Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் இதெல்லாம் சகஜமில்லை – நிலாந்தன்.

adminOctober 20, 2024
spacer.png

வியட்நாமின் தந்தை என்று அழைக்கப்படும் கோசிமினின் வாக்கியம் ஒன்று உண்டு”மக்களிடம் செல்லுங்கள். மக்களுக்கு உண்மையைச் சொல்லுங்கள். மக்கள் உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தருவார்கள்” என்று.

மக்களுக்கு உண்மையைச் சொல்வதற்கு தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் தயார்? கடந்த பல தசாப்தங்களில் தமிழ்கட்சிகளும் கட்சிகளின் தலைவர்களும் தமிழ்மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன?தமிழ்த்தேசியக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்ட விடயங்களில் எத்தனை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன? அவை ஏன் நிறைவேற்றப்படவில்லை? எல்லாப் பழியையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மீது சுமத்திவிட்டு தமிழ் தலைவர்கள் தங்கள் தோல்விகளுக்குப் பொறுப்புக்கூறாமல் தப்பி வந்திருக்கிறார்களா? தங்களால் முடியாமல்போன விடயங்களுக்காக யாராவது தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்களா? கடந்த பல தசாப்த காலமாக தமிழ் அரசியலில் பொறுப்பு கூறாமை என்பது ஒரு பண்பாடாக வளர்ந்து விட்டது.

தலைமைத்துவம் என்பது வெற்றிக்கும் தோல்விக்கும் பொறுப்புக்கூறுவது. நல்லதுக்கும் கெட்டதுக்கும் பொறுப்புக் கூறுவது.வரவுக்கும் செலவுக்கும் பொறுப்புக் கூறுவது. ஆனால் தமிழ் அரசியலில் எத்தனை பேர் அவ்வாறு பொறுப்பு கூறியிருக்கிறார்கள்? தமது தேர்தல் அறிக்கைகளுக்கு எத்தனை பேர் பொறுப்புக் கூறியிருக்கிறார்கள்?

இந்த விடயத்தில் ஆயுதப் போராட்டத்தை தனியாக ஆராய வேண்டும். ஆனால் ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரும் பின்னருமான மிதவாத அரசியலை தொகுத்துப் பார்த்தால் எத்தனை தலைவர்கள் தமது தோல்விகளுக்கு பொறுப்பு கூறியிருக்கிறார்கள்?

உள்ளதில் பெரியதும் மூத்ததும் ஆகிய கட்சி தமிழரசுக் கட்சி. அதற்கு ஆங்கிலத்தில் பெடரல் பார்ட்டி என்றும் பெயர் உண்டு. கடந்த 74 ஆண்டுகளாக, தனது பெயரில் உள்ள பெடரலை அதாவது சமஸ்டியை ஏன் அடைய முடியவில்லை என்பதற்கு அந்தக் கட்சி தன் மக்களுக்கு எப்போதாவது பொறுப்புக் கூறியிருக்கிறதா? தன் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத செல்வநாயகம், அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்காமல், மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னாரா?

1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றியது தமிழர் விடுதலைக் கூட்டணி. சில ஆண்டுகளிலேயே, 81ஆம்ஆண்டு மாவட்ட அபிவிருத்திசபைத் தேர்தல்களை நோக்கிச் சரணடைந்தது. அதற்கு அவர்கள் பொறுப்புக் கூறினார்களா? மன்னிப்பு கேட்டார்களா?

நவீன தமிழ் அரசியல் வரலாற்றில் தமிழ்மக்கள் ஆகக்கூடிய நாடாளுமன்ற ஆசனங்களை பெற்றிருந்த காலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தேர்தல் கேட்ட காலகட்டம் தான். 22 ஆசனங்கள் கிடைத்தன. ஆனால் இலங்கைத்தீவின் அரசியல் வரலாற்றில் தமிழ் பிரதிநிதித்துவம் உச்சமாக இருந்த அக்காலகட்டத்தில்தான், 2009ஆம் ஆண்டின் முற்பகுதியில், மிகக்குறுகிய காலகட்டத்திற்குள் அதிக தொகை மக்கள் இனஅழிப்பு செய்யப்பட்டார்கள். அதாவது ஆகக்கூடுதலான ஆசனங்களை தமிழர்கள் பெற்றிருந்த ஒரு காலகட்டத்தில்தான், அதிக தொகை தமிழ்மக்கள் இனஅழிப்பு செய்யப்பட்டார்கள். 22 ஆசனங்களினாலும் அந்த இனஅழிப்பை தடுக்க முடியவில்லை. அது கூட்டமைப்பின் தோல்வியும்தான். அதற்கு கூட்டமைப்பு பொறுப்புக் கூறியதா?

2009க்குப்பின் கடந்த 15ஆண்டுகளிலும் தமிழ் கட்சிகள் தமது தேர்தல் அறிக்கைகளில் வெவ்வேறு வகைப்பட்ட வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றன. இவற்றில் இத்தனை நிறைவேற்றப்பட்டன? நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுக்கு எந்தக் கட்சியாவது பொறுப்புக்கூறியதா? அவற்றை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டதா?

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது, தேசத்தைக் கட்டியெழுப்பும் வழியில் எதுவரை முன்னேறியுள்ளது? பரிகார நீதியை நோக்கி எதுவரை முன்னேறியுள்ளது?என்று தமிழ் மக்களுக்கு விளக்கம் கொடுக்குமா? இன அழிப்புக்கு எதிராக இலங்கை அரசைப் பொறுப்புக்கூற வைக்கும் விடயத்தில் ஏனைய கட்சிகளைவிட தான் நேர்மையாகவும் துணிச்சலாகவும் உண்மையாகவும் நடப்பதாகக் கூறும் முன்னணி, அந்த விடயத்தில் கடந்த 15 ஆண்டுகளில் எதுவரை முன்னேறியிருக்கிறது என்பதனை தமிழ் மக்களுக்கு எடுத்து கூறுமா? தன்னுடைய சமரசத்துக்கு இடமற்ற வெளியுறவுக் கொள்கை காரணமாக கடந்த 15 ஆண்டுகளில் தான் பெற்றுக்கொண்ட வெற்றிகளைக் குறித்து அக்கட்சி தமிழ் மக்களுக்கு உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறுமா?

எல்லாருமே தமிழ் மக்களின் மறதியின் மீதே தமது தேர்தல் வெற்றிகளை முதலீடு செய்கிறார்களா? ஆம் கடந்த 15 ஆண்டுகளாக மட்டுமல்ல, அதற்கு முன்னரும் பொறுப்புக்கு கூறாமை என்பது தமிழ் அரசியலில் ஒரு பண்பாடாகவே வளர்ந்துவிட்டது. தமிழ்க்கட்சித் தலைவர்களில் பலர் தமது தவறுகளுக்கும் தோல்விகளுக்கும் இயலாமைகளுக்கும் மன்னிப்புக் கேட்டதில்லை. அதாவது பொறுப்பு கூறியதில்லை.

ஆனால் கடந்த வாரம் தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் ஊடகங்கள் முன்னிலையில் மக்களுக்கு உண்மையை கூறினார்கள்; பொறுப்புக் கூறினார்கள்.

தமிழ்மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பு ஏப்ரல் மாத கடைசியில் உருவாகியது. அது பின்னர் கட்சிகளோடு இணைந்து ஒரு பொதுக்கூட்டமைப்பை உருவாக்கியது. அப்பொது கட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை முன் நிறுத்தியது. பொது வேட்பாளர் தமிழரசியலில் ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்ற ஒருவராக மேலெழுந்தார். அரசற்ற சிறிய இனம் ஒன்று அரசாங்கம் அறிவிக்கும் ஒரு தேர்தலை எப்படி வித்தியாசமாக படைப்புத் திறனோடு, விவேகமாக,கையாள முடியும் என்பதற்கு பொது வேட்பாளர் ஒரு முன்னுதாரணம். அரசற்ற மக்கள், அரசாங்கம் அறிவிக்கும் ஒரு தேர்தலை எப்படி வெற்றிகரமாகக் கையாண்டு தமது கூட்டு விருப்பத்தை வெளிப்படுத்தலாம் என்பதற்கும் அது ஒரு முன்னுதாரணம்.

ஆனால் அந்த வெற்றியைக் கொண்டாட முடியாத அளவுக்கு சில நாட்களிலேயே நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழ்மக்கள் பொதுச்சபை தேர்தலில் பங்குபற்றுவதில்லை என்று முடிவெடுத்தது. அதனால் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகித்த இரண்டு கட்சிகள் கட்டமைப்பிலிருந்து விலகின. விளைவாக பொதுக் கட்டமைப்பு செயலிழந்தது.

தமிழ்மக்கள் பொதுச்சபையானது தொடர்ந்து பொதுக் கட்டமைப்பாக தேர்தலை எதிர்கொண்டிருக்க வேண்டும் என்ற விருப்பம் சங்குக்கு வாக்களித்த மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகின்றது. ஒரு வெற்றியை காட்டிய பொதுகட்டமைப்பு அடுத்த தேர்தலில் தங்களுக்கு வழிகாட்டத் தவறிவிட்டது என்று அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

தமிழ்மக்கள் பொதுச்சபைக்குள்ளும் இது தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. நாடாளுமன்றத் தேர்தலைக் கையாள வேண்டும் என்று ஒரு தரப்புக் கூறியது.ஆனால் தேர்தல்களை தொடர்ச்சியாக கையாள்வது ஒரு மக்கள் அமைப்பின் வேலை அல்ல என்று மற்றொரு தரப்புக் கூறியது.ஜனாதிபதித் தேர்தலை தேசத்தை திரட்டுவதற்கான ஒரு களமாக பயன்படுத்துவதே தமிழ் மக்கள் பொதுச் சபையின் இலக்காக இருந்தது.அதில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியும் பெற்றது.ஜனாதிபதித் தேர்தலுக்கான களநிலவரம் அத்தகையது.ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் அத்தகையது அல்ல. அங்கே கட்சிகளும் சுயேச்சைகளும் விருப்பு வாக்குகளும் வாக்காளர்களை சிதறடிக்கும்.அதாவது தேசத்தைச் சிதறடிக்கும். எனவே தேசத்தைச் சிதறடிக்கும் ஒரு தேர்தல் களத்தில் தாமும் இறங்கி மக்களைச் சிதறடிக்க முடியாது என்று பொதுச் சபைக்குள் ஒரு பிரிவு வாதிட்டது.

மக்கள் அமைப்பில் காணப்படும் கடற் தொழிலாளர் சங்கங்களும் விவசாய அமைப்புகளும் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புகளும் நாடாளுமன்றத் தேர்தலைக் கையாள வேண்டும் என்று கேட்டன.பொதுச்சபை குறைந்தபட்சம் சுயேச்சையாகவாவது இறங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.ஆனால் தேசத்தைக் கட்டி எழுப்புவது என்பது தேர்தல்களால் மட்டும் செய்யக்கூடிய ஒன்று அல்ல.ஆகக்கூடிய பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில்தான் ஆகப்பெரிய இனஅழிப்பு இடம்பெற்றது.எனவே தேசத்தைக் கட்டியெழுப்புவது என்பது தேர்தல்களுக்கும் அப்பால் பரந்தகன்ற தளத்தில் பல்வேறு கட்டமைப்புகளுக்கூடாக செய்யப்பட வேண்டும் என்று பொதுச் சபைக்குள் ஒரு பிரிவு வாதிட்டது.

முடிவில் பொதுச்சபை தேர்தலில் பங்கெடுக்கவில்லை.அதனால் பொதுக் கட்டமைப்பும் செயலிழந்து போனது.பொதுச்சபை தேரைக் கொண்டுவந்து தெருவில் விட்டுவிட்டது என்று குற்றம் சாட்டப்பட்டது.

அது தவறு. ஜனாதிபதித் தேர்தல் என்ற தேரை இழுத்த தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பு அந்த தேரை தேர் முட்டிக்குள்தான் கொண்டு வந்து நிறுத்தியது. எனவே தேர் தெருவில் நிற்கிறது என்ற வாதம் சரியல்ல.மாறாக தொடர்ந்து தேர்தல் திருவிழாக்களை எதிர்கொள்ள தமிழ்மக்கள் பொதுச்சபை தயாரில்லை என்பதுதான் உரிய விளக்கம் ஆகும்.

இதுதொடர்பான இருதரப்பு விவாதங்களிலும் ஆழமான ஓர் உண்மை உண்டு. ஜனாதிபதி தேர்தலை தமிழ்மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பு ஒரு தேர்தலாக அணுகவில்லை.அதற்குரிய அரசறிவியல் விளக்கத்தை அது கொண்டிருந்தது. ஆனால் அந்த விளக்கம் வாக்களித்த மக்களை முழுமையாக சென்றடையவில்லை. தமிழ்த் தேசிய வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலை ஒரு தேர்தலாகத்தான் பார்த்தார்கள்.பெரும்பாலானவர்கள் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கும் பொழுது தமிழ் வாக்கு தமிழருக்கு என்றுதான் சிந்தித்தார்கள். மாறாக தேர்தலை ஒரு தேர்தலாக கையாளாத களம் அது என்பது பெரும்பாலான வாக்காளர்களுக்கு விளங்கியிருக்கவில்லை.50 நாட்களுக்குள் அந்த விளக்கத்தைக் கொடுக்கக்கூடிய சக்தி தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் பொதுக் கட்டமைப்புக்கும் இருக்கவில்லை.எனவே வாக்காளர் மனோநிலை என்பது தொடர்ந்து தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டும்;கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு காணப்பட்டது.

அதற்குக் காரணம் கட்சிகள்தான்.மக்கள் ஒரு தலைமைத்துவ வெற்றிடத்தை உணர்கிறார்கள்.ஏதாவது ஒரு கூட்டு அல்லது யாராவது தலைவர்கள் வந்து தங்களுக்கு ஒரு புதிய வழியைக் காட்ட மாட்டார்களா என்று ஏக்கத்தோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்.அதனால்தான் கலகக்காரனாக மேலெழுந்த ஒரு மருத்துவரை ஒருபகுதி மக்கள் ஆர்வத்தோடு பார்த்தார்கள்.அதனால்தான் ஜேவிபியின் எழுச்சியை ஒருபகுதி மக்கள் ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். அதனால்தான் தமிழ்த்தேசியப் பொதுக்கட்டமைப்பும் தமிழ்மக்கள் பொதுச்சபையும் தொடர்ந்து தேர்தல்களில் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மக்களுடைய அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் போனமைக்கு மக்கள் அமைப்பு மன்னிப்பு கேட்டது.அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு ஊடகச் சந்திப்பில் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் அது தொடர்பாக விளக்கம் அளித்தார்கள்.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதுபோல அவர்கள் மக்களுக்கு உண்மையைக் கூறினார்கள்.பொது வாழ்வில் மக்களுக்கு உண்மையை கூறுவது மகிமையானது. அதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அதற்கு ஒரு வாழ்க்கை முறை வேண்டும். பொது வாழ்வில் ஈடுபடும் பெரும்பாலான பிரமுகர்கள் மக்களுக்குப் பொறுப்பு கூறுவதில்லை.தனது செயல்களுக்குப் பொறுப்புக்கூறும் துணிச்சல் மக்கள் அமைப்பிடம் உண்டு என்பதனால் அது நாடாளுமன்றத் தேர்தலைக் கையாளாமல் விட்டதற்கு மன்னிப்புக் கேட்டது.

தேர்தலைக் கையாளாமல் விட்டதற்கு அரசறிவியல் விளக்கம் உண்டு.அதே சமயம் சங்குக்கு வாக்களித்த மக்களின் கூட்டுணர்வு வேறாக உள்ளது. மக்கள் மீண்டும் மீண்டும் கட்சிகளை ஒருங்கிணைத்து வாக்குகள் சிதறுவதைத் தடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.அந்த எதிர்பார்ப்பை தொடர்ச்சியாக நிறைவேற்ற முடியாமைக்கு மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மன்னிப்பு கேட்டார்கள்.

மக்களைச் சிதறடித்தது கட்சிகள்தான்.அதற்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியதும் கட்சிகள்தான்.மக்களை ஆகக்குறைந்தபட்சம் ஒன்றுதிரட்டிய மக்கள்அமைப்பு அதைத்தொடர்ந்து எல்லாத் தேர்தல்களிலும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் வாக்காளர்களின் கூட்டுஉணர்வை மதித்து பொறுப்பு கூறியது. அதை கட்சிகள் பின்பற்றுமா? சுயேட்சைகள் பின்பற்றுமா?

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமது மக்களுக்கு உண்மையை கூறாதவர்கள், பொய்யான வாக்குறுதிகளை வழங்கியவர்கள்,தாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியவர்கள் அனைவரும் தமிழ்மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும்.

பிரதான அரசியல்வாதிகளின் அணிகலன்களாக காணப்படும் இரண்டாம் மூன்றாம் நிலை அரசியல்வாதிகள் அநேகர் மீது ஊருக்குள் குற்றச்சாட்டுகள் உண்டு.பாலியல் குற்றச்சாட்டுக்கள்,ரகசிய டீல்கள் போன்ற பல குற்றச்சாட்டுக்கள் உண்டு.தமது அணிகலன்களாக காணப்படும் இரண்டாம் மூன்றாம் நிலை முக்கியஸ்தர்கள் தொடர்பிலும் தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டும்.”அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்பது தமிழ் படத்தில் வரும் கொமெடி வாக்கியமாக இருக்கலாம். ஆனால் தேசத்தை நிர்மாணிக்கும் அரசியலில் அது பகிடி அல்ல.பொறுப்புக்கூற வேண்டிய விடயம்.தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புக் கூறுவார்களா?
 

https://www.nillanthan.com/6939/

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது, தேசத்தைக் கட்டியெழுப்பும் வழியில் எதுவரை முன்னேறியுள்ளது? பரிகார நீதியை நோக்கி எதுவரை முன்னேறியுள்ளது?என்று தமிழ் மக்களுக்கு விளக்கம் கொடுக்குமா? இன அழிப்புக்கு எதிராக இலங்கை அரசைப் பொறுப்புக்கூற வைக்கும் விடயத்தில் ஏனைய கட்சிகளைவிட தான் நேர்மையாகவும் துணிச்சலாகவும் உண்மையாகவும் நடப்பதாகக் கூறும் முன்னணி, அந்த விடயத்தில் கடந்த 15 ஆண்டுகளில் எதுவரை முன்னேறியிருக்கிறது என்பதனை தமிழ் மக்களுக்கு எடுத்து கூறுமா? தன்னுடைய சமரசத்துக்கு இடமற்ற வெளியுறவுக் கொள்கை காரணமாக கடந்த 15 ஆண்டுகளில் தான் பெற்றுக்கொண்ட வெற்றிகளைக் குறித்து அக்கட்சி தமிழ் மக்களுக்கு உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறுமா?

நியாயமான வினாக்களைத் தொடுத்துள்ளபோதும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீதான திண்மமானதும் வன்மானதுமான வினாக்களை அவர்களை நோக்கிக் கேட்பதற்கு, அவர்களுக்கு வட-கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கொடுத்ததுபோல் ஒரு அடர்த்தியான வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் நிலாந்தனவர்கள் ஆய்வுசெய்து எழுத வேண்டும். அவர்கள் சொல்லுகின்ற ஒருநாடு இருதேசங்கள் போன்ற நிலைப்பாட்டைக் கடந்து15ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்கள். அவர்களை ஊடகங்களில் கூடக் காட்டுவதில் ஊடகங்கள் பின்னிற்பதையும் காணமுடிகிறது. எல்லாம் இந்திய வல்லாதிக்கத்தின் கைத்தடிகளாகிவிட்ட சூழலில் இன்று தனியே தமது சக்திக்கேற்பக் தமிழர்களுக்காகக் களத்திலே நிற்கிறார்கள். பொதுக்கட்டமைப்பினை நோக்கித் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வைத்த விமர்சனங்கள், அதனது மூளையாகச் செயற்பட்டு செயற்பாட்டுவடிவத்துள் தள்ளியவர்களில் ஒருவரான இந்தக் கட்டுரை ஆசிரியருக்குக் கடுப்பை ஏற்றியதன் விளைவா?

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.