Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

      வாழையடி வாழை 

                       - சுப.சோமசுந்தரம்

       

               தமிழ் நிலத்தின் சிறந்த எழுத்தாளராக, திரைப்பட இயக்குனராக பரிமளித்திருக்கும் திரு. மாரி செல்வராஜ் அவர்களின் 'வாழை' திரைப்படம் தொடர்பாக சிறிது எழுத வந்தேன். நல்ல படங்களைப் பற்றித் தெரிய வரும்போது OTT தளத்தில் வரும் வரை பொறுப்பதில்லை; திரையரங்கிலேயே பார்த்து விட வேண்டும் எனும் முனைப்பு உள்ளவன்தான் நானும். இருப்பினும் படம் வந்து ஐந்தாறு நாட்கள் கழித்து மிதமான கூட்டத்தில் பார்ப்பதிலேயே அலாதி இன்பம் காண்பவன் நான். காரணங்கள் சில உண்டு. ஒரு நல்ல திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் (ஒவ்வொரு frame ஐயும் என்று சொல்வார்களே, அது அதேதான் !) சலனமில்லாமல் ரசித்துப் பார்க்க முடிகிறது. ஒரு சிறுபிள்ளைத்தனமான காரணம் கூட உண்டு. திரையரங்கின் கேன்டீனில், "வள்ளிசா சீனி இல்லாத டீயா ? அரைச் சீனி போட்டுத் தரட்டுமாய்யா ?" என்று வாஞ்சையுடன் தாயினும் சாலப் பரிந்த பரிவு கூட்டத்தில் கிடைப்பதில்லை. கூட்டம் அதிகம் உள்ள எந்த சமூகத்திலும் மானுட மதிப்பீடு குறைவு என்று எங்கோ வாசித்த நினைவு. நிற்க. 
            'வாழை' திரைப்படம் குறித்த விமர்சனம் செய்ய வரவில்லை. நான் நிதானமாக ஒரு வாரம் கழித்துப் பார்த்ததால், படம் ஏற்கனவே ஊடகங்களில் திரைத்துறையின் துறை போகியவர்களால் ஆய்ந்து அலசிப் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது; மக்களால் கொண்டாடப்பட்டுள்ளது. எனவே அது பற்றிப் புதிதாக நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பின் என்னதான் எழுத நினைத்தேன் ? நான் 'வாழை' பார்க்கும் முன்பே எழுத்தாளர் சோ. தர்மன் அவர்கள் ஏதோ சொல்லப் போக, சமூக வலைத்தளங்களில் ஏற்பட்ட சிறிய சலசலப்பின் பின்னணியில் ஏதோ எழுத நினைத்தேன். அவர் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே தாம் எழுதிய 'வாழையடி' என்ற சிறுகதையைக் குறிப்பிட்டு அந்த 'வாழையடி'தான் இந்த 'வாழை' என்ற தொனியில் பேசி இருந்தார். எதையும் சாதியக் கண்ணோட்டத்துடனேயே பார்க்கும் ஆதிக்க சக்திகள், "கிடைத்ததடா வாய்ப்பு - மாரி செல்வராஜை அடிக்க !" என்ற அளவில் ஆரவாரம் செய்ய ஆரம்பித்திருந்தார்கள். மறுநாளே மாரி செல்வராஜ், "வாழைக்காய் சுமக்கும் தொழிலாளர்களைப் பற்றி எழுத்தாளர் சோ. தர்மன் அவர்கள் எழுதிய வாழையடி என்ற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை. அனைவரும் வாசிக்கவும். எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி" என்று சுருக்கமாக, தெளிவாக, தமக்கே உரிய சான்றாண்மையுடன் தமது 'X' தளத்தில் பதிவிட்டிருந்தார். 'வாழையடி' கதையின் இணைப்பையும் தந்திருந்தார். நான் படம் பார்ப்பதற்கு முன் 'வாழையடி' கதையை வாசித்து விட்டேன். படம் பார்க்கும்போது அக்கதையைப் படத்துடன் மனதளவில் ஒப்பிடத் தவறவில்லை.
             திருவைகுண்டம் பகுதியில் வாழை விவசாயத்தைக் கூர்ந்து கவனித்துப் பதிவு செய்ய விழைவோர் யாரும் அந்தக் கங்காணிகளைக் குறிக்காமல், அக்காலத்தில் வாழைத்தார் ஒன்றுக்குச் சுமை கூலி ஒரு ரூபாயிலிருந்து இரண்டு ரூபாயாக ஏற்ற தொழிலாளர்கள் வைத்த கோரிக்கையைக் குறிக்காமல், தொழிலாளர் ஆடையில் வாழைக் கறையைக் குறிக்காமல், வரப்பில் குத்தும் முள்ளைக் குறிக்காமல், கால் தடுமாறி நீரில் விழுவதைக் குறிக்காமல் எழுத முடியாது. இப்படி எல்லோருக்கும் தோன்றும் துணுக்குகளை ஒரு சிறுகதையாய்ப் பதிவு செய்துவிட்டு, தொழிலாளர்களின் வாழ்வை ஓவியமாய்த் தீட்டிய ஒரு திரைக்காவியத்தை மலினப்படுத்துவதைப் போல அல்லது குறைத்து மதிப்பிடுவதைப் போல சோ.தர்மன் அதன் கதைக்குச் சொந்தம் கொண்டாடியது சரிதானா ? அந்தக் கதைதான் இந்தக் கதை என்று உணர்வதற்கு ஒரு ஞானக்கண் வேண்டுமோ ! "எனக்குத் தெரிந்தவரை வாழைத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை முதலில் பதிவு செய்தவன் நான்தான்" என்று சொல்வது வரை சோ. தர்மனுக்கு அவரது உரிமையின் எல்லை.
            ஜெர்மனியில் நாஜிக்கள் நிகழ்த்திய யூத இன அழிப்பு (The Holocaust) பற்றிய பல கதைகளும் புதினங்களும் எழுதப்பட்டன; எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்களும் வெளிவந்தன. அவையனைத்திலும் வதை முகாம்கள் (concentration camps), யூதர்களும் அரசியல் எதிரிகளும் முதலில் தங்க வைக்கப்பட்ட 'கெட்டோக்கள்' (ghettos), கொலைவாயு அறைகள் (gas chambers), கொலை செய்யப்பட்ட சிறுவர், சிறுமியர், முதியோர் என அனைத்து விஷயங்களும் உண்டு. இவற்றுள் எல்லி வீஸல் (Elie Wiesel) எனும் எழுத்தாளர் தாம் நேச நாடுகள் படையால் புச்சென்வால்ட் (Buchenwald) வதை முகாமிலிருந்து விடுவிக்கப்படும் வரை உள்ள தமது சோக அனுபவங்களைப் பகிர்ந்த 'Night' எனும் புதினம் இலக்கிய உலகில் பரவலாகப் பேசப்படுவது. அவர் ஒரு எழுத்தாளர், பேராசிரியர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர். தமது சமூகச் செயல்பாடுகளால் 1986 இல் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர். அவரது புதினம் 'Night' இல் ஹிட்லரின் யூத இன அழிப்பு பற்றிய  முந்தைய  புதினங்களில் உள்ளவைதாம் இருக்கின்றன என்று யாரேனும் குற்றம் சாட்டினால், இலக்கிய உலகம் அதனை எப்படிப் பார்க்கும் ? இது பற்றிய ஏனைய பெரும்பாலான படைப்புகள் வதை முகாம்களில் இருந்து மீண்டவர்களின் அனுபவங்களைக் கேட்டு எழுதப்பட்டவை; எல்லி வீஸலைப் பொறுத்தவரை அவரே ஒரு எழுத்தாளர், அறிஞர் என்பதால் அவர்தம் சொந்த அனுபவத்தைப் பதிவு செய்தது ஏனைய படைப்புகளில் இருந்து சிறந்து விளங்குதல் இயற்கையே ! அது போலவே கரிசல் காட்டில் இருந்து மருத நிலத்திற்குக் குறுகிய காலத்திற்கு வந்த சோ. தர்மன் வாழை விவசாயிகளின் துயரங்களைப் பதிவு செய்ததை விட வாழையில் வாழ்ந்த மாரி செல்வராஜின் பதிவு நிவந்து நிற்பது இயற்கையே - அது எழுத்து ஊடகம், இது காட்சி ஊடகம் என்று இருந்தாலும் கூட ! மேலும் முன்னரே குறிப்பிட்டது போல் சோ. தர்மன் ஒரு சிறுகதையாக எழுதியவை, எல்லோருக்கும் தெரியும் துணுக்குச் செய்திகள். மாரி செல்வராஜ் பதிவு செய்தவை அவர் வாழ்ந்து காட்டியவை. இவற்றிற்கு அப்பாற்பட்டு, எழுத்து ஊடகத்தில் கூட சோ. தர்மனை விட மாரி செல்வராஜ் ஒரு படி உயர்ந்து நிற்கிறார் என்பது இருவரது எழுத்துக்களையும் வாசித்த என் கருத்து. சோ. தர்மன் எண்ணிக்கையில் அதிகப் படைப்புகளைத் தந்திருக்கிறார், சாகித்ய அகாடமி விருதாளர் என்பதெல்லாம் ஒரு புறம். இத்தகைய ஒப்பீடு பொதுவாகத் தேவையில்லைதான். சோ.தர்மன் நம்மை சந்திக்கு இழுத்தால் வேறு என்ன செய்வது ?
              "படம் பார்த்தீர்களே, எப்படி இருக்கிறது ?" என்று நிருபர் கேட்டதற்கு, பெரும் பாராட்டைப் பெற்ற படத்தின் தரத்தைப் பற்றி எதுவும் பேசாமல், "நான் அச்சு ஊடகத்தில் பதிவு செய்தேன்; அவர் (மாரி செல்வராஜ்) காட்சி ஊடகமாக மாற்றி இருக்கிறார்; அவ்வளவுதான். வேறெதுவும் இல்லை" என்று சாதாரணமாக சோ. தர்மன் சொல்லிச் செல்வது முதிர்ச்சியின்மையா அல்லது அடாவடித்தனமா என்பது நமக்குப் புரியவில்லை. 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்' எனும் அடிப்படைப் பண்பே சோ. தர்மனுக்குத் தெரியாதோ என்று எண்ண வைக்கிறார். "கதைக்காக மாரி செல்வராஜ் என்னிடம் உரிமை கோரவும் இல்லை; அதை நான் பெரிதாக்கவும் இல்லை" என்று சோ. தர்மன் சொல்வது வேடிக்கை. "அது நம்ம கதைதான் என்று சொல்ல முடியாது" என்றும் பேட்டியின் ஊடாகச் சொல்லிக் கொள்கிறார் சோ. தர்மன். அவ்வாறெனில் மாரி செல்வராஜ் அவரிடம் ஏன் உரிமை கோர வேண்டும் ? ஒரு இலக்கியவாதி இவ்வளவு குழப்பவாதியாகவா இருப்பது ? ஊடகங்களில் இவ்வளவு சொல்லிவிட்டு, "அதை நான் பெரிதாக்கவில்லை" என்ற பம்மாத்துப் பெருந்தன்மை எதற்கு ? வாசகர்களில் சிலர் அல்லது பலர் அரைகுறை வாசிப்பு அல்லது மேம்போக்கான வாசிப்பு உள்ளவர்களாகவும் இருப்பார்கள். அப்படியானவர்கள், "உங்கள் கதைதான் வந்திருக்கிறது" என்று உளறினால் அந்த உளறல்களையெல்லாம் பொதுவெளிக்குக் கொண்டு வருவது சான்றாண்மைக்கு அழகா ?
            சமூகத்தில் சில சாதி வெறியர்கள் மாரி செல்வராஜ் மீது கொண்ட வன்மத்தால் சமூக வலைத்தளங்களில் ஓரிரு நாட்கள் இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு ஆடினார்களே தவிர, அறிவுலகம் சோ. தர்மனின் வெற்றுரையைக் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளியது அவ்வுலகின் சான்றாண்மைக்கான சான்று. பின் ஏன் இது பற்றி நான் இத்துணை எழுத வேண்டும் ? ஒருவர் தாம் கற்றுணர்ந்தார் என்ற போர்வையில் இளையோரின் திறமையைக் குறைத்து மதிப்பிடுவதைக் கண்டுகொள்ளாமல் விடுவதையும் தாண்டி, கண்டனக் குரலைப் பதிவு செய்வது ஓரளவு கற்றலும் கற்ற வழி நிற்றலும் உடையோர் தம் கடமை.
              மகாபாரதக் கதையில் கர்ணன் தோற்று தருமன் வென்றிருக்கலாம். 'வாழையடி'யை வாசித்து 'வாழை'யைப் பார்த்தால் தெரியும் - அந்த 'தர்மன்' தோற்று இந்த 'கர்ணன்' வெல்வது.

 

https://www.facebook.com/share/p/2shRFgGaBPcoGhvN/?mibextid=oFDknk

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஐயா உங்களின் நேர்மையான பகிர்வுக்கு . ........!

மாறி செல்வராஜ் அவர்கள் "சம்படி ஆட்டம் "  என்னும் தலைப்பில் தன் சுயசரிதமாக தொடர் ஒன்று எழுதிக் கொண்டு வருகிறார் . ........நான் அதை தொடற்சியாக வாசித்துக் கொண்டு வருகின்றேன் . ........ஆயினும் அத் தொடரில் உள்ள பல சுவையான சம்பவங்கள் படத்தில் இல்லை....ஒருவேளை திரைக்கதையின் சுருக்கத்திற்காக அவைகள் தவிர்க்கப் பட்டிருக்கலாம் .......சோ . தர்மனின் "வாழையடி"யை நான் வாசிக்கவில்லை .........முடிந்தால் "சம்படி ஆட்டம்" படித்துப் பாருங்கள் . ........ நன்றாக இருக்கும் .......!

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் "ஆனந்த விகடனில் " இருக்கிறது . ......! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

சோ . தர்மனின் "வாழையடி"யை நான் வாசிக்கவில்லை

'வாழையடி' சிறுகதைக்கான இணைப்பு கட்டுரையின் இறுதியில் உள்ள முகநூல் இணைப்பில் உள்ளது.

Edited by சுப.சோமசுந்தரம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.