Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

New-Project-1-26.jpg?resize=750,375&ssl=

சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான சதித்திட்ட பின்னணியில் அமித் ஷா – கனடா குற்றச்சாட்டு!

கனேடிய மண்ணில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைக்கும் சதித்திட்டத்தின் பின்னணியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருப்பதாக கனேடிய அரசாங்கம் இப்போது குற்றம் சாட்டியுள்ளது.

இந்திய அரசாங்கம் கனடாவின் முந்தைய குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது என்று நிராகரித்து வந்த நிலையில் இந்தக் கருத்து வந்துள்ளது.

தி வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் படி, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை மற்றும் மிரட்டல் அச்சுறுத்தலின் பின்னணியில் அமித் ஷா இருப்பதாக கனேடிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கனடாவின் துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மோரிசன் செவ்வாயன்று (29) நாடாளுமன்றத்தில் அமித் ஷாவின் பெயரை சூளுரைத்தார் என்றும் தி வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சு இது குறித்து இன்னும் பதில் அறிக்கை வெளியிடவில்லை.

சீக்கிய பிரிவினைவாதிகள் காலிஸ்தான் எனப்படும் சுதந்திர தாயகத்தை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் என்று கோருகின்றனர்.

இது தொடர்பில் 1980கள் மற்றும் 1990களில் இந்தியாவில் நடந்த கிளர்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

2023 ஆம் ஆண்டு கனேடிய மண்ணில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய தூதர்களை கனடா ஒக்டோபர் நடுப்பகுதியில் வெளியேற்றியது.

கனேடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்ற இந்தியாவும் உத்தரவிட்டது.

ஜூன் 2023 இல் இந்தியாவால் காலிஸ்தானி பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட கனேடிய குடிமகன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில், இந்திய உயர் ஆணையர் சஞ்சய் வர்மா அக்டோபர் 13 அன்று கனடாவால் “ஆர்வமுள்ள நபர்” என்று அறிவிக்கப்பட்டார்.

https://athavannews.com/2024/1406465

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிஜ்ஜார் கொலை வழக்கு: அமெரிக்க பத்திரிகையிடம் இந்திய அமைச்சர் அமித்ஷா பெயரை கூறியதாக கனடா அமைச்சர் ஒப்புதல்

இந்தியா -  கனடா,  அமித் ஷா

பட மூலாதாரம்,HOUSE OF COMMONS, CANADA

படக்குறிப்பு, கனடாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மோரிசன்
 

கனடா குடிமக்களை அச்சுறுத்தும் அல்லது கொல்லும் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் ஒப்புதல் அளித்ததாக அந்நாட்டின் குடிமைப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக் குழுவிடம் கனடாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை (அக்டோபர் 29) அன்று கனடாவில் குடிமைப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக் குழுவின் விசாரணை ஒன்று நடந்தது.

அப்போது, அக்குழுவின் துணைத் தலைவரும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரக்கேல் டான்சோ கனேடிய குடிமக்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பினார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வான்கூவர் அருகே 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார்.

விசாரணையின் போது, "கனடாவில் நடக்கும் குற்றங்களில் இந்திய உள்துறை அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கனடா அரசு சார்பாக 'தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தித்தாளிடம் தெரிவித்தது யார்?", என்று அந்த குழுவின் துணைத் தலைவர் ரக்கேல் டான்சோ அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நத்தாலி ட்ரூயினிடம் கேள்வி எழுப்பினார்.

"இதுபோன்ற தகவல்களை பத்திரிக்கையாளர்களிடம் அரசு பகிர்ந்து கொள்ளவில்லை", என்று நத்தாலி ட்ரூயின் பதில் அளித்தார்.

 

அக்டோபர் 14 ஆம் தேதி அன்று 'தி வாஷிங்டன் போஸ்ட்' என்ற அமெரிக்க செய்தித்தாளில் வெளியான ஒரு செய்திக்கட்டுரையை பற்றி ரக்கேல் டான்சோ கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்.

அந்த செய்தியில் கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி குறிப்பிடப்பட்டிருந்தது.

"பத்திரிகையாளருக்கு யார் அந்த தகவலை கொடுத்தது? உங்களுக்கு அது பற்றி தெரியுமா? இந்த தகவலை நீங்கள் கொடுக்கவில்லை தானே?", என்று ரக்கேல் டான்சோ கேட்டார்.

இந்த விசாரணையியின் போது கனடாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மோரிசனும் இருந்தார்.

"மோரிசன், நீங்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியுமா? இந்த தகவலை நீங்கள் வழங்கினீர்களா?", என்று டேவிட் மோரிசனிடம் ரக்கேல் டான்சோ கேட்டார்.

"ஆம், பத்திரிகையாளர் ஒருவர் என்னை அழைத்து இதுபற்றி கேட்டார். நான்தான் அந்த நபரைப் பற்றி அவர்களுக்குத் தெரிவித்தேன்", என்று டேவிட் மோரிசன் பதில் அளித்தார்.

"அந்த பத்திரிகையாளர் பல்வேறு தரப்புகளிடம் இருந்து பெற்ற தகவல்களை வைத்து இது குறித்து நிறைய எழுதியிருந்தார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபரைப் பற்றி உறுதிப்படுத்தும்படி என்னிடம் கேட்டார். நான் அதை உறுதிப்படுத்தினேன்", என்று டேவிட் மோரிசன் கூறினார்.

ஆனால் இந்திய உள்துறை அமைச்சர் பற்றி டேவிட் மோரிசன் ஏதும் கூறவில்லை.

செவ்வாய்க்கிழமை அன்று வெளிவந்த இந்த விஷயம் குறித்து கனடாவிலுள்ள இந்திய தூதரக அலுவலகமும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் கனடா முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று இந்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது.

 
இந்தியா -  கனடா,  அமித் ஷா

பட மூலாதாரம்,MEA

படக்குறிப்பு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

"குற்றச்சாட்டுகள் ஆதாரமாற்றவை"

நிஜ்ஜார் கொலை குறித்த செய்தி முதலில் தி வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளில் வெளியான போது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுகுறித்து தனது கருத்தினை தெரிவித்திருந்தது.

"இந்த செய்தி ஒரு தீவிரமான விஷயத்தில் நியாயமற்ற மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது", என்று இந்த செய்திக்கட்டுரை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

"குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளின் நெட்வொர்க் குறித்து அமெரிக்க அரசு கவலை எழுப்பியதைத் தொடர்ந்து இந்திய அரசு ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதைப் பற்றி ஊகங்களையும் பொறுப்பற்ற கருத்துகளையும் தெரிவிப்பது பயனுள்ளதாக இருக்காது", என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

கனடாவில் நடந்த குற்றங்களில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா அரசு குற்றம்சாட்டியது.

இந்த குற்றங்களில் கொலை, மக்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் அச்சுறுத்தல்கள் ஆகியவை அடங்கும். இந்த ஏஜெண்டுகள் கனடா குடிமக்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கனடா கூறியிருந்தது.

இந்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே இதுபற்றி கூடுதல் தகவல்கள் தெரிந்திருக்கும் என்று கனடா அதிகாரிகள் செவ்வாய்கிழமைக்கு முன் வெளிப்படையாக தெரிவித்து வந்தனர்.

கனடாவில் நடக்கும் பெரிய அளவிலான குற்றங்களில் இந்திய அரசின் ஏஜெண்டுகள் உடந்தையாக இருப்பதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு கனடாவின் காவல்துறை தெரிவித்த அதிர்ச்சியூட்டும் கருத்து குறித்தும் இக்குழுவில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர்.

ராயல் கனேடிய மவுண்டன் எனப்படும் கனேடிய காவல்துறையின் தலைவர் மைக் டுஹெம் செவ்வாய்கிழமையன்று இந்த குழுவிடம் சாட்சியம் அளித்தார்.

இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் பிற ஊழியர்கள் இந்திய அரசாங்கத்திற்காக தகவல்களை சேகரித்ததை காவல்துறையிடம் உள்ள சாட்சிகள் உறுதிப்படுத்துகின்றன என்று அவர் கூறியிருந்தார்.

கனடாவில் கொலை, மக்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் மிரட்டல் ஆகிய குற்றச் செயல்களை செய்யுமாறு அவர்கள் தூண்டியதாக மைக் டுஹெம் தெரிவித்திருந்தார்.

"இந்த வழக்கில் (நிஜ்ஜார் கொலை) இந்தியாவுக்கு பெரிய அளவில் பங்கு உள்ளது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.", என்றுகனடாவின் அரசு செய்தி நிறுவனமான சிபிசிக்கு அளித்த பேட்டியில் மைக் டுஹெம் கூறியிருந்தார்.

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், 13 கனேடிய குடிமக்களுக்கு இந்திய ஏஜென்டுகளால் ஆபத்து நிகழக்கூடும் என்று காவல்துறை எச்சரித்திருப்பதாக மைக் டுஹெம் கூறினார்.

 
இந்தியா -  கனடா,  அமித் ஷா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நிஜ்ஜார் கொலைக்குப் பிறகு இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இருநாட்டு உறவுகள் மேலும் மோசமடைய வாய்ப்பு

கனடா அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்த பிறகு இந்தியா-கனடா உறவில் மேலும் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்தும் இந்திய எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்தியா அதனை மறுத்து வருகிறது.

சமீப காலமாக இந்த விவகாரத்தால் இரு நாடுகளும் தத்தமது தூதரக அதிகாரிகளை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் விலக்கிக் கொண்டன.

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிஜ்ஜாரின் கொலைக்குப் பிறகு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்தக் குற்றத்தில் இந்திய அதிகாரிகளின் தொடர்பு குறித்து கனடாவிடம் 'உறுதியான ஆதாரம்' இருப்பதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், கனடா அரசாங்கம் உறுதியான ஆதாரங்கள் எதையும் முன்வைக்கவில்லை.

இந்தியா இந்த குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரித்தது. கனடாவிடம் அதற்கான ஆதாரத்தையும் இந்தியா கேட்டது.

கனேடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவதாக இந்தியா அறிவித்த பிறகு, இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், "ட்ரூடோ அரசாங்கம் இந்திய அதிகாரிகளுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் எந்த ஆதாரத்தையும் இந்தியாவிற்கு வழங்கவில்லை" என்று குறிப்பிட்டிருந்தது.

தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியாவை களங்கப்படுத்தும் முயற்சி இது என்று இந்தியா குற்றம்சாட்டியது.

 
இந்தியா -  கனடா,  அமித் ஷா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (கோப்பு படம்)

கனடா தனது நிலைப்பாட்டில் உறுதி

ஆனால், தற்போது வரை ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறி வருகிறார்.

கடந்த பதினைந்து நாட்களாக தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், ட்ரூடோ தனது குற்றச்சாட்டுகளில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

ஆனால் அவரிடம் 'உரிய ஆதாரங்கள்' இல்லை. முதன்முறையாக, இந்த விவகாரத்தில் அவர் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, அவரிடம் புலனாய்வு தகவல்கள் மட்டுமே இருந்தன.

"இந்தியாவிடம் கனடா எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. இந்த வழக்கில் இந்தியாவுடன் இணைந்து பணி செய்யவே விரும்பியது. ஆனால் இந்தியா தொடர்ந்து ஆதாரங்களைக் கேட்டது" என்று வெளிநாட்டு தலையீடு ஆணையத்திடம் கனடா பிரதமர் கூறியிருந்தார்.

"ஆதாரங்கள் உங்கள் பாதுகாப்பு ஏஜென்சிகளிடமே உள்ளன" என்று மட்டும் பதிலளித்ததாக அவர் தெரிவித்தார்.

"கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறியதற்கான தெளிவான சான்றாக இது இருக்கிறது", என்று விசாரணைக் குழுவிடம் அவர் கூறினார்.

 
இந்தியா -  கனடா,  அமித் ஷா

பட மூலாதாரம்,FB/VIRSA SINGH VALTOHA

படக்குறிப்பு, 2023 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதியன்று கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார்.

இந்தியா-கனடா உறவில் விரிசல் ஏற்பட என்ன காரணம்?

இந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதிக்குப் பிறகு கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் மிகவும் கடினமான கட்டத்தை எட்டியுள்ளன.

கனடா அரசாங்கத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லாததால் தனது தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுவதாக இந்தியா கூறியது. அதே நேரத்தில்தான், இந்தியாவின் ஆறு தூதரக அதிகாரிகளை கனடாவை விட்டு வெளியேற்றியுள்ளதாக அறிக்கை ஒன்றில் கனேடிய பிரதமர் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடியாக இந்தியாவும் கனடாவின் 6 தூதரக அதிகாரிகளை இந்தியாவைவிட்டு வெளியேற்றியது.

கடந்த ஆண்டு கனடா குடிமகன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பதற்றம் நிலவுகிறது. இந்த கொலையில் இந்தியாவுக்கு பங்கு இருப்பதாகக் குற்றம்சாட்டி, கனடா பகிரங்கமாக கேள்விகளை எழுப்பியது.

2023 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதியன்று கனடாவில் உள்ள குருத்வாரா ஒன்றில் வாகன நிறுத்துமிடத்தில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நிஜ்ஜார் கனடாவின் வான்கூவரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராகவும் இருந்தார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார், இந்தியாவின் ஜலந்தரில் உள்ள பார் சிங் புரா கிராமத்தைச் சேர்ந்தவர். காலிஸ்தான் புலிப் படையின் தலைவராக இருந்து, உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தல், ஒருங்கிணைத்தல், நிதியுதவி அளித்தல் உள்ளிட்ட போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்று இந்திய அரசு கூறுகிறது.

"நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசாங்கத்தின் சாத்தியமான தொடர்பு பற்றிய குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன", என்று செப்டம்பர் 18 ஆம் தேதியன்று கனேடிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கனடாவின் 40 தூதரக அதிகாரிகளுக்கான சிறப்புரிமையை இந்தியா ரத்து செய்தது. இதனால், கனேடிய தூதரக ஊழியர்களில், மூன்றில் இரண்டு பங்கு பேர் இந்தியாவை விட்டு வெளியேறி சொந்த நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு கனடா அளிக்கும் சலுகை இந்தியாவுக்கு மட்டுமல்ல, கனடாவுக்கும்கூட சரியானது அல்ல என்று இந்தியா கூறியிருந்தது.

2024 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் கூட, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிஜ்ஜார் கொலை பற்றியும் இந்தியாவுடனான உறவுகள் பற்றியும் மீண்டும் குறிப்பிட்டார். இந்தியா அப்போதும் மறுப்பு தெரிவித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமித் ஷா மீதான குற்றச்சாட்டு அபத்தமானது ஆதாரமற்றது: இந்தியா

image

புதுடெல்லி: காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மீது வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக கனடா அமைச்சர் டேவிட் மோரிசன் குற்றம்சாட்டியதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தகுற்றச்சாட்டு அபத்தமானது, ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ள இந்திய அரசு இந்த விஷயத்தில் கனடா தரப்பின் விளக்கத்தை தெரிவிக்குமாறு அந்நாட்டு தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த 2023 ஜூன் மாதம் கனடாவில் கொலை செய்யப்பட்டார். இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு உதவியதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கடந்த ஓராண்டாகவே இந்தியா - கனடா இடையே மோதல் நீடித்து வருகிறது.

இந்த சூழலில் கனடாவின் குற்றச்சாட்டு குறித்து கடந்த மே மாதம் பதில் அளித்த மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ‘‘ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாமீது குற்றம் சுமத்தும் கனடா அரசு அதற்கான எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. கனடாவின் உள்நாட்டு அரசியல் காரணமாகவே ஹர்தீப் சிங் கொலை செய்யப்பட்டிருப்பார். அவரது கொலைக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

காலிஸ்தான் ஆதரவாளர்களில் சில பிரிவினர் கனடாவில் தங்களுக்கான வாக்கு வங்கியை உருவாக்கியுள்ளனர். தற்போது ஆட்சியில் இருக்கும் அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. தவிர சில கட்சிகளும் காலிஸ்தான் ஆதரவு தலைவர்களை சார்ந்து இருக்கின்றன. இந்த சூழலில் வாக்கு வங்கியை குறிவைத்தே நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது கனடா குற்றம்சாட்டுகிறது’’ என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது கனடா குற்றம் சாட்டியுள்ளது.

கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை மிரட்டல் உளவுத் தகவல் சேகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார் என்று கனடா வெளியுறவு துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன் சமீபத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. ‘கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல்களுக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கீகாரம் அளித்ததாகவும் அது குறித்த ஆதாரங்களை கனடா பாதுகாப்பு முகமைகள் சேகரித்துள்ளதாகவும் கனடாஅதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

‘‘வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிடம் இந்திய உள்துறை அமைச்சர்அமித் ஷா பெயரை குறிப்பிட்டது நான்தான்’’ என்று கனடா வெளியுறவு துணை அமைச்சர் டேவிட் மோரிசன் தெரிவித்தார்.

இதற்கு இந்திய அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. கனடாவின் இந்த குற்றச்சாட்டு அபத்தமானது ஆதாரமற்றது என்று இந்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் கனடா தரப்பின் விளக்கத்தை தெரிவிக்குமாறு அந்த நாட்டு தூதரக அதிகாரிக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக கனடாவின் பொது பாதுகாப்பு தேசிய பாதுகாப்பு நிலைக்குழுவின் முன்பு அந்நாட்டு வெளியுறவு துணை அமைச்சர் டேவிட் மோரிசன் கடந்த அக்டோபர் 29-ம் தேதி அபத்தமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கனடாவின் தூதரக அதிகாரியை அழைத்து இந்திய அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இந்திய தூதரக அதிகாரிகளை கனடா அரசு மோசமாக நடத்துகிறது. அவர்களது செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன. அவர்களது பேச்சு ஒட்டுக்கேட்கப்படுகிறது. இதுபோல தூதரக விதிகளை மீறி கனடா அரசு செயல்படுகிறது.

இத்தகைய நெருக்கடிக்கு இடையில்தான் கனடாவுக்கான இந்திய தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இது தவிர உலக அரங்கில் இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இந்தியா குறித்து தவறான கருத்துகளை கனடா பரப்புகிறது. இது போன்ற பொறுப்பற்ற செயல்கள் இருதரப்பு உறவுகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும், என அவர் கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/197780



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.