Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் தினக் குறிப்பு இது. ஆனால் ஆசிரியர்களைப் பாராட்டுவதோ பெருமிதத்தில் திளைப்பதோ நன்றியுணர்ச்சியில் பொங்குவதோ என் நோக்கம் அல்ல. நன்றியுணர்ச்சி மிகவும் நல்லதே என்றாலும் அதைவிட முக்கியமான ஒரு பிரச்சினையை இங்கு பேச வேண்டும் என நினைக்கிறேன் - இந்த ஆசிரியர் தினமன்று பெரும்பாலான ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக இல்லை. இதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன். என் நண்பர்கள் பலர் கல்லூரி ஆசிரியர்களாக தனியாரிலும் அரசுதவி நிறுவனங்களிலும் இருக்கிறார்கள். தனியார் பல்கலைக்கழகங்களில் இருக்கிறார்கள். தனியார் பள்ளிகளிலும் அரசுப் பள்ளிகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள் - வேலையும் அழுத்தமும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது, வாழ்க்கையில் நிம்மதியில்லை, வேலையில் திருப்தியில்லை. ஓய்வு பெற்ற பேராசிரியர்களிடம் பேசும் போது “நல்லவேளை நாங்கள் தப்பித்துவிட்டோம், உங்கள் தலைமுறையில் ஆசிரிய வேலையானது சார்ளி சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ் படத்தில் அவர் எந்திரத்துக்குள் மாட்டிக்கொள்வாரே அதைப் போல ஆகிவிட்டது, நல்லவேளை நாங்கள் தப்பித்துவிட்டோம்” என்கிறார்கள்.


உலகளவிலும் இதுவே நிலைமை என்பதை வாய்ஸஸ் ஆப் அகாடெமியா எனும் இணையதளத்தில் கிளென் ஒ ஹாரா எனும் அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் எழுதிய கட்டுரை (It is not Your Fault that Academic Life is Getting Harder) காட்டுகிறது. “பேராசிரியர்கள் இன்று மிகவும் அழுத்தத்தில், நெருக்கடியில், பதற்றத்தில், பாதுகாப்பின்மையில் இருக்கிறார்கள்” என அவர் தன் கட்டுரையை ஆரம்பிக்கிறார்.
இந்தப் பத்தியைப் பாருங்கள்:

“It is impossible to be a top-line manager and administrator and mentor and researcher and writer and outreach officer and IT expert and online instructor and pedagogical innovator and recruiter and teacher and marker and external examiner and press pundit and grant bidder and editor and look after your own wellbeing. No-one can do that. Yet that’s what is often asked.”
அண்மையில் ஒரு கருத்தரங்கில் நான் ஒரு நிர்வாகவியல் பெண் பேராசிரியரிடம் பேசும்போது ஓ ஹாரா சொல்லுகிற இதே விசயத்தை சொன்னார். அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் வரிக்கு வரி எந்த மாற்றமும் இல்லாமல் அதையே சொன்னார். இந்த வாக்கியம் ஏதோ உலகம் முழுக்க ஆசிரியர்களின் மனதுக்குள் உழன்று கொண்டிருப்பதைப் போல. அவரும் என்னைப் போல இதற்கு முன்பு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தவர். அவர் இணைய வழியான விற்பனையிலும் நான் மின்பதிப்புத் துறையிலும் இருந்திருக்கிறோம். அந்த வேலைகளுக்கு ஒரு எல்லை, கால வரையறை இருந்தது; நீங்கள் காலையில் போனால் மாலைக்குள் முடித்துக்கொள்ளலாம். அதன் பிறகு உங்கள் உலகம் உங்களுக்கு. ஆனால் பேராசிரியர் ஆன பிறகு “தூங்கும்போது கூட அந்த வேலையே எப்போதும் மனதுக்குள் ஓடுகிறது, பின்மாலையில் கூட ஆன்லைனில் வகுப்பு எடுக்கிறேன், இரவில் மின்னஞ்சல்களைப் பார்த்து பதிலளிக்கிறேன், தேர்வுத்தாள்களைத் திருத்திக்கொண்டே இருக்கிறேன்” என்கிறார். புத்தகங்களைப் படித்து தயாரித்துக்கொண்டு வகுப்புக்குப் போய் பாடம் எடுப்பதே இப்போது எளிதான பணி, மற்றவை எல்லாம் தலையை கிரைண்டரில் மாட்டிக்கொண்டு அரைபடுகிற வேலைகள். ஆனால் அந்த பிரதான வேலையை விடுத்து வேறு கடமைகளே இன்று அதிக நேரத்தை இழுக்கின்றன. நான் ஒரு பட்டியல் இடுகிறேன்:
நீங்கள் ஒரு ஆசிரியராக சமூகப் பணியாற்ற வேண்டும். எதாவது ஒருவிதத்தில் உங்கள் ஊரில் உள்ள பள்ளிகளுக்கோ கல்லூரிகளுக்கோ சென்று இலவசமாக பாடம் சொல்லித் தரவேண்டும். இதை அவுட்ரீச் புரோக்கிராம் என்கிறார்கள். உயர்கல்வி நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்தும் நிறுவனங்கள் இதை வலியுறுத்துவதால் உலகம் முழுக்க இது தனியார் கல்லூரி ஆசிரியர்கள் மீது திணிக்கப்படுகிறது.

நீங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு முறைப்படி ஆலோசனை வழங்கவேண்டும். அனேகமாக எல்லா மாணவர்களுக்கும் முறைமைக்கு வெளியே ஆலோசனை வழங்கியபடியே இருக்க வேண்டும். மாணவர்கள் வகுப்புக்கு கொண்டு வரப்படுவது, அவர்கள் கவனம் செலுத்துவது, தேர்வுகளில் கட்டாயமாக அதிக மதிப்பெண்கள் எடுப்பது, உடல்நலமற்று, மனநலமற்றுப்போய் கல்வியில் ஆர்வம் செலுத்த முடியாமல் போய் வகுப்பில் இருந்து கழன்றுகொண்டாலும் அவர்களை எப்படியாவது படிக்கவைத்து தேர்வடைய செய்யவேண்டும். அவர்கள் எத்தனை முறைகள் தோல்வியடைந்தாலும் திரும்பத்திரும்ப தேர்வுகள் எழுத வைத்து தேர்வாக்க வேண்டும். ஒரே மாணவருக்கு பலமுறை தேர்வுகளை நடத்தி திருத்திக்கொண்டே இருந்தால் எவ்வளவு கொடுமையாக இருக்கும். ஒரு கட்டத்தில் இவர் எப்படியாவது தேர்வானால் போதும் என நீங்கள் பிரார்த்திக்கத் தொடங்கிவிடுவீர்கள். யோசித்துப் பாருங்கள் ஒவ்வொரு ஆண்டும் அறுநூறு மாணவர்களில் இப்படி கணிசமானோரை நீங்கள் கவனித்துக்கொண்டும், அவர்களில் பத்து சதவீதத்தினரைத் துரத்திக்கொண்டும் இருந்தால் உங்களால் வேறு எதில் தான் கவனம் செலுத்த முடியும்? முன்பு இதை தனிப்பட்ட அக்கறையில் செய்தார்கள், ஆனால் இன்றோ கல்வி முழுமையான வணிகம் என்பதால் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் இதைச்செய்கிறார்கள். முக்கியமாக, இன்று உங்கள் மீது வந்து குவியும் பல்வேறு வேலைகளில் இதுவும் ஒன்றாகையால் இது வதையாகி விடுகிறது. இவ்விசயத்தில் கல்லூரி ஆசிரியர்களை விட பள்ளி ஆசிரியர்கள் நிலை இன்னும் மோசமானது என அறிவேன். அவர்கள் இரவெல்லாம் கணினியில் அமர்ந்து எதாவது ஒரு மதிப்பெண்ணை உள்ளிட்டபடி இருக்கிறார்கள். கணினிமயமாக்கல் முன்னேற்றத்தை விட வேலைத்திணிப்பையே அதிகமாக்கியிருக்கிறது.
அடுத்து, நீங்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியதை ஆவணப்படுத்தி தனியாக தொகுத்து வைக்கவேண்டும்.
நீங்கள் உங்கள் வகுப்பில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி அவற்றையும் புகைப்படங்கள் எடுத்து நிகழ்ச்சி சுருக்கம் எழுதித் தொகுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

நீங்கள் உங்கள் வகுப்பில் மாணவர்களுடன் ஆர்வமூட்டும் வகையிலோ வித்தியாசமாகவோ எதையாவது பாடமெடுக்கும்போது செய்தால் அதையும் மேற்சொன்ன வகையில் ஆவணப்படுத்த வேண்டும்.
ஐந்தில் இருந்து ஏழெட்டு முனைவர் பட்ட மாணவர்களுக்கு நெறியாளராக இருந்து அவர்களுடைய பல பிரச்சினைகளைப் பகிர்ந்துகொண்டு ஆலோசனை வழங்கி அவர்களைக் கண்காணித்து எப்படியாவது ஆய்வறிக்கையை மூன்றாண்டுகளுக்குள் முடிக்கச்செய்யவேண்டும். அவர்களை மாதாமாதம் சந்தித்து அதையும் ஆவணப்படுத்த வேண்டும். வருடத்திற்கு சிலமுறைகள் அவர்களுடைய முன்னேற்றத்தை ஆய்வுசெய்யும் கூட்டங்களை நடத்துவதுடன் பிற நெறியாளர்களின் மாணவர்களுக்கான ஆய்வு ஆலோசனைக் குழுக்களிலும் பங்கேற்க வேண்டும்.

மாணவர்கள் கோடை விடுமுறையின்போது வெளியே நிறுவனங்களுக்கு சென்று பணிக்கல்வி பெறுவது இன்று தேசிய கல்விக்கொள்கைக்குப்பிறகு கட்டாயம். ஆனால் மாணவர்களில் ஒருபகுதியினர் இதில் முறைகேடுகளை (போலி சான்றிதழ்களை சமர்ப்பித்தல்) செய்வதால் எல்லா மாணவர்களையும் ஆவணரீதியாக பின்தொடரவேண்டும். தொடர்ந்து ஆவணங்களை சமர்பிக்கச்சொல்லி அதை கடைசியில் ஒரு ஆய்வறிக்கையாக சமர்ப்பிக்க சொல்லவேண்டும். [அதாவது இன்று மாணவர்கள் கழிப்பறைக்கு செல்வதைத்தவிர அனைத்தையும் ஆவணப்படுத்தி தாம் ‘கற்கிறோம், கற்கிறோம்’ என்பதை சமூகத்துக்கு நிரூபித்தாகவேண்டும் கட்டாயத்தில் இருப்பதால் ஆசிரியர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.]

நீங்கள் சொந்தமாக ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கி அதைத் தேர்வுப்பாடமாக மாணவர்கள் எடுப்பதற்கான ஏற்பாடுகளைச்செய்ய வேண்டும் (கபெட்டேரியா சிஸ்டம்). அப்பாடத்தை மாணவர்கள் எடுக்காவிடில் உங்களுக்கு வேலை உத்தரவாதம் இல்லை.
நீங்கள் உங்கள் பாடத்திட்டத்திற்கான வகுப்புத்திட்டங்களை விரிவாக எழுதி, அவை பாடத்தின் இலக்கு, மாணவரின் கல்வி இலக்கு, நிறுவனத்தின் இலக்குடன் ஒத்துப்போவதாக புள்ளிகளைக் கொண்டு நிரூபித்துக்காட்ட வேண்டும் (விளைவு-சார் கல்வி எனும் OBE). நீங்கள் கேள்வித்தாளை உருவாக்கும் போதும், அதைத் திருத்துவதற்கான வழிகாட்டி ஆவணத்தை உருவாக்கும் போது இந்த சிஸ்டத்துடன் அது ஒத்துப்போவதாக நிச்சயமாகக் காட்டவேண்டும். இல்லாவிட்டால் வேலை போய்விடும். இதை சாதாரணமானவர்கள் சுலபத்தில் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் மேற்சொன்ன வகுப்புத்திட்டத்தை ஒவ்வொரு வகுப்பிலும் துல்லியமாகப் பின்பற்றுகிறீர்களா என்பது பலவகைகளில் இன்று கண்காணிக்க முடியும். ராணுவ ஒழுங்குடன் செயல்படவேண்டும். கொஞ்சம் பிறழ்ந்தால் கூட அது பின்னர் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

உங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களிடம் கருத்துக்களைப் பெற்று பின்னாய்வை நிர்வாகம் செய்யும். உங்களுக்கான பின்னாய்வுப் புள்ளிகள் குறைவாக இருந்தால் அது பல சிக்கல்களைக் கொண்டுவரும், நீங்கள் வேலையை இழக்க நேரிடும் என்பதால் நீங்கள் மாணவர்களின் மனம்கோணாமல் நடந்துகொள்ள வேண்டும். எப்போதுமே ஒருவித கவலையில் இருக்கவேண்டும்.

நீங்கள் தினம் தினம் உங்கள் ஆய்வுப்புலத்துக்கோ பணிக்கோ தொடர்பில்லாத நிர்வாகரீதியான எதாவது ஒரு சந்திப்பில் கலந்துகொண்டு அதையும் ஆவணப்படுத்தவேண்டும்.
இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு அளிக்கப்படும் ஆய்வுத்திட்டப் பணிகளை நெறியாள்கை செய்ய வேண்டும்.

நூற்றுக்கணக்கான மாணவர்கள் எழுதும் பல்லாயிரம் தேர்வுத்தாள்களைத் திருத்தி, அந்த மதிப்பெண்களை இணையம் வழியாகப் பதிவுசெய்து, அந்த மதிப்பெண்களை ஆய்வுசெய்து, மதிப்பெண்கள் அதிகரித்தால் அது ஏன் நடக்கிறது என்றும் (நீங்கள் சரியாகத் திருத்தவில்லை), குறைந்தால் அது எப்படி நடக்க இயலும் என்றும் (நீங்கள் சரியாக பாடமெடுக்கவில்லை) விளக்கி ஆவணப்படுத்தவேண்டும்.

நீங்கள் வகுப்புக்கு ஒழுங்காக வராத மாணவர்களை அழைத்துவைத்து ஆலோசனைவழங்கி, பாடமெடுத்து, அப்பாடத்தில் இருந்து இடுபணிகளை அளித்து, அவர்களுக்கான வருகைப் பதிவை அளிக்க வேண்டும்.

வகுப்பில் மாணவர்கள் சரியாக மதிப்பெண் ஈட்டாவிடில் அவர்களுக்கு மறுவகுப்புகளை மாலையில் நடத்தி மதிப்பெண்களை அதிகரிக்க உதவவேண்டும்.

நீங்கள் ஊடகங்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதியோ நிகழ்ச்சிகளில் பங்கேற்றோ கவனம் பெற்று நிறுவனத்தையும் நல்ல வெளிச்சத்தில் வைத்திருக்கவேண்டும்.
நீங்கள் உங்கள் வேலை நேரத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் ஆவணப்படுத்தி உங்கள் வேலையானது நிறுவனத்துக்கு பயனுள்ளதாக இருந்தது என நிரூபிக்க வேண்டும்.

நீங்கள் வாட்ஸாப், மெயில் போன்ற செயலிகள் வழியாக நள்ளிரவு தூங்கச்செல்லும்வரையில் மாணவர்களுடனும் நிர்வாகத்துடனும் தொடர்பில் இருந்தாக வேண்டும். நீங்கள் வேலை மனநிலையில் இருந்து துண்டித்துக் கொள்ளவே கூடாது.

நீங்கள் இன்று உயர்கல்வி நிறுவனங்களில் (ஸ்கோபஸ், வெப் ஆப் சயின்ஸ் போன்ற நிறுவனங்களால்) தரவரிசைப்படுத்தப்பட்ட ஆய்விதழ்களில் கட்டாயமாக கட்டுரைகளைப் பதிப்பிக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையையும் அனுப்பி மூன்று நான்கு மாதங்கள் காத்திருந்து பதிலைப் பெற்று மீண்டும் வேறு இதழ்களுக்கு அனுப்பி தாவு தீர்ந்துவிடும். வருடம் முடியுமுன்பு இதழில் கட்டுரை வராவிடில் வேலை போய்விடும். ஆகையால் சில கல்லூரிப் பேராசிரியர்கள் கூட்டுசேர்ந்து தரவரிசையில் வரும் இதழ்களுக்கு லட்சங்களில் பணம் கொடுத்து கட்டுரையைப் பதிப்பிக்கிறார்கள். இது ஒரு தனி ஊழலாகப் போய்க்கொண்டிருக்கிறது.

நீங்கள் வருடத்திற்கு சில கருத்தரங்குகளிலாவது ஆய்வுக்கட்டுரைகளை வாசிக்க வேண்டும்.

அடுத்து, நீங்கள் எதாவது ஒரு ஆய்வு நல்கையை அரசிடம் இருந்தோ வேறு நிதியளிக்கும் நிறுவனத்திடம் இருந்தோ பெற்று ஆய்வுப் பணி ஒன்றை செய்ய வேண்டும்.

ஒரு ஆய்வாளராக நீங்கள் எதாவது ஒன்றை அடிக்கடி கண்டுபிடித்து அதற்கான காப்புரிமத்தைப் பெறவேண்டும்.

அடுத்து, நீங்கள் தொழில் நிறுவனங்கள், வெளிக் கல்லூரிகள், பள்ளிகளுக்கு சென்று எதாவது ஒரு சேவையை வழங்கி பணம் ஈட்டி, அப்பணத்தில் ஒரு பகுதியை உங்கள் கல்வி நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டும் (கன்சல்டன்ஸி). ஆண்டுக்கு சில லட்சங்களையாவது ஈட்டிக்கொடுக்காவிடில் வேலைக்கு நெருக்கடி வரும். இதை இன்று அனேகமாக எல்லா இடங்களிலும் கட்டாயப்படுத்துகிறார்கள்.

இவை போக நீங்கள் தினமும் 3-4 மணிநேரங்கள் வகுப்புகளையும் நடத்தவேண்டும். இன்று நீங்கள் தனியார், அரசு உயர்கல்வி நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பித்தால் மேற்சொன்ன வகைமைகளில் உங்கள் கடந்த மூன்றாண்டுப் பங்களிப்பு என்னவென்று தகவல்களை அளிக்கவேண்டும். நான் நல்ல ஆசிரியர், ஆய்வு செய்கிறேன் என்றால் மட்டும் வேலைகொடுக்க மாட்டார்கள். நீங்கள் ஒரு ஆவணக்காப்பகத்தையே உருவாக்கிக் காட்டினால் தான் வேலைகிடைக்கும்.

இவ்வளவு சிக்கல்களும் இன்று தோன்றுவதற்கான காரணம் உயர்கல்வி முழுக்க தனியார்மயமாகி வருவதுதான். தொழிற்சாலைகளில் பின்பற்றும் உற்பத்தி அளவை அமைப்பைக்கொண்டு கல்விப்பணியை மதிப்பிடும்போது நிர்வாகத்தினருக்கு இவர்கள் வேலையே செய்யவில்லை என்று தோன்றுவது சுலபம். கல்வியளிப்பது அரூபமான, செயல்சார்ந்த பணி. அதை நீங்கள் பருப்பொருளாக உருவாக்கிக்காட்ட முடியாது. ஒரு மாணவரின் வாழ்வில் நீங்கள் ஏற்படுத்தும் தாக்கமானது தகவல்பூர்வமானது அல்ல, அது உணர்வுசார்ந்தது, திறன்சார்ந்தது. அதைத் துல்லியமாக நிரூபிக்க இயலாது. மேலும் ஆசிரியரின் பணி தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருப்பதாகையால் அதை லௌகீகமாக மதிப்பிடுவது கடினம். வகுப்பில் மட்டுமல்ல வகுப்புக்கு வெளியில் மாணவருடன் உரையாடுவதும் கல்விதான். ஒரு ஐ.டி பணியாளர் தன் வேலைச் சாதனையைக் காட்டுவதைப் போல ஒரு ஆசிரியரால் துல்லியமாக வர்ணிக்க முடியாது. மொழியில் தகவல்பூர்வமாக நிரூபித்துக் காட்ட முடியாதது வேலையே அல்ல என்று இன்றைய நிர்வாகங்கள் கருதுகின்றன. இது அவர்களை ஆசிரியர்களின் பணிகளை இன்னும் இன்னும் அதிகரிக்க வைக்கின்றன.

எவ்வளவு தான் ஆசிரியர்கள் பணிசெய்தாலும் அவர்கள் ‘வெட்டியாக’ இருக்கிறார்கள் என்றே சமூகமும் தனியார் நிர்வாகமும் கருதி தொடர்ந்து விமர்சித்தும் ஒடுக்கியும் வருகிறார்கள். ஆனால் நிஜத்தில் பத்து பேர்கள் செய்யவேண்டிய பணிகளை ஒரே நபர் செய்வதே இன்றைய ஆசிரியப்பணி.

கல்வி புகட்டும் திறன், ஆய்வுத்திறன், அறிவுத்திறனை விட இன்று கல்லூரி ஆசிரியர்களிடம் அதிகமாக எதிர்பார்க்கப்படுவது தர உள்திப்பீட்டு (IQAC) ஆவணங்களை உருவாக்கும் திறன். யு.ஜி.ஸி மட்டும் தனியார் தர மதிப்பீட்டு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் விதத்தில் ஆவணங்களையும் தரவுகளையும் உற்பத்தி செய்து அவற்றை நெறியாள்கை செய்வதே இத்திறன். இது அடிப்படையில் விளம்பரம் மற்றும் பிம்பக் கட்டமைப்புப் பணி. இதில் அனுபவம்கொண்ட ஆசிரியர்களுக்கு கல்லூரிகளில் நேர்முகத்தின் போது முன்னுரிமை அளிக்கிறார்கள், அவர்களுக்கு பதவியுர்வு கிடைக்கவும் வாய்ப்பதிகம். எதிர்காலத்தில் இதை முதுகலைப் பாடத்திலேயே கற்றுக்கொடுத்தாலும் ஆச்சரியப்பட மாட்டேன். ஆனால் இதற்கும் உயர்கல்விக்கும் அறிவுக்கும் என்ன சம்மந்தம் என்றால் ஒன்றுமேயில்லை. அதேநேரம் மாணவர்களிடம் புறவயமாக கருத்துக்கேட்டோ அவர்களுடைய அறிவுத்திறனை மதிப்பிட்டோ உள்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையிலோ யு.ஜி.ஸி ஒரு உயர்கல்வி நிறுவனத்தின் தரத்தை மதிப்பிடுவதில்லை. யு.ஜி.ஸியின் NAAC குழுவிடம் எந்த நிறுவனம் தன்னிடம் மிக அதிகமாக ஆவணங்களை சமர்ப்பிக்கிறதோ அதுவே தலைசிறந்த உயர்கல்வி நிறுவனம் என்று சொல்லி ஐந்து நட்சத்திரங்களை கொடுத்துவிடும். அந்த ஆவணங்களைக் கொடுக்காவிடில் அந்நிறுவனத்துக்கு இரண்டு நட்சத்திரங்களைக் கொடுக்கும். அங்கு போய் அங்கு என்ன நடக்கிறது, பாடம் எப்படிக் கற்பிக்கப்படுகிறது, மாணவர்களின் தரம் என்ன என்பதைப் பற்றி எந்த ஆய்வும் செய்யாது, செய்தாலும் அதைக் கணக்கில் எடுக்காது. தர மதிப்பீடானது ஆவணங்களை மட்டும் சார்ந்திருக்கும் போது ஊழல் நடக்க வாய்ப்பே அதிகம்.

மேலைநாடுகளில், வளர்ந்த நாடுகளில் என்ன நடக்கிறது?
அங்கு பிரசுரி அல்லது அழிந்துபோ (publish or perish) எனும் நெருக்கடி உயர்கல்வியாளர்களுக்கு 70களிலேயே இருந்ததாகவும், அதனால் ஆய்வின் தரம் மோசமாகிவிட்டதாகவும் சொல்வார்கள். இங்கு ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு அந்தப் புயல் தாக்குகிறது. ஆனால் அவர்களுக்கும் நமக்கும் ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது. வெளிநாட்டுப் பல்கலைகளுக்கு தெற்காசிய மாணவர்களிடம் நல்ல மவுசு உள்ளதால் இங்கிருந்து கணிசமான கட்டணம் முதலீடாக அங்கு போகிறது. அங்கு தனியார் நிதியும் உயர்கல்விக்கு அதிகமாக கிடைக்கிறது. அங்கு முதுகலை + முனைவர் ஆய்வு மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் அதிகமான நேரத்தை கல்வி, ஆய்வில் செலுத்த முடிகிறது. இங்கு பெரும்பாலான நிதி உள்ளூர் மாணவர்களின் கட்டணத்தில் இருந்து வருகிறது. 80% மேல் இளங்கலை மாணவர்களாகையால் ஆய்வுசார்ந்த கல்வியில் உயர்கல்வியாளர்களால் கவனம் செலுத்த முடிவதில்லை. அதிகமும் எளிமைப்படுத்தி புகட்டுவதே கல்வியாக உள்ளது. தனியார் நிறுவனங்களும் இங்கு கல்விக்காக நிதியளிப்பதில்லை. அதே நேரம் இன்னொரு பக்கம் ஆய்வு, அறிவார்ந்த வளர்ச்சி, திறன் மேம்படுத்தல் என்று சொல்லி கல்லா கட்ட வேண்டியுள்ளது. தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் உள்ள மிகப்பெரிய நெருக்கடி அவர்களுடைய வாடிக்கையாளர்களான மாணவர்கள் வடிகட்டப்பட்ட சிறந்த மாணவர் திரள் (கிரீமி லேயர்) அல்லர், சராசரியானவர்கள். ஆனால் சராசரிகளையும், குறைவான மதிப்பெண் பெற்றவர்களையும் மறுக்காமல் பிடித்து இடமளித்து, அவர்களுக்கு ஆய்வு, உயர்தரக் கல்வி எனும் பெயரில் அடர்த்தியான, சிக்கலான அடிப்படைக் கல்வியை, ஆய்வறிவை வழங்கவும் வேண்டும், அவர்கள் படிக்கவும் ஆய்வு செய்யவும் ஆர்வம் காட்டாவிடினும் அவர்களைத் தோற்க வைக்கவும் கூடாது. தரத்தை முன்னிலைப்படுத்தினால் லாபம் கிடைக்காது. ஐ.ஐ.டியும் பிரின்ஸ்டன், கொலொம்பியா பல்கலைக்கழகங்களும் பல நூறு மடங்கு அதிக நிதியுடனும் வசதிகளுடன் செய்யும் காரியத்தை மிகக்குறைந்த நிதியுடனும் வசதிகளுடனும் இந்தியாவில் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் செய்யும்படி நெருக்கடி உள்ளது. ஒரு அரசு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவர் நடத்துவதை விட இரட்டிப்பு வகுப்புகளை தனியாரில் நடத்தவேண்டும், பத்து மடங்கு அதிகப் பணிகளை செய்யவேண்டும், ஆய்வுப் பணிகளுக்கு அரசுப் பேராசிரியர்களுக்குக் கிடைக்கும் நிதியில் நூற்றில் ஒரு மடங்குதான் தனியார் பேராசிரியர்களுக்குக் கிடைக்கும், ஆனால் செயல்பாட்டிலும் பிரசுரத்திலும் மட்டும் அவர்கள் அரசுப் பேராசிரியர்களையும் ஹார்வர்டு பேராசிரியர்களையும் ஒத்திருக்கவேண்டும் எனும் எதிர்பார்ப்பு உள்ளது.
அடுத்து மாணவர்களைப் பற்றி சொல்லவேண்டும்.

அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் படிக்க சென்ற மாணவர் ஒருவர் அங்கு ஒருநாளைக்கு 2-3 மணிநேரங்களுக்கு மேல் வகுப்புகள் இராது, ஒரு பேராசிரியர் மாதத்திற்கு எழெட்டு வகுப்புகளே எடுப்பார்கள் என்றார். மாணவர்கள் பகலில் வேலை பார்த்துக்கொண்டு, மிச்ச நேரத்தில் வகுப்புக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு கல்லூரிக்கு மாலையில் வந்து பயில்கிறார்கள். வகுப்புக்கு வருமுன்பு இவ்வளவு கட்டுரைகளையும், அத்தியாயங்களையும் வாசித்துவிட்டே வரவேண்டும் எனப் பேராசிரியர்கள் வலியுறுத்தினால் மாணவர்கள் செய்கிறார்கள். இங்கோ அதையே ஒரு புகாராக போய்ச் சொல்வார்கள். “எங்களை அதிகமாகப் படிக்கவைக்கிறார்கள், எங்களால் வாசிக்க முடியவில்லை” எனும் புகாரை நீங்கள் ஹார்வர்ட்டில் போய்ச் சொல்லமுடியாது. இந்தியாவில் மாணவர்கள் அப்படிச் சொன்னால் அப்படிக் கோரிய ஆசிரியரைக் கூப்பிட்டுத் திட்டுவார்கள் என்று தனியார் கல்லூரியொன்றில் பணியாற்றும் என் நண்பர் ஒருவர் சொன்னார். ஏனென்றால் இங்கு குறைந்தது 8 மணிநேர வகுப்புகள், காலையில் இருந்து மாலை வரை மாணவர்களை வகுப்பிலேயே வைத்திருக்கவேண்டும் எனப் பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள். (வெளிநாடுகளில் தம் பிள்ளைகள் படிக்கும்போது இதைப் பெற்றோர்கள் குறைவான வகுப்புகளைக் குறைசொல்ல மாட்டார்கள். வெள்ளைக்காரர்கள அல்லவா!) அடுத்து, வகுப்பு நேரத்திற்கு வெளியிலும் எதாவது ஒரு நிகழ்வு - ஆட்டம், பாட்டம், வெவ்வேறு பயிற்சிகள் - என அவர்கள் ஈடுபட்டபடி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதனால் மாணவர்களுக்கு வாசிக்கவோ சிந்திக்கவோ நேரம் இருப்பதில்லை. அப்படி நேரம் வழங்கப்பட்டால் மாணவர்களுக்கு அந்நேரத்தை செலவிடவும் தெரிவதில்லை. சிறுவயதில் இருந்தே கோழிப்பண்ணை கோழிகளைப் போல வளர்த்துவிடுகிறோம். இந்தியா முழுக்க மாணவர்கள் நேரடியாக வாசித்து சொந்தமாக யோசிக்கும்படி நம்மால் கேட்க முடியாததும், கரண்டியால் கல்வியை எடுத்தூட்ட வேண்டிய நிலை இருப்பதும் இதனால் தான். வெளிநாட்டில் பயிலும் மாணவர்களுக்கு கிடைக்கும் ஆய்வு சாத்தியங்கள் இங்கு இல்லாதது இந்தச் சூழலால் தான். இங்கு தரம் அல்ல, அளவும் எண்ணிக்கையும்தாம் முக்கியம். இங்கு அதிகமான நேரம் பாடம் கேட்கவேண்டும், படிக்கக் கூடாது, இங்கு அதிகமான விசயங்களை மேலோட்டமாக கற்றுக்கொடுக்க வேண்டும், எதாவது ஒன்றில் ஆழமாகப் பயிற்றுவிக்கக் கூடாது. கலந்து குழைத்தடிப்பது தான் நம் பாணி. வெளிநாட்டில் போய்ப் படிக்கும்போது வரும் பொறுப்புணர்வு இந்தியாவில் இருக்கும்போது வருவதில்லை. இங்கு தனியாரில் தாம் அதிகப் பணம் செலுத்திப் படிப்பதாலே தமக்கு அதிக மதிப்பெண்கள் சுலபத்தில் அளிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கும் ஒருவித சுரணையின்மை, முரட்டுத்தனம் மாணவர்களிடம் உள்ளது. ஆனால் அமெரிக்காவில் போய் அதைக் கேட்க மாட்டார்கள். வெள்ளைத்தோலிடம் உள்ள பயம்.

இன்னொரு சிக்கல் - இது உலகம் முழுக்க உள்ளதுதான் - மாணவர்களின் மனநிலை. குப்பையான உணவுகளை அதிகமாகத் தின்று, சமூகமாக்கல், போதைப்பழக்கம், அதிக நேர வேலை என்று அவர்கள் மிகவும் உடல், மனநலம் சீரழிந்து போயிருக்கிறார்கள். தினமும் சராசரியாக 3-4 மணிநேரங்களே தூங்குகிறார்கள். விதவிதமான வியாதிகள் இல்லாத மாணவர்களையே நான் இன்று காண்பதில்லை. அவர்களால் கல்வியில் கவனம் செலுத்த முடிவதில்லை. மிகச்சீக்கிரமாக உணர்வுவயப்படுவது, சின்னச்சின்ன விசயங்களுக்கு புண்படுவது, கோபப்படுவது, மன அழுத்தம் கொள்வது, பகல் நேரத்திலேயே உறங்கிப் போவது, கவனம் சிதறிக்கொண்டே இருப்பது என இன்றைய மாணவர்களின் பிரச்சினைகள் வினோதமானவை. இவர்களைக் கையாள்வதற்கு ஒரு உளவியல் ஆலோசகரின் மதிநுட்பமும் காவலரின் திரளை மிரட்டிக் கட்டுப்படுத்தும் திறனும் தேவைப்படுகிறது. இன்னொரு பக்கம், கடுமையானத் தாழ்வுணர்வும், இணையத்தில் நுனிப்புல் மேய்வதை வைத்து தனக்கு எல்லாம் தெரியும் என நம்புகிற அகந்தையும் அதிகமாகிவருகிறது. அதாவது இரண்டு எதிர்நிலைகளிலான சிந்தனைகள் அவர்களுடன் இருக்கும் - “எனக்கு ஒன்றுமே தெரியாது, வராது, யாருக்கும் என்னைப் பிடிக்காது, ஆனால் எனக்கு எல்லாமே தெரியும், வரும், உலகமே என் காலின் கீழ்தான்.” இவர்களிடம் பேசி சரிகட்டி அமைதிப்படுத்தி உங்கள் வழிக்கு அழைத்துப் போகும் போது ஒரு ஆசிரியராக நீங்களும் மனதளவில் நிலைகுலைந்து போவீர்கள். இன்று கல்லூரி ஆசிரியர்கள் அடிக்கடிப் பொதுவெளியில் சொல்லிப் புலம்புவது மாணவர்களால் தமக்கு ஏற்படும் மனநல பாதிப்புகளைக் குறித்தே.

பள்ளி ஆசிரியர்களின் நிலைமை இன்னும் பரிதாபமானது. வகுப்பில் மாணவர்களின் ஒழுங்கீனத்தில் இருந்து வன்முறை, வறுமை, ஹார்மோன் கோளாறு எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்று குடும்பமோ தனிப்பட்ட நாட்டங்களோ சாத்தியமில்லை எனும்படியாக வேலை அவர்களுடைய மொத்த வாழ்க்கையையுமே ஆசிரியப்பணி ஆக்கிரமித்துக்கொள்கிறது. இதை நாம் கொண்டாடக்கூடாது, இதை நாம் விமர்சித்து மாற்ற முயலவேண்டும். வேறெந்த தொழிலிலும் (காவல்துறையைத் தவிர) ஒருவர் தன் மனநிலையை, தனிப்பட்ட நேரத்தை, குடும்பத்துக்கான நேரத்தை ஒப்புக்கொடுக்க வேண்டியிராது என நினைக்கிறேன்.
அண்மைக் காலங்களில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஊதியம் அதிகரித்துள்ளது என்பது உண்மைதான், ஆனால் எந்தளவுக்கு என்றால் இன்று ஐ.டியில் அல்லாத ஒருவர் படித்து முடித்து இரண்டாண்டுகளில் ஈட்டும் சம்பளம் அளவுக்குத்தான். முன்பு அம்மாணவர்கள் பரிகசிக்கும் அளவுக்கு ஆசிரியரின் சம்பளம் இருந்தது, இன்று அது மாறியுள்ளது, ஆனால் வேலை பத்து மடங்கு அதிகரித்துவிட்டது. ஒரு ஒப்பீடு சொல்கிறேன் - அமெரிக்காவில் பயின்ற மாணவர்கள் ஒருவர் என்னிடம் விமர்சகர் ஜூடித் பட்லர் தனக்கு வகுப்பெடுப்பதாக சொன்னார். அவருக்கு எவ்வளவு மாதச்சம்பளம் இருக்கும் என்று கேட்டேன். இந்திய மதிப்பில் இரண்டு கோடிகளாவது வரும். வேலை நேரம்? ஒரு மாதத்திற்கு நான்கைந்து மணிநேரங்கள். இதே ஜூடித் பட்லர் இந்தியாவில் கறுப்புத்தோலுடன் இருந்திருந்தால் அரை லட்சம் வாங்க மாதம் உளுந்தூர்பேட்டையில் 160 மணிநேரங்களுக்கு மேல் வேலைபார்த்திருப்பார். அவரது சிந்தனைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அமெரிக்காவில் வெளியிராவிடில் அவரை ஒரிஜினல் சிந்தனையாளராக கருதவோ மதிக்கவோ கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கவோ செய்திருக்க மாட்டார்கள். அத்தோடு, வேலையே செய்யாமல் ஒபி அடிக்கிறாய் என்று ஊரே திட்டியிருக்கும். நம் ஊரில் ஜூடித் பட்லர் அளவுக்கு தரத்தை எதிர்பார்க்கிறோம், ஆனால் ஊதியமோ சாதாரண பட்லர் அளவுக்குத்தான்.

வேலை செய்வது உண்மையில் மகிழ்ச்சியளிப்பதே, ஆனால் பொருளற்ற வேலை, சம்மந்தமில்லாத வேலை, மேலோட்டமான எந்திரத்தனமான வேலை, மனிதனின் ஆன்மாவைக் கொன்றுவிடக் கூடியது. பல ஆசிரியர்கள் இன்று “இண்டஸ்டிரியே மேல், அங்கு எனக்கு அதிக சுதந்திரமும் நேரமும், வளர்ச்சியும் இருந்தது” என வெளிப்படையாகக் கூறுகிறார்கள். தொழில்துறையில் இல்லாத அளவுக்கு பாதுகாப்பின்மையும், தாழ்வுணர்வும் பதற்றமும் ஆசிரியத்துறையில் உள்ளது. யாரும் மதிப்பதில்லை, யாருக்கும் நம்மைத் தேவையில்லை எனும் உணர்வு கணிசமான ஆசிரியர்களின் மனத்தில் உள்ளது. இன்றைய ஆசிரியர்கள் நடமாடும் கைதிகள். அவர்களை நீங்கள் வாழ்த்தும்போது உள்ளுக்குள் தம்மைக்குறித்து கசந்தபடித்தான் அதை ஏற்றுக்கொள்வார்கள். எங்கள் ஊரில் முந்திரி ஏற்றுமதி தொழிற்சாலையை அண்டி பேக்டரி என்று சொல்வார்கள். முந்திரிக் கொட்டையை வறுத்து அதன் ஓட்டை உடைத்து பதமாக எடுக்க வேண்டும். நாள் முழுக்க உடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆசிரியப் பணி இன்று ஒரு நவீன அண்டி பேக்டரி ஆகிவிட்டது. இதை ஏன் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் எனும் தத்துவஞானியின் பிறந்தாளன்று நினைவு கூர்ந்து அவரை அவமதிக்கிறோம் என்று எனக்குப் புரியவில்லை.

மேலும் படிக்க:
https://voicesofacademia.com/2024/04/05/its-not-your-fault-that-academic-life-is-getting-harder-by-glen-ohara/
  • கருத்துக்கள உறவுகள்

இக் கட்டுரையை வாசிக்கவே தலை கிறுகிறுக்கின்றது . ...... ஆசிரியராக வாழ்பவர்களுக்கு எப்படி இருக்கும் . ........செம கடுப்பாயிருக்கு .......!  😴

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.