மாகாண சுகாதார அமைச்சாலும் இடம்பெறுவதாகவும் சம்பந்தப்பட்ட 5 நபர் களுக்கும் இன்றைய தினம் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும் அறியக்கூடியதாக உள்ளது.

நீதியான விசாரணை செய்வதாக மக்களுக்கு கூறிவிட்டு சாதாரண இடமாற்றத்தையே செய்வதாகவும் நீதியான விசாரணை இடம் பெறவில்லை என்றும் எனவே நீதியான விசாரணை இடம் பெற வேண்டும் என்பதுடன் குற்றமிழைத்தவர்கள் வைத்திய துறையில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

நீதிக்கான காத்திருப்பு

அதை விடுத்து சாதாரண இடமாற்றம் என்பதை பொது அமைப்புக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள போவதில்லை என்பதுடன் இவ்வாறு செய்வதனால் இவர்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள எங்களை வைத்திய தரப்பினர் நிர்பந்திக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்ச்சியாக நாங்கள் வைத்தியசாலை மற்றும் சுகாதார துறையினரிடம் பேசி வருகிறோம். இந்த மரணம் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி தொடர்பிலும் பேசியிருக்கிறோம்.

திசை திருப்பப்படும் சிந்துஜாவின் மரண விசாரணைகள்: எழுந்துள்ள குற்றச்சாட்டு | Investigation On Sinthuja Dead Diverted

நீதி வழங்குவதில் இருந்து நீங்கள் பின் வாங்கினால் வைத்தியசாலைக்கும், மாகாண சுகாதார அமைச்சுக்கும் எதிராக எங்கள் செயற்பாடுகள் இருக்கும் என்பதை தெளிவாக உரியவர்களிடம் தெரிவித்துள்ளோம்.

எனவே, இந்த விடயத்தில் நாங்கள் தொடர்ந்து விழிப்போடு நீதிக்காகவும் காத்திருப்போம்” என சுட்டிக்காட்டியுள்ளார். 

https://tamilwin.com/article/investigation-on-sinthuja-dead-diverted-1723209552?itm_source=parsely-api

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்; சிந்துஜாவின் தாயும், பிள்ளையும் பங்கேற்பு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி இன்று காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு துணியால் தமது வாயை கட்டி கையில் கறுப்புக் கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி சிகிச்சைக்காக வருகை தந்த நிலையில் நோயாளர் விடுதியில் இருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்களின் அசமந்த போக்கு காரணமாக உயிரிழந்த திருமதி சிந்துஜா மரியராஜின் மரணம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைகள் நடைபெற்று ஒரு வாரம் கடந்த போதும் இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

1-5-1024x683.jpg
2-2-1024x683.jpg
3-4-1024x683.jpg

வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் இறந்தவருக்கு நீதி வேண்டும். இப்படி இன்னொரு கொலை நடைபெறக்கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டனர்.

குறித்த பதாதைகளில் பணத்துக்கு மனித உயிரை விலை பேசலாமா? அரசே இலங்கையின் மருத்துவத்துறையை மறுசீரமைப்புச் செய், உயிர் காக்கும் வைத்தியர்களே மனித நேயத்தை மதியுங்கள், மருத்துவத்துறையின் அறம் எங்கே?, சிந்துஜாவின் மரணம் இறப்பா?, கொலையா?, நீதி நிழலாடுகிறதா?, மாபியாக்களின் கூடாரம் ஆகலாமா வைத்தியத்துறை போன்ற வசனங்கள் எழுதப்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க நினைக்கும் மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

எனவே உயிரிழந்த சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் குறித்த மரணத்துடன் தொடர்புடைய வைத்தியர் உள்ளடங்கலாக அனைவரும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

குறித்த போராட்டத்தில் சிந்துஜாவின் தாய், சிந்துஜாவின் பிள்ளை கலந்து கொண்டதோடு, பெண்கள் அமைப்பு, பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அருட் தந்தையர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்தியர் செந்தூரன் இன்றைய தினம் காலை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

சிந்துஜாவின் மரணத்துடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

https://thinakkural.lk/article/307803

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசாரணைகளுக்கு ஒத்துழைக்க தயார் : சிந்துஜாவின் மரணம் குறித்து நீடிக்கும் சர்ச்சை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்த சிந்துஜா என்பவரின் மரணம் குறித்து ஒரு அரச நிறுவனத்தில் பணிபுரியும் அரச ஊழியர்கள் என்ற வகையில் நாங்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைத்ததோடு நிறுவன சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடந்து கொண்டோம் அதனால் பொதுவான கருத்துக்களை நாம் வெளியிட்டிருக்க வில்லை என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயமானது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் அபிவிருத்திக்குழு ஊடாக ஊடகங்களுக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை (15) மாலை  அனுப்பி வைக்கப்பட்ட ஊடக அறிக்கை ஒன்றிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “28.07.2024 அன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மரணித்த ஆ.சிந்துஜா என்ற இளம் தாயின் மரணம் வைத்தியர்களாகிய எங்களையும் வேதனைப்படுத்தியது மட்டுமன்றி உங்களைப் போன்று அதே அளவு மன அமைதியின்மையையும் ஏற்படுத்தியது உண்மை.

நிறுவனத்தில் பணி

ஆயினும், ஒரு அரச நிறுவனத்தில் பணிபுரியும் அரச ஊழியர்கள் என்ற வகையில் நாங்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைத்ததோடு நிறுவன சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடந்து கொண்டோம்.

அதனால் பொதுவான கருத்துக்களை நாம் வெளியிட்டிருக்கவில்லை ஆனால் நிறுவனத்தின் தலைவர் என்ற அடிப்படையில் வைத்தியசாலையின் பணிப்பாளர் இவ் விடயத்திற்கு நாங்கள் பொறுப்பு கூற கடமைப்பட்டிருக்கிறோம் ஆகவே பக்கச்சார்பற்ற விசாரணை நடைபெற்று உண்மைகள் கண்டறியப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்கள் வாயிலாக அறிவித்திருந்தார்.

விசாரணைகளுக்கு ஒத்துழைக்க தயார் : சிந்துஜாவின் மரணம் குறித்து நீடிக்கும் சர்ச்சை | Information About The Death Of Mother In Mannar

சம்பவம் நடந்த தினத்திலிருந்து நிறுவன ஊழியர்களாகிய நாம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தோம்,

  1. 28-07-2024 - தாயின் மரணம்
  2. 29-07-2024 – பாதிக்கப்பட்ட குடும்பத்தை உள்ளடக்கிய வைத்தியசாலை பணிப்பாளர் தலைமையிலான மீளாய்வு நடைபெற்றது அத்தோடு தாயின் மரணம் வைத்தியசாலையின் பணிப்பாளரால் சுகாதார அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டது.
  3. 30-07-2024 - வைத்தியசாலை பணிப்பாளரால் ஆரம்பகட்ட புலன் விசாரணை குழு நியமிக்கப்பட்டது.
  4. 31-07-2024 - பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளரால் மரண விசாரணை கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  5. 01-08-2024 - வைத்தியசாலை பணிப்பாளரால் மாகாண சுகாதார பணிமனையின் சுயாதீனமான விசாரணைக்காக விண்ணப்பிக்கப்பட்டது.
  6. 02-08-2024 - பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளரின் ஆரம்ப புலன் விசாரணை குழு நியமிக்கப்பட்டது.
  7. 03-08-2024 - மாகாண சுகாதார பணிமனையின் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.
  8. 08-08-2024 - சுகாதார அமைச்சின் விசாரணை மீளாய்வு நடைபெற்றது.

பொது அமைப்பு

மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருக்கையில் அது தொடர்பான விளக்கங்கள் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கும் பொது அமைப்புகளுக்கும் கலந்துரையாடல்கள் மூலம் அறிய தரப்பட்டு கொண்டிருந்தன.

விசாரணைகளுக்கு ஒத்துழைக்க தயார் : சிந்துஜாவின் மரணம் குறித்து நீடிக்கும் சர்ச்சை | Information About The Death Of Mother In Mannar

இவற்றிலிருந்து அன்பானதும் பொறுப்பு மிக்கதுமான மன்னார் மாவட்ட மக்களுக்கு நாம் தெரியப்படுத்துவது, நிறுவன சட்ட திட்டங்களுக்கு அமைந்து நாம் கருத்து வெளியிடாமல் இருந்ததென்பது எதையும் மூடி மறைக்கும் நோக்கில் இழுத்தடிக்கும் நோக்கிலோ அல்லது பிழைகளுக்கு துணை போகும் நோக்கிலோ அல்ல.

இது தொடர்பான தற்போதைய நிலையை நீங்கள் அறிந்திருப்பீர்கள் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் சுகாதார அமைச்சின் மூலம் தீர்மானிக்கப்படும் என்பதால் இறந்த இளம் தாய்க்கு நீதி வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்பதை கடிதம் மூலம் சுகாதார அமைச்சிற்கு அறிக்கை இட்டுள்ளோம்.

வைத்திய சேவை

தற்சமயம் பல்வேறு காரணங்களால் மக்களுக்கும் வைத்திய சேவைக்கு இடைப்பட்ட இடைவெளி வெகுவாக அதிகரித்துள்ளது. இது ஆரோக்கியமான ஒரு சூழ்நிலை அல்ல. ஆகவே வைத்தியசாலையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளையோ முன்னேற்றங்கள் தொடர்பான கருத்துக்களையோ எழுத்து மூலம் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறியத்தருவது மக்களான உங்களின் தார்மீகக் கடமையாகும் என்பதையும் இவ்வறிக்கை மூலம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இது உங்கள் வைத்தியசாலை, நாங்கள் உங்கள் சேவையாளர்கள் இங்கு இடம்பெற்ற பிழை ஒன்றை வைத்து அனைவரையும் பொதுமைப்படுத்தி குற்றம் சாட்டுவது என்பது ஒட்டுமொத்த வைத்தியசாலையையும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி கவலையடையச் செய்கிறது.

விசாரணைகளுக்கு ஒத்துழைக்க தயார் : சிந்துஜாவின் மரணம் குறித்து நீடிக்கும் சர்ச்சை | Information About The Death Of Mother In Mannar

எனினும் நாம் உங்களுடன் சேர்ந்து பயணிப்போம் இந்த விடயத்தில் மட்டுமன்றி எதிர்வரும் சந்தர்ப்பங்களிலும் உங்களுடன் இணைந்து வைத்தியசாலையை முன்னேற்றுவதை எமது மனப்பூர்வமான கடமையாக கருதுகின்றோம்.

இந்த அறிக்கையானது பொதுமக்களுக்கு தெளிவினை ஏற்படுத்தி மக்களுக்கும் வைத்தியசாலைக்கும் இடையிலான நம்பிக்கையை மீளக் கட்டி எழுப்பும் செயற்பாடுகளில் ஒன்றாகவே வெளியிடப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery

Gallery

https://ibctamil.com/article/information-about-the-death-of-mother-in-mannar-1723726108

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம்; வைத்தியர் பணியிடை நீக்கம் 

Published By: DIGITAL DESK 3  22 AUG, 2024 | 04:14 PM

image
 

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்  உயிரிழந்த  இளம் குடும்ப பெண் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் வைத்தியர் பணியிடை நீக்கம்  செய்யப் பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்தார்.

அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான பெண் அதிக குருதி போக்கு காரணமாக கடந்த மாதம் 28 ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

எவ்வாறாயினும் அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த வைத்தியர் அவருக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்றும் வைத்தியர்களின் அசமந்த போக்கு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய ஏலவே நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு தாதியர்களுக்கும் இரண்டு குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர் களுக்கு இவ்வாறு பணியிடை நீக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவருக்கும் பணியிடை நீக்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த  வைத்தியர் சுகயீன விடுமுறையில் சென்றுள்ளார்.

குறித்த வைத்தியருக்கான பணியிடை நீக்கம் தொடர்பாக கடிதம் புதன்கிழமை(21) தனக்கு கிடைத்துள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்  அஸாத் எம் ஹனீபா தெரிவித்தார்.

எனினும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் சுகயீன விடுமுறையில் சென்றுள்ளமையினால் அவருக்கான பணியிடை நீக்கம் தொடர்பான கடிதம் அவரிடம் சமர்ப்பிக்கவில்லை.

எனினும், குறித்த கடிதம் அவருக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் பிரதி பதிவுத் தபால் மூலம் குறித்த வைத்தியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர்   வைத்தியர் அஸாத் எம் ஹனீபா மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/191722

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிந்துஜாவின் மரணம் - பொலிஸாருக்கு காலவகாசம்

சிந்துஜாவின் மரணம் - பொலிஸாருக்கு காலவகாசம்

மன்னார் கட்டையடம்பன் பகுதியை சேர்ந்த இளம் தாய் சிந்துஜா, மன்னார் வைத்தியசாலையில் மரணம் அடைந்த நிலையில், குறித்த மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்வைத்த முறைப்பாடுக்கு அமைவாக பொலிஸாரால் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நம்பப்பட்டு வந்த போதும் விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்றுள்ளமை நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிந்துஜாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை  நேற்று  செவ்வாய் (19) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பாக தான் குறித்த வழக்கு மன்னார் பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மன்னார் குற்றத்தடுப்பு பொலிஸார் மன்றில்  தெரிவித்திருந்தனர்.

இதுவரை காலமும் மன்னார் மடு பொலிஸார் குறித்த வழக்கு விசாரணையை B வழக்காக பதிவு செய்யாது சாதாரண வழக்காக பதிவு செய்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரனி டெனிஸ்வரன் மற்றும் சர்மிலன் டயசின் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை துரிதப்படுத்தி இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்குமாறும் அதே நேரம் வழக்கை B அறிக்கையாக தாக்கல் செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கு மேலதிக விசாரணைக்காக டிசம்பர் மாதம் 03 திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன் சிந்துஜாவின் விடயத்தில் தங்களை முன்னிறுத்தி விளம்பரம் தேடிய எவரும் வழக்கு விசாரணைக்கு வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-மன்னார் நிருபர் லெம்பட்-

https://tamil.adaderana.lk/news.php?nid=196152

  • 8 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் சிந்துஜா மரணம் தொடர்பில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் மூவர் கைது

09 AUG, 2025 | 08:16 PM

image

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்  உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான  இளம் குடும்ப பெண்  மரணத்துடன் தொடர்புடையதாக பணி நீக்கம் செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக ஐவரில் மூவர் இன்றைய தினம் சனிக்கிழமை (9) கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் ஜூலை மாதம் 28 உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான  இளம் குடும்ப பெண்ணின் மரணத்திற்கு நீதி கோரி வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

மருத்துவக் கவனயீனத்தால் ஏற்பட்ட அதீத இரத்தப்போக்கு காரணமாக குறித்த இளம் தாயின் மரணம் சம்பவித்துள்ளது என மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளிவந்தது.

இந்த நிலையில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக இரண்டு தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக குறித்த ஐவரும்  பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் குறித்த ஐவரில் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும், இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர் களும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை(9) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது  மன்னார் நீதவான் குறித்த மூவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும் சந்தேக நபரான வைத்தியர் ஒருவரையும், தாதிய உத்தியோகத்தர் ஒருவரையும் கைது செய்ய  உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

https://www.virakesari.lk/article/222178

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.