Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1324206.jpg  
 

’ஜெய் பீம்’ படம் மூலம் தமிழ் சினிமா பார்வையாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் த.செ.ஞானவேலும், ‘ஜெயிலர்’ பெற்ற வெற்றியை தக்கவைக்கும் முனைப்பில் இருந்த ரஜினியும் கைகோத்துள்ள படம்தான் ‘வேட்டையன்’. டீசர், ட்ரெய்லர் வெளியானபோதே என்கவுன்டரை நியாயப்படுத்தும் காட்சிகளுக்காக விமர்சிக்கப்பட்டது. அந்த விமர்சனங்களுக்கான விடை படத்தில் இருந்ததா என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

தமிழகத்தின் பிரபலமான என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி அதியன் (ரஜினிகாந்த்). ‘தாமதமான நீதி... மறுக்கப்பட்ட நீதி’ என்ற கொள்கையுடன் மோசமான ரவுடிகளை என்கவுன்டர் செய்து வருபவர். இன்னொரு பக்கம் என்கவுன்டருக்கு எதிரான மனநிலை கொண்டு, அதைக் கடுமையாக எதிர்க்கும் ஓய்வுபெற்ற நீதிபதி சத்யதேவ் (அமிதாப் பச்சன்). போதைப் பொருள் பிரச்சினை குறித்து ரஜினிக்கு கடிதம் எழுதும் அரசுப் பள்ளி ஆசிரியை மர்ம நபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழக்கிறார். இந்தக் கொலையை செய்தது யார் என்று கண்டுபிடித்து, அவரை என்கவுன்டர் செய்ய முடிவு செய்யும் ரஜினி, தனது நோக்கத்தில் வெற்றி பெற்றாரா என்பதுதான் ‘வேட்டையன்’ சொல்லும் கதை.

’ஜெய்பீம்’ மூலம் கஸ்டடி மரணத்தை பற்றிய உண்மைக் கதையை தழுவி அதை உணர்வுபூர்வமாகவும், ஜனரஞ்சமாகவும் சொல்லி வெற்றி பெற்ற ஞானவேல் தற்போது போலி என்கவுன்டர் பிரச்சினையை அதுவும் தமிழகத்தில் என்கவுன்டர்கள் அதிகரித்திருக்கும் ஒரு சூழலில் சரியான நேரத்தில் கையில் எடுத்திருக்கிறார். ரஜினி என்ற ஒரு பிரம்மாண்ட பிராண்டின் மூலம் முடிந்தவரையில் தான் சொல்லவந்த கருத்தை சிறப்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.

 

படம் தொடங்கிய முதல் 20 நிமிடங்கள் ரசிகர்களுக்கான மாஸ் திருவிழா. ரஜினியின் இன்ட்ரோ தொடங்கி, அடுத்து ‘மனசிலாயோ’ பாடல் வரை ரஜினி ரசிகர்களுக்கு விருந்து. குறிப்பாக வில்லனின் சுருட்டு பறந்து கீழே விழும்போது அதன் துளை வழியே ரஜினியை காட்டும் ஷாட்டில் தியேட்டர் தெறிக்கிறது. தேவையற்ற ‘வளவள’ காட்சிகள் எதுவுமில்லாத கதாபாத்திர அறிமுகம் முடிந்து படம் ஞானவேல் பாணிக்கு மாறிவிடுகிறது. துஷாராவின் பின்னணி, தொடர்ந்து அவரது மரணம், அதன் பிறகான விசாரணை என படம் அடுத்தடுத்த காட்சிகளுக்கு நகர்ந்துகொண்டே செல்கிறது. என்கவுன்டருக்கு பின்னால் நடக்கும் விஷயங்களை போகிற போக்கில் பேசாமல் ஆழமாக பேசிய விதம் அருமை. முதல் பாதி முழுவதுமே ஒரு சில யூகிக்க கூடிய காட்சிகளை தவிர பெரிதாக குறைசொல்ல எதுவும் இல்லை.

படத்தின் பிரச்சினை இரண்டாம் பாதியில் தொடங்குகிறது. ஒன்று, முழுமையான ரஜினி படமாக இருந்திருக்க வேண்டும் அல்லது ’ஜெய்பீம்’ பாணியிலான படமாக சென்றிருக்க வேண்டும். ஆனால் இரண்டாம் பாதி இந்த இரண்டுக்கும் பல இடங்களில் நடுவே சிக்கிக் கொண்டு தவிக்கிறது. சீரியசான இன்வெஸ்டிகேட் த்ரில்லர் முயற்சியில் இடையிடையே சொருக்கப்பட்ட ரஜினிக்காகவே வைக்கப்பட்ட சில மசாலா காட்சிகள் சுத்தமாக எடுபடவில்லை. ரஜினி ரசிகர்களுக்காகவே வைக்கப்பட்ட அந்தக் காட்சியில் அவர்களே அமைதியாகத்தான் உட்கார்ந்திருந்தனர். உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நகரவேண்டிய கதையில் இப்படியான பரிசோதனை முயற்சியை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். அவை இரண்டாம் பாதியை தொய்வடையச் செய்கின்றன.

 

 

ரஜினி வழக்கமாக ஸ்டைலாக நடந்து வருவது, கண்ணாடியை தூக்கிப் போட்டு மாட்டுவது ஆகியவற்றை தாண்டி இந்தப் படத்தில் தனது நடிப்பு பரிமாணத்தையும் காட்டியிருக்கிறார். செய்த தவறுக்காக குற்ற உணர்ச்சியில் உழலும் காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ரஜினிக்கு அடுத்தபடியாக படம் முழுக்க தனது வசீகர நடிப்பால கவர்வது பேட்ரிக் என்ற கதாபாத்திரத்தில் வரும் ஃபஹத் ஃபாசில். படம் முழுக்க அவர் அடிக்கும் கவுன்டர்கள் ரசிக்க வைக்கின்றன. இதற்கு முன்னால் வெளியான ‘ஆவேஷம்’ படம் பெரிய ஹிட் அடித்தாலும் இதுபோன்ற ஒரு கேரக்டர்களிலும் தயங்காமல் நடிக்கும் ஃபஹத் போற்றுதலுக்குரியவர். ஓய்வுபெற்ற நீதிபதியாக வரும் அமிதாப் பச்சன் தனது தேர்ந்த நடிப்பால் ஈர்க்கிறார். துஷாரா விஜயன், ரித்திகா சிங் இருவருக்குமே வலுவாக கதாபாத்திரம். இருவருமே அதை நிறைவாக செய்துள்ளனர்.

 

படத்தில் வீணடிக்கப்பட்டது மஞ்சு வாரியர்தான். படத்தில் அவருக்கு பெரிதாக வேலையே இல்லை. க்ளைமாக்ஸுக்கு முன்பாக அவருக்கு வைக்கப்பட்ட ஒரு ‘மாஸ்’ காட்சி மட்டுமே ஓகே ரகம். அதேபோல ராணாவுக்கான காட்சிகளும் வலுவாக எழுதப்படவில்லை. படம் தொய்வடையும் பல இடங்களில் காப்பாற்றுவது வழக்கம் போல அனிருத். ஏற்கெனவே வைரல் ஹிட்டான ‘மனசிலாயோ’, ‘ஹன்டர்’ பாடல்கள் படத்தில் சரியாகவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது.

 

17285512251138.jpg

படத்தின் பெரிய பலவீனங்களில் ஒன்று, யூகிக்க கூடிய வகையில் பல காட்சிகள் இருப்பது. படத்தின் இன்னொரு பிரச்சினை, எந்த இடத்திலும் எமோஷனலாக தொடர்புப்படுத்திக் கொள்ளமுடியாதது. அப்படியாக வைக்கப்பட்ட காட்சிகளும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. யூடியூப் வீடியோ, டிவியை பார்த்து பொதுமக்கள் பேசிக் கொள்வதாக வரும் காட்சிகளும் அதீத சினிமாத்தனத்துடன் இருக்கின்றன.

 

க்ளைமாக்ஸில் காட்டப்படும் ஹீரோயிச காட்சியெல்லாம் படம் பேசும் கருத்தியலுக்கு அழகானதாக படவில்லை. படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது போலீஸ் என்கவுன்டரை நியாயப்படுத்துவது போன்ற வசனங்கள் வருவதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. நீதிமன்றத்தில் வழக்கு கூட தொடர்ப்பட்டது. ஆனால் அந்த விமர்சனங்களுக்கெல்லாம் படத்தில் தெளிவான பதிலை கொடுத்தது சிறப்பு.

 

படத்தின் குறைகளை தாண்டி படம் பேசியுள்ள கருத்து மிக முக்கியமானது. அதை ரஜினி என்ற ஆளுமையைக் கொண்டு பேசியிருப்பது வரவேற்கப்படவேண்டிய முயற்சி. நாட்டுக்கு தேவை விரைவான நீதியே தவிர அவசரமான நீதி அல்ல என்ற கருத்தை உரக்க பேசிய ஞானவேலை மனதார பாராட்டலாம். மாஸ் காட்சிகளுக்காக மெனக்கெட்டதை தவிர்த்து இரண்டாம் பாதியில் வரும் சில தொய்வுகளில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் பெரிதாக கொண்டாடப்பட்டிருப்பான் இந்த ‘வேட்டையன்’.

வேட்டையன் Review: ஞானவேலின் ‘மெசேஜ்’ + ரஜினியின் ‘மாஸ்’ கலவை எப்படி? | Vettaiyan Movie review - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டையன் – போலி முற்போக்கு மசாலா சினிமா!

-தயாளன்

 

maxresdefault-1-2.jpg

ஒரு பக்கா ரஜினி படத்தை சமகால சமூக பிரச்சினைகளை உள்ளடக்கி சொல்ல முயன்றுள்ளனர். வாழைப் பழத்தில் ஊசி சொருகுவது போல, பல விஷமத்தனமான விஷயங்களை அதி சிறந்த தொழில் நுட்பத்தில் மாஸாக காட்டிக் கொண்டே, கடைசியில் முற்போக்கு படம் போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறார் இயக்குனர் ஞானவேல்;

ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முற்போக்கு கருத்துக்களை பேசி வெளியாகி இருக்கிறது வேட்டையன்.  ஜெய்பீம் படத்தின் மூலம் நல்ல சினிமா படைப்பாளியாக பேசப்பட்டவர் ஞானவேல்.

படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக போலீஸ்காரர் வேடத்தில் ரஜினி நடித்திருக்கிறார். கொடுரமான குற்றங்களை செய்யும் யாரையும் ஈவிரக்கமில்லாமல் சுட்டுத் தள்ளுகிறார். கதையில் அதியனாக அறிமுகக் காட்சியில் வழக்கமான பில்டப் காட்சிகளுடனும் இரைச்சலான பின்னணி இசையோடு தோன்றுகிறார் ரஜினி.  ஸ்டைலிஷ்ஷான கோணங்களும், ஸ்லோமோஷனில் காட்டப்படும் தோற்றங்களுமாக ரஜினி ரசிகர்களின் பேராதரவைக் கோருகிறார் இயக்குனர்.

1324206.jpg

படத்தின் முன்னோட்ட காட்சிகளிலேயே என்கவுண்டர் காட்சிகளை ரொமாண்டிசைச் செய்வது தெரிகிறது. ரஜினியின் ஆக்‌ஷன் காட்சிகளும், ஸ்டைல் காட்சிகளும், பஞ்ச் வசனங்களும் வழக்கமான ரஜினி படத்தை நினைவுபடுத்தியது.

படம் நீட் கோச்சிங், போதை, செம்மரம் கடத்தல், பெண்கள் மீதான குற்றம் என்று பல இடங்களுக்கு தாவி முடிவடைகிறது. படம் தொடங்கும் போது, ரஜினி ரசிகர்களுக்கான விருந்தளிக்கும் படத்தைப் போல காட்சியளித்து பின்பு என்கவுண்டர் என்னும் அநீதியை கண்டிப்பதாக முதல் பாதியும்,  அதன் பின் நீட் கோச்சிங் செண்டர் வணிக அரசியலை பேசுவதாக இரண்டாம் பாதியும் அமைந்துள்ளது.

போதை மருந்து கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடித்த கையோடு டெக்னிக்கலாக தப்பிக்க வைத்து சுட்டுக் கொல்கிறார் ரஜினி. கூடவே அவர்களுக்கு உதவிய போலீஸ்காரரும் சாகிறார்.  ரஜினி விசாரணையில் தப்பி விடுகிறார்.  ரஜினிக்கு உதவும் துஷாரா  வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதை விசாரிக்கும் போலீஸ் குணா என்பவரை கைது செய்கிறது. ஆனாலும் அவர் தப்பி விடுகிறார். அவரை கொல்ல ரஜினி அழைக்கப்பட்டு என்கவுண்டர் செய்கிறார்.  ஒரு கட்டத்தில் அப்பாவி ஒருவரை கொலை செய்வதில் மனமாற்றம் அடைகிறார் ரஜினி. அதன் பின் அமிதாப் அறிவுரையில் உண்மை குற்றவாளிகளை தேடி அவர்களுக்கு  சட்டப்படியான தண்டனை வாங்கி தருகிறார்.

1324706-1024x588.jpg

என்கவுண்டரை தவறு என்று படம் நல்ல கருத்தைத் தானே பேசுகிறது என்று பொத்தாம் பொதுவாக சொன்னாலும், என்கவுண்டர் காட்சிகளும் அது படமாக்கப்பட்டிருக்கும் விதமும் படத்தின் மையக் கருத்துக்கு நேர் எதிராக இருக்கிறது.  பட்டாசு கொளுத்துவது போல் என்கவுண்டர்களை அதிரடியான இசையின் பின்னணியில் கொண்டாட்டமாக காட்டிக் கொண்டே, அப்பாவிகளை என்கவுண்டர் செய்வது தவறு என்று தடாலடியாக கதை சொல்வது இது ஒரு போலியான படம் என்பதை உணர்த்துகிறது.

கிராமப்புறங்களில் “கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை” என்று சொலவடை உண்டு.  அது வேட்டையன் பட இயக்குனர் ஞானவேலுக்கு பொருந்தும். வேட்டையனை பொறுத்த வரை ரெண்டுங் கெட்டான் நிலையில் மாஸ் படமாகவும் இல்லாமல், கிளாஸ் படமாகவும் இல்லாமல் போலி முற்போக்கு முகமூடி கிழிந்து தொங்குகிறது.

சொல்ல வந்த கருத்தில் நேர்மைத் தன்மையுடன் கதையை நம்பி அதற்கான அர்ப்பணிப்புடன் இயக்கி இருந்தால் தமிழின் முக்கியமான படமாக இருந்திருக்கக் கூடும் வேட்டையன். மாஸ் நடிகர்களை நம்பி வணிக வெற்றியும், பான் இந்தியா மோகமுமாக ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்று திசை மாறி, குப்புற கவிந்திருக்கிறார் இயக்குனர் ஞானவேல். இந்த படத்தை ரஜினி, அமிதாப், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியார், ரித்திகா, அபிராமி போன்ற பெரும் நட்சத்திர பட்டாளங்களை நம்பி எடுத்திருக்கிறாரேயன்றி, கதையையோ, கண்டெண்டையோ நம்பியல்ல என்பதிலேயே படம் தோல்வி அடைந்து விடுகிறது.

தனது ஜெய்பீம் படத்தில் சூர்யாவை நடிக்க வைத்தாலும், அளவு மீறாமல் கதையை முன்னிலைப்படுத்தி இயக்கியிருந்தார் ஞானவேல்.  ஆனால்,இதில் கதையின் இயல்புக்கு மாறாக பில்டப் காட்சிகளால் ரஜினியை முன்னிலைப்படுத்தி கதை சொல்லியதால் சறுக்கி இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த போர்த் தொழில் படத்தில் சரத்குமாரும், அசோக் செல்வனும் கச்சிதமாக காஸ்டிங் செய்யப்பட்டிருந்தனர்.

hq720-3.jpg

பெரும் நடிகரான அமிதாப்பச்சன் ஏதோ துணை நடிகரைப் போல வந்து போகிறார். இன்னொரு மகத்தான நடிகரான பகத் பாசிலை காமெடி நடிகராக்கி, அவரையும் சுட்டுக் கொலை செய்து விடுகின்றனர். அதில் நடித்திருக்கும் ரக்‌ஷனையே பேட்ரி பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கலாம். அதற்கு மேல் அந்த பாத்திரத்தில் எதுவுமில்லை.

பெண்களிடம் வழிவது, விதம் விதமாக திருடுவது, சின்ன சின்ன காமெடிகளை உதிர்ப்பதற்கு எதற்கு பகத் பாசில்? இது போல், ராணா, ரித்திகா, மஞ்சுவாரியார், அபிராமி ஆகிய அத்தனை பேரின் நடிப்பும் வீணடிக்கப்படிருக்கிறது. எல்லா மொழிகளிலும் ஒவ்வொருவரை நடிக்க வைத்தால் படம் அந்தந்த மாநிலங்களில் வசூலைக் குவிக்கும் என்ற கற்பனைக்கு பலியாகி இருக்கிறார் இயக்குனர்.

படத்தின் திரைக்கதை வலுவாக முதலில் எழுதப்பட்டு பின்பு ஸ்டார் நடிகர்களின் இமேஜிக்காக திருத்தப்பட்டு, அதன் பலவீனமான நிலையை அடைந்திருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது. பெரும்பாலான காட்சிகள் வசனங்களாலேயே சொல்லப்படுகின்றன. கதையில் நிகழும் திருப்பங்களை பார்வையாளர்கள் ஏற்கனவே யூகித்து விடுகிறார்கள். ரஜினியின் தோற்றமும்,  படத்தின் உருவாக்கத்தில் செய்யப்பட்டு இருக்கும் ட்ரீட்மெண்ட்டும் ரஜினியின் முந்தைய படமான ஜெயிலரை நினைவூட்டுகிறது.

படத்தின் மையக் கருத்தாக அப்பாவிகளை என்கவுண்டர் செய்ததைத் தான் ஹீரோ தவறு என்று புரிந்து கொள்கிறார். என்கவுண்டர் என்ற சட்ட விரோதத்தை செய்த ஹீரோ எந்த விசாரணைக்குமோ, தண்டனைக்குமோ உள்ளாவதில்லை.  ஹீரோ, அப்பாவியை கொலை செய்ததற்கு பிராயசித்தமாக உண்மையான குற்றவாளியை கைது செய்வேன் என்று சத்தியம் செய்து விட்டு, அதே பிஜிஎம், அதே ஹைஸ்பீடு, ஸ்டைலாக கிளம்பி விடுகிறார். இந்த இடத்தில் ரஜினியின் பாத்திரப் படைப்பு நொறுங்கி விடுவதோடு, மொத்த படமும் அதல பாதாளத்தில் சரிகிறது.

படத்தின் திரைக்கதையில் தர்க்க ரீதியான ஏராளமான பிழைகள். வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்படும் அந்த காட்சி தேவைக்கும் அதிகமாக மீண்டும், மீண்டும் காட்டப்படுகிறது. அந்த கொலை காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் விதமும் கேமரா கோணங்களும் குரூரமாக இருக்கிறது. ஒரு நேர்மையான இயக்குனர் நிச்சயம் இவ்விதம் எடுக்கவே மாட்டார்.

சண்டைக் காட்சிகளில் ரஜினி தனி மனிதனாக நின்ற இடத்தில் இருந்தே அனைவரையும் அடித்து துவைக்கிறார். ஒரு கையை தூக்கினால் ஒருவர் வீழ்கிறார். இன்னொரு கையில் இன்னொருவர். அனிமேஷன் கேம் ஷோ மாதிரி இருக்கிறது.  லோகேஷ் கனகராஜ், நெல்சன் படக் காட்சிகளை நினைவூட்டக் கூடியதாக பல காட்சிகள் வருகின்றன.

படத்தின் மிகப் பெரிய சாபக் கேடு அனிருத்தின் இசை இரைச்சல். படம் முழுக்க ஒரே லூப் மாதிரியான இசை. ரீ ரீக்கார்டிங் என்ற அம்சத்தையே கேலிக் கூத்தாக்கி இருக்கிறார் அனிருத்.  ஒரே விதமான பாடலை எத்தனை படத்தில் தான் கேட்பதோ. மனசில்லாயோ என்ற பாட்டை ஏற்கனவே இரண்டு மூன்று படங்களில் கேட்டதை போன்ற நினைவு.

ஆழமான கண்டெண்டை எடுத்துக் கொண்டு, நல்ல மெஸேஜ் என்ற பெயரில் மோசமான வணிக சினிமாவை இயக்கி இருக்கிறார் ஞானவேல். இந்த படத்தின் வசூல் இது போன்ற பாசாங்குத்தனமான பல படங்கள் வருவதற்கு வழி வகுக்கலாம். இது தமிழ் சினிமாவுக்கும் நல்லதல்ல.

டாஸ்மாக் கடைகளில் “மது குடிப்பது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு” என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும். அது எவ்வளவு நகை முரணோ அப்படி இருக்கிறது வேட்டையன்.  ஒரு புறம் என்கவுண்டரை மிக ஸ்டைலிஷ்ஷாக படமாக்கி, அதை கொண்டாட்டமாக முன்வைத்து விட்டு, “அப்பாவிகளை என்கவுண்டர் செய்வது தவறு” என்று லேபிள் ஒட்டி வியாபாரம் செய்திருக்கிறார்கள்.

நீட் கோச்சிங் சென்டர்களின் வணிக சூதாட்டத்தை அம்பலப்படுத்திக் கொண்டே, சினிமா சூதாட்டத்தை நுட்பமாகவும், தந்திரமாகவும் செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் தற்போது கிட்டத்தட்ட அத்தனை திரைகளையும் வேட்டையன் மட்டுமே ஆக்ரமித்திருக்கிறது.  எல்லா ஷோவும் எல்லா திரைகளும் வேட்டையன் மட்டுமே. மற்ற எளிய சிறு பட்ஜெட் படங்களுக்கு வாய்ப்பில்லை.

ஏற்கனவே நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் சிறந்த படங்களான மெய்யழகன், லப்பர் பந்து  போன்ற படங்களை அத்தனை திரையரங்குகளும் தூக்கி விட்டன.  வேட்டையன் தனது வசூலை வேட்டையாடி முடிக்கும் வரை வேறு எந்த படத்திற்கும் திரையிட வாய்ப்பில்லை.  இது இந்தப் படத்தின் வில்லன் செய்யும் அராஜகத்தை விட மோசமானது.

ரஜினியை நம்பி படமெடுத்துள்ள ஞானவேலின் வேட்டையன் கன்டென்டில் மட்டும் முற்போக்கு காட்டுவது போலியானது. ரஜினி சாருக்கு நமது வேண்டுகோள் “போதும் சார் உங்கள் வேட்டை. ஓய்வெடுங்கள். நலம் பெற வாழ்த்துகள்”

திரை விமர்சனம்; தயாளன்

 

https://aramonline.in/19458/vettaiyan-rajini-cinema-review/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.