Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"என்ன தவம் செய்தேனோ...!"
 
 
நான் சாதாரண வகுப்பு மாணவன். நான் எங்கள் சுண்ணாம்பு கல் வீட்டின் திறந்த விறாந்தையில் உள்ள குந்தில் இன்னும் படுத்து இருக்கிறேன். நேரம் காலை ஆறு மணி. கதிரவன் எட்டிப்பார்க்க தொடங்குகிறான். இன்னும் அம்மா தேநீர் போட அடுப்படிக்கு போகவில்லை. இன்று வெள்ளிக்கிழமை அது தான் அம்மா குளித்து, இப்ப எம் முற்றத்தில் உள்ள துளசியை வளம் வந்து பூசை செய்து கொண்டு இருக்கிறார். நான் படுத்தபடியே, தலைமாட்டில் நான் வைத்திருந்த பாக்கெட் ரேடியோவை இலங்கை, இந்தியா காலை செய்திகள் அறிய திருப்பினேன். "பாலியல் வன்கொடுமை வேகமாக அதிகரித்து வரும் இடங்களில் ஒன்று இன்று இந்தியா. சமீபத்திய ஆய்வின் படி இந்தியாவில் ஒருநாளைக்கு 106 பாலியல் வல்லுறவுகள் நடைபெறுகிறது. அவ்வகையில் நேற்று இரவும் ..." என்று செய்தி தொடரவும்
 
 
"ஸ்ரீமத் துளசியம்மா திருவே கல்யாணியம்மா
வெள்ளிக் கிழமை தன்னில் விளங்குகின்ற மாதாவே
செவ்வாய்க் கிழமை செழிக்க வந்த செந்திருவே
தாயாரே உந்தன் தாளிணையில் நான் பணிந்தேன்!"
 
 
என்று அம்மாவின் மனமுருகி பாடும் பட்டும் என் காதில் விழுந்தது. எனக்கு அழுவதா சிரிப்பதா ஒன்றும் புரியவில்லை. விஷ்ணுவிற்கு துளசி பூஜை செய்கிற ஒவ்வொருத்தரும், ஒரு கற்பழிப்பை கொண்டாடுகிறார்கள்? அதுவும், அந்த பெண்ணின் தவறு என்னவென்றால், அவள் விஷ்ணுவின் பக்தையாம் என்று சமஸ்கிரத புராணத்தில் நான் படித்தது ஞாபகம் வந்தது. இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் இந்த கற்பழிப்பை எவரும் இன்றுவரை கண்டிக்கவில்லை, ஆனால் ஏதேதோ காரணங்கள் சொல்லி அதை நியாயப்படுத்தி விட்டார்கள் அல்லது மூடி மறைத்து விட்டார்கள். இந்த முள்ளுச்செடி விதைகளை காலம் காலமாக விதைத்துக் கொண்டு அவை வளர்ந்து குத்துகிறது என வானொலி தன் செய்தியில் கூறிக்கொண்டு இருந்தது தான் எனக்கு எரிச்சலை தந்தது. அம்மாவை பார்த்தேன். அவர் மிகவும் பக்தி பரவசத்துடன் துளசி மரத்தை கும்பிட்டுக்கொண்டு இருந்தார். ஒருவேளை உன்கதி தனக்கு வரக்கூடாது என்று வேண்டினாரோ நான் அறியேன்!
 
என் அம்மாவின் பெயர் கனகம்மா. அத்தியடி என்ற சிறு இடத்தில், யாழ் நகரில் எம் வீடு அமைத்திருந்தது. அம்மா சைவ அல்லது இந்து சமயத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டு இருந்ததுடன், ஒவ்வொரு காலையும் சூரிய நமஸ்காரம் செய்வதுடன், செவ்வாய், வெள்ளியில் துளசி பூசையும் செய்வார், சமயம், கடவுள், சமயக்குருக்களுக்கு என்றும் மரியாதையாக இருப்பார். அத்தியடி பிள்ளையார் கோவில் அர்ச்சகர் சிலவேளை எம் வீட்டு விறாந்தையில் இருந்து தேநீர் அருந்தி கதைத்தது போவதும் உண்டு.
 
அம்மாவுக்கும் எனக்கும் சிலவேளை வாய்த்தர்க்கம் ஏற்படுவதும் உண்டு. அம்மாவின் பக்தியை நான் மதித்தாலும், கண்மூடித்தனமான சில செயல்கள் எனக்கு பிடிப்பது இல்லை. அதில் ஒன்று தான் இந்த துளசி பூசை.
 
ஜலந்தர் என்ற ஒரு அரக்கன் இருந்தானாம். அவன் தேவர்களை வென்று விட்டானாம். அவனது மனைவி பிருந்தா [அல்லது துளசி] ஒரு பத்தினியாம். அவள் பத்தினியாக இருக்கும்வரை அவனை யாராலும் கொல்ல முடியாது என வரம் வாங்கியிருந்தானாம். எனவே அவளது பத்தினித்தனத்தை குழைப்பதற்கு, விஷ்ணு அவளை கற்பழித்தானாம். இப்படி புராணங்கள் கடவுள்களின் கற்பழிப்பை நியாயப்படுத்தும் போது, பெண்கள் எப்படி இந்தியாவில், இலங்கையில் கற்புரிமையை பாதுகாக்கமுடியும்? அதனால் தான் நான் துளசி பூசையை வெறுக்கிறேன். அதனால் அம்மாவுக்கு என் மேல் எப்பவும் சரியான கோபம்.
 
அம்மாவின் அர்ப்பணிப்பு மற்றும் பக்தி என்றும் அசையாத ஒன்று. அதை எவராலும் மாற்ற முடியாது. அதில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அங்கு புதைக்கப்பட்டுள்ள கழிவுகளை அறிந்து, விளங்கி அவ்வற்றை விலத்தி புனிதத்தை வலுப்படுத்தத் தெரியாது. சமஸ்கிரத புராணங்களை அப்படியே நம்பிக்கொள்கிறார். அது தான் எனக்கு அம்மாவுக்கும் ஏற்படும் தர்க்கம்.
 
நாம் சைவர், சைவ சித்தாந்தம் எமது அடிப்படை கொள்கை, இந்து, இந்து புராணங்கள் [வேதத்தை, வேள்வியை அடிப்படையாக கொண்ட] அல்ல என்பது அம்மாவுக்கு என்றுமே விளங்கவில்லை! காலம் செல்ல, எம்மை சுற்றி வாழ்பவர்களும் அம்மாவை பின்பற்ற தொடங்கிவிட்டார்கள். அது மட்டும் அல்ல, அம்மா அவர்களுக்கு ஒரு வழிகாட்டிபோல், அம்மாவிடம் வந்து தங்கள் பிரச்சனைகள், கவலைகளை சொல்லி ஆலேசனையும் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.
 
அம்மா தன் மூச்சு நிற்கும் வரை சூரிய நமஸ்காரத்தையோ அல்லது துளசி பூசையையோ விடவில்லை. ஒழுங்காக நல்லூர் கந்தசாமி ஆலய திருவிழா காலத்தில் பிரசங்கம் கேட்கும் வழக்கமும் அம்மாவிடம் இருந்தது. எல்லாத்துக்கும் மேலாக அத்தியடி பிள்ளையார் கோவில் தான் அம்மாவின் முதலிடம். எதை எடுத்தாலும் அத்தியடி பிள்ளையார் உங்களுக்கு அருள் புரிவார், காப்பாற்றுவார் என்றே ஆசீர்வதிப்பார். அவர் எம்முடன் இன்று இல்லை. நாம் பிறந்து வளர்ந்த, அம்மா வாழ்ந்த அந்த சுண்ணாம்புக்கல் வீடும் அங்கு இல்லை. அது இப்ப மாற்றி இன்றைய காலத்துக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. அக்கா யாழ்ப்பாணத்தை விட்டு வெளியே இருப்பதால், அது தற்காலிகமாக வேறு ஒரு குடும்பம் தங்க கொடுக்கப்பட்டும் இருந்தது.
 
இந்த சூழலில் தான், நான் ஒருமுறை பல ஆண்டுகளுக்குப் பின், பிறந்து வளர்ந்த இடத்தைப் பார்க்க விடுதலையில் யாழ்ப்பாணம் சென்றேன். எனக்கு இப்ப அங்கு இருப்பவர்களை தெரியா. எனவே ஒரு விடுதியில் இரவை கழித்துவிட்டு அதிகாலை அத்தியடி சென்றேன். அத்தியடி புது வீதியில் அமைந்து இருந்த, நாம் பிறந்து வாழ்ந்த அந்த வளவுக்கு முன்னால், வீதியில் கொஞ்ச நேரம் நின்று, இன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ள, நாம் வாழ்ந்த வீட்டை பார்த்தேன். அது உண்மையில் ஒரு ஆலயமாக எனக்கு தெரிந்தது. அதில் இறைவியாக அம்மாவை கண்டேன்! அப்பொழுது அந்த வீட்டு முற்றத்தில் இருந்து ஒரு பெண்ணின் முனகல் சத்தம் மெலிதாக கேட்டது. நான் உடனடியாக படலையை திறந்து உள்ளே எட்டிப்பார்த்தேன். வலிமை வாய்ந்த முரட்டுக் கரம் ஒன்று அவள் வாயில் துணியைத் திணித்து, அவள் மேல் பாலியல் வன்முறைக்கு தன்னைத் தயார் படுத்துவதை கண்டேன்.
அம்மா பூசை செய்த அந்த துளசி மரம் அப்படியே அதே இடத்தில் இருந்தது. அந்த பெண் குளித்துவிட்டு, அம்மா போல்தான் அங்கு பூசை செய்துகொண்டு இருந்திருக்கவேண்டும். அவளின் கவனம் பூசையில் இருந்து பொழுது அவன் இந்தக் கொடூரச்செயலை செய்ய உள்ளே வந்திருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். அவன் யாரும் அங்கு வருவினம் என்று எதிர்பார்த்து இருக்கமாட்டான். நேரம் இன்னும் காலை ஆறு மணிகூட ஆகவில்லை. என்னைக் கண்டதும் அவன் அவளை விட்டுவிட்டு ஒரே ஒட்டமாக ஓடிவிட்டான். அவள் பயந்து போய் இருந்தாள். அவள் உடைகள் கொஞ்சம் நழுவி இருந்தன. அவள் அவசரம் அவசரமாக தன் உடையை சரிப்படுத்திக் கொண்டு அந்த துளசி மரத்துக்கு முன்னாலேயே அழுதபடி நிலத்தில் இருந்துவிட்டாள்.
 
இதற்கிடையில் ஆரவாரம் கேட்டு பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அயலவரும் ஓடிவந்தனர். ஆனால் அவள் அந்த துளசி மரத்தின் முன்னாலேயே, இப்ப அந்த துளசி மரத்தை இறுக கட்டிப் பிடித்துக் கொண்டும் அழுதுகொண்டும் இருந்தாள். நானும் அயலவர்களும் ஆறுதல் கூற, கொஞ்சம் தெம்பு பெற்று அவள் என்னை திருப்பி பார்த்தாள்.
 
"என்ன தவம் செய்தேனோ...!"
 
என்று அவள் வாய் முணுமுணுத்தப் படி எனக்கும் துளசி மரத்துக்கும் நன்றி கூறினாள். நீங்க 'ஆச்சி அம்மா'வின் மகன் தானே என்று, அங்கு வந்தவர்களில் ஒருவர் என்னைக்கேட்டார். அது அவள் காதிலும் விழுந்து இருக்க வேண்டும். 'உங்க அம்மா செய்த தவம் வீணாக்கப் போகவில்லை., உங்களை அனுப்பி என் மானத்தை காப்பாறியுள்ளது' என்று அவள் இரு கைகூப்பி என்னை வணங்கினாள்.
 
'நம்மால் பாலியல் வன்முறைக்கு முடிவு கட்டமுடிந்தால்; கடந்த காலத்தில் ஏற்பட்ட புண்ணுக்கு மருந்து போட முடிந்தால்; நீதியையும், அமைதியையும் இணைக்க முடிந்தால்; நம்பிக்கையுடன் கூடிய ஒரு எதிர்காலத்தை பெண்கள் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் இது நடக்குமா? இந்த புராணங்கள் இருக்கும் வரையும்?' என்று என் வாய் முணுமுணுத்தபடி நானும் அந்த துளசி மரத்தை கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, என் விடுதிக்கு திரும்பிவிட்டேன்.
 
நன்றி
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
346795713_6634267903271067_1874602442763733089_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=4sa2IILFErcQ7kNvgHf3Bcu&_nc_ht=scontent-lhr6-2.xx&gid=AG-f3fJDOhWq4_evrheyNQr&oh=00_AYAJ51w-abX-uQfp9pxg76uoZdO5Nc9wgZeg7d3hH6dndQ&oe=66AFDA2A No photo description available.
 
May be an image of 1 person and text that says 'என்ன தவம் செய்தேனோ...!'
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடவுள் என்பவர் ஏன் அநியாயங்கள் நடக்கவிட்டு பிறகு பாவத்திற்கு தண்டனை என அளிக்கிறார்?! அவற்றை நடக்கவிடாது தடுக்க அவருடைய பேராற்றல்களை பயன்படுத்தலாமே!

பகிர்விற்கு நன்றி ஐயா.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.