Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-நஜீப் பின் கபூர்-

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நாம் நிறைய கட்டுரைகளை எழுதி மக்களைத் தெளிவுபடுத்தி வந்திருந்தோம். நமது கருத்துகள் அப்போது பக்கச்சார்பாக இருந்தது என்று சிலருக்கு யோசிக்க இடமிருந்தது. ஆனால் நாம் யதார்த்தத்தை தான் சொல்லி வந்திருக்கின்றோம் என்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகின்றோம். இன்றும் அதேபோல கள நிலைவரங்களையும் யதார்த்தங்களையும் தான் எமது வாசகர்களுக்கு சொல்லலாம் என்று எதிர்பார்க்கின்றோம். அனேகமான ஊடகங்களும் அரசியல்வாதிகளும் மக்களைக் கடந்த காலங்களில் பிழையான தகவல்களை-நம்பிக்கைகளைக் கொடுத்து ஏமாற்றி வந்திருக்கின்றார்கள்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாம் வலியுறுத்தி சொன்ன சில தகவல்களை மீண்டும் ஒருமுறை சுருக்கமாக இங்கு தொட்டுச் செல்லலாம் என்று எதிர்பார்க்கின்றோம். இந்த ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமாரவை தோற்கடிப்பதாக இருந்தால் ரணில் – சஜித்- ராஜபக்ஸக்கள் ஒரு மெகா கூட்டணிக்குச் செல்ல வேண்டும் என்று நமது வார இதழில் ஒரு நீண்ட கட்டுரையில் தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்னரே சொல்லி இருந்தோம்.

வடக்கு, கிழக்கு மற்றும் முஸ்லிம் வாக்குகள் சஜித், ரணில், அரியநேந்திரன், அனுர என்று பிரிவதால் அது சஜித்தின் வெற்றியைப் பாதிக்கும் என்றும் தேர்தலுக்கு முன்பே சொல்லி இருந்தோம். இது போன்று இன்னும் நிறையவே கதைகளை தேர்தலுக்கு முன்பும் தேர்தலுக்கு நெருக்கமான நாட்களிலும் நாம் சொல்லி வந்தோம்.

2024 நடந்து முடிந்த தேர்தல் என்.பி.பி. க்கு அதிர்ஸ்டவசமாகக் கிடைத்த ஒரு வாய்ப்பு என்று சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.நாம் குறிப்பிடுகின்ற இந்த சம்பவத்தை – கதையைச் சற்று எண்ணிப்பாருங்கள். அப்போது யதார்த்தம் புரியும். ஒரு அரசியல் ஆய்வாளர் என்ற வகையில் எல்லாக் கட்சிகளின் செயல்பாட்டாளர்களுடனும் நமக்கு ஒரு உறவு இருப்பது போல ஜே.வி.பி.-என்.பி.பி. யுடனும் நமக்கு மிக நெருக்கமான ஒரு உறவு இருந்து வருகின்றது.

கடந்த மாகாணசபைத் தேர்தல் நடைபெற்ற போது ஜே.வி.பி. கம்பளை அமைப்பாளர் ஹேரத் மற்றும் அவர்களுடன் நெருக்கமான உறவில் இருக்கும் பாஹிம் என்பவருடன் மஹியங்கனையில் அன்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்துக்கு நாமும் தகவல் சேகரிக்க போய் இருந்தோம்.

அன்று மதியநேரம் மஹியங்கனை தொகுதி அமைப்பாளர் பலகே அவர்கள் வீட்டில் மதிய உணவுக்காக போயிருந்த போது இன்றைய ஜனாதிபதி அனுரகுமாரவும் பதுளை வெள்ளி நாக்கு என அழைக்கப்படும் சமந்த வித்தியாரத்ன அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம்.அப்போது நாம் ஒரு தேர்தலில் பத்து சதவீத (10) வாக்கை எப்போது பெற்றுக் கொள்கின்றோமோ அதன் பின்னர் வருகின்ற பொதுத் தேர்தலில் நாம் அரசாங்கத்தைக் கைப்பற்றும் நிலைக்கு வந்து விடுவோம். அதுவரைக்கும் நிறையவே உழைக்க வேண்டி இருக்கின்றது என்று சமந்த வித்தியாரத்ன நம்மிடம் சொல்லி இருந்தார்.

நாம் ஏன் இதனை இங்கு சுட்டிக்காட்டுகின்றோம் என்றால் அடுத்து வருகின்ற தேர்தல்களில் அந்த இலக்கிற்கு அருகில் கூட அவர்களினால் நெருங்க முடியவில்லை. அப்படியாக இருந்தால் அவர்கள் இன்று அதிரடியாக இந்த இலக்கை கடந்து ஜனாதிபதித் தேர்தலில் எப்படி வெற்றி பெற்றார்கள் என்று பார்த்தால் அதில் சில இரகசியங்கள் மறைந்திருக்கின்றன.

ஆனாலும் இதுபற்றி எந்தவொரு ஊடகமும் இது தொடர்பாகப் பேசவில்லை என்பது நமது கணிப்பு. அதில் முதலாவதாக வரலாற்றில் மிகப் பெரிய வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ராஜபக்ஸக்களின் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை கடவுளே ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அதிகாரத்துக்கு வந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே அவர்களை அதிகாரத்தில் இருந்து இறைவன் கவிழ்த்துவிட்டான்.

குறிப்பாக கோத்தாபய ராஜபக்ஸவின் அட்டகாசங்களுக்கும் அடாவடித்தனங்களுக்கும் தண்டனை கிடைத்திருக்கின்றது. நாம் முன்பு சொன்னது போல அனுரவை எதிர்க்க ஒரு மெகா கூட்டணி கட்டாயம் தேவை என்று சுட்டிக்காட்டி இருந்தோம். ஆனால் அது நடக்கவில்லை. சஜித் தரப்பினர் அதீத நம்பிக்கையில் இருந்து இன்று மூக்குடைபட்டிருக்கின்றார்கள். அடுத்து மொட்டுக் கட்சியின் கோட்பாதர் பசில் ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலுக்குச் செல்வதுதான் அனுரவுடன் ஒரு நெருக்கமான நாடாளுமன்றத்தை வைத்திருக்க வாய்ப்பாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

பசிலின் அதே கருத்தை நாம் அன்று சொல்லி இருந்தோம். ரணில் அதற்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலை ரணில் முன்கூட்டி நடத்தியதால் அனுர சுலபமாக இலக்கை எட்டிவிட முடிந்தது. வருகின்ற பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதி அனுர தரப்பினர் தனிப் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தை கைப்பற்றுவார்கள் என்று நாம் அடித்துச் சொல்லி வைக்கின்றோம். இதனையும் நமது வாசகர்கள் பொறுத்திருந்து பார்க்க முடியும் என்பது நமது கணிப்பு.

கோட்டாவின் அட்டகாசமான ஆட்சியும் ரணிலின் அரசியல் தீர்மானங்களும் அனுர தரப்பினர் அவர்கள் குறிப்பிட்ட பத்து சதவீதத்தைக் கூட எட்டாத ஒரு நிலையில் அதிரடியாக அதிகாரத்தைக் கைப்பற்ற முடியுமாக இருந்தது. 2019 மற்றும் 2020 தேர்தல்களில் வெறும் நான்கு – மூன்று சதவீதமான வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ஜே.வி.பி-என்.பி.பி வரலாற்றில் இப்படி ஒரு அதிரடிச் சாதனையை நிலைநாட்டி இருக்கின்றது என்றால் அதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர்கள் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மேற்கொண்ட அடக்குமுறைகளும் பிழையான தீர்மானங்களுமாகும் என்பது எமது கருத்து.

இப்போது கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் எதிர்வருகின்ற பொதுத் தேர்தலிலும் முடிவுகள் எப்படி அமையப் போகின்றது என்பது தொடர்பாக பார்ப்போம். நாம் இங்கு குறிப்பிடுகின்ற தகவல்களையும் கணிப்புகளையும் எமது வாசகர்கள் வருகின்ற பொதுத் தேர்தல் முடிவுகளுடன் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

2024 ஜனாதிபதித் தேர்தல்
பொதுத் தேர்தல் முடிவுகள்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்று இப்போது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு இன்னும் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் வரை இருக்கும் நிலையில், பொதுத் தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்று இப்போது பார்ப்போம்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே 2024 ஜனாதிபதி தேர்தலில் அனுரவுக்கு அதிக வாய்ப்பு என்று நாம் ஊடகங்களில் சொன்ன போது எமது கணிப்பு மிகைப்பட்ட ஒரு கணிப்பு என்று சிலர் விமர்சித்தார்கள். அப்படி எமது கருத்தை ஜீரணித்துக் கொள்ளாத நமது நண்பர்களும் நெருக்கமானவர்களும் கூட இதில் இருந்தார்கள்.

மேலும் ஜனாதிபதித் தேர்லுக்கு இரண்டொரு நாட்கள் இருக்கும் போது வேட்பாளர்கள் பெறுகின்ற வாக்கு வீதத்தையும் நமது சகோதர ஊடகங்களுக்கு அதனைத் துல்லியமாகச் சொல்லி இருந்தோம். அதனை வாசகர்கள் பார்த்திருப்பார்கள். இப்போது வருகின்ற பொதுத் தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பது தொடர்பாக எமது கணிப்பைத் தர இருக்கின்றோம்.

சஜித் மற்றும் ரணில் இணைந்தால் அனுரவை சுலபமாக வெற்றி கொள்ள முடியும் என்று இப்போது சிலர் கணக்குப் பார்க்கின்றார்கள்-கதை விடுகின்றார்கள். இது தமது ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டி வாக்குகளை பாதுகாக்க மேற்கொள்ளும் ஒரு முயற்சி. ஆனால் களநிலவரம் அப்படி இல்லை என்பதனை குடிமக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து சஜித் – ரணில் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் கதைகள் வருகின்றன.ஆனாலும் அதில் நிறையவே சிக்கல்கள் இருக்கின்றன. சஜித் ரணிலுடன் கூட்டணி பற்றிய கருத்தை இப்போதே நிராகரித்திருக்கின்றார். ஆனால் கட்சியில் இருக்கின்ற சிலர் அதற்கு இசைவாக பேசுகின்றார்கள். கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலில் 55,64,239 வாக்குகளைப் பெற்ற சஜித் அதன் பின்னர் 2020ல் நடந்த பொதுத் தேர்தலில 27,71,984 வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டார்.

இது எந்தளவு வீழ்ச்சி என்று சிந்தித்துப் பாருங்கள். எனவே வருகின்ற பொதுத் தேர்தலில் அனுர தரப்பு தனிக்குதிரையாகத்தான் களத்தில் இருக்கப் போகின்றது. வடக்கு, கிழக்கில் தமிழ் தரப்புக்கள் தனியாகத்தான் தேர்தலுக்கு வருவார்கள். அதேபோன்று இன்று சஜித்துடன் இருக்கின்ற மலையகக் கட்சிகளும் பெரும்பாலும் பொதுத் தேர்தலுக்கு முன்போ அல்லது பின்னரோ அனுரவுடன் இணைந்து போக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கான வியூகங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பதனை நாம் உறுதியாக கூறி வைக்கின்றோம்.

முஸ்லிம் தனித்துவத் தலைவர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அனுரவுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்ட விஷமத்தன கதைகளினால் அனுர தரப்புடன் அவர்களுக்கு இணங்கிப் போக வாய்ப்புக்கள் இல்லை. பொதுத் தேர்தலில் அனுர தரப்பிலிருந்து புதிய பல முஸ்லிம் பிரதிநிதிகள் நிச்சயமாக நாடாளுமன்றத்துக்கு வருவார்கள். இந்தத் தேர்தலில்கூட அது தெளிவாகி விட்டது.

கிழக்கில் கூட அனுர தரப்பு முஸ்லிம் வேட்பாளர்கள் பலர் ஆசனங்களை சுலபமாகப் பெற்றுக்கொள்வார்கள். இன்று அவர்களுக்கு கிடைத்திருக்கின்ற வாக்குகள் இரட்டிப்பாக மாறவும் அதிக வாய்ப்பிருக்கின்றன. ஹக்கீம், ரிசாட் , ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லா இதற்குப் பின்னர் அனுரவுக்கு எதிராக விஷமத்தன பிரசாரங்களை மேற்கொள்ள வாய்ப்பில்லை. அவர்கள் ஏற்கனவே சரணாகதி அடைந்து விட்டார்கள். அலி சப்ரி அரசியலை விட்டே ஓடி விட்டார்.

ரணிலுக்கு கிடைத்த வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி வாக்குகளும் மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக வந்த வாக்குகளும்தான். இதில் மொட்டு வாக்குகள் 15 இலட்சம் வரை இருக்கும் என்பது நமது கணக்கு. ஆனால் அவர்கள் இதனை நிராகரிக்கின்றார்கள். சஜித்- ரணில் கூட்டணி அமைந்தாலும் அதனுடன் வேட்பாளர் பங்கீடு தொடர்பில் பெரும் இழுபறி வரும்.

அப்போது மேலும் பலர் அங்கிருந்து வெளியேறிவிடுவார்கள். இன்று ரணிலுடன் இருப்போர் திரும்ப மொட்டு அணிக்குத் தாவவும் இடமிருக்கின்றது. எனவே கூட்டல் – கழித்தல் கணக்குப்படி அனுர தரப்பை பொதுத் தேர்தலில் இலகுவாக வெற்றி கொள்ள முடியும் என்ற சஜித் – ரணில் கணக்கு மொண்டசூரி-பால்போத்தல் கணக்காகத்தான் இருக்கும். இது பற்றி தகவல்களை நாம் விரைவில் மாவட்ட ரீதியில் விரிவாகத் தர இருக்கின்றோம்.

நடந்து முடிந்த 2024 ஜனாதிபதித் தேர்தலில் ஆசனங்களை மாவட்ட ரீதியில் கணக்குப் பார்த்தால் அது ஏறக்குறைய பின்வருமாறு அமைகின்றது.

அனுர 105 ஆசனங்கள்
சஜித் 068 ஆசனங்கள்
ரணில் 037 ஆசனங்கள்
நாமல் 002 ஆசனங்கள்
அரியநேந்திரன் 009 ஆசனங்கள்
திலித் 001 ஆசனம்
இதர 003 ஆசனங்கள்
மொத்தம் 225 ஆசனங்கள்

அதேபோன்று வருகின்ற 2024 பொதுத் தேர்தலில் முடிவுகள் பின்வருமாறு அமையவே அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

அனுர 140 ஆசனங்கள்
சஜித் 046 ஆசனங்கள்
ரணில் 009 ஆசனங்கள்
தமிழ் தரப்பு 020 ஆசனங்கள்
நாமல் 005 ஆசனங்கள்
இதர 005 ஆசனங்கள்
மொத்தம் 225 ஆசனங்கள்

மொட்டுக் கட்சியில் இன்று ரணிலுடன் இருப்போரில் கணிசமானவர்கள் மீண்டும் மொட்டுக் கட்சிக்குத் தாவ இடமிருக்கின்றது. அப்படியான நிலையில் அது ரணில் தரப்பு எண்ணிக்கையில் மேலும் கடுமையான தாக்கங்களைச் செலுத்தும். ரணில் தனித்து நின்றால் 2020 தேர்தல் முடிவுதான் அவருக்கு மீண்டும் வரும். சஜித் கூட்டணியில் இருப்போரில் பெரும்பாலானவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும். அத்துடன் தற்போது அவர்கள் கூட்டணியில் இருப்போரில் பலர் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி அனுரவுடன் இணங்கிப் போகும் மன நிலையில் இருக்கின்றார்கள்.

கடந்த 2020 பொதுத் தேர்தலுடன் ஒப்பு நோக்குகின்ற போது யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல ஆகிய மாவட்டங்களில் இருந்து குறைந்தபட்சம் ஒரு என்.பி.பி. வேட்பாளராவது வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கின்றது. அனுர வெற்றியைத் தொடர்ந்து அவர்களது வாக்கு மேலும் அதிகரிக்கும் ஒரு நிலையும் பிரகாசமாகத் தெரிகின்றது.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சஜித் கூட்டணியில் குழப்பங்களுக்கு இடமிருக்கின்றது என்று நாம் முன்பு சொல்லி இருந்தோம். இப்போது அங்கு அது நடந்து கொண்டிருக்கின்றது. சஜித் அணியில் இருந்து வெளியேற இருப்பவர்களுக்கும் இப்போது அதற்கு ஒரு கட்சி இருப்பதாக எமக்குத் தெரியவில்லை.

ரணில் அரசியலை விட்டு வெளியே செல்வார் என்று எதிர்பார்ப்பதால் அவருடன் சென்ற மொட்டுக் கட்சிக்காரர்களின் நிலை இன்னும் தெளிவில்லாமல் இருக்கின்றது. அவர்கள் இப்போது ஏதாவது ஒரு கூட்டணிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. அல்லது பலர் தெருவில் நிற்க வேண்டி வரும். எப்படியும் தற்போது நாடாளுமன்றத்தில் இருப்போரில் மூன்றில் இரண்டு பங்கினர் வெளியே என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.

https://thinakkural.lk/article/310044

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.