Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
திருவண்ணாமலை, தலித் பெண் சடலம்
படக்குறிப்பு, ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக சடலத்தை வைத்துக் கொண்டு பட்டியல் பிரிவு மக்கள் போராடினர். கட்டுரை தகவல்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

'பட்டியல் பிரிவைச் சேர்ந்த பெண்ணின் உடலை பொது வழியில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது' என்று பிற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக திருவண்ணாமலையில் சர்ச்சை எழுந்துள்ளது.

"பாதை மறுக்கப்பட்டதால் நாள் முழுக்க சடலத்தை வைத்துப் போராடினோம்", என்று பட்டியலின மக்கள் கூறுகின்றனர்.

"சுடுகாட்டுப் பாதையை வழிமறித்து தனி நபர் ஒருவர் வீடு கட்டியதால் தான் பிரச்னை ஏற்பட்டது" என்கிறார், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.

பட்டியல் பிரிவு பெண்ணின் சடலத்தைக் கொண்டு செல்வதில் என்ன பிரச்னை?

 

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்துள்ள மோத்தக்கல் கிராமத்தில் ஆயிரத்துக்கும் குறைவான பட்டியல் பிரிவினரும், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட பிற சமூகத்தினரும் வசிக்கின்றனர்.

பட்டியல் பிரிவைச் சேர்ந்த 54 வயதான கிளியம்மாள் என்பவர், தனது மகளுடன் சென்னையில் வசித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி உயிரிழந்தார்.

சடலத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு ஏன்?

சொந்த ஊரில் அடக்கம் செய்ய தீர்மானித்து கிளியம்மாளின் உடலை சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மோத்தக்கல் கிராமத்திற்கு உறவினர்கள் கொண்டு வந்துள்ளனர்.

"கிராமத்தின் ஒருபுறம் பட்டியல் பிரிவினர் வசிக்கும் பகுதி உள்ளது. அதன் பின்புறம் வழியாக இறந்தவர்களின் உடலை வழக்கமாக கொண்டு செல்வோம். தற்போது அந்தப் பாதை கரடுமுரடாக இருப்பதால் அதனை பயன்படுத்த முடியவில்லை. இதனால், வேறுவழியின்றி பொதுப் பாதையில் கிளியம்மாளின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல நாங்கள் தீர்மானித்தோம்" என்று மோத்தக்கல் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாதன் கூறினார். .

ஆனால், பொதுப் பாதையில் கிளியம்மாளின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல பிற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக சடலத்தை வைத்துக் கொண்டு போராட்டம்

"பொதுப் பாதை வழியாக ஆம்புலன்ஸில் கிளியம்மாளின் சடலம் வந்தது. ஆனால், அதே பாதையில் சுடுகாட்டுக்குக் கொண்டு செல்வதற்கு மட்டும் எங்களை அவர்கள் (பிற சமூகத்தினர்) விடவில்லை. இதைப் பற்றி டி.எஸ்.பி முருகனிடம் முறையிட்ட போது, 'சடலத்தைக் கொண்டு செல்லுங்கள். ஆனால் பட்டாசு வெடிக்க வேண்டாம்' என கூறினார்" என்று பிபிசி தமிழிடம் மஞ்சுநாதன் குறிப்பிட்டார்.

அங்கே, இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். ஒருகட்டத்தில், சடலத்தைக் கொண்டு செல்ல வசதியாக, 'சுடுகாட்டுக்குச் செல்லும் சாலையை சீரமைத்துத் தருமாறு' அதிகாரிகளிடம் பட்டியல் பிரிவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

"சாலையை சீரமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் மாலை வரையில் பாதை சரிசெய்யப்படவில்லை" என்று மஞ்சுநாதன் கூறினார்.

ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக சடலத்தை வைத்துக் கொண்டு பட்டியல் பிரிவு மக்கள் போராடினர். இதையடுத்து, அங்கிருந்த நில உரிமையாளர்கள் சிலரிடம் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நில உரிமையாளர் ஒருவர் தனது நிலம் வழியாக உடலைக் கொண்டு செல்ல சம்மதம் தெரிவித்த பின்னரே, அவ்வழியே சுடுகாட்டுக்கு கிளியம்மாவின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

 
திருவண்ணாமலை, தலித் பெண் சடலம்
படக்குறிப்பு, நில உரிமையாளர்கள் சிலரிடம் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிற சமூகத்தினர் கூறுவது என்ன?

பட்டா நிலம் வழியாக பட்டியல் பிரிவு பெண்ணின் சடலத்தைக் கொண்டு சென்றதால் தான் பிரச்னை ஏற்பட்டதாக கூறுகிறார், மோத்தக்கல் கிராமத்தில் வசிக்கும் பிற சமூகத்தைச் சேர்ந்த ரமேஷ்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பட்டியல் பிரிவினர் வசிக்கும் பகுதியின் பின்புறம் வழியாக சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வது அவர்களின் வழக்கம். அந்தப் பாதையில் ஒருவர் வீடு கட்டி வருகிறார். இதன் காரணமாக பட்டா நிலத்தில் உடலைக் கொண்டு சென்றுள்ளனர். இதனால் தேவையற்ற பிரச்னை ஏற்பட்டது" என்று கூறினார்.

வருவாய்த்துறை அதிகாரிகள் தலையிட்டதால் பிரச்னை சுமூகமாக முடிந்துவிட்டதாக ரமேஷ் கூறினார்.

மாவட்ட ஆட்சியர் சொல்வது என்ன?

இதுகுறித்து டி.எஸ்.பி முருகனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, "பிரச்னை என்பது பாதை தொடர்பானது. மாவட்ட ஆட்சியரிடம் தான் நீங்கள் பேச வேண்டும்" என்றார். இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

"சுடுகாட்டுக்குச் செல்வதற்கு பட்டியல் பிரிவு மக்களுக்கு பாதை ஒன்று உள்ளது. அந்தப் பாதையை அதே சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் வீடு கட்டி மறித்துவிட்டார். பிரச்னைக்கு அடிப்படைக் காரணம் இது தான். மோத்தக்கல் கிராமத்தில் பட்டியல் பிரிவினர் வசிக்கும் இடத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் சுடுகாடு உள்ளது. அதற்கான பாதையில் 13 தனி நபர்களின் பட்டா நிலங்கள் உள்ளன. இவர்கள் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் யாரும் சடலத்தைக் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கவில்லை" என்று பாஸ்கர பாண்டியன் கூறினார்.

சுரேஷ் என்பவர் கட்டி வரும் வீட்டுக்கு எதிரில் உள்ள பட்டா நிலத்தை சமன்படுத்தி, அதன் வழியே பெண்ணின் உடல் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறிய ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், "அந்த பட்டா நிலத்தின் உரிமையாளர் பிற சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை" என்று விளக்கம் அளித்தார்.

 
திருவண்ணாமலை, தலித் பெண் சடலம்
படக்குறிப்பு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

பொதுவழியில் செல்வதற்கு அனுமதி மறுப்பா?

பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் கிளியம்மாளின் உடலை பொதுவழியில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல எதிர்ப்பு கிளம்பியதா என்ற கேள்விக்குப் பதில் அளித்த பாஸ்கர பாண்டியன், "பொது வழியில் யார் வேண்டுமானாலும் செல்லலாம். அதில் எந்த தடையும் இல்லை." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

""உலகத்திலேயே அதிக மக்கள் கண்டுகளித்த இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி""

இந்தச் செய்தியும் இந்தியாவிலிருந்துதான் வருகிறது,....😁



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.