Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
ரத்தன் டாடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

9 அக்டோபர் 2024, 19:27 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

புகழ்பெற்ற இந்தியத் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவை டாடா குழுமம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

அந்த அறிக்கையில், டாடா சன்ஸ்-இன் தற்போதைய தலைவர் நடராஜன் சந்திரசேகரன், ரத்தன் டாடா ‘உண்மையிலேயே அசாதாரணமான தலைவர்’ என்று கூறியிருக்கிறார்.

மேலும் அந்த அறிக்கையில், "ஒட்டுமொத்த டாடா குடும்பத்தின் சார்பாக, அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மிகவும் ஆர்வத்துடன் போராடிய கொள்கைகளை நிலைநிறுத்த பாடுபடும்போது, அவரது மரபு தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடா இருந்த காலத்தில், ஆங்கிலோ-டச்சு எஃகு உற்பத்தியாளர் கோரஸ், பிரிட்டனைச் சேர்ந்த கார் பிராண்டுகளான ஜாகுவார், லேண்ட் ரோவர், மற்றும் உலகின் இரண்டாவது பெரிய தேயிலை நிறுவனமான டெட்லி ஆகியவை உட்பட பல பெரிய நிறுவனங்களை டாடா குழுமம் தன்வசப்படுத்தியது.

இன்று டாடா குழுமத்தின் ஆண்டு வருமானம் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் சுமார் 8.4 லட்சம் கோடி ரூபாய்) மேலாக உள்ளது.

பொது மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு

ரத்தன் டாடாவின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக இன்று மும்பையின் தேசிய கலை மையத்தில் வைக்கப்படும். மகாராஷ்டிர அரசு அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளது.

அவரது உடல் காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக என்.சி.பி.ஏ-வில் வைக்கப்படும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

அவரது மறைவுக்கு ஜார்கண்ட் மாநில அரசும் ஒருநாள் அரசு துக்கம் அறிவித்துள்ளது. அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிப் பிரியாவிடை அளிக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

 
ரத்தன் டாடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்தியத் தொழிற்துறைக்கு அவரது சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக 2008-ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கியது

உதவியாளராக இருந்து தலைவராக உயர்ந்தவர்

ரத்தன் டாடா 1937ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். அவரது தந்தை ஜாம்ஷெட்ஜி டாடாவின் பேரனான நாவல் டாடா.

கடந்த 1955ஆம் ஆண்டு ரத்தன் டாடாவுக்கு 17 வயதானபோது, கட்டுமானமும் பொறியியலும் கற்க அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.

உயர்கல்விக்குப் பிறகு, 1962ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தில் உதவியாளரகச் சேர்ந்தார். அதில் பல பதவிகளை வகித்த பின் 1974-இல் டாடா நிறுவனத்தின் இயக்குநரானார்.

கடந்த 1975ஆம் ஆண்டு, அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் மேம்பட்ட வணிக மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

ரத்தன் டாடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டாடா குழுமத்தின் தற்போதைய தலைவர் நடராஜன் சந்திரசேகரன், ரத்தன் டாடா ‘உண்மையிலேயே அசாதாரணமான தலைவர்’ என்று கூறியிருக்கிறார்

பின்னர் 1981ஆம் ஆண்டு டாடா நிறுவனங்களின் தலைவராக நியமிகப்பட்டார் ரத்தன் டாடா.

அதன்பின் 1991ஆம் ஆண்டு, ஜே.ஆர்.டி டாடாவுக்குப்பின் டாடா சன்ஸ் மற்றும் டாடா அறக்கட்டளைகளுக்குத் தலைவரனார். அந்த பதவியில், டாடா நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்யத் துவங்கினார்.

கடந்த 2008ஆம் ஆண்டு ‘டாடா நானோ’ என்ற சிறிய காரை அறிமுகப்படுத்தியது அவரது பெரும் திட்டங்களில் ஒன்றாகப் பார்க்கப்பட்டது.

இந்தியத் தொழிற்துறைக்கு அவரது சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக 2008ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கியது.

கடந்த 2012ஆம் ஆண்டு, 50 ஆண்டுகள் டாடா குழுமத்தின் தலைவராக இருந்தபின்னர், அவர் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் டாடா சன்ஸ்-இன் கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரத்தன் டாடா ஏன் திருமணம் செய்யவில்லை? பின்னணியில் அத்தனை சோகம்!

Kumaresan MOct 10, 2024 11:16AM
Simi_Garewal_Ratan_Tata_1728528731094_17

நாட்டின் மிகப் பெரிய தொழில்நிறுவனம் டாடா. இந்த நிறுவனத்தைப் பல ஆண்டுகளாகக் கட்டி ஆண்டவர் ரத்தன் நெவல் டாடா. இவர் தலைவராக இருந்த காலத்தில்தான் டாடா நிறுவனம் பல ஏற்றங்களைக் கண்டது. தற்போது இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.  1937-ம் ஆண்டு பிறந்த ரத்தன் டாடாவின் இளமைக் காலம் சோகம் நிறைந்தது. 1940-ம் ஆண்டு ரத்தனின் தந்தை நெவல் ஹோம் சூஜி, தாயார் சூனாவை விவாகரத்து செய்தார். இதனால் ரத்தன் பாட்டியிடம் வளர வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது, ரத்தன் டாடாவுக்கு 10 வயதுதான் ஆகியிருந்தது.

நியூயார்க்கில் கார்னெல் பல்கலையில் இன்ஜினீயரிங் படித்து விட்டு. ஹார்வர்டில் பிசினஸ் படிப்பு படித்தார். ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு தொழிற்சாலையில் 1971-ம் ஆண்டு வரை பணி புரிந்தார். பின்னர், 1991-ம் ஆண்டு டாடா குழுமத் தலைவரானார். தொலைநோக்குப் பார்வை கொண்ட இவரின் தலைமையின் கீழ் டாடா நிறுவனம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது.

டாடா குழுமத்தின் ஒரு அங்கமான  டி.சி.எஸ் நிறுவனம் உலகின் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றாக உயர்ந்தது. இதன் தலைவராக இருந்த என். சந்திரசேகரன்தான் தற்போது டாடா சன்ஸ் அறக்கட்டளையின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரசேகரனின் திறமையை அடையாளம் கண்டு கொண்ட ரத்தன் டாடா தன் குழுமத்தையை அவர் கையில் ஒப்படைத்தார். என். சந்திரசேகரனின் சொந்த ஊர் நாமக்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்தன் டாடா தலைவராக இருந்த காலக்கட்டத்தில் பிரிட்டனின் புகழ்பெற்ற ஜாக்குவார், லேண்ட் ரோவர், கோரஸ், டெட்லி போன்ற நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கியது. 1998-ம் ஆண்டு அறிமுகமான டாடா இண்டிகா இந்திய சாலைகளில் கோலோச்சியது. இது டாடாவின் கனவு கார்களில் ஒன்று. ‘மக்களின் கார்’ என்று சொல்லப்பட்ட ‘நானோ’ இவரின் பிரைன்சைல்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது. நானோ கார் தொழிற்சாலை மூடப்பட்டாலும் , ஒவ்வொரு இந்தியரும் காரில் பயணிக்க வேண்டுமென்ற டாடாவின் ஆசை ஓரளவுக்கு இதனால் நிறைவேறியது.

இப்படி… பிசினஸில் கொடிகட்டிப் பறந்த ரத்தன் நெவல் டாடாவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சியான ஒன்றாக அமையவில்லை. காதலித்த 4 பெண்களையுமே வெவ்வேறு காரணங்களால் அவரால் கரம் பிடிக்க முடியாமல் போனது.

இந்தியா- சீனா போரும் ரத்தன் திருமணம் நடக்காததற்கு ஒரு காரணமாக இருந்துள்ளது. அமெரிக்காவில் படித்த ரத்தன் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவரை விரும்பியுள்ளார். 1962-ஆம் ஆண்டு ‘அவரை வளர்த்த பாட்டியின் உடல் நிலை மோசமானதால் ரத்தன் இந்தியா திரும்பினார்.

தொடர்ந்து அந்தப் பெண்ணையும் இந்தியாவுக்கு வருமாறு ரத்தன் அழைத்தார். இந்தச் சமயத்தில் இந்தியா மீது சீனா போர் தொடுத்தது. அமெரிக்க ஊடகங்கள் பெரும் போராகச் சித்திரித்து செய்திகள் வெளியிட்டு வந்தன. இதனால், பயந்துபோன அமெரிக்கப் பெண், ரத்தனை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.  ரத்தன் முதல் காதல் இப்படித்தான் தோல்வியில் முடிந்தது.

`திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? ‘ என்ற கேள்விக்கு, நான்கு முறை திருமணம் கைகூடியதாகவும், ஏதோ ஒரு காரணமாக திருமணம் தடைப்பட்டதாகவும், நான்கு முறை காதலில் விழுந்ததாகவும் சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரத்தன் டாடா குறிப்பிட்டிருந்தார்.

ரத்தன் டாடா காதலித்த பெண்களில் பிரபல இந்தி நடிகை சிமி கோர்வெலும் ஒருவர். ஆனாலும் பல்வேறு காரணங்களால் சிமி கோர்வலும் ரத்தன் டாடாவும் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. கடந்த 2011 ஆம் ஆண்டு சிம் கோர்வல் ஊடகம் ஒன்றுக்கு ரத்தன் டாடா பற்றி பேட்டியளித்துள்ளார். அதில், ரத்தன் டாடா ஜென்டில்மேன் என்றும் பணத்தை மட்டுமே குறியாக கொண்டு ஒரு போதும் அவர் இயங்கியதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

தற்போது, ரத்தன் டாடா மறைவையடுத்து சிமி கோர்வெல் தன் எக்ஸ் பக்கத்தில் ரத்தன் டாடாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், ”எல்லோரும் நீங்கள் மறைந்து விட்டதாக கூறுகிறார்கள். உங்கள் இழப்பை தாங்கிக் கொள்வது மிகவும் கடினமான விஷயம் ஆகும். சென்றுவாருங்கள் என் நண்பரே” என்று சிமி கோர்வெல் உருக்கத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

https://minnambalam.com/india-news/why-ratan-tata-didnt-marry/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதொரு மனிதன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

462689258_944698841028422_82127951400082

 

May be an illustration of money and text

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரத்தன் டாடா: ஆடம்பரங்களை வெறுத்த, எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்த தொழிலதிபர்

ரத்தன் டாடாவின் வாழ்க்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரத்தன் டாடாதான், உதவியாளர் யாருமின்றித் தனியாகப் பயணம் செய்த ஒரே விஐபி. கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரெஹான் ஃபசல்
  • பதவி, பிபிசி ஹிந்தி
  • 10 அக்டோபர் 2024

இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர்களிடையே கடந்த 1992ஆம் ஆண்டில், ஒரு தனித்துவமான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. டெல்லி- மும்பை இடையிலான விமானப் பயணங்களின்போது, அவர்களை மிகவும் கவர்ந்த பயணி யார் என அவர்களிடம் கேட்கப்பட்டது.

ரத்தன் டாடா என்ற பெயருக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்தன. இதற்கான காரணத்தை அறிய முயன்றபோது, வழக்கமாக தனியாக வரும் ஒரே விஐபி அவர் மட்டுமே என்றும், அவரது பையையோ அல்லது கோப்புகளையோ எடுத்துச் செல்ல அவருடன் உதவியாளர்கள் யாரும் ஒருபோதும் வந்தது கிடையாது என்றும் கூறப்பட்டது.

மேலும், விமானம் புறப்பட்டவுடன், அவர் அமைதியாக வேலை செய்வார். அவர் வழக்கமாக மிகக் குறைவான அளவு சர்க்கரை சேர்க்கப்பட்ட ஒரு பிளாக் காபி (Black Coffee) கேட்பார். தனக்கு விருப்பமான காபி கிடைக்கவில்லை என்பதற்காக விமான பணிப்பெண்ணை அவர் ஒருபோதும் திட்டியதில்லை.

ரத்தன் டாடாவின் எளிமைக்கான இதுபோன்ற உதாரணங்கள் இன்னும் நிறைய உள்ளன.

 

'The Tatas: How a Family Built a Business and a Nation' என்ற தனது பிரபலமான புத்தகத்தில், கிரிஷ் குபேர் பின்வருமாறு எழுதுகிறார், "அவர் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவரானபோது, ஜே.ஆர்.டி-யின் (ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா) அறையில் அவர் உட்காரவில்லை. அவர் தனக்கென ஓர் எளிய மற்றும் சிறிய அறையை அமைத்துக் கொண்டார். அவர் ஒரு ஜூனியர் அதிகாரியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு மூத்த அதிகாரி வந்தால், மூத்த அதிகாரியை காத்திருக்கச் சொல்வார்.”

"அவரிடம் 'டிட்டோ' மற்றும் 'டேங்கோ' என்ற இரண்டு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் இருந்தன, அவற்றை அவர் மிகவும் நேசித்தார். நாய்கள் மீதான அவரது நேசத்திற்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், பம்பாய் ஹவுஸில் உள்ள அலுவலகத்திற்கு ரத்தன் டாடா வரும்போதெல்லாம் தெருநாய்கள் அவரைச் சூழ்ந்துகொள்ளும்."

"இந்த நாய்கள் பெரும்பாலும் பம்பாய் ஹவுஸின் முகப்பு அறையில் (Lobby) அங்குமிங்கும் உலாவுவதைக் காண முடிந்தது. அதே நேரத்தில் மனிதர்கள் யாரேனும் அங்கு நுழைய வேண்டுமென்றால், ஒன்று அவர்கள் ஊழியர்களாக இருக்க வேண்டும் அல்லது முன் அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே அங்கு நுழைய அனுமதிக்கப்பட்டனர்."

 

‘டாடாவை நெருக்கமாக அறிந்தவர்கள் வெகு சிலரே’

ரத்தன் டாடாவின் வாழ்க்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரத்தன் டாடாவின் முன்னாள் உதவியாளர் ஆர்.வெங்கட்ரமணனிடம், ரத்தனுக்கும் அவருக்குமான நெருக்கம் குறித்துக் கேட்டபோது, "மிஸ்டர். டாடாவை நெருக்கமாக அறிந்தவர்கள் வெகு சிலரே. ஆம், அவருக்கு மிகவும் நெருக்கமான இரண்டு பேர் உள்ளனர், 'டிட்டோ' மற்றும் 'டேங்கோ', அவரது ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள். இவர்களைத் தவிர வேறு யாரும் அவரை நெருங்க முடியாது" என்று கூறினார்.

பிரபல தொழிலதிபரும் எழுத்தாளருமான சுஹைல் சேத் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார்: "பிப்ரவரி 6, 2018 அன்று, பிரிட்டனின் இளவரசர் சார்லஸ், ரத்தன் டாடாவுக்கு அவரது பொதுநலப் பணிகளுக்காக 'ராக்ஃபெல்லர் அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர்' விருதை வழங்க இருந்தார்."

"இதற்காக ரத்தன் டாடா பக்கிங்ஹாம் அரண்மனையில் இருக்க வேண்டும். ஆனால் விழாவுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தனது நாய் டிட்டோவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் விழாவில் கலந்துகொள்ள முடியாது என்று விழா ஏற்பாட்டாளர்களிடம் ரத்தன் டாடா தெரிவித்தார். இதுகுறித்து இளவரசர் சார்லஸிடம் தெரிவிக்கப்பட்டபோது, 'அதுதான் நல்ல மனிதனின் குணம். அப்படிப்பட்ட மனிதன்தான் ரத்தன் டாடா' என்று கூறினார்."

‘தனிமை விரும்பி, புகழ் வெளிச்சத்தை வெறுத்தவர்’

ஜே.ஆர்.டி.யை போலவே, ரத்தன் டாடாவும் தனது நேரம் தவறாமைக்குப் பெயர் பெற்றவர். அவர் மாலை சரியாக 6.30 மணிக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்புவது வழக்கம். அலுவலகம் தொடர்பான வேலைக்காக வீட்டில் இருக்கும்போது யாராவது அவரைத் தொடர்புகொண்டால், அவர் பெரும்பாலும் எரிச்சல் அடைவார்.

ரத்தன் டாடாவின் வாழ்க்கை

பட மூலாதாரம்,RATAN TATA INSTAGRAM

தனது வீட்டில் தனிமையில் இருக்கும்போது கோப்புகளைப் படிப்பார். அவர் மும்பையில் இருந்தால், அலிபாக்கில் உள்ள தனது பண்ணை வீட்டில் வார இறுதி நாட்களைக் கழிப்பார். இந்த நேரத்தில் அவரது நாய்களைத் தவிர வேறு யாரும் அவருடன் இருக்கமாட்டார்கள். அவர் பயணம் செய்வதையோ சொற்பொழிவு ஆற்றுவதையோ விரும்பவில்லை. அவருக்கு புகழ் வெளிச்சமும், கைதட்டலுக்கு பேசுவதும் மிகவும் எரிச்சலூட்டும் விஷயமாக இருந்தது.

அவரது குழந்தைப் பருவத்தில், குடும்பத்தின் ஆடம்பரமான ரோல்ஸ் ராய்ஸ் காரில் பள்ளிக்குச் செல்வதை அவர் சங்கடமாக உணர்ந்தார். அவரது பிடிவாத குணம், ஜே.ஆர்.டி மற்றும் அவரது தந்தை நவல் டாடாவிடம் இருந்து அவர் பெற்ற ஒரு குடும்பப் பண்பு என்று ரத்தன் டாடாவை நெருக்கமாக அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

சுஹைல் சேத், "நீங்கள் ரத்தன் டாடாவின் தலையில் துப்பாக்கியை வைத்தாலும், 'என்னைச் சுடுங்கள், ஆனால் நான் என் பாதையைவிட்டு நகர மாட்டேன்' என்றுதான் அவர் சொல்வார்" என்று கூறுகிறார்.

ரத்தன் டாடாவின் நண்பரும், பாம்பே டையிங் நிறுவனத்தின் தலைவருமான நுஸ்லி வாடியா கூறுகையில், "ரத்தன் டாடா என்பவர் மிகவும் சிக்கலான ஒரு கதாபாத்திரம். யாரும் அவரை முழுமையாக அறிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். அவர் மிகவும் ஆழமான எண்ணங்கள் கொண்ட மனிதர். நெருக்கமான நட்பு இருந்தாலும், தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு அவருடனான உறவு இருக்கவில்லை. அவர் ஒரு தனிமை விரும்பி” என்று கூறுகிறார்.

'An Intimate History of the Parsis' என்ற தனது புத்தகத்தில் கூமி கபூர் பின்வருமாறு எழுதுகிறார், “தனது தனியுரிமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை, ரத்தன் என்னிடம் ஒப்புக்கொண்டார். ‘நான் தோழமைப் பண்பு இல்லாத ஒருவனாக இருக்கலாம், ஆனால் அதே நேரத்தில் நான் ஒன்றும் யாருடனும் பழகாமல் விலகியிருப்பவனும் கிடையாது’ என்று அவர் என்னிடம் கூறுவார்.”

 

பாட்டி நவாஜ்பாய் டாடாவால் வளர்க்கப்பட்ட ரத்தன் டாடா

ரத்தன் டாடாவின் வாழ்க்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

“டாடா குழுமத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கிய காலங்களில், ரத்தன் டாடா தனது குடும்பப் பெயரை ஒரு சுமையாகவே கருதியதாக” ரத்தன் டாடாவின் பால்ய கால நண்பர் ஒருவர் நினைவுகூர்ந்தார். அமெரிக்காவில் படிக்கும்போது, அவரது குடும்பப் பின்னணி பற்றி அவரது வகுப்புத் தோழர்களுக்குத் தெரியாது என்பதால், அங்கு அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருந்தார்.

கூமி கபூருக்கு ரத்தன் டாடா அளித்த பேட்டியில், "அந்த நாட்களில், வெளிநாட்டில் படிப்பவர்கள் மிகக் குறைந்த அளவிலான வெளிநாட்டுப் பணத்தைப் பயன்படுத்தவே ரிசர்வ் வங்கி அனுமதித்தது. என் தந்தை சட்டத்தை மீறுவதை ஆதரிக்கவில்லை, எனவே அவர் எனக்கு வேறு வழிகளில் அமெரிக்க டாலர்களை வழங்க விரும்பவில்லை. அதனால் மாத இறுதிக்குள் என் பணம் எல்லாம் காலியாகிவிடுவது வழக்கம். சில நேரங்களில் நான் என் நண்பர்களிடம் இருந்து கடன் வாங்க வேண்டியிருந்தது. பல நேரங்களில், கூடுதல் பணம் சம்பாதிக்க நான் பாத்திரங்களைக் கழுவும் பணியைச் செய்தேன்" என்று தெரிவித்திருந்தார்.

ரத்தன் டாடாவின் பெற்றோர் விவாகரத்து பெற்றபோது அவருக்கு 10 வயதுதான். ரத்தனுக்கு 18 வயதாக இருந்தபோது, அவரது தந்தை சிமோன் டனோயர் என்ற சுவிட்சர்லாந்து பெண்ணை மணந்தார். மறுபுறம், அவரது தாயார் விவாகரத்துக்குப் பிறகு சர் ஜாம்செட்ஜி ஜீஜீபாய் என்பவரை மணந்தார். ரத்தனை அவரது பாட்டி லேடி நவாஜ்பாய் டாடாதான் வளர்த்தார்.

ரத்தன் அமெரிக்காவில் ஏழு ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கு கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை மற்றும் பொறியியலில் பட்டம் பெற்றார். அவருக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு நல்ல வேலை மற்றும் ஆடம்பரமான வீடு ஒன்று இருந்தது. ஆனால் அவர் தனது பாட்டி மற்றும் ஜே.ஆர்.டி.யின் வற்புறுத்தலின் பேரில் இந்தியா திரும்ப வேண்டியிருந்தது.

இதனால், அவருடைய அமெரிக்க காதலியுடனான உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியாமல் போனது. அதற்குப் பிறகு ரத்தன் டாடா தனது வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தார்.

 

ஜாம்ஷெட்பூரில் ஒரு சாதாரண தொழிலாளியாக பணியில் சேர்ந்தவர்

ரத்தன் டாடாவின் வாழ்க்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த 1962ஆம் ஆண்டில், ரத்தன் டாடா ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார். கிரிஷ் குபேர் பின்வருமாறு எழுதுகிறார், "ரத்தன் ஜாம்ஷெட்பூரில் ஆறு ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கு அவர் ஆரம்பத்தில் நீல நிற மேலாடை அணிந்து, ஒரு கடைநிலை தொழிலாளியாகப் பயிற்சி எடுத்துக்கொண்டார்."

"பயிற்சி முடிந்த பிறகு அவர் திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் நிர்வாக இயக்குநர் எஸ்.கே.நானாவதியின் சிறப்பு உதவியாளர் ஆனார். அவரது கடின உழைப்பின் புகழ் பம்பாய் வரை சென்றது, ஜே.ஆர்.டி. டாடா அவரை பம்பாய்க்கு அழைத்தார்."

இதற்குப் பிறகு, ரத்தன் டாடா ஆஸ்திரேலியாவில் ஓர் ஆண்டு பணியாற்றினார். நஷ்டத்தில் இயங்கும் சென்ட்ரல் இந்தியா மில் மற்றும் நெல்கோ நிறுவனங்களை மேம்படுத்தும் பொறுப்பை ஜே.ஆர்.டி., அவருக்கு வழங்கினார். ரத்தனின் தலைமையின்கீழ், மூன்று ஆண்டுகளுக்குள், நெல்கோ நிறுவனம் மாற்றமடைந்து, லாபம் ஈட்டத் தொடங்கியது.

ஜே.ஆர்.டி. 1981ஆம் ஆண்டில், ரத்தனை ‘டாடா இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் தலைவராக்கினார். இந்த நிறுவனத்தின் டர்ன்-ஓவர் (turn over) 60 லட்சம் மட்டுமே என்றாலும், இந்தப் பொறுப்பு ரத்தன் டாடாவுக்கு முக்கியமானதாக இருந்தது. ஏனென்றால் அதற்கு முன்பு ஜே.ஆர்.டி டாடாவே இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை நேரடியாகக் கவனித்து வந்தார்.

 

எளிமையான வாழ்க்கை முறை

ரத்தன் டாடாவின் வாழ்க்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அன்றைய வணிக பத்திரிகையாளர்களும், ரத்தனின் நெருங்கிய நண்பர்களும், ‘அவரை நட்புணர்வு கொண்ட, எளிமையான, நாகரிகமான மற்றும் சுவாரஸ்யமான ஒரு மனிதராகவே’ நினைவு கூர்கிறார்கள். யார் வேண்டுமானாலும் அவரைச் சந்திக்கலாம், வழக்கமாக அவரே தொலைபேசியை எடுத்துப் பேசுவார் என்கிறார்கள்.

கூமி கபூர் பின்வருமாறு எழுதுகிறார்: "பெரும்பாலான இந்திய பில்லியனர்களுடன் ஒப்பிடும்போது ரத்தனின் வாழ்க்கை முறை மிகவும் கட்டுப்பாடாகவும் எளிமையாகவும் இருந்தது. அவரது வணிக ஆலோசகர்களில் ஒருவர், ‘ரத்தனின் பின்னால் உதவியாளர்களின் கூட்டம் இல்லாதது ஆச்சரியமாக இருந்தது’ என்று என்னிடம் கூறினார்.”

“ஒருமுறை நான் அவரது வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினேன், ஒரு இளைஞர் வந்து கதவைத் திறந்தார். சீருடை அணிந்த சேவகர்களோ, ஆடம்பரங்களோ இல்லை. மும்பையின் கும்ப்லா ஹில்ஸில் உள்ள முகேஷ் அம்பானியின் 27 மாடி ஆடம்பர மாளிகையான ஆன்டிலாவின் பளபளப்புக்கு நேர்மாறாக, அதே மும்பையின் கொலாபாவில் கடற்கரைக்கு அருகே இருக்கும் ரத்தனின் வீடு அவரது ரசனையைப் பிரதிபலிக்கிறது.”

 

ரத்தன் டாடாவை தனது வாரிசாக தேர்வு செய்த ஜே.ஆர்.டி

ரத்தன் டாடாவின் வாழ்க்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜே.ஆர்.டி 75 வயதை எட்டியபோது, அவரது வாரிசு யார் என்பது குறித்து நிறைய ஊகங்கள் இருந்தன. டாடாவின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் ஆசிரியர் ருஸ்ஸி எம் லாலா பின்வருமாறு எழுதுகிறார், "நானி பல்கிவாலா, ருஸ்ஸி மோதி, ஷாருக் சப்வாலா, எச்.என்.சேத்னா ஆகியோரில் ஒருவரைத்தான் ஜே.ஆர்.டி தனது வாரிசாகக் கருதினார். பல்கிவாலா மற்றும் ருஸ்ஸி மோதி, ஆகிய இருவர்தான் அந்தப் பதவிக்கான இரண்டு முக்கியப் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று ரத்தன் டாடாவே நம்பினார்.”

ஜே.ஆர்.டி., 1991ஆம் ஆண்டில், தனது 86வது வயதில் டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இந்தக் கட்டத்தில் அவர் ரத்தனை நோக்கித் திரும்பினார், தலைவர் பதவிக்குத் தகுதியான ‘டாடா’-வாக அவர் மட்டுமே எஞ்சியிருந்தார். ரத்தனுக்கு சாதகமான மிக முக்கியமான விஷயம் அவரது 'டாடா' என்ற குடும்பப் பெயர்தான் என ஜே.ஆர்.டி நம்பினார்.

டாடாவின் நண்பர் நுஸ்லி வாடியா மற்றும் அவரது உதவியாளர் ஷாருக் சப்வாலா ஆகியோரும் ரத்தனை தலைவராக்க ஆதரித்தனர். மார்ச் 25, 1991 அன்று டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் பொறுப்பேற்றபோது, தர்பாரி சேத், ருஸ்ஸி மோதி, அஜித் கெர்கர் ஆகிய மூன்று தலைவர்களை எவ்வாறு பலவீனப்படுத்துவது என்பதே அவருக்கு முன் இருந்த முதல் சவாலாக இருந்தது.

இந்த மூவரும் இதுவரை தலைமை அலுவலகத்தின் தலையீடு இல்லாமல் டாடா நிறுவனங்களில் பணியாற்றி வந்தனர். ஒவ்வொரு டாடா நிறுவனத்திற்கும் ஒரு முகலாய சக்கரவர்த்தி இருப்பார் என்று ரத்தனின் தந்தையும் எச்சரித்திருந்தார்.

 

டெட்லி, கோரஸ் மற்றும் ஜாகுவார் கையகப்படுத்தல்

ரத்தன் டாடாவின் வாழ்க்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

தொடக்கத்தில், ரத்தன் டாடாவின் வணிக மதிநுட்பம் குறித்துக் கேள்விகள் எழுந்தன. ஆனால் 2000ஆம் ஆண்டில், அவர் பிரிட்டனின் 'டெட்லி' (Tetley- தேயிலை பிராண்ட்) குழுமத்தை வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இது அவர்களின் சொந்த நிறுவனத்தைவிட இரண்டு மடங்கு பெரியது.

இன்று, டாடாவின் குளோபல் பிவரேஜஸ் உலகின் இரண்டாவது பெரிய தேயிலை நிறுவனமாக உள்ளது. இதற்குப் பிறகு, அவர் ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தி நிறுவனமான 'கோரஸ்'-ஐ (Corus) வாங்கினார். விமர்சகர்கள் இந்த ஒப்பந்தத்தின் திறனை கேள்விக்கு உள்ளாக்கினர். ஆனால் ஒரு வகையில், இந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் மூலம் தனது திறனையும் வணிக வலிமையையும் டாடா குழுமம் நிரூபித்தது.

கடந்த 2009 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், ரூ.1 லட்சம் விலையில் கிடைக்கும் மக்களுக்கான காராக 'நானோ'வை அவர் அறிமுகப்படுத்தினார். நானோ காருக்கு முன்னதாக, டாடா மோட்டார்ஸ் 1998ஆம் ஆண்டில் சந்தையில் 'இண்டிகா' காரை அறிமுகப்படுத்தியது. இதுவே இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட முதல் கார்.

தொடக்கத்தில் இந்த கார் தோல்வியுற்றது. இதனால் ரத்தன் டாடா அதை ஃபோர்ட் மோட்டார் நிறுவனத்திற்கு (Ford Motor Company) விற்க முடிவு செய்தார். இதற்காக அவர் டெட்ராய்ட் சென்றபோது, பில் ஃபோர்ட் அவரிடம், ‘ஏன் இந்தத் துறையைப் பற்றிப் போதுமான அறிவு இல்லாமல் இந்தத் தொழிலில் நுழைந்தீர்கள்’ என்று கேட்டார். மேலும், 'இண்டிகாவை' வாங்குவது, இந்தியாவின் டாடா நிறுவனத்திற்குப் பெரும் உதவியாக இருக்கும் என்றும் ரத்தன் டாடாவை கிண்டல் செய்தார்.

இதனால் கோபமடைந்த ரத்தன் டாடா குழுவினர் பேச்சுவார்த்தையை முடிக்காமல் திரும்பிவிட்டனர். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நிலைமை மாறியது. 2008இல், ஃபோர்டு நிறுவனம் ஆழ்ந்த நிதி நெருக்கடியில் சிக்கி, பிரிட்டிஷ் சொகுசு கார் பிராண்ட்களான 'ஜாகுவார்' மற்றும் 'லேண்ட் ரோவர்' ஆகியவற்றை விற்க முடிவு செய்தது.

அதுகுறித்து கூமி கபூர் பின்வருமாறு எழுதுகிறார், "அப்போது பில் ஃபோர்டு, ‘தனது சொகுசு கார் நிறுவனத்தை வாங்குவதன் மூலம், ஃபோர்டு நிறுவனத்திற்கு இந்திய நிறுவனமான டாடா ஒரு மிகப்பெரிய உதவியைச் செய்கிறது’ என்று ஒப்புக்கொண்டார். ரத்தன் டாடா இரண்டு பிரபலமான பிராண்டுகளை 2.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கினார்."

 

ஜாகுவார் நிறுவனத்தை வாங்கியதாக டாடா மீது எழுந்த விமர்சனங்கள்

ரத்தன் டாடாவின் வாழ்க்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சில வணிக ஆய்வாளர்கள் ரத்தன் டாடாவின் இத்தகைய பெரிய கையகப்படுத்தல்களைக் கேள்விக்கு உள்ளாக்கினர். 'டாடா ஸ்டீல் ஐரோப்பாவை’ வாங்கியது மிகப்பெரிய சுமை என நிரூபணமானது, அது டாடா குழுவை பெரும் கடனில் மூழ்கடித்தது.

டி.என்.நினன் பின்வருமாறு விவரிக்கிறார், "ரத்தனின் சர்வதேச பந்தயங்கள், அவரது ஆணவம் மற்றும் கெட்ட நேரத்தின் கலவை."

ஒரு நிதி ஆய்வாளர், "கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய வணிகத்தில் மிகப்பெரிய வாய்ப்பு தொலைத்தொடர்புகளில் இருந்தது, ஆனால் ரத்தன் தொடக்கத்தில் அந்தத் துறையை தவறவிட்டுவிட்டார்" என்கிறார்.

பிரபல பத்திரிகையாளர் சுசேதா தலால் கூறுகையில், "ரத்தன் தவறுக்கு மேல் தவறு செய்தார். 'ஜாகுவாரை' வாங்கியதன் மூலம் அவரது குழு நிதிச் சுமையின் கீழ் புதைந்தது’ என்கிறார்.

ஆனால் டாடா கன்சல்டன்சி சர்வீஸ், டிசிஎஸ் (TCS) எப்போதும் டாடா குழுமத்தை முன்னிலையில் வைத்திருந்தது. இந்த நிறுவனம் 2015ஆம் ஆண்டில் டாடா குழுமத்தின் நிகர லாபத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கியது. 2016ஆம் ஆண்டில், எந்தவொரு இந்திய நிறுவனத்தையும்விட (அம்பானியின் 'ரிலையன்ஸ்' நிறுவனத்தை விடவும்) டிசிஎஸ் நிறுவனம் மிகப்பெரிய சந்தை மூலதனமயமாக்கலைக் (capitalization) கொண்டிருந்தது.

 

நீரா ராடியா, தனிஷ்க், சைரஸ் மிஸ்திரி தொடர்பான சர்ச்சைகள்

ரத்தன் டாடாவின் வாழ்க்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த 2010ஆம் ஆண்டில், ரத்தன் டாடா மற்றும் தரகர் நீரா ராடியா இடையிலான தொலைபேசி உரையாடல் கசிந்தபோது, அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அக்டோபர் 2020இல், டாடா குழுமத்தின் நகை பிராண்டான 'தனிஷ்க்' (Tanishq) ஒரு விளம்பரத்தை அவசரமாக திரும்பப் பெற்றதும் ரத்தன் டாடாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

இந்த விளம்பரம் அனைத்து மதங்களையும் சமமாகக் கருதும் ஒன்றுபட்ட இந்தியாவை பற்றிய ஓர் உருக்கமான சித்தரிப்பைக் கொண்டிருந்தது. இந்த விளம்பரம் வலதுசாரியிடம் இருந்து விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இறுதியில், 'தனிஷ்க்' நிறுவனம் அந்த விளம்பரத்தைத் திரும்பப் பெற்றது.

ஜே.ஆர்.டி டாடா உயிருடன் இருந்திருந்தால், இதுபோன்ற அழுத்தத்தின் காரணமாக அவர் விட்டுக்கொடுத்திருக்க மாட்டார் என்று சிலர் நம்பினர். அக்டோபர் 24, 2016 அன்று டாடா குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்திரியை ஒரு மணிநேரத்திற்கும் குறைவான கால அவகாசத்தில் பதவி நீக்கம் செய்தபோது ரத்தன் டாடா மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.

ரத்தன் டாடாவின் வாழ்க்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சைரஸ் மிஸ்திரியுடன் ரத்தன் டாடா

டாடாவை நம்பகமான பிராண்டாக நிலைநிறுத்துதல்

ஆனால் இதையெல்லாம் மீறி, ரத்தன் டாடா எப்போதும் இந்தியாவின் மிகவும் நம்பகமான தொழிலதிபர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

கோவிட் பேரிடர் காலத்தில், தொற்றுநோய்ப் பரவல் மற்றும் ஊரடங்கின் பொருளாதார விளைவுகளைச் சமாளிக்க ரத்தன் டாடா, ‘டாடா அறக்கட்டளையில் இருந்து’ ரூ.500 கோடியும், டாடா நிறுவனங்கள் மூலம் ரூ.1000 கோடியும் வழங்கினார்.

ஆபத்தான சூழலில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்குத் தங்களது சொகுசு ஹோட்டல்களை பயன்படுத்த அனுமதி வழங்கிய முதல் நபரும் ரத்தன் டாடாதான். இன்றும், இந்திய டிரக் ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களின் பின்புறத்தில் 'ஓகே டாடா' (OK Tata) என்று எழுதி, இந்த டிரக் டாடாவிடம் இருந்து வந்தது, எனவே இது நம்பகமானது என்ற செய்தியைச் சொல்கிறார்கள்.

டாடா நிறுவனம் சர்வதேச அளவிலும் ஒரு மிகப்பெரிய தடத்தைப் பதித்துள்ளது. 'ஜாகுவார்' மற்றும் 'லேண்ட் ரோவர்' கார்களை தயாரிக்கிறது, மேலும் 'டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்' உலகின் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இவை அனைத்தையும் உருவாக்கியதில் ரத்தன் டாடாவின் பங்கு எப்போதும் நினைவுகூரப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெரிய ஹிந்தியை நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குனர்கள், தாபர்கள் மீது இருக்கும் நியாயமான ஒரு ஆதங்கம், இவர்கள் பிரித்தானிய காலனித்துவ வர்தக  அமைப்புக்குள் உள்வாங்கப்பட்டு, காலனிய ஆட்சியை ஆதரித்ததாகவும், காலனிய ஆட்சி நீண்டமைக்கு இவர்களும் ஒரு விதத்தில் காரணம் என்று.


அனால், காந்தியும், நேருவும் அப்படியான அணுகுமுறையை அரசு, பிரித்தானியா முடி அமைப்பு, அரச குடும்பத்துடன் கொண்டு இருந்தனர் என்பதும் உண்மை. ஆனால், பிரித்தானிய அரசை காலனித்துவ ஆட்சியை அகற்றும் வழிக்கு கொண்டுவர பாவித்தனர் என்று.

உண்மையில் எப்படி இருந்தது என்று எவருக்கும் தெரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மக்கள் மனங்களில் மறைந்தும் மறையாமல் வாழும் டாடா

ச.சேகர்

வியாபாரத் துறையில், மக்களின் நலனுக்கு முக்கியத்துவமளித்து, மக்களுக்காக சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கருமமாற்றுவது என்பது, இன்றைய உலகில் அரிதாகிவிட்டது. அவ்வாறான சூழலில், சமூக நலனுக்கு முன்னுரிமையளித்து செயற்படும் முக்கியமான வியாபாரச் செயற்பாட்டாளர்கள் எண்ணிப் பார்க்கக்கூடியவர்களே உள்ளனர்.

அதில் ஒரு முக்கியமான நபர் அண்டைய நாட்டின் உலகறிந்த ரட்டன் டாடா தனது 86வது வயதில் இயற்கை எய்தினார். 1991 ஆம் ஆண்டில் இந்தியா பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த ஒரு காலகட்டத்தில் டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்புக்கு ரத்தன் டாடா நியமிக்கப்பட்டார். அக்கால கட்டத்தில் டாடா குழுமத்தின் செயற்பாடுகள் வெறும் இந்தியாவில் மாத்திரம் அறியப்பட்டதுடன், 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருடாந்த வருமானமாக பெறும் நிறுவனமாக திகழ்ந்தது.

image_f0c000e066.jpg

இவர் 2012 ஆம் ஆண்டு வரை சுமார் இரண்டு தசாப்த காலம் டாடா குழுமத்தின் தலைப் பொறுப்பை வகித்ததுடன், அக்காலப் பகுதியில் தமது தூர நோக்குடைய தலைமைத்துவத்தினூடாக, டாடா குழுமத்தை 100 பில்லியன் வருமானமீட்டும் குழுமமாக தரமுயர்த்தியிருந்தார். நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் டாடா குழுமம் இன்று இயங்குவதுடன், உருக்கு இரும்பு (ஸ்டீல்), வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் பாவனைப் பொருட்கள் என டாடா பிரசன்னம் வியாபித்துள்ளது.

1961 ஆம் ஆண்டு டாடா குழுமத்தில் பணியாற்ற ஆரம்பித்த ரத்தன் டாடா, ஆரம்பத்தில் உருக்கு இரும்பு தொழிற்சாலையில், இரும்பு உற்பத்தியில் ஈடுபடும் ஊழியர்களுடன் பணியாற்றியிருந்தார். அவ்வாறு ஆரம்பித்த இவரின் பயணம், டாடா குழுமத்தை சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நிறுவனமாக தரமுயர்த்துவது வரை தொடர்ந்திருந்தது. நாட்டின் கீர்த்தி நாமத்தை உலகளாவிய ரீதியில் கொண்டு செல்வதற்காக இந்தியாவையும், இந்திய மக்களையும் முன்னிலைப்படுத்திய கொள்கைச் செயற்பாடு, இவரின் வெற்றிக்கு வழிகோலியிருந்தது.

பிரித்தானியாவின் தேயிலை வர்த்தக நாமமான டெட்லி (Tetley), 450 மில்லியன் அமெரிக்க டொலருக்கு இவரின் தலைமைத்துவத்தில் கீழ் டாடா குழுமம் கொள்வனவு செய்திருந்தது. இதுவே, சர்வதேச வர்த்தக நாமமொன்றை கொள்வனவு செய்த முதலாவது இந்திய நிறுவனமாக திகழ்ந்ததுடன், சர்வதேச பானத் துறையில் டாடா குழுமத்தின் பிரசன்னத்தையும் உறுதி செய்திருந்தது.

ஐரோப்பாவின் இரண்டாவது மாபெரும் உருக்கு இரும்பு (ஸ்டீல்) உற்பத்தியாளராக திகழ்ந்த கோரஸ் ஸ்டீல் (Corus Steel) நிறுவனத்தை 2007 ஆம் ஆண்டில் ரட்டன் டாடாவின் தலைமைத்துவத்தின் கீழ் டாடா குழுமம் கொள்வனவு செய்திருந்தது. அதனூடாக உலகின் மாபெரும் உருக்கு இரும்பு உற்பத்தியாளர்களில் ஒன்றாக டாடா குழுமம் வளர்ச்சி பெற்றது.

ஐரோப்பாவில் புகழ்பெற்ற வாகன வர்த்தக நாமமான ஐக்குவார் லேன்ட் ரோவர் (Jaguar Land Rover) வர்த்தக நாமத்தை டாடா குழுமம் 2008 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்திருந்தது. 2.3 பில்லியன் அமெரிக்க டொலருக்கு இந்த கொள்வனவை பூர்த்தி செய்திருந்தது. அதனூடாக, சர்வதேச வாகனங்கள் உற்பத்தியாளர்களில் ஒன்றாக டாடா குழுமத்தை தரமுயர்த்த முடிந்ததுடன், சொகுசு கார் வர்த்தக நாமங்களிலும் டாடா குழுமத்தின் பிரசன்னத்தை விஸ்தரித்தது.

இந்தியா மற்றும் இந்தியர்களுக்கு முன்னுரிமையளித்து 2008 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் விலை குறைந்த கார் எனும் கொள்கையின் பிரகாரம் டாடா நனோ காரை டாடா குழுமம் அறிமுகம் செய்ததது. ரத்தன் டாடாவின் நோக்கான, இந்திய நடுத்தர வருமானமீட்டும் வர்க்கத்தினருக்கு சகாயமான விலையில் நான்கு சர்க்கர வாகனமொன்றை பெற்றுக் கொடுக்கும் வகையில், 1 இலட்சம் இந்திய ரூபாய்களுக்கு இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. புத்தாக்கத்தினூடாக மில்லியன் கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு இதனூடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட மும்பை தாஜ் சமுத்திரா ஹோட்டல் 2008 ஆம் ஆண்டில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு இலக்கானது. இதனால் ஹோட்டலுக்கு சேதம் ஏற்பட்டதுடன், அதனை உறுதியாக மீளக் கட்டியெழுப்புவதில் ரத்தன் டாடா முக்கிய பங்காற்றியிருந்தார். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மீது இவர் காண்பித்திருந்த கரிசனையினூடாக, ஊழியர்கள் மற்றும் மக்கள் மீது அவரின் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

image_e2c8496dc6.jpg

வியாபாரத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ரத்தன் டாடா ஆற்றிய பங்களிப்புகளுக்காக அவருக்கு இந்தியாவிலும், சர்வதேச ரீதியிலும் பல விருதுகள் மற்றும் கௌரவிப்புகள் வழங்கப்பட்டிருந்தன. பத்ம பூஷன் (2000), பத்ம விபூஷன் (2008), ஐக்கிய இராஜ்ஜியம் – இந்திய உறவுகளை மேம்படுத்துவதில் இவர் ஆற்றியிருந்த பங்களிப்புக்கான இரண்டாம் எலிசபெத் மகா ராணியின் KBE கௌரவிப்பு (2009), ஆண்டின் சிறந்த வியாபார தலைமை செயற்பாட்டாளர் (2006), சமாதானத்துக்கான ஒஸ்லோ பிஸ்னஸ் விருது (2010), வாழ்நாள் சாதனையாளர் விருது (2014), வியாபாரத்தில் ஆண்டின் சிறந்த இந்தியருக்கான CNN-IBN விருது (2006) போன்றன இவற்றில் முக்கியமான சிலவாகும்.

வியாபார செயற்பாடுகளுக்கு அப்பால், ஆகாய பறப்பில் தமது ஈடுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் 2007 ஆம் ஆண்டில், F-16 Falcon பறப்பில் ஈடுபட்ட முதலாவது இந்தியர் எனும் பெருமையை பெற்றுக் கொண்டார். டாடா குழுமத்தின் மனித நேய செயற்பாடுகளில் இவர் ஆழமான ஈடுபாட்டை கொண்டிருந்தார். கல்வி, சுகாதார பராமரிப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தி போன்றவற்றில் பங்களிப்பு வழங்கும் டாடா நம்பிக்கை நிதியங்களில் இவர் நேரடியாக ஈடுபட்டிருந்தார். குழுமத்தின் செல்வங்கள் நாட்டுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்திருப்பதை இவர் தமது தலைமைத்துவ காலப்பகுதியில் உறுதி செய்திருந்தார். டாடா சன்ஸ் பங்கிலாபங்களில் 60-65 சதவீதமானவை மனிதநேய செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன.

ஒழுக்கமான முறையில் தலைமைத்துவமளித்து, வியாபார செயற்பாடுகளை நேர்மையான வழியில் முன்னெடுத்துச் செல்வது என்பதில் ரத்தன் டாடா தீவிரமாக இருந்தார். இவரின் தலைமைத்துவத்தின் கீழ் டாடா குழுமம் நம்பிக்கை, நேர்மை மற்றும் சமூக பொறுப்புணர்வு போன்றவற்றில் நன்கறியப்பட்டது. இந்தியாவில் மாத்திரமன்றி, உலகளாவிய ரீதியில் இவரின் ஒழுக்கமான மற்றும் நேர்மையான தலைமைத்துவம் என்பது பலரையும் கவர்ந்திருந்தது.

இவரின் கொள்கைகள் உறுதியானவை. தமது நிறுவனத்தின் வெற்றிக்காக ஊழியர்களை ஊக்குவிப்பதில் இவர் கையாண்ட வழிமுறைகள் சகலருக்கும் பொருந்தக்கூடியவை. அவரின் சில பொன்னான வார்த்தைகளில், “வேகமாக செல்ல வேண்டுமானால் தனியே செல். நீண்ட தூரம் செல்ல வேண்டுமாயின், இணைந்து செல்”, “உன் மீது மக்கள் எறியும் கற்கை சேகரித்து, சொந்த நினைவுச்சின்னத்தை கட்டியெழுப்ப அதை பயன்படுத்து”, “வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் எமது பயணத்துக்கு மிகவும் முக்கியம், ஏனெனில் ECG அறிக்கையில் கூட நேர் கோடு என்பதால் உயிர் பிரிந்துவிட்டது என்பதை உணர்த்துகின்றது”, ”தலைமைத்துவம் என்பது பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகும், மாறாக சாட்டுகளை தெரிவிப்பதல்ல”, “வாய்ப்புகளை உங்களை தேடி வரும் வரை காத்திருக்க வேண்டாம், உங்கள் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்”, “சரியான தீர்மானங்களை மேற்கொள்வதில் நான் நம்பிக்கை கொள்வதில்லை. தீர்மானங்களை எடுத்துவிட்டு அவற்றை சரியாக்குவேன்” போன்றன அவற்றில் சிலவாகும்.

இவரின் இழப்பு ஈடு செய்யப்பட முடியாதது என்பதுடன், இவரால் வியாபாரம், சமூகம், மற்றும் நாட்டுக்கு ஆற்றப்பட்ட பங்களிப்புகள் எதிர்காலத்திலும் நினைவில் நிலைத்திருக்கும். செல்வத்தை உருவாக்குவது என்பது இவரின் வாழ்நாள் பணியாக இருந்துவிடாமல், இந்தியாவுக்கும் அதன் மக்களுக்கும் பெறுமதியை உருவாக்குவது என்பதாக அமைந்திருந்தது. மறைந்தும் மக்கள் மனங்களில் மறையாமல் இவர் என்றும் வாழ்வார் என்பது உறுதி. 
 

 

https://www.tamilmirror.lk/வணிகம்/மக்கள்-மனங்களில்-மறைந்தும்-மறையாமல்-வாழும்-டாடா/47-345217

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person and text

 

462659749_1589248988694779_1814724865088

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Shantanu Naidu: ரத்தன் டாடாவின் உற்ற தோழன்; யார் இந்த 31 வயது இளைஞர்?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டாடா அறக்கட்டளைகளின் புதிய தலைவரான நோயல் டாடாவின் முழு பின்னணி

நோயல் டாடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நோயல் டாடா (கோப்புப் படம்)
2 மணி நேரங்களுக்கு முன்னர்

டாடா அறக்கட்டளைகளின் புதிய தலைவராக நோயல் டாடா பதவியேற்றுள்ளார். இது, டாடா குழுமத்தின் பல அறக்கட்டைகளை உள்ளடக்கியது.

நோயல் டாடா, ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர்.

ரத்தன் டாடா மும்பையில் புதன்கிழமை இரவு காலமானார். அதன் பிறகு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் புதிய தலைவர் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, 67 வயதான நோயல் நேவல் டாடா தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நோயல் டாடா ஏற்கெனவே டாடா சன்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். ரத்தன் டாடாவுக்கு பிறகு, தற்போது நோயல் டாடா சுமார் ரூ.34 லட்சம் கோடி மதிப்புள்ள டாடா குழுமத்தை வழிநடத்துவார்.

நோயல் டாடாவின் நியமனம் தொடர்பாக, டாடா அறக்கட்டளை அதிகாரபூர்வ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நோயலின் நியமனம் உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயல் டாட்டவை தேர்வு செய்தது ஏன்?

"இவ்வளவு பெரிய குழுவின் பொறுப்பில் இருப்பவர் பணிவாக இருக்க வேண்டும். அவரிடம் எந்த ஈகோவும் இருக்கக்கூடாது, பொறுப்பு கொடுக்கப்படும்போது கர்வம் இருக்கக்கூடாது..."

டாடா குழுமத்தின் வாரிசு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ரத்தன் டாடாவின் எண்ணங்கள் இவை.

தனக்குப் பின் வருபவர் தொலைநோக்குப் பார்வையுடையவராக இருக்க வேண்டும் என்றும் குறைந்தபட்சம் 20 முதல் 30 ஆண்டுகளுக்கு குழுமத்தை வழிநடத்தக்கூடிய வயதுடையவராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ரத்தன் டாடாவுக்கு திருமணமாகவில்லை, அவருக்கு குழந்தையும் இல்லை. இதனால், அவரது நெருங்கிய உறவினர்களிடம் டாடா குழுமத்தின் நிர்வாகப் பொறுப்பை அவர் ஒப்படைக்கலாம் என்ற கருத்து நிலவியது.

ரத்தன் டாடாவின் மரணத்திற்குப் பிறகு, டாடா குழுமத்தில் ரூ.34 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 66.4 சதவீத பங்குகளை வைத்திருக்கும் 13 அறக்கட்டளைகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்பதுதான் மிகப்பெரிய ஊகமாக இருந்தது.

அப்போது, டாடா அறக்கட்டளைகளின் தலைவர் பொறுப்புக்கு நோயல் டாடாவின் பெயர் வலுவாகப் பேசப்பட்டு வந்தது. நோயல் டாடா ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர்.

 
ரத்தன் டாடாவின் குடும்பம்

ஏனெனில், இந்த அறக்கட்டளைகள் அனைத்திற்கும் தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கு டாடா குழுமத்தை நடத்தும் பெரிய பொறுப்பு இருக்கும்.

இந்த அறக்கட்டளைகளுக்கு ரத்தன் டாடா எந்த வாரிசையும் அறிவிக்கவில்லை என்பதால், அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடா வலுவான போட்டியாளராக உருவெடுத்தார்.

இந்த 13 அறக்கட்டளைகளில் வலுவான சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை, சர் ரத்தன் டாடா அறக்கட்டளை ஆகியவற்றின் அறங்காவலராக நோயல் டாடா இருந்தார்.

இந்த இரண்டு அறக்கட்டளைகள் மட்டும் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 55 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளன.

எனவே, ரத்தன் டாடாவுக்கு பிறகு தலைமைப் பொறுப்புக்கு நோயல் டாடா வலுவான தேர்வாகக் கருதப்பட்டார்.

யார் இந்த நோயல் டாடா?

நோயல் டாடா, நேவல் டாடா-சிமோன் டாடாவின் மகன் மற்றும் ரத்தன் நேவல் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார்.

நோயல் டாடா பிரிட்டன் சசக்ஸில் பட்டம் பெற்றார். பின்னர், இன்சீட் (INSEAD) எனப்படும் சர்வதேச தொழிற்பயிற்சிப் பள்ளியில் சர்வதேச நிர்வாகத் திட்டத்தில் (International Executive Programme) படித்தார்.

நோயல் டாடா தற்போது டாடா இன்டர்நேஷனல் லிமிடெட், ட்ரெண்ட் (Trent), வோல்டாஸ், டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றின் தலைவராக உள்ளார்.

டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார். கடந்த 40 ஆண்டுகளாக அவர் டாடா குழுமத்துடன் இணைப்பில் உள்ளார்.

 

நோயல் டாடா எப்போது டாடா குழுமத்தில் சேர்ந்தார்?

புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சருடன் நோயல் டாடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சருடன் நோயல் டாடா

நோயல் டாடாவுக்கும் ரத்தன் டாடாவுக்கும் இடையிலான உறவு ஆரம்பத்தில் நன்றாக இல்லை. ஆனால், படிப்படியாக டாடா குழுமத்தில் நோயலின் அந்தஸ்து உயர்ந்தது. சமீப காலங்களில், டாடா குழுமத்தைக் கட்டுப்படுத்தும் அறக்கட்டளைகளில் அவர் தனது பங்கை அதிகரிக்கத் தொடங்கினார்.

பிப்ரவரி 2019இல், அவர் சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவில் இணைந்தார். முன்னதாக 2018இல், டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான டைட்டனின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மார்ச் 2022இல், அவர் டாடா ஸ்டீலின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். நோயல் 2011இல் டாடா இன்டர்நேஷனலின் தலைவராக நியமிக்கப்பட்டார், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு டாடாவின் சில்லறை வணிகச் சங்கிலியான ட்ரென்டின் (Trent) தலைவராகப் பணியாற்றினார்.

க்ரோமா, வெஸ்ட்சைட், ஜூடியோ, ஸ்டார் பஜார் போன்ற டாடா குழுமத்தின் சில்லறை வணிக சங்கிலி நிறுவனங்களை டிரென்ட் நடத்துகிறது. இருப்பினும், இதில் டாடா ஸ்டார்பக்ஸ், டைட்டன், தனிஷ்க் ஆகியவை இடம்பெறவில்லை.

டாடா வோல்டாஸ் மற்றும் டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் தலைவராக நோயல் உள்ளார்.

நோயல் டாடா 2010 முதல் 2021 வரை டாடா இன்டர்நேஷனல் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராக இருந்தார். அந்த நேரத்தில் அவர் அதன் வருவாயை 500 மில்லியன் டாலர்களில் இருந்து 3 பில்லியன் டாலர்களாக உயர்த்தினார். அவரது தலைமையில், ட்ரென்ட் 1998இல் ஒரு கடையுடன் தொடங்கப்பட்டது. ஆனால் இன்று 700 கடைகள் உள்ளன.

 

நோயல் டாடாவின் குடும்பம்

நோயல் டாடா

பட மூலாதாரம்,TATA TRUSTS

படக்குறிப்பு, டாடா குழுமத்தின் 18 சதவீத பங்குகளை வைத்திருக்கும் பல்லோன்ஜி மிஸ்திரியின் மகள் அலு மிஸ்திரியை நோயல் டாடா மணந்துள்ளார்

ரத்தன் டாடாவுக்கு 18 வயது இருக்கும்போது, அவரது தந்தை நேவல் மறுமணம் செய்துகொண்டார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த சிமோன் என்பவரை நேவல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியின் மகன்தான் நோயல் டாடா.

டாடா குழுமத்தின் 18 சதவீத பங்குகளை வைத்திருக்கும் பல்லோன்ஜி மிஸ்திரியின் மகள் அலூ மிஸ்திரியை நோயல் டாடா மணந்துள்ளார்.

எனவே, ரத்தனுக்கு பிறகு டாடா & சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக நோயல் வருவார் என்று பலரும் கணித்தனர்.

ஆனால், முன்பு இதுகுறித்த சாத்தியக்கூறுகளை மறுத்திருந்த ரத்தன் டாடா, "இவ்வளவு பெரிய குழுமத்தை வழிநடத்தும் அனுபவம் நோயலுக்கு இல்லை" என்று கூறினார். இந்நிலையில் ரத்தன் டாடாவின் மறைவுக்குப் பிறகு அந்தப் பொறுப்பு நோயலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டார் பஜார் நோயல் டாடாவின் மகன் நெவில் தலைமையில் இயங்குகிறது. அவரது மகள் லியா டாடா கேட்வே பிராண்டை நிர்வகித்து வருகிறார். அவரது இரண்டாவது மகள் மாயா டாடா, டாடா டிஜிட்டல் நிறுவனத்திற்குப் பொறுப்பாக உள்ளார். இவர்கள் மூவரும் டாடா குழுமத்தின் அடுத்த வாரிசுகளாக இருப்பார்கள் என்ற பேச்சும் அடிபட்ட நிலையில், நோயல் டாட்டாவுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரத்தன் டாடாவுக்கு அவரது வீட்டிற்கே சென்று பாரம்பரிய தமிழ் மருத்துவம் செய்த கோவை வைத்தியர்

ரத்தன் டாடா

பட மூலாதாரம்,LAKSHMANAN

படக்குறிப்பு, லட்சுமணனும் அவரது மனைவியும் 2019-ஆம் ஆண்டு மும்பைக்குச் சென்று ரத்தன் டாடாவைச் சந்தித்தனர் கட்டுரை தகவல்
  • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“ஒரு நாளுக்கு 2 மணி நேரம் வீதமாக, பல மணி நேரம் அவருக்கு அவரது வீட்டிலேயே சிகிச்சை கொடுத்தேன். அந்த நேரங்களில் எத்தனையோ விஷயங்களை எங்களிடம் அவர் பேசினார்.”

இந்த வார்த்தைகளைச் சொல்வது கோவை மருதமலையைச் சேர்ந்த வர்ம வைத்தியர் கோ.மு.லட்சுமணன். அவர் தன்னிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகக் கூறியது, மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவை.

கோவை மருதமலை அடிவாரத்தில் வர்ம முறையிலான தமிழ்ப் பாரம்பரிய வைத்திய சாலை ஒன்றை நடத்தி வருகிறார் லட்சுமணன். கடந்த 2019-ஆம் ஆண்டில், மும்பையில் ரத்தன் டாடாவின் வீட்டில் வைத்தே பல நாட்கள் அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார் இவர். ரத்தன் டாடாவின் மறைவுக்கு, தன் மனைவி மனோன்மணியுடன் மும்பைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி விட்டுத் திரும்பி வந்திருக்கிறார்.

ரத்தன் டாடாவுக்குச் சிகிச்சை அளித்தது பற்றி பிபிசி தமிழிடம் பேசினார் லட்சுமணன்.

சந்திப்பு எப்படி நிகழ்ந்தது?

ரத்தன் டாடா

பட மூலாதாரம்,LAKSHMANAN

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், டாடா குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஆர்.கே.கிருஷ்ணகுமார் தன்னை ஃபோனில் தொடர்பு கொண்டதாகச் சொல்கிறார் லட்சுமணன். “அவர் கேரள மாநிலம் தலச்சேரியைச் சேர்ந்தவர். அவர் மும்பையில் ஒரு வி.வி.ஐ.பி-க்கு நீங்கள் நேரில் வந்து சிகிச்சை அளிக்க வேண்டுமென்று கேட்டார். யாருக்கு என்று அப்போது அவர் சொல்லவில்லை,” என்கிறார்.

தொடர்ந்து, “அதற்கு நான், ‘பாரம்பரியமாக இங்கு எங்களைத் தேடி வருபவர்களுக்கு மட்டும்தான் நாங்கள் சிகிச்சை தருகிறோம். வெளியில் சென்று சிகிச்சை தருவதில்லை என்று கூறி மறுத்து விட்டேன். அதற்குப் பின் பல மாதங்களாக அவர் எங்களைத் தொடர்பு கொள்ளவேயில்லை,” என்று டாடா குழுமத்திலிருந்து முதலில் வந்த அழைப்பைப் பற்றி லட்சுமணன் கூறுகிறார்.

அதற்குப் பின், மீண்டும் டாடா குழுமத்திலிருந்து தொடர்பு கொண்டது பற்றிப் பேசிய அவர், “2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கிருஷ்ணகுமார் மீண்டும் என்னை அழைத்தார். நாங்கள் சிகிச்சை அளிக்குமாறு கேட்டது, ரத்தன் டாடாவுக்குத்தான். அவர் முதுகுவலியாலும், முழங்கால் வலியாலும் பெரிதும் அவதிப்படுகிறார். உங்களைப் பற்றி எனது தமிழ் நண்பர் ஒருவர் மூலமாகக் கேள்விப்பட்டேன். ஒரு மாதமாக உங்களின் வைத்திய நிலையம் பற்றி எங்களுடைய குழுவினர் களத்தில் நேரில் விசாரித்தனர். அவர்கள் சொன்னதை வைத்தே நான் உங்களிடம் மீண்டும் பேசுகிறேன்’ என்றார்,” என்கிறார் லட்சுமணன்.

“இதுபற்றி என் மனைவி மனோன்மணியிடம் பேசினேன். அவர், ‘நிச்சயமாக நீங்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.’ என்றார். அதன்பின், நானும் என் மனைவியும் 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பைக்குச் சென்றோம்,” என்று சிகிச்சைக்குச் சென்றது பற்றி லட்சுமணன் கூறுகிறார்.

 
ரத்தன் டாடா
படக்குறிப்பு, கோவை மருதமலை அடிவாரத்தில் வர்ம முறையிலான தமிழ்ப் பாரம்பரிய வைத்திய சாலை ஒன்றை நடத்தி வருகிறார் லட்சுமணன்

பாரம்பரியத் தமிழ் வைத்திய முறை

ரத்தன் டாடாவுக்கு சிகிச்சை அளித்தது குறித்துப் பேசிய லட்சுமணன், மும்பையில் அவருடைய வீட்டுக்கு அருகிலுள்ள கெஸ்ட் ஹவுஸிலேயே தங்களைத் தங்க வைத்ததாகச் சொன்னார்.

“அங்கிருந்தபடி, அவருடைய வீட்டிற்கே சென்று தினமும் 2 மணி நேரம் சிகிச்சை அளித்தேன். வழக்கமாக இங்கு வரும் நோயாளிகளுக்கு அதிகபட்சமாக ஐந்து நிமிடங்கள்தான் வர்ம முறையில் சிகிச்சை தருவோம். அவருக்கு உழிச்சல் முறையில் தலைமுதல் பாதம் வரை ரத்த ஓட்டத்தைச் சீராக்குவதற்கு வர்ம முறையில் சிகிச்சை அளித்தேன்,” என்கிறார் லட்சுமணன்.

தான் அளித்த சிகிச்சையில் திருப்தியடைந்த ரத்தன் டாடா பாரம்பரியத் தமிழ் வைத்திய முறையைப் பற்றி சிலாகித்துப் பேசினார், என்று பிபிசி தமிழிடம் தெரிவித்த லட்சுமணன், அப்போது ரத்தன் டாடாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் காண்பித்தார்.

இந்தச் சிகிச்சைக்கு அடுத்த மாதமே ரத்தன் டாடாவுக்குக் காலில் சற்று வீக்கம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி, கிருஷ்ணகுமார் மீண்டும் தன்னை அழைத்ததாகக் கூறுகிறார்.

“அப்போதும் அங்கு சென்று 4 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை கொடுத்தோம். அவருக்குச் சிகிச்சை அளித்த 20-லிருந்து 25 மணி நேரங்களில், எத்தனையோ விஷயங்களை எங்களிடம் அவர் பகிர்ந்து கொண்டார். பெரும்பாலும் குடும்பத்தைப் பற்றியே அதிகமாக விசாரிப்பார். ஒரு நாள், இந்த வைத்தியக் கலையை உலகம் முழுக்க எப்படி கொண்டு செல்லப் போகிறீர்கள் என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான், ‘அது என் கையில் இல்லை; உங்களிடம்தான் இருக்கிறது.’ என்று சொன்னேன். உடனே தன் கட்டை விரலை உயர்த்தி ‘தம்ஸ்அப்’ காண்பித்தார்,” என்கிறார்.

“ஒரு நாள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது, மீண்டும் அவரது குடும்பத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர், ‘விதியின் விளையாட்டு’ என்றார். அவ்வளவு பெரிய மனிதர், இவ்வளவு எளிமையாக என்னிடம் பேசியதை எப்போது நினைத்தாலும் பிரமிப்பாயிருக்கும்,” என்று ரத்தன் டாடாவின் எளிமையைப் பற்றி பிபிசி தமிழிடம் தெரிவித்தார் லட்சுமணன்.

 
ரத்தன் டாடா

பட மூலாதாரம்,LAKSHMANAN

படக்குறிப்பு, சிகிச்சைக்காக இவர்கள் மும்பை சென்றிருந்தபோது, டாடா நிறுவனங்களின் தலைவர் சந்திரசேகரையும் கிருஷ்ணகுமார் அறிமுகப்படுத்தியுள்ளார்

‘ரத்தன் டாடாவின் எளிமை வியக்கத்தக்கது’

ரத்தன் டாடாவுக்குச் சிகிச்சை அளிக்கச் சென்ற போது லட்சுமணனுடன் சென்ற அவரின் மனைவி மனோன்மணி, வர்மம், எண்ணெய், ஒத்தடம் போன்ற முறையில் சிகிச்சை கொடுத்தது பற்றி ரத்தன் டாடா ரொம்பவே ஆச்சரியப்பட்டார், என்கிறார்.

“அவருக்குச் சிகிச்சை அளித்ததற்கு எந்தப் பணமும் வேண்டாம் என்று நாங்கள் சொன்னதால், மிகவும் ஆச்சரியப்பட்டு, ‘மனோன்மணி, நீங்கள் என் மகளைப் போன்றவர். கோவைக்கு நான் வரும்போது, கட்டாயமாக உங்கள் வீட்டுக்கு வருவேன்’ என்றார். அதன்பின், கோவைக்கு அவர் வருவதாக தாஜ் ஓட்டலில் இருந்து தகவல் தெரிவித்தார்கள். ஆனால் அந்தப் பயணம் ரத்தாகிவிட்டது,” என்கிறார்.

“அவரது எளிமை வியக்கத்தக்கது. அவர் எங்கள் மீது காட்டிய அன்பை மறக்கவே முடியாது. அதனால்தான் அவரது மறைவுச் செய்தி கேட்டதும், உடனடியாக இருவரும் புறப்பட்டுச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்தோம்,” என்று ரத்தன் டாடாவுடனான சந்திப்பு அனுபவங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார் மனோன்மணி.

லட்சுமணனை மும்பைக்குச் சிகிச்சைக்கு அழைத்த ஆர்.கே.கிருஷ்ணகுமார், கடந்த 2022-ஆம் ஆண்டில் இயற்கை எய்திவிட்டார். அதற்கு முன்பாக, இந்தச் சிகிச்சைக்காக இவர்கள் மும்பை சென்றிருந்தபோது, டாடா நிறுவனங்களின் தலைவர் சந்திரசேகரையும் கிருஷ்ணகுமார் அறிமுகப்படுத்தியுள்ளார். அவரும் இவர்களுடன் பேசியுள்ளார். அந்தப் புகைப்படத்தையும் பிபிசி தமிழிடம் பகிர்ந்தார் லட்சுமணன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

11,000 வைரங்களால் உருவாக்கப்பட்ட ரத்தன் டாடா உருவப்படம்

Oruvan

இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த வாரம் அவரது 86ஆவது வயதில் காலமானார்.

இவர் வழிநடத்திய டாடா குழுமம், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்று.

பெரிய செல்வந்தராக இருந்தாலும் நல்ல மனிதராகவும் வாழ்ந்தமையால் இவரது மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வகையில் இந்தியாவின் குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் டாடா மீது அதிக அன்பு கொண்டவர்.

தான் மிகவும் நேசித்த டாடாவின் மரணத்துக்கு தனித்துவமாக அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக 11,000 அமெரிக்க வைரங்களை பதித்து ரத்தன் டாடா உருவத்தை உருவாக்கி அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்துக்கு பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அவற்றுள், “தன்னிகரற்ற தலைவரை பெருமைப்படுத்த 11,000 வைரங்கள் போதுமானதாக இருக்காது”.

“ரத்தன் டாடா தான் உண்மையான வைரம்”

“ரத்தன் டாடா எனும் வைரத்துக்கு இந்த 11,000 வைரங்கள் ஈடாகாது”

இவ்வாறு மக்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதன் மூலம் ரத்தன் டாடா மீது மக்களுக்கு இருக்கும் அன்பும் மதிப்பும் வெளிப்படுகின்றது.

 

https://oruvan.com/india/2024/10/14/a-unique-tribute-is-the-ratan-tata-portrait-made-of-11000-diamonds



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.