Jump to content

சீனாவின் பொருளாதார வழித்தட திட்டத்திற்கு குறுக்கே நிற்கும் மியான்மர் உள்நாட்டுப் போர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
சீன-மியான்மர் எல்லை: போரும் பொருளாதாரமும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், லாரா பிக்கர்
  • பதவி, சீன செய்தியாளர்
  • 21 செப்டெம்பர் 2024

"ஒரே கிராமம், இரு நாடுகள்"

இப்படித்தான் சீனாவின் தென்மேற்கு எல்லையில் உள்ள யின்ஜிங் கிராமம் அறியப்பட்டது. மியான்மருடனான எல்லை "மூங்கில் வேலிகள், சாக்கடைகள் மற்றும் மண் மேடுகள்" கொண்டது என்று பழைய சுற்றுலா பலகை ஒன்று குறிப்பிடுகிறது. பெய்ஜிங் தனது அண்டை நாட்டுடன் கட்டமைக்க முயன்ற எளிதான பொருளாதார உறவின் அடையாளம் இது.

ஆனால் இப்போது, பிபிசி பார்வையிட்ட எல்லை யுனான் மாகாணத்தின் ருய்லி மாவட்டத்தில் உயர்ந்த உலோக வேலியால் குறிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் முள்கம்பிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இந்த வேலி நெல் வயல்களை ஊடுருவி, ஒருகாலத்தில் இணைந்திருந்த தெருக்களைப் பிரிக்கிறது.

சீனாவின் கடுமையான பெருந்தொற்று ஊரடங்கு முதலில் இந்தப் பிரிவினையைக் கட்டாயமாக்கியது. ஆனால் 2021இல் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பால் தூண்டப்பட்ட மியான்மரின் தீர்க்க முடியாத உள்நாட்டுப் போரால் இது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராணுவ ஆட்சி இப்போது நாட்டின் பெரும் பகுதிகளில், குறிப்பாக சீன எல்லையோரமாக உள்ள ஷான் மாகாணத்தில் கட்டுப்பாட்டுக்காக போராடி வருகிறது. இங்குதான் அது தனது மிகப்பெரிய இழப்புகளில் சிலவற்றைச் சந்தித்துள்ளது.

சீன-மியான்மர் எல்லை

பட மூலாதாரம்,XIQING WANG/BBC

தனது எல்லைக்கு அருகே, ஏறக்குறைய 2,000 கி.மீ. நீளமுள்ள எல்லைப் பகுதியில் இருக்கும் இந்த நெருக்கடி, சீனாவுக்கு பெரும் சவாலாக மாறி வருகிறது. மியான்மரில் ஒரு முக்கியமான வர்த்தக வழித்தடத்திற்காக லட்சக்கணக்கான டாலர்களை சீனா முதலீடு செய்துள்ளது.

இந்த மூலோபாய திட்டம் சீனாவின் நிலம் சூழ்ந்த தென்மேற்குப் பகுதியை மியான்மர் வழியாக இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும் இலக்கை கொண்டது. ஆனால் இந்த வழித்தடம் இப்போது மியான்மர் கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையிலான போர்க்களமாக மாறியுள்ளது.

பெய்ஜிங்கிற்கு இரு தரப்பினர் மீதும் செல்வாக்கு உள்ளது, ஆனால் ஜனவரியில் சீனா ஏற்படுத்திய போர் நிறுத்தம் சிதைந்துவிட்டது. இப்போது எல்லையோர ராணுவப் பயிற்சிகள் மற்றும் கடுமையான எச்சரிக்கைகள் என சீனா இந்த விவகாரத்தை அணுகி வருகிறது.

சமீபத்தில் மியான்மரின் தலைநகர் நேபிடாவிற்கு வருகை தந்த வெளியுறவு அமைச்சர் வாங் யி, நாட்டின் ஆட்சியாளர் மின் ஆங் லைங்கிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 

சிக்கலான பின்னணி

சீன-மியான்மர் எல்லை: போரும் பொருளாதாரமும்

வறுமையில் வாடும் ஷான் மாகாணத்துக்கு மோதல்கள் புதிதல்ல. மியான்மரின் மிகப் பெரிய மாநிலமான இது அபின் மற்றும் மெத்தாம்பெட்டமின் உற்பத்தியில் உலகின் பெரும் மூலமாக உள்ளது. மேலும் மத்திய ஆட்சிக்கு நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் உள்ளூர் இனக்குழுக்களின் ராணுவங்களுக்கான இருப்பிடமாகவும் உள்ளது.

ஆனால் சீன முதலீட்டால் உருவாக்கப்பட்ட பொருளாதார மண்டலங்கள் உள்நாட்டுப் போர் தொடங்கும் வரை இயங்கி வந்தன.

இப்போது ருய்லியில் ஒரு ஒலிபெருக்கி, வேலிக்கு மிக அருகில் செல்ல வேண்டாம் என்று மக்களை எச்சரிக்கிறது. ஆனால் அதுவொரு சீன சுற்றுலாப் பயணியை நுழைவாயிலின் கம்பிகளுக்கு இடையே கையை நுழைத்து செல்ஃபி எடுப்பதைத் தடுக்கவில்லை.

"தாத்தா, இங்கே பாருங்கள்!" என்று டிஸ்னி டி-ஷர்ட் அணிந்த இரண்டு சிறுமிகள் கம்பிகளுக்கு இடையே கத்துகின்றனர். அவர்கள் இளஞ்சிவப்பு நிற ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம் வெறுங்காலுடன் நடந்து செல்லும் வயதான மனிதர் சற்றுகூடப் பார்க்காமல் திரும்பிச் செல்கிறார்.

 

வாழ்வாதாரம் பாதிப்பு

சீன-மியான்மர் எல்லை

பட மூலாதாரம்,XIQING WANG/BBC

படக்குறிப்பு, வாழ்க்கை எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்ற கேள்வியுடன் சீன மியான்மர் எல்லையில் வியாபாரம் நடத்தி வருகிறார் லி.

"பர்மிய மக்கள் நாய்களைப் போல வாழ்கின்றனர்," என்கிறார் லி மியான்ஷென்.

ருய்லி நகரில் எல்லை சோதனைச் சாவடிக்கு சில அடி தூரத்திலுள்ள ஒரு சிறிய சந்தையில் அவரது கடை உள்ளது. அங்கு அவர் மியான்மரின் உணவு மற்றும் பானங்களை - பால், தேநீர் போன்றவற்றை – விற்று வருகிறார்.

சுமார் 60 வயதுக்கு மேற்பட்டவராகத் தெரியும் லி, முன்பு சீனாவுடனான வர்த்தகத்தின் முக்கிய ஆதாரமான மூசேயில் (Muse) எல்லைக்கு அப்பால் சீன ஆடைகளை விற்று வந்தார். ஆனால் இப்போது தனது ஊரில் யாருக்கும் போதுமான பணம் இல்லை என்கிறார் அவர்.

மியான்மரின் ராணுவ சர்வாதிகாரம் இன்னும் அந்த நகரத்தைக் கட்டுப்படுத்துகிறது. ஷான் மாநிலத்தில் அதன் கடைசி கோட்டைகளில் இதுவும் ஒன்று. ஆனால் கிளர்ச்சிப் படைகள் மற்ற எல்லை கடவுப் பாதைகளையும், மூசேக்கு செல்லும் சாலையில் உள்ள ஒரு முக்கிய வர்த்தக மண்டலத்தையும் கைப்பற்றியுள்ளன.

இந்தச் சூழ்நிலை மக்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது என்கிறார் லி. அவர் அறிந்த சிலர், 10 யுவான் (ஏறக்குறைய ஒரு பவுண்ட் மற்றும் ஒரு டாலருக்கும் சற்று அதிகம்) சம்பாதிக்க எல்லையைக் கடந்து சென்று, பின்னர் மியான்மருக்கு திரும்புகின்றனர் என்றார்.

மியான்மருக்கு உள்ளேயும் வெளியேயுமான போக்குவரத்தை போர் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது. இப்போது பெரும்பாலான தகவல்கள் தப்பியோடியவர்களிடம் இருந்தோ அல்லது லி போன்று எல்லைகளைக் கடக்கும் வழிகளைக் கண்டறிந்தவர்களிடம் இருந்தோ வருகின்றன.

சீனாவிற்குள் நுழையத் தேவைப்படும் வேலை அனுமதிப் பத்திரங்களைப் பெற முடியாமல், லியின் குடும்பத்தினர் மண்டலேயில் சிக்கித் தவிக்கின்றனர். கிளர்ச்சிப் படைகள் மியான்மரின் இரண்டாவது பெரிய நகரத்தை நெருங்கி வருகின்றனர்.

"நான் கவலையால் இறந்து கொண்டிருப்பது போல் உணர்கிறேன்," என்கிறார் லி. "இந்தப் போர் எங்களுக்கு மிகுந்த துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இவை எல்லாம் எப்போது முடிவுக்கு வரும்?"

 

தப்பியோடியவர்களின் நிலை

சீன-மியான்மர் எல்லை: போரும் பொருளாதாரமும்

பட மூலாதாரம்,XIQING WANG/BBC

அங்கிருந்து வெளியேறியவர்களில் ஒருவர், 31 வயதான ஜின் அவுங் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் ருய்லியின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு தொழிற்பேட்டையில் பணிபுரிகிறார். அங்கு உலகெங்கிலும் அனுப்பப்படும் ஆடைகள், மின்னணு பொருட்கள் மற்றும் வாகனப் பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன.

அவரைப் போன்ற தொழிலாளர்கள், மலிவான உழைப்பைத் தேடும் சீன அரசு ஆதரவு நிறுவனங்களால் பெரும் எண்ணிக்கையில் மியான்மரில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு இங்கு கொண்டு வரப்படுகின்றனர்.

இவர்கள் மாதம் சுமார் 2,400 யுவான் ($450; £340) சம்பாதிக்கிறார்கள் என மதிப்பிடப்படுகிறது, இது அவர்களின் சீன சக ஊழியர்களின் சம்பளத்தைவிடக் குறைவாகும்.

"போரின் காரணமாக மியான்மரில் எங்களுக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை," என்கிறார் ஜின் அவுங்.

"அரிசி, சமையல் எண்ணெய் என எல்லாம் விலை உயர்ந்துவிட்டது. எங்கும் தீவிர போர் நடந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் ஓட வேண்டியிருக்கிறது."

அவரது பெற்றோர் மிகவும் வயதானவர்கள், ஓட முடியாது. எனவே அவர் ஓடினார். அவர் முடிந்தபோதெல்லாம் வீட்டிற்குப் பணம் அனுப்புகிறார்.

சீன-மியான்மர் எல்லை

பட மூலாதாரம்,XIQING WANG/BBC

ருய்லியில் உள்ள அரசு நிர்வகிக்கும் வளாகத்தின் சில சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த ஆண்கள் வாழ்ந்து வேலை செய்கின்றனர். அவர்கள் விட்டு வந்த சூழலுடன் ஒப்பிடுகையில் இது ஒரு ‘சரணாலயம்’ என்கிறார் ஜின் அவுங்: "மியான்மரில் நிலைமை நன்றாக இல்லை, எனவே நாங்கள் இங்கு அடைக்கலம் புகுந்துள்ளோம்."

அவர் கட்டாய ராணுவ சேவையிலிருந்து தப்பித்து வந்துள்ளார். இதை மியான்மர் ராணுவம் பாதுகாப்புப் படைகளில் ருந்து ஏற்பட்ட விலகல்கள் மற்றும் போர்க்கள இழப்புகளை ஈடுகட்ட அமல்படுத்தி வருகிறது.

மாலை வானம் சிவப்பாக மாறியபோது, ஜின் அவுங் வெறுங்காலுடன் ஒட்டும் சேற்றின் வழியே மழைக்காலத்து மைதானத்திற்கு வேறொரு வகையான போருக்குத் தயாராக ஓடினார். அது, கடுமையாக விளையாடப்படும் கால்பந்து ஆட்டம்.

பர்மிய, சீன மற்றும் உள்ளூர் யுனான் மொழி கலந்த உரையாடல்கள் பார்வையாளர்களிடையே கேட்டன. ஒவ்வொரு பாஸ், கிக் மற்றும் ஷாட்டுக்கும் உணர்ச்சிபூர்வமாக அவர்கள் எதிர்வினையாற்றினர். தவறவிடப்பட்ட ஒரு கோலின் வேதனை தெளிவாகத் தெரிந்தது. தொழிற்சாலை உற்பத்தி வரிசையில் 12 மணிநேர ஷிப்டுக்கு பிறகு, இது அவர்களின் புதிய, தற்காலிக வீட்டில் தினசரி நடக்கும் நிகழ்வு.

பல தொழிலாளர்கள் ஷான் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான லாஷியோ மற்றும் சர்வாதிகார ஆதரவு குற்றக் குடும்பங்களின் இருப்பிடமான லௌக்கைங் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள். லௌக்கைங், ஜனவரியில் கிளர்ச்சிப் படைகளிடம் வீழ்ந்தது, லாஷியோ சூழப்பட்டது, இந்தப் பிரசாரம் போரின் போக்கையும் அதில் சீனாவின் பங்கையும் மாற்றியது.

 

பெய்ஜிங்கின் இக்கட்டான நிலை

சீன-மியான்மர் எல்லை: போரும் பொருளாதாரமும்

பட மூலாதாரம்,XIQING WANG/BBC

இரு நகரங்களும் சீனாவின் மதிப்புமிக்க வர்த்தகப் பாதையில் அமைந்துள்ளன. பெய்ஜிங் ஏற்பாடு செய்த போர்நிறுத்தம் லாஷியோவை ஆட்சிக் குழுவின் கைகளில் விட்டது. ஆனால் சமீப வாரங்களில் கிளர்ச்சிப் படைகள் அந்த நகரத்திற்குள் நுழைந்துள்ளன. அவர்கள் இதுவரை பெற்றதிலேயே மிகப்பெரிய வெற்றி இது. ராணுவம் குண்டுவீச்சு மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களுடன் பதிலடி தந்தது. இணையம் மற்றும் மொபைல் போன் நெட்வொர்க்குகளை கட்டுப்படுத்தியது.

"லாஷியோவின் வீழ்ச்சி ராணுவத்தின் வரலாற்றில் மிகவும் அவமானகரமான தோல்விகளில் ஒன்று," என்கிறார் சர்வதேச நெருக்கடி குழுவின் மியான்மர் ஆலோசகர் ரிச்சர்ட் ஹோர்சி.

"கிளர்ச்சிக் குழுக்கள் மூசேவுக்குள் நுழைய முயலவில்லை என்பதற்கான ஒரே காரணம், அது சீனாவை சங்கடப்படுத்தும் என்று அவர்கள் அஞ்சியிருக்கலாம்," என்கிறார் ஹோர்சி.

"அங்கு போர் நடந்திருந்தால், சீனா பல மாதங்களாக மீண்டும் தொடங்கும் என நம்பியிருந்த முதலீடுகளைப் பாதித்திருக்கும். ஆட்சி குழு, ருயிலிக்கு அருகிலுள்ள மூசே பிராந்தியம் தவிர வடக்கு ஷான் மாகாணாத்தின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளையும் இழந்துவிட்டது."

ருயிலி மற்றும் மூசே, இரண்டும் சிறப்பு வர்த்தக மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பெய்ஜிங் நிதியளித்த 1,700 கிமீ வர்த்தகப் பாதைக்கு இவை முக்கியமானவை. இது சீன-மியான்மர் பொருளாதார வழித்தடம் என்று அறியப்படுகிறது. இந்தப் பாதை ஆற்றல், உள்கட்டமைப்பு மற்றும் மின்சார வாகனங்கள் தயாரிப்புக்கு முக்கியமான பூமியில் அரிதாகக் கிடைக்கும் கனிமங்களின் சுரங்கத் தொழிலில் சீன முதலீடுகளுக்கு உதவியாக இருக்கும்.

ஆனால் இதன் மையத்தில் யுனான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங்கை மியான்மரின் மேற்குக் கடற்கரையில் சீனர்கள் கட்டி வரும் ஆழ்கடல் துறைமுகமான கியோக்பியூவுடன் இணைக்கும் ரயில் பாதை உள்ளது.

வங்காள விரிகுடா அருகே உள்ள இந்தத் துறைமுகம், ருயிலி மற்றும் அதற்கு அப்பாற்பட்டுள்ள தொழிலற்சாலைகளுக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கான பாதையை வழங்கும்.

இந்தத் துறைமுகம், மியான்மர் வழியாக யுனானுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவை கொண்டு செல்லும் குழாய்களின் தொடக்கப் புள்ளியாகவும் உள்ளது. ஆனால், இந்தத் திட்டங்கள் இப்போது ஆபத்தில் உள்ளன.

 
சீன-மியான்மர் எல்லை

பட மூலாதாரம்,XIQING WANG/BBC

மியான்மரின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி பதவியில் இருந்து அகற்றப்பட்டபோது, சீன அதிபர் ஷி ஜின்பிங் வளம் நிறைந்த அண்டை நாட்டுடனான உறவுகளை வளர்ப்பதில் பல ஆண்டுகளைச் செலவிட்டிருந்தார்.

ஆட்சிக் கவிழ்ப்பை கண்டிக்க ஷி ஜின்பிங் மறுத்து, ராணுவத்திற்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதைத் தொடர்ந்தார். ஆனால் அவர் மின் ஆங் ஹ்லைங்கை அரசுத் தலைவராக அங்கீகரிக்கவில்லை, அவரை சீனாவிற்கு அழைக்கவுமில்லை.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, போர் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று, லட்சக்கணக்கானோரை இடம்பெயரச் செய்துள்ளது. ஆனால் முடிவு எதுவும் தெரியவில்லை.

புதிய முனைகளில் போரிட கட்டாயப்படுத்தப்பட்ட ராணுவம், அதன் மியான்மரின் பாதி முதல் மூன்றில் இரண்டு பங்கு வரையிலான பகுதிகளை எதிர்ப்பு சக்திகளுக்கு இழந்துள்ளது.

பெய்ஜிங் ஒரு முட்டுச்சந்தில் உள்ளது. அது "இந்தச் சூழ்நிலையை விரும்பவில்லை", மியான்மரின் ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் ஹ்லைங்கை "திறமையற்றவர்" என்று கருதுவதாக ஹோர்சி சுட்டிக் காட்டுகிறார்.

"அவர்கள் தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். அவர்கள் ஜனநாயக ஆட்சி வேண்டும் என்று நினைப்பதால் அல்ல, இதை ஒரு மாற்று வழி என்று கருதுவதால்" என்கிறார்.

 

இரட்டை வேடம் போடுகிறதா சீனா?

சீன-மியான்மர் எல்லை: போரும் பொருளாதாரமும்
படக்குறிப்பு,சீனா - மியான்மர் இடையே திட்டமிடப்பட்ட பொருளாதார வழித்தடம்

பெய்ஜிங் இரு தரப்பிலும் விளையாடுவதாக மியான்மரின் ஆட்சி சந்தேகப்படுகிறது. ஆட்சிக்குழுவை ஆதரிப்பதாகத் தோற்றத்தை உருவாக்கி, ஷான் மாநிலத்தில் உள்ள இன ராணுவங்களுடனும் தொடர்ந்து உறவைப் பேணி வருகிறது.

பல கிளர்ச்சிக் குழுக்கள் சீன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சமீபத்திய போர்கள்கூட, கடந்த ஆண்டு மூன்று இன குழுக்களால் தொடங்கப்பட்ட தீவிர பிரசாரத்தின் விளைவாகும். அவை தங்களை சகோதரத்துவ கூட்டணி என்று அழைத்துக் கொண்டன. பெய்ஜிங்கின் மறைமுக ஒப்புதல் இல்லாமல் இந்தக் கூட்டணி இந்த நடவடிக்கையை எடுத்திருக்காது என்று கருதப்படுகிறது.

போர்க்களத்தில் அவர்களின் வெற்றிகள் ஆயிரக்கணக்கான சீன தொழிலாளர்களைச் சிக்க வைத்திருந்த, மாஃபியா குடும்பங்களால் நடத்தப்பட்டு வந்த மோசடி மையங்களை முடிவுக்குக் கொண்டு வந்தன. தனது எல்லையில் அதிகரித்து வரும் சட்டவிரோத நடவடிக்கைகளால் நீண்ட காலமாக எரிச்சலடைந்து வந்த சீனா, அவர்களின் முடிவை வரவேற்றது. சந்தேகத்துக்கு இடமான பத்தாயிரக்கணக்கானவர்கள் கிளர்ச்சிப் படைகளால் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பெய்ஜிங்கை பொறுத்தவரை மோசமான சூழ்நிலை என்பது உள்நாட்டுப் போர் பல ஆண்டுகளாக நீடிப்பதாகும். ஆனால் ராணுவ ஆட்சி வீழ்வதும் சீனாவுக்கு கவலையைக் கொடுக்கும். அது மேலும் குழப்பத்தை உண்டாக்கும்.

இரண்டு சூழ்நிலைகளிலும் சீனா எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இரு தரப்பினரையும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதைத் தவிர பெய்ஜிங் இன்னும் என்ன செய்ய முடியும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

 

இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள்

சீன-மியான்மர் எல்லை

பட மூலாதாரம்,XIQING WANG/BBC

பல கிலோமீட்டர் தொலைவுக்கு, ருயிலியில் கடைகள் மூடப்பட்டிருப்பது இந்த இக்கட்டான நிலையைத் தெளிவாக விளக்குகிறது. எல்லைப் பகுதியில் அமைந்திருப்பதால் ஒரு காலத்தில் பயனடைந்த நகரம் இப்போது மியான்மருக்கு அருகில் இருப்பதன் விளைவுகளை அனுபவித்து வருகிறது.

சீனாவின் மிகக் கடுமையான ஊரடங்குகளால் பாதிக்கப்பட்ட வணிகங்கள், எல்லை தாண்டிய போக்குவரத்து மற்றும் வர்த்தகம் மீண்டெழாததால் பெரும் நெருக்கடியைச் சந்தித்தன. அவை எல்லையின் மறுபக்கத்தில் இருந்து வரும் தொழிலாளர்களையும் நம்பியுள்ளன.

அவர்கள் தற்போது வருவதில்லை என்று பர்மிய தொழிலாளர்களுக்கு வேலை தேடித் தரும் பல முகவர்கள் கூறுகின்றனர். எல்லைக்கு அப்பால் இருந்து தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கான கட்டுப்பாடுகளை சீனா இறுக்கியுள்ளதாகவும், சட்டவிரோதமாக பணிபுரிந்ததாகக் கூறப்படும் நூற்றுக்கணக்கானோரை திருப்பி அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஒரு சிறிய தொழிற்சாலையின் உரிமையாளர், தனது பெயரை வெளியிட விரும்பாமல், பிபிசியிடம் கூறுகையில், நாடு கடத்தல்கள் காரணமாக "எனது வியாபாரம் முற்றிலும் படுத்துவிட்டது. நான் எதையும் மாற்ற முடியாது" என்றார்.

சோதனைச் சாவடிக்கு அருகிலுள்ள இடத்தில் குழந்தைகளுடன் கூடிய தாய்மார்கள் உட்பட இளம் தொழிலாளர்கள் பலர் கூடி நிற்கின்றனர். வேலை பெறுவதற்குத் தேவையான ஆவணங்களை அவர்கள் விரித்து வைத்து, காத்துக் கிடக்கின்றனர். உரிய ஆவணங்கள் இருப்பவர்களுக்கு ஒரு வாரம் வரை பணிபுரிய அனுமதிக்கும் அல்லது லி போல இரு நாடுகளுக்கும் இடையே வந்து செல்ல அனுமதிக்கும் அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது.

"எல்லா தரப்பினரிடமும் போரை நிறுத்துமாறு சில நல்ல மனிதர்கள் சொல்ல முடியும் என்று நம்புகிறேன். உலகில் எங்களுக்காகக் குரல் கொடுக்க யாரும் இல்லை என்றால், அது மிகவும் சோகமானது," என்கிறார் லி.

சீனாவுக்கு மிக அருகில் போர் வெடிக்காது என்று தன்னைச் சுற்றியுள்ளவர்கள் அடிக்கடி உறுதியளிப்பதாக அவர் கூறுகிறார். ஆனால் அவர் அதை நம்பவில்லை: "எதிர்காலத்தை யாரும் கணிக்க முடியாது."

இப்போதைக்கு, ருயிலி அவருக்கும் ஜின் ஆங்கிற்கும் பாதுகாப்பான இடமாக உள்ளது. சீனர்களின் கைகளில் தங்கள் எதிர்காலம் உள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், சீனர்களும் அதைப் புரிந்துகொள்கிறார்கள்.

"உங்கள் நாட்டில் போர் நடக்கிறது. நான் கொடுப்பதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்," என்று சந்தையில் ஒரு மியான்மர் பச்சைக்கல் விற்பனையாளரிடம் பேரம் பேசும் ஒரு சீன சுற்றுலாப் பயணி கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த வரலாறை சுருக்கமாக, வேறு திரியில்  சொல்லியிருக்கிறேன் என்று நினைவு. குயிலி, அப்போதைய (இப்போதும்) தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் குயிலி வேலுநாகியருக்கும் தெரியாமல், சேலையின் உள்ள மடிப்புகளுக்குள் எண்ணையை பூசிக்கொண்டே சென்றதாகவே வாய்வழிக்கதை இருக்கிறது. இதை கிந்தியா மறைத்துவிட்டது. UK இல் இந்த வரலாற்றை, குறிப்பிட்ட தமிழ் பாடசாலையில்  நடிப்பு வடிவமாகமுன்னறிவித்தல் இன்றி  செய்த போது, அதிபரை தவிர வேறு எவருக்கும்  தெரிந்து இருக்கவில்லை என்பது எப்படி எமது வரலாற்றில் நாம் அக்கறை இல்லை என்பதை பார்க்க கூடியதாக இருந்தது.  
    • தேசிய உணர்வு என்பது அரியத்தாருக்கு ஆதரவு அளிப்பது அல்ல சாத்.  வடக்கு கிழக்கில் அரியத்தாரை மக்கள் நிராகரித்துவிட்டார்கள,. அவர்களெல்லாம் "நம் இழப்புகள், தேவைகள் தெரிவதுமில்லை, கவலையுமில்லை, இன உணர்வும் இல்லாத ." ஆட்கள் என்கிறீர்களா?  உங்கள் கருத்தின்படி நான் அண்மையில் கனடாவில் இடம்பெற்ற தமிழர் திருவிழாவில் பாடகர் சிறீநிவாஸ் அவர்களுக்குக் கல்லெறிந்திருக்க வேண்டும். அல்லது அரியத்தாருக்கு ஆதரவாக அலட்ட வேண்டும். அப்போதுதான் நான் டமில் தேசியவாதி.  அதாகப்பட்டது மூழையைத் கழட்டி ஒருபக்கம் கடாசிவிட்டு புலம்பெயர்ஸ் போடும் காட்டுக் கூச்சலுக்கு அதலையை ஆட்னால் மட்டும்தான் நான்  டமில்த் தேசியவாதி. சுயமாகச் சிந்தித்தால் துரோகி.  உந்த முட்டாள் கூட்டத்தின் பார்வையில் நான் டமில் தேசியவாதியாய் இருப்பதைவிட இவர்களால்  துரோகியாக கருதப்படுவதே மேல் என நினைக்கிறேன்.  ✋   100% ✅
    • புலம்பெயர் புண்ணியவான்கள் கம்மெண்டு இருந்தாலே போதுமானது.  தாயகத்து மக்கள் தமது அரசியலைத் தகவமைத்துக்கொள்ளுவார்கள்!
    • மாற்றம் ஒன்றே மாறாதது. அனுர நன்மை செய்வார் என்று நம்புவோம். 
    • தேர்தலில் புதிய திருப்பம்: முதல் சுற்றில் 15 மாவட்டங்களில் அநுர முன்னிலை 2024 ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 22 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை பெற்றுள்ளார். இதேவேளை சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம், நுவரெலியா, பதுளை, திகாமடுல்ல, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வன்னி ஆகிய சிறுபான்மையின மக்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில் அதிக வாக்குகளை பெற்றுள்ளார். அந்தவகையில், சற்றுமுன் வெளியான முதல் சுற்று முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க 5,634,915 (42.31%) வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு சஜித் பிரேமதாச 4,363,035  (32.76%) வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளுடன்  (17.27%) மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நான்காவது இடத்தில் நாமல் ராஜபக்ச 342,781 (2.57%) வாக்குகளுடனும் மற்றும் பா.அரியநேத்திரன் 226,343 (1.7%) வாக்களுடனும் 5 ஆவது இடத்திலும் உள்ளனர். இதற்கமைய, வாக்குகள் அடிப்படையில் வெற்றிப் பெற்ற அநுர குமார திஸாநாயக்க 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத காரணத்தினால் தற்போது இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகள் தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த ஜனாதிபதித் தேர்தலில் பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லையென தெரிவித்து இது திருப்திகரமாகவுள்ளதெனவும் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியான பின்னரும் மக்கள் அமைதியாகச் செயற்படுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://ibctamil.com/article/presidential-election-2024-sri-lanka-results-1727003951
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.