Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாண்புமிகு முதல்வர் அவர்களே !

                                 - சுப.சோமசுந்தரம்


              தலைப்பில் நான் எழுத நினைக்கும் பொருள் வெளிப்படவில்லை ஆயினும், அப்பொருளின் தொனி புலப்படாமல் இல்லை. எனவே பொருளினுள் செல்லுமுன் கோட்பாடு சார்ந்து எனது நிலைப்பாடு யாது என்பதை அறுதியிட்டுக் கூறுவது எனது கடமை ஆகிறது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சியாளர் அம்பேத்கர், உழைக்கும் வர்க்கத்தின் விடிவெள்ளியான கார்ல் மார்க்ஸ் போன்றோரை எஞ்சாமிகள் என உள்ளத்தில் கொண்டு திரியும் சாமானியருள் ஒருவன்; இடதுசாரி மற்றும் திராவிட இயக்கக் கோட்பாடுகளின் கலவையாகத் தன்னை மனதில் வரித்துக் கொண்டவன் ! கருப்பு அல்லது சிவப்புச் சட்டையை பெருமிதத்துடன் எடுத்து அணிபவன் -  இவ்வளவே நான். எனவே முதல்வர் ஸ்டாலின் அவர்களையும் திராவிட முன்னேற்ற கழக அரசையும் இங்கு எனது விமர்சனத்திற்கு உள்ளாக்குவது, நான் எதிரணியில் அமர்ந்து கொண்டு அல்ல; அவர்கள் பக்கம் நின்று கொண்டே ! எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நான் தாலி கட்டாததால் இடதுசாரிக் கட்சிகளையும் திராவிடக் கட்சிகளையும்  கூட அவ்வப்போது விமர்சிக்கும் பேறு பெற்றவன் நான். மற்றவர்களை நான் ஆட்டத்திற்கே சேர்த்துக் கொள்வதில்லை. மேலும் திராவிடக் கட்சிகள் தற்போது தி.க வும், ஓரளவு திமுகவும் ஆக இரண்டு மட்டுமே என்பது என் கருத்து. அது என்ன ஓரளவு ? இன்றைய காலகட்டத்தில் 'ஓரளவு' ஊழல் இல்லாமல் ஒரு ஜனநாயக அரசியல் கட்சியை நடத்த முடியாது என்ற கேடு கெட்ட நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டதன் விளைவே திமுக வை இன்னும் திராவிடக் கட்சிகள் பட்டியலில் வைத்திருப்பது.
              சமீபத்தில் பரபரப்பாகி இருந்த சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் ஆரம்பிக்கிறேனே ! அதை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டமாகத்தான் நான் பார்க்கிறேன். கோரிக்கைகள் ஏற்கப்பட்டன - ஒன்றைத் தவிர. மறுக்கப்பட்டது என்னவென்றால் தொழிலாளர்கள் தாங்கள் விரும்பியவாறு - சட்டத்திற்கு உட்பட்டு - சங்கம் அமைக்கும் உரிமை. நிர்வாகம் விரும்புவது போல் சங்கம் வைத்துக் கொள்ளலாமாம். அத்தகைய ஒன்றைத் தொழிற்சங்கம் (Trade Union) என்று சொல்வதில்லை. ஒரு தொழிலாளர் அமைப்பு (Workers club) எனலாம்; அதிகபட்சம் தொழிலாளர் நல அமைப்பு (Workers Welfare club) எனலாம். அதன் மூலம் தொழிலாளர்கள் தங்களுக்குள் மட்டுமல்ல, நிர்வாகிகளுடனும் டென்னிஸ், கோல்ஃப் முதலியவை விளையாடலாம். தங்கள் உரிமைகளுக்காகப் போராட முடியாது. தொழிலாளர்கள் அரசியல் கட்சிகள் சார்பில் சங்கம் நடத்தக் கூடாது என்ற போர்வையில் அவர்களது உரிமையை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்றுள்ளது நிர்வாகம். வெளிப்படையாகச் சொல்வதானால், இடதுசாரித் தொழிற்சங்கம் அமைக்கக் கூடாது என்பதுதான் சாம்சங்கின் நிபந்தனை. முதல்வர் அவர்களே, நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள் ! இடதுசாரித் தொழிற்சங்கங்கள் தவிர ஏனைய (தொழிற்)சங்கங்கள் உங்களுக்கு வேடிக்கையாகத் தெரியவில்லையா - திமுக தொழிற்சங்கம் உட்பட ? சங்க அங்கீகாரத்தை வழங்குவது மாநில அரசு தொழிலாளர் நலத்துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதும் கடமையும்தானே ? சங்கத்தைப் பதிவு செய்யும் மனுவை தொழிலாளர் நலத்துறை முதலில் கிடப்பில் போட்ட காரணமென்ன ? பின்னர் சாம்சங் நிர்வாகம் தன் பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்று ஆட்சேபணை தெரிவிக்கவும், CITU நீதிமன்றம் செல்லவும், பின்னர் அதைக் காரணம் காட்டி சங்கப் பதிவை அரசு மறுப்பதும் என்ன நாடகம் ? இதன் மூலம் அரசு அந்த நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்படவில்லையா ? நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்கித் தருவது மட்டும்தானே அரசின் வேலை ? தனது அமைச்சர்களை அனுப்பி அரசே பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது அறநெறிதானா ? இதற்கு முன்பும் இவ்வாறு நடந்திருக்கலாம். எப்போது நடந்தாலும் தவறு தவறுதானே ? குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல் குழியும் பறித்த கதையாக போராட்டத்தைக் கைவிடுமாறு தொழிலாளர்களுக்கு அமைச்சர் பெருமக்கள் ஒருவர் மாற்றி ஒருவர் அறிவுரை. நீங்கள் அரசா அல்லது சாம்சங் நிர்வாகமா ? இத்தனைக்கும் மேலாக தொழிலாளர்கள் வீடு வரை சென்று காவல்துறையின் மிரட்டல், கைது நடவடிக்கை எனும் அடாவடித்தனங்கள் வேறு. TESMA வின் கீழ் ஜெயலலிதா அரசின் காவல்துறை போராடிய அரசு ஊழியர்களை விரட்டி விரட்டிப் பழி வாங்கியதெல்லாம் நினைவுக்கு வருகின்றதே ! ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக நடந்த போராட்டத்தில் அதிமுக அரசு நடந்து கொண்டதற்கும் சாம்சங் விவகாரத்தில் நீங்கள் நடந்து கொள்வதற்கும் என்ன வேறுபாடு ? அவர்கள் அமைதி வழியில் போராடியவர்களை சுட்டுத் தள்ளினார்கள். அது மட்டும்தான் வேறுபாடா ? போராட்டம் தொடர்ந்தால் சாம்சங் சென்னையில் தனது தொழிற்சாலையை மூடிச் சென்று விடுவார்களே என்று நீங்கள் ஆதங்கப்பட்டால், கூட்டணித் தலைவர்களை அழைத்துப் பேசுவதுதானே சரியாக இருக்கும் ? சாம்சங் நிர்வாகத்துடன் நின்று கொண்டு கட்டப் பஞ்சாயத்து செய்வது சரியாக இருக்குமா ? "சம்பளம் இப்போது பிரச்சினை இல்லை; எங்கள் உரிமையை மீட்டெடுப்பதே பிரச்சினை" என்று இக்காலத்தில் கூட தொழிலாளர் வர்க்கம் நிற்பது ஒரு வரலாற்று நிகழ்வு. அந்த வரலாற்றின் நாயகர்களை நீங்கள் அங்கீகரித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் அந்த வரலாற்றில் நீங்கள் ஒரு கரும்புள்ளி ஆவதைத் தவிர்த்திருக்க வேண்டும். இறுதியில் ஒரு வழியாக சமரசத் தீர்வு எட்டப்பட்டபோது அதில் தங்கள் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது என்றெல்லாம் வெளிவந்த செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என விழைகிறோம். சமரசம் ஏற்பட்டதற்கு நீங்கள் CITU விற்கும் நன்றி தெரிவித்ததை வரவேற்கிறோம்.
              ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக நியமிக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரை மே 2022 ல் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன் இது தொடர்பாகத் தொடர்ந்த ஒரு வழக்கில் உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசினைக் கேள்வி கேட்ட பிறகு விசாரணை ஆணையத்தின் பரிந்துரைப்படி 21 பேர் மீது துறை சார்ந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக நவம்பர் 2023 ல் தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அது என்ன, அரை மனது குறை மனதுடன் அப்படி ஒரு நடவடிக்கை ? அதிலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் முந்தைய அதிமுக அரசில் காவல் (ஏவல்?) துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வெறியாட்டத்தில். எதிர்க்கட்சியாக இருக்கும் போது நீங்களும் உங்கள் கட்சியினரும் இது தொடர்பில் எழுப்பிய கண்டனக் குரலெல்லாம் வெறும் அரசியல் ஆதாய ஆரவாரம்தானா ? ஆளுங்கட்சியான பிறகு காவல்துறையுடனும் அரசு நிர்வாக அமைப்புகளுடனும் சமரசம் செய்து கொண்டு போவது எழுதாமல் வரையறுக்கப்பட்ட விதிமுறையோ ? குருவிகளைச் சுடுவது போல் சுட்டுத் தள்ளிய விவகாரத்தில் வெறுமனே துறை சார்ந்த நடவடிக்கை என்பது கண் துடைப்பன்றி வேறென்ன ? கலைந்து ஓடியவர்களையும் தேடித்தேடிக் குறி பார்த்துச் சுட்டது முன்னரே திட்டமிடல் அன்றி ஒரு தற்செயல் நிகழ்வா ? ஆட்சி நிர்வாகம், காவல்துறை என்றால் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதில்லை என்று எழுதப்படாத ஒரு புரிந்துணர்வு இருக்குமானால், அவர்கள் மீண்டும் மீண்டும் கொலைபாதகக் குற்றங்களை அரங்கேற்ற மாட்டார்களா ? போராடிய மாஞ்சோலைத் தோட்ட தொழிலாளர்களையும் பெண்களையும் குழந்தைகளையும் விரட்டி விரட்டி ஆற்றில் மூழ்கடித்ததும், ஸ்டெர்லைட் போராட்டத்தில் விரட்டி விரட்டிச் சுட்டதும் என்றுமே முற்றுப்பெறாத தொடர்கதைகளா ?
             இவற்றில் மேலும் ஒரு கோணம் இருக்கிறது. மாஞ்சோலையானாலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆனாலும், சாம்சங் ஆனாலும் ஒரு ஜனநாயக அரசும் அதன் இயந்திரங்களும் முதலாளி வர்க்கத்துக்கு பணி செய்யவே உருவானவையோ !
                பொள்ளாச்சி பாலியல் படுபாதகத்தில், "அண்ணா, அடிக்காதீங்கண்ணா ! நீங்கள் சொன்னதைக் கேட்கிறேன்" என்ற அபலைக் குரல் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்று தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் குறிப்பிட்ட அந்தக் குரல் நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் செவிகளில் இருந்து இன்று  மறைந்து விட்டதோ என்று எங்களை எண்ண வைக்கிறது. எங்கள் செவிகளில் இடி முழக்கமாய் இன்றும் கேட்கிறது முதல்வரே ! தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியே என்பது நீங்கள் அறியாததா ? அதுவும் அதிமுக ஆட்சியில் நடந்த கொடுமை; அதிமுகவில் பொள்ளாச்சி பிரமுகரின் மகன் முக்கிய குற்றவாளியாக செய்திகளில் அடிபட்ட விவகாரத்திலேயே விரைவான நீதி கிடைக்கவில்லை. அப்படியானால் ஒரு திமுக பிரமுகரின் பெயர் அடிபட்டிருந்தால் இந்த வழக்கு எந்தத் திசையில் சென்றிருக்கும் ? மீண்டும் வலியுறுத்துகிறேன் - இக்கேள்வியைக் கேட்கும் நான் ஒரு திமுக ஆதரவாளன் முதல்வர் அவர்களே !
                பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு அதைப் பற்றியே பேசாமல் காலம் தள்ளுவது சரிதானா ? சில மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தது உங்கள் கவனத்திற்கு வந்திருக்கும் என்று நம்புகிறோம். முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இது தொடர்பில், "தேர்தல் வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்ற வேண்டியதில்லை. மற்றவர்கள் நிறைவேற்றினார்களா ?" என்று அடாவடியாய்ப் பேசியபோது அமைதி காத்தீர்களே ! அரசு ஊழியர்கள் போராடிக் கொடுத்த நெருக்கடியைச் சமாளிக்க மட்டும், "நான் கொடுக்காமல் உங்களுக்கு யார் கொடுப்பார்கள் ? சிறிது கால அவகாசம் கொடுங்கள்" என்று உணர்வுடன் பேசி வாய்தா வாங்கி விட்டீர்கள். ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான முயற்சியில்தான் நீங்களும் உங்கள் அரசும் இருக்கிறீர்களா ? போராடிய அரசு ஊழியர்கள் கையறு நிலையில் ஒவ்வொரு அரசியல் தலைவராகப் பார்த்து மனு கொடுக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் சீமானைக் கூட விட்டு வைக்காத இழிநிலைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். ஓய்வூதியத்தின் இன்றியமையாமையை விளக்கும் எனது ஒரு கட்டுரையின் இணைப்பு : 

https://yarl.com/forum3/topic/270878-  ஓய்வூதியம்-சுப-சோமசுந்தரம்/

இங்கு அக்கட்டுரையின் இணைப்பு உங்களுக்காக மட்டுமல்ல. "இவர்களுக்கெல்லாம் ஓய்வூதியம் ஒரு கேடா ?" என்று கேட்கும் அதிமேதாவிகளுக்கும் சேர்த்துதான்.
               மக்கள் நலத்திட்டப் பணிகள் முதலிய எத்தனையோ நிறைகள் உங்கள் அரசில் உண்டு. இருப்பினும் இது குறைகளைச் சுட்டும் களமாய்க் கொண்டதால், பல காலமாய் நெஞ்சில் கனக்கும் ஒரு பெருங்குறையினைச் சுட்டி இக்கட்டுரையை நிறைவு செய்ய எண்ணம்.
               தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்த கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் அமைதியாக சுமார் இரண்டரை வருட காலம் நடந்த போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது எனச் சொல்வது மிகையாகாது. போராட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சுப.உதயகுமாரன் மற்றும் அவருடன் தோளொடு தோள் நின்ற பாதிரியார் மை.பா. ஜேசுராஜ், தோழர் புஷ்பராயன் ஆகியோர் தலைமையிலும் வழிகாட்டுதலிலும் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் இடிந்தகரை மற்றும் அதன் சுற்று வட்டார மக்களின் - குறிப்பாக மீனவ மக்களின் - உறுதிமிக்க போராட்ட உணர்வுக்குச் சான்று பகர்வது. எந்தக் குறிப்பிட்ட கட்சி அரசியல் சார்புமின்றி சமீப காலத்தில் மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய அப்போராட்டத்திற்கு இணையாக டெல்லியில் சுமார் ஓராண்டு நடந்த விவசாயிகள் போராட்டத்தையும், சென்னை மெரினா கடற்கரையில் சில நாட்கள் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தையும் குறிப்பிடலாம். பின்னவை இரண்டும் வெற்றியில் முடிய, கூடங்குளம் அணு உலைப் போராட்டம் இக்காலகட்டத்தில் தனது நோக்கத்தில் இன்னும் வெற்றி பெறவில்லைதான். வெல்வதுதான் போராட்டம் என்றில்லை; தோற்பதும் போராட்டம்தான். மேலும் நோக்கத்திற்கு மட்டுமே வெற்றி தோல்வி உண்டு; போராட்டத்திற்கு அவ்வாறில்லை. போராட்டமே மானிடத்தின் வெற்றிதான். எந்த ஒரு அரசியல் கட்சியாலும் நடத்த முடியாத போராட்டம் அது.
               முதல்வர் அவர்களே ! கூடங்குளம் அணு உலைப் போராளிகளின் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் எனும் தேர்தல் வாக்குறுதியும் தங்களால் தரப்பட்டதே. அவ்வளவு காலமும் எவ்வித வன்முறையும் இல்லாமல் அமைதியாக நடந்த போராட்டத்தில் அத்தனை வழக்குகளும் பொய் வழக்குகளாய் இருக்கவே பெருமளவில் வாய்ப்பு உள்ளது என்பதில் போராட்டக் களத்திற்கு வராதவர்களே உடன்படுவர். நமது சட்டம், காவல் துறைகளின் கடந்த கால வரலாறு அப்படி. எடுத்துக்காட்டாக, 2003 ல் நடந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர் போராட்டத்தில் ஒரு மின்கம்பத்தின் அருகில் நின்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்த பேராசிரியர்கள் சிலர் மீது போடப்பட்ட வழக்கு அந்த மின்கம்பத்தில் ஏறி மின் கம்பிகளை அறுத்ததாம்; ஸ்டெர்லைட் போராட்டத்தில் சுட்ட பின்பும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதியில் அடித்து விரட்டிய பின்பும் வாகனங்களுக்குக் காவலர்களே தீ வைத்தோ, அவற்றை உடைத்தோ தங்களின் மோசமான நடவடிக்கைகளுக்குக் காரணங்களை உருவாக்கியது வெட்ட வெளிச்சமானது. எனவே வாக்குறுதி தந்தது போல் அணு உலைப் போராட்டத்தில் அத்தனை வழக்குகளையும் இவ்வளவு தாமதமானாலும் இப்போதாவது வாபஸ் பெறுவதே அறநெறியின் பாற்படும். வழக்கின் காரணமாக அவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் ஏராளம். உதாரணமாக, வழக்கினால் எத்தனையோ இளைஞர்களும் ஏனையோரும் வெளிநாடுகளுக்குக் கூட வேலைக்குச் செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது.
               இது தொடர்பில் போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் அவர்கள் உங்களை நேரில் சந்தித்தும் கடிதங்கள் எழுதியும் நீங்கள் காலம் கடத்துவது ஏன் ? அவரைப்போல் சமூகப் போராளிகளை உங்கள் கட்சி உருவாக்கியது உண்டா ? இவ்வளவு அடக்குமுறையிலும், அடுத்து மணவாளக்குறிச்சி மணல் ஆலைப் போராட்டத்தின் நியாயங்களைப் பேசும் தோழர் சுப. உதயகுமாரன் எங்களைப் போன்ற 'நகர்ப்புற நக்சல்களுக்கு' ('Urban Naxals') தமிழ் நிலத்தின் சேகுவேராவாகத் தெரிகிறாரே ! உங்களுக்குத் தெரிவதில்லையா ?  அல்லது அப்படித் தெரிவதால்தான் ஒன்றியமானாலும் மாநிலமானாலும் முதலாளித்துவ அரசுகள் அவரைப் போன்றவர்களைப் பழிவாங்குகின்றனவா ? திராவிட இயக்க அரசியல் (சமூக நீதிக்கான) போராட்ட அரசியல்தானே !
                 ஒன்றியத்தில் உள்ள பாசிச அரசினைக் குறைந்தபட்சம் தமிழ் நிலத்தில் காலூன்ற முடியாமல் செய்ய இப்போது எங்களிடம் இருக்கும் ஒரே மக்கள் ஆதரவுள்ள ஆயுதம் திமுக என்பது எங்களுக்குத் தெரிவது சரி. ஆனால் அது உங்களுக்கும் தெரிவதுதான் எங்களுக்கான அவலம். இருப்பினும் கையறு நிலையில், வந்தது வரட்டும் என்று பெரும்பான்மை மக்கள் பாசிசவாதிகளை நாடினால் இழப்பு திமுகவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாய்த் தமிழ் நிலத்திற்கே என்று எச்சரிக்கும் நிலைக்கு என்னைப் போன்றோர் தள்ளப்படுகிறோம். உங்களுக்கு ஆதரவையும் தந்து விட்டு உங்களிடம் மக்கள் பெறாத, பெறவேண்டிய நியாயங்களுக்காக நாங்களும் ஒரு 'நெஞ்சுக்கு நீதி' எழுதலாம் எனத் தோன்றுகிறது மாண்புமிகு முதல்வர் அவர்களே !                             

     https://www.facebook.com/share/p/19QFqCFNNw/             

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி @சுப.சோமசுந்தரம் அவர்களே. 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, சுப.சோமசுந்தரம் said:

மாண்புமிகு முதல்வர் அவர்களே !

துணை முதல்வர் அவர்களே

என்றும் வரணும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, சுப.சோமசுந்தரம் said:


ஒன்றியத்தில் உள்ள பாசிச அரசினைக் குறைந்தபட்சம் தமிழ் நிலத்தில் காலூன்ற முடியாமல் செய்ய இப்போது எங்களிடம் இருக்கும் ஒரே மக்கள் ஆதரவுள்ள ஆயுதம் திமுக என்பது எங்களுக்குத் தெரிவது சரி. ஆனால் அது உங்களுக்கும் தெரிவதுதான் எங்களுக்கான அவலம். இருப்பினும் கையறு நிலையில், வந்தது வரட்டும் என்று பெரும்பான்மை மக்கள் பாசிசவாதிகளை நாடினால் இழப்பு திமுகவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாய்த் தமிழ் நிலத்திற்கே என்று எச்சரிக்கும் நிலைக்கு என்னைப் போன்றோர் தள்ளப்படுகிறோம். உங்களுக்கு ஆதரவையும் தந்து விட்டு உங்களிடம் மக்கள் பெறாத, பெறவேண்டிய நியாயங்களுக்காக நாங்களும் ஒரு 'நெஞ்சுக்கு நீதி' எழுதலாம் எனத் தோன்றுகிறது மாண்புமிகு முதல்வர் அவர்களே ! 

👋.................

மாற்று என்று வேறு ஒன்று தமிழ்நாட்டில் இல்லாததால் தான் இவர்களையே மீண்டும் மீண்டும் நம்ப வேண்டியிருக்கின்றது. அதிலும் முதல்வர் ஸ்டாலின் ஆரம்பத்தில் மிக்க நம்பிக்கையை கொடுத்தார். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியவர்களை விட இவர் வித்தியாசமானவர் என்று எண்ண வைத்தார். ஆனால் இந்த அரசின் தொடர் நடவடிக்கைகள் இவரும் அவர்களில் ஒருவரே என்ற ஒரு அயர்வையே இன்று கொடுக்கின்றது.................😌

Edited by ரசோதரன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.