Jump to content

குறுங்கதை 25 -- குரு பார்வை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
குரு பார்வை
--------------------
அது எங்களின் பரம்பரைப் பள்ளிக்கூடம், அங்கே தான் படிக்க வேண்டும் என்று சொல்லியே அங்கே முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். வீட்டிலிருந்து அந்தப் பாடசாலைக்கு போகும் வழியில் இன்னும் இரண்டு பாடசாலைகள் இருந்தன. ஆனாலும், அவை இரண்டையும் தாண்டிப் போய், பரம்பரையை தொடரும் கடமை எனக்கு அந்த தூரத்துப் பாடசாலையில் இருந்தது. அத்துடன் அங்கே சில ஆரம்ப வகுப்புகள் மட்டுமே இருந்தன. அந்த வகுப்புகள் முடிந்த பின்னர் என்ன செய்வதென்ற இக்கட்டான நிலை இந்தப் பரம்பரையில் இதற்கு முன்னர் ஏற்பட்டிருக்கவில்லை. அந்த நிலை எனக்கு ஏற்படும் போல இருந்தது.
 
பின்னர், வேறு வழியில்லாமல், சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பெரிய பாடசாலைக்கு, பெரிய வகுப்புகளுக்காக அனுப்பப்பட்டேன். இந்தப் புதிய பாடசாலை வீட்டில் இருந்து ஐந்து மைல்கள் தூரம். போகும் பாடசாலைகளின் தூரம் வர வர கூடிக் கொண்டே போவது ஒரு அயர்வைக் கொடுத்தது. இலங்கையிலேயே இது மிகச் சிறந்த பாடசாலை என்று முதல் நாளே, நான் அங்கு போகும் போது, சொல்லிக் கொண்டிருந்தார்கள். முதல் நாள் அப்பா பஸ்ஸை தவற விட்டு விட்டு, அந்த வழியால் போய்க் கொண்டிருந்த ஒரு லாரியில் ஏறி புதிய பாடசாலைக்கு, கொஞ்சம் பிந்தி, போயிருந்தோம்.
 
ஆறாம் வகுப்பில் ஒரே ஆசிரியர் தான் தமிழுக்கும், சமய பாடத்திற்கும். அவரே தான் வகுப்பாசிரியரும்.  தமிழுக்கு எண்பது பக்க கொப்பியும், சமயத்திற்கு அறுபது பக்க கொப்பியும் வாங்கியிருந்தேன். அப்படித்தான் அந்தப் பெரிய பாடசாலையில் சொல்லியிருந்தார்கள். பிரவுன் பேப்பரில் வெளி உறை ஒன்று போட்டு, அவர்கள் சொன்னது போலவே அந்த உறையில் சுயவிபரங்களையும் எழுதி வைத்திருந்தேன்.
 
நானே ராஜா, நானே மந்திரி என்று ஊர்ப் பாடசாலையில் வாழ்ந்த வாழ்க்கை முடிந்து, கூட்டத்தில் ஒருவன் ஆகியிருந்தேன் அந்தப் பெரிய பள்ளிக்கூடத்தில்.  ஏழாம் வகுப்பிலும் இதே ஆசிரியர் தான், தமிழ், சமயம், மற்றும் வகுப்பு ஆசிரியர். ஆறாம் வகுப்பில் வாங்கிய எண்பது பக்க, அறுபது பக்க கொப்பிகள் இரண்டும் அப்படியே புத்தம் புதிதாகவே இருந்தன. பிரவுன் பேப்பர் உறையை மட்டும் மாற்ற வேண்டி இருந்தது.
 
பத்தாம் வகுப்பு வரை இப்படியே தொடர்ந்தது. அந்த ஆசிரியர் எங்களை விட்டு விலகவேயில்லை, இந்த இரண்டு கொப்பிகளும் கூட விலகவில்லை. ஒரு வருடத்தில் ஒன்றோ இரண்டோ பக்கங்களில் ஏதாவது எழுதியிருப்போம். அந்தப் பக்கங்களை கிழித்து எறிந்து விட்டு, புது பிரவுன் பேப்பர் உறை போடப்பட்டு, இந்த இரண்டு கொப்பிகளும் புது வகுப்புகளுக்கு என்னுடன் சேர்ந்து அப்படியே வந்து கொண்டிருந்தன.
 
சிறந்த பாடசாலை, சிறப்பாக படிப்பித்தார்கள் என்று எல்லோரும் வெளியில் சொல்லிக் கொள்வார்கள். விட்டுக் கொடுக்க மனம் இடம் கொடுக்காததால், நானும் அதை ஆமோதித்துக்கொண்டே இருந்தேன். ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தினமும் பந்து அடித்ததும், வேறு ஒரே ஒரு ஆசிரியரையும் தவிர வேறு எதுவும் பாடசாலையில் கற்றதாக நினைவில் இல்லை என்றாலும்.
 
பின்னர் பல்வேறு சிறந்த பாடசாலைகள் என்று சொல்லப்பட்டவற்றில் படித்தவர்களுடன் ஒன்றாகப் படிக்கும், பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆரம்பத்தில் நாங்கள் அப்பவே அப்படி என்று தான் அவர்களும் கொஞ்சம் கெத்தாகவே இருந்தனர். பின்னர் எல்லா இடமும் ஓடிக் கொண்டிருந்தது ஒரே கதையே என்று சொல்லி ஒத்துக்கொண்டனர். 
 
முப்பது வருடங்கள் அல்லது அதற்கும் கூடிய காலத்தின் பின், பல ஆசிரியர்களை போய்ச் சந்தித்தோம். அவர்களுக்கு எங்களை ஞாபகமே இல்லை. எத்தனை வருடங்கள், எத்தனை மாணவர்கள், யாராவது உறவினர் அல்லது நண்பர்களின் பிள்ளைகளைத் தவிர வேறு எவரையும் அவர்களுக்கு ஞாபகத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது தான். ஆனால், நாங்கள் சொன்ன கதைகளை கேட்டு ஆச்சரியப்பட்டார்கள், பெருமைப்பட்டார்கள்.
 
நாங்கள் எல்லா ஆசிரியர்களிடமும் உங்களிடம் படித்தோம், அதனாலேயே வளர்ந்தோம் என்றே சொன்னோம். உண்மையில் அவர்களை மீண்டும் நேரில் பார்த்த போது, மிகப் பிரியமான ஒரு உணர்வைத் தவிர வேறு எதுவும் தோன்றவேயில்லை.
  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

அது எங்களின் பரம்பரைப் பள்ளிக்கூடம், அங்கே தான் படிக்க வேண்டும் என்று சொல்லியே அங்கே முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன்.

உங்கள் பாடசாலை அனுபவம் எனக்குப் புதிது. எனது ஆசிரியர்கள் படிப்பிப்பதிலேயே கவனமாக இருந்தார்கள்.

எனது ஆரம்பப் பாடசாலை அனுபவம் இப்படி இருந்தது. ஆசிரியர் கையில் சுட்ட பிரம்பிருக்கும். அதை வைத்துக் கொண்டே, “எங்கே நீ சொல்லு” என்று அவர் கேட்கும் போது நா வறண்டு குரல் தளர்ந்து வார்த்தைகள் தள்ளாடி அவை வெளியே வரும் போது, “அடியாத மாடு படியாது” என சுளீர் விழும். கலவன்  பாடசாலை என்பதால் அழவும் முடியாமல், வீரனாக வாங்கிலில் அமர்ந்த நாட்கள்தான் அதிகம்.

சமீபத்தில் ஊர் போன போது குருவானவர்களைப் போய்ப் பார்க்கவில்லை. யாரும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. புண்ணியவான்கள் போய்ச் சேர்ந்திருப்பார்கள்.

எனது தமிழ், சமய ஆசிரியர் ஏகாம்பரநாதன் 15.11.2019இல் காலமான போது நான் எழுதியது

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kavi arunasalam said:

உங்கள் பாடசாலை அனுபவம் எனக்குப் புதிது. எனது ஆசிரியர்கள் படிப்பிப்பதிலேயே கவனமாக இருந்தார்கள்.

 

உங்களின் 'பச்சைப்பாவாடை' அருமை...........

நானும் நினைத்தேன் அது ஆசிரியரின் மகளாக்கும் என்று......

எங்களின் காலத்தில் தனியார் கல்வி நிலையங்கள் மூலைக்கு ஒன்றாக வந்து விட்டன, அதுவே பாடசாலைகளில் ஆசிரியர்களின் மெத்தனப் போக்கிற்கு ஒரு பெரிய காரணமாக அமைந்தது என்று நினைக்கின்றேன்.

பல ஆசிரியர்களை பற்றி, சிலர் தனியார் கல்வி நிலையங்களில் மிகவும் பெயர் பெற்றவர்கள், இப்படியான கதைகள் உண்டு. பள்ளிக்கூடங்களில் தூங்கி வழிந்து கொண்டே இருந்தார்கள்.

ஆனாலும், சாத்திரங்களில் சொல்லப்படும் ஒரு நல்ல 'குரு பார்வை' போல, அவர்களின் வெறும் பார்வையிலேயே நாங்கள் படித்து முடித்து விட்டோம்.......🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

நானே ராஜா, நானே மந்திரி என்று ஊர்ப் பாடசாலையில் வாழ்ந்த வாழ்க்கை முடிந்து, கூட்டத்தில் ஒருவன் ஆகியிருந்தேன் அந்தப் பெரிய பள்ளிக்கூடத்தில்.  ஏழாம் வகுப்பிலும் இதே ஆசிரியர் தான், தமிழ், சமயம், மற்றும் வகுப்பு ஆசிரியர். ஆறாம் வகுப்பில் வாங்கிய எண்பது பக்க, அறுபது பக்க கொப்பிகள் இரண்டும் அப்படியே புத்தம் புதிதாகவே இருந்தன. பிரவுன் பேப்பர் உறையை மட்டும் மாற்ற வேண்டி இருந்தது.

நீங்களும் நம்மை மாதிரியே இருக்கிறீர்களே.

வாழ்க்கையில் பாடசாலை வாழ்வைப் போல சந்தோசமான வாழ்வு இல்லவே இல்லை.

ஊர்ப் பாடசாலையில்த் தான் அந்தந்த ஊரவர்கள் படித்தார்கள்.இதனால் அந்த ஊரிலுள்ள பிள்ளைகள் ஆளுக்காள் அறிமுகமாக இருப்பார்கள்.

இப்ப என்னடாவென்றால் பிள்ளை உந்துருளியில் இருக்கவே மாட்டுது

அதை வில்லங்கத்துக்கு விடிய எழுப்பி தூர இடங்களுக்கு கொண்டு போகிறார்கள்.

(நானும் ஊரிலிருந்த நேரம் இதையே செய்தேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ஊர்ப் பாடசாலையில்த் தான் அந்தந்த ஊரவர்கள் படித்தார்கள்.இதனால் அந்த ஊரிலுள்ள பிள்ளைகள் ஆளுக்காள் அறிமுகமாக இருப்பார்கள்.

👍........

இப்ப ஒரு வட்டம் அடித்து முடித்து விட்டு, மீண்டும் அவர்களை, அந்த பால்ய நண்பர்களை, நோக்கியே மனம் போய்க் கொண்டிருக்கின்றது. 'டேய்......... என்னடா செய்யிறாய்......' என்று ஆரம்பித்து அப்படியே சும்மா கதைத்துக் கொண்டிருப்பார்கள்..........❤️.   

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.