Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
குரங்கம்மை

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,நூற்றுக்கானக்கானோர் குரங்கம்மை நோயால் உயிரிழந்துள்ளனர் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜேம்ஸ் கல்லாகர் & சிமி ஜோலாசோ
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 15 ஆகஸ்ட் 2024, 10:31 GMT
    புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்

குரங்கம்மை (எம்-பாக்ஸ்) நோய்த்தொற்றை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

எம்-பாக்ஸ் அல்லது குரங்கம்மை, கொடிய நோய்த்தொற்று வகையைச் சேர்ந்தது. இது முதலில் காங்கோ நாட்டில் வேகமாகப் பரவியதால் சுமார் 450 நபர்கள் உயிரிழந்தனர்.

தற்போது, இந்த நோய்த்தொற்று மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பரவி வருகிறது. மேலும் இந்த வைரஸின் புதிய வகை திரிபு (Variant) மக்கள் மத்தியில் பரவும் வேகம் மற்றும் இதனால் அதிகரிக்கும் இறப்பு விகிதம் குறித்து விஞ்ஞானிகள் கவலையில் உள்ளனர்.

ஆப்பிரிக்கா மட்டுமின்றி அதைத் தாண்டியும் இந்நோய் பரவுவதற்கான சாத்தியம் இருப்பது ‘மிகவும் கவலை அளிப்பதாக’ என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.

"நோய்த்தொற்று பரவுவதைத் தவிர்த்து, உயிர்களைக் காப்பாற்றுவதற்கு உலக நாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்," என்றும் அவர் கூறியுள்ளார்.

மிகவும் ஆபத்தான எம்-பாக்ஸ் வைரஸின் புதிய திரிபு

இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 100 பேரில், நால்வர் உயிரிழக்கும் அளவிற்கு இது மிகவும் ஆபத்தானதாக உள்ளது. எம்- பாக்ஸ் வைரஸில் கிளேட் 1, கிளேட் 2 (Clade 1 மற்றும் Clade 2) என இரண்டு வகைகள் உள்ளன.

கடந்த 2022ஆம் ஆண்டு, குரங்கம்மை பரவியதால் அறிவிக்கப்பட்ட பொது சுகாதார நெருக்கடியானது, கிளேட் 2 வகை வைரஸால் ஏற்பட்டது. ஆனால் இம்முறை அதைவிட மிகவும் ஆபத்தான கிளேட் 1 வைரஸ் பரவி வருகிறது. இது இதற்கு முன் நோய்த்தொற்று பரவுவதைக் காட்டிலும் 10% வரை அதிக நோயாளிகளின் உயிரிழப்பிற்குக் காரணமாக உள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இந்த வைரஸில் நடந்த மாறுபட்டால் கிளேட் 1பி என்ற புதிய வைரஸ் திரிபு உருவானது. இந்தப் புதிய மாறுபட்ட வைரஸ் ‘இன்னும் அதிக ஆபத்தானது’ என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து காங்கோ நாட்டில் சுமார் 13,700க்கும் மேற்பட்ட மக்களுக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டு அதில் குறைந்தது 450 பேர் உயிரிழந்துள்ளனர்.

புருண்டி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, கென்யா, ருவாண்டா உள்ளிட்ட பிற ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

 

‘சரியான நேரத்தில் வந்த அறிவிப்பு’

குரங்கம்மை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,குரங்கம்மை நோய்த்தொற்றை பொது சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

குரங்கம்மை நோய்த்தொற்றை பொது சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முடிவு இந்நோயைச் சரி செய்யத் தேவையான ஆராய்ச்சி, நிதியுதவி மற்றும் சர்வதேசப் பொது சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறிவிப்பு குறித்து சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் “இந்த அறிவிப்பு ஒரு வலுவான குறிப்பாக இருப்பதாக,” வெல்கம் அறக்கட்டளையைச் சேர்ந்த டாக்டர் ஜோசி கோல்டிங் கூறினார். "இது இந்த நெருக்கடியின் தீவிரத்தை உணர்த்துவதாக," எமோரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் போகுமா டைட்டான்ஜி கூறினார்.

இந்த அறிவிப்பு "மிகவும் முக்கியமானது மற்றும் சரியான நேரத்தில் வந்துள்ளது," என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சர்வதேச சுகாதாரக் கூட்டமைப்பின் இயக்குநரான பேராசிரியர் ட்ரூடி லாங் கூறினார். ஆனால் இந்த வைரஸின் புதிய திரிபு குறித்துப் பல அறியப்படாத விஷயங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம், கிளேட் 2 வகை குரங்கம்மை ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் உட்பட சுமார் 100 நாடுகளுக்குப் பரவியது.

இவ்வகை வைரஸ் பரவியதன் மூலம் 87,000க்கும் மேற்பட்ட நோய் பாதிப்புகள் மற்றும் 140 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்று உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள் குறிப்பிடுகின்றன.

யார் வேண்டுமானாலும் குரங்கம்மையால் பாதிக்கப்படலாம். குறிப்பாக ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிடையேதான் இந்த நோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் இந்த நோய்த்தொற்று அப்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

செவ்வாக்கிழமையன்று, ஆப்பிரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்களில் உள்ள விஞ்ஞானிகள் குரங்கம்மை பரவுவதால் பொது சுகாதார நெருக்கடியை அறிவித்தனர்.

இதைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தற்போது பரவி வரும் நோய்த் தொற்று கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடும் என்று இந்த அமைப்பின் தலைவர் ஜீன் கசேயா எச்சரித்தார்.

"இந்த அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த நாம் சிறப்பான மற்றும் வலிமையான முயற்சிகளுடன் செயல்பட வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.

குரங்கம்மை தொற்றின் அறிகுறிகள் என்ன?

குரங்கம்மை தடுப்பூசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாதிக்கப்படக்கூடிய பிவினருக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் இந்த நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

குரங்கம்மை நோயின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளில், காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகுவலி, தசைவலி ஆகியவை அடங்கும்.

காய்ச்சல் நின்றவுடன் தடிப்புகள் தோன்றலாம். பெரும்பாலும், முகத்தில் இது தொடங்கி, பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவும். பொதுவாக உள்ளங்கைகள், பாதங்கள் வரை பரவும்.

அதிகப்படியான அரிப்பு அல்லது வலியுடன் கூடிய இந்த தடிப்புகள், பல்வேறு நிலைகளைக் கடந்து, இறுதியாக பொருக்குகளாக மாறும். அவை விழுந்த பின்னர் அவை இருந்த இடத்தில் வடுக்கள் தோன்றும்.

இந்தத் தொற்று பொதுவாக 14 முதல் 21 நாட்கள் வரை நீடித்தபின் தானே மறையும். தீவிரமான தொற்றுகளில், காயங்கள் உடல் முழுதும் தோன்றும். குறிப்பாக, வாய், கண்கள், மற்றும் பிறப்புறுப்புகளையும் அவை தாக்கலாம்.

எம்-பாக்ஸ் வைரஸ் எப்படிப் பரவுகிறது?

குரங்கம்மை நோய்த்தொற்று உள்ள ஒருவருடன் நெருங்கிப் பழகினால் இது பரவும். அதாவது, இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் உடலுறவு கொள்வது, தோலோடு தோல் உரசுவது, அல்லது அந்த நபருடன் நெருக்கமாகப் பேசுவது, சுவாசிப்பது ஆகிய செயல்களின் மூலம் இந்தத் தொற்று பரவும்.

தோலில் இருக்கும் பிளவுகள், சுவாசக்குழாய் அல்லது கண்கள், மூக்கு, வாய் வழியாக இந்த வைரஸ் உடலில் நுழையும். இந்த வைரஸ் படிந்திருக்கும் படுக்கை, ஆடைகள், துண்டுகள் போன்ற பொருட்களைத் தொடுவதன் மூலமும் இது பரவுகிறது.

இந்த வைரஸ் பரவும் மற்றோரு வழி: குரங்குகள், எலிகள், அணில் போன்ற இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நெருங்கிப் பழகுவது. 2022இல் இந்தத் தொற்று உலகளாவிய அளவில் பரவியபோது, அது பெரும்பாலும் பாலியல் உறவு மூலம் பரவியது.

காங்கோ ஜனநாயகக் குடியரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த தொற்றுநோய்ப் பரவல் பாலியல் தொடர்பு மூலம் உண்டாகியிருக்கிறது. ஆனால் இது மற்ற சமூகங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவசர நிலையை அறிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார அமைப்பு ஆபிரிக்காவில் உள்ள mpox வைரஸ் நோயின் புதிய மாறுபாட்டின் காரணமாக, சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது, இது அதன் மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையென தெரிவிக்கப்பட்டுளளது.

13 ஆபிரிக்க நாடுகளில் mpox வைரஸ் நோய்ப்பரவல் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதன் புதிய வடிவம் மிக வேகமாக பரவி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. கடந்ந இரண்டு ஆண்டுகளில் இது இரண்டாவது முறையாக இந்த நோய்க்கான எச்சரிக்கையை அமைப்பு வெளியிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/307940

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவசரநிலை பிரகடனம் : ஐரோப்பாவில் விரைவில் குரங்கம்மை பரவக்கூடும் - உலக சுகாதார ஸ்தாபனம்

Published By: DIGITAL DESK 3   16 AUG, 2024 | 10:05 AM

image

குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் புதன்கிழமை (14) அறிவித்து இருந்தது.

குரங்கம்மை பாதிப்பு என்பது ஒரு வகை வைரசால் ஏற்படக்கூடிய தொற்று நோய் ஆகும். ஆபிரிக்காவில் நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 524 பேர் பலியாகி உள்ளனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஆபிரிக்க நாடுகளில் பரவி வரும் இந்த புதுவகையான வைரசானது, கொங்கோவில் இருந்து புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளது. எனினும், ஆபிரிக்காவில் குறைந்த தடுப்பூசி டோஸ்களே இருப்பில் உள்ளன.

இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது, 

நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய விடயம். இந்த வைரசானது ஆபிரிக்காவை கடந்து பரவ கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது அதிக வருத்தத்திற்குரியது என்று சமீபத்தில் கூறினார்.

இந்த சூழலில் உலக சுகாதார ஸ்தாபனம், குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்நிலையில், ஆபிரிக்காவுக்கு வெளியே முதன்முறையாக சுவீடன் நாட்டில் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசானது, கிளாட் 1 என்ற வகையைச் சேர்ந்தது.

இதுபற்றி உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஐரோப்பிய மண்டலத்திற்கான அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவீடனில் கிளாட் 1 வைரசின் பரவலானது, நம்முடைய உலகில் ஒன்றோடொன்று நாம் தொடர்பில் இருக்கிறோம் என்பதற்கான தெளிவான எடுத்துக்காட்டு ஆகும்.

வருகிற நாட்களில் மற்றும் வாரங்களில் ஐரோப்பிய பகுதிகளில் கிளாட் 1 பரவல் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

https://www.virakesari.lk/article/191189

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் குரங்கம்மை பாதிப்பு

Published By: DIGITAL DESK 3  16 AUG, 2024 | 02:19 PM

image

பாகிஸ்தானில் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சுகாதாரத் திணைக்களம் இன்று வெள்ளிக்கிழமை (16) தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கு பயணம் மேற்கொண்டு விட்டு பாகிஸ்தானுக்கு திரும்பியவர்களில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் குரங்கம்மை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் எந்த மாறுபாடு கொண்ட வைரஸ்  கண்டறியப்பட்டது என்பது தெரியவில்லை.

அவர்களில் இருவருக்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது நோயாளியின் மாதிரிகள் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய சுகாதார நிறுவனத்திற்கு உறுதிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், மூன்று நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என கைபர் பக்துன்க்வாவிற்கான சுகாதார சேவைகளின் பணிப்பாளர் சலீம் கான் தெரிவித்துள்ளார்.

ஆனால், பாகிஸ்தானில் குரங்கம்மை நோயினால்  பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் ஒரு நோயாளி மாத்திரம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக அறிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/191211

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பூசி உற்பத்திகளை விரைவுபடுத்துங்கள்; உலக சுகாதார நிறுவனம் அவசர கோரிக்கை

எம்பொக்ஸ் நோய்த் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம், விடயத்துடன் தொடர்புடைய நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது.

எம்பொக்ஸ் நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் அதனை உலக பொது சுகாதார அவசரகால நிலையாக பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் இவ் அறிவுறுத்தலையும் விடுத்துள்ளது.

எம்பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சலானது ஆபிரிக்க கண்டத்தின் 13 நாடுகளில் பரவியுள்ளதாக அந்த ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/307993

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகையே அச்சுறுத்தும் குரங்கம்மையின் அறிகுறிகள் என்ன? எவ்வாறு பரவுகிறது? முழு விவரம்

குரங்கம்மை அறிகுறிகள், பரவும் வழிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

17 ஆகஸ்ட் 2024, 03:45 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆப்பிரிக்க கண்டத்தில் பரவி வரும் குரங்கம்மையை (MPox) உலகளாவிய சுகாதார நெருக்கடியாக அறிவித்துள்ளது உலக சுகாதார மையம்.

எம்பாக்ஸ் அல்லது குரங்கம்மை என்று அழைக்கப்படும் இந்த நோய் காங்கோ ஜனநாயக குடியரசில் குறைந்தது 450 நபர்களின் இறப்புக்குக் காரணமாக அமைந்தது.

உலகளாவிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால், குரங்கம்மை ஆப்பிரிக்க கண்டம் தாண்டியும் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தத் தொற்றுநோய் எப்படிப் பரவுகிறது, அதன் அறிகுறிகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

குரங்கம்மை(MPox) என்றால் என்ன?

சின்னம்மையை ஏற்படுத்தும் வைரஸின் குடும்பத்தில் உள்ள மற்றொரு வகை வைரஸே குரங்கம்மையைத் தோற்றுவிக்கிறது. ஆனால் அது அவ்வளவு ஆபத்தானது அல்ல.

ஆரம்பத்தில் விலங்குகளிடம் இருந்து இந்தத் தொற்று மனிதர்களிடம் பரவியது. தற்போது இது மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவுகிறது.

எம்பாக்ஸ் அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகுவலி, தசைவலி போன்றவை ஆரம்பக்கால நோய் அறிகுறிகளாகும்.

காய்ச்சல் வந்தவுடன், தடிப்புகள் ஏற்படும். உடலின் மற்ற இடங்களில் பரவுவதற்கு முன்பு முகத்தில்தான் தடிப்புகள் ஏற்படும். உள்ளங்கை, கைகள் மற்றும் உள்ளங்கால்களிலும் இந்த அம்மை பரவும்.

குரங்கம்மை(MPox) பாதிப்புக்கு ஆளானவர்கள் காய்ச்சல், தலைவலி, தசை வலி போன்றவைகளால் அவதிப்படுவார்கள்.
படக்குறிப்பு,எம்பாக்ஸ் நோயின் அறிகுறிகள் என்ன?

இந்தத் தடிப்புகள் அரிப்பையும் வலியையும் ஏற்படுத்தும். பல்வேறு கட்டங்களைக் கடந்து இறுதியாக அம்மை கொப்புளங்களாக உருமாறும். இறுதியில் இது உதிர்ந்துவிடும். இவை வடுக்களாகப் பின்னால் மாறிவிடும்.

இந்தத் தொற்று 14 முதல் 21 நாட்கள் கழித்து அதுவாகவே சரியாகிவிடும்.

ஆனால் சில நேரங்களில் இவை உயிரைக் கொல்லும் தொற்றாகவும் மாறிவிடும். குறிப்பாக குழந்தைகள் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு அதிக அச்சுறுத்தலை இந்த அம்மை நோய் ஏற்படுத்தும்.

அதிகம் பாதிக்கப்பட்ட நபர்களின் உடல் எங்கும் புண்கள் ஏற்படும். வாய், கண்கள் மற்றும் பிறப்புகளிலும் இந்தப் புண்கள் ஏற்படும்.

 

எந்தெந்த நாடுகளில் எம்பாக்ஸ் பரவுகிறது?

குரங்கம்மையை சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்துள்ளது உலக சுகாதார மையம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகுவலி, தசைவலி போன்றவை ஆரம்பகால நோய் அறிகுறிகள்.

குரங்கம்மை(MPox) பொதுவாக மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கும் ஜனநாயக காங்கோ குடியரசு போன்ற நாடுகளில் உள்ள வெப்பமண்டல மழைக்காடுகளில் இருக்கும் கிராமங்களில் அதிகமாகப் பரவி வருகிறது. பல ஆண்டுகளாக இந்தப் பகுதியில் குரங்கம்மை தொற்று இருந்து வருகிறது.

ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான நபர்கள் குரங்கம்மையால் பாதிக்கப்படுகின்றனர். 15 வயதுக்குக் குறைவான, தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர்.

காங்கோ மற்றும் அதன் அண்டை நாடுகளில் பல்வேறு நோய்த் தொற்றுகள் தற்போது ஏற்பட்டு வருகிறது.

புருண்டி, ருவாண்டா, உகாண்டா, கென்யா போன்ற நாடுகளில் தற்போது குரங்கம்மை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த நாடுகளில் இந்த நோய்த் தொற்று அதிகம் ஏற்பட்டதில்லை.

 

குரங்கம்மையின் வகைகள்?

மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்த அம்மை தீவிரமாக பரவி வருகிறது
படக்குறிப்பு,இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாத இறுதி வரை ஆப்பிரிக்க கண்டத்தில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

இரண்டு வகையான குரங்கம்மைகள் உள்ளன. க்ளாட் 1 என்பது மிகவும் தீவிரமான தொற்று. மற்றொரு வகை க்ளாட் 2 ஆகும்.

க்ளாட் 1 வகை வைரஸ், காங்கோவில் பல ஆண்டுக் காலமாக இந்தத் தொற்றை ஏற்படுத்தி வருகிறது. க்ளாட்-1 வைரஸின் சில வகைகள் இளைஞர்களைக் காட்டிலும் குழந்தைகளை அதிகமாகத் தாக்குகிறது.

கடந்த ஆண்டு பாதிப்புக்கு உள்ளான நபர்களுக்கு க்ளாட் 1பி (Clade 1b) என்ற புதிய வகை வைரஸால் குரங்கம்மை(MPox) ஏற்பட்டுள்ளது. இது அதிக அளவில் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

இந்தப் புதிய வகை வைரஸ் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டியுள்ளதாகக் குறிப்பிடும் நிபுணர்கள், இது அதிகமாகப் பரவி தீவிரமான தொற்றை உருவாக்குவதாகக் கூறுகின்றனர்.

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் ஜூலை மாதம் வரை 14,000 பேருக்கு குரங்கம்மை நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் அதில் 450 நபர்கள் இறந்துள்ளதாகவும் ஆப்பிரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) தெரிவிக்கிறது.

கடந்த 2023ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் நோய்த் தொற்று 160% வரை அதிகரித்துள்ளது, இறப்பு விகிதமும் 19% வரை அதிகரித்துள்ளது.

இதற்கு முன்பு 2022ஆம் ஆண்டு க்ளாட்-2 வகையால் ஏற்பட்ட குரங்கம்மை(MPox) தொற்றைத் தொடர்ந்து, பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டது.

இந்த வைரஸை காண முடியாத ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் உட்பட 100 நாடுகளுக்கு இந்தத் தொற்று பரவியது. தடுப்பூசிகள் மூலம் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

 

குரங்கம்மை எப்படி பரவுகிறது?

ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை பரவி வருகிறது

பட மூலாதாரம்,GETTY IMAGES

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களோடு உடலுறவு வைத்துக்கொள்வது, தொட்டுப் பேசுதல், அருகே அமர்ந்து பேசுதல் மற்றும் சுவாவசித்தலால் இந்தத் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது.

காயங்கள் வழியாகவும், மூச்சுக்குழல் வழியாகவும், கண்கள், மூக்கு அல்லது வாய் வழியாகவும் இந்த வைரஸ் ஒருவரின் உடலுக்குள் செல்கிறது.

இந்த வைரஸ் ஒட்டியிருக்கும் படுக்கைகள், ஆடைகள் மற்றும் துண்டுகள் போன்றவற்றைத் தொடுவதன் மூலமும் இந்தத் தொற்று ஏற்படுகிறது.

பாதிப்புக்கு ஆளான குரங்கு, எலி, அணில் போன்றவற்றைத் தொடுவதாலும் இந்தத் தொற்று பரவுகிறது. 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட தொற்று பெரும்பாலும் உடலுறவால் ஏற்பட்டது.

தற்போது காங்கோவில் ஏற்பட்டிருக்கும் பெருந்தொற்றுப் பரவலுக்கும் பாலுறவு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் உடனான நெருங்கிய தொடர்பு ஆகியவை காரணமாக இருக்கிறது.

குரங்கம்மை தாக்கி இந்த ஆண்டு மட்டும் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜனவரி 2024 முதல் ஜூலை 2024 வரை 14000 பேருக்கு குரங்கம்மை ஏற்பட்டுள்ளது

யார் அதிக ஆபத்தில் உள்ளனர்?

குரங்கம்மை(MPox) நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு எளிதில் இந்தத் தொற்று ஏற்படும்.

தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் பாலுறவு கொள்வது இளைஞர்கள் மத்தியில் இந்த நோய்த் தொற்று பரவுவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.

யாருக்கு அதிக ஆபத்து உள்ளது என்பதைத் தற்போதைய சூழலைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தி வருகின்ற பருவத்தில், குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்படக் கூடிய நபர்களாக இருக்கின்றனர். இந்தப் பிராந்தியத்தில் பலரும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கொண்டிருப்பதால் நோயை எதிர்த்துப் போராடுவது கடினமாகிறது.

குழந்தைகள் விளையாடுவது மற்ற குழந்தைகளுடன் நெருக்கமாகப் பழகுவது போன்றவற்றால் அவர்களுக்கு எளிதில் தொற்று ஏற்படுவதாகச் சில நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட சின்னம்மை தடுப்பூசிகளையும் இவர்களால் பெற இயலாது. இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட பெரியவர்களுக்கு குரங்கம்மை தொற்றில் இருந்து பாதுகாப்பு கிடைக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களுக்கு இந்தத் தொற்று எளிதில் ஏற்படக்கூடும். கர்ப்பிணிப் பெண்களுக்கும் இதனால் ஆபத்து இருக்கலாம்.

குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நபர்களுடனான தொடர்பைத் தவிர்க்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் பகுதியில் நோய்த் தொற்று இருக்கும் பட்சத்தில் கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்.

உடலிலுள்ள புண்கள் ஆறும் வரை நோய்த் தொற்று உள்ளவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.

தொற்றில் இருந்து மீண்ட பிறகும் 12 வாரங்களுக்குப் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

 

குரங்கம்மைக்கு தடுப்பூசிகள் உள்ளனவா?

குரங்கம்மை

பட மூலாதாரம்,GETTY IMAGES

தடுப்பூசிகள் உள்ளன. ஆனால் தொற்று அபாயத்தில் உள்ளவர்கள் அல்லது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே இதைப் பெற இயலும். உண்மையான கவலை என்னவென்றால் தேவைப்படும் இடங்களுக்கு இந்தத் தடுப்பூசிகளை வழங்கப் போதுமான நிதி இல்லை.

உலக சுகாதார மையம், மருந்து உற்பத்தியாளர்களிடம் உள்ள தடுப்பு மருந்துகளை அவசரத் தேவைகளுக்காக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. முறையாக ஒப்புதல் இன்னும் வழங்கப்படாமல் இருந்தாலும், அதையும் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

ஆப்பிரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், கண்டம் தழுவிய பொது சுகாதார அவசர நிலையாக இதை அறிவித்துள்ளது. அங்குள்ள நாடுகளின் அரசுகள் இது தொடர்பாக ஒருங்கிணைந்து செயல்பட்டு, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மருந்துகளைத் தடையின்றி அனுப்பி வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்தத் தொற்று ஆப்பிரிக்க கண்டம் தாண்டியும் பரவும் ஆபத்து உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்ரிக்கா தாண்டி பிற நாடுகளிலும் குரங்கம்மை பாதிப்பு - இந்தியாவில் மீண்டும் பரவுமா?

எம்பாக்ஸ் தொற்று

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எம்பாக்ஸ் தொற்றின் அறிகுறிகளை கண்டறிய நிபுணர்கள் முயற்சிக்கின்றனர் (கோப்புப்படம்) கட்டுரை தகவல்
  • எழுதியவர், முராரி ரவி கிருஷ்ணா
  • பதவி, பிபிசிக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

காங்கோ உட்பட பல ஆப்பிரிக்க நாடுகளில் எம்பாக்ஸ் (குரங்கம்மை நோய்) பரவி வருவதையடுத்து உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச அவசரநிலையாக அறிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம், ஆகஸ்ட் 14 அன்று சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகள் (IHR) நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்க, எம்பாக்ஸ் பாதிக்கப்பட்ட நாடுகள் சமர்ப்பித்த தரவுகளை மதிப்பாய்வு செய்தார்.

இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளனர்?

காங்கோ ஜனநாயகக் குடியரசில் இந்த ஆண்டு இதுவரை 15,664 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 548 பேர் இறந்துள்ளனர். இந்த நோய் புருண்டி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு (CAR), கென்யா மற்றும் ருவாண்டா உள்ளிட்ட பிற ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பரவியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையை அறிவித்த மறுநாளே (ஆகஸ்ட் 15) ஆப்பிரிக்காவுக்கு வெளியே, தங்கள் நாட்டில் எம்பாக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக ஸ்வீடன் அறிவித்தது. இந்த வைரஸ், க்ளேட் 1-இன் திரிபு என அடையாளம் காணப்பட்டது.

பாகிஸ்தானில் இதுவரை மூன்று பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்தவர்கள் என்று வடக்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

எம்பாக்ஸ் தொற்றுநோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விலங்குகள் மனிதர்களைக் கடித்தால், கீறினால், மனிதர்களுக்கு எம்பாக்ஸ் தொற்று ஏற்படலாம்

இந்தியாவில் என்ன நிலை?

இந்தியாவில் கடந்த காலங்களில் குரங்கம்மை நோய் பாதிப்ப இருந்துள்ளது. ஆனாலும், தற்போது இதுவரை ஒருவருக்கு கூட அதன் பாதிப்பு கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு முன் உலகம் முழுவதும் குரங்கம்மை பரவிய போது, இந்தியாவிலும் சிலர் பாதிக்கப்பட்டனர்.

 
எம்பாக்ஸ் வைரஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,எம்பாக்ஸ் வைரஸ்

கடந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் எஸ்.பி. சிங் பாகேல் வெளியிட்ட அறிக்கையில், 2023ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதிக்கு முன்பாக நாட்டில் 27 பேர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். கேரளாவில் 12 பேருக்கும், டெல்லியில் 15 பேருக்கும் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இந்தியாவில் மீண்டும் குரங்கம்மை ஏற்படுமா?

மூத்த ஆலோசகர் மருத்துவர் சிவராஜூ பிபிசியிடம் பேசுகையில், “உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, உலக சுகாதார நிறுவனம் சர்வதேச சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.

இந்தியாவிலும் குரங்கம்மை பாதிப்பு ஏற்படக் கூடும். எனவே, அரசாங்கம் விழிப்புடன் இருக்க வேண்டும். நோயின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொது விழிப்புணர்வை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்." என்றார்.

எம்பாக்ஸ் வைரஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,"அரசாங்கம் விழிப்புடன் இருக்க வேண்டும்" என நிபுணர்கள் கூறுகின்றனர்

“விமான நிலையங்களில், நாட்டுக்குள் வரும் பயணிகளின் எந்தெந்த நாடுகளுக்கு சென்று வந்தார்கள் என்பதை பதிவு செய்வது அவசியம். குறிப்பாக, இந்நோய் பரவும் நாடுகளில் இருந்து வந்தவர்களின் விவரங்களை ஆராய வேண்டும். விமான நிலைய சுகாதார அதிகாரிகள் பயணிகளுக்கு காய்ச்சல் மற்றும் தோல் அரிப்பு போன்ற அறிகுறிகளை பரிசோதிக்க வேண்டும்” என்றார்.

இருப்பினும், ஹைதராபாத்தில் உள்ள காய்ச்சல் மருத்துவமனை சி.எஸ்.ஆர்.எம்.ஓ., இதுவரை அரசாங்கத்திடமிருந்து எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்று கூறியுள்ளது.

குரங்கம்மை என்பது என்ன?

குரங்கம்மை வைரஸ் ஒரு ஆர்த்தோபாக்ஸ் வைரஸ். இது எம்பாக்ஸ் நோயை உண்டாக்குகிறது. இது பெரியம்மை போன்ற அறிகுறிகளையும் கொண்டுள்ளது. ஆனால் அதன் தீவிரம் குறைவு. 1980-ல் பெரியம்மை உலகிலிருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது. மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை இன்னும் உள்ளது.

இந்நோய் முதன்முதலில் 1958 இல் குரங்குகளில் கண்டறியப்பட்டது. பின்னர் 1970களில் காங்கோ ஜனநாயகக் குடியரசில் மனிதர்களிடம் கண்டறியப்பட்டது.

 
எம்பாக்ஸ் வைரஸ்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, தோலில் சொறி, புண் ஏற்படுவது ஆரம்ப அறிகுறியாக உள்ளது

மே 2022 முதல், ஆப்பிரிக்கப் பகுதிக்கு வெளியேயும் இதன் பாதிப்புகள் கண்டறியப்பட்டன. குரங்கம்மை வைரஸின் இரண்டு வெவ்வேறு பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை- கிளேட் I, கிளேட் II.

இது பெரியம்மையுடன் சில ஒற்றுமைகளைக் கொண்டிருந்தாலும், குரங்கம்மை பரவுவது குறைவு. அதன் தீவிரம் குறைவு. இருப்பினும், இது பல உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

எம்பாக்ஸின் அறிகுறிகள்

நோயால் பாதிக்கப்பட்டவருக்கு பொதுவாக ஒரு வாரத்திற்குள் எம்பாக்ஸின் அறிகுறிகள் தோன்றும். இருப்பினும், அவை ஒன்று முதல் 21 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். இந்த அறிகுறிகள் பொதுவாக 2-4 வாரங்கள் நீடிக்கும். பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இது கூடுதல் நாட்கள் நீடிக்கலாம்.

எம்பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிப்பு, காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, தசை வலி, முதுகுவலி மற்றும் பலவீனம் போன்ற அறிகுறிகள் இருக்கும். சிலருக்கு, எம்பாக்ஸ் முதலில் சொறி வடிவில் அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

எம்பாக்ஸ் வைரஸ்

பட மூலாதாரம்,MIKE ROEMER/GETTY IMAGES

படக்குறிப்பு, கானாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகளால் 2003ல் அமெரிக்காவில் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டது

ஒரு புண் போல் தொடங்கி திரவம் நிறைந்த கொப்புளமாக உருவாகிறது. சொறி குணமாகும் போது புண்கள் காய்ந்து கொப்புளங்கள் உதிர்ந்து விடும்.

புண்கள் குணமடைந்து புதிய தோல் உருவாகும் வரை, அவை மற்றவர்களுக்கு நோயைப் பரப்பும்.

குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உடையவர்கள் எம்பாக்ஸால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.

எப்படி பரவுகிறது?

எம்பாக்ஸ் நேரடி தொடர்பு மூலமாகவோ அல்லது வாய் அல்லது பிறப்புறுப்பில் உள்ள தோல் புண்கள் மூலமாகவோ ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அவைதவிர, பின்வரும் காரணங்களாலும் இந்நோய் பரவலாம்.

  • நேருக்கு நேர் (பேசுதல் அல்லது சுவாசித்தல்)
  • தொடுதல் அல்லது உடலுறவு வாயிலாக
  • உதட்டோடு உதடு சேர்த்து முத்தம்
  • வாய்வழி உறவு அல்லது தோலில் முத்தமிடுதல்
  • சளி, தோல் காயம் வாயிலாக இந்த வைரஸ் உடலில் நுழைகிறது. எம்பாக்ஸ் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களையும் பாதிக்கலாம். அதிக நபர்களுடன் உடலுறவு கொள்பவர்களுக்கு இது வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • விலங்குகள் மனிதர்களைக் கடித்தால், கீறினால், மனிதர்களுக்கு எம்பாக்ஸ் தொற்று ஏற்படலாம்.

எம்பாக்ஸ் எவ்வாறு கண்டறியப்படுகிறது?

மற்ற நோய்த்தொற்றுகள் போல தோற்றமளிப்பதால், எம்பாக்ஸ் நோயைக் கண்டறிவது கடினம். எனவே, நோய் மேலும் பரவாமல் தடுக்க பரிசோதனை மிகவும் முக்கியமானது, இதனால் மக்கள் கூடிய விரைவில் சிகிச்சை பெற முடியும்.

பி.சி.ஆர் பரிசோதனை மூலம் வைரஸ் டிஎன்ஏவை கண்டறிவது எம்பாக்ஸ்-ஐ கண்டறிவதற்கான ஒரு சிறந்த முறையாகும். இதில் நோயறிதலுக்காக தோல், திரவம் அல்லது கொப்புளங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.

இருப்பினும், நோயறிதலுக்கு ரத்த பரிசோதனை பரிந்துரைக்கப்படவில்லை. ஆன்டிபாடி கண்டறிதல் முறைகள் பயனுள்ளதாக இருக்காது, ஏனெனில் அவை வெவ்வேறு ஆர்த்தோபாக்ஸ் வைரஸ்களை வேறுபடுத்துவதில்லை.

சிகிச்சை என்ன?

உலக சுகாதார நிறுவனத்தின் படி, எம்பாக்ஸ்-க்கு மூன்று தடுப்பூசிகள் உள்ளன. MBA-BN, LC16 மற்றும் OrthopoxVax என மூன்று அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உள்ளன.

எம்பாக்ஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்வதன் மூலம் தொற்றுநோயைத் தடுக்கலாம். எம்பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வெளிப்பட்ட 4 நாட்களுக்குள் (அல்லது அறிகுறிகள் இல்லாவிட்டால் 14 நாட்களுக்குள்) தடுப்பூசி போடப்பட வேண்டும்.

 
எம்பாக்ஸ் வைரஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தடுப்பூசி செலுத்துவதன் மூலம் குரங்கம்மை தொற்றாமல் தடுக்கலாம்

எம்பாக்ஸ் நோயால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுமாறு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. இத்தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள் சுகாதாரப் பணியாளர்கள், தன்பாலின உறவில் ஈடுபடுபவர்கள், பலருடன் உடலுறவு கொள்பவர்கள், பாலியல் தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

தடுப்பது எப்படி?

எம்பாக்ஸ் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் 2-4 வாரங்களுக்குள் குணமடைவார்கள்.

  • அறிகுறிகளைக் குறைக்கவும் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்கவும் பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் தனி அறையில் தங்க வைக்க வேண்டும்.
  • கைகளை சானிட்டைசர் அல்லது சோப்பு மூலம் அடிக்கடி கழுவ வேண்டும்.
  • புண்களைத் தொடுவதற்கு முன் அல்லது சொறி குணமாகும் வரை முகக்கவசத்தை அணிய வேண்டும்
  • மற்றவர்கள் அருகில் இருக்கும்போது காயங்களை மறைக்க வேண்டும்.
  • உங்கள் வாயில் புண்கள் இருந்தால், உப்பு நீரில் கொப்பளிக்க வேண்டும்.
  • பாராசிட்டமால் அல்லது இப்யூபுரூஃபன் போன்ற வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ள உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.
 
எம்பாக்ஸ் வைரஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கொப்புளங்களை உடைக்கவோ அல்லது புண்களை கீறவோ கூடாது
  • கொப்புளங்களை உடைக்கவோ அல்லது புண்களை கீறவோ கூடாது, இது குணமடைவதை தாமதப்படுத்தும். உடலின் மற்ற பகுதிகளுக்கு சொறி பரவும். கொப்புளங்கள் குணமாகும் வரை அப்பகுதியில் உள்ள முடியை ஷேவ் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
  • மற்றவர்களுக்கு எம்பாக்ஸ் பரவுவதைத் தடுக்க, எம்பாக்ஸ் உள்ளவர்களை நோய் குறையும் வரை வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ தனிமைப்படுத்த வேண்டும்.
  • மற்றவர்கள் முன்னிலையில் முகக்கவசத்தை அணிந்தால் அத்தொற்று பரவாமல் தடுக்கலாம்.
  • உடலுறவின் போது ஆணுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்கலாம்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குரங்கம்மையை கொரோனாவோடு ஒப்பிட முடியாது என்கிறது உலக சுகாதார அமைப்பு

குரங்கு அம்மை நோயை பழைய அல்லது புதிய திரிபு வகை கொரோனா தொற்றோடு ஒப்பிட முடியாது என உலக சுகாதார அமைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே சமீபகாலமாக தென்பட்ட இந்தநோய், இப்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் பரவிவரும் குரங்கு அம்மை நோய் புதிய கோவிட் தொற்று இல்லை எனவும், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு தெரியும் எனவும் உலக சுகாதார அமைப்பு அதிகாரி ஹன்ஸ் க்ளூஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது;

“நாம் ஒன்றாக இணைந்து இந்த குரங்கு அம்மை நோயை சமாளிக்க முடியும். நாம் சமாளிக்க வேண்டும். நாம் குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பின்பற்றி உலகெங்கும் இந்த நோய்ப் பரவலை முற்றாக அழிக்கப் போகிறோமா? அல்லது இதனைப் புறக்கணித்து மீண்டும் அச்சத்தின் சுழலில் சிக்கப் போகிறோமா? நாம் எவ்வாறு இந்த நோயை எதிர்கொள்கிறோம் என்பதில் தான் நாம் இதிலிருந்து மீள்வதற்கான வழி இருக்கிறது. குரங்கு அம்மை நோயை கொரோனாவோடு ஒப்பிட இயலாது. ஏனெனில் இதனை கட்டுப்படுத்த முடியும். இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வார்கள்’ என தெரிவித்துள்ளார்.

குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய். இந்த நோயை எம்பாக்ஸ் என்று அழைக்கின்றனர். இது மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது.

https://thinakkural.lk/article/308160

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் உலகளாவிய சுகாதார அவசர நிலை - கொரோனா போல குரங்கம்மையும் உலகையே முடக்கிப் போடுமா?

எம்பாக்ஸ் - கோவிட் 19 வேறுபாடு என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், டோர்காஸ் வாங்கிரா மற்றும் கரோலின் கியாம்போ
  • பதவி, சுகாதார செய்தியாளர், பிபிசி ஆப்பிரிக்கா
  • இருந்துநைரோபி
  • 24 நிமிடங்களுக்கு முன்னர்

உலக சுகாதார நிறுவனம் (WHO) இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக குரங்கம்மையை (mpox) உலகளாவிய சுகாதார அவசர நிலையாக அறிவித்த போது, பலரின் மனதில் எழுந்த கேள்வி, இது புதிய கோவிட்-19 தொற்றா? என்பதுதான்.

விஞ்ஞானிகளும் சுகாதார நிபுணர்களும் கோவிட் சூழலோடு குரங்கம்மையை ஒப்பிட்டு கவலைப்படுவது சரிதான் என்கிறார்கள். அதே சமயம் கோவிட்-19 மற்றும் குரங்கம்மை ஆகியஇரண்டும் ஒன்று கிடையாது என்கின்றனர்.

“எம்பாக்ஸ் தொற்றை `புதிய கோவிட்’ என்று சொல்வது சரி அல்ல. கோவிட்டை ஒப்பிடும் போது இதில் பொது மக்களுக்கான ஆபத்து குறைவு” என்று ஐரோப்பாவுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ் க்ளூக் கூறுகிறார்.

"எம்பாக்ஸை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது எங்களுக்குத் தெரியும். ஐரோப்பாவில், அதன் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் அறிவோம்.”

இரண்டு நோய்களும் வைரஸ் தொற்றால் ஏற்படுகின்றன. இரு தொற்றுகளும் வெவ்வேறு அறிகுறிகளை கொண்டுள்ளன. அவை வெவ்வேறு வழிகளில் பரவுகின்றன.

கென்யாவின் ஆகா கான் பல்கலைக்கழக மருத்துவமனையின் தொற்று நோய் நிபுணர் ஆலோசகரான பேராசிரியர் ரோட்னி ஆடம் கூறுகையில், "இரண்டு நோய் தொற்றுகளுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமைகளை விட வேறுபாடுகள் குறிப்பிடத்தக்கவை. என்றார்.

கோவிட் , குரங்கம்மை இடையிலான ஐந்து வேறுபாடுகளை விரிவாகப் பார்க்கலாம்.

1. எம்பாக்ஸ் ஒரு புதிய வைரஸ் அல்ல

டென்மார்க்கில் பிடிக்கப்பட்ட குரங்குகளில் இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. 1958 ஆம் ஆண்டு இது கண்டறியப்பட்ட போது இதனை குரங்கம்மை என்று அழைத்தனர். தற்போது எம்பாக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் 1970 ஆம் ஆண்டு முதன்முதலில் ஒருவருக்கு எம்பாக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் தொற்று பரவியது. 2022 ஆம் ஆண்டில் இது உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டது, அதன்பிறகு இந்த நோய் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது.

இதற்கு நேர்மாறாக, சீனாவின் வுஹானில் 2019 ஆம் ஆண்டு பரவிய கோவிட் -19, மிக விரைவில் உலகளாவிய தொற்றுநோயாக மாறியது, இது ஒரு புதிய வகை வைரஸால் ஏற்பட்டது. ``SARS-CoV2’’ - இதற்கு முன்னர் இந்த நோய்தொற்று மனிதர்களுக்கு மத்தியில் கண்டறியப்படவில்லை.

சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்ட போது கோவிட்-19 பற்றி நாம் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. ஆனால் எம்பாக்ஸ் பற்றி தற்போது எங்களுக்கு அதிகம் தெரியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

2. கோவிட்-19 போன்று எம்பாக்ஸ் அதிகம் பரவக்கூடியது அல்ல

இரண்டு நோய்களும் நெருங்கிய தொடர்பு மூலம் பரவினாலும், கோவிட்-19 காற்றின் வாயிலாக பரவுவதால் வேகமாக பரவுடத.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து இருமல், தும்மல், பேசுவது, பாடுவது அல்லது சுவாசிப்பது போன்றவற்றின் மூலம் கோவிட்-19 அடுத்தவருக்கு பரவலாம்.

எம்பாக்ஸ் பாதிக்கப்பட்ட நபருடன் மிக நெருக்கமான அல்லது நீடித்த தொடர்பினால் பரவுகிறது, அதாவது உடலுறவு, அசுத்தமான படுக்கை மற்றும் ஆடைகளுடன் தொடர்பு, மற்றும் நீண்ட நேரமாக நேருக்கு நேர் தொடர்பு ஆகியவற்றின் மூலம் பரவுகிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, டிசம்பர் 2019 மற்றும் ஆகஸ்ட் 2023 க்கு இடையில் உலகளவில் 76 கோடிக்கும் அதிகமான கோவிட்-19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் உலகளவில் எம்பாக்ஸ் நோய்த்தொற்றுகள் 1,00,000 ஐ எட்டுவதற்கு மே 2022 முதல் இரண்டு ஆண்டுகள் ஆனது.

2024 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் (ஆப்பிரிக்கா CDC) 18,910 நோயாளிகள் மற்றும் கிட்டத்தட்ட 600 இறப்புகள் பதிவாகியுள்ளன.

மீண்டும் ஒரு கோவிட் தொற்று சூழல் ஏற்படுமா? - குரங்கம்மை விளைவுகள் எப்படி இருக்கும்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,தோல் புண்கள் எம்பாக்ஸின் முக்கியமான அறிகுறிகளில் ஒன்றாகும்

3. எம்பாக்ஸ் தடுப்பூசிகள் ஏற்கனவே உள்ளன

கோவிட்-19 தொற்றுநோயின் தொடக்கத்தில் தடுப்பூசிகளை உருவாக்க பெரும் போட்டி நிலவியது.

ஆனால் எம்பாக்ஸுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கும் தடுப்பூசிகள் இப்போது கிடைக்கின்றன.

எம்பாக்ஸ் பெரியம்மை நோயுடன் தொடர்புடையது. பெரியம்மை என்பது 1980இல் தடுப்பூசி மூலம் உலகம் முழுவதும் ஒழிக்கப்பட்ட நோயாகும்.

பெரியம்மைக்கு எதிராக செயல்பட்ட தடுப்பூசிகள் குரங்கம்மைக்கு எதிரான பாதுகாப்பையும் அளித்தன. குறிப்பாக 2022இல் நோய் தொற்று பரவிய போது, பெரியம்மை தடுப்பூசி போடப்பட்டது.

"இது 100% பாதுகாப்பானது அல்ல, ஆனால் 2022 முதல் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் ஏற்பட்ட பெரிய பரவலின் அடிப்படையில், வயதானவர்களுக்கு தற்காப்பு தருகிறது. பெரியம்மை தடுப்பூசியால் அவர்கள் குரங்கம்மை பரவாமல் தடுப்பதற்கு, ஓரளவு பாதுகாப்பை பெறுகின்றனர்." என்று பேராசிரியர் ஆடம் கூறுகிறார்.

பவேரியன் நோர்டிக் என்னும் நிறுவனம் ``MVA-BN’’ என்னும் தடுப்பூசியின் 15 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்களை வழங்கியது. பெரியம்மை தடுப்பூசியை அடிப்படையாகக் கொண்ட ஒரு எம்பாக்ஸ் தடுப்பூசி - 2022 பரவலின் போது உலகம் முழுவதும் 76 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டது.

4. எம்பாக்ஸ் வைரஸ் கொரோனா வைரஸை விட மெதுவாக வீரியம் அடைகிறது

வைரஸ்கள் காலப்போக்கில் வீரியம் அடைந்து உருமாறுகின்றன, ஆனால் சில வைரஸ்கள் அதி வேகமாக மாறுகின்றன.

எம்பாக்ஸ் டிஎன்ஏ வைரஸால் ஏற்படுகிறது மற்றும் கோவிட்-19 ஆர்என்ஏ வைரஸால் ஏற்படுகிறது.

அமெரிக்கன் சொசைட்டி ஃபார் மைக்ரோபயாலஜி கூற்றுப்படி டிஎன்ஏ வைரஸ்கள், ஆர்என்ஏ வைரஸ்கள் போல சுதந்திரமாக உருமாறுவதில்லை.

எம்பாக்ஸ் வைரஸின் அறியப்பட்ட இரண்டு குடும்பங்கள் அல்லது கிளேடுகள் (clade) உள்ளன - கிளேட் 1 மற்றும் கிளேட் 2. SARS-CoV2 வைரஸ் 20 க்கும் மேற்பட்ட அறியப்பட்ட கிளேட்களைக் கொண்டுள்ளது.

தற்போதைய பரவல் பெரும்பாலும் `கிளேட் 1 பி’ எனப்படும் கிளேட் 1 வைரஸால் இயக்கப்படுகிறது.

"கிளாட் 1பி ரக வைரஸ் பெரும்பாலும் பாலியல் ரீதியான பரவுதலில் இருந்து வெளிவருகிறது. அதே சமயம் ஒரே வீட்டுக்குள் இருக்கும் நபர்களுக்கு மத்தியில் பரவுவதையும் நாங்கள் காண்கிறோம் : தாயிடமிருந்து குழந்தைக்கு, குழந்தைகளிடம் இருந்து பிற குழந்தைக்கு பரவும்" என்கிறார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் உலகளாவிய சுகாதார ஆராய்ச்சி பேராசிரியர் ட்ரூடி லாங்.

மீண்டும் ஒரு கோவிட் தொற்று சூழல் ஏற்படுமா? - குரங்கம்மை விளைவுகள் எப்படி இருக்கும்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு, சென்னை விமான நிலையத்தில் எம்பாக்ஸ் பற்றி பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன

உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் 1பி ரக வைரஸ்கள் மற்ற ரகங்களை விட எளிதில் பரவுகிறதா என்பது தெரியவில்லை என்று கூறுகிறார்கள்.

அவர்கள் அறிந்தது என்னவென்றால், சமீபத்திய பரவலில் பாதிக்கப்பட்டவர்கள் நோய் இருப்பதாக அறிவிக்கும் நேரத்தில் ஏற்கனவே கடுமையான அறிகுறிகளை கொண்டுள்ளனர்.

 

5. பொது முடக்கம் போன்ற சூழல் வர வாய்ப்பில்லை

கோவிட் தொற்றுநோயின் போது நாம் பார்த்தது போல, எம்பாக்ஸ் பரவல் பொது ஊரடங்கு சூழலை உருவாக்கும், உலகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் என்று பலர் கவலைப்படுகிறார்கள்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நோய் ஆப்பிரிக்காவின் 16 நாடுகளில் பரவியிருந்தாலும் எந்த எல்லைகளையும் மூட பரிந்துரைக்கப்படவில்லை.

"ஆப்ரிக்காவின் நோய் பரவலை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பு மைய சிடிசி ஆய்வுகளின்படி எம்பாக்ஸ் மக்கள் மற்றும் பொருட்களின் இயக்கத்திற்கு இடையூறு விளைவிக்காது" என்று ஏஜென்சியின் தலைமை இயக்குeர் டாக்டர் ஜீன் கசேயா கூறினார்.

"கடந்த காலத்தில் இருந்ததைப் போலவே மக்களின் இயல்பு வாழ்க்கை தொடரும். அதே நேரத்தில் இந்த தொற்று பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான கருவிகளை நாங்கள் வழங்குகிறோம்." என்றார் அவர்.

உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மைக் ரியான் இதனை ஒப்புக்கொள்கிறார்.

"எம்பாக்ஸ் என்பது ஒரு வைரஸ் ஆகும், இது நாம் சரியான நேரத்தில் சரியான விஷயங்களைச் செய்து நம் அனைவரையும் ஒன்றிணைத்தால் கட்டுப்படுத்தலாம். கோவிட்க்காக நாம் செய்ததைப் போல போராட வேண்டும்” என்று மைக் ரியான் கூறுகிறார்.

மீண்டும் ஒரு கோவிட் தொற்று சூழல் ஏற்படுமா? - குரங்கம்மை விளைவுகள் எப்படி இருக்கும்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் 2பி எம்பாக்ஸ் கிளேடின் தொற்று கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது.

எம்பாக்ஸ் பொதுவாக குறைவான அபாயம் கொண்ட நோய்தொற்று. பெரும்பாலான மக்கள் இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் குணமடைகிறார்கள். சிலர் கடுமையான நோய்தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்ட நபர்கள், பொருட்கள் அல்லது விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பதன் மூலம் தொற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். புண்கள் மற்றும் காயங்களைத் தொட்ட பிறகு, கைகளைக் கழுவுதல் அல்லது சானிட்டைசர்களை பயன்படுத்துவது குறித்தும் அறிவுறுத்தப்படுகிறது.

"தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை என்பதை நாங்கள் அறிவோம், எனவே தற்போது எங்களிடம் சிறந்த நோய் தடுப்பு கருவிகள் உள்ளன" என்கிறார். "எனவே, கோவிட் போன்ற ஒரு தொற்றுநோய் சூழல் ஏற்பட இம்முறை சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன்." என்கிறார் பேராசிரியர் ரோட்னி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.